Friday, August 5, 2016

வெள்ளவத்தை துப்பட்டாக்கள்!

101ஆம் இலக்க பேரூந்தில்தான் தேனுகா அவனை முதன்முதலில் சந்தித்தாள். மொரட்டுவையிலிருந்து கோட்டைநோக்கி வேகமாக பயணித்துக்கொண்டிருந்த அந்த ‘டோக்யோ சீமென்ட்” விளம்பரத்தால் மூடப்பட்டிருந்த அந்த பேரூந்து தெகிவளை சந்தியில் நிறுத்தப்பட்டது. காதுகளில் மாட்டப்பட்டிருந்த அந்த வெள்ளைநிற ஆப்பிள் கெட்செட்டோடு உள்ளே நுளைந்த காண்டீபன் அவள் இருக்கையின் பாதியை நிரப்புவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் அது தற்செயலாகவே நடந்தது. மூன்றே மீட்டர் இடைவெளியில் அமர்ந்திருக்கும் தேனுகாவை அவளுடைய மஞ்சள் துப்பட்டா அவன் கைகளை தடவும் வரை காண்டீபன் அவளைத் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஜன்னல் ஊடாக மரின் ட்ரைவ் பக்கத்திலிருந்து வந்து பேரூந்து இருக்கைகளை நிரப்பும் அந்த கடல்காற்றின் வேலை அது. ‘சொரி..’ என அந்த துப்பாட்டாவை அவன் கைகளிலிருந்து வேகமாக அள்ளி அகற்றிக்கொண்ட அவளின் கண்களில் இருந்த அத்தனை கோவமும் அவன் மீதானதல்ல. அநாதரவாய் ஓர் அநாமதேய ஆணிடம் அலைந்த அந்த துப்பட்டா மீதானது. அதை தங்கள் கைளுக்குள் அடக்கி வைத்திருக்கும் அடக்குமுறையில் இந்த பேரூந்துகளில் பயணம் செய்யும் அதிக பெண்கள் தோற்றுப்போகிறார்கள். அந்த அநாமதேய துப்பாட்டா ஸ்பரிசங்களில் தொடுகையடையும் துப்பட்டா பார்த்திராத டவுசர் ஆண்கள் இந்த பேரூந்து பயணங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
தேனுகாவின் சொந்த இடம் வவுனியாவின் வடக்கில் இருக்கும் ஒரு தனிப்பாதைக் கிராமம். வயல்களும் ஆடுமாடுகளும் அந்த மக்களுக்கான வயிற்றுப்பசியை போக்கிக்கொள்கின்றன. தேனுகாவின் அப்பாவின் சொத்துவிபரம் ஒரு ஏக்கர் வயல் நிலத்தையும் ஐந்து பசுமாடுகளையும் தாண்டாது. தேனுகாவை வந்தடையும் ஒவ்வொரு ரூபாயும் அந்த ஐந்து பசுமாடுகள் வாரிவழங்கும் பாலினால் சேர்க்கப்பட்டவை. அவ்வப்போது அந்த நிலம் அள்ளிக்கொடுக்கும் பணத்தில் தேனுகாவிற்கு வருடத்திற்கு இரண்டு தடவைகள் புது சுடிதார் கிடைக்கும். அதிகம் ஆசைப்பட்டாலும் நிமிர முடியாத மட்டுப்படுத்தப்பட்ட குடும்பப்பொருளாதாரம் அவளுடையது.
மறுநாள், அதே 101 ஆம் இலக்க பேரூந்துதான். அதே நேரம். அதே காலிவீதியில் நகரும் டோக்யோ சீமென்ட் விளம்பரம். அதே தெகிவளை நிறுத்தம். நேற்றைய காண்டீபன் இன்றும் வருவான் என அவள் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?. தான்தோன்றித்தனமான தன் சில்லறை வேலைகளைக் காலம் எப்பொழுது காட்டும் என்பதை யாரும் அறிந்திருக்கமுடியாது. அத்தோடு அவனை அவள் ஞாபகம் வைத்திருக்கவேண்டிய தேவையும் அவளுக்கு இருந்திருக்கவில்லை. தெகிவளை நிறுத்தத்திலிருந்து அந்த பேரூந்து தனது முதல் கியரில் எகிறிப்பாய்கிறது. காண்டீபன் எதிரில் சனநெரிசலினுள் அங்கலாய்த்துக்கொண்டிருந்தான். இம்முறை அவள் தன் துப்பட்டாவை கைக்குள் அடக்கிவைத்துக்கொள்ளும் வித்தையை கற்றுக்கொண்டுவிட்டாள். அவனோ அந்த துப்பட்டா தீண்டமுடியா தூரத்தில் காதிற்குள் விழும் இளையராவில் இலயித்துக்கொண்டிருக்கவேண்டும். சிலம்பனும் இல்லாத அல்லது சிலம்பனை காட்டமுடியாததுமான சனநெரிசல் அது. தேனுகாவிற்கு அவனை அடிக்கடி பார்க்கவேண்டும் என்கிற ஏதோ தேவை கடந்த தவிப்பு கண்கள் பூராகவும் வியாபித்திருந்தது. காண்டீபன் அருகில் வரவேண்டும் என்கின்ற ஒரு அபத்தமான ஆவலின் ஆர்ப்பரிப்பு அது. அது கைகூடுவதற்குள் வெள்ளவத்தை ஆர்பிக்கோ நிறுத்தம் வந்து சேர்ந்தது. தேனுகாவின் அருகிலிருந்த அந்த வயோதிபர் எழுந்து போக அந்த பாதி இருக்கையை காண்டீபன் நிரப்பிக்கொண்டான்.
காண்டீபன் யாழப்பாணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன். ஐபொட்டில் ஹை குவாலிட்டி ஒலிநயத்தில் இளையராஜாவை அனுபவிக்க கிடைத்த அதிஷ்டசாலி. ஐஓஎஸ் இயங்குபொருளுடன் படங்களை முகப்புத்தகத்தில் பதிவேற்றும் வரம்பெற்றவன். பணம் என்பது பிரச்சனையல்ல என்கின்ற சூழலில் பிறந்து பட்டப்படிப்பிற்காக கொழும்பில் வாழ்க்கையை ஓட்டும் ஒரு ‘வெள்ளவத்தை’ இளைஞன். எக்சாம் பீசோடு பிட்சா சாப்பிடுவதற்கும் சேர்த்து வெள்ளவத்தை கொமர்சியல் வங்கியில் வந்துவிழும் தன் அண்ணனுடைய யூரோக்களால் அர்ச்சிக்கப்பட்டவன். தனியார் உயர் கல்லூரி ஒன்றில் தான்விரும்பிய ஒரு பட்டப்படிப்பை ஆரம்பித்து காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தான். கொழும்பில் படிக்கிறேன் என்கின்ற அந்த ஒரு அந்தஸ்தே ஊரில் அவன் பெற்றோர்களுக்கு தங்கள் சட்டைக் கொலர்களை தூக்கி விட்டுக்கொள்ள போதுமானதாக இருந்தது. அந்த கல்லூரியில் கொடுக்கப்படும் அசைன்மென்டுகளைத் தவிர கொழும்பில் அவனிற்கு எந்தப் பிரச்சினைகளும் இருக்கவில்லை.
மீண்டும் மறுநாள். அதே 101, அதே தெகிவளை, அதே தேனுகா, அதே காண்டீபன். வழமையாக காலிவீதிப்பேரூந்துகளில் பயணிக்கும் ஸ்மார்ட் பையன்களுக்கு ஒரு பேரூந்து பெண்ணை மடக்குவதற்கு இரண்டு நாட்கள் தாராளமானவை. இது காண்டீபனிற்கு மூன்றாம் நாள். பஸ் காலி முகத்திடலை அடைய தேனுகாவும் காண்டீபனும் கைகளைப் பின்னியபடி இறங்கிக்கொள்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். துப்பட்டாவோ இப்பொழுது கேட்டுக்கேள்வியில்லாமல் காண்டீபனின் முகத்தில் பரந்து விரிந்து அவள் பெர்பியூமை அவன் மூக்கிற்குள் அள்ளிப்புதைத்தது. துப்பட்டாக்களில் கலந்து கிடக்கும் அந்த தேவதைவாசம் அபூர்வமானது. பச்லர் ஆண்களின் மூக்கை முக்தியடைய வைப்பது. அடக்குமுறை அரசியலின் அதிகார கதிரையில் இருக்கும் ஆணவக்கெத்தைக் கொடுப்பது. காலிமுகத்திடலில் தனியாய் கிடக்கும் அந்த சீமெந்து பெஞ்சில் உரசியபடி அமர்ந்து துப்பட்டாவோடு அவள் தலையையும் அவன் மடியில் சாய்க்க அவன் பிரபஞ்சத்தின் ஏக்கமோ பிரஞ்சை அடைந்தது. பித்துப்பிடித்த வாசகனின் மடியில் கிடக்கும் பொன்னியின் செல்வன் போல அவள் இதம்கொடுத்தாள்.
‘இந்த காத்து எவ்வளவு இதமா கிடக்கு பார்..?’
‘ம்ம்ம்..’
‘இந்த கடல், அலை, அலையை விரட்டிப்போகும் காத்து.. எவ்வளவு அழகா இருக்கு..?’
‘ம்ம்ம்..’
‘அந்தா… அந்த பட்டத்தோட ஓடுற குட்டிய பாரு.. ஐயோ சூப்பர் இல்ல..?’
‘ம்ம்ம்..’
‘பின்னுக்கு தெரியிற இந்த ட்ரேட் சென்டர், அரைகுறை காபர், மின்னும் தாஜ் சமுத்ரா, பழைமையான ப்யூட்டிபுல் கோல் பேஸ் ஹோட்டல், லையிட்டான இந்த வெளிச்சம்.. ஐ லைக் திஸ் கோல் பேஸ் தேனுகா.’
‘ம்ம்ம்..’
‘என்ன நான் என்டபாட்டில பேசிக்கிட்டு இருக்கன்.. நீ பேசாமல் இருக்கிறாய்?’
‘ம்ம்ம்..’
‘இதுக்கும் ம்ம்ம் தானா? இந்த பொண்ணுங்களே…’
‘என்ன பொண்ணுங்களே..?’
‘இல்ல சும்மா சொன்னன்.. பேசன் ஏதாவது ப்ளீஸ்?’
‘இல்ல.. என்ன உண்மையா லவ் பண்ணுறீங்களா?’
‘வட்?? இது என்ன கேள்வி??’
‘ஓகே.. இல்ல சும்மா கேட்டன்’
‘ஐ லவ் யு சோ மச்.. யு ஆர் சோ ப்யூட்டிபுல்!’
‘அதாலதான் லவ் யு சோ மச்சா??’
‘என்ன கலாய்க்கிறியா தேனு?’
‘இங்க பாருங்க.. வாங்க போகலாம்.. எனக்கு இப்பிடியெல்லாம் ஊர் சுத்தி பழக்கமில்ல.. இதுதான் முதல் தடவ.. யாரும் பாத்துட்டாலும்..’
‘இங்க பாரு.. நாம கொழும்பில இருக்கம்.. நம்ம ஊரில இல்ல.. இங்க நமக்கு தெரிஞ்ச யாரும் இல்ல.. அல்லாட்டி அப்பிடி யாரும் பாத்தாலும் அத பெருசா எடுத்துக்க மாட்டாங்க. ஏன்னா இது கொழும்பு!’
‘நான் இங்க வந்து இப்பதான் மூனு மாசம் ஆகுது.. ஏதோ எனக்கு பயமா இருக்குடா..’
‘நான் இருக்கன் செல்லம்.. எதுக்கும் கவலபடாத..’
‘அப்ப ஐஸ் க்ரீம் வேணும்!’
கொழும்பில் காதலிப்பது என்பது நம்மவரிற்கு கண்களை மூடிக்கொண்டு பால்குடிக்கும் பூனையின் மனநிலை கொண்டது. அது இலகுவான துன்பம். யாரிற்கும் தெரியாது என்கின்ற ஒரு மனத்திமிர் இருவரையும் மூடிக்கொள்ளும். இது பல வகையான வயதுக்கோளாறுகளை அறிவியலாக்கும் ஒரு டிசைன். தேனு-காண்டீ காதல் இதுவரை அந்த காலிவீதி பார்க்காத ஒரு புனிதமான காதல். காலிவீதியின் அனைத்து ஐஸ் க்ரீம் கடைகளையும் சல்லடைபோட்ட காதல். கேஎப்சியை கரைத்துக்குடித்து சுயஇன்பவித்த காதல். மரின் ட்ரைவில் ஏககுதூகலம் கொண்ட காதல் ஜோடி. சவோயில் மினியன்ஸ்களை ஐந்து ஆறு தடவைகள் பார்த்து சில்மிசித்த காதல். என்றோ அந்த 101 கிளப்பிவிட்ட காதலை இப்பொழுது தினம் தினம் இந்த காலி வீதி பெருமையாகப் பார்த்து இரசித்துக்கொண்டிருக்கிறது.
அவளிற்கு அவன், அவனிற்கு அவள் என தங்களை தாங்களே அர்ச்சித்துக்கொண்டார்கள். கண்ணை மூடிக்கொண்டு தங்களுக்கு தானே வரம்கொடுத்துக்கொண்ட கடவுள்கள்தாம். ஒரு மாதம் அந்த காதலின் அழகோவியம் அற்புதமாய் மின்னியது. முப்பது நாட்களில் காலிவீதியில் கையைக்கோர்த்தபடி சஞ்சரிக்காத நாட்கள் இல்லவே இல்லை. காண்டீ கொடுக்கும் அந்த முத்தங்களில் தேனு புது பிரபஞ்சத்திற்கான தன் கதவுகளை அகலத் திறந்துகொண்டாள். வவுனியா அவளிற்கு பேர்மூடாவாகத் தெரிந்தது. கொழும்பு சொர்க வாசலாய் ஜொலித்தது. காதல் கரைபுரண்டு ஓடியதில் அவள் கற்பும் கொழும்பின் ஒதுக்குப்புற ஹொட்டேல் அறைகளில் அடிக்கடி காண்டீபனின் மடிகளில் கொட்டப்பட்டது. காண்டீயின் காதல் முத்தத்தில் தொடங்கி கட்டிலில் முடிந்தது. தேனுவின் காதலோ 101 இல் தொடங்கி கலியாணக் கனவில் போய்நின்றது. காலம் கடந்துபோக அந்த கட்டில் கடந்த காதல் கொஞ்சம் கொஞ்சமாய் தன்மை இழந்து நெருக்கத்தை தூரமாக்கியது. இதற்கு பின்னரான அந்த ஓர் நாளை தேனுவால் எப்படி மறக்க முடியும்?
‘ஹலோ…’
‘ஹலோ…’
‘காண்டீ நிக்கிறாரா?’
‘நீங்கள் யார்?’
‘நான் தேனு!’
‘தேனு எண்டா?’
‘அவர்ட கேர்ல் ப்ரண்ட்!’
‘என்னது? யாருடி நீ?? என்ன வேணும்.. அவர்ட பொண்டாட்டிட்டையே கோல் பண்ணி அவர்ட கேர்ல் ப்ரண்ட் எண்டு சொல்லுவியா?? நாயே.. யாருடி நீ?’
‘என்ன சொல்லுறீங்க??’
‘…… (சென்சர்)… வைடி போன நாயே!’
அன்று தலைசுற்றி கீழே விழுந்த தேனுவை தூக்கியெடுத்து ஒரு பருக்கை தண்ணீர் கொடுக்கக்கூட அவள் அறையில் யாரும் இருக்கவில்லை. கொழும்பிற்கு படிக்க வந்து நான்கு மாதத்தில் இத்தனை அனுபவம் அவளிற்கு. சாப்பிட முடியவில்லை. தாகமும் தூக்கமும் அவளை நெருங்கவுமில்லை. அண்மையில் நடந்துமுடிந்த பரீட்சை பெறுபேறு அவளை இன்னும் உயிரறுத்தது. எத்தனை ஏமாளியாக இருந்துவிட்டேன் என எண்ணியபோது வாழ்க்கைமேல் அப்படியொரு வெறுப்பு உண்டானது. காறி தன் பாதங்களின்மேல் துப்பிக்கொண்டாள். வவுனியாவில் மக்கள் வங்கியிலிட்ட அப்பாவின் வியர்வையில் நனைந்த பணத்தாள்களை வெள்ளவத்தையில் குளிரூட்டப்பட்ட ஏரிஎம் இயந்திரம் அடிக்கடி புது நோட்டுக்களாகத் தள்ளியபோது வராத குற்ற உணர்வு இப்பொழுது அவளை முதல் தடவையாக துரத்த ஆரம்பித்தது. கைகள் பற்றியபடி நீண்ட அந்த காலி வீதி இப்பொழுது காசாவின் கொலைக்களங்களாகத் தெரிந்தது. ஒரு தடவை மட்டுமல்லாமல் பல தடவைகள் அவள் எடுத்த தற்கொலை முடிவை அவள் விதிதான் தடுத்திருக்கவேண்டும். இன்னும் உயிரோடுதான் இருக்கிறாள் என்பது அந்த விதி போட்ட பிச்சையாகக்கூட இருக்கலாம். அவளால் பேச முடிகிறது ஆனால் சிரிப்புத்தான் நிரந்தரமாக தொலைக்கப்பட்டுவிட்டது. பின்னர் கொழும்பையும் படிப்பையும் அந்த 101 பயணங்களையும் நிராகரித்துவிட்டு வவுனியா சென்று சேர்ந்தாள்.
‘கொழும்பு பிடிக்கல அப்பா..’
‘ஏன்மா.. நீதானே போனவாரம் சொன்னாய் கொழும்புதான் நல்லம் எண்டு..’
‘இல்லப்பா, என்னைப்போன்ற ஏமாளிகளுக்கு கொழும்பு நல்லமில்ல!’
‘என்ன பிள்ளை சொல்றா?’
‘இல்லப்பா.. சொர்க்கத்தில இருந்தாலும் முட்டாள்களால அத சரியாக அனுபவிக்க முடியாது. கிராமத்து பொண்ணுங்களுக்கு கொழும்பு ஒரு கண்ணாடி நகரம். ஒரு பயங்கர கண்ணாம்பூச்சி விளையாட்டுப்பா அங்க வாழ்க்க. விவேகமற்ற பொண்ணுங்களுக்கு அது ஒரு கானல்நீர் நிறைஞ்ச சுடுகாடு. பாரதூரம் விளங்காத இளசுகளுக்கு முதல்ல அது ஒரு எக்சல் வேர்ல்ட் மாதிரிப்பா அப்புறம் கடைசில வெறும் அநாகரீக போர்க்ளம். தினம் தினம் நம்மள துரத்தும் ஏமாற்று மனுசங்களுக்கு எதிராக போராடிக்கிட்டு இருக்கணும். மனுசர் பற்றி அறியாத எங்களைப்போன்ற அப்பாவிகளுக்கு அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஏமாற்று உலகம்ப்பா..’
‘ஏன்டி தேவான.. இவள்ட என்ன நடந்தது எண்டு கேளு..?’
‘இல்லப்பா.. இப்பதான் ஏதையும் அறிந்திராத ஒரு கிராமத்து பொண்ணு கொழும்பில எப்பிடி இருக்கணும் எண்டு படிச்சிருக்கன். நான் அதில பாஸ் ஆகிட்டன்ப்பா. இந்த வாரம் மட்டும் இருந்திட்டு அடுத்தவாரம் கொழும்பு போறேன்பா.’
இந்த வாழ்க்கை பற்றிய பாடங்களை கொழும்பு எப்பொழுதும் யாருக்கும் கொடுக்க மறப்பதில்லை. கிராம வாழ்க்கையிலிருந்து நகரத்தை நாடும் ஒவ்வொரு பெண்ணினதும் அடிப்படை கற்றல் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. கொழும்பை மீண்டும் போய்ச்சேர்ந்த தேனுவின் வாழ்க்கை மீண்டுமாய் காலி வீதியில் ஓட ஆரம்பித்தது. ஆனால் இப்பொழுது தனியாக. படிப்பில் ஊற ஆரம்பித்த அவளின் கவனத்தை எந்த ஆணினாலும் திருப்ப முடியவில்லை. துப்பட்டாவை எடுத்து தூரப்போட்டாள். துப்பட்டாவை விலக்கி தன்னைச்சுற்றியதான ஒரு வேலியை சுயகவனத்தால் ஏற்படுத்திக்கொண்டாள். இனி என்னை யாராலும் ஏமாற்ற முடியாது என்கின்ற புத்துணர்ச்சி வரும்பொழுது காலி வீதி அவளிற்கு அழகாக ஜொலித்தது.
மூன்று மாதங்கள் கடந்து மீண்டும் ஒரு நாள். அதே 101. அதே தெகிவளை நிறுத்தம். அதே சனக்கூட்டம். பேரூந்து அங்கிருந்து நகர்ந்து வந்து பம்பலப்பிட்டி ப்ள்ட்ஸ் நிறுத்தத்தில் நிற்கிறது. சன நெரிசல் விலக இரண்டு இருக்கைகளுக்கு அப்பால் காண்டீபன் அமர்ந்திருப்பதைக்கண்டாள். அவனுக்கருகில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். திடீரென வீசிய காற்றில் சடாரென எழுந்த அவள் துப்பட்டா அவன் கைகளை மூட அந்த அப்பாவிப்பெண்ணோ அதை எடுத்துவிட்டு ‘சொரி..’ என்கிறாள். காண்டீபன் அவளைப்பார்த்து காமக்கண்களால் சிரிக்கிறான்.

No comments:

Popular Posts