Saturday, September 23, 2017

பேசியதும் பேச மறந்ததும் - யாரும் மற்றொருவர்போல் இல்லை.பிரபல ஒலிபரப்பாளரும், கவிஞரும், எழுத்தாளருமான திரு. அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் மொழிபெயர்த்த “யாரும் மற்றொருவர்போல் இல்லை” என்கின்ற கவிதைத் தொகுப்பின் வெளியீடு 22.09.2017 அன்று கொழும்பில் இடம்பெற்றது. நிகழ்வில் அந்நூலை முன்வைத்து நான் ஆற்றிய உரையின் வரிவடிவம் இது. 


Image may contain: textமுதலில், “யாரும் மற்றொருவர்போல் இல்லை” என்கின்றதொரு நீண்ட பயணத்தை முடித்து, அதை இன்று நம் கைகளில் சேர்ப்பித்திருக்கின்ற அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூறிக்கொள்கிறேன்.

என்னைப்பொறுத்தவரையில் விமர்சனம் என்பதெல்லாம் மிகப்பெரிய வார்த்தைகள். அது அதீத புலமையையும், ஆழ்ந்த வாசிப்பையும், தேர்ந்த அனுபவத்தையும் கோரி நிற்பது. ஆதலால் இங்கு எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த வேலையை என்னால் சரிவரச் செய்ய முடியுமா எனத்தெரியவில்லை. ஆனால் அதைக் கண்ணியத்தோடு செய்யவேண்டும் என்பதில் கவனமாய் இருக்கிறேன். இங்கு கண்ணியம் என்பது இதைப் படித்தபோது எனக்கு தோன்றியதையும், பெற்றுக்கொண்டதையும் ஒளிவு, தயக்கம், முகதாட்சண்யம் இன்றி வெளிப்படையாகப் பேசிவைப்பது. இங்கு அதற்கான இடத்தை திரு. அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் எனக்குக் கொடுத்திருக்கிறார் என்றே நம்புகிறேன். 

இந்த நூலிலே இருக்கின்ற ஒவ்வொரு கவிதைகளைப் பற்றியும் நீளமான, ஆழமான, முறைப்படியான விமர்சனத்தையோ அல்லது ஆய்வையோ இந்த மேடையில் நடாத்திவிட்டுப் போவது என்னுடைய நோக்கமல்ல. அதை இங்கு வந்திருக்கும் திரு. ஷிப்லி அவர்கள் என்னைவிடத் திறமையாகச் செய்யக்கூடியவர். அப்படியெனின் நான் எதைப்பற்றிப் பேசப்போகிறேன். 

இந்த “யாரும் மற்றொருவர் போல் இல்லை” என்கின்ற மொழிபெயர்ப்பைப் படித்தபோது எனக்குள் உண்டான உணர்வுகள், அகத்தடுமாற்றங்கள், எல்லாவற்றையும் விட அந்த உன்னதமான ஒட்டுமொத்த வாசிப்பு அனுபவம்... இவற்றை மட்டுமே உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என வந்திருக்கிறேன்.

எனக்கு கவிதையில் நீண்டகாலமாகவே ஆர்வம் உண்டு. அதிலும் என்னை “கவிஞன்” என்று சொல்வதைவிட “வாசகன்” என்று சொல்வதில்தான் எனக்கு பெருமையும் ஆத்மதிருப்தியும் கிடைத்திருக்கிறது. அந்தவகையில் “கண்ணீர்ப்புக்கள்”, “திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்”, “இரத்ததானம்” என ஆரம்பித்து மேத்தா, வைரமுத்து, புதுவை இரத்தினதுரை, ஞானக்கூத்தன், காசி ஆனந்தன் எனச் சுற்றிக்கொண்டிருந்த எனக்கு முதல் முறையாக “என்னைத் தீயில் எறிந்தவள்” என்கின்ற கவிதைப் புத்தகத்தோடு அதன் கவிஞர் அஷ்ரப் ஷிகாப்தீனை அறிமுகப்படுத்தியவர் மன்னாரைச் சேர்ந்த கவிஞர் மன்னார் அமுதன் அவர்கள். இன்று கவிதைகளிடமிருந்து கொஞ்சம் தூரமாய் போய் தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அ.முத்துலிங்கம், வண்ணதாசன், தஸ்தயேவ்ஸ்கி, அ.சோ, சுஜாதா, ஜேமோ, சாரு என என் பிரியத்திற்குரிய இன்னுமோர் உலகத்தை உருவாக்கிக்கொண்ட பிறகும்கூட அந்த www.ashroffshihabdeen.blogspot.com என்கின்ற “நாட்டவிழி நெய்தல்” இன்னும் என்னுடைய Bookmark list இல் முதலில்தான்  இருக்கிறது.

அவ்வாறாக நாம் யாருக்கு தீவிர வாசகனாக இருக்கிறோமோ அவருடைய புத்தகத்தைப் பற்றி பேசுவதற்கே நம்மை அழைத்து வந்து ஒலிவாங்கிக்கு முன்னால் நிறுத்திவைத்தால் எப்படியிருக்கும்? ஒரு வாசகனுக்கு இதைவிடவும் மிகப்பெரியதொரு கௌரவம் கிடைக்கும் எனத் தோன்றவில்லை. அதற்காக அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த 21ஆம் நூற்றாண்டுக் காலத்திலே அதுவும் முகப்புத்தகம், ட்விட்டர் எனப் பல சமூகவலைத்தளங்கள் வந்துவிட்டப் பிறகு இந்த “கவிதை” என்கின்ற வஸ்து ஓர் irritation ஆகவே மாறிப்போய்விட்டது. திரும்பும் இடங்களிலெல்லாம் கவிதைகளிலேயே தடக்கிவிழவேண்டும் என்பது எப்படியான வாழ்க்கை. முகப்புத்தகத்தைத் திறந்தால் கவிதை. ட்விட்டருக்குப் போனால் கவிதை. இணையத்தளங்களைத் திறந்தால் கவிதை. இப்படி திரும்புமிடமெல்லாம் கவிதை கவிதை என்றால் அது irritation இல்லாமல் என்னவாக இருக்கமுடியும்? இதனால் நம்முடைய கவிதை வாசகர்களுக்கெல்லாம் இன்று ஏற்பட்டிருக்கும் மாபெரும் அவலம் என்னவென்றால் அது நல்ல கவிதைகளை எங்கு, எப்படி தேடிப்படிப்பது என்பதுதான். இந்த தேடலுக்காக மட்டுமே அந்த வாசகன் ஏராளாமான மணித்தியாலங்களைச் செலவு செய்யவேண்டியிருக்கிறது. இந்தக் களேபரங்களுக்குள் ஓர் நல்ல கவிதையைக் கண்டடைதல் என்பது ஒரு “ஜக்பொட்” மனநிலையாகவே மாறிப்போய்விட்டது. இப்பொழுதெல்லாம் முதல் நாள் யாருக்கும் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே அவ்வாறான நல்ல கவிதைகள் கண்களில் மாட்டுகின்றன. ஆனால் இந்தக் கலவரச் சூழலில் அஷ்ரஃப் சிஹாப்தீனுடைய கவிதைகள் எனக்கு எப்பொழுதுமே ஒரு நீண்ட ஓட்டத்தின் இறுதியில் கிடைக்கும் ஒரு டம்ளர் தண்ணீர் போலவே இருக்கிறது.

இலங்கையில் இப்பொழுது வருடத்திற்கு 20 தொடக்கம் 30 வரையிலான கவிதைப் புத்தகங்கள் வெளிவருகின்றன எனச்சொல்கிறார்கள். கவிதைப் புத்தக வெளியீடுகள் வெங்காயம் உரிப்பதைவிட லேசான காரியமாய்ப் போய்விட்டது. இப்பொழுது எல்லோரும் கவிதை எழுதுகிறார்கள். எல்லோரும் கவிதைப் புத்தகம் போடக்கூடிய அருகதையை அடைந்துவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் வாசகனைத்தான் இப்பொழுதெல்லாம் காணக்கிடைப்பதில்லை. அப்படியொரு ஜந்து அழிந்துகொண்டுவருகிறது என்பதும் அந்த “ஓவர் நைட்” கவிஞர்களுக்குப் புரிவதில்லை. ஆதலினால் அந்த அபாயகரமான வெற்றிடத்தை இப்பொழுதெல்லாம் எழுத்தாளர்களே வில்லங்கத்திற்கு நிரப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு முறை சுந்தர ராமசாமி சொன்னார். “தமிழ் எழுத்தாளனல்லாத ஒரு வாசகனைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அப்படி ஒரு வாசகனைச் சந்தித்து குதூகலிக்கும் போதே, சடாரென தன் சட்டைப் பைக்குள்ளிருந்து தன்னுடைய கவிதை என ஒரு கவிதையை எடுத்துக்கொடுத்து எப்படி இருக்கிறது என்கிறான்”. இதுதான் இப்போதைய இலக்கிய நிஜம்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னுடைய கையில் கிடைத்த இந்த “யா.ம.போ.இ”  என்கின்ற நூலைத் தட்டிக்கொண்டு போனபோது எனக்கு சில திடீர் ஆச்சரியங்கள் பிடிபட்டன. எதிர்பார்ப்பு சேமித்து வைத்திருந்த குதூகலத்தை இந்த ஆச்சரியம் நொடியில் இரட்டிப்பாக்கிப்போட்டது. அது நான் ஏலவே ஆங்கிலத்தில் படித்த மூன்று கவிஞர்களை இந்நூலில் அஷ்ரஃப் சிஹாப்தீன் தெரிவு செய்திருக்கிறார். அதுவும் நான் படித்த அதே கவிதைகள். பலஸ்தீனத்தைச் சேர்ந்த Nasser Barghouty, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த Reza Mohammadi மற்றும் துருக்கியைச் சேர்ந்த Nasim Hikmat. 

இவற்றில் Nasser உடைய “To the children of Palastine' என்கின்ற கவிதை அட்டகாசமானது. Nassim உடைய கவிதை நுட்பங்களை படித்து முடிக்கவேண்டும். Reza என் இதயத்திற்கு மிகவும் பிரியமானவர். Reza பற்றிய ஓர் சுவாரஷ்யமான அனுபவத்தை என்னால் மறக்கமுடியாது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் ஆப்கானிஸ்தானில் பணியாற்றியபோது அந்நாட்டின் தென் நகரமான கந்தகாரிற்கு அடிக்கடி போய்வருவது வழக்கம். முதல்முறை அங்கிருந்த எங்களுடைய அலுவலகத்திற்குச் சென்று என்னோடு பணியாற்றும் ஒரு நண்பனுடைய அறைக்குள் போனபோது வலப்பக்க மூலையில் தனியனாய் நின்றுகொண்டிருந்த ஒரு புத்தக அலுமாரியைக் கண்டேன். போகும் நாடுகளிலெல்லாம் அந்நாட்டு இலக்கியங்களைச் சேகரித்து, படித்துப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய இலட்சியம். இலட்சியத்தில் அந்தச் “சேகரிப்பு” நடந்துகொண்டிருக்கிறது ஆனால் “படிப்பு”தான் இன்னும் கைகூடவில்லை.  

அப்படி நண்பனுடைய அந்தப் புத்தக அலுமாரியைக் கிண்டியதில் கிடைத்த அத்தனை புத்தகங்களிலும் அந்நிய பாஷைகள். பஷ்ருன், டாரி, பேர்ஷியன் மொழிகளில் ஏராளமான புத்தகங்கள். இடைக்குள் மொத்தமாயிருந்த ஒரு புத்தகத்தை “அல்லாஹ்வை” மனதில் நிறுத்திக்கொண்டு இழுத்து வெளியில் போட்டபோதுதான் தெரிந்தது.  அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் Reza Mohammadi இன் ஓர் கவிதைப் புத்தகம். 'அல்ஹம்துலில்லா!!”. எடுத்து அறைக்குக் கொண்டுபோய் நான்கு நாட்களில் அதைக் காலி பண்ணி முடித்தேன். பிரமாதமான கவிதைகள். ரூமியை நோக்கித் தாவிக்கொண்டிருக்கும் எழுத்து. 

ஆனால் அதை என்கூடவே இலங்கைக்குக் கொண்டுவரவேண்டும் என்கின்ற ஆசை இறுதிவரை நிறைவேறவேயில்லை. காரணம் அது ஆப்கான் அரசால் தடைசெய்யப்பட்ட புத்தகம். காரணம் Reza தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர். அவர் 2014 ஆல் லண்டனில் வெளியிட்ட “Taliban's Poetry” என்கின்ற நூல் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பி ஓய்ந்தது. அவருடைய புகழ்பெற்ற 'Friendship' மற்றும் 'Illegal Immigration', 'You crossed the border' ஆகிய கவிதைகள் உலகத்தரமிக்கவை. தரமான கவிதைகளின் உச்சக்கட்ட உதாரணங்கள் இவருடைய கவிதைகள் எனச்சொல்ல முடியும். அவற்றில் “You crossed the border” என்கின்ற கவிதையை அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் அதே உணர்வியலோடும், emotional aliveness ஓடும் இந்த நூலில் மொழிபெயர்த்திருப்பது பேரானந்தத்தைக் கொடுக்கிறது. 

இப்படி மேற்சொன்ன மூன்று கவிஞர்களினுடைய கவிதைகளின் ஆங்கில மூலப் பிரதிகளைப் படித்தவன் என்கின்ற முறையில் இப்பொழுது அவற்றை அஷ்ரஃப் சிஹாப்தீனுடைய  தமிழில் படிக்கும் போது தேகம் சிலிர்க்கிறது. அவற்றை அதே அடிப்படை நுட்பங்களோடு மொழிபெயர்த்திருக்கும் அஷ்ரஃப் சிஹாப்தீனை மெச்சாமல் கடந்துபோக முடியாது. அஷ்ரப் ஷிகாப்தீன் போன்றவர்களின் இருத்தல் இத்தலைமுறையின் நல்லூழ் என்றே  சொல்லவேண்டியிருக்கிறது.

இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலில் கவிதை பற்றிய எவ்வித கோட்பாடோ அல்லது நுட்பமோ அல்லது விழுமியமோ அதை எழுதும் எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. புதுக்கவிதை, நவீனத்துவம், பின்நவீனத்துவம் என இலக்கியச் சூழலில் கலவரங்கள் நடந்துவிட்டப்பிறகு இந்த கவிதைகள் தங்களுடைய அத்தனை அடிப்படைக் கட்டுப்பாடுகளையும் தொலைத்துவிட்டன. அதன் தார்ப்பரியத்தை இப்பொழுது வாசகன்தான் தினம்தினம் அனுபவித்துக்கொண்டிருக்கிறான். 

என்னைப் பொறுத்தவரையில் நல்ல கவிதை என்பது எளிமை, சேரடித்தன்மை, உணர்ச்சிமிகு சொல்லாடல் போன்ற  அடிப்படிடைத் தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும். அத்தோடு நுட்ப பாவங்களும், தூண்டல் கொடுக்கவேண்டிய நுட்ப பொறுப்புக்களும் அதனுடன் சேர்ந்திருக்கவேண்டும். உதாரணமாக, நான் அண்மையில் படித்து, கலைந்து போகாமல் மண்டைக்குளேயே நின்றுவிட்ட நிலா இரசிகனின் கவிதை ஒன்றைச் சொல்கிறேன் பாருங்கள்.

“இரண்டு கால்களுடைய மிருகம்
எப்போதும் என்னுடன்
பயணித்தபடியே இருக்கிறது.”

இங்கு கவிதையின் நுட்பம் என்னவென்று தெரிகிறதா? ஒரு உயிர் கவிஞனாகிறபோது அவனுடைய உடல் 'முன்னிலை' ஆகிவிடுகிறது. அதாவது நிலா இரசிகன் என்கின்ற அந்நேரத்து கவிஞ ஆன்மாவுக்கு அவருடைய உடல் வெறும் ஓர் second person! தான். இப்படி எளிமையையும் நுட்பத்தையும் அழகாக பேசும் மூலக் கவிதைகளின் சுவர்கள் அஷ்ரஃப் சிஹாப்தீனுடைய மொழிபெயர்ப்பில் புள்ளியளவுகூட சிதைந்துவிடாமல் இருக்கின்றன. இது உண்மையில் மிகப்பெரியதொரு கைதட்டலை வேண்டி நிற்கும் ஓர் விடயம்.

இந்த நூலை முழுமையாகப் படித்து முடித்தபோது இன்னுமொரு வெளிச்சமும் கண்களில் பட்டது. அதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக சில கவிதைகளை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். உண்மைதான், இந்தப் புத்தகத்திற்குள் ஏராளமான குறியீட்டு படிமம் போர்த்திய சூஃபிக் கவிதைகள் கிடக்கின்றன.

சூஃபிக்கவிதைகளைச் சென்றடையாத எந்த வாசகனாலும் திருப்தி என்கின்ற ஓர் முடிவிடத்தைப் போய்சேர முடியாது. அது எழுதப்படாத நியதி என்றே சொல்வேன். மேத்தா, அப்துல் ரகுமான், ஞானக்கூத்தன், மானுஷ்ய புத்ரன் என்கின்ற பட்டியலிலிருந்து ரூமி, பப்லோ நெருடா, கலீல் ஜிப்ரான் என்கின்ற பட்டியலினுள் பாயும் எந்தவொரு வாசகனுக்கும் இந்த அதிசய சூஃபி அனுபவம் நிகழும். இப்படித்தான் எனக்கும் அந்த உன்னத தேடல் சாத்தியமானது. உதாரணமாக என்னைக் கட்டிப்போட்ட இரண்டு சூஃபிக் கவிதைகளை சொல்லிவிட்டு இப்புத்தகத்தில் நான் பார்த்த சில கவிதைகளைச் சொல்கிறேன்.

காற்றுக்குக் காதல்
கொடி தாங்கும் கம்பத்தின் மீதே
கொடி மீதல்ல
காதலின் சாரம் அதுவே.

ரூமியின் இந்தப் பாய்ச்சலைத் தொடர்ந்து அவருடைய சீடன் கலீல் ஜிப்ரான் ஒரு பாய்ச்சல் பாய்வான் பாருங்கள்.

காதால் காணவும்
கண்ணால் கேட்கவும்
கற்றுத்தந்தது
காதல்.

இப்பொழுது, அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழிபெயர்த்திருக்கும் “உணவு” என்கின்ற யெமன் நாட்டுக் கவிஞர் மொஹமட் அல் கஊத் இன் கவிதையைப் பாருங்கள்.

அவன்
உணவத்துக்குள் நுழைந்தான்.

பரிசாகரிடம் சொன்னான்
ஒரு தட்டில் அமைதியும்
ஒரு தட்டில் தனிமையும்
ஒரு தட்டில் அலட்சியமும்
கொண்டு வா.

அத்துடன்
ஒரு கத்தியும் வேண்டும்
இந்த நாட்களின்
துயரை அறுக்க!.

நிச்சயம் இது ரூமியிடமிருந்து பிடுங்கிய வித்தையென்றே தோன்றுகிறது.

இந்த குறியீட்டு கவிதைகளை எந்த வாசகனாலும் அவ்வளவு இலகுவாக கடந்து போய்விட முடியாது. கவிதைகளின் ஜீவன் சிலவேளைகளில் இந்த குறியீடு என்னும் நுட்பத்தில்தான் இருக்கிறது. அதைச் சரியாக நகர்த்துவதில் இருக்கிறது ஒரு நல்ல கவிஞனின் கைங்கரியம் அல்லது புத்திசாலித்தனம். இதைப்பற்றி எஸ். ரா ஒருமுறை சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. 

“ஒரு பழத்துக்கு எத்தனை விதைகள் இருக்கிறது என்பதைத் தேடிக்கண்டடைபவன் அறிவாளி. ஆனால் அந்த விதைக்குள் எத்தனை விருட்சங்கள், பழங்கள் இருக்கின்றன எனத் தேடிப்போகிறவன் கவிஞன்". 

இந்த “யா.ம.போ.இ” என்கின்ற நூலில் இருக்கும் அத்தனை கவிதைகளும் இந்த எஸ்.ரா வின் இரண்டாவது தேடலையே காண்பிப்பதாய் அமைகின்றன. அதை அச்சுப் பிசகாமல் கையாண்டு முடித்திருக்கிறார் அஷ்ரஃப்.

இந்த நூலில் எனக்குப் பிடித்த கவிதைகள் என்று பல இருக்கின்றன. பிடிக்காதவை என்றும் சில இருக்கின்றன. ஆனால் பிடித்த கவிதைகளை எழுதிய அந்தக் கவிஞர்களின் ஏனைய கவிதைகளையும் தேடிப்போக வேண்டும் என்கின்ற ஆசையை அஷ்ரஃப் சிஹாப்தீனின் எளிமையான, நுட்பமான மொழிபெயர்ப்பு திருகிவிட்டிருக்கிறது. இதுதான் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளன் வாசகனுக்குள் நிகழ்த்தக்கூடிய மிகப்பெரியதொரு sustainable impact என நினைக்கிறேன்.

இங்கு மொழிபெயர்ப்பு என்பதைப் பற்றியும் இரண்டொரு விடயங்களைச் சொல்லியே ஆகவேண்டும். 

கவிதையை, மொழி தனக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் ஓர் உரையாடல் என்று இலகுவாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். அப்படியெனின் அந்த உரையாடலை மொழிபெயர்ப்பதென்பது எவ்வகையான சிக்கல். அதாவது, இலக்கிய மொழிபெயர்ப்பை building another structure of an existing architecture என்றே சொல்லவேண்டியிருக்கிறது. அந்த புதிய structure இல் இருக்கும் மிகப் பெரிய சவால் அதற்குத் தேவையான சரியான கற்களைத் - சொற்களைத் - தேடிப்பிடிப்பதுதான். 

இங்கு சரியான சொற்கள் என்பதைவிட பொருத்தமான சொற்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அது என்ன பொருத்தமான சொற்கள்? கம்பன் தன்னுடைய காவியத்திலே  யானை மற்றும் நெருப்பு போன்ற சொற்களுக்கு பத்திற்கும் மேற்பட்ட மாற்றுச்சொற்களை எதற்காகப் பயன்படுத்தியிருக்கிறான் என்று தேடிப்பார்த்தால் இந்தக் கேள்விக்கு விடை கிடைத்துவிடும். பொருளும் சந்தர்ப்பமும் அழகும் ஒரே அச்சில் பொருந்தும்படி சொற்களை தேடிக்கண்டுபிடித்துக் கொண்டுவந்து ஒட்டுவது என்பது அத்தனை இலகுவான காரியமல்ல. இதற்கு மொழிப் புலமையும் வாசிப்பு அனுபவமும் இலக்கிய முதிர்ச்சியும் தேவை. இவை அனைத்தும் இப்படி அஷ்ரஃப் சிஹாப்தீன் என்னும் ஒரு மனிதனிடமே கொட்டிக்கிடப்பது பொறாமையைத்தான் ஏற்படுத்துகிறது. 

சரி, இப்பொழுது இலக்கிய மொழிபெயர்ப்பு பற்றிய ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு சிறிய அழகான ஆங்கிலக்கவிதை ஒன்று.

Touched  by the moon
Pines
Heavy with snow.

அவ்வளவுதான். சிறிய கவிதை. இதை நீங்கள் என்னிடமும் அஷ்ரஃப் சிஹாப்தீனிடமும் கொடுத்து  மொழிபெயர்க்கும்படி சொல்கிறீர்கள். நாங்கள் மொழிபெயர்க்கிறோம்.

நிலவு தட்டிய
தேவதாரு மரம்
பனியில் கனத்தது.

இதுதான் என்னுடைய மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு பக்காவாக பொருந்துகிறது. இலக்கிய ரசம்? இலக்கிய மொழிபெயர்ப்பாளனாவதற்கு ஆங்கிலப் புலமை மட்டும் போதாது என்பதை இப்பொழுது நீங்கள் நம்புவீர்கள்.

ஆனால் மொழிப்புலமையும், இலக்கிய ஆழமும், அனுபவமும் கொண்ட அஷ்ரஃப் சிஹாப்தீன் இதை எப்படி மொழிபெயர்ப்பார் தெரியுமா?

Touched  by the moon
Pines
Heavy with snow.

தீண்டப்பட்டது நிலவால்
பைன்
கனத்தது பனியால்.

எப்படியிருக்கிறது பாருங்கள்.  இதுதான் நான் மேலே சொன்ன அந்தப் புலமை. இதுதான் அந்த அனுபவம். இதுதான் அந்த வித்தை. பொதுவான மொழிபெயர்ப்பு ஒரு கலை என்றால், இலக்கிய மொழிபெயர்ப்பு ஒரு வித்தை. அந்த வித்தைக்கு ஞானம், புலமை, ஆழமான அனுபவம், வரம்புகளற்ற தேடல், மேம்போக்கற்ற அறிவு என ஒரு நீண்ட பட்டியல் தேவைப்படுகிறது. அவை அனைத்தும் எங்கள் மதிப்புக்குரிய அஅஷ்ரஃப் சிஹாப்தீனிடம் இருக்கிறது என்பதை இந்த நூலை முன்வைத்து என்னால் அடித்துச் சொல்ல முடியும். 

இறுதியாக, ஒரு எதிர்மறையான விமர்சனக் கருத்தையும் ஒரு வேண்டுதலையும் முன்வைத்து என்னுடைய உரையை நிறைவுசெய்யலாம் என நினைக்கிறேன்.

ஒன்று, இந்த நூலில் இடம்பெற்ற கவிதைகளின் தெரிவு. சில கவிதைகள் மிகவும் தட்டையாக இருப்பதுபோல் தோன்றுகிறது. அது மொழிபெயர்ப்பின் தவறன்று. மூலக்கவிதையை தெரிவுசெய்ததில் இருக்கும் தவறு. அந்தக் கவிதைகளை வாசிக்கும் போது உள்ளுக்குள் எந்த உணர்வியல் மாற்றங்களும் நிகழவில்லை. சிந்தனையிலும் இரசனையிலும் இந்தக் கவிதைகளால் ஒரு குண்டூசியைத் தானும் நகர்த்த முடியவில்லை. நேற்று முழுவதும் அந்த ஒருசில கவிதைகளைக் கடந்து வரும்போது, எதற்காக இந்தக் கவிதையை அஷ்ரப் சேர் தெரிவு செய்தார் என்கின்ற அகநெருடல் இருந்துகொண்டேயிருந்தது. அஷ்ரஃப் சிஹாப்தீன் என்கின்ற அந்த brand figure ஐ இந்தக் கவிதைகள் சுரண்டிவிடக்கூடாது என ஏங்கிக்கொண்டிருந்தேன். 

உலகில், அறியப்பட்ட அறியப்படாத மூலைகள் என அத்தனை தேசங்களிலிருந்தும் தமிழுக்கு வரவேண்டி  ஏராளமான கவிதைகள் காத்துக்கிடக்கின்றன. Pablo Neruda, Sylvia Plath, Jorge Luis Borges போன்றவர்களின் பல உலகத்தரமிக்க கவிதைகள் இன்றுவரை தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லையே என்கின்ற பெரும் ஏக்கம் எனக்குள் நீண்ட நாட்களாகவே இருந்துகொண்டிருக்கிறது. அந்த வரிசையில் ரூமியின் கவிதைகளை என்.சத்யமூர்த்தி மொழிபெயர்த்தபோது நான் அடையாத சந்தோஷமில்லை. அஷ்ரஃப் சிஹாப்தீனும் அந்த உன்னத கவிதை மனிதர்களை தமிழுக்குக் அழைத்துவர வேண்டும். அடுத்த முயற்சியில் இந்த சிறிய கோரிக்கையைக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என அஷ்ரஃப் சிஹாப்தீனை  மிகவும் தாழ்மையோடும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்து, ஒரு வேண்டுதல். கடந்த சில வருடங்களாக பல மொழிபெயர்ப்பு இலக்கியப் பிரதிகளைத் தொடர்ச்சியாக எங்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதன் அவசியமும் தேவையும் எங்களுக்கு நன்கு புரியும். அவற்றின் மீதான எங்களுகடைய மகிழ்ச்சியும் பிரியமும் எண்ணிலடங்காதவை. ஆனால் நாங்கள் உங்களிடமிருந்து நீண்ட நாட்களாக ஒன்றை மிஸ் பண்ணிக்கொண்டிருக்கிறோம். அது இன்னுமொரு “என்னைத் தீயில் எறிந்தவள்”. அடுத்தது  அப்படியொரு அஷ்ரஃப் சிஹாப்தீனின் சுயபிரதியாக்கம் வெளிவந்தால் கரவோசமிட்டு சந்தோஷிக்கும் நூற்றுக்கணக்கான வாசகர்களுள் இந்த அடியேனும் ஒருவனாக இருக்கிறான்.

வாய்ப்பிற்கு நன்றி. 

Popular Posts