Monday, August 4, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 18


போரிற்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. சமாதானம் இலங்கை பூராகவும் பரவிக் கிடப்பதாகச் சொல்லப்படுகிறது. இலங்கை என்கின்ற ஒரு குட்டித் தேசத்தினுள் இனங்களுக்கிடையிலான அமைதி, சமத்துவம் மேலோங்க ஆரம்பித்திருப்பதாக எங்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படுகிறது. சுதந்திரம் என்னும் காற்றை எங்களுக்கு தாரைவார்த்திருப்பதாக கொடையாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நாமும் தலைகளை ஆட்டி ஆமோதித்துக் கொண்டிருக்கிறோம். இந்த விடயங்களில் அனேகரின் எதிர்பார்ப்பு 'Something is better than nothing' என்பதாய் இருக்கிறது. வடக்கின் முழு சுதந்திரம் எனப்படுவது வெறும் மக்கள் மயப்படுத்தப்பட்டால் மட்டுமே அதை வரம் எனக்கொள்ள முடியும் என்பதாய் இன்னும் சிலரின் அபிப்பிராயங்கள் இருக்கிறது. இதற்குள், எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் என்கின்ற குடும்ப வட்ட சுயநலத்தோடு மட்டும் சுதந்திரத்தை அனுபவிக்கும் இன்னுமொரு கூட்டம்.

எனது வளர்ச்சிக் காலத்தில் வடக்கு பற்றியும், தமிழர்களின் தாயக நிலை தொடர்பாகவும் போதுமான அளவு எனது தந்தையால் சொல்லிக்கொடுக்கப்பட்டது. அவற்றை உள்வாங்கிக்கொண்டு வளர்ந்ததன் விளைவு பலரால் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படும் பல தமிழர் பிரச்சினைகள் எனக்கு மாறுபட்ட ஒரு கோணத்தில் தெரியும். 

அன்று நான் யாழ்ப்பாணம் சென்று வரலாம் என முடிவாகியதன் பின்னணியில் இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று நீண்ட நாட்களாக யாழ்ப்பாணம் செல்ல கிடைக்காத வாய்ப்பு இன்று தெய்வாதீனமாக கிடைத்தது. இன்னுமொன்று வாழ்க்கையில் முதல் முறையாக மன்னாரிலிருந்து நாவற்குழி பாலம் ஊடாக யாழ்ப்பாணம் செல்ல கிடைத்த சந்தர்ப்பம். இந்த நிலையில் இதை எப்படி வேண்டாம் என்று சொல்வது? 

நாவற்குழி என்கின்ற பெயர் போராட்ட காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசம் என்பதை யாவரும் அறிவர். நாவற்குழி, மருதம் என்னும் சொல்லிற்கு பெருமை சேர்க்கும் ஒரு இடம் என்பது குறிப்பிடத்தக்க விடயம். ஆனையிறவுப் பகுதியினூடாக பிரயாணிக்க முடியாமல் இருந்த ஒரு காலத்தில் நாவற்குழி என்பது வன்னி மக்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது. யாழ் தீவகற்பத்தையும் வன்னியின் பிரதான பெருநிலப் பரப்பையும் இணைக்கும் ஒரு புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் இது என்பது இன்னுமொரு பெருமை. மன்னாரில் ஆரம்பிக்கும் A32 என்கின்ற வீதி திருக்கேதீஸ்வரம், இலுப்பைக்கடவை, பல்லவராயன் கட்டு, சுன்னாவில், பூனகரி என நீண்டு கடந்து நாவற்குழியை அடைந்து யாழ் நாகருக்கான வாயிலை திறந்து வைக்கிறது. நீண்ட கால யுத்தத்தில் அதிகமான காலப்பகுதியில் இவ் வீதி போருக்காகவே இரு தரப்பினராலும் அதிகம் பாவிக்கப்பட்டது. பொதுவாக போர் உச்சக்கட்டத்தை அடைந்த காலகட்டத்திலெல்லாம் இவ் வீதி பிரதானமாக ஆயுத தளபாடங்களை கொண்டுசெல்வதற்காக மட்டுமல்லாமல் சிறந்த முன்னேற்ற வியூகத்தை வகுத்துக்கொள்ள இரு தரப்பினருக்கும் இவ்வீதி மிகவும் தேவையானதானவும் இருந்தது.

இவ்வாறான ஒரு பல் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வீதி இப்பொழுது திருத்தியமைக்கப்பட்டு அட்டகாசமாக ஜொலிக்கிறது. மன்னாரிலிருந்து நானும் என் நண்பனும் யாழ் நோக்கி இவ் வீதியினூடாக பயணத்தை ஆரம்பித்த போது எனது மனதுள் எக்கச்சக்கமான போராட்ட நினைவுகள் வந்து அமர்ந்துகொண்டன. A32 வீதியையும் தமிழர் போராட்டத்தையும் வேறு வேறாக பிரித்துப் பார்க்க முடியாது. போரியல் வடுக்களின் எச்சங்கள் இன்றும் இவ்வீதியில் படர்ந்து கிடக்கிறது. "யுத்தம் முடடிந்தது எவ்வளவு நல்லதாய் போச்சு??" என அழகாக புனரமைக்கப்பட்ட அவ் வீதியைப்பார்த்து நண்பன் சொன்ன பொழுது நூற்றுக் கணக்கான கேள்விகள் என் வாயில் ஸ்தம்பித்துக்கொண்டது. போர் முடிந்து விட்டதையும் சமாதானம் வந்துவிட்டதையும் என்னால் இங்கு நடக்கும் கட்டுமான அபிவிருத்திகளைக் கொண்டு மட்டும் அளவிட முடிவதில்லை. எங்கள் பயணம் நீண்டது. இலுப்பைக்கடவையை தாண்டி வெள்ளாங்குளத்தை அடைகையில் எம் பயணத்திற்கு கொஞ்ச நேரம் நிறுத்தம் போடலாம் என ஒரு தேனீர்க்கடை முன்னாக நிறுத்தினோம். இன்னும் என்னுள் பல கேள்விகள், எதிர்பார்ப்புக்கள்.. இன்றுதான் இவ்விடங்களுக்கு என்னால் முதற்தடவையாக வர முடிகிறது என்பது மனதுள் ஒரு பேரின்பத்தை கிழப்பிக்கொண்டிருந்தது.

அக்கடைக்காரரிடம் கொஞ்சம் தேனீர் கேட்டோம். அப்படியே பசியும் கொஞ்சம் வயிற்றைக் கிள்ள கண்ணாடிப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என எட்டிப்பார்த்தேன். விதம் விதமான ஐட்டங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றிற்கு நடுவே இருந்த அந்த ஐட்டம் என்னை சாப்பிடு சாப்பிடு என இன்னும் அருகில் அழைத்தது. போராட்ட காலங்களில் இந்த வகை சிற்றுண்டியை வன்னியின் எல்லா பகுதிகளிலும் காண முடியும். அது நம் மக்களின் பிரத்தியேகமான சிற்றுண்டி. தமிழரால்தான் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழர்களால் மட்டுமே அதை சுவையாக செய்யவும் முடியும். முன்னரெல்லாம் வன்னியில் எங்காவது ஒரு தேனீர் சிற்றுண்டிக்கடைக்குச் சென்றால் இதை பார்க்காமல் அல்லது சாப்பிடாமல் வெளியேற முடியாது. தனிப்பட்ட ரீதியில் நான் இந்த சிற்றுண்டியின் மிகப்பெரிய ரசிகன். இதன் பெயரும் வித்தியாசமாக தனித் தமிழில், ஒரு வகையில் வன்னியை பிரதிபலிப்பதாக இருக்கும். அட அது என்ன சிற்றுண்டி என்று இன்னும் சொல்லவே இல்லை. மன்னித்துக்கொள்ளுங்கள். இவ்வளவு நேரமும் நான் முன்னுரை கொடுத்தது 'மிதிவெடி' என்று அழைக்கப்படும் ஒரு வகை மாமிச பற்றிஸ். எதற்காக இதற்கு மிதிவெடி என பெயர் வந்தது என எனக்குத் தெரியவில்லை ஆனாலும் பார்ப்பதற்கு கொஞ்சம் மிதி வெடி போல இருக்கும் என்றும் சொல்லலாம்.

நீண்ட வருடங்களுக்கு பின்னர் அந்த மிதிவெடியை கண்டபின்னரும் அதை ஒரு கட்டுக் கட்டாமல் அந்த கடையை விட்டு நகரவா முடியும்? மிதிவெடியை சாப்பிட்டுக் கொண்டே அக்கடையை சுற்றும் முற்றும் நோட்டம் விட்டேன். புதிதாக நிறப்பூச்சு பூசப்பட்டு ஜொலித்துக்கொண்டிருக்கும் சுவர்கள். புதிய மேசை, புதிய கதிரைகள். கடையின் முக்கியமான வியாபார மேசையின் மேலே சுவரில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் விதம் விதமான ஐந்து கடவுள்கள். ஒவ்வொருவரிக்கும் முன்னாலே ஒவ்வொரு அழகான கலர் கலர் மின் விளக்குகள். இற்றைக்கு சுமாராக ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதே கடவுள்களுக்கு வணக்கம் செலுத்த வெறும் தேங்காய் எண்ணெய் சுட்டி விளக்குகளாலேயே முடிந்தது. போர் முடிவுற்றதன் நன்மை இந்த கடவுள்களுக்கும் கலர் கலரான மின்சார விளக்குகள் கிடைத்திருக்கிறது. அப்படியே பார்வையை மறுபுறம் திருப்பினால் எதிர்ச்சுவரில் இன்னும் இரண்டு அதே கலர் விளக்குகள். ஆனால் அங்கே எந்த கடவுள்களின் படங்களும் இல்லை. மாறாக ஒரு இளம் ஆணினதும் ஒரு பெண்ணினதும் படங்களிற்கு மாலை அணிவித்து சுவரிலே பொருத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அப்படங்களிலே குறிப்பிடப்பட்டிருந்த அவர்களது பெயர்களையும் முகவெட்டு ஒற்றுமைகளையும் பார்த்துவிட்டு அவர்கள் உடன் பிறந்த சகோதரங்களாகத்தான் இருக்க வேண்டும் என்கின்ற முடிவிற்கு வந்தேன். இவர்கள் எப்படி இறந்தார்கள், எதற்காக இளம் வயதிலேயே மரணத்தை தழுவினார்கள் என்பதை நான் அந்த கடைக்கார மனிதரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதை உங்களுக்கு விளங்கப்படுத்தவும் தேவை இல்லை.

மீண்டும் எங்கள் வண்டி அந்த அழகான 'காப்பற்' வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பறக்க ஆரம்பித்தது. இரண்டு இடங்களில் காவற் துறையினரிற்கு நாங்கள் எங்கு போகிறோம் எதற்காய் போகிறோம் என விளக்கம் சொல்ல வேண்டியிருந்தது. அவர்கள் கடமையை மதித்து வண்டியை நிறுத்தி பதில் சொல்லி பயணத்தை தொடர்ந்தோம். இடையில் இன்னுமொரு நிறுத்தம். சில பல அவசர தேவைகளுக்காக. அவ்வழியாக வந்த ஒரு அம்மாவை சந்திக்க முடிந்தது இந்த இரண்டாவது நிறுத்தத்தின் வரம். அந்த அம்மா பொடிநடையாக ரோட்டை பின்புறம் பாரத்து பார்த்து மெது மெதுவாக நடந்து கொண்டிருந்தார். எங்களைப்பார்த்து ஏதோ கேட்க வேண்டும் என்று தோன்றினாலும் அது அவரது உதடுகளோடு நின்றுகொண்டது. நான் பேச்சை ஆரம்பித்தேன். அருகில் போய் பேச்சை ஆரம்பிக்கும் முதலே 'இந்த நாசமாப்போவானுங்க சரியான நேரத்துக்கு வரமாட்டாங்க..' அந்த அம்மா பேசியதைக் கேட்டு பயந்து பேனேன். 'உங்கள இல்ல தம்பியோ, இந்த பஸ்காரங்கள சொல்லுறன்..' அப்பொழுதுதான் கொஞ்சம் துணிச்சல் வந்தது. 'தம்பி, என்ட மகளுக்கு சுகமில்ல. சீரியஸ்னு யாழ்ப்பாணம் அனுப்பிட்டினம். அதான் இந்த பஸ்சுக்கு அர மணித்தியாலமா பாத்துக்கிட்டு இருக்கன்...' அம்மா அழுகையோடு தொடர்ந்து பேச முயன்றபோதும் 'அம்மா எங்க கூட வாறீங்களா நாங்களும் யாழ்ப்பாணம்தான் போறம்..!' என நான் குறுக்கிட்டேன். அம்மாவிற்கு அவசரம் என்றாலும் காரில் ஏறி எங்களுடன் வருவது கொஞ்சம் தயக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். முதலில் மறுத்து இறுதியாக சம்மதித்து காரில் ஏறிக்கொண்டார்.

கார் நாவற்குழி பாலத்தை நெருங்கியது. அது வரை அந்த அம்மா, தனக்கு கணவன் இல்லையென்றும், ஒரே ஒரு மகள்தான் என்றும், அவளுக்கும் கணவன் இல்லை என்றும், அந்த மகள்தான் இப்பொழுது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லி முடித்திருந்தார். நான் திடிரென "மச்சான் இந்த பாலம் சூப்பரா இருக்கில்ல.." என நாவற்குழி பாலத்தைக்காட்டி நண்பனிடம் சொன்னபோது, எதிர்பாராமல் பின் இருக்கையிலிருந்து வந்த அந்த அம்மாவின் குரல் இப்படிச் சொன்னது. 

"ஆமா மோனே, இப்ப நல்லாத்தான் இருக்கு.. இந்த நாசமாப்போன கடலிலதான் என்ட மருமகன கொண்ணு போட்டானுங்க அந்த நாசமாப்போவானுங்க.. நானும் பிள்ளையும் இப்ப நடுத்தெருவில நிக்கிறம்!"


அடுத்த வாரமும் வருவேன்.    3 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சில இடங்களில் பதிவை படித்த போது நெஞ்சம் கனத்தது. வேதனையாக உள்ளது நண்பரே. என்றாவது ஒரு நாள் விடிவு மலரும்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பி.அமல்ராஜ் said...

Thanks a lot Ruban anna :)
Sure.. the so called 'one day' would come soon.

Yarlpavanan said...

"இந்த நாசமாப்போன கடலிலதான் என்ட மருமகன கொண்ணு போட்டானுங்க அந்த நாசமாப்போவானுங்க.. நானும் பிள்ளையும் இப்ப நடுத்தெருவில நிக்கிறம்!" என எத்தனை எத்தனை உறவுகள் சொல்லிக் கொள்கின்றனர்.

Popular Posts