Friday, August 5, 2016

கடவுளுக்கும் தெரியாத புவனா!

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. காலையிலிருந்து மேலதிகாரியோடு போட்ட சண்டைகளுக்காக வேண்டி மாலை ஏழு மணிவரை ஓபீஸ் நேரத்தை இழுக்கப்பண்ணியிருந்தார் அவர். மாலை மூன்று மணிக்கு மேலே என்னால் தாக்குப்பிடிக்க ஏலாமற்போனது. முக்கியமாக நித்திரை பகவான் உச்சந்தலையில் ஏறியிருந்தபடி அல்லேலூயா பாடிக்கொண்டிருந்தான். முதல் நாள் இரவு காலி வீதியை சாமம் வரை மேய்ந்து நித்திரையை தவறவிட்டுவிட்டு பின்னர் அடுத்த நாள் வேலைக்கு வரும் ஒரு இளைஞனின் தூக்க துயரத்தின் மறுதாக்கம் அது. தலை கணினியின் மௌஸ் பேட்டில் அடிக்கடி விபத்துக்குள்ளாக கண்ணை கசக்கி கசக்கி நித்திரையை கெட்டவார்த்தைகளால் ஓட்டிக்கொண்டிருந்தேன். இறுதியில் “வேலையும் மயிரும்!” என்று கணினியை அடித்து மூடிவிட்டு வெளியே வந்தபோது ஏழரை தாண்டியிருந்தது. எனக்கும் அப்பொழுதுதான் அந்த ஏழரை ஆரம்பிக்கிறது என்பதை அறியாமல் சமத்தாக வெள்ளவத்தயைிலிருந்த என்னுடைய அறைக்கு வந்து சேர்ந்தேன்.
“தம்பி இண்டைக்கு வெள்ளிக்கிழம. கோயிலுக்கு போனீயா?”
அம்மா கேட்கும்போது வெள்ளவத்தை கடற்கரையில் அந்த கறுப்பு பாறைகளின்மேலே அமர்ந்திருந்தபடி புவனாவை நினைத்து கடைவாய் ஒழுக கனவு கண்டுகொண்டிருந்தேன். எங்கள் ஊரில் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு கோவிலிற்கு போகவேண்டும் என ஒரு டைம் டேபிள் போட்டு அதன் படி ஒவ்வொரு தெய்வங்களாக விசிட் பண்ணிக்கொண்டிருப்பார்கள். இது அந்தக்காலத்து நம் கத்தோலிக்க திரிச்சபையின் ஏக பக்தர்களால் உருவாக்கிய ஒரு முறைமை. திங்கள் குழந்தை ஜேசு கோவில், செவ்வாய் அந்தோனியார் கோவில், புதன் வேளாங்கண்ணி கோயில், வியாழன் இறைஇரக்க ஆண்டவர் கோவில், வெள்ளி கர்த்தர் கோவில், சனி லீவு, ஞாயிறு வாராந்த திருப்பலி என்பதாக இருக்கும் அந்த ஹோலி டைம் டேபிள் மிகவும் விசித்திரமானது. என்னுடைய அம்மாவும் இவ்வகையான கத்தோலிக்க பாரம்பரியத்திலிருந்து வந்தவர். அவருடைய மகன் நானோ பிசாசுகள் அடிக்கடி தண்ணிப்பாட்டி போடும் ஒரு பாளடைந்த வீடு
புவனாவை முதல்முதல் ஒரு வெள்ளிக்கிழமையில் அந்த கத்தர் கோவிலில்தான் பார்த்தேன். ஒரு தெய்வீகத்தை இன்னொரு தெய்வீகம் தரிசிக்க வந்திருந்தது. என்றுமே கோவில் பக்கம் தலைவைத்துப்படுக்காத ஒருவனை பரீட்சை பெறுபேறுகள் வருகிறது என்றதும் அவனை கோவில் நோக்கி தள்ளிச்செல்லுமே அந்த சாத்தான், அன்று என்னையும் தள்ளிச்சென்றிருந்தது. கோவிலுக்கு கூட்டிக்கொண்டுபோய் அந்த பெஞ்சில் அமர்த்தியது. கூடவே எதிரில் புவனாவையும் கொண்டுவந்து அது அமர்த்தியிருந்ததை பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே என்று ஆரம்பிக்கும்போதுதான் கடைக்கண்ணால் கண்டுகொண்டேன். நமக்காக கடவுள் போடும் வியப்பூட்டும் திட்டங்கள்போல சாத்தானும் அவ்வப்போது டிசைன் டிசைனாக திட்டங்களை போட்டுக்கொண்டுதான் இருப்பான் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். ஒருவகையில் நமக்கு சமய நம்பிக்கையை பெருக்கியதற்கு கடவுளைவிட சாத்தானிற்கே அதிகம் பங்குண்டு. அவனே கடவுள்-மனித நம்பிக்கையின் சமநிலையைப் பேணுபவன். அவன் இன்றி மத நம்பிக்கை இல்லை.
அதற்குள், இரண்டு நாட்களில் வரப்போகும் பரீட்சை பெறுபேறுகள் ஒரு பக்கம். ஆலயத்தில் முளந்தாளில் இருந்தபடி என் கவனங்களில் கபடிவிளையாடிக்கொண்டிருக்கும் புவனா மறுபுறம். என் வேண்டுதல் எப்படி விளங்கும்? எழும்பி வீட்டிற்கு போய்விடலாம் என்றாலும் புவனா இழுத்து அங்கேயே இருக்க பண்ணிவிடுகிறாள். அவள் முகத்தை பார்க்க முயற்சித்த ஒவ்வவொரு தடவையும் அந்த வீணாய்ப்போன கௌரவம் இழுத்துப்பிடித்தது. ஒரு பக்தனிற்கு கோவிலினுள் இத்தனை சங்கடங்கள் வரக்கூடாது என்று மட்டுமே இறுதியில் என்னால் மன்றாட முடிந்தது. மீண்டும் பிதா சுதன் என்கின்றபோது அவள் அங்கு இருக்கவில்லை.
சரியாக ஒன்பது நாட்கள் கழித்து அவளை கொள்ளுப்பிட்டியில் பார்த்தபோது நெற்றியில் திருநீறு அணிந்திருந்தாள். கத்தோலிக்க கடவுளிற்கு என்ன ஆனது என்பதை அறிய ஆவலாய் இருந்தேன். ஒருவேளை அவள் கேட்டதை இவர் கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதையே பிள்ளையார் அருளியிருக்கலாம். ஒன்பது நாட்களுக்கு முன்னர் ஆலயத்தில் செபமாலை உருட்டிய அந்த விரல்களில் அப்பொழுது சம்சாங் கலக்சியைத் தவிர வேறென்றும் இருக்கவில்லை. சிரித்தாள். நானும் சிரித்தேன். அவள் காத்திருந்த பேருந்து வந்ததும் அவள் ஏறுவதற்கு முன்னர் பாய்ந்து விழுந்து ஏறியவன் நான்தான். ஒரு பெண்ணிற்காக வழிவதில் கௌரவம் பார்ப்பது முட்டாள்த்தனம். ஒரு அழகியை பின்தொடர்வதில் ஒரு பையனிற்கு அப்படி என்ன கெட்டுபோய்விடப்போகிறது. அல்லது நம்முடைய கருவாட்டு மூஞ்சிகளிற்கு அப்படி அழகிகளா நமக்குப் பின்னால் அலைந்துவிடப்போகிறார்கள்? நாம் அவள்களுக்காக அலைவதை அவள்கள் விரும்பமாட்டாள்களா என்ன? எத்தனை ஆண்கள் தங்களிடம் வழிகிறார்கள் என்பதில்தானே அவர்களது டிமாண்ட் தங்கியிருக்கிறது. அதைத்தானே இரண்டால் பெருக்கி பத்தைக்கூட்டி இத்தனைபேர் என்னை பளோ பண்ணினார்கள் என்று தன் வருங்கால அப்பாவிக் கணவனிடம் அடித்துவிடுகிறார்கள். புவனாவின் அந்த லிஸ்டில் நானும் இருப்பது எனது இளமைக்குக் கிடைத்த கௌரவம் என்பதைவிட வேறு என்ன இருக்கமுடியும்?
அன்று ஐந்து நிமிடங்கள் பேசக்கிடைத்தது. தொடர முயற்சிக்கையில் அவள் இறங்கவேண்டிய இடம் வந்து தொலைத்தது. விரக்தியோடு நான் வீட்டிற்கு போனபோது அவர் எனக்காக காத்துக்கொண்டிருந்தார். வாசலில் சப்பாத்தை கழற்றும்போதே “நீ அன்று கோவிலிற்கு வந்து என்னிடம் சரியாகப்பேசவில்லை!” என்று முறையிட்டார். நான் என்னத்தைச் சொல்லுவது? உண்மையை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. அவர் சகலதும் அறிந்த கடவுள். கடவுளிடம் பொய் சொல்ல முடியாது என்பதை நான் அறியாதவனா? “இல்ல.. கடவுளே..” என்று இழுத்தபோது என்னை சடாரென இழுத்து தனக்கருகில் அமர்த்தினார் கடவுள். பொய் சொன்னால் கடவுள் நாக்கை தைப்பார். களவெடுத்தால கடவுள் கையை ஊனமாக்குவார். கோவிலுக்கு ஒழுங்கா போகாட்டி கடவுள் எக்சாம்ல பெயில் பண்ணிவிட்டிடுவார். என்றெல்லாம் இவரை ஒரு கடும்போக்கு சர்வாதியாகவல்லவா சிறுவயதில் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நேரடியாக பார்ப்பதற்கு இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே என்று ஜோசித்தபோது “அவர்ளுக்கு என்னைப்பற்றி சரியாக சொல்லிக்கொடுக்க தெரியவில்லை!” என்று சமாளித்தார். “தாங்கள் நினைப்பதுபோல நான் இருக்கிறேன் என அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது நான் நினைப்பது போலதான் அவர்களால் இருக்க முடியவில்லை” என்று சிரித்தார். அந்த மீசையும் தாடியும் இணையும் இடத்தில் குழிவிழ கடவுள் சிரித்த சிரிப்பு… அப்பப்பா அவர் ஒரு ஆணழகன்!
மனிதர்கள் எதற்காக என்னைத் தேடுகிறார்கள் என அவர் கேட்டபோது “எக்சாம்ல பாஸ் பண்ணவேணும் எண்றதுக்காக, பஸ்சில் முன்சீட்டில் இருக்கும் பிகர் ஒருமுறையாவது நம்மை திரும்பி பாத்திடணும் என்பதற்காக, முகப்புத்தகத்தில் நூறு லைக் வாங்கி உலக இலக்கியவாதியாகிடணும் என்பதற்காக, நம்ம புத்தகத்தை யாழ்ப்பாணத்தில் இருக்கும் வாசிப்பு மேதாவிகள் கொண்டாடணும் என்பதற்காக, ஒரு நல்ல வேலை, நல்ல வீடு, நல்ல கார், அப்படியே ஒரு சுமாரான பொண்டாட்டி வாச்சிடணும் என்பதற்காக…” என பதில் சொல்வதில் ஆர்வமாக இருந்தபொழுது என்னைக் குறுக்கிட்டு அந்த வில்லங்கம் பிடித்த கேள்வியைக் கேட்டார் கடவுள்.
“புவனா எப்பிடி இருக்கிறாள்?”
“அது வந்து அது…” என்று இழுப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை என்பதை நான் அறிந்திருந்தேன். அவர் கடவுள். எனக்கு அவள் இதழ்களில் அப்படியொரு போதை என்பதையும் எண்ணத்தில் அவளை பதினொரு தடவைகள் புணர்ந்ததையும் அவர் அறிந்திருக்கமாட்டாரா என்ன? எனக்கு வெட்கத்தை தவிர வேறு எதுவும் எட்டிப்பார்ப்பதாய் இல்லை. “அவள் உனக்கு செட் ஆகமாட்டாள் தம்பி!” என்றபடி என் தலையைத் தடவ எனக்கு ஆத்திரம் வந்தது. “யோவ்… நீ கடவுள்தானே.. நீ நெனச்சா அவள எனக்கு செட் ஆக்கலாம்ல? அதவிட்டுப்புட்டு வெங்காயக்கத கதச்சுக்கிட்டு..” என அந்த கோவத்தை உடனடியாக நான் உளறியிருக்கவேண்டும். “வாழ்க்கையில் செட் ஆகாத பலவிடயங்கள் ஏன் செட்டாகவில்லை என்று நான் இந்த மனிதர்களுக்கு சொல்வதில்லை அப்பு. சொன்னால் நீங்கள் எல்லாரும் அடுத்த தேடலில் இருக்கிற சுவாரஷ்யத்த கண்டுகொள்ளாம போயிடுவியள்!”
”சரி உன்ட எக்சாம் ரிசல்ட் நாளைக்கு வருகுதாமே?”
“கடவுளே என்ட ரிசல்ட இப்பவே சொல்லுங்கோவன். உங்களுக்கு தெரிந்திருக்குமே. நீங்கள்தானே எனக்கு இத்தனை மார்க் போடணும் எண்டு அவங்கள்ட சொல்லியிருப்பியள். அந்த மார்க்குக்கு அளவாதானே என்னையும் படிக்க வச்சிருப்பியள்.. சொல்லுங்கோவன்?”
கடவுளை அருகில் வைத்துக்கொண்டு நாளை வரப்போகும் எக்சாம் ரிசல்ட்டை தெரிந்து கொள்ளவில்லையென்றால் அது எத்தனை முட்டாள்த்தனம். ஆனாலும் தப்பித்தவறி பெயில் என்று சொல்லிவிட்டால்? பறவாயில்லை பெயில் என்றால் பறவாயில்லை. இப்பொழுது கடவுள் என்கூடத்தானே இருக்கிறார். காலில் விழுந்தாவது பெயிலை பாஸ் ஆக்கிவிடலாம்.
“உனக்கு புவனா வேண்டுமா? இல்லை எக்சாம்ல பாஸ் வேணுமா?”
இது என்ன வில்லங்கமாக் கிடக்கு!. புவனாவா? ரிசேல்ட்டா?? ஏன் இரண்டையும் கொடுத்தால் கடவுள் நீங்கள் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? ரிசேல்ட் என்னுடைய ப்ரோமோஷனுக்கு எவ்வளவு முக்கியமோ அப்படி புவனாவும் என்னுடைய லைப் ப்ரோமோஷனுக்கு முக்கியம்தானே. இந்தக்காலத்து பசங்களுக்கு ரிசல்ட் எந்தளவிற்கு முக்கியமோ அந்தளவிற்கு பிகரும் முக்கியம் என்பதை எல்லாம் வல்ல கடவுள் நீங்கள் புரியாமல் இருக்கிறீர்களா?
“மிஸ்டர் கடவுளே..”
“இரண்டில் எது வேண்டும் என்பதை மட்டும் சொல்லு? இருட்டிவிட்டது நானும் கிளம்ப வேண்டும். இன்று வெள்ளிக்கிழமை. இப்போதைக்கு அறையில் வேண்டுதல்கள் வந்து குவிந்துகிடக்கும். போய் சோட் அவுட் பண்ணி பீட்பெக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் “நான் விளக்கெண்ணை!“ என கூறிவிட்டு புவனா போல பிள்ளையாரைத்தேடி போய்விடுவார்கள். கெதியாகச் சொல்.”
இது எத்தனை வில்லத்தனமானது? கடவுள் என்பதற்காக ஒரு அப்பாவி பக்தனை இப்படியா சோதிப்பது? சாத்தான் எவ்வளவோ மேல் போல இருக்கிறதே. எதை கேட்பது. புவனா என்றால் என்னுடைய ப்ரோமோஷனுக்கு சங்கு. ரிசேல்ட் என்றால் இந்த அழகிய பிகர் மிஸ். இரண்டையும் கொடுத்தால் என்னவாம் இந்த கிளட்டு மனுசனுக்கு? என்பதை தவிர வேறு எதுவும் வாயில் வருவதாய் இல்லை. என்ன கேட்கலாம்.. சரி, அடுத்த வருஷமும் எக்சாம் மீண்டும் வரும் ஆனால் புவனா வருவாளா? என்கின்ற ஜில்தக்கா ஞானம் பிறந்தபோது கடவுள் என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார். கூடவே “நினைத்தேன்!” என்றார். நான் சிரித்தேன். “இந்தக்கால பசங்களின்ட ஞானத்தின்ட வீரியத்த நான் அப்பவே கொஞ்சம் குறைச்சு செஞ்சிருக்கணும். இடக்கு மடக்கா யோசிக்கிறானுங்கள். இவங்களுடைய இந்த ஞானத்தையும் அறிவையும் என்னாலேயே சமாளிக்கமுடியல இவங்கள பெத்த அந்த அம்மா அப்பாட நிலம என்னவா இருக்கும்..” கடவுளின் ஆழ்ந்த யோசனையை நான் குழப்பினேன்.
“கடவுளே… புவனா!”
“அப்ப ப்ரோமோஷன்.??”
“அதான் அதுக்கு நாமம் வச்சுட்டீங்களே!”
“நானா.. இல்லை அப்பு.. உன்ட ப்ரோமோசனுக்கு ஆப்பு வச்சது இப்ப நான் இல்ல.. அந்த புவனா!”
“ப்ரோமோஷன அடுத்த வருசம் பாத்துக்கலாம் மிஸ்டர் கடவுள். இப்ப புவனாவ செட்பண்ணிக் குடுங்க…”
“ஓகே. கிராண்டட்!”
என கடவுள் கூறி முடிக்கும் முன்னமே என்னுடைய செல் போன் கீச் கீச் என்றது. எடுத்து பார்த்தால் ”ஹாய்டா, ஐ ஆம் புவனா.. ஐ லவ் யு.. ஐ வோன்ட் டு மரி யு. ப்ளீஸ் சொல்லு!” என்று எஸ்எம்எஸ் சிரித்துக்கொண்டிருந்தது. கடவுள்னா கடவுள்தான்யா என்றபடி அவரை கட்டடி அணைத்து முத்தமிட்டேன். அவர் மீசை என் கன்னத்தை கிழித்தது. அந்த வலியில் என் ஆழ்ந்த தூக்கம் கலைய, கடைவாயில் வடிந்துகொண்டிருக்கும் வீணியை துடைத்தபடி திடிரென விழித்துப்பார்த்தேன். முன்னால் என்னுடைய பாஸ் நின்றுகொண்டிருந்தார்.
“யோவ்.. ஓபீஸ்ல பிரயோசனமா ஒண்ணுமே புடுங்காம மேசையில வெட்டியா நித்திர கொள்ளுறதே குத்தம். நீவேற வீணி வடிய வடிய கனவுகண்ணுக்கிட்டே தூங்கிறியா? அப்பிடியே எழும்பி அட்மின்ட போய் கடிதத்த வாங்கிக்கிட்டு நேரா வீட்டுக்கே போ. கோட் ப்ளஸ் யு.”
அடுத்த முறை இந்த கிளட்டு மனுசன் என்ன தேடி வரட்டும். கடப்பாரையால சர்க் என்று ஒரே ஏத்து ஏத்திட்டு ஜெயிலுக்கு போறேன் என கதிரையில் இருந்து எழுந்தபோது சுவர் மணிக்கூடு ஏழரையைக் காட்டியது.

No comments:

Popular Posts