Friday, April 13, 2018

பொன்னார் மேனியனே...

Related image


சரியாக மூன்று மணிக்கு வருவேன் என்ற லீனாவை மூன்று முப்பதாகியும் காணவில்லை. ரப்பேல் ஸாதீக், லொறீ, லவ்ரா பௌசினி என எவ்வளவு நேரம்தான் அதே ஒப்பாரிகளையே கேட்டு நேரத்தை ஓட்டிக்கொண்டிருப்பது. வெறுப்புத் திரண்ட முகத்தோடு மீண்டும் முன்னறைக்கு வந்து வலப்பக்கமிருந்த கண்ணாடி அலுமாரியைத் திறந்தான் நீதன். உள்ளே கண்ணாடிச் சித்திரங்களாய் போத்தல்கள். சாராயப் போத்தல்களுக்குக்கூடவா இத்தனை வசீகரம் வேண்டிக்கிடக்கிறது?

ஜக் டானியல்ஸ், ஸ்வாஸ் ரீகல், ப்ளு லேபல், ரெமி மாட்டீன், பஸ்ரிஸ், ஹென்னஸ்ஸி, வொட்கா, ஜின், டக்கிலா, பக்காடி, பேர்னோ என ஒவ்வொன்றும் மந்திரச் சொற்களில் செய்த பெயர்கள். கடைசியில் சொல்லி வைத்தது போலவே அவனுடைய கை பேர்னோவில் போய் நின்றது. பாரீஸ் வந்திறங்கிய முதல் நாளே, நீதனுக்கு இம்சையாய் நாக்கில் ஒட்டிவிட்ட சுவை அது. அதன்பின்னர் தண்ணீரோடு சேர்ந்துவரும் அந்தச் மஞ்சள் திரவத்தை கற்பனை செய்தாலே மூளையெல்லாம் நாவாய் மாறிவிடுகிறது அவனுக்கு.

அந்தப் பேர்னோவை எடுத்து அருகிலிருந்த குவளையில் ஊற்றிக்கொண்டான் நீதன். குளிர்சாதனப் பெட்டியிலிருந்த தண்ணீரை எடுத்து பேர்னோவுடன் கலந்து முதல் வாயை இழுத்தான். சில் என்று தொண்டையில் இறங்கிப் பின் சூடு உடம்பில் பரவியது. ஜன்னல் நோக்கி நடந்துபோய் மீண்டும் ஒருதடவை கீழே பார்த்தான். யாருமில்லை. மண்டைக்குள் சுளீரெனச் சுட்ட ஆத்திரத்தில் அருகிலிருந்த ரீப்போ மேசையை ஓங்கி எற்ற, அது சுவரில் போய் மோதி அருகிலிருந்த ஹிட்டாரின் மேல் 'தொம்' என விழுந்தது. 'இந்த சனியன் புடிச்ச ஹிட்டாரால்தானே இவ்வளவு உவத்திரவமும்?!'.

இரண்டு நாட்களுக்கு முன்னர் 'டேர்ட்டி டிக்' கழியாட்ட விடுதியிலதான்; நீதன் லீனாவைச் சந்தித்தான். ஹிட்டார் நரம்புகளில் அதகளம் பண்ணிக்கொண்டிருந்த அவனுடைய விரல்களின் நளினம்தான் அவளை அவன்பால் வசீகரித்துப் போட்டது. 'ஹாய் ஐ ஆம் லீனா' என அவள் இதழ்களை மடக்கிப் புன்னகைத்தபோது, அவள் அழகைப் பார்த்து ஆடிப்போனான் நீதன். 'ஹலோ, நீதன்!' என்றபடி ஸ்கொட்சை இடக்கைக்கு மாற்றிக்கொண்டு வலக்கையை நீட்ட, அவள் மீண்டும் உதட்டை அஷ்டகோணலாக்கிச் சிரித்தாள். என்ன பவித்திரமான இதழ்கள். டிம்பிள் சிரிக்கும் கன்னம். கன்னம்கூடவா சிரிக்கும்? வியப்பும் நேயமும் விகசித்த முகத்தோடு அவளை விழுங்குவதுபோல் பார்த்தான் நீதன்.

'ஹேய், யூ ஆர் சச் எ பியூட்டிபுள் ஹிட்டாரிஸ்ட்' என லீனா சொன்னபோது அவனுக்கு முகம் முழுவதும் பற்கள் முளைத்தன. 'தாங்யூ' என்பதைக்கூட அவனுடைய முழு உடலுமேதான் சொல்லியது.

'வுட் யு லைக் டு ட்ரிங் சம்திங்?'. 

அவள் 'வோர்ம் விஸ்கி' என்றதும், அவளுக்கு அதையே ஓடர் செய்தான் நீதன். அது இரண்டே நிமிடங்களில் அவர்களுடைய இருக்கைக்கு வந்து சேர்ந்தது. அதை அவள் தன் தம்பூராக் கைகளில் எடுத்து, உயர்த்தி அவனைப் பார்த்துச் 'சொன்டே' சொன்னபோது, அவளுடைய சிவப்பு இதழ்களில் வொட்காவின் மெல்லிய போதைக்கணங்கள் ஒளிர்ந்தன. சுற்றத்தைக் அசட்டைசெய்யாத பேச்சு, இடையிடையே கால்புள்ளியில் முட்டித்திரும்பும் சிரிப்பு, படபடவென தானும் பேசிக்கொள்ளும் கண்கள், முன்பின் விலகி தன்னைத்தானே துடைத்துக்கொள்ளும் இதழ்கள்.. என்ன படைப்புடா கடவுளே?! சுவர்க்கத்தின் பெருங்களிப்பு சிலவேளைகளில் இப்படி பப்'களிலும் சாத்தியமாகிவிடுகிறது.

அவள் இடைவெளி விட்டபோதுதான் தன்பங்குக்கும் எதையாவது பேச வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. சிலவேளைகளில் உரையாடலை இழுத்துக்கொண்டு போக வார்த்தைகள் தேவையில்லைதான், என்றாலும் திடீரென 'ஹவ் டு யூ டு தட்.. இன்கிரடிபிள்?' என்கின்ற அவளுடைய கேள்வி அவன் அமைதியைக் குலைத்துப்போட்டது.

எதையோ ஆரம்பித்து, வேறொன்றைப் பிடித்து நடந்து, கடைசியில் தன்னுடைய ஹிட்டார் புலமையை தம்பட்டம் அடித்துக் களைத்தபோது, லீனா கால்களை மாற்றிப்போட்டுக்கொண்டு சௌகரியமாக அமரந்துகொண்டாள். பொதுவாக நீதன் ஹிட்டார் பற்றி பேச ஆரம்பித்தாலே நிறுத்தம் வைக்கவேண்டிய இடம் அவனுக்கு மறந்துபோய்விடும். இப்படி பெண்களுக்கு முன்னால் மூச்சுவிடாமல் அரை மணிநேரம் கோர்வையாகப் பேசும் திறமை நீதனுக்கு பெருங்கொடையாக அருளப்பட்டிருந்தது.

'கான் யூ கிவ் மீ யுவ ஹிட்டார் போர் எ மினிட் ப்ளீஸ்?' 

இப்படி இடைநடுவில் யாராவது எழுந்து வந்து அவன் அலட்டலுக்குப் புள்ளி வைத்துவிட்டுப் போனால்தான் உண்டு. அவன் அருகிலிருந்த ஹிட்டாரை எடுத்து அவளிடம் நீட்டினான். இவளும் ஹிட்டார் வாசிப்பாளா? அவனுடைய கண்களில் பெருந்தேடல் திரண்டிருந்தது.

ஹிட்டாரை வாங்கிக்கொண்ட லீனா, அதைத் தன் இடப்பக்கத் தொடையில் நேர்த்தியாக நிமிர்த்தி, விரல்களை கம்பிகளின் மேல் படரவிட்டு, கண்களை மூடி, மூச்சை ஒரு முறை இழுத்து விட்டபடி, 'Listen, fat lady shaking, back born braking...' எனப் பாட ஆரம்பித்தாள். அவனுக்கு தலை விறைத்தது. இவளால் ஒரு பாடலை இத்தனை நேர்த்தியாக வாசிக்க முடியும் என அவன் எப்படி நினைத்திருப்பான். அதைவிட என்னவொரு வெல்வெட் குரல் அது. ரபேல் ஸாதீக்கின் தொண்டைக்குள் பெண் குரல் புகுந்துவிட்டதா என்ன?. ஆச்சரியத்தை கண்களில் பிடித்துக்கொண்டு எழுந்து அவளுக்கு அருகில் போனான் நீதன். அவளோ அப்பொழுதுதான் பிறந்த உலகின் முதல் அழகியைப்போல தெரிந்தாள். இசை அழகியலின் உச்சம் என்பதுகூட லீனாவின் விரல்களைப் பார்க்கும்போதுதான் புரிந்தது அவனுக்கு. என்ன நேர்த்தியான, அழகான விரல்கள். அதிலிருந்து ஊதுபத்தி வாசம் போல புறப்பட்டுவரும் பெருங்களிப்புள்ள இசை. அவன் இதில் மயங்கிவிட்டாலன்றி அவன் ஆன்மா இனி ஒருபோதும் இசையில் திருப்திகொள்ளாது. அவன் கண்களை மூடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்தான்.

அவள் இசைத்து முடித்ததும் 'ஆஸம்' என்றான் நீதன். அவளுடைய முகம் சுருக்கென மலர்ந்தது. அவனுக்கோ அவளை அப்படியே கட்டியணைத்து முத்தம் கொடுக்கவேண்டும் என்கின்ற ஆசை. ஜோசியக்காரி, அவளே எழுந்து அவனைக் கட்டியணைத்துக்கொண்டாள்.

பப்'பின் மெல்லிய குளிரிலும் அந்த அணைப்பு அவனுக்குள் தீப்பிளம்பாய் பரவியது. கூரையிலிருந்த மெல்லிய விளக்கு சூரியனாய் மாறியது. ஆனால் அப்பொழுது அவனுக்கு தேவையாயிருந்ததெல்லாம் அதுவல்ல, ஒரு மின்மினிப்பூச்சிகூட இல்லாத அரைமணிநேர மைஇருட்டு!. அவளுடைய இறுக்கத்தை அவன் இன்னும் இன்னும் முறுக்கிக்கொண்டான். இவன் நெஞ்சில் அவளுடைய பருத்த மார்புகள் பலூன் பந்துகளாய் நசிந்து கிடந்தன. பாராட்டுக்கும் மோகத்துக்கும் இடையிலான கோடு அவனுக்கு மங்கலாய்த் தெரிந்தது. அப்பொழுதுதான் அவள் 'போதும்' என அணைப்பை அகற்றினாள். அவனுக்கோ ஏதோவொன்று அவனுடைய தேகத்திலிருந்து கழன்றுவிழுந்தது போலிருந்தது.

'ஐ ஆம் எ பிக் பேன் ஒவ் ஹிட்டார் நீதன், வென் ஐ சோ யூ ப்ளேயிங் ஹிட்டார் பியூட்டிபுலி அப் தெயார்.. ஓ மை கோட்.. யூ மேட் மை டே டியர்.. யூ ரொக்ட்'.

அவனுடைய ஹிட்டார் வாழ்க்கையில் இப்படியொரு உன்மத்த தேவதையின் பாராட்டை அவன் இதற்குமுன் எதிர்கொண்டதேயில்லை. நன்றி சொல்லி அமைதியாய்ச் சிரித்துவிட்டு உள்ளுக்குள் 'இவள ஈசியா மடக்கிடலாம்' எனச் சொல்லிக்கொண்டான். ஒரு பெண்மீதான எதிர்பார்ப்பற்ற உறவின் விதையை இந்த இசை என்னும் நிலம் கபக் எனக் கவ்விக்கொண்டுவிடுகிறது. இதுவரை இந்த 'டேர்ட்டி டிக்' பல பெண்களைக் கொண்டுவந்து அவனுடைய கரங்களுக்குள் தள்ளிவிட்டுப் போயிருக்கிறது என்றாலும், இம்முறை கிடைத்ததோ ஒரு மோகனாங்கி!. இப்படியொருத்தி நிச்சயம் கிடைப்பாள் என்கின்ற நம்பிக்கைதானே அவனை சதா வீடும் டேர்ட்டி டிக்'கும் என அலையவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

மது பரிமாறுபவனால் இரண்டு மூன்று தடவைகள் அவர்களுடைய குவளைகள் நிரப்பப்பட்டன. கூடவே நீண்ட பேச்சு. ஆனால் அவ்வப்போது மட்டும் அளவு பார்த்துப் பிடுங்கிப் போடும் ஹாஸ்யம், சிரிப்பு, தீண்டல், ஊடல், தொடுகை.. நேரம் அதிகாலை நான்கைத் தொட்டதுகூட நீதனுக்குத் தட்டுப்படவில்லை. ஆனால், லீனா கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, திடீரென எழுந்து 'ஓ மை கோட்.. இட்ஸ் 4. நீட் டு கோ டார்லிங்' என்றபோதுதான் அவனும் கடிகாரத்தைப் பார்த்தான். அவனுடைய மணிக்கூட்டின் முள்ளும் நான்கில்தான் குத்தி நின்றது.

விசனம் குத்திய முகத்தோடு லீனாவை 'ஓக்கே...' என அணைத்து மாறி மாறி மூன்று முறை கன்னத்தில் முத்தமிட்டான் நீதன். அவள் தன் பையிலிருந்த விசிட்டிங் காட்டை எடுத்து நீதனிடம் நீட்டி, உங்களுக்கு விருப்பமென்றால் வரும் சனிக்கிழமை மூன்று மணிக்கு வீட்டுக்கு வருகிறேன் என்றாள். அவனுடைய விழுந்த முகத்தில் குளிர்ச்சி குத்திற்று. முகம் முழுவதும் வினாடியில் முளைத்த நாவுகள் செட்டையடித்து 'ஆமாம்' என்றன.

அப்படிச்சொல்லிவிட்டுப் போன லீனா சனியன்று 3.45 கடந்தும் வரவில்லையென்றால் என்ன அர்த்தம்? பப்'களில் ஆண்களுக்கு லீலை என்னும் ஊசியை ஏற்றிவிட்டு பின்னர் புகைபோல மறைந்துவிடும் பெண்களில் ஒருத்திதான் இவளோ என்னவோ. ஆனாலும் டேர்ட்டி டிக்கில் லீனா பேசிய அந்தக் குரலில் ஏமாற்றுக் கார்வை இருக்கவில்லை. மீண்டும் எழுந்துபோய் போத்தலின் அடியிலிருந்த கடைசிக்குவளை பேர்னோவையும் நிரப்பிக்கொண்டு வந்து ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்தான் நீதன். அடிக்கட்டையில் வெம்மை ஏறும்முன் மூன்றாவது சிகரட்டும் பற்றிக்கொண்டது. இனியும் லீனா வருவாள் என்கின்ற நம்பிக்கை அவனுக்கு தினையளவும் இல்லை. ஆத்திரமும் படபடப்பும் முகத்தில் குற்ற மேல்சட்டையைக் கழற்றி கதிரையில் வீசினான். அப்பொழுதுதான் கீழ்வீட்டில் 'பொன்னார் மேனியனே..' ஒலிக்க ஆரம்பித்திருந்தது.

'பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே.....'

பெயோன்சே, ரெயிலர் ஸ்விப்ட், ஆரிப் அஸ்லாம் என்று சுற்றிக்கொண்டிருப்பவனுக்கு இந்தக் கீழ்வீட்டு 'பொன்னார் மேனியனே' சதா சித்திரவதையாகவே மாறிப்போயிருந்தது. காலையும் மாலையுமென அட்டவணை போட்டு ஒப்பேற்றித்தள்ளும் இந்தத் தேவாரத்தைக் கேட்டால், அப்பொழுதே கீழ்வீட்டில் பாய்ந்து கோகிலாவை போட்டுத்தள்ளிவிடவேண்டும் எனத் தோன்றும். இந்த பொன்னார் மேனியனைக் கேட்கும் போதெல்லாம் அவனுடைய மூளைக்குள் பூரான் ஊர்வதைக் கோகிலா அறிந்திருப்பாளோ இல்லையோ.

கீழ்வீட்டில் இருக்கும் அந்தக் கோகிலா ஒரு இலங்கைப் பெண். சதா தேவாரம் திருநீறு விரதம் என வாழும் ஒரு தெய்வீக ஆன்மா. நீதனுக்கு அவள் என்ன உறவு என்று கேட்கிறீர்கள்?, பொண்டாட்டி!. அவனுக்குக் கால்கட்டுப் போடவேண்டும் என்கின்ற அவனுடைய பெற்றோரின் ஆசைதான் அவளை யாழ்ப்பாணத்திலிருந்து இழுத்துக்கொண்டு வந்து இப்படி பாரிஸீல் போட்டிருக்கிறது. ஒரு ஆணுடைய 'தறுதலை' வாழ்க்கையைச் சரிசெய்யவேண்டும் என்பதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பலிகொடுப்பது பற்றி அப்பொழுது எவருக்கும் உறுத்தலில்லை. அப்பாவின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் ஓர்நாள் 'சரி பாத்துத் தொலைங்க.. கட்டிக்கிறன்' என நீதன் முடிப்பதற்குள்ளேயே, கோகிலாவுடைய புகைப்படம் அவனுடைய வைபர் பெட்டிக்குள் வந்திறங்கியது. மறுநாள் முகப்புத்தகத்திலிருந்த நீதனுடைய புகைப்படத்தை கோகிலாவின் தங்கை அவளுடைய அம்மாவிடம் காட்டியபோது அவர் 'என்ட முருகப் பெருமானே!' என தலைசுற்றித் தரையில் விழுந்தார். 

தலையில் எமினம் தொப்பி, காதுகளில் கடுக்கன், கால் கை கழுத்து என அத்தனை இடங்களிலும் ட்ரகோன், எமினம், சிலுவை டட்டூக்கள், காலோடு ஒட்டிய சிவப்பு ஜீன்ஸ், மஞ்சள் கலரில் மேல்சட்டை, கழுத்தில் 'ரொட்வில்லர்' சங்கிலி, முகத்தில் வானவில் கலரில் வெயில் கண்ணாடி.

'என்ட பெருமானே.. வினோத உடைப்போட்டிக்குப் போற சேர்க்கஸ்காரன் மாதிரியல்லோ கிடக்கு. உவனே என்ட மாப்பிள்ளை..??' என தரையிலிருந்து எழுந்த அம்மாவைக் கோகிலாவின் அப்பா மீண்டும் தரையில் விழுத்தினார்.

'அட விசரே உனக்கு, இல்ல கேக்குறன். உது பெரிய இடம் கேட்டியே.. ப்ரான்ஸ்ல பெடிக்குவேற காட் இருக்காம், நம்ம பிள்ளைய உடனே அங்க கூட்டிட்டு பொயிடுவான். அதவிட அவங்கள்ட குடும்பம் பெரும் புளியங்கொப்பு பாத்துக்க. அதால விளல் கதைகள் கதையாம நான் சொல்றத மட்டும் கேளு.' 

கோகிலாவுடைய அப்பாவின் அந்த அதட்டல் நீதனையும் கோகிலாவையும் திடீரென ஓர்நாள் மணமேடையில் கொண்டுவந்து இருத்தியது. கெட்டி மேளம் கொட்ட கோகிலா நீதனுக்கு மனையாளாக்கப்பட்டாள்.

யாழ்ப்பாணத்தில் திருமணம் முடித்து கணவனோடு ப்ரான்ஸில் வந்திறங்கிய கோகிலாவிற்கு புழுகம் தாங்கவில்லை. அங்கு திரும்பும் இடமெல்லாம் அவளுடைய கற்பனைக்குள் பிடிபடாத பிரமாண்டங்கள் நிறைந்து கிடந்தன. வெள்ளை கறுப்பு என விதம் விதமான அதிசய மனிதர்கள். படாடோபமான பாரீஸின் வீதிகளில் அவளுடைய கண்கள் அடிக்கடி தொலைந்து மீண்டன. கட்டங்கள், கடைகள், தெருக் கோடிகள், வாகனங்கள் என அத்தனைக்குள்ளும் ஒவ்வொரு ஆச்சரியப் பொறிகளைக் கண்டாள். அவளுக்கு ப்ரான்ஸ் கன்னா பின்னாவெனப் பிடித்துப்போக வெறும் இருபத்து நான்கு மணித்தியாலங்களே போதுமாயிருந்தது. 

ஆனாலும் அந்த பாரீஸின் கொண்டாட்டம் அவளுக்குள் நிரந்தரமாய் ஒட்டவில்லை. மூன்று வாரங்கள் உத்தமக் கணவனாக நடித்த நீதனின் தசைகளுக்குப் பின்னால் கறை படிந்திருப்பதாகத் தோன்றிற்று. நாட்கள் நகர நகர தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் அவளால் கணக்குப்போட்டு தீரத்துக்கொள்ள முடியவில்லை. தொட்டதும் பட்டதும் ஆச்சரியக்குறியாகவே அவள்முன் பெருத்து நின்றன. ஒரே மாதத்தில் அவளுக்கு பாரீஸ் வாழ்க்கை அருவருக்க ஆரம்பித்தது. நீதனும்தான்.

நீதன் என்கின்ற ஒருமாத அமானுஷ்யம், அவனைச் சுற்றியிருக்கிற மிகைப்படுத்தப்பட்ட உலகம், நியதியும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கிஞ்சித்துமில்லாத அவனுடைய வாழ்க்கை, அறைச் சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் அரை டசின் அரை நிர்வாணப் படங்கள், நாள் பூராகவும் கேட்டுக்கொண்டிருக்கும் மொழி புரியாத இசை, அலுமாரி அடுக்குகளிலிருக்கும் ஆங்கில ப்ரெஞ் புத்தகங்கள், மறுபுறத்திலிருக்கும் விதம் விதமான மதுப்போத்தல்கள், அவனை அடிக்கடித் தேடிவரும் அரைகுறை நண்பர்கள், உள்ளாடையில்லாமல் வந்துபோகும் வெள்ளைக் கறுப்புத் தோழிகள், பின்னிரவுவரை மொட்டை மாடியில் நடக்கும் இராக்கூத்துக்கள், அருவருக்கும் முனகல் ஒலிகள், அனைத்திற்கும் மேலாக இவற்றை எதிர்த்துக் கேள்வி கேட்டால் அடிவயிற்றில் கிடைக்கும் உதை. ஒவ்வொரு பகலும் அவளுக்கு நரகத்திலேயே பிறப்பது போலிருந்தது.

இவற்றையெல்லாம் ஒரு பெண் தன் வாழ்க்கையில் சதா அனுபவிக்க வேண்டும் என்பதுதான் இந்த வெளிநாட்டு மாங்கல்யத்தின் மையச்சரடா? அல்லது நான்தான் வெள்ளந்தியாய் இருந்துவிட்டேனா? அவளிடம் இருந்தவையெல்லாம் வெறும் நிர்வாணம் உடுத்திய கேள்விகள் மட்டும்தான். அவளுக்கு எதை உதறி, எதை விலக்கி, எதை அடைவது எனப் புரியவில்லை. கஜகர்ணம் போட்டாலும் சுவர்களில் மோதி மீண்டும் நீதனின் அறைக்குளேதான் விழவேண்டியிருந்தது.

ப்ரான்ஸ் வந்து ஒரே மாதத்திலேயே இருவருக்கும் இடையிலிருந்த தாம்பத்திய உறவு தெறித்துக்கொண்டது. இனி இருவரும் தனித்தனியே இருந்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என ஓர்நாள் நீதன் சொன்னபோது  அவள் மறுபேச்சே பேசவில்லை. அவனுடைய அத்தனை சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கும் நடுவீட்டிலேயே தடுப்புச்சுவராய் இருந்துகொண்டிருப்பது அவளுக்கும்தான் அசௌகரியமாய் இருந்தது. யாருக்காகவோ சொருகிய ஆணுறையைக்கூட மலக்குழிக்குள் போட்டு ப்ளாஷ் செய்ய மறந்துபோகும் ஒரு அயோக்கியனுடைய வக்கிரங்களை சகித்துக்கொள்ளும் சக்தி அவளிடம் இனி இல்லை. எங்கும் புகுந்து எப்படியும் வாழும் எலிவாழ்க்கை அவளுக்குரியதல்ல. எத்தனை நாட்கள்தான் குப்பைத்தொட்டியின் மேல் படுத்துக்கொண்டு நெடில் வாடையைக் குற்றம்சொல்லிக்கொண்டிருப்பது?. முடிவாகி, தான் தனியே போய்விடுகிறேன் என்பதைக்கூட அவள் சந்தோஷமாகத்தான் அவனிடம் சொன்னாள். தினம் தினம் உயிரைச் சிதைத்துக்கொண்டிருக்கும் ஒரு அயோக்கிய புருஷனைவிடவா தனிமை பொல்லாதது? அந்தக் கணமே தன் பெட்டியைத் தூக்கிக்கொண்டு கீழ்வீட்டிற்கு வந்தாள் கோகிலா. 

அன்றிலிருந்து தனிமையோடு உறவுகொண்டாட பழகிக்கொண்டாள் கோகிலா. காலையில் எழுந்து சாமிக்கு விளக்கேற்றி தேவாரம் படிப்பது, கீழ்வீட்டைக் கூட்டி துப்பரவு செய்வது, நீதன் வேலைக்குப் போனதும் மேல்வீட்டைப் பெருக்கி அடுக்கி வைப்பது, அவனுடைய அழுக்கு ஆடைகளைத் துவைப்பது, தனியே சமைத்து தனியே உண்பது, மாலை மீண்டும் முருகப்பெருமானுக்கு பூசைசெய்து தேவாரம் படிப்பது, இரவில் பசியெடுத்தால் மட்டும் டில்மா தேனீர்ப்பையை தண்ணீரில் இட்டு வயிற்றை நிறைத்துக்கொள்வது, இலங்கையிலிருந்து அப்பா அழைத்தால் 'நான் சந்தோசமா இருக்கன்பா, எனக்கென்ன குற.. இவர் என்ன நல்லா கவனிச்சுக்கிறார்' என கைகள் நடுங்க பொய்சொல்வது, அதை நினைத்து பின்னர் பத்து நிமிடங்கள் ஓவென அழுது தீர்ப்பது, கடைசியில் அப்படியே பிரக்ஞையற்று உறங்கிப்போவது.. இவ்வளவுதான் அவளுடைய பாரீஸ் வாழ்க்கை. பாவம், தங்களுக்கு நிராகரிக்கப்பட்டது வாழ்க்கைதான் என்பதைப் தெரிந்துகொள்ள பல ஈழத்துப்பொண்களுக்கு ஐரோப்பா வரை போகவேண்டியிருக்கிறது.

காதை பொத்திக்கொண்டு சில நிமிடங்கள் இருந்த நீதனுக்கு அந்த 'பொன்னார் மேனியனே' இன்னும் இன்னும் ஆத்திரத்தையே கூட்டியது. ஐந்து மணி கடந்த பின்னரும் இனி லீனா வருவாள் என்கின்ற நம்பிக்கை இல்லை. அதேவேளை கீழ்வீட்டு 'பொன்னார் மேனியனும்' நின்றபாடில்லை. சோபாவிலிருந்து எழுந்துபோய் சுவரிலிருந்த கீழ்வீட்டிற்கான அழைப்பு மணியைத் தட்டினான் நீதன். இரண்டே வினாடிகளில் மெட்டி ஒலி மாடிப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தது.

மேல் வீட்டிற்குள் வந்த கோகிலாவிற்கு மதுவும் புகையும் கலந்த தினுசான வாடை முகத்தில் பளார் என அறைந்தது. நாசிச் செல்கள் எரிந்தன. வயிறு குமட்டிக்கொண்டு வர கைகளை எடுத்து மூக்கைப் பொத்திக்கொண்டாள். மற்றும்படி அவளுடைய முகம் எப்போதும் போல மலர்ந்தேதானிருந்தது. துயரத்தின் மை அவள் முகத்தில் துளிகூட இல்லை. அவனுக்கு முன்னால் தான் சந்தோஷமாக இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்கின்ற எத்தனிப்பு அது. கண்களில் கறுப்பு மை அளவாயிருந்தது. அவளுடைய கூந்தலின் நுனியிலிருந்த நீர்சொட்டு தரையில் வீழ்ந்து தெறித்தது. நெற்றியில் தனிக்கோட்டு திருநீறு பிசகாமல் நின்றது. முன்னாலிருந்த நீதனைப் பார்த்து முழுப் புன்னகையொன்றை இறக்கிவைத்தாள் கோகிலா. ஆனால் அவனுடைய முகமோ காய்ந்துபோன சுரிப்பந்துபோல இறுகிக்கிடந்தது. 

'ம்.. இதில இரு' என்றான் நீதன். அதே அதிகாரம், அதே முரட்டுத்தனம். சிரித்துக்கொண்டே முன்னாலிருந்த இருக்கைக்கு வர, அவளுடைய கால் தற்செயலாக கீழே கிடந்த ஹிட்டாரில் தடக்கியது. 'தற்செயல்' என்னும் சொல் நீதனுடைய அகராதியில் இல்லையென்பது அவளுக்குத்தெரியும். அவன் அவளுடைய முடியைப் பிடித்து இழுத்து, அவள் அடிவயிற்றில் ஓங்கி மிதிப்பதற்குள் 'சொரி சொரி' என பத்துத்தடவைகள் சொல்லிக்கொண்டாள் கோகிலா. அவளுக்கு மனப்பாடமாகிவிட்ட மந்திரம் இந்த 'சொரி'!.

'எரும மாடு, அது என்ன தெரியுமோ?' 

நீதனுடைய வார்த்தையில் போதையிருந்தது, கூடவே அந்த கனமான அதிகாரமும் கேலிக்குணமும். தலையை நிமிர்த்தி நடுங்கிய சுரத்தில் மெதுவாக 'ஹி-ட்-டா-ர்' என்றாள் கோகிலா. 'ஸூ.. அது ஹிட்டார்னுகூட ஒனக்குத் தெரியுமா?' எனப் பற்களைத் துருத்திக்கொண்டுபோய் கோவத்துக்கும் சிரிப்பிற்குமிடையில் முகத்தை நிறுத்திக்கொண்டான் நீதன். இரண்டு மூச்சுக்கு அளவான காற்றை உள்ளே இழுத்துக்கொண்டு மீண்டும் கத்த ஆரம்பித்தான்.

'வீடு துப்பரவாக்கேக்க அங்க இங்க கிடக்கிற பேப்பர்கள உன்ட பாட்டுக்கு தூக்கி எறியாத எண்டு எத்தின தடவ சொல்லியிருக்கன்.. மண்டைக்குள்ள ஏறித்துலையாதா.. இங்க ஒரு விசிட்டிங்காட் இருந்திச்சே.. கண்டியா?.' 

அவன் கூறிமுடித்த அடுத்த கணமே தன் கைப்பிடிக்குள்ளிருந்த அந்த விசிட்டிங் காட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள் கோகிலா. அவன் அதை எதிர்பார்க்கவில்லை. நீதனுக்கு கண்கள் பருத்தன. 'இல்ல.. உங்க சேட்ட தோய்கேக்க அதுக்குள்ள இருந்திச்சு. நீங்க கேப்பீங்கன்னு கவனமா எடுத்து வச்சன்.. இந்தாங்க' என கோகிலா மீண்டும் அதே அரைகுறைப் புன்னகையோடு அடங்கிச் சொன்னாள். நீதன் அதை அவளிடமிருந்து பிடுங்கியெடுத்து அதிலிருந்த 'லீனா செமெனோவிச்' என்கின்ற பெயரைச் சத்தமாகப் படித்தான். 

கோகிலாவின் கவனம் அந்தப் பெயரில் ஒட்டவில்லை. அவளுடைய கைகள் 'உன்னைக் காலால் தட்டிவிட்டேன், என்னை மன்னித்துக்கொள் அன்பே' என்பது போல அருகிலிருந்த ஹிட்டாரின் இழைகளை மென்மையாகத் தடவிக்கொண்டிருந்தது. 'லீனா செமெனோவிச்' என அவனுடைய குரல் இரண்டாம் முறை ஒலிக்கவும், மேசையிலிருந்த தொலைபேசி அடிக்கவும் சரியாயிருந்தது. அவன் பார்வையைப் புரிந்துகொண்டு, எழுந்து போய் தொலைபேசியை எடுத்தாள் கோகிலா.

'ஐ ஆம் கோகிலா. ஸூவர், ஐ வில் லெட் கிம் நோ. தங்யூ' என தொலைபேசியில் கோகிலா பேசிய வார்த்தைகள் நீதனுக்கு அட்சரம் பிசகாமல் கேட்டன. 'யாரு?' என அவன் கேட்பதற்கு முன்னரே 'உங்க ப்ரண்ட் லீனாவாம். பகல் அவட கோலிச்ல கொஞ்சம் வேலையாப் போயிட்டாம். இன்னும் பத்து நிமிசத்தில வந்துடுவாவாம்' எனச் சொல்லியபடி மீண்டும் வந்து கதிரையில் அமர்ந்துகொண்டு தன் விழிகளையும் விரல்களையும் ஹிட்டார் பக்கம் கொண்டுபோனாள் கோகிலா. அப்பொழுது நீதனின் விழிகளுக்குள் வெட்டிய அந்தப் போரொளியை அவள் கவனித்திருக்க வாய்ப்பில்லை.

இரண்டு நிமிடம் கழித்து 'சரி வர்ரேங்க' என எழுந்த கோகிலாவை மீண்டும் தன் முன் இருக்கையில் இருத்தினான் நீதன்.

'ஆமா, இல்ல தெரியாமத்தான் கேக்குறன், என் மேல உனக்கு கோவமே வராதா?'

'இல்ல'

'வெறுப்பு?'

'இல்ல'

'ஏன்?'

'ஏன் வரணும்?'

தூண்டிலை லாவகமாகத் தாண்டிய அவளுடைய பதில்களில் அவனுக்கு இமை நிமிர்ந்தது. அவள் சொன்ன பதில்கள் அவனுக்கு அசூயையாக இல்லை. இந்தக் கேள்விகளால் இனி ஒருபோதும் அவளைப் நொருக்க முடியாது என்பதை இதுரை அறியாமலிருந்ததுதான் அவனுக்கு ஏமாற்றமாயிருந்தது. நெஞ்சைக் குதறித்தின்னும் துயரத்தையெல்லாம் மறைத்துக்கொண்டு வாழப்பழகிக்கொள்ளும் பெண்களை ஆண்களால் அவ்வளவு சீக்கிரத்தில் புரிந்துகொள்ள முடிவதில்லை. மாற்ற முடியாததை உதறித்தள்ளிவிட்டு, சுற்றிக்கிடக்கும் சின்னச்சின்ன சந்தோஷங்களை தூக்கிவைத்துக் கொண்டாடி மகிழ்வதுதான் வாழக்கை என்பதை பல பெண்களுக்கு ஆண்கள்தானே சொல்லிக்கொடுத்துவிட்டுப் போய்விடுகிறார்கள்.

நீதனின் விக்கித்துப்போன விழிகள் அவள் கண்களைக் கண்டபடி துழாவின. அந்தக் கணத்தில் அவனைப் பார்த்து அவள் வைத்துவிட்டுத் திரும்பிய புன்சிரிப்புக்கூட அவன் முகத்தில் காறி உமிழ்ந்ததைப்போல்தான் இருந்தது. நாம் தொலைத்துக்கட்டிவிட்டோம் என்று நினைக்கின்ற நம் எதிரி, ஓர்நாள் நம்முன் தீர்க்கமாக எழுந்து நின்று நம்மைப் பார்த்துப் பரிகாசம் வழியச் சிரிப்பதுதானே உலகின் மிகப்பெரிய சிட்சை.

'ஏன் இருக்கணும்?'. இந்தக் கண்ணியை அவிழ்க்கும் புத்திசாலித்தனமெல்லாம் நீதனிடம் இல்லை.

இந்தப் பதிலுக்குப் பின்னரும் இந்த உரையாடலை இழுத்துக்கொண்டு போகவேண்டும் என்றால் இன்னும் இரண்டு 'பெக்' இறக்கவேண்டும் போலிருந்தது நீதனுக்கு. உண்மையிலேயே இவள் சந்தோஷமாகத்தான் இருக்கிறாளா என்பதில் அவனுக்கு எப்பொழுதும் குழப்பமே மிஞ்சியிருக்கிறது. அதை அவளிடம் கேட்டுவிடலாம் என்றால் 'ஏன் இருக்கக்கூடாது?' என அம்பைப் பிடுங்கி மறுபடியும் அவன் தொண்டையிலேயே ஏற்றுவாள். எழுந்து போய் வெறுமையாயிருந்த கிளாசை, ஸ்கொட்சைப் போட்டு நிரப்பிக்கொண்டான் நீதன். 'எழுந்து போ' என்கின்ற அவனுடைய ஆணைக்காகக் காத்துக்கொண்டிருந்தாள் கோகிலா.

மீண்டும் மதுவோடு சோபாவில் வந்தமர்ந்த நீதன் அவளைப் பார்த்து கடும் சுரத்தில் 'அந்த ஹிட்டார எடு' என்றான். அவள் அதைப் பவ்வியமாகத் தூக்கி அவனிடம் நீட்டினாள். கையை தன் தொடையில் துடைத்துக்கொண்டு, ஹிட்டாரின் முனையிலுள்ள திருகாணிகளைத் ஒவ்வொன்றாய் திருகி முறுக்கேற்றி, பின் ஏதொவொரு மொழியற்ற பாடலை வாசிக்கத் தொடங்கினான். அவளுக்கும் அதன் லயம் பிடிபட்டது. தன் தொடையில் விரல்களால் தட்டியபடி அவனுடைய ஹிட்டாரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் கோகிலா.

'ஆமா.. இந்த குறுமம் புடிச்ச தேவாரத்தவிட்டா உனக்கு வேற எதுவுமே தெரியாதா.?' இடையில் ஹிட்டாரை நிறுத்திவிட்டு அவளைப்பார்த்து மிகக் கடுமையான தொனியில் கேட்டான் நீதன். இம்முறை அவள் பயந்துவிடவில்லை. பதிலுக்கு அவள் தலையை நிமிர்த்தி அரை உதட்டில் சிரித்தாள்.  அந்தச் சிரிப்பின் முகடுகளில் ஒரு நையாண்டி இருந்ததை நீதன் கவனிக்கவில்லை. வழமைபோலவே அவளை முறைத்துப்பார்த்துவிட்டு மீண்டும் பாடலை இழுக்க ஆரம்பித்தான்.

'ஒருக்கா அத என்கிட்ட குடுக்க முடியுமா ப்ளீஸ்' 

அவன் இடைவெளிவிட்ட இடத்தில் கோகிலாவின் குரல் திடுக்கெனப் பாய்ந்தது. இப்பொழுதுதெல்லாம் இந்தக் கழுதைக்கு துணிச்சல் அதிகமாகிவிட்டது என அவன் நிச்சயம் நினைத்திருக்கக்கூடும். இவ்வுலகில் தனிமையும் அடக்குமுறையும் கொடுக்காத துணிச்சலையா வேறெதுவும் கொடுத்துவிடப்போகிறது. அவள் ஹிட்டாரைத்தான் கேட்கிறாள் எனப் புரிந்தாலும், அவனுக்கு அது ஏன் என்றுதான் புரியவில்லை. விழிகளை விரித்து அவளைக் கேள்விக்குறிப் பார்வையால் துளைத்தான். அவள் மீண்டும் அதைக் கண்களாலேயே சொன்னாள், 'ப்ளீஸ்.. ஒருக்கா குடுங்க..'.

அவன் ஆச்சரியத்தோடு அவளிடம் ஹிட்டாரைக் கொடுத்தான். கோகிலா அதை பத்திரமாக வாங்கி, தன் வலத்துடையில் சரித்து நிறுத்தினாள். பிரேதத்தின் கண்களைப்போல நீதனுடைய கண்கள் பருத்தன. ஒருதடவை அவனைத் தீர்க்கமான பார்வையால் பார்த்துவிட்டு அவள் தன் விளையாட்டை ஆரம்பித்தாள். 

'ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம்..ம்... பூ பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை....'. 

முதல் ஹிட்டாரின் ஆரம்பம், அதன் பின் அவளுடைய சுந்தரக் குரலிழைகளில் விழும் ஹம்மிங், பின்னர் ஹிட்டாரோடு பிணைந்துவரும் பாடல். 'ஓ மை கோட்!'.

நீதன் வெந்நீர் கொட்டியதைப் போல சட்டென எழுந்து அவளை ஆச்சரியப் பார்வையால் குற்றினான். பருத்த எச்சில் உருண்டையொன்று அவன் தொண்டைக்குள்ளால் கீழ்நோக்கி இறங்கிக்கொண்டிருந்தது. இது கோகிலாதானா? ப்ராவோ! எவ்வளவு அழகான குரல்.. நேர்த்தியான ஹிட்டார் புலமை வேறு. அவனால் நம்பமுடியவில்லை. அவளும் இலேசுப்பட்ட ஆளா என்ன?, அந்த நேரம் பார்த்து தமிழிலிருந்து அரபி இசைக்குத் தாவினாள்.

'வாட்??????'

நீதனுக்கு மண்டை சிதறிவிடும் போலிருந்தது. பொன்னார் மேனியனே என இழுத்துக்கொண்டு கிடக்கும் மரமண்டைக்குள் எப்படி அரபி இசை வந்தது? அவசரப்பட்டு இவளை தப்பிதமாக எடைபோட்டு வைத்திருக்கிறேனோ எனத் தோன்றியது. 'இந்தப் பாட்டு இந்தப் பாட்டு...' என அவன் கதிரைக் கையில் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த கோகிலா,  ஹிட்டாரின் சத்தத்தைக் குறைத்துக்கொண்டே 'Mazal mazal..., Douzi'ட சோங்' எனச் சிரித்தாள். நீதனுக்கு தலை வெடித்துச் சிதற இன்னும் இரண்டு வினாடிகள் மட்டுமே பாக்கி இருப்பது போலிருந்தது.

'ஸ்டொப் ஸ்டொப்' என அருகில் வந்த நீதன் அவளிடமிருந்த ஹிட்டாரைப் பிடுங்கி அருகில் போட்டுவிட்டு, அவளுக்கு நெருக்கமாக அமர்ந்தான். வழமைபோலவே அவள் தலையைக் குனிந்துகொண்டு ஒரு வேலைக்காரியின் முகத்தை தன் தலைக்குமேல் உடனடியாக வரவழைத்துக்கொண்டாள்.  அவளை விழுங்கிவிடுவதுபோலப் பார்த்த நீதன் அவள் நாடியைத்தொட்டு நிமிர்த்தி பரபரப்பாகக் கேட்டான்.

'ஏய்.. நீ ஹிட்டார் எல்லாம் வாசிப்பியாடீ??'

'யெஸ்'

'எனக்கு சொல்லவேயில்ல..?'

'நீங்க கேட்டதேயில்ல!'

'உங்க ஊர்ல ஹிட்டார் எல்லாம்...?'

'ம்ம்.. எங்க ஊரில எல்லாம் இருக்கு..'

'முறையா படிச்சியா?'

'இல்ல.. எனக்கு ஹிட்டார்னா ரொம்ம பிடிக்கும்.. என்ட ப்ரண்டுட வீட்டுக்குப் போகேக்க அவள்ட அண்ணன்ட ஹிட்டார அடிக்கடி வாங்கி தட்டிப் பாத்துக்குவன்.. கொஞ்சம் கொஞ்சமா அது கையில ஒட்டிரிச்சு. அப்புறம் சொந்தமா 'யமஹா' ஒண்டு வாங்கினன். இப்பவும் அது வீட்ட பத்திரமா இருக்கு!'

'என்னடி சொல்ற..' தலையை கோதிக்கொண்டு சோபாவிலிருந்து எழுந்த நீதன் ஜன்னல் பக்கம் போய் சிகரட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டான்.

'அது சரி... Douzi பற்றியெல்லாம் தெரியுமா உனக்கு?'

'ம் தெரியும்.. அவர்ட நிறைய சோங்ஸ் கேட்டிருக்கிறன்.'

'வேற யார்ட சோங்ஸ் எல்லாம் கேப்பாய்.?'

'இளையராஜா, ஏஆர், சோனு நிஹாம், பீத்தோவன், செலினா கோமஸ், அலிஸீ, அப்புறம் லத்தீன் அமெரிக்கா பக்கம் நிக்கி ஜாம், என்றிக்கே இக்லேசியஸ்.. இதவிட Perfume னு ஒரு ஜப்பானிஸ் பேன்ட், அவங்கட எல்லா சோங்ஸ்ஸூம் கேட்டிருக்கன், நல்லாப் பிடிக்கும். அதிலயும் Spending all my time, pick me up எல்லாம் என்ட பேவரேட்ஸ். இன்னொண்டு T-Ara என்ற கொரியன் பேன்ட். மை எவர் பேவரேட். அவங்க பாட்டுனா நான் சோ அடிக்டட். அவங்கட Cry Cry னு ஒரு பாட்டு, அப்புறம் Day and night னு இன்னொரு பாட்டு. ரெண்டையும் திரும்ப திரும்ப நூறு தடவயாவது கேட்டிருப்பன்'. 

'ஓ மை கோட்.'

நீதனுக்கு போதை வியர்வையாகக் கழன்றது.

'எதுக்குடி இதப்பத்தி எதையுமே என்கிட்ட சொல்லல..?'

'நீங்க சந்தர்ப்பம் குடுக்கல.'

அவள் சொல்வதும் சரியென்றே பட்டது நீதனுக்கு. மீண்டும் தலைமுடியைக் கிளறியபடி எதிர்த்திசையில் முகத்தை வைத்துக்கொண்டு நின்றான் நீதன். கோகிலா மட்டும் விடுவதாயில்லை.

'ஆஹ்.. சொரி.. இன்னொண்டு... சொன்னா கோவீக்காதேங்க ப்ளீஸ். உங்கட்ட கேக்காம கொள்ளாம நேத்து உங்க அலுமாரில இருந்து The Alchemist எண்ட புத்தகத்த எடுத்துட்டுப் போயிட்டன். சொரி.. கோவிக்காட்டி, வாசிச்சிட்டு பவுத்திரமா கொண்டுவந்து வச்சிடவா ப்ளீஸ்?.'

'The Alchemist ?????..'

'ஆமா.. Paulo Coelho ட Eleven Minutes படிச்சிருக்கிறன். அதில வர்ற மரியா என்ற விபச்சாரப் பெண்ட குரல் இப்பவும் எனக்குள்ள சன்னமா கேட்டுக்கிட்டே இருக்கு. அதிலயும் 'Love is terrible thing that will make you suffer...' னு அடிக்கடி ஒரு வசனம் சொல்லுவா. அப்பிடியே கட்டிப்பிடிச்சு முத்தம் வைக்கணும்மாதிரி இருக்கும். Paulo அவ்வளவு யதார்த்தமான மனுசன். அதுதான் அவர்ட புத்தகம் எண்டதும் கேக்காம கொள்ளாம தூக்கிட்டுப் பொயிட்டன். சொரி..'

நீதனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. தொண்டை வறண்டு காய்ந்திருந்தது. தன் காதுகளையே நம்ப மறுத்தது அவனுடைய ஈகோ. வெடித்துச் சிதறக்காத்திருக்கும் இதயத்தை பத்திரமாக பற்றிப் பிடித்துக்கொண்டு நிமிர்ந்தான். 'இந்த அரியாலைப் பட்டிக்காட்டுக்குள் இத்தனை பெரிய அற்புதங்களா?' என கேட்கவேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆளுமை என்பதை ஊர் இடம் உருவத்தை வைத்துத் தீர்மானிப்பது எவ்வளவு முட்டாள்தனம் என அவன் நினைத்திருக்கவேண்டும். அப்பொழுது 'டிங் டிங்' என வீட்டின் அழைப்பு மணி கத்த ஆரம்பித்தது.

அவசரமாக கதிரையிலிருந்து எழுந்த கோகிலா, தன் பின்பக்கச் சட்டையைச் சரிசெய்துகொண்டு புறப்படத் தயாரானாள். நீதனைப் பார்த்து பவித்திரமாக சிரித்துவிட்டு படிகளில் இறங்கப் போனாள்.

'கோகிலா, அது லீனாதான். நான் வீட்டில இல்லையெண்டு சொல்லி அனுப்பிப்போட்டு நீ மேல வா.'

அவளுக்கு அது புரியவில்லை. தலையை ஆட்டிக்கொண்டு படிகளில் கீழே இறங்கினாள் கோகிலா. நீதன் சொன்னது போலவே வாசலில் நின்றுகொண்டிருந்த லீனாவை அவன் இல்லையெனத் திருப்பி அனுப்பிவிட்டு மீண்டும் உள்ளே வந்தாள். 'இப்ப கட்டாயம் மேல போகத்தான் வேணுமா?' உள்ளுக்குள் தடுமாற்றம் சுழன்றது. 'போகத்தான் வேணும், இல்லையெண்டா ரெண்டு மாதமா வாங்காத உதைய இண்டைக்கு நானே போய் வாங்கிக்கட்டிக்கிறதாப் போயிடும்'. கோகிலா படிகளில் ஏறினாள். மெட்டியொலி நடுங்கியது.

அவள் உள்ளே வந்ததும், நீதன் மீண்டும் சோபாவில் அமர்ந்துகொண்டு அவளை ஹிட்டாரை எடுக்கும்படி உத்தரவிட்டான். அவள் எடுத்தாள். 'ம்ம் இன்னொரு பாட்டு வாசி..' என இறுக்கமாகச் சொன்னான். அவள் வாசிக்க ஆரம்பித்தாள்.

'Last night I dreamt of san pedro...... La isla bonita...' 

ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் அவளை இறுகக்கட்டிணைத்து உதடுகளில் முத்தமிடவேண்டும் போலிருந்தது அவனுக்கு. 'லா இஸ்லா பொனிட்டா' அவனுடைய மிகப் பிரியமான பாடல்களில் ஒன்று என்பது அவளுக்கு எப்படித் தெரியும்?.

Popular Posts