Saturday, August 13, 2016

செஞ்சோலைப் படுகொலை நினைவாக.


அப்பாவிப் பாடசாலைச் சிறுவர்களை விடுதலைப் புலிகள் என எண்ணி வான்படை நடாத்திய குரூரமான தாக்குதலில் பலியான அத்தனை இளம் பிஞ்சுகளையும் நினைவில்கொள்ளும் ஓர் நாளில் என்னுடைய “கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்” நூலின் 22 ஆவது அத்தியாயத்திற்காய் எழுதிய பதிவு இது. இன்றும், அதே நாளில் இதைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் எனத் தோன்றியது. வாசிக்காதவர்களுக்காக.அந்த அப்பாவிச் சிறுவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.


22. தெய்வானை அம்மா

சென்றவாரம் வெளியான என் குட்டி காவியா பற்றிய குறிப்பை வாசித்து பலர் கண்கலங்கியதாக எனக்கு சொன்னார்கள். நான் ஆச்சரியம் கொள்ளவில்லை. காவியா என்னை அடிக்கடி கண்கலங்கவைத்த ஒரு பெண். அவளை வாசிக்கும்போது கண்கலங்குவதன் காரணம் நியாயமானதே. அவளை நீங்கள் அன்பாக விசாரித்த அந்த அழகிய வார்த்தைகளை அவளிடம் முடிந்தால் நிற்சயம் எடுத்துச் செல்வேன். காவியா போன்று திரைக்குப்பின்னால் தூங்கிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான குட்டீஸ்களையும் நான் அடிக்கடி நினைத்துப்பார்ப்பதுண்டு. இதையாவது நாம் அவர்களுக்கு செய்யவில்லையென்றால் நாமெல்லாம் எப்படி மனிதர்கள் என்று சொல்லிக்கொள்வது. கஷ்டம் என்பதையே அறியாத எத்தனை குழந்தைகள் நம் வீடுகளில் நிறைந்திருக்கிறார்கள். எமது குழந்தைகள் சாதாரணமாக அழுதாலே நம் பெற்றோர்களின் ஜீவன் துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. காவியா போன்றவர்களை நாங்கள் கொஞ்சம் சிந்திக்கவேண்டாமா. உங்களுக்கு காவியாக்கள்  என்றுகூட பல நண்பிகள் இருக்கிறார்கள் என்பதை நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டாமா? அவர்கள் காவியா போன்றவர்களை அரவணைத்து வாழ்க்கை பற்றிய மற்றுமொரு அத்தியாயத்தை கற்றுக்கொள்ளவேண்டும்.

நடந்து முடிந்த யுத்தத்திலே பல்வேறுப்பட்ட தரப்பினர் நேரடியாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இதில் படு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள்மேல் எனக்கு அதிகம் அனுதாபம் உண்டு. கிளைகள் தறிக்கப்படுதல் வளர்ந்த பெரும் மரங்களுக்கு ஆச்சரியமானதாகவோ அல்லது கடும் வலிநிறைந்ததாகவோ இருக்க வாய்ப்பில்லை. அவை அதற்கு எப்படியோ பழக்கப்பட்டு இயைபாக்கம் பெற்றிருக்கும். ஆனால், கிள்ளி எறியப்படும் ஒரு இலையின் வலியை அந்த சிறு தாவரங்கள் எப்படி தாங்கிக்கொள்ளும்? அன்று கிளிநொச்சி தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை  எத்தனை பிஞ்சு இலைகள் வலிக்க வலிக்க பிய்த்தெறியப்பட்டன?

முழுதாகவோ அல்லது பகுதியாகவோ பெற்றோரை பறிகொடுத்து எத்தனை பிஞ்சுகள் முள்ளிவாய்க்காலை தெய்வாதீனமாக கடந்து வந்து சேர்ந்தது. காவியா போன்ற இந்த பிஞ்சுகளை நாம் சந்திக்கும் வரை இந்த வலிகளை நாம் உணர்ந்துகொள்ள வாய்ப்பில்லை. ஏன் பொதுவாக புரிந்துகொள்ள நாங்கள் முயற்ச்சிப்பதும் இல்லை. இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் எத்தனை அநாதை சிறுவர் காப்பகங்கள் வன்னியில் முளைத்திருக்கிறது என்பது எத்தனை பேரிற்கு தெரியும்? அல்லது எத்தனை பேர் இதுபற்றி ஆகக்குறைந்தது சிந்திப்பதற்க்காவது முயற்சித்திருக்கிறோம்? செய்திகளை படித்துவிட்டு 'பாவம்' என சொல்லிவிட்டு அடுத்த வேலையைப்பார்க்கும் மனிதர்கள்தானே நம்மில் அதிகம்!

நான் இந்த சிறுவர்கள் பற்றிய பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இதே நாளில்தான் (14.08.2014) ஒட்டுமொத்த தமிழரையும் அழுது மாரடைக்கவைத்த அந்த கொடூர சம்பவம் நடந்தேறியது. இற்றைக்கு 8 ஆண்டுகளிற்கு முன்னர் கற்றல் செயற்ப்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த செஞ்சோலை எனப்படும் சிறுவர் காப்பகத்தின் 53 பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். அன்றைய தினம், ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத, உச்சக்கட்ட வலிகொடுத்த ஒரு வடுவாக இந்தச்சம்பவம் பதிவானது. ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் வாய்பிழந்து ஓலமிட்டது. அழுது அழுது களைத்துப்போனது, அப்பொழுதும் நம் சர்வதேச சமூகத்தினர் வழமைபோலவே கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுவிட்டு களைத்துப்போய் வைன் குவளைகளை நிறைத்தபடி தங்கள் மனைவியரோடு உட்கார்ந்துகொண்டார்கள். இந்த பதிவில், அதுவும் அதேநாளில், இந்த ஈழத்து  பிஞ்சுக் குழந்தைகளை ஒருகணம் நினைக்க முடிந்தது மிகவும் திருப்தியாக இருக்கிறது. அவர்களுக்கு எனது விழிநீர் அஞ்சலிகள்.

மெனிக்பாம் என்ற சொல்லை இன்றுவரை யாரும் மறந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அது ஒவ்வொரு தமிழரினதும் அடிமனதில் டட்டூவாக பதிந்துவிட்ட ஒரு சொல். பாவம், எத்தனையாயிரம் தமிழர்களின் கண்ணீரை தாங்கி நின்ற மண் அது. மெனிக்பாம் என்றதும் என்னவோ, இன்றுவரை எனக்கு முதலில் ஞாபகம் வருவது அந்த முட்கம்பி வேலிகள் தான். அது ஒரு நாகரிக சிறையின் வடிவம். இறுக்கப்பட்ட மனிதாபிமானத்தின் வெளிப்பாடு. இருந்தும் நீண்ட கொடிய பயணத்தின் பின்னர், நம் மக்களுக்கு ஆறுதலைக்கொடுத்த மண் அது. அங்குதான் தெய்வானை அம்மாவைச் சந்தித்தேன். அமைதியான, சாந்தம் நிறைந்த முகம். மனச்சோர்வு நிறைந்திருக்கும் ஒரு உருவம் அவர். இல்லையென்றாலும் அவரிற்கு ஒரு ஐம்பத்து ஐந்து வயது இருக்கும். அவரிற்கு ஒரு மகள். அவள் குழந்தையுடனும் கணவருடனும் முள்ளிவாய்க்காலில் காணமல்போய் மேனிக்பாமில்தான் தெய்வானை அம்மாவால் கண்டுபிடிக்கப்பட்டாள். அதுவும் அவள் குழந்தையோடு மட்டும். கணவரிற்கு என்ன நடந்தது என அந்த தெய்வானை அம்மாவின் மகளால் இன்றுவரை சரியாக சொல்ல முடியவில்லை. என்னைப்பார்த்ததும், ஏதோ ஏதோ எல்லாம் சொல்ல ஆரம்பித்தார். எனக்கு எதுவும் புரிவதாய் இல்லை. திடிரென அங்கேவந்த தெய்வானை அம்மா, 'தம்பி, குறைநினைக்காதேங்கோ. அவளுக்கு சுகமில்ல..' என அவள் தலையைக்காட்டி சொன்னபோதுதான் அந்த பெண்ணின் நிலை புரிந்தது.

சில வருடங்களின் பின்னர் அதே தெய்வானை அம்மாவை கிளிநொச்சியில் ஒருமுறை சந்திக்க நேர்ந்தது. என்ன ஆச்சரியம், எனக்கு முதலே தெய்வானை அம்மா என்னை அடையாளம் கண்டுகொண்டார். என்னைப் பார்த்ததில் அத்தனை சந்தோஷம் அவர் முகத்தில். 'தம்பி என்னைய நினைவிருக்கா??'. அதிர்ஷ்டவசமாக தெய்வானை அம்மாவை நன்றாகவே எனக்கு நினைவிருந்தது. அவரை நான் அன்றுவரை மறக்காமல் இருந்ததற்கும் ஒரு முக்கிய காரணம் இருந்தது. மேனிக்பாமில் பார்த்ததற்கு தெய்வானை அம்மா இப்பொழுது நன்றாக, உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார். தான் முருகண்டியில் வசிப்பதாக சொன்னார். முருகண்டியில் எங்கே எனக்கேட்டதற்கு அவர் கொடுத்த விளக்கம் மூன்று மணி நேரம் கழித்து அவர் வீட்டில் போய் அவரைப்பார்க்க உதவியாய் இருந்தது.

தெய்வானை அம்மாவின் வீடு முருகண்டி கோவிலிலிருந்து ஒரு பத்து நிமிட நடைதூரத்தில் அமைந்திருந்தது. அவரை அவர் வீட்டிற்கு சென்று பார்த்தது எனக்கு அத்தனை சந்தோசத்தைக் கொடுத்தது. மேனிக்பாமில் நான் சந்தித்த தெய்வானை அம்மாவை மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க வேண்டும் என்பதை அவர் தலையிலோ அல்லது என் தலையிலோ யாரோ எழுதிவைத்திருக்கவேண்டும். முருகண்டி தெய்வானை அம்மாவின் சொந்த ஊர். அவர் இப்பொழுது வசிப்பது அவரது ஊர் என்றாலும் அவரது சொந்தக் காணியில் அல்ல. தெய்வானை அம்மாவின் உறவினர் ஒருவரது காணியில் தனக்கும் தனது பேத்திக்கும் அளவாக ஒரு சிறிய கொட்டில் அமைத்து வாழ்ந்து வருகிறார். அப்படியெனின் அவரது சொந்தக் காணியிற்கு என்ன நடந்தது என என்னிடம் கேட்கவேண்டாம்! இத்தொடரில் அரசியல் பற்றி நான் பேசுவதில்லை.

மெனிக்பாமில் முதல் முதல் தெய்வானை அம்மாவை நான் கண்டபொழுது அவர் தன் புத்தி சுயாதீனமற்ற ஓர் மகளுடன் இருந்தார் என முன்னர் கூறியிருந்தேன். அவரை அன்று என்னால் பார்க்க முடியவில்லை. அந்த மகளிற்கு என்ன நடந்தது என்று கேட்டதற்கு 'அவ மோசம் போட்டா!' என கூறினார் தெய்வானை அம்மா. அந்த இறப்பு ஒரு தற்கொலை என்று நான் அறிந்த பொழுது மிகவும் மனவேதனைப்பட்டேன். ஆனாலும், புத்தி சுயாதீனமற்று இந்த சமூகத்தில் வாழ்வதை விட ஒரேயடியாய் போய்ச்சேர்வது எவ்வளவோ மேல் தான். எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று கேட்டபொழுது, கிணற்றில் விழுந்து மரணமானதாகச் சொன்னார். எனக்கென்னவோ அது தற்கொலை என்பதைவிட ஒரு விபத்தாக இருந்திருக்கவேண்டும் எனத்தோன்றியது.

தெய்வானை அம்மாவின் அந்த மகளிற்கு ஒரு மகள் இருக்கிறது என்பதை நான் ஞாபகப்படுத்திக்கொண்டேன். மேனிக்பாமில் இருக்கும் பொழுது இந்த குழந்தைக்கு 5 வயதுதான். இப்பொழுது பாடசாலை செல்லும் ஒரு துடிப்பான மாணவி அவள். தனது அம்மாவின் இறப்பு அச்சிறுமியை அதிகம் பாதித்திருக்கவேண்டும். பேசும் பொழுது தனக்கு யாருமில்லா ஒரு நிலையை வார்த்தையிலும் முக பாவனைகளிலும் அடிக்கடி காட்டிக்கொண்டாள். தனது அம்மம்மாவுடன் வாழ்ந்துவரும் இச்சிறுமி தான் ஒரு வைத்தியராக வருவேன் என்றபோது தெய்வானை அம்மா 'அத பாக்க நான் இருக்கமாட்டேனே!' என சலித்துக்கொண்டார். உண்மைதான். இயற்கையின் நியதியில் தெய்வானை அம்மாவின் வாழ்க்கை இன்னும் ஐந்து, பத்து வருடங்களில் இயற்கை எய்தலாம். 'எப்பிடியும் பேத்திய ஒழுங்கா படிக்க வைங்க அம்மா.. என்ன கஷ்டம் வந்தாலும் அவள் படிப்பு நிக்காம பாத்துக்கோங்க!' என அறிவுரை சொன்னபோது சிரித்தபடி வீட்டினுள் சென்று ஐந்து கச்சான் கடலை பைகளை கொண்டுவந்து நீட்டினார். எனக்கான அவரது அன்புப்பரிசு அது.  எனக்கு கொடுப்பதற்கு அது மட்டுமே அவரிடம் இருந்தது.

விடைபெறும் நேரம் வந்தது. 'வாறன் அம்மா!' என்றபோது தெய்வானை அம்மா சொன்னார், 'தம்பி இந்த ரோட்டால வந்துபோனா மறக்காம என்னைய வந்து பாத்துட்டு போகணும்.. கோயிலுக்கு பக்கத்திலதான் எண்ட கச்சான் கட இருக்கு. அதில வந்து என்னைய பாத்துட்டு போகலாம்...'

'ஆஹ்.. கச்சான் விக்குறீங்களா??'

'ம்ம்ம்.. அதாலதான் தம்பி எங்க ரெண்டு பேரின்ட வாழ்கையும் ஓடுது! பிள்ளையின்ட படிப்பு உட்பட..'

எனக்கு பெருமையாக இருந்தது. மறுபக்கம் அவரது இந்த வயதிலும் உழைக்கவேண்டும் என்கின்ற இயற்கையின் நியதியைப்பார்த்து சலித்துக்கொண்டேன். உண்மைதான் அந்த கச்சான் வியாபாரத்தால்தான் இந்த இருவரின் வாழ்க்கையும் ஓடுகிறது.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதே A9 வீதியால் திரும்பிக்கொண்டிருந்தேன். முருகண்டியில் கட்டாயமான நிறுத்தம். தெய்வானை அம்மாவின் கச்சான் கடையைத்தேடிக்கொண்டிருந்தேன். 'மாமா..' என பின்னாலிருந்து வந்த குரலைக்கேட்டு திரும்பிப்பார்த்தேன். அது தெய்வானை அம்மாவின் பேத்திதான். கடலை விற்றுக்கொண்டிருக்கிறாள். அவளிடம் சென்று எங்க அம்மம்மா என்று விசாரித்தேன். அந்த சிறுமி சொன்னாள்.

'மாமா அம்மம்மாக்கு இண்டைக்கு ஒரே தலச்சுத்து. அதான் நான் கச்சான் பேக்க தூக்கிக்கொண்டு வந்தனான். அம்மம்மா பாவம் தானே.. ஆனா இங்க பாருங்க கொண்டுவந்த பேக்குகள எல்லாம் வித்துட்டன். இன்னும் கொஞ்சம் இருக்கு.. அதையும் வித்து முடிச்சிட்டு வீட்ட பொயிடுவன்..'

'இன்னும் எத்தின பை இருக்கு விக்கிறதுக்கு..?'

'இன்னும் பத்தொன்பது பேக் இருக்கு மாமா..'

'சரி அந்த பத்தொன்பதையும் நான் வாங்கவா??'

'ஓகே ஓகே...' 

அவளது முகத்தில் அத்தனை சந்தோஷம். பட படவென அனைத்து பைகளையும் எடுத்து எனக்கு ஒரு பெரிய சொப்பின் பையில் போட்டுக்கொண்டிருந்தாள். நான் அந்த பெரிய கச்சான் பையை வாங்கிக்கொண்டு புறப்பட ஆரம்பித்தேன். 

;மாமா மாமா..'

'என்னம்மா..?'

'போறதப்பாத்தா நீங்களும் எங்கையோ கச்சான் விக்க போறீங்க போல... நீங்க என்னட்ட ஒரு பேக் 20 ரூபாக்கல்லோ வாங்கினீங்க.. அதால நீங்க 25 ரூபாவுக்கு வில்லுங்க.. அப்பதான் உங்களுக்கு லாபம் கிடைக்கும்!'


2 comments:

Yarlpavanan said...

அருமையான பகிர்வு

Unknown said...

அப்பாவிப் பாடசாலைச் சிறுவர்களை விடுதலைப் புலிகள் என எண்ணி வான்படை நடாத்திய குரூரமான தாக்குதலில் பலியான அத்தனை இளம் பிஞ்சுகளையும் நினைவில்கொள்ளும் இன்றைய நாள்
14.08.2017

Popular Posts