Wednesday, August 20, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 21சிறுவர்கள் என்றால் உங்களைபோல எனக்கும் ரொம்பவும் பிடிக்கும். அவர்கள் ஒவ்வொரு அசைவிலும், நெளிதலிலும் ஏன் பார்வையிலும் அப்படியொரு கலைரசம் கொட்டிக்கிடக்கும். இரசிக்கத்தெரிந்த பொறுமைசாலிகளுக்கு குழந்தைகள் என்பது ஒரு சொப்பனம்.  அவர்கள் குறும்புத்தனங்களில் நம்மையே மறந்து தொலைந்துபோகும் அந்த தருணங்களை உலகில் வேறெங்கிலும், எதிலும் பெற முடிவதில்லை. அதிலும் செல்லமாக அவர்களை கோவப்படுத்தி, கடுப்பாக்கி, சண்டைபோடுவதில் கிடைக்கும் அந்த அழகிய சந்தோசம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

நான் வவுனியாவில் இருந்த காலகட்டத்தில், அங்கு வழமையாக நான் சென்றுவரும் இடங்களுள் இந்த சிறுவர் இல்லமும் ஒன்று. வவுனியாவில் எனக்கு முகவும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு என்றால் அது இங்கு அடிக்கடி சென்று அந்த சிறுவர்களுடன் நேரத்தை செலவிடுவதுதான். ஒவ்வொரு முறை அந்த சிறுவர் இல்லத்திற்கு சென்று வரும் பொழுதும் எனக்கான முழு மன அமைதி நிறைவாய் கிடைத்தருளும். வாழ்க்கை பற்றி ஒரு ஞானம் பிறக்கும். வாழ்க்கை பற்றியதான முறைப்பாடுகளிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தோன்றும். இந்த உலகத்திலேயே உண்மையான மகிழ்ச்சி, மன அமைதிக்கான மிகச்சரியான இடம் இந்த சிறுவர் இல்லங்கள்தான் என்று வெளிப்படும். அதை நான் முழுமையாக அனுபவித்திருக்கிறேன். இப்பொழுதுகூட அந்த குட்டீஸை அடிக்கடி நினைத்துக்கொள்வேன். நான் வவுனியாவில் அதிகம் மிஸ் பண்ணும் விடயங்களில் இதுவும் ஒன்று.

இந்த சிறுவர் இல்லத்தை ஒரு கிறிஸ்தவ குழுமத்தைச்சேர்ந்த கன்னியாஸ்திரிகள் நடாத்திக்கொண்டு வருகிறார்கள். இங்கிருக்கும் அனைத்து சிறுவர்களும் இறுதிக்கட்ட போரில் தங்கள் பெற்றோரை இழந்தவர்கள் அல்லது தொலைத்தவர்கள். இப்பொழுது இந்த இல்லத்தில் இவர்களுக்கு தேவையான சகல வசதிகளும் இதை நிர்வகிப்பவர்களால் நிறைவாக செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் பாடசாலை செல்கின்றார்கள். அடிப்படை வசதிகள் பற்றி திருப்தியோடு இருக்கிறார்கள். அவர்கள் எதிர்காலத்திற்கு தேவையான ஆங்கிலம், இணைப்பாடவிதான செயற்ப்பாடுகள், ஆன்மீக மற்றும் வாழ்வியல் பயிற்சிகள் என சகலதையும் பெற்றுக்கொடுக்கிறார்கள். அனைத்தும் கிடைத்தும் நிரப்ப முடியாத மிகப்பெரிய வெற்றிடமாக இருந்துகொண்டிருப்பது 'அவர்கள் அம்மா, அப்பா!' மட்டுமே. இதை யாரால்தான் நிவர்த்தி செய்யமுடியும்?

இங்கு இருக்கும் சிறுவர்களில் எனது பெஸ்ட் ப்ரெண்ட் காவியா. 4 வயது நிரம்பிய குறும்புக்கார சுட்டிப்பெண். அவளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும், அதிலும் அவள் குண்டுக்கன்னங்களை அடிக்கடி கிள்ளி அவளை கடுப்பாக்குவதில் எனக்கு அத்தனை ஆனந்தம். அவளுக்கோ அது உச்சக்கட்ட சித்திரவதை என்று தெரிந்தும் என்னால் அதை தவிர்க்க முடிவதில்லை. இந்த குறும்புக்கார என் பெஸ்ட் ப்ரெண்டுக்கு பின்னால் ஒரு வலி நிறைந்த கதை இருக்கிறது. ஆனாலும் அதை அவள் உணர ஆரம்பிக்கும் வயது இன்னும் வரவில்லை. ஓர்நாள் அந்த வயது நிற்சயம் வரும். அன்று அவள் என்ன ஆவாள் என்பதுதான் என்றும் எனது மனதை சஞ்சலப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு ஏக்கம். இப்பொழுது தனது பெற்றோர் பற்றி அவளிற்கு எந்த கவலையும் இல்லை. அந்த கன்னியாஸ்திரிகளின் மடிகளில் குதூகலமாக நாட்களைக் களித்துக்கொண்டிருக்கிறாள்.

இறுதிக்கட்ட போரில் அவள் தந்தையும் சகோதரனும் கொல்லப்பட்டபோது இவள் கைக்குழந்தையாக அவள் தாயின் கைகளில் தொங்கிக்கொண்டிருந்தாள். இறுதியாக அவள் தாய் தன் நெஞ்சறைக்கு அருகில் வந்து விழுந்த ஒரு செல்துகளால் தாக்கப்பட்டு விழுந்த பொழுதும் அவள் மகள் காவியாவை கைவிடவில்லை. ஒருவாறாக தன் காயங்களில் சீழ்வடிய ஆரம்பித்த தறுவாயில்கூட கவனமாக காவியாவை தன்கூடவே அரசாங்க கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு கொண்டுவந்திருந்தாள். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த காலகட்டத்தில் காவியா இந்த கன்னியாஸ்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின்னர் நடந்தவை பற்றி எந்தவித தகவல்களும் எனக்கு தெரியவில்லை, ஒன்றைத்தவிர. அன்றிலிருந்து காவியாவின் தாய் காணாமல் போய்விட்டாள்.

அதன் பின்னர் அந்த கைக்குழந்தை காவியா இந்த கன்னியாஸ்திரிகளாலேயே வளர்க்கப்பட்டாள். காவியாவிற்கு இப்பொழுது 5 அம்மா, அப்பாக்கள். அங்கிருக்கும் அனைத்து கன்னியாஸ்திரிகளும். முப்பதிற்கும் மேற்ப்பட்ட அக்காக்கள். அவள் அறிவு தெளியும் வயதுவரை இந்த சொந்தம் அவளுக்கு எக்கச்சக்கமான சந்தோசங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதுதான் அவள் உலகம் என எண்ணிக்கொண்டிருக்கிறாள். அவள் சுகயீனமுற்றிருந்த ஒரு நாளில் அவளை சென்று பார்த்தேன். அன்றுதான் அவள் குட்டிக் கண்களில் கண்ணீர்த்துளிகளை பார்க்க நேர்ந்தது. அழுதபடி கட்டிலில் அழகிய சிவப்பு நிற போர்வைக்குள் சுருண்டுகொண்டிருந்தாள். என்னைப்பார்த்து இன்னும் இன்னும் அழ எத்தனிக்கையில் நான் என்னை கட்டாயமாக அந்த அறைக்குளிருந்து வெளியே கொண்டுவந்தேன். காவியா அழுவதை பார்ப்பது எத்தனை கொடுமை என்பதை என் கண்களும் அன்று நன்றாகவே அறிந்து வைத்திருந்தன.

இன்னுமொருநாளில் இந்த சம்பவம் நடந்ததாக என்னிடம் அந்த கன்னியாஸ்திரி சொன்னார். அவளைத்தத்தெடுப்பதற்காக ஒரு குடும்பம் அங்கு சென்றிருக்கிறது. அவர்கள் யார்மூலமாகவோ அந்த காவியா பற்றி கேள்விப்பட்டிருக்க வேண்டும். மிகவும் வசதி வாய்ப்பு நிறைந்த குடும்பம் அது. அவர்களிடத்தில் ஏராளமாக கிடந்த பணத்தைப்போல அவர்களிடம் தாராளமாக இதயமும் இருந்திருக்க வேண்டும். காவியாவிற்க்கான ஒரு அழகிய வாழ்க்கை காத்துக்கொண்டிருந்தது. இதை என்னிடத்தில் அந்த சிஸ்டர் சொன்னபோது, என்னுள்ளே அப்படியொரு சந்தோஷம். இப்படியொரு செய்தியை கேட்பதற்கு நான் நீண்ட நாட்கள் காத்துக்கொண்டிருந்தேன் என்றுகூட சொல்லலாம். காவியாவின் வாழ்க்கை பற்றி அந்த கன்னியாஸ்திரிகளுக்கு மட்டுமல்ல எனக்கும் பெரியதொரு எதிர்பார்ப்பு இருந்துகொண்டேதான் இருந்தது. அது, நாளுக்கு நாள் என்னை மனச்சஞ்சலத்துள் தள்ளுவதும் உண்டு.

அவர்கள் வந்திருக்கிறார்கள். அப்பொழுது காவியா தன் செல்ல பண்டா கரடி பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருக்கிறாள். அவர்களுடன் செல்வதற்கு காவியா விரும்பாவிட்டாலும் அழுது அழுது அவர்கள் காரினுள் ஏறிக்கொள்ளும் காவியாவை கண்கலங்க அனுப்பிவைக்கிறார்கள் அந்த கன்னியாஸ்திரிகள். காவியா சென்றுவிட்டாள். காவியா இல்லாத அந்த இல்லத்தை கன்னியாஸ்திரிகளால் மட்டுமல்ல என்னாலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இரண்டு மூன்று நாட்கள் கடந்தது. காவியாவை கூட்டிச்சென்ற அந்த வீட்டாட்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. "சிஸ்டர், காவியா இங்க வந்ததில இருந்து ஒரே அழுகை. எதுவும் சாப்பிட மாட்டேன் என்கிறாள். அவள் அழுகைய யாராலையும் கட்டுப்படுத்த முடியல.. இன்னைக்கு காலைல அவளுக்கு காச்சல் வேற வந்துட்டுது.. ரெண்டுதடவ சத்தியும் எடுத்துட்டாள். இரவிரவா உங்க பெயர சொல்லி சொல்லித்தான் அழுகிறாள், சாரி சிஸ்டர், அவள திரும்ப கொண்டுவந்து விட்டுடுறம்." தொடர்பு துண்டிக்கப்பட்டு சில மணிநேரங்களில் அவர்கள் கார் சிறுவர் இல்லத்தை வந்தடைந்தது. காரை நோக்கி ஓடிச்சென்ற சிஸ்டரை ஓடிவந்து கட்டிக்கொள்கிறாள் காவியா. அழுது அழுது களைத்திருந்தாள். உடம்பெல்லாம் கொதித்துக்கொண்டிருந்தது. சிஸ்டரின் தோளில் சாய்ந்தபடி காவியா சொல்லியிருக்கிறாள் "அம்மா இனி என்னைய யாருகூடவும் அனுப்பாதீங்க!".

காவியாவின் புகைப்படம் ஒன்றை அண்மையில் எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார் அந்த சிறுவர் இல்லத்தின் தலைமை கன்னியாஸ்திரி. அந்த புகைப்படத்தில் ஒரு அழகிய பண்டா பொம்மையுடன் மின்னல் வெட்டும் அவள் அழகிய புன்னகையோடு ஜொலித்துக்கொண்டிருக்கும் காவியாவை பலநாட்கள் கண்வெட்டாமல் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். அந்த பொம்மையை அவள் இன்னமும் தன் அழகிய குட்டிக்கைகளுக்குள் அரவணைத்தபடி வைத்திருக்கிறாள் என்பது எனக்குக்கிடைத்த மேலதிக சந்தோஷம். அதை ஒரு நத்தார் தினத்தில் அவளுக்கு பரிசளித்திருந்தேன்.


அடுத்தவாரமும் வருவேன்.7 comments:

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

பி.அமல்ராஜ் said...

மிக்க நன்றி அண்ணா. நிச்சயமாக தொடர்வேன்.

'பரிவை' சே.குமார் said...

தொடருங்கள்... தொடர்கிறோம்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_6.html?showComment=1409960935899#c1091949626357065465

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

rajamelaiyur said...

வலைசரத்தில் உங்களை பற்றி :
எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் !!!

Athisaya said...

வணக்கம் இன்று உங்களை சந்திப்பது மனமகிழ்ச்சி
அதுவும் இப்படி ஓர் பதிவில்
வாழ்த்துக்கள்

Unknown said...

Ourtechnicians have a team of electricians, team of painters, team of carpenters, team of plumbers, teams of masons, team of mechanics and over them ourtechnicians have a team of Engineers and Supervisors.ourtechnicians always to give a best solution for home making maintenance and repair.
Topics: #24hrs emergency plumbers #electric service in #changing window door #affordable painters #appliance repair service #masonry work #two wheeler repair #three wheeler repair #bathroom remodeling #ups power systems #top load washing machine repair #sofa fitting #interior & exterior designer #home theatre services #carpenters in #mosquito screen #geyser repair services #kitchen flooring.
www.ourtechnicians.com
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=QGEXyz1yp30&feature=youtu.be
https://www.instagram.com/ourtechnicians/

Popular Posts