Friday, August 5, 2016

விபுஷா

குளிரூட்டப்பட ப்ராடோ வண்டிகளில் டம்பக்கமாக போய் இறங்கும் அந்த மனிதர்களை அவர்கள் கையெடுத்துக் கும்பிடுவார்கள். ஏதோ பரலோகத்தில் இருந்து தங்களைக் காப்பாற்ற இறங்கிவரும் பரம பிதாக்கள்போல அவர்கள் எண்ணிக்கொள்ள இவர்களும் தங்கள் சப்பாத்துக்களின் கறுப்பு மையில் புளுதி ஒட்டிக்கொள்ளாத வண்ணம் மெதுவாக ஊர்வீதிகளை assessment என கடந்துபோவார்கள். அந்த கேவலமான பிரம்மையில் நானும்தான் நடந்திருக்கிறேன் என்பதை உணர்வதற்கே எனக்கு நான்கு ஆண்டுகள் எடுத்திருந்தது. ஐஎன்ஜிஓ (INGO) என்கின்ற ஒரு மாய வளையத்திற்குள் மானம் காத்துக்கிடந்த அந்த ஓர் அநாகரிக கும்பலில் நானும்தான் இருந்திருக்கிறேன்.
வடக்கில் என்ஜினியர் டாக்கர் என உச்சத்தில் இருந்த சீதனத்தை படாரென அந்த ஓசி ப்ராடோவையும், அரைகுறை ஆங்கிலத்தையும், வெள்ளைக்காரியின் சகவாசத்தையும், மினுங்கும் சப்பாத்தையும் வைத்துக்கொண்டு ஒரே இரவில் அந்த உச்ச சீதன மார்க்கட்டை கைப்பற்றியவர்கள் இவர்கள். ஏ பி சீ டி ஐ சரளமாகச் சொல்லத்தெரிந்தவனிற்கு ஏசி ப்ராடோ வரமாய் கிடைத்த காலம் அது. ஊரில் என்ஜிஓ வேலை என்றாலே பந்தியிலும் சந்தியிலும் முன்னுரிமை கிடைப்பதென்பது இலங்கையில் போர் போட்ட வரம் எங்களுக்கு. எங்களில் அனேகமானவர்களுக்கு என்ஜிஓ சொல்லத்தெரிந்தளவிற்கு கியுமனிட்டேரியன் (Humanitarian) என்றால் என்ன அர்த்தம் என்பது தெரியாமலேயே இருந்தது. இலகுவாக உயர்ந்த சம்பளமும், தொட்டுப்பார்க்கக்கூட கனவு காணாத வாகனங்களும், விளம்பரம் குத்தப்பட்ட சட்டைகளும், வெள்ளைக்காரன் ப்ளேட்டில் பரிமாறப்படும் பஸ்ராக்களும் இந்த மனிதாபிமான பணியாளன் என்கின்ற சொல்லை எங்களுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை.
நானும் அந்த மயக்கத்திலிருந்து விழித்துக்கொள்ள சில காலம் எடுத்தது. ஒரு பெண் என் பிண்டத்தில் தன்னுடை முள் சவுக்கால் ஓங்கி அடிக்கும் வரை என்னால் கியுமனிட்டேரியன் பற்றி தெரிந்திருக்க முடியவில்லை. அந்த மகா அபத்தத்தை தன் சொல் சவுக்கால் துரத்தி துரத்தி அடித்து விரட்டியவள் விபுஷா.
பத்து வயது அவளுக்கு அத்தனை அனுபவங்களைக் கொடுத்திருக்கக்கூடாது. இருபத்து ஆறு வயதிலும் வெறும் கிளட்டு முண்டமாகத் திரிந்த எனக்கு அது யோசிக்கமுடியாத ஆச்சரியம்தான். என் சிந்தனையையும் ஆன்மாவையும் தன் ஊசியால் குத்தி கிளப்பிவிட்டவள் அவள். இரா நடராசனிற்கு ஒரு ஆயிஷா போல இந்த போலி அமலிற்கு இந்த விபுஷா என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆயிஷா வன்னியில் பிறந்திருந்தாள் இன்னுமொரு ஏகே 48 ஐக் கண்டுபிடித்திருப்பாள். விபுஷாவோ சாத்தானின் ஏக பட்டிணியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள துடிதுடித்தவள்.
என்னை அவளிற்கு பிடிப்பதற்குள் அவளை எனக்கு எக்கச்சக்கமாக பிடித்துப்போனது. “அடுத்த முற வரேக்க எங்க அம்மாக்கு ஒரு கிலோ அரிசி கொண்டுவந்து குடுக்கிறீங்களா மாமா.. உங்கட்ட நிறைய காசு இருக்கும் போல.. புது காரில எல்லாம் வந்திருக்கிறீங்க!”. இந்த கார் உனக்கு உதவிசெய்வதற்காக எனக்கு போடப்பட்டிருக்கிற பிச்சை என்பதை அவளிடம் நான் அன்று சொல்லியிருக்கவேண்டும். அவளால் அதை புரிந்திருக்க வாய்ப்பில்லை. அவள் கேட்ட அரிசியை கொண்டுபோய் கொடுப்பதற்கு எனக்கு நிறுவனம் அனுமதி கொடுக்காது என்பதையும் அறியாமல் இல்லை. பசியில் கிடக்கும் ஒட்டுமொத்த கிராமத்தையும் தவிர்த்து அவளிற்கு மட்டும் அந்த அரிசிப் பருக்கைகளை காவிக்கொண்டுபோய் கொடுப்பதும் மனிதாபிமானமல்ல என “Project Proposal’ சொல்லிக்கொடுத்திருக்கிறது. என்ன செய்வேன்? அதற்காக அந்த ஒட்டுமொத்த ஊரிற்கும் எப்படி அரிசி வாங்கிக்கொடுப்பது? நிறுவனத்திடம் அப்படியான திட்டத்திற்கு பணமில்லை என்பதும் எனக்குத் தெரியும். கேட்டாலும் வெள்ளைக்கார துரை “உனக்கு மண்டைக்குள்ள ஒரு பு… யும் இல்லையா?” என கேவலமாக ஆங்கிலத்தில் திட்டுவான். மறுபுறம் எனது சொந்த சம்பளத்தில் வாங்கிக்கொடுத்தால் மோட்டார் சைக்கிள் லீசிங், வீட்டுக்கு வாங்கின ப்ரிட்ஜ் ப்றீமியம், இம்முறை நம்ம தலையில் வந்துதொலையும் வீக்கென்ட் தண்ணிப்பாட்டி என என்னுடைய நிலை பாளாய் போய்விடும்.
வீடு வந்ததும் அம்மா கொட்டிய சோற்றில் விபுஷாவின் கண்கள் ஒளிர்ந்தன. என்னுடைய கண்கள் பக் என தண்ணீரை பாய்ச்சியது. அத்தனை குற்ற உணர்வோடு அந்த சோற்றை எப்படி நான் உள்ளே தள்ளுவது? வயிறு அழுகி குதம் வழியே ஒழுகாதா? சாப்பாட்டை முதல் முதல் விபுஷாவிற்காக தவிர்த்துக்கொள்ளுகிறேன். அதுவும் மிகப்பெரிய முட்டாள்த்தனம்தான். ஒரு ஏழைக்குழந்தைக்கு ஒரு பிடி சோறு கொடுக்க வக்கிலாதவன் மனவருத்தமென்று தன் சோற்றை தள்ளிவைப்பதில் என்ன மனிதாபிமானம் இருந்துவிடப்போகிறது?
இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் அந்த ஊரை நோக்கிப்போகிறேன். உடல் முழுவதும் மங்கிய வெட்கத்தை போர்த்திக்கொண்டு ப்ராடோவின் கண்ணாடிகளுக்குள்ளால் சுற்றும் முற்றும் பார்த்தபடி ஒழிந்துகொண்டிருக்கிறேன். மீண்டும் விபுஷா என்னை காணமாட்டாள் என்பது என்ன நிச்சயம்? “மாமா அரிசி கொண்டுவந்தீங்களா?” என்று கேட்டால் என் மனச்சாட்சி என்னை காறித்துப்பாதா? சரி எதுவரினும் சமாளிக்கலாம் என்று போனபோது அந்த ஊரில் விபுஷாவைத் தவிர மற்ற அனைவரையும் கண்டு பேசியாகிவிட்டது. வெட்கமும், பாவமும், இயலாமையும், ஆவலும், கையாலாகாத்தனமும், நெருடலும் ஒன்று சேர்ந்து தொன் எடையால் அமுக்க, வாய் பிளந்து சத்தமிட்டு அழமுடியாமல் அல்லோலகல்லோலப்படும் அந்த மனத்தின் சாதல் நிலையை நீங்கள் அனுபவித்ததுண்டா? அன்றுதான் அந்த அனுபவமும் எனக்கு கைகூடியது! கொடிதினும் கொடிது!!
விபுஷாவை அவள் வீடு தேடி பார்க்கப்போனேன். அதுவும் வெறும் கையோடு. எத்தனை முட்டாள் நான்? அல்லது எத்தனை மிருகம் நான் எனப்போட்டுக்கொள்ளுங்கள். அப்படி ஒரு கிலோ அரிசியை வாங்கிக்கொடுத்து என்னால் அவளை பூசித்திருக்க முடியாதா என்ன? எதற்காக இந்த கையாலாகாத்தனம்? மனிதாபிமானப் பணியென பம்மாத்துக்காட்டிக்கொண்டு திரிந்த என்னைப்போன்ற அற்ப ஜந்துகளுக்கு இது உறைக்க வாய்ப்பில்லைதான்! விபுஷா என்னும் ஒரு சிறுமியிற்கு உணவளித்ததற்காக என்னை அந்த வெளிநாட்டு நிறுவனம் தூக்கி எறிந்திருந்தால் “போடா உன்ட வேலையும் மயிரும்!” என்று எறிந்து நடந்து அட்லீஸ்ட் ஒரு “மனிதனாக” என்னால் மாறியிருக்க முடியாதா? எத்தனை சுய நலம்? எத்தனை ஆசைகள்?
நானும் என்னுடைய ஓட்டுனரும் உள்ளே நுழைகிறோம். ”வாங்க மாமா..” அதே குரல் காதில் விழ கைகளை பற்றிக்கொள்ளுகிறாள் விபுஷா. அந்த கிழிந்த சட்டையினூடு தெரியும் ஒட்டியிருக்கும் வயிற்றின் சதைகள் என் மனச்சாட்சியை தின்று தீர்க்கிறது. அவள் மகிழ்ச்சியில் என் முகம் மலர்ந்தாலும் குற்ற உணர்வு படுகொலை செய்கிறது. அன்றுதான் அவள் என்னை மனிதாபிமானி (humanitarian) ஆக்கினாள். எந்தவொரு Project Proposal உம், impact monitoring report உம் எனக்கு சொல்லிக்கொடுக்காததை அவள் அன்று தன் வார்த்தைகளால் சொல்லிக்கொடுத்தாள்.
“மாமா, அம்மா சோறு ஆக்குறா.. நாலு நாள் சோறு சாப்பிடலையா அதுதான்.. அம்மாவும் பாவம் இல்ல..”
“ஏன் அம்மாவுக்கு என்ன..?”
”தெரியாதா உங்களுக்கு?? அம்மாக்கு ரெண்டு காலும் இல்லல்லோ??”
உயிர் உருகி கண்களுடு வழியும் வலியை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். எனக்கு கண்கள் கலங்குவதை அவள் கண்டுவிடுவாளே என்பதும், இவளுக்காக என்னால் ஒரு பிடி அரிசி வாங்கிக்கொடுக்க முடியாமல் போனதே என்கின்ற உணர்வும் ஒன்றுசேரந்து என்னை எப்படி கொல்லாமல் விட்டது என்பதை என்றும் யோசித்துப்பார்ப்பதுண்டு. மன்னித்துவிடு விபுஷா. நான் ஒரு மிருகம். மனிதாபிமானப்பணியாளன் என்கின்ற போர்வை போற்றிய ஹிட்லர். என்னிடம் எந்த பதிலையும் எதிர்பார்க்காதே. நான் மனதளவில் கூட வக்கிலாதவன்!
“ஆ மாமா… அதோட இன்னொண்டும் சொல்லணும்.. இனி நீங்கள் அம்மாக்கு உங்கட புது வேனில அரிசி கொண்டுவந்து குடுக்க வேணாம். நான் அந்த பக்கத்து ரோட்டில பிச்சை எடுக்க போறனான். ஒவ்வொருநாளும் எனக்கு அது போதும் அம்மாக்கு சோறு வாங்கிக்குடுக்க.. சரியா??”
என சிரித்துக்கொண்டு நின்றாள் விபுஷா. நான் அதே இடத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் போலிருந்தது. இப்பொழுதும் சிறுவர்களை ரோட்டில் கையேந்தியபடி பார்த்தால் விபுஷா மண்டைக்குள் புகுந்துவிடுகிறாள். அள்ளி அணைப்பதற்குள் “பொறுங்கோ அந்த மாமாட்ட காசு கேட்டுட்டு வாறன்!” என இரு கைகளையும் ஏந்தியபடி துள்ளி ஓடுகிறாள். நான் இனியாவது சரியான மனிதாபிமான பணியாளனாக இருக்கவேண்டும் என சத்தியம் எடுக்காவிடில் விபுஷா என்னை எப்படி மன்னிப்பாள். அவள் அன்று கொடுத்த அந்த விளாசலில்தான் என் உலகம் திறந்தது. பின்னர் அந்த ப்ராடோவும், உயர்ந்த சம்பளமும், மினுங்கும் விலைமதிப்புள்ள சப்பாத்தும் கொடுக்காத சந்தோஷத்தை அந்த விபுஷாக்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் நிறுவனங்கள் மில்லியனில் புரண்டாலும் பல விபுஷாக்கள் இன்னும் வீதிகளில் கையேந்திக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

No comments:

Popular Posts