Friday, August 5, 2016

எனது அழகான இரயில் மரணம்!

ஜனாவை தோழி என்று அழைப்பதை நான் எப்பொழுதுமே விரும்பியதில்லை. அவள் எனக்கு தோழியல்ல. அப்படியெனின் அவள் யார் என்கின்ற கேள்விக்கும் என்னிடம் விடையிருந்ததில்லை. தேடி, கற்று, விளங்கிக்கொள்ள முடியாத உறவுமுறை அது என்பதை நான் அடிக்கடி அவளிடமே சொல்லியிருக்கிறேன். சரி அவளிடம் கேட்கலாம் என்றால், வெறும் லிப்டிக்ஸ் புன்னகையோடு என் தலையில் குட்டிவிட்டு கண்ணிலிருந்து மறைந்துவிடுவாள். நட்பு, காதல் என்கின்ற சாதாரண உறவுகளுக்கு நடுவில் இரண்டாங்கெட்டான் நிலையில் அலைந்தபடி இருக்கும் ஒரு உன்னத நிலைக்கு என்ன பெயர் வைப்பது? கட்டியணைத்து ஈரத்தாரைகளால் முத்தமிட்டுவிட்டு “சி யு ப்ரண்ட்” எனச்சொல்லி மறையும் அந்த முரண் நிலையை விலக்கி வெளியில் வருவதற்கு எனக்கு ஆண்டுகள் கடந்தன.
2012 ஜனவரி பஞ்சாங்கத்தின் ஏதொவொரு பலன்மிக்க நாள். மழையை திட்டியபடி தன் ஆரவாரத்தைக் கொஞ்சமும் கலைய விடாமல் பார்த்துக்கொண்டிருந்த கொழும்புவின் காலிவீதியை என்னுடைய நண்பனோடு கடந்துகொண்டிருந்தேன். ஓ வெண்ணிலா என்மேல் கோபமா எனக் கேட்டுக்கொண்டிருந்த உன்னிக்கிருஷ்ணனின் குரலை கூட்டிவிட்டபடி அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிறையப்போகும் லிப்டிக்ஸ் உதடுகளை கற்பனை செய்துகொண்டிருந்தான் நீதன். எனது கார் சினமன்ட் க்ராண்டின் பாக்கிங் பகுதியில் இருந்த அந்த இரு வெள்ளைச் சமாந்தரக் கோடுகளிற்கு நடுவில் வந்து நின்று பெருமூச்சு விட்டது. என்னை அங்கு முதலில் வரவேற்ற அந்த ப்ளோரொசென்ட் விளக்குகள் என் பட்டு வேட்டியைப்பார்த்து கேலி செய்தன. சினமன்ட் க்ராண்டிற்கு பட்டுவேட்டியோடு வருவது ஒரு க்றைம் அல்ல என்பதை அவை அறிந்திருக்கவில்லை. யார் பாடு? உள்ளே நுழைகையில் வாசலில் பழச்சாறு பரிமாறப்பட்டது. இரண்டு ஸ்டோபெரிப் பெண்கள் லெமன் ஜூசைப் பரிமாறிக்கொண்டிருந்தார்கள். நானும் நீதனும் எங்கள் காய்ந்த உதடுகளை நெளித்து மெதுவாக சிரித்துக்கொண்டோம்.
“மச்சான் பாட்டி ஆரம்பமாகி கன நேரம் இருக்குமோ?” விரலால் தன் உதடுகளை அமுக்கியபடி நீதன் என்னை சுரண்டியபோது அதை நான் சரியாக கவனிக்கவில்லை. எனக்கு பத்தே மீட்டர் இடைவெளியில் நின்ற அந்த மஞ்சள் சுடிதாரிடமிருந்து வந்த மிலானின் ஆர்மனி கோட் வாசம் வலப்பக்க மூக்கைத் தூக்கியது. “மச்சான் அண்ணன்காரன் இல்ல லவ்வர் இத்தாலில இருக்கான் எண்டு நினைக்கிறன்!“ என அந்தப் பெண்ணைக்காட்டி சிரித்தபோது நீதன் கமல் படம் பார்த்தவன்போல முழித்தான். அன்று எங்கள் மீச்சுவல் ப்ரண்ட் வரதனின் மகளின் முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டம். பிறந்தநாளை சினமன்ட் க்ராண்டில் கொண்டாடும் அளவுக்கு காசோடு நல்ல ஸ்டேட்டசும் அவனிற்கு இருந்தது. என்னையும் நீதனையும் தவிர்த்துப்பார்த்தால் அவனிற்கு எந்தவொரு களிசறை ப்ரண்ட்சும் இல்லவே இல்லை. அனைவரும் கொழும்பில் டம்பக்கமான பேர்வழிகள். ஆனால் வரதன் மிகவும் சிம்பிளான பேர்வழி. மாலையில் தனது பிஎம்டபிள்யு 3 சீரிஸ் செடான் E90 வண்டியை வீதியோரத்தில் பாக்கிங்செய்துவிட்டு வெள்ளவத்தைக்கடற்கரையில் எங்களோடு பகோடாவைக் கொறித்தபடி லயன் டின் அடிக்கும் எளிமையானவன் வரதன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
“மச்சான் உன்ட லெப்ட்ல ஒரு மேச ப்ரீயா இருக்கு.. போய் உக்காந்துக்கலாம்..” என நீதன் சொன்னபோது நான் உடனடியா வேண்டாம் என்றேன். காரணம் அந்த மேசையில் ஏற்கனவே இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தார்கள். எனக்கு பெண்கள் என்றாலே பொதுவாக வெட்கம் அதிகம். இதை நான் பிகு பண்ணுவதாக என்னை பலர் தவறாக நினைத்த சந்தர்ப்பங்களும் நிறையவே உண்டு. என்ன செய்வது? அது என்னுடைய சுபாவம். இங்கும் அதுதான் பிரச்சனை. மேசையைச்சுற்றி ஐந்து கதிரைகள். ஏற்கனவே இரண்டு பெண்கள் அதில் இருந்தாயிற்று. “சீன சுருட்டி பாக்கெட்டுக்குள்ள வச்சுக்கிட்டு பின்னால வாரும்..” என எனக்கு முன்னாலேயே தடதடவென போய் அந்த மேசையில் அமர்ந்துகொண்டான் இந்த படுபாவி. வெட்கத்தை கொஞ்சம் ஒதுக்கிக்கொண்டு அவனுக்கு அருகில் இருந்த கதிரையை நிரப்பும்போது அந்த பெண்களில் ஒருத்தி என்னைப்பார்த்து ஓர்க்கிட் புன்னகை பூத்தாள். அழகு அந்த ஆறடியில் தூக்கலாக இருந்தது. காதில் 5 சென்டிமீட்டர் நீளத்தில் தொங்கிக்கொண்டிருந்த அந்த ப்ளாட்டினம் மினுமினுக்க கன்னத்தில் அந்த ஒளி பட்டுத்தெறித்தது. எங்கோவிருந்து வந்து அவள் மீது விழும் அந்த நீல,பச்சை,சிவப்பு ஒளி முகத்தை அடிக்கடி வானவில் கொண்டு மூடி மறைத்தது. நீண்ட ஆனால் அம்சமான மூக்கு. பாகைமானி வைத்து அடித்த ஐ ப்ரோ. துரு துரு பார்வை. சுண்டி இழுக்கும் கழுத்து. காமம் ஊறும் இதழ்கள்.. இவை அனைத்தும் அந்த இருவரில் ஒருவர் பற்றியவை. ஜனா. அழகிகளின் கடவுள்! அங்குதான் அவளை நான் முதல் முதல் பார்த்தேன்.
அந்த வரதனின் நிகழ்வு அன்று எங்கள் நான்கு பேரையும் நண்பர்களாக இணைத்துவைத்தது. நீதனுடைய வியக்கவைக்கும் அறிவியல் சம்பாஷனைகளும், ஜனாவுடைய அழகிய கடி ஜோக்குகளும், மினு மற்றும் என்னுடைய ஆபீஸ் அலப்பறைகளும் இன்ன பிற மொக்கைகளும் எங்கள் சந்திப்புக்களை சுவாரஷ்யப்படுத்தின. ஒரு உன்னதமான நட்போடு கடந்த எங்கள் நாட்கள் நீதன்-மினு காதலோடு துர்வதிஷ்ட்டமாக முடிந்து போனது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வெறும் நண்பர்களா நீண்ட நாட்களுக்கு இருக்கவே முடியாது என்கின்ற அபத்தமான எடுகோளை இவர்கள் இருவரும் உறுதிப்படுத்திப்போனார்கள். இது எனது மற்றும் ஜனா நட்பிற்கு ஒரு அதிகபடியான பொறுப்பைக்கொடுத்துப்போனது. ஆம், நாங்கள் இருவரும் நண்பர்கள்தான் 2013 மார்ச் 23 வரை!
“23.03.2015.
அன்பின் ஜனா,
இந்த கடிதத்தை முழுவதுமாக வாசித்து முடிக்கவும், நான் கொடுக்கப்போகும் ஆச்சரியங்களை ஆத்திரம் களைந்து நிதானமாகப் புரிந்துகொள்ளவும் உன் க்ரஷ் முருகன் அருளவேண்டும்.
நம் இருவரிற்கும் இடையிலான அந்த உன்னத நட்பு ஆன்மீகத்துவமிக்கதும் புனிதமானதும் என்பதை நாம் இருவரும் அறிவோம். இதற்கு எச்சந்தர்ப்பத்திலும் பங்கம் விளைவிக்கக்கூடாது என நீயும் நானும் நம் இரு கைகளை ஒன்றன்மேல் ஒன்றாய் வைத்து பம்பலப்பிட்டி கதிரேசன் கோவிலில் எடுத்த அந்த சத்தியத்தை உன்னைப்போல நான் இன்னும் மறக்கவில்லை. ஆனாலும், காலங்கள் சத்தியங்களையும், வாக்குறுதிகளையும் உடைக்கவல்லது. சத்தியங்களை தாண்டாமல் காலத்தினால் மாற்றங்களை செய்யமுடியாது என்பதை நீ அறியவேண்டும். சத்தியம் என்பது ஒரு மன உறுதியைக் கொடுக்கவேண்டுமே தவிர நல்லதொரு மனமாற்றத்தையும் வாழ்வியல் மாற்றத்தையும் கெடுப்பதாய் அமைதல் கூடாது.
மூன்று வருட நம் நட்பில் எதை சம்பாதித்திருக்கிறோம் என்பதை இன்றிரவு உனக்கு பிடித்தமான இளம் சூட்டு தேநீரை உதடுகளதால் ஸ்பரிசித்தபடி பட்டியல் இட்டுப்பார். அந்த பட்டியலின் இறுதியில் நீ இன்றி என்னாலோ, நான் இன்றி உன்னாலோ ஜீவிக்க முடியாது என்பதையும் “நாம்“ ஒன்றாய் இல்லாத ஒரு உலகம் கொடியது என்பதையும் நன்கு அறிந்துகொள்வாய். இது இயற்கை முரண்! நாம் செய்தது அறமற்ற சத்தியம். நண்பர்கள் நாம் இப்படியே எப்பொழுதும் வாழ முடியாது என்கின்ற ஒரு நிலை வரும்போது நீயும் என்னைப்போலவே நம் சத்தியத்தை மீறுவாய் என்பதை நான் அறிவேன்.
எதற்காக நாம் இருவரும் திருமணம் முடித்துக்கொள்ளக்கூடாது?
இப்பொழுது என்னை நீ முறைக்கிறாய் என்பதையும், “வட் த ஹெல்??“ என உனது எக்சோட்டிக் ஆங்கில அக்சனில் அலறுகிறாய் என்பதையும் நான் நன்கு அறிவேன். இந்த இயல் மயக்கத்தை கொஞ்சம் களைந்து இந்தக் கேள்விக்கான காரண தர்க்கத்தை அறிந்துகொள் ஜனா. உன்னை நான் இழக்கக்கூடாது என நினைக்கும் போதெல்லாம் இந்த கேள்வியைத்தவிர வேறு எதுவும் எனக்குள் எழுவதில்லை. இந்த உன்னத நண்பர்கள் ஓர்நாள் பிரிவோம் என்பதை சிந்திக்கும்போது இதயம் இப்பொழுதே வெடிக்கிறது என அன்று எம்சி யின் மின்சாரப் படிகளில் நடக்கும்போது நீ சொன்னது ஞாபகம் இருக்கிறது. எனக்கு அது வெடித்துத்தான் இன்று இதை உனக்கு எழுதுகிறேன்.
ஏன் நல்ல நண்பர்கள் காதலர்களாக மாற முடியாது என்கின்ற எனது கேள்விக்கு இன்றுவரை நீ பதிலளித்ததில்லை. காரணம் அதற்கு பதில் இல்லை என்றே நான் நம்புகிறேன். உன்னால் எதற்காக என்னை ஒரு காதலனாக பார்க்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை என்பதையும் இன்றுவரை நீ சொல்லிக்கொடுத்ததில்லை. அதற்கும் பதில் இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்றே தெரிகிறது.
ஜனா, உன்னை எவ்வளவு பிடிக்கும் என்பதற்கு என்னால் ஆயிரம் கடிதங்கள் எழுத முடியும். நீ வாசிக்க தயார் என்றால். அத்தனை பிடிப்பையும் என்றோ உன்னைத் தொடப்போகும் ஓர் வேற்று ஆணிற்காக என்னால் தூக்கி வீசிவிட முடியாது. நான் தசைகளாலும், நரம்புகளாலும், இதயத்தினாலும் ஆனவன். இவை அனைத்தும் உள்ள ஒருவனால் எப்படி உன்னை மறக்க முடியும் சொல்லு? வாழ்க்கை பற்றி ஜோசி ஜனா. இது காலம் உனக்கு கொடுக்கும் அலாரம். எழுந்துகொள். தேடு. உனக்கு எது தேவை என்பதை நாளும் பகலும் தேடு. அதன் முடிவில் என்னைவிட இன்னுமொருவன்தான் உனக்கு பொருத்தமாகவும் தேவையாகவும் இருக்குமென்றால் நாளை மீண்டும் உன் கதிரேசனிடம் போவோம். மீண்டும் நம் கைகளை பிடித்து, சத்தியம் செய்வோம். இந்த பிரபஞ்சத்தில் எந்தவொரு ஆணும் ஒரு பெண்ணிடம் நெருங்கி நட்புக்கொள்ளா வண்ணம் ஆண்களையுளும் பெண்களையும் நீதான் காக்கவேண்டும் என சத்தியம் கேட்போம்.
ஐ லவ் யு ஜனா.
இப்படிக்கு
உன் நிதுஷன்”
நான் உணர்வுகளால் ஆக்கப்பட்டவன். உணர்வுகளை அதிகமான சந்தர்ப்பங்களில் என்னால் வெற்றிகொள்ள முடிவதில்லை. அதோபோல உணர்வுகளை மதிக்கவும் அவற்றிற்கு நம்மை ஆழுகைப்படுத்தவும் ஜனா சொல்லிக்கொடுத்திருக்கிறாள். அவள் நண்பி என வைக்கும் ஒவ்வொரு முத்தமும் எனக்குள்ளே காம இரவுகளை தீமூட்டிப்போனது என்பதை அவள் அறிவதில்லை. அதை நான் சொல்வதும் இல்லை. நட்பு என்னும் ஒரே சிறப்புரிமையை என் சுயநல இச்சைகளுக்காகவும் ஆசைகளுக்காகவும் பயன்படுத்திய ஆயிரம் ஆயிரம் ஆண்களில் நானும் ஒருவனாக இருப்பது எனக்கு வெட்கத்தைக் கொடுக்கவில்லை.
அவளுடைய பதிலிற்காக காத்திருந்த அந்த நாட்கள் நரக வேதனையானவை. என்ன சொல்லப்போகிறாள் என்பதை நினைக்கும் போதெல்லாம் ஏற்படும் அந்த ட்ரோமடிக் மனநிலை விசித்திர ஆட்கொல்லியானது.
“27.03.2015
டியர் நிது,
ஐ ஜஸ்ட் ஹேட் யு.
உன் தேடல் அபத்தமானது. உன் தேவை நிறைவேறாதது. உனது ஆசையின் கடல் வற்றப்போவதில்லை. ஒரு நல்ல நண்பனால் நல்ல காதலனாகவும் இருக்க முடியும் என்னும் உனது தியரியை நான் நம்ப தயாராக இல்லை. மன்னித்துக்கொள். உனக்கு உண்டான காயம் ஆறக்கடவது.
ஜனா.”
இதை நான் எதிர்பார்த்ததுதான். ஆனாலும் அவளுடைய ஆன்மா என்னை விலக மறுக்கும் என்பதை அளவுக்கதிகமாக நம்பியே இருந்திருக்கிறேன். காதல் – நட்பு. இது என்ன கண்ணாம்பூச்சி? ஆண்-பெண். இது என்ன அபத்தமான முரண்? அம்மா சாப்பாட்டிற்கு கூப்பிடுவது என் காதில் கேட்கிறதுதான். ஆனாலும் என் கால்கள் கதவினை திறந்தபடி எங்கோ நடந்துகொண்டிருந்தது. ஐந்து, பத்து என நிமிடங்கள் கடந்தபோது அந்த ஜனாவிற்கு பிடித்த அந்த கடற்கரையை அடைந்தேன். வெள்ளவத்தை கடற்கரை. அந்த கற்களின் மீது அமர்ந்தபடி, அடிக்கடி மாறி மாறி இரையும் அலையையும், புகையும் இரயிலையும் இரசித்தபடி எனக்கு அவள் சொல்லும் கதைகளை இனி யார் கேட்பது? யார் சொலவது? அதே, அவள் வழமையாக அமரும் அதே கல்லில் அமர்ந்தபடி இந்த ஆண்-பெண், நட்பு-காதல் சமன்பாட்டு முரண்களை தீர்க்க முயற்சித்துக்கொண்டிருந்தேன்.
அவள் இல்லாத உரு உலகத்தை நான் என்றுமே கற்பனை செய்து பார்த்ததில்லை. அது எனது இயலாமை. ஜனா என்னைவிட்டு பிரியும் அந்த நாளை என்னால் கற்பிக்க முடியாது. அவள் இல்லாத வாழ்க்கைக்கு என்ன பெயர்? வேண்டாம். இறந்துவிடலாம்! தூரத்தில் அதே சிவப்பு புகையிரதம். ஜனாவின் ஆசை இரயில். என் ஜனாவின் வெள்ளவத்தை சந்தோஷம் இந்த இரயில். ஆமாம் இதுதான். இதோ இதோ எனக்கு மிக அருகில் வருகிறது.. ஆமாம் மிடுக்காக நான் நின்றுகொண்டிருப்பதோ தண்டவாளங்களின் நடுவில்.
அம்மா மா மா……..!!
எல்லாம் முடிந்தாயிற்று. நினைத்ததை முடித்துவிட்டேன். தற்கொலை கோளைத்தனம் என ஜனா நினைத்தாலும் அது அவள் மீதான என் இயலாமை என்பதை அவள் புரிந்துகொள்ளட்டும். துருப்பிடிக்காத அந்த மினுங்கல் தண்டவாளங்களில் சிதறிக்கிடந்த எனது மூளையின் செல்கள் ஜனா ஜனா என ஓலமிட்டுக்கொண்டிருந்தன. ஒரு பாறையில் வீசி எறியப்பட்ட என்னுடைய இதயம் அவள் நினைவுகளை இரத்தத்தால் துடைத்துக்கொண்டிருந்தது. எங்கோ புற்களுக்குள் தனியாய் கிடந்த என்னுடைய வலக்கையை ஒரு க்ளோவ்ஸ் போட்ட விரல்கள் தூக்கி எடுத்தன. அதில் இருந்த “ஜனா” என்கின்ற பச்சை குற்றிய எழுத்துக்களை யாரோ மெதுவாக எழுத்துக்கூட்டி வாசித்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் என்னுடைய இறுதி மூச்சு நாசியை முட்டி அமைதியாகிக்கொண்டிருந்தது. என்னை அடித்துக் கொலைசெய்த அந்த ஜனாவின் பிரியமான இரயில் தூரத்தில் நின்று சிதறிக்கிடக்கும் என்னைத் திரும்பிப்பார்த்து “சாரி” சொல்லி மீண்டும் புறப்பட்டது.
மறுநாள் எங்கள் வெள்ளவத்தை வீட்டில் அத்தனை கூட்டம். வெள்ளைத்துணியினால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வெற்றுப் பெட்டியில் என்னை கிடத்தி வைத்திருந்தார்கள். மலர்களின் வாசனையும், ஊதுபத்தியின் கமகமப்பும் என்னை சூழ்ந்திருந்தன. என்னை பார்க்க வருபவர்கள் எல்லோரும் அழுதுகொண்டிருக்கும் எனது அம்மாவிற்கு ஏதோ ஏதோவெல்லாம் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எங்கள் பக்கத்துவீட்டு ராதா ஆன்டி அம்மாவை கட்டியணைத்து “இங்க பாரு… உன்ட பையன் எவ்வளவு சனத்த சம்பாதிச்சு வச்சிட்டு போயிருக்கான்.. ஐயோ..” என அழுதபடி கொடுத்த நற்சான்றிதழ் எனக்கும் கேட்கிறது. என்னுடைய காரியாலயத்திலிருந்து வந்திருந்த மினோகா எனக்காக இவ்வளவு அழுவாள் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. “கண்ணீர் அஞ்சலி நிதுஷன்” என எனக்கருகாமையில் வந்துபோகும் ஒவ்வொரு வெள்ளைத் திரையின் கீழும் இது யாருடையது என பார்க்க ஆசையாக இருந்தாலும் அது முடியாமல் போனது. எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள்கூட என்னை வந்து பார்த்துப்போகிறார்கள். நான் இறந்த பின்னர்கூட அழகாக சிரித்தபடி இருப்பதாக என் கால்மாட்டில் நீ்ணட நேரம் நின்றுகொண்டிருந்த நீதன் விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தான். யார் யாரோ எல்லாம் வந்து என்னை பார்த்து சென்றாலும் என் ஜனாவைத் தேடி தேடியே தொலைந்துகொண்டிருந்தேன். ஜனா வரமாட்டாளா? நான் இறந்துகிடப்பதை ஒருமுறை பார்த்து ஒரு துளி வடிக்க மாட்டாளா?
பதினொரு மணி இருக்கும். என் தோழி அல்ல என் காதலி வருகிறாள். வாசலில் வரும்போதே அவள் வைத்த கூக்குரலில் எனக்கு போன மூச்சு திரும்பியது போல இருந்தது. எனக்குத் தெரியும் அவள் என்னை தன் உயிருக்குஉயிராக நேசிக்கிறாள். ஏன் அவள் கொடுத்த ஒவ்வொரு முத்தங்களும் அதற்கு சான்றுகள். ஜனா அழாதே. ப்ளீஸ். உன்னை இப்படி நான் பார்க்கவேண்டாம். அவளுடை அழுகையைப் பார்த்தபோதுதான் “ச்சே ஏன்டா செத்தம்?“ என்று தோன்றியது. அருகில் வா ஜனா. குனிந்து ஒரு முத்தமிடு. அது இறுதி முத்தம், கொஞ்சம் இறுக்கிக் கொடு. இனி உனக்கு யார் கடிதம் எழுதுவார்? யார் உன்னை கொழும்பின் இரா வீதிகளில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்? ஜனா, உன்னை அடைய முடியாமல் போன ஒரு வாழ்க்கை எத்தனை அபத்தமானது பார்த்தாயா?. அதுதான் அந்த, உன்னுடை இரயில்… மரித்துப்போனேன். ஜனாவினுடைய சத்தம் திடீரென காணாமல் போனது. ஜனா… ஜனா… மயக்கம்போட்டு விழுந்திருப்பாளோ… எனக்காக.. ஒருபுறம் சந்தோஷமாகவும் இருந்தது.
என்னை விடாமல் கட்டியணைத்திருந்த அம்மாவை வில்லங்கமாக இழுத்து அகற்றி என்னை இன்னுமொரு பலகைகொண்டு மூடுனார்கள். ஜனா உன்னை ஒரு முறை பார்க்கவேண்டும்.. நான் கத்தியது யார் காதிலும் விழுவதாய் தெரியவில்லை. ஜனா ஜனா.. என்னை மூடிய பலகையை ஆணியால் சொருகுகிறார்கள். எனக்கோ ஜனா ஜனா.. எல்லாம் முடிந்துபோயிற்று என கண்களை மூட நினைக்கிறேன். அப்பொழுதுதான் எதேச்சையாக என் காலடியில் அதைப் பார்த்தேன். ஒரு வெள்ளைக்காகிதம். அதை அவசரமாக எடுத்து கவனமாக படிக்கிறேன். அதில் கொட்டை எழுத்துக்களில் இப்படி இருந்தது.
“நிது, ஐ லவ் யு.. உன்னைவிட எனக்கு எதுவும் வேண்டாம்! நாளை நானும் உன்னுடன் இருப்பேன். அன்புடன் ஜனா”
வாசித்து முடிக்கையில் மீண்டும் அந்த சிவப்பு இரயிலின் இரைச்சல் கேட்கிறது. வெள்ளவத்தை கடற்கரையோரம்.. அதே இரயில்.. அதே வேகம்.. அதே பளார்ர்ர்ர்…..
ஓ… என் ஜனா னானா…..!

No comments:

Popular Posts