Thursday, August 7, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 19


காஸா எரிந்துகொண்டிருக்கிறது. இஸ்ரேல் தனது மூர்க்கத்தனமான இனஅழிப்பின் மூலம் தனது நில அவாவை கொஞ்சம் கொஞ்சமாய் பூர்த்திசெய்துகொண்டிருக்கிறது. அன்று முள்ளிவாய்க்காலை கைகட்டி வேடிக்கை பார்த்த அதே சர்வதேசம் தன் ஊழைக்கண்களால் இன்று காஸாவையும் பார்த்து மௌனித்து நிற்கிறது. காஸாவின் ஒவ்வொரு அழுகுரல்களும் முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்தியபடியே கடந்துகொண்டிருக்கிறது. காஸா வடிக்கும் இரத்தத்தின் உஷ்ணத்தை எம்மால் நன்றாக உணரமுடிவதற்கு முள்ளிவாய்க்கால் விட்டுப்போன இரத்தக்கறைகள் உதவியாக இருக்கிறது. உலகநாடுகளின் மனச்சாட்சியையும், மனிதாபிமானத்தையும் எப்படி அன்று தமிழர்களால் வெல்லமுடியாமல் போனதோ அதேபோல்தான் பலஸ்தீனியர்களாலும், உலக முஸ்லிம்களினாலும் அதை இன்று அடையமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வரலாறுகள் என்றுமே மாறப்போவதில்லை. உலக அரசியல் அரங்கில் என்றும் அப்பாவி மக்கள் பகடைக்காய்களாகவும் மிருகங்களாகவுமே நடத்தப்படுவார்கள். காஸாவிற்கு எனது பிரார்த்தனைகள்.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் கொன்றுகுவிக்கப்பட்ட அப்பாவித்தமிழர்களில் முதியவர்கள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என சகலரும் அடங்குவர். வந்து விழுந்த குண்டுகளிற்கு இவர்கள் யார்மேலும் இரக்கம்வரவில்லை. வெடித்து சிதறிய எங்கள் உடல்களைப்பார்த்து அந்த குண்டுகள் ஆனந்தமடைந்தன அவற்றை ஏவியவர்கள் போல. இவற்றுள் கொன்றுகுவிக்கப்பட்டவர்கள் போக ஏனையோர் கண்ணீரும் குருதியுமாய் முல்லைத்தீவு கடற்பரப்பைவிட்டு வெளியேறியபோது சொல்லொண்ணா மனச்சுமைகளை அவர்களோடுசேர்த்தே கொண்டுவந்தனர். அந்த சுமைகள் இன்றும் அவர்கள் மனங்களையும் உடல்களையும் விட்டு இறங்கியதாய் இல்லை. அவற்றை இறக்கிவைக்க முடியுமா எனவும் தெரியவில்லை.

ஒருமுறை முல்லைத்தீவில் ஒரு சகோதரியைச் சந்தித்தேன். அழகிய வதனம் ஆனால் அந்த முகத்தில் மட்டும் ஆயிரம் சோகத்தழும்புகள். என்னால் அவற்றை தெளிவாக கண்டுணர முடிந்தது. அந்த சகோதரியின் பெயரை கவிதா என வைத்துக்கொள்ளுவோம். கவிதாவை நான் முதல் முதல் பார்த்தபொழுது என் கண்களையும் மூளையையும் முந்திக்கொண்டு வந்தடைந்தவை அவள் முகத்தில் தெறித்துக்கொண்டிருந்த ஏதோவொரு சோகம் அல்லது பாரம்தான். இளம் பெண். ஒரு 20 வயது இருக்கும். அவள்பற்றி நான் முதல் முதல் அறிந்துகொண்டபோது எனது இதயத்தை ஆயிரம் ஆயிரம் மலைகள் அழுத்துவதைப்போல உணர்ந்தேன். கண்ணீரையும் கடந்து எவ்வளவு தன்னம்பிக்கை அவளுக்கு? வலிகளையும் மறந்து எத்தனை துணிச்சல் அவளுக்கு? வேதனைகளையும் தாண்டி எத்தனை எதிர்பார்ப்புக்கள் அவள் வாழ்க்கைமேல்??

கவிதாவின் பெற்றோர் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார்கள். அவள் குடும்பத்திலிருந்து கவிதாவினால் மட்டுமே அந்த கொடூரமான குண்டுகளைத்தாண்டி தப்பித்துக்கொள்ள முடிந்தது. அதேபோல கவிதாவினால் இன்னுமொரு உயிரையும் காப்பாற்றி தன்னோடு கொண்டுவரமுடிந்ததுதான் அவளின் உச்சக்கட்ட துணிச்சலின் வெளிப்பாடு. அது ஒரு குழந்தை. ஒரு வயது மட்டுமே கடந்திருந்தது அப்பொழுது. அது வேறுயாருமல்ல அவளது அக்காவின் குழந்தை. அக்காவும் அக்காவின் கணவரும் அவள் பெற்றோரைப்போல ஒரே இடத்தில் கொல்லப்பட்டனர். இறுதியில் அந்த குடும்பத்திலிருந்து தப்பியவர்கள் கவிதாவும் இந்த சிறிய குழந்தையும்தான். இப்பொழுது கவிதாதான் அக்குழந்தையை வளர்த்துக்கொண்டிருக்கிறாள். இப்பொழுது அக்குழந்தைக்கு தாய் கவிதாதான். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், கவிதா இப்பொழுது பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறாள். இரண்டாம் வருடம். அவள் பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற நாட்களில் அவள் உறவினர்கள் அக்குழந்தையை கவனமாக பார்த்துக்கொள்கிறார்கள். சிறு சிறு விடுமுறை கிடைக்கின்றபொழுதெல்லாம் கவிதா வீட்டிற்கு ஓடிவிடுகிறாள் அவள் குழந்தைக்காக. கவிதா இப்பொழுது அக்குழந்தையின் முழுமையான தாய்.

கவிதா எத்தனை தைரியமான பெண் என்பதை இதற்கு மேலும் நான் சொல்லித் தெரியதேவையில்லை. அவளது தைரியம், தன்னம்பிக்கை, தனது மற்றும் அக் குழந்தை மீதான எதிர்கால நம்பிக்கை அதற்கான அயராத முயற்சி என பல விடயங்களில் என்னை வாயில் கையைவைக்குமளவிற்கு மாற்றியிருந்தாள். என்னால் கவிதாவை ஒரு தெய்வாதீனமான பெண்ணாகவே பார்க்க முடிந்தது. எனது வாழ்க்கையில் கைகளை எடுத்து கும்பிட்டு உண்மையாக பெருமிதம் கொள்ள வைத்த முதல் இளம்பெண் இவள்தான். அவள் வார்த்தைகளில் அப்படியொரு தன்னம்பிக்கை தெறித்துக்கொண்டிருக்கும். அவள் விழிகளில் எப்பொழுதும் அப்படியொரு தைரியம் சுழன்றுகொண்டிருக்கும். ஒரு லிப்டிக்ஸ்சுக்காக மனமுடைந்து ஏங்கும் இன்றைய பெண்கள் மத்தியில் இவள் எத்தனை சிறப்பானவள். கவிதாவைப் பார்த்தபொழுது பாரதியார் ஆரம்பித்த புதுமைப்பெண் தேடல் பயனற்றுப்போகவில்லை எனத் தோன்றியது. என்னைவிட நம் தமிழ் இளம்பெண்களுக்கு அவளிடம் கற்றுக்கொள்ள ஆயிரமாயிரம் பாடங்கள் பரந்து கிடக்கிறது.

சில மாதங்களின் பின்னர் இரண்டாம் முறை கவிதாவை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவளை பார்ப்பதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை நான் என்றும் எதற்காகவும் இழந்துவிட நினைப்பதில்லை. அன்று அவள் தன் குழந்தையோடு வந்திருந்தாள். அன்று அக்குழந்தை கவிதாவை 'அம்மா' என அழைத்த அந்த ஒரு நொடியில் என் கண்கள் சடாரென குளமாகி வழிய ஆரம்பித்தது. அக்குழந்தையின் முகத்திலும் கவிதாவின் முகத்திலும் அப்படியொரு வெளிச்சம், வதனம், ஒளிவட்டம். நான் குழந்தையை தூக்கி எடுக்க முயன்றபொழுது அது அம்மாவின் கரங்களைவிட்டு நகரமாட்டேன் என அடம்பிடித்தது. அக்குழந்தையின் வெட்டி வெட்டி மின்னும் அந்த கண்கள் இன்னும் என் கண்களுக்குள் சுற்றி சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. அன்று கவிதாவிடம் நிறைய பேசக்கிடைத்தது. அவள் ஒவ்வொரு பேச்சிலும் ஆயிரம் அர்த்தங்களும் பாடங்களும் சரமாரியாய் வந்து விழுந்தது. "எனக்கு இவன், அவனுக்கு நான். இதுதான் எனது வாழ்க்கை!" குழந்தையைக் காட்டி அடித்துக்கூறினாள். குழந்தை மீதான அதீத பாசம், அக்கறை, எந்த உலக ஆசாபாசங்களும் எங்களை பிரிக்க முடியாது என்கின்ற நம்பிக்கை, அக் குழந்தையை நன்றாக வளர்த்தெடுப்பேன் என்கின்ற தற்துணிவு, என்னுடைய எல்லா தேவைகளும் ஆசைகளும் எங்கள் இருவர் சார்ந்தவை மட்டுமே என அவள் சொன்னவிதத்தில் எக்கச்சக்கமான கருத்துக்கள் தொக்கி நின்றன.

'கவிதா, உனது வாழ்க்கை பற்றியும் கொஞ்சம் யோசிக்கணும் இல்லையா? ஐ மீன் குழந்தையுடன் சேர்த்து...' 

என நான் குறுக்கிட்டபோது கொஞ்சம்கூட யோசிக்காமல் பட படவென அவள் பதிலை உதிர்க்கத்தொடங்கினாள். 

"எனக்கு அதில் நம்பிக்கை இல்லை அண்ணா, என்னை காதலிப்பதாய் சொல்பவர்கள் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்றதும் துண்டைக்காணோம் துணியைக்காணோம்னு ஓடிவிடுகிறார்கள். அதிலும் அதிகமான ஆண்கள் அந்த குழந்தை யார், உனக்கு எப்படி குழந்தை  என்றெல்லாம் விசாரிப்பதில்லை. அப்படி விசாரிக்கும் எல்லோருக்கும் நான் இதை விளங்கப்படுத்த முற்படுவதும் இல்லை. எனக்கு இதுதான் குழந்தை. இன்றுமட்டுமல்ல நான் சாகும்வரைக்கும்... என்னையும் எனது நிலையையும் அவ்வளவு இலகுவாகவும் சீக்கிரமாகவும் எந்த ஆணினாலும் புரிந்துகொள்ள முடியாது அண்ணா.. நீங்க என்ன சொல்லுறீங்க??'

நான் வாய் அடைத்து ஒரு பெருமூச்சை விட்டுத்தள்ளுவதைவிட என்னால் என்ன சொல்லமுடியும் சொல்லுங்கள். ஆம் என்றோ இல்லையென்றோ அதை உறுதிசெய்துகொள்ள எத்தனிக்காமல் 'ம்ம்ம்.. நீர் சொல்வது முழுவதும் தவறு என்று என்னால் சொல்ல முடியாது..' என தலையை ஆட்டினேன். உண்மையில் யோசித்துப்பார்த்தால் எத்தனை இளம் ஆண்களால் கவிதாவின் நிலையை சரியாக புரிந்துகொள்ள முடியும். அப்படி புரிந்துகொண்டாலும் கவிதாவை தன் குழந்தையோடு ஏற்றுக்கொண்டு அவளுக்கு வாழ்க்கை கொடுக்க எத்தனை ஆண்கள் தயாராக இருக்கிறார்கள்? 

அது ஒரு விடுமுறைநாள். ஒரு நீண்ட விடுமுறைக்கு பின்னர் கவிதாவை முல்லைத்தீவில் சந்திக்கும் சந்தர்ப்பம் மீண்டுமொருமுறை கிடைத்தது. அவள் குழந்தையுடன் எதிரில் வந்துகொண்டிருந்தாள். அருகில் வந்ததும் முதலாய் குழந்தையை முத்தமிட நெருங்கிய பொழுது அவள் நெற்றியில் இருந்த சிவப்பு நிற பொட்டை அவதானித்தேன். திருமணம் முடிந்திருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன். அதையே முதல் பேச்சாக எடுக்காமல் ஒரு பத்து நிமிடங்களின் பின்னர் இந்த விடயத்திற்கு வந்து நின்றேன். 

'என்ன கவிதா, நல்ல விஷயமெல்லாம் நடந்திருக்கு போல.. சொல்லவே இல்ல...' 
என சிரித்தபடி அந்த சிவப்பு பொட்டை கண்களால் சுட்டினேன். அவள் சர்வசாதாரணமாக சிரித்துவிட்டு 'இல்லை அண்ணா, அது பெரிய ஸ்டோரி..' என தலையைக் குனிந்துகொண்டாள். 'என்ன ஆச்சு..??' என்றேன். 'அதவிடுங்க வேற ஏதாச்சும் பேசலாம்..' என கதையை திசைதிருப்ப முற்பட்ட கவிதாவை நான் தடுக்கவில்லை. அவளுக்கு வேதனை கொடுக்கும் அல்லது அவளை இடஞ்சல் செய்யும் எந்த விடயத்தையும் நான் பேச விரும்புவதில்லை. அது அவளின் மன நின்மதிக்கு பங்கம் விளைவிப்பதாய் அமைந்துவிடும்.

சிறுவாரங்கள் கழிந்து அவள் நண்பியை தொடர்புகொண்டபொழுதுதான் அந்த காரணத்தை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. 'உங்களுக்கு தெரியும்தானே அவள் அது தன்ட குழந்தை எண்டுதான் கேக்குற எல்லாருக்கும் சொல்லுறது. அந்த பேபியும் இவள அம்மா எண்டுதானே எப்பவும் கூப்பிடுறது. சோ, எல்லாரும் அவள தப்பா நினைக்கிறதும் அவளுக்கு முன்னாலயே தப்பு தப்பா பேசுறதும் அவளுக்கு தாங்க முடியிறது இல்ல. வெளில எங்க போனாலும் அந்த குழந்தைய கூட்டிக்கிட்டுத்தான் போறவ, சோ பொட்டு வச்சிருந்தா பாக்கிறவங்க இவள தப்பா சொல்லமாட்டாங்க, உண்மையா இவ களியாணம் முடிச்சிட்டா அதான் இந்த குழந்த எண்டு விட்டுடுவாங்க.. அதோட சும்மா பாய்ஸ்சும் அவள தொந்தரவு செய்ய மாட்டாங்க.. அதான் இப்ப பொட்டோட திரியுறாள்...!' 

நம் சமூகம் மீதான எனது அவநம்பிக்கையும், ஆத்திரமும் இன்னொருமுறை மூளையில் வந்து மறைந்தது. கவிதாவை எப்பொழுதும் எனது மன்றாட்டுக்களில் நினைத்துக்கொள்வேன்.. எப்பொழுதும்! அத்தோடு கவிதாவை பாராட்டாமல் இக்குறிப்பை முடித்துக்கொள்வது தர்மம் அல்ல. வாழ்த்துக்கள் கவிதா. நீ ஒரு மதிப்பிற்குரியவள். 

அடுத்த வாரமும் வருவேன்.2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் உண்மைதான் பல துன்பங்களை சுமந்தவர்கள் எப்போதாவது ஒரு நாள் விடியும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yarlpavanan said...


சிறந்த பதிவு
நன்றாக நகருகிறது
தொடருங்கள்

பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

Popular Posts