Friday, August 5, 2016

ஆப்கானிஸ்தான் 01 : வாவ் திருமணங்கள்.

வாழ்க்கையில் அனுபவங்கள் எத்தனை அவசியமானவை என்பதை, உங்களில் பலரைப்போல நானும் நன்கு அறிந்து வைத்திருக்கிறேன். அது ஒரு முழுமையடைதலின் நீட்சியை அள்ளிக்கொடுப்பவை. அனுபவத்தைவிட வேறு ஒரு நல்ல ஆசானை இவ்வுலகத்தில் யாரும் கண்டுகழித்திருக்க வாய்ப்பில்லை. இதை உணராதவர்களால் வாழ்க்கையின் வெற்றியை கண்டடையமுடியாது. அனுபவங்கள் மட்டுமே வாழ்க்கையெனும் மகா பிரபஞ்சத்தின் ஆழுமையறிவை தொட்டுக்காட்டி பாடம் புகட்டுபவை. இவ்வாறான சுவாரஷ்ய அனுபவங்களின் படிப்பினைகளை நாளுக்கு நாள் பட்டறிந்து வளர்பவர்கள் பாக்கியசாலிகள். ஒரு வகையில் நானும்தான்!
2015 ஜனவரி, வெள்ளைக்காடாய், வானுயர்ந்து நிற்கும் அந்த 20’000 அடி காபூல் மலைகளுக்கு நடுவில், பனிவிழும் காற்றை கிழித்துக்கொண்டு வான்பரப்பில் தாளப்பறந்தபடி, தரையிறக்கத்திற்காக தயாராகிக்கொண்டிருக்கிறது அந்த ப்ளை டுபாய் போயிங் விமானம். அதனுள், ஒரு யன்னலோர இருக்கையில் “கடவுளே, கடவுளே..” என உதடுகள் தடுமாறிக்கொண்டிருக்க, அக்கம் பக்கம் பார்த்து முழித்துக்கொண்டிருக்கிறேன் நான். புன்னகைத்தபடி, ஒரு த்ரிலிங் அனுபவத்திற்காக, அந்த விரிந்த கண்களுடன் எனக்கு அருகில் காத்திருக்கும் அந்த வெள்ளைக்காரப்பெண் எனக்குள் ஒருவகை மனத்தைரியத்தை ஊற்றிக்கொண்டிருக்கிறாள். “பொம்பிள்ள புள்ளையே ஆப்கானிஸ்தானில வேல பாக்குறதுக்கு இவ்வளவு சந்தோசமா வருது… நீ எதுக்கு நடுங்கிக்கிட்டு.. வெக்கமா இல்ல.. பீப்??” என எனது சுயத்தை கடிந்துகொண்ட மூளையின் பரிகாசத்தில் எனது தோள்களை மெதுவாய் தட்டி எழுப்பும்பொழுது “Ladies & Gentlemen, welcome to Kabul intentional airport….” என அந்த ஆங்கில குரல் காதுகளில் வந்து விழ ஆரம்பித்திருந்தது. என் பயத்தை தட்டித் தடவி விழுங்கிக்கொண்டிருந்தேன். மறுபுறம், இந்த தேசம் கொடுக்கப்போகும் விலைமதிப்பற்ற அனுபவத்தை எண்ணி பிரமித்துக்கொண்டிருந்தேன். எனது முதல் அடியை ஆப்கானிஸ்தான் என்கின்ற ஒரு தேசத்தில் கவனமாக எடுத்து வைத்தபொழுது அந்த முதல் ஆப்கான் மனிதன், எனக்கு முன்னால் வந்து “அஸ்ஸலாமுஅலைக்கும்!” என்கிறான். குரலை சரிசெய்துகொண்டு எனது “வணக்கத்தை”, “அலைக்கும் ஸலாம்” என மாற்றிக்கொண்டு எனது ஆப்கான் பயணத்தை அன்று ஆரம்பித்தேன்.
ஆப்கானிஸ்தான் பற்றிய பொதுவான கருத்து (General Perception) என்ன என்பதை இவ்வுலகில் அறியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. இஸ்லாமிய அடிப்படைவாதம், உலக ஏகாதிபத்தியத்தின் அரசியல் தலையீடு, அது ஊக்குவிக்கும் பயங்கரவாதம், பாக்கிஸ்தானின் தந்துரோபாய உள்ளூர் குளப்பம், இவை அனைத்திற்கும் முதுகு கொடுக்கும் தலிபான், அது உருவாக்கும் பயங்கரமான உள்நாட்டு யுத்தம் என எமக்குத்தெரிந்த “ஆப்கானிஸ்தான்” மிகவும் பயங்கரமான ஒரு தேசம். இன்னோரன்ன மூன்றாம் தேசத்து தலையீடுகளுக்குள் சிக்கி தன்னை நாளுக்கு நாள் உருக்குலைத்துக்கொண்டிருக்கும் இந்த 5’000 ஆண்டுகள் பழைமையான ஓர் வரலாற்று முக்கியத்துவமிக்க தேசம் எப்படி நாளுக்கு நாள் உருக்குலைந்துகொண்டு போகிறது என்பதைப்பார்த்தால் இதயம் வெடிக்கிறது.
இவற்றைத்தாண்டி, இங்குவரும் (அமெரிக்கா அல்லாத!) ஒரு வெளிநாட்டவரிற்கு இந்த தேசம் பல அழகான அனுபவங்களை கிடைக்கப்பண்ணுகிறது. இவ்வாறான சில அனுபவங்களை எழுதுவது இன்னுமொரு ஆனந்தமான அனுபவம். அதற்குத்தான் இப்பொழுது நான் ஆசைப்படுகிறேன். வாருங்கள் அனுபவிக்கலாம்!!
ஆப்கானிஸ்தானின் வாவ் திருமணங்கள்
காபூல் நகரத்தை முதன் முறையாக வந்தடையும் ஒருவரை பிரதானமாக இரண்டு விடயங்கள் வரவேற்று, தனது முதல் ஆச்சரியத்தைக் அள்ளிக்கொடுக்கும். ஒன்று பாதுகாப்பு படையினரின் ஏகப்பட்ட பிரசன்னமும் அவர்களை சூழ இருக்கும் பாதுகாப்பு கடவைகள், கனகரக ஆயுத தளபாடங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சோதனைச் சாவடிகள். இரண்டாவதாக காபூலின் பிரதான வீதிகளின் இரு மருங்குகளையும் நிறைத்திருக்கும் அந்த பிரமாண்டமான, எங்கும் கலர் கலர் மின்வெளிச்சங்களை பாய்ச்சியபடி, உயரமாகவும், நீண்டு அகன்றும், கலர் கலர் கண்ணாடி சுவர்களால் போர்த்தியிருக்கும் அந்த அழகான பெரிய கட்டடங்கள். “வாவ், what are those massive buildings?” என என்னை விமான நிலையத்திலிருந்து அழைத்துப்போக வந்திருந்த சாரதியிடம் வாயைப் பிழந்தபடி, கேட்டபோதுதான் அந்த ஆச்சரியம் புரிந்தது.
“Those are wedding halls sir!”
“Whatttt????”
ஆப்கானிஸ்தானின் திருமணங்கள் மிகவும் ஆடம்பரமானவை. விலையுயர்ந்தவை. Marriages are very expensive in Afghanistan. இங்கு நடக்கும் திருமணங்களில் அதிகமானவை இவ்வாறான பிரமாண்ட திருமண மண்டபங்களிலேயே நடக்கின்றன. அதற்கு காரணம் இருக்கிறது. என்னோடு வேலைபார்க்கும் ஒரு ஆப்கான் நண்பர் தன்னுடைய திருமண நிகழ்வுபற்றிய உரையாடலை ஆரம்பித்தபோது எனது வாயை ஆவெனத் திறந்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன். “என்னுடைய திருமணத்திற்கு 2’500 நபர்களை அழைத்திருந்தோம். இறுதியில் அது 3’000 ஆக இருந்தது!” என சர்வ சாதாரணமாக சொல்லிமுடித்தார் அந்த மனுசன். “ஓ கோட்!”. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், 3000 பேர் கலந்துகொள்ளும் ஒரு திருமணம். நம் வாழ்க்கையில் எங்காவது கண்டிருக்கிறோமா? ஆப்கானிஸ்தானில் திருமணம் என்பது அவர்களுக்கு மிகவும் முக்கியமான சமூக அந்தஸ்தைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு பிரமாண்ட விழா. இதற்காக பணத்தை வாரி வாரி இறைக்க அவர்கள் ஒருபோதும் தயங்குவதில்லை. இந்த நண்பரின் திருமணத்தில், விருந்திற்கு மட்டும் 12’000 அமெரிக்க டாலர்களை செலவுசெய்ததாக சொன்னார். எனக்கு பக் என்றிருந்தது. இதைத்தவிர, திருமணப்பெண்ணிற்குரிய நகை, ஆபரணங்கள், பெண்கள் வீட்டிற்கு செய்யும் சீர்வரிசை என இதர செலவுகளும் உண்டு. எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக கூட்டிப்பார்க்கையில் செலவு கிட்டத்தட்ட 20’000 டாலரக்ளை எட்டிப்பிடித்தது என்றார் சர்வசாதாரணமாக. “You are kidding me????” என்னால் நம்ப முடியவில்லை.
இதேபோல எனது இன்னுமொரு ஆப்கான் நண்பர் ஒருவருடைய நண்பரின் திருமணத்திற்கு அவருடைய ஊர் முழுவதும் ஒலிபெருக்கியில் திருமண அழைப்பு விடுத்ததாகவும் அறிந்தேன். இவ்வளவு பணம் எங்கிருந்து இவர்களுக்கு வருகிறது என்கின்ற எனது கேள்விக்கு பல விடைகள் வந்துவிழுந்தன. அதிகமாக நகரப்புறங்களில் வாழும் பணக்காறர்கள் war loads உடன் சம்மந்தப்பட்டவர்களாகவோ அல்லது ஓபியம் போதைப்பொருள் முதலாளிகளுடன் தொடர்புடையவர்களாவோ அல்லது ஐரோப்பிய remittance வசதி உள்ளவர்களாகவோ இருக்கிறார்கள். ஆனாலும் நேர்மையான பணக்காரர்களும் இல்லாமல் இல்லை. இது எப்படி இருப்பினும் இதே ஆப்கானிஸ்தானின் கிராமப்புறங்களில் 90% ற்கும் அதிகமானவர்கள் ஒரு நேர சாப்பாட்டிற்குக்கூட சிங்கி அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களால் அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஐந்து ரொட்டிகளை மட்டுமே பணம்கொடுத்து வாங்க முடிகிறது. அவர்கள்தான் ஆப்கானிஸ்தானின் சபிக்கப்பட்ட குடிகள். பாவம்.
இப்படி அசாதாரணமான ஆப்கான் திருமணங்கள் எனது கவனத்தை அதிகம் ஈர்த்தவை. கந்தகார் போன்ற அதிக இஸ்லாமிய பண்பாடும், மதத்துவ அடிப்படைவாதமும் கொண்ட பிரதேசங்களின் திருமண வைபவ முறைமைகள் இன்னும் ஆச்சரியத்தை வரவழைப்பன. உதாரணமாக அதிகமான ஆண்களிற்கு திருமணம் முடித்து தங்கள் முதல் இரவிலேலே தங்கள் மனைவியை முதல் தடவையாக பார்க்கக்கிடைக்கிறது. திருமண நாள் முழுவதும் தனக்கருகில் நின்றுகொண்டிருக்கும் தனது மனைவியானவளின் கண்கள், மூக்கு, கன்னங்கள், உதடு ஏன் வெள்ளையா கறுப்பா, அழகா அழகில்லையா என்பதைக்கூட தெரிந்துகொள்ள முடியாமல் அன்றைய இரவு வரை காத்திருக்கும் அந்த ஆண்களின் மனநிலையை எண்ணிப்பார்த்தால் தலை விறைக்கிறது. 95% மான திருமணங்கள் குறித்த ஆண்களின் தாயினாலேயே பார்த்து, பேசி தீர்மானிக்கப்படுகிறது. குறித்த ஆண், திருமணத்திற்கு முன்னர் அந்த பெண்ணை பார்ப்பதையோ, அவருடன் பேசுவதையோ, ஏன் அவருடைய புகைப்படத்தை பார்ப்பதைக்கூட அந்த சமூகம் கண்டிப்பாக தடைசெய்கிறது. அவை அங்கு மிக முக்கியமான சமூகத்தவறுகளாகக் கொள்ளப்படுகிறது. அத்தோடு இவை குறித்த குடும்பத்திற்கு வெட்கக்கேட்டையும், சமூக இழிநிலையையும் தோற்றுவிக்கும் என நம்புகிறார்கள்.
இதேபோல ஒரு திருமணணத்திற்கான சகல செலவுகளையும் ஆண் குடும்பத்தினரே பார்த்துக்கொள்ள வேண்டும். அதிலும் திருமணப்பெண்ணிற்குரிய ஆடைகள் (சகல ஆடைகளும்), அவளுக்குரிய தங்க ஆபரணங்கள், அவளுடைய தந்தைக்கு முறைப்படி கொடுக்கும் சீர்வரிசை போன்றவற்றை ஆண்களே செய்யவேண்டும். தனது மனைவியிற்காக எத்தனை விலைகொடுத்தோம் என்பதை ஒவ்வொரு ஆண்களும் இறுதியில் அறிந்து பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். அதேபோல அந்த திருமணத்தினதும் மணப்பெண்ணின் இதர தேவைகளின் பொருட்டும் செலவு செய்யும் பணத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க தங்களின் சமூக அந்தஸ்தும் அதிகரிக்கிறது என நம்புகிறார்கள். இப்படி அதிகமான விலை கொடுப்பதன் மூலம் பெண்களின் திருமண கேள்வி உச்சத்தில் இருப்பதாக எண்ணிக்கொண்டாலும் திருமணத்தின் பின் அப்பெண்கள் எப்படி நடாத்தப்படுகிறார்கள் என்பது நமக்குள் ஒரு முரண் நிலையை உண்டுபண்ணுகிறது.
இங்கு அழகான பெண்கள் அதிகமான கேள்வியைக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அழகான பெண்கள் அதிஷ்டசாலிகள். இவர்களுடைய கேள்வி எப்பொழுதும் உச்சத்திலேயே இருக்கும். இவர்களுடைய தந்தை அதிகமான பணத்திற்கு உரித்துடையர். 25 வயதிற்குள் இந்த பெண்கள் கரைசேர்ந்துவிடுகிறார்கள். மறுபுறம், அழகற்ற பெண்களின் நிலையை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். இவர்களில் பலர் 35 ஐத் தாண்டியும் தன் ஆடவனிற்காக வீட்டின் அடுப்படியில் நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கே அழகான பெண் பிள்ளைகள் வாய்க்கப்பெற்ற தந்தைகள் மட்டும்தான் அதிஷ்டசாலிகள். அதிகமாக சம்பாதிக்க முடியும்.
”சார், எனக்கு ஐந்து பெண் பிள்ளைகள்.. அதுவும் அம்மா போல ஐந்தும் அழகானதுகள். சீக்கிரம் நான் பெரிய பணக்காரன் ஆகிடுவன்..!” என என்னிடம் ஒரு நண்பர் சொல்லிச் சிரித்தபோது எனக்கு பதிலிற்கு எதுவும் வந்து தொலையவில்லை. “ம்ம்ம்… lucky you!” என நினைத்தபடி அவரைப்பார்த்து சிரித்துக்கொண்டேன்.
இப்படி பிரமாண்டமான திருமண மண்டபங்களும் எக்ஸ்பென்சிவ் திருமணங்களும் இல்லாத நகரங்களை ஆப்கானிஸ்தானில் பார்க்க முடியாது. நகர்ப்புறங்களில் திருமணம் என்கின்ற ஒரு நிகழ்விற்கு அவர்களால் கொடுக்கப்படும் விலை கிராமப்புறங்களில் ஒரு சந்ததியின் ஒட்டுமொத்த பரிபாலனத்திற்கே போதுமானதாக இருக்கிறது. மிகப்பெரிய பணக்காறர்கள் வாழும் அதே கிராமத்தில் உணவிற்கு வழியில்லாமல் திண்டாடும் ஏழைகளை பார்க்கும்போது வறுமையான ஆப்கானிஸ்தான் பற்றிய நமது மனக்கணக்கு பிழைக்கிறது. எப்படியோ ஜேசுநாதர் சொன்னதைப்போல இங்கு “உள்ளவனுக்கு இன்னும் கொடுக்கப்படுகிறது, இல்லாதவனிடமிருந்து உள்ளதும் பிடுங்கி எடுக்கப்படுகிறது”.
திருமண விடயத்தில், இளம் ஆண்கள் தங்கள் அழகிய தேவதைக்காக இலட்சங்களோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதிகமான தந்தைகள் அந்த இலட்சங்களை குறிவைத்து தங்கள் பெண் பிள்ளைகளை அழகாக வளர்க்கிறார்கள். இதற்கு அப்பால், அந்த பிரமாண்ட திருமண மண்டப முதலைகள் தங்கள் அகன்ற பணவாயை திறந்தபடி ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னர் பெண்களுக்கு இருக்கும் அந்த உச்ச கேள்வியும், பெறுமதியும் திருமணம் முடித்த பின்னரும் ஆயுள் வரை அவர்களுக்கு இருக்கவேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
.
இன்னும் கனக்க இருக்கு.. தொடர்ந்து விசுக்கலாம்…

No comments:

Popular Posts