Tuesday, June 23, 2015

ரோஹிங்யாக்கள் என்னும் மனிதர்கள்!
"ரோஹிங்யா” இன்றெல்லாம் இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி நாம் கடந்துவரவேண்டிய ஒரு சொல். ஜீரணிக்கமுடியாத கொடூர புகைப்படங்களோடு பகிரப்படும் செய்திகள் சமூக வலைத்தளங்கள் முழுவதையும் இரத்தத்தால் நிரப்பியிருக்கிறது. இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் பற்றி சரியான தெளிவின்மையும் அறியாமையும் இன்னும் இன்னும் இந்த தீவிர சமூகவலைத்தள பகிர்வுகளுக்கும் இனத்துவேச வார்த்தைகளுக்கும் வழிகோலுகின்றன. இதைப்பற்றி கொஞ்சம் அலசவேண்டும் என காத்திருந்த எனக்கு இன்று நேரம் வழிவிட்டுக்கொடுத்திருக்கிறது.
முதலில் ரோஹிங்யா எனப்படும் முஸ்லிம்கள் யார் என்பதை அவர்களுக்காக குரல் கொடுக்கும் அனைவரும் தெரிந்திருத்தல் அவசியம். அது ஒரு நீண்ட கதை. இப்பொழுது மியன்மார் உலகின் இனஅழிப்பில் ஈடுபடும் மனிதாபிமானமற்ற நாடுகளின் பட்டியலில் முதல் இடங்களில் இருக்கிறது.
மியன்மாரின் தெற்குப்பகுதியில் இருக்கிறது ரக்கைன் (Rakhine) எனப்படுகின்ற ஒரு மாநிலம். இங்கு ரக்கைன் எனப்படும் இனத்தவர்கள் அதிகமாகவும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் வாழ்கிறார்கள். ரக்கைன் எனப்படும் இனத்தவர்கள் பொளத்தமதத்தை பின்பற்றுபவர்கள். இங்கு இருக்கும் முஸ்லிம்கள் சுமார் 15 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து (பிரதானமாக பாக்கிஸ்தான் – அப்பொழுது வங்காளதேசம் இருந்திருக்கவில்லை) மியன்மாரிற்கு அதுவும் ரக்கைன் மாநிலத்திற்கு தங்கள் வணிகத்திற்காக வந்து குடியேறியவர்களாவர். இவர்கள் பிரதானமாக பங்காலி (Bangali) மொழியையே தங்கள் மொழியாக பேசுகிறார்கள் (இவர்கள் பங்களதேஷ் நாட்டிற்குரியவர்கள் என மியன்மார் மக்கள் குற்றம்சாட்டுவதற்கு இதுவும் ஒரு காரணம்). மியன்மாரின் “பர்மீஸ்” இவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் பங்காலியே இவர்கள் சொந்த மொழியாக இருந்ததுவருகிறது. இந்த முஸ்லிம்கள்தான் ரோஹிங்யா என்கின்ற விசேட குறிப்பெயரில் அழைக்கப்படுகின்றனர்.
ஆரம்ப காலம் தொட்டே இந்த ரோஹிங்யாக்கள் மியன்மாரில் ஏனைய இனத்தவரிற்கு சமமாக நடாத்தப்படவில்லை. இவர்கள் மியன்மாரிற்கு உரியவர்கள் அல்ல என்கின்ற விவாதமும், அவர்களுக்கு எதிரான பெரும்பான்மையின் அடக்குமுறையும் விசேடமாக 19 நூற்றாண்டிலேயே வலுப்பெற்றிருக்கிறது. 1982 ஆம் ஆண்டு மியன்மார் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு பிரஜா உரிமைச்சட்டம் இந்த முஸ்லிம்கள் மியன்மாரின் பிரஜைகள் அல்ல என்பதையும் இவர்களை அரசாங்க பணிகளில் அமர்த்தப்படமுடியாது என்பதையும் உறுதிசெய்தது. இதற்கு பெரும்பான்மை கடும்போக்கு அரசியல், இராணுவ கட்டமைப்புக்கள் அழுத்தம்கொடுத்திருந்தன. ஆரம்ப காலம் தொட்டு இந்த அடக்குமுறை முஸ்லிம்கள் மீது பெரும்பான்மையினரால் திணிக்கப்பட்டு வந்தாலும் 2012 இல் நடந்த அந்த சம்பவம்தான் அடக்குமுறையை மிகப்பெரிய நாடுதழுவிய வன்முறையாக மாற்றியது.
சரி, இப்பொழுது நாம் பேசும் இந்த ரோஹிங்யாக்களுக்கு எதிரான அந்த பாரிய வன்முறை எப்படி மியன்மாரில் ஆரம்பித்தது?
28 மே 2012. திடா த்வே என்கின்ற ஒரு ரக்கைன் (பௌத்த) இளம் பெண் அருகிலுள்ள கிராமம் ஒன்றிற்குச் சென்று வீடு திரும்பும் வழியில் ஒரு முஸ்லிம் ஆண் கும்பலினால் வன்புணரப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்படுகிறாள். இதற்காக கொதித்தெழுந்த ரக்கைன் பௌத்தர்கள் 3, ஜூன் 2012 அன்று முஸ்லிம்கள் பயணித்த ஒரு பஸ்வண்டியை மறித்து அதிலிருந்த மௌலவி உட்பட 9 முஸ்லிம்களை வெட்டிக்கொலை செய்கிறார்கள். பழிக்கு பழி! இந்த இரண்டு சம்பவங்களுக்குப்பின்னரான தொடர்ச்சியான பழிவாங்கல் வன்முறைகள், அதே வருட ஆகஸ்ட் மாதத்திற்குள் 100 ற்கும் அதிகமானவர்கள் இறக்கவும், 90’000 முஸ்லிம்கள் முகாம்களில் தஞ்சமடையுவும், 2’530 வீடுகள் தீக்கிரையாகவும் காரணமாக அமைந்தது. இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்களே அதிகமானவர்கள் என்றாலும் ரக்கைன் பௌத்தர்களும் கணிசமான அளவு அடங்குகின்றனர். இந்த வன்முறையில் முஸ்லிம் மற்றும் ரக்கைன் மக்களின் வீடுகள்இ தொழில் நிறுவனங்கள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அதிகமான முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் (முஸ்லிம்களால் 100 ற்கும் மேற்பட்ட ரக்கைன் மக்களும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்).
இது வெறும் ஆரம்பம் மட்டுமே. இதைத்தொடர்ந்து ஜூன், ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் இன்னும் மிகப்பெரிய வன்முறைகள் வெடித்தன. இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த வன்முறைகள் இப்பொழுது ஒப்பீட்டளவில் குறைந்திருப்பதற்கு 90ம% ஆன முஸ்லிம்கள் இப்பொழுது அடைக்கப்பட்ட முகாம்களில் இருப்பது காரணம் எனலாம். இந்த முகாம்கள் கடினமான இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனாலும் இரண்டு இனத்திற்கும் இடையிலான கோவம், ஆவேசம் இன்னும் ஒரு துளிகூட குறைந்ததாக இல்லை. இப்பொழுது முகாம்களில் ஒடுக்கப்பட்ட இந்த ரோஹிங்யாக்களுக்கு இருக்கும் ஒரே வழி மியன்மாரை விட்டு வெளியேறி வேறொரு நாட்டில் தஞ்சம் புகுதல்தான்.
இதுதான் இந்த ரோஹிங்யாக்களினதும் மியன்மார் வன்முறையினதும் சுருக்கமான பின்னணி. இனி இன்றைய நிலவரத்திற்கு வரலாம். முதலில் இப்பொழுதெல்லாம் முகப்புத்தகத்திலோ சில இணையத்தளங்களிலோ காட்டப்படுவதுபோல மீண்டும் 2012 போன்ற பாரிய வன்முறை மீண்டும் அங்கு வெடிக்கவில்லை. மியன்மாரிலிருந்து முஸ்லிம்களுடன் புறப்பட்ட நான்கு படகுகளை மலேசியா, பங்களதேஷ், தாய்லாந்து போன்ற நாடுகள் ஏற்க மறுக்க அவர்கள் கடலில் உணவின்றி தத்தளித்துக்கொண்டிருந்த உண்மைச் செய்தியோடு இன்று சொல்லப்படும் கொடூர வன்முறை பற்றிய சோடிக்கப்பட்ட கதை ஆரம்பித்தது. இந்த நான்கு படகுகள் பற்றிய கதையை கொஞ்சம் திரிவுபடுத்தி உசுப்பேற்றிவிட்ட சில இணையத்தளங்களை மேற்கொண்டு கூகுளில் கிடைத்த பழைய புகைப்படங்களை (2012) பிரசுரித்து முகப்புத்தக போராளிகள் இந்த கதையை இல்லாததுபோல ஒரு இன்டென்சாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். இன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது போன்ற எந்த வன்முறைகளைப் பற்றியும் எந்த உலக செய்தி நிறுவனங்களோ அல்லது மனிதாபிமான அமைப்புக்களோ உறுதிசெய்யவில்லை. ஆனால் வழமைபோன்று சிறு சிறு சம்பவங்கள் அங்கு தொடர்ச்சியாக நடைபெற்றிருக்கலாம். ஆனால் முகப்புத்தகத்தில் பகிரப்படும் படங்கள் இன்றை நிலையை பிரதிபலிப்பன அல்ல. அவற்றில் அதிகமானவை 2012 ஆம் ஆண்டு வன்முறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இன்னும் சில வேறு நாடுகளில் வேறு வேறு சம்பவங்களில் எடுக்கப்பட்டவை. இருந்தும் மூன்று ஆண்டுகள் கழித்தே நம் போராளிகளிற்கு அந்த புகைப்படங்கள் கண்ணில் பட்டிருக்கிறது.
இந்த வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட இரு சமூகத்தையும் அவர்கள் அனுபவித்த சித்திரவதைகளையும் நான் அறிந்திருக்கிறேன். வீடுகளை இழந்து அகதிகளாக்கப்பட்ட ரக்கைன் மற்றும் ரோஹிங்யா மக்களுக்காக பணியாற்றியிருக்கிறேன். அந்தவகையில் அவர்கள் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் வார்த்தைகளால் விபரிக்கமுடியாது. மூடப்பட்ட முகாம்களில் முடக்கப்பட்ட இவர்களை வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களே உயிர்வாழப்பண்ணுகிறார்கள். இல்லையெனில் இங்கிருந்து தப்பி படகுகள் மூலம் வேறு நாடுகளில் தஞ்சமடையவேண்டும். அதுவும் உலகில் இத்தனை இஸ்லாமிய பேரரசுகள் இருந்தும் அவர்களை யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. மார்க்கத்திற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கும் இந்த பேரரசுகள் தங்கள் சகோதர சகோதரிகள் மீதான மனிதாபிமானத்தை காட்ட மறுக்கின்றனர். மியன்மார் இவர்களை வெளியேற்றுகிறது என கர்ச்சிக்கும் இந்த இஸ்லாமிய நாடுகள் தங்கள் மக்களை தாங்கள் அரவணைத்தால் என்ன என்கின்ற நியாயத்தை மறந்துபோகின்றனர். ஐஸ்ஐஸ் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக பண உதவி செய்யும் முஸ்லிம் நாடுகள் என்னவகையான இதயத்தோடு இந்த ரோஹிங்யாக்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று புரியவில்லை?
இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். இந்த மியன்மாரின் ரோஹிங்யா பிரச்சனை இலங்கையில் என்ன வகையான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது? ரோஹிங்யாக்களுக்காக நாங்கள் இலங்கையிலிருந்து கொடுக்கும் ஆதரவு இவ்வாறான ஒரு பௌத்த-முஸ்லிம் முறுகலை இலங்கைக்குள் ஏற்படுத்தாத வண்ணம் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான நிலைப்பாட்டை நாங்கள் மத விரோதமாக பொதுவெளியில் பேசுகிறபொழுது மிகவும் அவதானத்துடன் பேசுதல் வேண்டும். நாங்கள் மியன்மாரை தவிர்த்து பௌத்தர்கள் என வெளிப்படுத்தும் ஆக்ரோசமான கருத்துக்களும் அறிக்கைகளும் இலங்கையிலுள்ள பௌத்தர்களையும் கடுமையாகப்பாதிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. விராத்தின் (மியன்மார் மத வன்முறைகளை ஊக்கப்படுத்தும் பௌத்த பிக்கு) படத்துடன் “பௌத்த மத தீவிரவாதத்தின் முகம்” என கப்ஷன் போட்டு டைம்ஸ் பத்திரிகை தனது அட்டைப்படத்தை பிரசுரித்தபோது அத்தனை பௌத்த நாடுகளும் அந்த பத்திரிகையை பகிஷ்கரிப்பு செய்தது. அதற்கு அவர்கள் என்ன காரணம் சொன்னார்கள் “விராத் ஒட்டுமொத்த பௌத்தத்தையும் பிரதிபலிப்பவரல்ல!” உ்ணமைதான்!
எனவே இலங்கை என்னும் பல் மத சகோதரர்கள் வாழும் ஒரு நாட்டில் மியன்மாரிற்கெதிரான கோஷத்தை கொஞ்சம் நிதானமாகவும் பக்குவமாகவும் வெளிப்படுத்தல் அவசியம். அல்லாவிடில், அது இன்னுமொரு உள்நாட்டு பௌத்த-முஸ்லிம் முறுகலை இங்கு ஏற்படுத்தலாம். அதற்கான அத்தனை விலையையும் நாமே கொடுக்கவேண்டி வரும்.
ரோஹிங்யா முஸ்லிம்கள் உலகத்தின் மிகவும் கொடூரமாக ஒடுக்கப்பட்ட இனங்களில் ஒன்று. இது ஒட்டுமொத்த உலகத்திற்குமே அவமானம். இதற்கு ஏனைய நாடுகள் விடும் வெறும் அறிக்கைகளும் கண்டனங்களும் எந்த தீர்வையும் கொடுக்கப்போவதில்லை. மியன்மார் தவிர்ந்த ஒரு நாடு எப்பொழுது இந்த ரோஹிங்யாக்களை ஏற்று குடியுரிமை வழங்க முன்வருகிறதோ அப்பொழுதுதான் இந்த பிரச்சினை முடிவிற்கு வரும். இதைத்தவிர வேறு எந்தவிதமான நடவடிக்கைகளும் இந்த ரோஹிங்யாக்களுக்கு தேவையான, சரியான, பாதுகாப்பான, நிரந்தரமான ஒரு தீர்வைக் கொடுக்கமுடியாது.
இது மனிதர்களுக்கு இடையிலான வன்முறை. இரு மதங்களுக்கிடையிலான வன்முறை அல்ல.


Popular Posts