Wednesday, November 2, 2016

கெட்ட வார்த்தை.

அடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புதுமைகளை அவர்கள் கடந்து வரவேண்டியிருக்கிறது. அதில் ஆயிரத்தெட்டு புதுமைகள் இருந்தாலும் முக்கியமானது வெவ்வேறு நாடுகளில் பயன்பாட்டிலிருக்கும் வெவ்வேறு மொழிகள். போகும் இடத்திலெல்லாம் அந்த இடத்தில் பயன்பாட்டிலிருக்கும் அத்தனை மொழிகளையும் கேட்டு, அறிந்து இரசிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு. இதில் சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால் அந்த மொழிகளின் சில சொற்களைக் கேட்கும்போது அட இந்தச் சொல் தமிழிலும் இருக்கிறதே என மண்டைக்குள் பல்ப் எரியும். ஆனால் அர்த்தம் நிச்சயமாக வேறொன்றாகத்தானிருக்கும் அப்படி குறித்த சொற்களிற்கான தமிழர்த்தங்கள் சில வேளைகளில் நம்மை உருண்டு பிரண்டு சிரிக்கப்பண்ணிவிடுவதுண்டு. அப்படியான இரண்டு கதைகளைச் சொல்கிறேன் பாருங்கள்.

மியன்மாரின் உத்தியோகபூர்வ மொழி பேர்மீஸ். பிரதேசத்திற்குப் பிரதேசம் மொழிகள் வேறுபடுகின்றன என்றாலும் அங்கு பேர்மீஸ்தான் தேசிய மொழி. (மியன்மாரில் மட்டும் 300 இற்கும் அதிகமான மொழிகள் புழக்கத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.) அப்பொழுதுதான் நான் மியன்மாரில் போய் இறங்கி இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. உண்மையைச் சொன்னால் பேர்மீஸ் மொழி என்னைக் கவர்ந்திருந்தது. அதில் விசேஷம் என்னவென்றால் பொதுவாக நம் டமிழ்ர்கள்போல தங்கள் மொழியில் ஆங்கிலச்சொற்களை அதிகம் பயன்டுத்தமாட்டார்கள். சிலவேளைகளில் ஒரு சொல்கூட இருக்காது. ஆங்கிலம் பேர்மீஸ் ஆகிய இரண்டும் வெவ்வேறு தனித்துவமான மொழிகள் என்பதை அவர்கள் நன்கு அறிந்துவைத்திருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் பேர்மீஸில் பேசும் போது நாம் பேந்தப் பேந்த முழித்துக்கொண்டு நிற்கவேண்டும். 

அன்று முதற்தடவையாக என்னுடைய மியன்மார் வெளிக்கள உத்தியோகத்தருடன் களப்பயணம் போனேன். என்னுடைய அந்த உத்தியோகத்தர் ஒரு பெண். ஆஹா ஓஹோ என்று இல்லாவிட்டாலும் ஒரு சுமாரான பிகர், பெயரை நின்சூ என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆகவே அன்று அது நின்சூவுடனான முதல்நாள் களப்பயணம். ஒரு கிராமத்தின் தலைவரைச் சந்திப்பதற்காகச் செல்லவேண்டியிருந்தது. இரண்டு மணித்தியால தண்ணீர்ப் பயணத்தை முடித்துக்கொண்டு அக்கிராமத் தலைவரின் வீட்டு வாசலில் நானும் நின்சூவும் நின்றபோது அவருடைய வீடு பூட்டியிருந்தது. ஒரு பன்றி மட்டும் வாசலில் நின்று எங்களைப்பார்த்து எதையோ சொல்லி க்ர்ர் புர்ர் என்றது. வீட்டுக்காறர் உள்ளே இருக்கலாம் என்கின்ற நினைப்பில் வாசலில் நின்றபடி கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள் நின்சூ. எப்படி கூப்பாடு போட்டாள் தெரியுமா?  'ஓக்கட்டா... ஓக்கட்டா..'. 

'ஓக்கட்டா' என்றால் பேர்மீஸ் மொழியில் கிராமத்தலைவர் (Village Leader) என்று பொருள்.

அதைக் கேட்டதும் பின்னால் நின்றுகொண்டிருந்த நான் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். தலைகால் தெரியாத சிரிப்பு. நின்சூ திரும்பி தன் குட்டிக்கண்களால் என்னை ஆச்சரியமாகப் பார்த்தாள். அவளது கண்கள் என்னைப்பார்த்து 'ஆர் யூ ஓகே?' என்றது மிரண்டபடி. நான் மேலும் கீழுமாகத் தலையை ஆட்டிவிட்டு மீண்டும் மீண்டும் சிரித்தேன். அவளிற்கு எதுவும் புரிவதாயில்லை. 'ஏன் சிரிக்கிறீர்கள்?' எனக்கேட்டபோது அந்தக் கிராமத்தலைவர் வாசலில் வந்து நின்றபடி 'மிங்லாபா' (வணக்கம்) என்றார். நாங்களும் மிங்லாபா என்றோம்.. அப்பொழுதுகூட அந்தச் சிரிப்பு என்னைவிட்டு அகன்று தொலையவில்லை. எனக்குள் கக்க பெக்கவென்ற சிரிப்பொலி கேட்டவண்ணமேயிருந்தது. நின்சூவின் முகம் கறுத்துத்தொங்கியது. அந்த ஓக்கட்டாவுடனான இரண்டு மணிநேரச் சந்திப்பை முடித்துக்கொண்டு மீண்டும் எங்கள் படகிற்குள் ஏறினோம். அப்பொழுது கண்கள் விரிய 'அப்போது ஏன் சிரித்தீர்கள் என்று நான் தெரிந்துகொள்ளலாமா?' என்றாள் நின்சூ. எடுத்த எடுப்பில் 'ஓக்கட்டா' என்றால் தமிழில் இதுதான் அர்த்தம் என எப்படிச் சொல்வது?! அப்படிச் சொல்லிவிட்டால் அதை வேறு அவள் தலைகீழாக விளங்கித்தொலைத்துவிடலாம். நம்மீதான first impression உம் நாறிப்போய்விடும். அதற்காக அதைச் சொல்லாமலும் இருக்க முடியவில்லை.

அவளை கலவரமில்லாமல் பார்த்து 'ஓக்கட்டா என்றால் தமிழில் கெ-ட்-ட அர்த்தம்' என்றேன். அப்படியா என்று கேட்டுவிட்டு மீதியை கிண்டாமல் விட்டுவிடுவாள் என்று எதிர்பார்த்தேன். அவள் விடவில்லை. 'என்ன அர்த்தம்.. சொல்லுங்களன் ப்ளீஸ்' என்றாள் இன்னும் ஆச்சரியத்தோடு. அவளது 'ப்ளீஸின்' பின்னாலிருந்த முகபாவனையைப் பார்த்து என்னுள் இரக்கம் கசிந்துவிட்டது. 'என்னடா செய்றது?' என தலையைப் பிய்த்துக்கொண்டேன். இதுவேறு அவளுடனான முதற் களப்பணம். இப்படி இன்னும் பல பயணங்களில் கூடவே இருக்கப்போகிறாள். முதல் நாளே இந்தக் கறுமத்தைப் பற்றிப் பேசி அவள் முகத்தை கோணலாக்கிவிடுவதா? வேறு வழியும் இல்லை. சரியென டிப்ளோமெட்டிக்காக ஆரம்பித்தேன். 

'என்னைப் பிழையாக நினைத்துவிடாதே நின்சூ.. நீ கேட்டதால் சொல்கிறேன்.. ஓக்கட்டா என்றால் என்னுடைய மொழியில் 'கேன் ஐ பக் ?' என்று அர்த்தம்'

பிள்ளை முகத்தை மூடிக்கொண்டு எம்பி எம்பிச் சிர்க்க ஆரம்பித்துவிட்டது. முகத்தில் இடையிடையே அருவருப்பும் வெளிப்பட்டு மறைந்ததைப் பார்த்தேன். போயும் போயும் அந்தக் கிளடையா ஓக்க கூப்பிட்டிருக்கிறேன் என நினைத்திருக்கலாம். 'ஓ மை காட்.. இனி உங்களுக்கு முன்னால இந்தச் சொல்லை பயன்படுத்த மாட்டேன்.' என பிரமிப்போடு சத்தியம் செய்தாள். நானும் தொண்டையால் சிரித்தபடி தலையாட்டிக்கொண்டேன். ஆனால் அதற்கு சொல்வதற்கு என்னிடம் பதில் இருந்தது.  முதல் நாளே அந்தப்பிள்ளையிடம் போய் நம் வாலை நீட்டிவிடுவதா? அடக்கிக்கொண்டு இருந்துவிட்டேன்.

அன்றிலிருந்து நானும் அவளும் நிற்கும் இடத்தில் வேறு யாராவது வந்து ஓக்கட்டா என்கின்ற சொல்லை உச்சரித்துவிட்டால் போதும், உடனடியாக அவள் என்னைப் பார்ப்பாள், நான் அவளைப் பார்ப்பேன். இருவரும் சேர்ந்து ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்போம். அதிலும் நான் கொஞ்சம் வில்லங்கமாகவே சிரிப்பேன். அவள் வெட்கத்தில் தலையைக் குனிந்துகொள்வாள்.

இப்படியொரு சம்பவம் பப்புவா நியூகினியிலும் அண்மையில் நடந்தது. நானும் என்னுடைய உத்தியோகத்தரும் மேலே சொன்னதுபோலவே ஒரு வெளிக்களப்பயணத்திற்குத் தயாரானோம். காலையில் காரியாலயத்திற்கு வந்து 'ஆமா இண்டைக்கு நாம எங்க போறம்?' என்றேன். அதற்கு அவர் அன்று நாங்கள் போகவேண்டியிருந்த இடத்தின் பெயரை அறுத்துறுத்துச் சொன்னார். அப்புறமென்ன எனக்கு மறுபடியும் சிரிப்போ சிரிப்பு. பப்புவாவில் நின்சூ இல்லாத குறையை டேவிட் தீர்த்துவைத்தான். “ஏன் பாஸ் சிரிக்கிறீங்கள்?“ என்று எனக்குப் பின்னாலேயே ஓடிவந்தான். பொறு, சிரித்து முடித்துவிட்டு வந்து விளக்கம் கொடுக்கிறேன்.

ஆனால் அதிலொரு இலக்கணச் சிக்கல் இருந்தது. டேவிட்டிற்கு அதன் தமிழ் அர்த்தத்தை என்னால் சரியாகச் சொல்லிக்கொடுக்க முடியுமா என யோசித்துக்கொண்டிருந்தேன். மா என்றால் பெரிய என்று குறித்துக்கொண்டு அந்த ஊரின் பெயரை இரண்டு சொற்களாக உடைத்து டேவிட்டிற்கு விளங்கப்படுத்தினேன். அதைக்கேட்டு அவன் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தான். யெஸ், இறுதியில் I did a good job!

அந்த ஊரின் பெயர் 'மாப்புண்டை'.2 comments:

Unknown said...

சுவரஸ்யத்திற்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை
நீங்கள் இன்னுமொரு சோபா சக்தி

'பரிவை' சே.குமார் said...

ஹா...ஹா...
வாசிக்கும் போது சிரிப்பை அடக்க் முடியவில்லை...

Popular Posts