Sunday, August 10, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 20


சென்ற வாரம் கவிதா பற்றிய குறிப்பொன்றை இட்டிருந்தேன். அவள் தன்னம்பிக்கையை மெச்சுவதற்கு ஒரு குறிப்பு போதாது என்று எப்பொழுதும் நான் நினைப்பதுண்டு. கவிதா பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் அவளுக்கு இன்னும் இன்னும் வாழ்க்கை பற்றிய தைரியத்தை ஊட்ட வேண்டும் என்று தோன்றும். அவள் கடந்து செல்லப்போகும் கடினமான பாதைகளை இலகுவாக கடந்துசெல்ல அவளுக்கு இன்னும் இன்னும் தைரியம் கொடுக்கப்படவேண்டும். நான் அவளுக்காக கடவுளிடம் வேண்டுவதும் அதுவே.

தியாகம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. தேவையானதும் கூட. சின்ன சின்ன தியாகங்கள் வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. அதுவும் இன்னுமொருவரிற்கு நாங்கள் செய்யும் ஒரு சிறிய அளவிலான தியாகம் கூட நம் 'சமூக பிராணி' என்கின்ற சேர்ந்து வாழ்தல் சித்தார்ந்தத்தை மேலும் மேலும் உறுதியடையச்செய்கிறது. அழகான வாழ்க்கையொன்றில் தொட்டுணர முடியாத ஆயிரம் ஆயிரம் தியாகங்கள் மறைந்துகிடக்கும். அந்த வாழ்க்கையை அர்த்தமுடையதாக மாற்றுவதில் அத்தியாகங்களே பிரதான பங்குவகிக்கிறது. ஒரு குழந்தையின் வாழ்க்கையை, எதிர்காலத்தை அழகுற மாற்றுவதற்கு ஒரு பெண்ணால் எந்த அளவிற்கு தியாகங்கள் செய்ய முடியும் என்பதற்கு கவிதா மிகச்சிறந்த உதாரணம் என்பேன். இப்படி நூற்றுக்கணக்கான தியாகிகளை உருவாக்கியதில் முள்ளிவாய்க்காலிற்கு மிகப்பெரிய பங்குண்டு. அதேபோல இன்னும் எத்தனை எத்தனை கவிதாக்கள் வன்னியில் இருப்பார்கள் என்பதும் நமக்குத் தெரியும். சரி, இவ்வாரக் குறிப்பிற்கு வரலாம்.

மழை சோவெனக் கொட்டிக்கொண்டிருந்தது. மழையின் தீவிரமான விழுதல் நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின் மேற்கூரையை மூர்க்கமாக மோதிக்கொண்டிருந்தது. வீதியெல்லாம் நீர்த்தேக்கம். புதுக்குடியிருப்பு வீதிகள் தங்கள் மேல் விழும் தூய மழைநீரை தங்களைப்போல செம்மஞ்சள் நிறமாக மாற்றிக்கொண்டிருந்தன. அந்த வீதியில் ஒவ்வொரு ஐந்து மீட்டரிற்கும் குறைந்தது இரண்டு பாரிய குழிகள் பயங்கரமாய் வாய்பிழந்து நின்றன. ஒவ்வொரு குழிகளிற்கும் இறங்கி இறங்கி அந்த தண்ணீரையெல்லாம் பிய்த்தெறிந்துகொண்டு எங்கள் வாகனம் 'கவச வாகனம்' போல கம்பீரமாக முன்னேறிக்கொண்டிருந்தது. முல்லைத்தீவு – பரந்தன் வீதியூடாக சென்று புதுக்குடியிருப்பு சந்தியை கடந்து சிறிது நேரத்தில் வலப்பக்கமாக திரும்பி ஐந்து நிமிட பயணத்தில் அந்த ஊரை நாங்கள் கண்டடைந்ததாக ஞாபகம்.

அது ஒரு அழகான ஊர். போர் கன்னா பின்னாவென்று அந்த அழகிய ஊரை தின்று தீர்த்திருந்தது. முன்னர் இறுமாப்பாக நிமிர்ந்து நின்ற பல பனைமரங்களும் தென்னை மரங்களும் இப்பொழுது தலையின்றி வெறும் முண்டமாக நின்றுகொண்டிருக்கின்றன. அவற்றை பார்த்தபொழுதெல்லாம் என் பிண்டம் வரை வியர்த்துக்கொட்டியது. போரின் அகோரத்தை அந்த மரங்கள் எனக்கு அழகாக மொழிபெயர்த்தன. அதிகமான வீடுகள் உடைந்து அரைவாசியில் அரையும் குறையுமாக நின்றுகொண்டிருந்தன. மீதி வீடுகள் இருந்த இடத்தைக் கூட அவ்வீட்டாட்களால் அடையாளம் காண முடியாத அளவிற்கு தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. அந்த கிராமம்; இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டும் புத்துயிர் பெற்று எழுந்துகொண்டிருந்தது. மக்கள் நடந்தவற்றை மறக்க எத்தனிக்கையில் அந்த தலையற்ற பனைமரங்கள் அவர்களை மீண்டும் முள்ளிவாய்க்காலிற்கு அழைத்துச்சென்றுகொண்டிருக்கிறது. பாவம் அந்த மக்கள். அங்கு இருக்கும் எவரிடமும் நலமாக இருக்கிறீர்களா என என்னால் கேட்க முடியவில்லை. ஒவ்வொருத்தரிற்குள்ளும் ஏதோ ஒரு ரணம் காயாமலேயே சீழ்பிடித்து வடிந்துகொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். அந்த ரணங்களோடு இன்றுவரை சதாபொழுதுகளும் செத்துக்கொண்டிருக்கும் அவர்களிடம் எப்படி நலமா எனக் கேட்பது? 

அந்த கிராமத்தில் முதல் முதலாக ஒரு வயதான அம்மாவை சந்திக்கக்கிடைத்தது. ஒரு அறுபது வயது இருக்கும் அந்த அம்மாவிற்கு. அருகிலிருந்த கிணற்றில் தான் கொண்டுவந்திருந்த தண்ணீர்க்குடத்தை நிரப்பிக்கொண்டிருந்தார். கொஞ்சம் அருகில் சென்று பேச்சை ஆரம்பித்தேன். என்னை இன்முகத்தோடு கண்டிப்பாக தனது வீட்டிற்கு வந்துசெல்லும்படி அழைத்தார். தலைமேல் உள்ள அந்த சும்மாட்டின்மேல் தூக்கி நிறுத்திய குடத்துடன் முன்னே செல்லும் அந்த அம்மாவை நானும் பின்தொடர்ந்தேன். அந்த அம்மாவின் வீட்டை அடையும் வரை இடைவெளியில்லாமல் இருவரும் பேசிக்கொண்டே நடந்தோம். அழகாக மூச்சு விட முடியாமல் பட படவென பேசிக்கொண்டு வேகமாக நடந்துகொண்டிருக்கும் அந்த அம்மா எனது அம்மாவை ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தார். எனது அம்மாவும் அப்படித்தான், பேச ஆரம்பித்தால் பட படவென வேகமாக ஒரே ப்ளோவில் போய்க்கொண்டிருப்பார். கேட்பதற்கு ஆகோனின் ரப் பாடல் போல இருக்கும். அந்த அம்மாவின் வீட்டை அடைந்தேன். நான்கு கம்புகளாலான அந்த படலையை திறந்து வீட்டு வளவினுள் என்னை அன்பாக அழைத்தார். நானும் அந்த குறுக்காக கட்டப்பட்டிருந்த தடிகளைக் கடந்து உள்ளே நுழைந்தேன். மிகப்பெரிய வளவு. வானுயர வளர்ந்து தலைகளை சல சலவென ஆட்டிக்கொண்டு நிமிர்ந்து நிற்கும் தென்னை மரங்கள். வீட்டினுள்ளே என்னை அழைத்து தரையில் விரிக்கப்பட்டிருந்த நீல நிற பாயில் அமர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார். பாயின் மேல் ஆரவாரமில்லாமல் அமர்ந்துகொண்டாலும் எனது கண்கள் ஆரவாரமாய் அந்த வீட்டை அங்கும் இங்குமாய் நோட்டம் விட்டபடி விழித்துக்கொண்டிருந்தது. 

அதை வீடு என்று சொல்வதை விட ஒரு குடிசை என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாய் இருக்கும். மன்னிக்கவும் அதை இன்னும் மிகச்சரியாக குறிப்பிட வேண்டுமானால் 'மிகச்சிறிய' குடிசை என்று கருத்துப்பிழையின்றி சொல்லலாம். 'வீடு தரைமட்டம் அப்பு!' என எதிரிலிருந்த வெறும் அத்திவாரக் கற்களைக்காட்டிக் கூறினார் அந்த அம்மா. நான்கு அல்லது ஐந்து அறைகள் கொண்ட ஒரு பெரிய வீடு அது என்பதை அந்த வீட்டின் அத்திவாரத்தைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். போரிற்கு முன்னர் இந்த குடும்பம் நல்லதொரு பொருளாதார இயலுமை மிக்க பணக்காரக் குடும்பமாக இருந்திருக்க வேண்டும். இப்பொழுது இவர்கள் வாழ்க்கை முழுவதுமாய் மாறிப்போய்க்கிடக்கிறது. சிறிது நேரத்தில் அந்த அம்மாவின் கணவர் அங்கு வந்து சேர்ந்தார். 'எப்படி சுகம் தம்பி?' என விசாரித்தபடி எனக்கு அருகில் வந்து மெதுவாக அமர்ந்துகொண்டபோதுதான் அதை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. அந்த ஐயாவின் இடது பக்கம் செயற்கை கால் பொருத்தப்பட்டிருந்தது. 

அவர்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். நேரம் ஒரு மணித்தியாலத்தை நெருங்கிக்கொண்டிருந்ததைக் கூட என்னால் உணர முடியவில்லை. அவ்வளவு சுவாரஷ்யமாக பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது இரண்டு நபர்கள் கேள்வியில்லாமல் திடீரென அந்த வீட்டினுள் நுழைந்தனர். யார் இவர்கள்? கேட்டுக்கேள்வியில்லாமல் இப்படி வீட்டினுள்ளே நுழைவது? எனக்குள்ளே படபடத்துக்கொண்டேன். அதில் ஒருவர் சிறிது நேரம் கவனமாக என்னை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அந்த பார்வை எனக்குள்ளே கொஞ்சம் பயத்தை விதைக்கத்தொடங்கியது. அப்படியொரு லுக்கு அது! சில நிமிடங்கள் கடந்தும் அந்த நபரின் பார்வை மட்டும் என்னை கடந்து போவதாய் இல்லை. அதை பார்வை என்று சொல்லுவதைவிட முறைத்தல் என்று சொல்லுவது கொஞ்சம் யதார்த்தமாக இருக்கும். என்னை ஆமிக்காரன் என்று நினைத்திருப்பார்களோ?

அப்படியே வந்த இருவரும் சட்டென வீட்டினுள் போய் மறைந்தார்கள். அந்த இருவரில் ஒருவரிற்கு பத்து வயது இருக்கும். மற்றவரிற்கு, அதுதான் என்னை முறைத்துப்பார்த்த அந்த பெரியவரிற்கு சுமார் ஏழு அல்லது எட்டு வயதுதான் இருக்கும். பாடசாலை முடிந்து வீடு வந்திருக்கிறார்கள் இருவரும். யார் இந்த இரண்டு குட்டிப்பையன்களும்? இதே கேள்வியை இப்படியே அந்த அம்மாவிடம் கேட்டேன். 'என்ட பேரப்புள்ளைகள் அப்பு.. சரியான குளப்படிகள்.. அதுவும் இந்த ரெண்டாவது இருக்கே.. நல்லா அடியும் போடுறனான்...' சிரித்தபடி கூறிமுடித்தார் அம்மா. 'கொஞ்சம் இவர்கூட பேசிக்கிட்டு இருங்க அப்பு நான் இதுகள் ரெண்டுக்கும் சாப்பாடு குடுத்துட்டு வாரன்...' என மறுபுறம் திரும்பிக்கொண்டார் அம்மா. அவர்கள் படுக்கையறைக்கும் சமையல் அறைக்கும் வெறும் ஐந்து மீட்டர்தான் இடைவெளி. அந்த கொட்டிலின் வலப்புறம் சமையலறை, இடப்புறம் படுக்கையறை.

'இவங்க அம்மா அப்பா வேலைக்கு பொயிட்டாங்களா ஐயா?' என சோற்றை வாயில் திணிக்க முயன்றுகொண்டிருக்கும் அந்த இரண்டு பையன்களையும் காட்டி அருகிலிருந்த ஐயாவிடம் கேட்டேன். 'ச்சே ச்சே.. அவங்க ரெண்டு பேரும் மோஷம் போயிட்டாங்க!' என சாதாரணமாக கூறினார். 'என்ன சொல்லுறீங்க??' ஆவலாக பெரிய கேள்விக்குறி ஒன்றை முகத்தில் நீட்டினேன். அவர்கள் கதை இவ்வாறு இருந்தது. 'நாங்களும் என்ட புள்ளையின்ட குடும்பமும் ஒண்ணாத்தான் முள்ளிவாய்க்கால்ல இருந்தம் தம்பி. யார்ட கெட்ட காலமோ என்ட புள்ளையையும் அவ புருசனையும் ஒரே நாளில பறிகுடுக்கவேண்டிப்போச்சு. இதுகள் ரெண்டும்தான் தப்பினது. அதுக்கு புறகு என்ன பண்ணுறது இந்த ரெண்டு பசங்களையும் ஒருமாரி காப்பாத்தி இங்கால கொண்டு வந்து சேத்துட்டம். நாங்கதான் இவங்கள வளக்கணும். எனக்கும் வேற பிள்ளைகள் இல்ல. நாங்க சாகாம இருக்கணும் தம்பி. இல்லேனா இதுகள் ரெண்டும் நடுரோட்டிலதான். எனக்கும் ஏலாது, அவதான் இவங்களுக்கு எல்லாம் பண்ணிக்கிறது..'

எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. இந்த அம்மாவுக்கும் ஐயாவிற்கும் அறுபது வயது இருக்கும். அந்த இரண்டு சிறுவர்களும் பத்து வயதிற்கு குறைந்தவர்கள். இவர்கள் இருவரின் வாழ்க்கையும் இந்த அம்மா, ஐயாவினுடைய உயிர்வாழ்தலில்தான் தங்கியிருக்கிறது. ஒரு தொடரான பெருமூச்சுக்கள் எனக்கு தெரியாமலேயே வெளியேறிக்கொண்டிருந்தது. ஒரு கணம் அப்படியே இருந்துவிட்டு மறுபுறம் திரும்பி அந்த இரண்டு சிறுவர்களையும் பார்த்தேன். என்னை முறைத்துப்பார்த்த அந்த குட்டிப்பையனிடம் நான் ஆமிக்காரன் இல்லை என அந்த அம்மா சொல்லியிருக்க வேண்டும், இப்பொழுது என்னைப்பார்த்து அழகாக ஒரு புன்னகையை உதிர்க்கிறான் அந்த சுட்டி.

அடுத்த வாரமும் வருவேன்.

படம்: கூகுள்.

     


2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஒவ்வொரு தொடரிலும் வேதனைகள் குவிந்துள்ளது.படிக்கும் போதுமனமே பாரம் தொடருங்கள்.. காத்திருக்கேன் அடுத்த தொடருக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

தொடர்ந்து படிக்கிறேன்...

Popular Posts