Wednesday, August 20, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 21சிறுவர்கள் என்றால் உங்களைபோல எனக்கும் ரொம்பவும் பிடிக்கும். அவர்கள் ஒவ்வொரு அசைவிலும், நெளிதலிலும் ஏன் பார்வையிலும் அப்படியொரு கலைரசம் கொட்டிக்கிடக்கும். இரசிக்கத்தெரிந்த பொறுமைசாலிகளுக்கு குழந்தைகள் என்பது ஒரு சொப்பனம்.  அவர்கள் குறும்புத்தனங்களில் நம்மையே மறந்து தொலைந்துபோகும் அந்த தருணங்களை உலகில் வேறெங்கிலும், எதிலும் பெற முடிவதில்லை. அதிலும் செல்லமாக அவர்களை கோவப்படுத்தி, கடுப்பாக்கி, சண்டைபோடுவதில் கிடைக்கும் அந்த அழகிய சந்தோசம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

நான் வவுனியாவில் இருந்த காலகட்டத்தில், அங்கு வழமையாக நான் சென்றுவரும் இடங்களுள் இந்த சிறுவர் இல்லமும் ஒன்று. வவுனியாவில் எனக்கு முகவும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு என்றால் அது இங்கு அடிக்கடி சென்று அந்த சிறுவர்களுடன் நேரத்தை செலவிடுவதுதான். ஒவ்வொரு முறை அந்த சிறுவர் இல்லத்திற்கு சென்று வரும் பொழுதும் எனக்கான முழு மன அமைதி நிறைவாய் கிடைத்தருளும். வாழ்க்கை பற்றி ஒரு ஞானம் பிறக்கும். வாழ்க்கை பற்றியதான முறைப்பாடுகளிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தோன்றும். இந்த உலகத்திலேயே உண்மையான மகிழ்ச்சி, மன அமைதிக்கான மிகச்சரியான இடம் இந்த சிறுவர் இல்லங்கள்தான் என்று வெளிப்படும். அதை நான் முழுமையாக அனுபவித்திருக்கிறேன். இப்பொழுதுகூட அந்த குட்டீஸை அடிக்கடி நினைத்துக்கொள்வேன். நான் வவுனியாவில் அதிகம் மிஸ் பண்ணும் விடயங்களில் இதுவும் ஒன்று.

இந்த சிறுவர் இல்லத்தை ஒரு கிறிஸ்தவ குழுமத்தைச்சேர்ந்த கன்னியாஸ்திரிகள் நடாத்திக்கொண்டு வருகிறார்கள். இங்கிருக்கும் அனைத்து சிறுவர்களும் இறுதிக்கட்ட போரில் தங்கள் பெற்றோரை இழந்தவர்கள் அல்லது தொலைத்தவர்கள். இப்பொழுது இந்த இல்லத்தில் இவர்களுக்கு தேவையான சகல வசதிகளும் இதை நிர்வகிப்பவர்களால் நிறைவாக செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் பாடசாலை செல்கின்றார்கள். அடிப்படை வசதிகள் பற்றி திருப்தியோடு இருக்கிறார்கள். அவர்கள் எதிர்காலத்திற்கு தேவையான ஆங்கிலம், இணைப்பாடவிதான செயற்ப்பாடுகள், ஆன்மீக மற்றும் வாழ்வியல் பயிற்சிகள் என சகலதையும் பெற்றுக்கொடுக்கிறார்கள். அனைத்தும் கிடைத்தும் நிரப்ப முடியாத மிகப்பெரிய வெற்றிடமாக இருந்துகொண்டிருப்பது 'அவர்கள் அம்மா, அப்பா!' மட்டுமே. இதை யாரால்தான் நிவர்த்தி செய்யமுடியும்?

இங்கு இருக்கும் சிறுவர்களில் எனது பெஸ்ட் ப்ரெண்ட் காவியா. 4 வயது நிரம்பிய குறும்புக்கார சுட்டிப்பெண். அவளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும், அதிலும் அவள் குண்டுக்கன்னங்களை அடிக்கடி கிள்ளி அவளை கடுப்பாக்குவதில் எனக்கு அத்தனை ஆனந்தம். அவளுக்கோ அது உச்சக்கட்ட சித்திரவதை என்று தெரிந்தும் என்னால் அதை தவிர்க்க முடிவதில்லை. இந்த குறும்புக்கார என் பெஸ்ட் ப்ரெண்டுக்கு பின்னால் ஒரு வலி நிறைந்த கதை இருக்கிறது. ஆனாலும் அதை அவள் உணர ஆரம்பிக்கும் வயது இன்னும் வரவில்லை. ஓர்நாள் அந்த வயது நிற்சயம் வரும். அன்று அவள் என்ன ஆவாள் என்பதுதான் என்றும் எனது மனதை சஞ்சலப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு ஏக்கம். இப்பொழுது தனது பெற்றோர் பற்றி அவளிற்கு எந்த கவலையும் இல்லை. அந்த கன்னியாஸ்திரிகளின் மடிகளில் குதூகலமாக நாட்களைக் களித்துக்கொண்டிருக்கிறாள்.

இறுதிக்கட்ட போரில் அவள் தந்தையும் சகோதரனும் கொல்லப்பட்டபோது இவள் கைக்குழந்தையாக அவள் தாயின் கைகளில் தொங்கிக்கொண்டிருந்தாள். இறுதியாக அவள் தாய் தன் நெஞ்சறைக்கு அருகில் வந்து விழுந்த ஒரு செல்துகளால் தாக்கப்பட்டு விழுந்த பொழுதும் அவள் மகள் காவியாவை கைவிடவில்லை. ஒருவாறாக தன் காயங்களில் சீழ்வடிய ஆரம்பித்த தறுவாயில்கூட கவனமாக காவியாவை தன்கூடவே அரசாங்க கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு கொண்டுவந்திருந்தாள். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த காலகட்டத்தில் காவியா இந்த கன்னியாஸ்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின்னர் நடந்தவை பற்றி எந்தவித தகவல்களும் எனக்கு தெரியவில்லை, ஒன்றைத்தவிர. அன்றிலிருந்து காவியாவின் தாய் காணாமல் போய்விட்டாள்.

அதன் பின்னர் அந்த கைக்குழந்தை காவியா இந்த கன்னியாஸ்திரிகளாலேயே வளர்க்கப்பட்டாள். காவியாவிற்கு இப்பொழுது 5 அம்மா, அப்பாக்கள். அங்கிருக்கும் அனைத்து கன்னியாஸ்திரிகளும். முப்பதிற்கும் மேற்ப்பட்ட அக்காக்கள். அவள் அறிவு தெளியும் வயதுவரை இந்த சொந்தம் அவளுக்கு எக்கச்சக்கமான சந்தோசங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதுதான் அவள் உலகம் என எண்ணிக்கொண்டிருக்கிறாள். அவள் சுகயீனமுற்றிருந்த ஒரு நாளில் அவளை சென்று பார்த்தேன். அன்றுதான் அவள் குட்டிக் கண்களில் கண்ணீர்த்துளிகளை பார்க்க நேர்ந்தது. அழுதபடி கட்டிலில் அழகிய சிவப்பு நிற போர்வைக்குள் சுருண்டுகொண்டிருந்தாள். என்னைப்பார்த்து இன்னும் இன்னும் அழ எத்தனிக்கையில் நான் என்னை கட்டாயமாக அந்த அறைக்குளிருந்து வெளியே கொண்டுவந்தேன். காவியா அழுவதை பார்ப்பது எத்தனை கொடுமை என்பதை என் கண்களும் அன்று நன்றாகவே அறிந்து வைத்திருந்தன.

இன்னுமொருநாளில் இந்த சம்பவம் நடந்ததாக என்னிடம் அந்த கன்னியாஸ்திரி சொன்னார். அவளைத்தத்தெடுப்பதற்காக ஒரு குடும்பம் அங்கு சென்றிருக்கிறது. அவர்கள் யார்மூலமாகவோ அந்த காவியா பற்றி கேள்விப்பட்டிருக்க வேண்டும். மிகவும் வசதி வாய்ப்பு நிறைந்த குடும்பம் அது. அவர்களிடத்தில் ஏராளமாக கிடந்த பணத்தைப்போல அவர்களிடம் தாராளமாக இதயமும் இருந்திருக்க வேண்டும். காவியாவிற்க்கான ஒரு அழகிய வாழ்க்கை காத்துக்கொண்டிருந்தது. இதை என்னிடத்தில் அந்த சிஸ்டர் சொன்னபோது, என்னுள்ளே அப்படியொரு சந்தோஷம். இப்படியொரு செய்தியை கேட்பதற்கு நான் நீண்ட நாட்கள் காத்துக்கொண்டிருந்தேன் என்றுகூட சொல்லலாம். காவியாவின் வாழ்க்கை பற்றி அந்த கன்னியாஸ்திரிகளுக்கு மட்டுமல்ல எனக்கும் பெரியதொரு எதிர்பார்ப்பு இருந்துகொண்டேதான் இருந்தது. அது, நாளுக்கு நாள் என்னை மனச்சஞ்சலத்துள் தள்ளுவதும் உண்டு.

அவர்கள் வந்திருக்கிறார்கள். அப்பொழுது காவியா தன் செல்ல பண்டா கரடி பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருக்கிறாள். அவர்களுடன் செல்வதற்கு காவியா விரும்பாவிட்டாலும் அழுது அழுது அவர்கள் காரினுள் ஏறிக்கொள்ளும் காவியாவை கண்கலங்க அனுப்பிவைக்கிறார்கள் அந்த கன்னியாஸ்திரிகள். காவியா சென்றுவிட்டாள். காவியா இல்லாத அந்த இல்லத்தை கன்னியாஸ்திரிகளால் மட்டுமல்ல என்னாலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இரண்டு மூன்று நாட்கள் கடந்தது. காவியாவை கூட்டிச்சென்ற அந்த வீட்டாட்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. "சிஸ்டர், காவியா இங்க வந்ததில இருந்து ஒரே அழுகை. எதுவும் சாப்பிட மாட்டேன் என்கிறாள். அவள் அழுகைய யாராலையும் கட்டுப்படுத்த முடியல.. இன்னைக்கு காலைல அவளுக்கு காச்சல் வேற வந்துட்டுது.. ரெண்டுதடவ சத்தியும் எடுத்துட்டாள். இரவிரவா உங்க பெயர சொல்லி சொல்லித்தான் அழுகிறாள், சாரி சிஸ்டர், அவள திரும்ப கொண்டுவந்து விட்டுடுறம்." தொடர்பு துண்டிக்கப்பட்டு சில மணிநேரங்களில் அவர்கள் கார் சிறுவர் இல்லத்தை வந்தடைந்தது. காரை நோக்கி ஓடிச்சென்ற சிஸ்டரை ஓடிவந்து கட்டிக்கொள்கிறாள் காவியா. அழுது அழுது களைத்திருந்தாள். உடம்பெல்லாம் கொதித்துக்கொண்டிருந்தது. சிஸ்டரின் தோளில் சாய்ந்தபடி காவியா சொல்லியிருக்கிறாள் "அம்மா இனி என்னைய யாருகூடவும் அனுப்பாதீங்க!".

காவியாவின் புகைப்படம் ஒன்றை அண்மையில் எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார் அந்த சிறுவர் இல்லத்தின் தலைமை கன்னியாஸ்திரி. அந்த புகைப்படத்தில் ஒரு அழகிய பண்டா பொம்மையுடன் மின்னல் வெட்டும் அவள் அழகிய புன்னகையோடு ஜொலித்துக்கொண்டிருக்கும் காவியாவை பலநாட்கள் கண்வெட்டாமல் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். அந்த பொம்மையை அவள் இன்னமும் தன் அழகிய குட்டிக்கைகளுக்குள் அரவணைத்தபடி வைத்திருக்கிறாள் என்பது எனக்குக்கிடைத்த மேலதிக சந்தோஷம். அதை ஒரு நத்தார் தினத்தில் அவளுக்கு பரிசளித்திருந்தேன்.


அடுத்தவாரமும் வருவேன்.Sunday, August 10, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 20


சென்ற வாரம் கவிதா பற்றிய குறிப்பொன்றை இட்டிருந்தேன். அவள் தன்னம்பிக்கையை மெச்சுவதற்கு ஒரு குறிப்பு போதாது என்று எப்பொழுதும் நான் நினைப்பதுண்டு. கவிதா பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் அவளுக்கு இன்னும் இன்னும் வாழ்க்கை பற்றிய தைரியத்தை ஊட்ட வேண்டும் என்று தோன்றும். அவள் கடந்து செல்லப்போகும் கடினமான பாதைகளை இலகுவாக கடந்துசெல்ல அவளுக்கு இன்னும் இன்னும் தைரியம் கொடுக்கப்படவேண்டும். நான் அவளுக்காக கடவுளிடம் வேண்டுவதும் அதுவே.

தியாகம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. தேவையானதும் கூட. சின்ன சின்ன தியாகங்கள் வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. அதுவும் இன்னுமொருவரிற்கு நாங்கள் செய்யும் ஒரு சிறிய அளவிலான தியாகம் கூட நம் 'சமூக பிராணி' என்கின்ற சேர்ந்து வாழ்தல் சித்தார்ந்தத்தை மேலும் மேலும் உறுதியடையச்செய்கிறது. அழகான வாழ்க்கையொன்றில் தொட்டுணர முடியாத ஆயிரம் ஆயிரம் தியாகங்கள் மறைந்துகிடக்கும். அந்த வாழ்க்கையை அர்த்தமுடையதாக மாற்றுவதில் அத்தியாகங்களே பிரதான பங்குவகிக்கிறது. ஒரு குழந்தையின் வாழ்க்கையை, எதிர்காலத்தை அழகுற மாற்றுவதற்கு ஒரு பெண்ணால் எந்த அளவிற்கு தியாகங்கள் செய்ய முடியும் என்பதற்கு கவிதா மிகச்சிறந்த உதாரணம் என்பேன். இப்படி நூற்றுக்கணக்கான தியாகிகளை உருவாக்கியதில் முள்ளிவாய்க்காலிற்கு மிகப்பெரிய பங்குண்டு. அதேபோல இன்னும் எத்தனை எத்தனை கவிதாக்கள் வன்னியில் இருப்பார்கள் என்பதும் நமக்குத் தெரியும். சரி, இவ்வாரக் குறிப்பிற்கு வரலாம்.

மழை சோவெனக் கொட்டிக்கொண்டிருந்தது. மழையின் தீவிரமான விழுதல் நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின் மேற்கூரையை மூர்க்கமாக மோதிக்கொண்டிருந்தது. வீதியெல்லாம் நீர்த்தேக்கம். புதுக்குடியிருப்பு வீதிகள் தங்கள் மேல் விழும் தூய மழைநீரை தங்களைப்போல செம்மஞ்சள் நிறமாக மாற்றிக்கொண்டிருந்தன. அந்த வீதியில் ஒவ்வொரு ஐந்து மீட்டரிற்கும் குறைந்தது இரண்டு பாரிய குழிகள் பயங்கரமாய் வாய்பிழந்து நின்றன. ஒவ்வொரு குழிகளிற்கும் இறங்கி இறங்கி அந்த தண்ணீரையெல்லாம் பிய்த்தெறிந்துகொண்டு எங்கள் வாகனம் 'கவச வாகனம்' போல கம்பீரமாக முன்னேறிக்கொண்டிருந்தது. முல்லைத்தீவு – பரந்தன் வீதியூடாக சென்று புதுக்குடியிருப்பு சந்தியை கடந்து சிறிது நேரத்தில் வலப்பக்கமாக திரும்பி ஐந்து நிமிட பயணத்தில் அந்த ஊரை நாங்கள் கண்டடைந்ததாக ஞாபகம்.

அது ஒரு அழகான ஊர். போர் கன்னா பின்னாவென்று அந்த அழகிய ஊரை தின்று தீர்த்திருந்தது. முன்னர் இறுமாப்பாக நிமிர்ந்து நின்ற பல பனைமரங்களும் தென்னை மரங்களும் இப்பொழுது தலையின்றி வெறும் முண்டமாக நின்றுகொண்டிருக்கின்றன. அவற்றை பார்த்தபொழுதெல்லாம் என் பிண்டம் வரை வியர்த்துக்கொட்டியது. போரின் அகோரத்தை அந்த மரங்கள் எனக்கு அழகாக மொழிபெயர்த்தன. அதிகமான வீடுகள் உடைந்து அரைவாசியில் அரையும் குறையுமாக நின்றுகொண்டிருந்தன. மீதி வீடுகள் இருந்த இடத்தைக் கூட அவ்வீட்டாட்களால் அடையாளம் காண முடியாத அளவிற்கு தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. அந்த கிராமம்; இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டும் புத்துயிர் பெற்று எழுந்துகொண்டிருந்தது. மக்கள் நடந்தவற்றை மறக்க எத்தனிக்கையில் அந்த தலையற்ற பனைமரங்கள் அவர்களை மீண்டும் முள்ளிவாய்க்காலிற்கு அழைத்துச்சென்றுகொண்டிருக்கிறது. பாவம் அந்த மக்கள். அங்கு இருக்கும் எவரிடமும் நலமாக இருக்கிறீர்களா என என்னால் கேட்க முடியவில்லை. ஒவ்வொருத்தரிற்குள்ளும் ஏதோ ஒரு ரணம் காயாமலேயே சீழ்பிடித்து வடிந்துகொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். அந்த ரணங்களோடு இன்றுவரை சதாபொழுதுகளும் செத்துக்கொண்டிருக்கும் அவர்களிடம் எப்படி நலமா எனக் கேட்பது? 

அந்த கிராமத்தில் முதல் முதலாக ஒரு வயதான அம்மாவை சந்திக்கக்கிடைத்தது. ஒரு அறுபது வயது இருக்கும் அந்த அம்மாவிற்கு. அருகிலிருந்த கிணற்றில் தான் கொண்டுவந்திருந்த தண்ணீர்க்குடத்தை நிரப்பிக்கொண்டிருந்தார். கொஞ்சம் அருகில் சென்று பேச்சை ஆரம்பித்தேன். என்னை இன்முகத்தோடு கண்டிப்பாக தனது வீட்டிற்கு வந்துசெல்லும்படி அழைத்தார். தலைமேல் உள்ள அந்த சும்மாட்டின்மேல் தூக்கி நிறுத்திய குடத்துடன் முன்னே செல்லும் அந்த அம்மாவை நானும் பின்தொடர்ந்தேன். அந்த அம்மாவின் வீட்டை அடையும் வரை இடைவெளியில்லாமல் இருவரும் பேசிக்கொண்டே நடந்தோம். அழகாக மூச்சு விட முடியாமல் பட படவென பேசிக்கொண்டு வேகமாக நடந்துகொண்டிருக்கும் அந்த அம்மா எனது அம்மாவை ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தார். எனது அம்மாவும் அப்படித்தான், பேச ஆரம்பித்தால் பட படவென வேகமாக ஒரே ப்ளோவில் போய்க்கொண்டிருப்பார். கேட்பதற்கு ஆகோனின் ரப் பாடல் போல இருக்கும். அந்த அம்மாவின் வீட்டை அடைந்தேன். நான்கு கம்புகளாலான அந்த படலையை திறந்து வீட்டு வளவினுள் என்னை அன்பாக அழைத்தார். நானும் அந்த குறுக்காக கட்டப்பட்டிருந்த தடிகளைக் கடந்து உள்ளே நுழைந்தேன். மிகப்பெரிய வளவு. வானுயர வளர்ந்து தலைகளை சல சலவென ஆட்டிக்கொண்டு நிமிர்ந்து நிற்கும் தென்னை மரங்கள். வீட்டினுள்ளே என்னை அழைத்து தரையில் விரிக்கப்பட்டிருந்த நீல நிற பாயில் அமர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார். பாயின் மேல் ஆரவாரமில்லாமல் அமர்ந்துகொண்டாலும் எனது கண்கள் ஆரவாரமாய் அந்த வீட்டை அங்கும் இங்குமாய் நோட்டம் விட்டபடி விழித்துக்கொண்டிருந்தது. 

அதை வீடு என்று சொல்வதை விட ஒரு குடிசை என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாய் இருக்கும். மன்னிக்கவும் அதை இன்னும் மிகச்சரியாக குறிப்பிட வேண்டுமானால் 'மிகச்சிறிய' குடிசை என்று கருத்துப்பிழையின்றி சொல்லலாம். 'வீடு தரைமட்டம் அப்பு!' என எதிரிலிருந்த வெறும் அத்திவாரக் கற்களைக்காட்டிக் கூறினார் அந்த அம்மா. நான்கு அல்லது ஐந்து அறைகள் கொண்ட ஒரு பெரிய வீடு அது என்பதை அந்த வீட்டின் அத்திவாரத்தைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். போரிற்கு முன்னர் இந்த குடும்பம் நல்லதொரு பொருளாதார இயலுமை மிக்க பணக்காரக் குடும்பமாக இருந்திருக்க வேண்டும். இப்பொழுது இவர்கள் வாழ்க்கை முழுவதுமாய் மாறிப்போய்க்கிடக்கிறது. சிறிது நேரத்தில் அந்த அம்மாவின் கணவர் அங்கு வந்து சேர்ந்தார். 'எப்படி சுகம் தம்பி?' என விசாரித்தபடி எனக்கு அருகில் வந்து மெதுவாக அமர்ந்துகொண்டபோதுதான் அதை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. அந்த ஐயாவின் இடது பக்கம் செயற்கை கால் பொருத்தப்பட்டிருந்தது. 

அவர்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். நேரம் ஒரு மணித்தியாலத்தை நெருங்கிக்கொண்டிருந்ததைக் கூட என்னால் உணர முடியவில்லை. அவ்வளவு சுவாரஷ்யமாக பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது இரண்டு நபர்கள் கேள்வியில்லாமல் திடீரென அந்த வீட்டினுள் நுழைந்தனர். யார் இவர்கள்? கேட்டுக்கேள்வியில்லாமல் இப்படி வீட்டினுள்ளே நுழைவது? எனக்குள்ளே படபடத்துக்கொண்டேன். அதில் ஒருவர் சிறிது நேரம் கவனமாக என்னை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அந்த பார்வை எனக்குள்ளே கொஞ்சம் பயத்தை விதைக்கத்தொடங்கியது. அப்படியொரு லுக்கு அது! சில நிமிடங்கள் கடந்தும் அந்த நபரின் பார்வை மட்டும் என்னை கடந்து போவதாய் இல்லை. அதை பார்வை என்று சொல்லுவதைவிட முறைத்தல் என்று சொல்லுவது கொஞ்சம் யதார்த்தமாக இருக்கும். என்னை ஆமிக்காரன் என்று நினைத்திருப்பார்களோ?

அப்படியே வந்த இருவரும் சட்டென வீட்டினுள் போய் மறைந்தார்கள். அந்த இருவரில் ஒருவரிற்கு பத்து வயது இருக்கும். மற்றவரிற்கு, அதுதான் என்னை முறைத்துப்பார்த்த அந்த பெரியவரிற்கு சுமார் ஏழு அல்லது எட்டு வயதுதான் இருக்கும். பாடசாலை முடிந்து வீடு வந்திருக்கிறார்கள் இருவரும். யார் இந்த இரண்டு குட்டிப்பையன்களும்? இதே கேள்வியை இப்படியே அந்த அம்மாவிடம் கேட்டேன். 'என்ட பேரப்புள்ளைகள் அப்பு.. சரியான குளப்படிகள்.. அதுவும் இந்த ரெண்டாவது இருக்கே.. நல்லா அடியும் போடுறனான்...' சிரித்தபடி கூறிமுடித்தார் அம்மா. 'கொஞ்சம் இவர்கூட பேசிக்கிட்டு இருங்க அப்பு நான் இதுகள் ரெண்டுக்கும் சாப்பாடு குடுத்துட்டு வாரன்...' என மறுபுறம் திரும்பிக்கொண்டார் அம்மா. அவர்கள் படுக்கையறைக்கும் சமையல் அறைக்கும் வெறும் ஐந்து மீட்டர்தான் இடைவெளி. அந்த கொட்டிலின் வலப்புறம் சமையலறை, இடப்புறம் படுக்கையறை.

'இவங்க அம்மா அப்பா வேலைக்கு பொயிட்டாங்களா ஐயா?' என சோற்றை வாயில் திணிக்க முயன்றுகொண்டிருக்கும் அந்த இரண்டு பையன்களையும் காட்டி அருகிலிருந்த ஐயாவிடம் கேட்டேன். 'ச்சே ச்சே.. அவங்க ரெண்டு பேரும் மோஷம் போயிட்டாங்க!' என சாதாரணமாக கூறினார். 'என்ன சொல்லுறீங்க??' ஆவலாக பெரிய கேள்விக்குறி ஒன்றை முகத்தில் நீட்டினேன். அவர்கள் கதை இவ்வாறு இருந்தது. 'நாங்களும் என்ட புள்ளையின்ட குடும்பமும் ஒண்ணாத்தான் முள்ளிவாய்க்கால்ல இருந்தம் தம்பி. யார்ட கெட்ட காலமோ என்ட புள்ளையையும் அவ புருசனையும் ஒரே நாளில பறிகுடுக்கவேண்டிப்போச்சு. இதுகள் ரெண்டும்தான் தப்பினது. அதுக்கு புறகு என்ன பண்ணுறது இந்த ரெண்டு பசங்களையும் ஒருமாரி காப்பாத்தி இங்கால கொண்டு வந்து சேத்துட்டம். நாங்கதான் இவங்கள வளக்கணும். எனக்கும் வேற பிள்ளைகள் இல்ல. நாங்க சாகாம இருக்கணும் தம்பி. இல்லேனா இதுகள் ரெண்டும் நடுரோட்டிலதான். எனக்கும் ஏலாது, அவதான் இவங்களுக்கு எல்லாம் பண்ணிக்கிறது..'

எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. இந்த அம்மாவுக்கும் ஐயாவிற்கும் அறுபது வயது இருக்கும். அந்த இரண்டு சிறுவர்களும் பத்து வயதிற்கு குறைந்தவர்கள். இவர்கள் இருவரின் வாழ்க்கையும் இந்த அம்மா, ஐயாவினுடைய உயிர்வாழ்தலில்தான் தங்கியிருக்கிறது. ஒரு தொடரான பெருமூச்சுக்கள் எனக்கு தெரியாமலேயே வெளியேறிக்கொண்டிருந்தது. ஒரு கணம் அப்படியே இருந்துவிட்டு மறுபுறம் திரும்பி அந்த இரண்டு சிறுவர்களையும் பார்த்தேன். என்னை முறைத்துப்பார்த்த அந்த குட்டிப்பையனிடம் நான் ஆமிக்காரன் இல்லை என அந்த அம்மா சொல்லியிருக்க வேண்டும், இப்பொழுது என்னைப்பார்த்து அழகாக ஒரு புன்னகையை உதிர்க்கிறான் அந்த சுட்டி.

அடுத்த வாரமும் வருவேன்.

படம்: கூகுள்.

     


Thursday, August 7, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 19


காஸா எரிந்துகொண்டிருக்கிறது. இஸ்ரேல் தனது மூர்க்கத்தனமான இனஅழிப்பின் மூலம் தனது நில அவாவை கொஞ்சம் கொஞ்சமாய் பூர்த்திசெய்துகொண்டிருக்கிறது. அன்று முள்ளிவாய்க்காலை கைகட்டி வேடிக்கை பார்த்த அதே சர்வதேசம் தன் ஊழைக்கண்களால் இன்று காஸாவையும் பார்த்து மௌனித்து நிற்கிறது. காஸாவின் ஒவ்வொரு அழுகுரல்களும் முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்தியபடியே கடந்துகொண்டிருக்கிறது. காஸா வடிக்கும் இரத்தத்தின் உஷ்ணத்தை எம்மால் நன்றாக உணரமுடிவதற்கு முள்ளிவாய்க்கால் விட்டுப்போன இரத்தக்கறைகள் உதவியாக இருக்கிறது. உலகநாடுகளின் மனச்சாட்சியையும், மனிதாபிமானத்தையும் எப்படி அன்று தமிழர்களால் வெல்லமுடியாமல் போனதோ அதேபோல்தான் பலஸ்தீனியர்களாலும், உலக முஸ்லிம்களினாலும் அதை இன்று அடையமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வரலாறுகள் என்றுமே மாறப்போவதில்லை. உலக அரசியல் அரங்கில் என்றும் அப்பாவி மக்கள் பகடைக்காய்களாகவும் மிருகங்களாகவுமே நடத்தப்படுவார்கள். காஸாவிற்கு எனது பிரார்த்தனைகள்.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் கொன்றுகுவிக்கப்பட்ட அப்பாவித்தமிழர்களில் முதியவர்கள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என சகலரும் அடங்குவர். வந்து விழுந்த குண்டுகளிற்கு இவர்கள் யார்மேலும் இரக்கம்வரவில்லை. வெடித்து சிதறிய எங்கள் உடல்களைப்பார்த்து அந்த குண்டுகள் ஆனந்தமடைந்தன அவற்றை ஏவியவர்கள் போல. இவற்றுள் கொன்றுகுவிக்கப்பட்டவர்கள் போக ஏனையோர் கண்ணீரும் குருதியுமாய் முல்லைத்தீவு கடற்பரப்பைவிட்டு வெளியேறியபோது சொல்லொண்ணா மனச்சுமைகளை அவர்களோடுசேர்த்தே கொண்டுவந்தனர். அந்த சுமைகள் இன்றும் அவர்கள் மனங்களையும் உடல்களையும் விட்டு இறங்கியதாய் இல்லை. அவற்றை இறக்கிவைக்க முடியுமா எனவும் தெரியவில்லை.

ஒருமுறை முல்லைத்தீவில் ஒரு சகோதரியைச் சந்தித்தேன். அழகிய வதனம் ஆனால் அந்த முகத்தில் மட்டும் ஆயிரம் சோகத்தழும்புகள். என்னால் அவற்றை தெளிவாக கண்டுணர முடிந்தது. அந்த சகோதரியின் பெயரை கவிதா என வைத்துக்கொள்ளுவோம். கவிதாவை நான் முதல் முதல் பார்த்தபொழுது என் கண்களையும் மூளையையும் முந்திக்கொண்டு வந்தடைந்தவை அவள் முகத்தில் தெறித்துக்கொண்டிருந்த ஏதோவொரு சோகம் அல்லது பாரம்தான். இளம் பெண். ஒரு 20 வயது இருக்கும். அவள்பற்றி நான் முதல் முதல் அறிந்துகொண்டபோது எனது இதயத்தை ஆயிரம் ஆயிரம் மலைகள் அழுத்துவதைப்போல உணர்ந்தேன். கண்ணீரையும் கடந்து எவ்வளவு தன்னம்பிக்கை அவளுக்கு? வலிகளையும் மறந்து எத்தனை துணிச்சல் அவளுக்கு? வேதனைகளையும் தாண்டி எத்தனை எதிர்பார்ப்புக்கள் அவள் வாழ்க்கைமேல்??

கவிதாவின் பெற்றோர் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார்கள். அவள் குடும்பத்திலிருந்து கவிதாவினால் மட்டுமே அந்த கொடூரமான குண்டுகளைத்தாண்டி தப்பித்துக்கொள்ள முடிந்தது. அதேபோல கவிதாவினால் இன்னுமொரு உயிரையும் காப்பாற்றி தன்னோடு கொண்டுவரமுடிந்ததுதான் அவளின் உச்சக்கட்ட துணிச்சலின் வெளிப்பாடு. அது ஒரு குழந்தை. ஒரு வயது மட்டுமே கடந்திருந்தது அப்பொழுது. அது வேறுயாருமல்ல அவளது அக்காவின் குழந்தை. அக்காவும் அக்காவின் கணவரும் அவள் பெற்றோரைப்போல ஒரே இடத்தில் கொல்லப்பட்டனர். இறுதியில் அந்த குடும்பத்திலிருந்து தப்பியவர்கள் கவிதாவும் இந்த சிறிய குழந்தையும்தான். இப்பொழுது கவிதாதான் அக்குழந்தையை வளர்த்துக்கொண்டிருக்கிறாள். இப்பொழுது அக்குழந்தைக்கு தாய் கவிதாதான். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், கவிதா இப்பொழுது பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறாள். இரண்டாம் வருடம். அவள் பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற நாட்களில் அவள் உறவினர்கள் அக்குழந்தையை கவனமாக பார்த்துக்கொள்கிறார்கள். சிறு சிறு விடுமுறை கிடைக்கின்றபொழுதெல்லாம் கவிதா வீட்டிற்கு ஓடிவிடுகிறாள் அவள் குழந்தைக்காக. கவிதா இப்பொழுது அக்குழந்தையின் முழுமையான தாய்.

கவிதா எத்தனை தைரியமான பெண் என்பதை இதற்கு மேலும் நான் சொல்லித் தெரியதேவையில்லை. அவளது தைரியம், தன்னம்பிக்கை, தனது மற்றும் அக் குழந்தை மீதான எதிர்கால நம்பிக்கை அதற்கான அயராத முயற்சி என பல விடயங்களில் என்னை வாயில் கையைவைக்குமளவிற்கு மாற்றியிருந்தாள். என்னால் கவிதாவை ஒரு தெய்வாதீனமான பெண்ணாகவே பார்க்க முடிந்தது. எனது வாழ்க்கையில் கைகளை எடுத்து கும்பிட்டு உண்மையாக பெருமிதம் கொள்ள வைத்த முதல் இளம்பெண் இவள்தான். அவள் வார்த்தைகளில் அப்படியொரு தன்னம்பிக்கை தெறித்துக்கொண்டிருக்கும். அவள் விழிகளில் எப்பொழுதும் அப்படியொரு தைரியம் சுழன்றுகொண்டிருக்கும். ஒரு லிப்டிக்ஸ்சுக்காக மனமுடைந்து ஏங்கும் இன்றைய பெண்கள் மத்தியில் இவள் எத்தனை சிறப்பானவள். கவிதாவைப் பார்த்தபொழுது பாரதியார் ஆரம்பித்த புதுமைப்பெண் தேடல் பயனற்றுப்போகவில்லை எனத் தோன்றியது. என்னைவிட நம் தமிழ் இளம்பெண்களுக்கு அவளிடம் கற்றுக்கொள்ள ஆயிரமாயிரம் பாடங்கள் பரந்து கிடக்கிறது.

சில மாதங்களின் பின்னர் இரண்டாம் முறை கவிதாவை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவளை பார்ப்பதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை நான் என்றும் எதற்காகவும் இழந்துவிட நினைப்பதில்லை. அன்று அவள் தன் குழந்தையோடு வந்திருந்தாள். அன்று அக்குழந்தை கவிதாவை 'அம்மா' என அழைத்த அந்த ஒரு நொடியில் என் கண்கள் சடாரென குளமாகி வழிய ஆரம்பித்தது. அக்குழந்தையின் முகத்திலும் கவிதாவின் முகத்திலும் அப்படியொரு வெளிச்சம், வதனம், ஒளிவட்டம். நான் குழந்தையை தூக்கி எடுக்க முயன்றபொழுது அது அம்மாவின் கரங்களைவிட்டு நகரமாட்டேன் என அடம்பிடித்தது. அக்குழந்தையின் வெட்டி வெட்டி மின்னும் அந்த கண்கள் இன்னும் என் கண்களுக்குள் சுற்றி சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. அன்று கவிதாவிடம் நிறைய பேசக்கிடைத்தது. அவள் ஒவ்வொரு பேச்சிலும் ஆயிரம் அர்த்தங்களும் பாடங்களும் சரமாரியாய் வந்து விழுந்தது. "எனக்கு இவன், அவனுக்கு நான். இதுதான் எனது வாழ்க்கை!" குழந்தையைக் காட்டி அடித்துக்கூறினாள். குழந்தை மீதான அதீத பாசம், அக்கறை, எந்த உலக ஆசாபாசங்களும் எங்களை பிரிக்க முடியாது என்கின்ற நம்பிக்கை, அக் குழந்தையை நன்றாக வளர்த்தெடுப்பேன் என்கின்ற தற்துணிவு, என்னுடைய எல்லா தேவைகளும் ஆசைகளும் எங்கள் இருவர் சார்ந்தவை மட்டுமே என அவள் சொன்னவிதத்தில் எக்கச்சக்கமான கருத்துக்கள் தொக்கி நின்றன.

'கவிதா, உனது வாழ்க்கை பற்றியும் கொஞ்சம் யோசிக்கணும் இல்லையா? ஐ மீன் குழந்தையுடன் சேர்த்து...' 

என நான் குறுக்கிட்டபோது கொஞ்சம்கூட யோசிக்காமல் பட படவென அவள் பதிலை உதிர்க்கத்தொடங்கினாள். 

"எனக்கு அதில் நம்பிக்கை இல்லை அண்ணா, என்னை காதலிப்பதாய் சொல்பவர்கள் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்றதும் துண்டைக்காணோம் துணியைக்காணோம்னு ஓடிவிடுகிறார்கள். அதிலும் அதிகமான ஆண்கள் அந்த குழந்தை யார், உனக்கு எப்படி குழந்தை  என்றெல்லாம் விசாரிப்பதில்லை. அப்படி விசாரிக்கும் எல்லோருக்கும் நான் இதை விளங்கப்படுத்த முற்படுவதும் இல்லை. எனக்கு இதுதான் குழந்தை. இன்றுமட்டுமல்ல நான் சாகும்வரைக்கும்... என்னையும் எனது நிலையையும் அவ்வளவு இலகுவாகவும் சீக்கிரமாகவும் எந்த ஆணினாலும் புரிந்துகொள்ள முடியாது அண்ணா.. நீங்க என்ன சொல்லுறீங்க??'

நான் வாய் அடைத்து ஒரு பெருமூச்சை விட்டுத்தள்ளுவதைவிட என்னால் என்ன சொல்லமுடியும் சொல்லுங்கள். ஆம் என்றோ இல்லையென்றோ அதை உறுதிசெய்துகொள்ள எத்தனிக்காமல் 'ம்ம்ம்.. நீர் சொல்வது முழுவதும் தவறு என்று என்னால் சொல்ல முடியாது..' என தலையை ஆட்டினேன். உண்மையில் யோசித்துப்பார்த்தால் எத்தனை இளம் ஆண்களால் கவிதாவின் நிலையை சரியாக புரிந்துகொள்ள முடியும். அப்படி புரிந்துகொண்டாலும் கவிதாவை தன் குழந்தையோடு ஏற்றுக்கொண்டு அவளுக்கு வாழ்க்கை கொடுக்க எத்தனை ஆண்கள் தயாராக இருக்கிறார்கள்? 

அது ஒரு விடுமுறைநாள். ஒரு நீண்ட விடுமுறைக்கு பின்னர் கவிதாவை முல்லைத்தீவில் சந்திக்கும் சந்தர்ப்பம் மீண்டுமொருமுறை கிடைத்தது. அவள் குழந்தையுடன் எதிரில் வந்துகொண்டிருந்தாள். அருகில் வந்ததும் முதலாய் குழந்தையை முத்தமிட நெருங்கிய பொழுது அவள் நெற்றியில் இருந்த சிவப்பு நிற பொட்டை அவதானித்தேன். திருமணம் முடிந்திருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன். அதையே முதல் பேச்சாக எடுக்காமல் ஒரு பத்து நிமிடங்களின் பின்னர் இந்த விடயத்திற்கு வந்து நின்றேன். 

'என்ன கவிதா, நல்ல விஷயமெல்லாம் நடந்திருக்கு போல.. சொல்லவே இல்ல...' 
என சிரித்தபடி அந்த சிவப்பு பொட்டை கண்களால் சுட்டினேன். அவள் சர்வசாதாரணமாக சிரித்துவிட்டு 'இல்லை அண்ணா, அது பெரிய ஸ்டோரி..' என தலையைக் குனிந்துகொண்டாள். 'என்ன ஆச்சு..??' என்றேன். 'அதவிடுங்க வேற ஏதாச்சும் பேசலாம்..' என கதையை திசைதிருப்ப முற்பட்ட கவிதாவை நான் தடுக்கவில்லை. அவளுக்கு வேதனை கொடுக்கும் அல்லது அவளை இடஞ்சல் செய்யும் எந்த விடயத்தையும் நான் பேச விரும்புவதில்லை. அது அவளின் மன நின்மதிக்கு பங்கம் விளைவிப்பதாய் அமைந்துவிடும்.

சிறுவாரங்கள் கழிந்து அவள் நண்பியை தொடர்புகொண்டபொழுதுதான் அந்த காரணத்தை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. 'உங்களுக்கு தெரியும்தானே அவள் அது தன்ட குழந்தை எண்டுதான் கேக்குற எல்லாருக்கும் சொல்லுறது. அந்த பேபியும் இவள அம்மா எண்டுதானே எப்பவும் கூப்பிடுறது. சோ, எல்லாரும் அவள தப்பா நினைக்கிறதும் அவளுக்கு முன்னாலயே தப்பு தப்பா பேசுறதும் அவளுக்கு தாங்க முடியிறது இல்ல. வெளில எங்க போனாலும் அந்த குழந்தைய கூட்டிக்கிட்டுத்தான் போறவ, சோ பொட்டு வச்சிருந்தா பாக்கிறவங்க இவள தப்பா சொல்லமாட்டாங்க, உண்மையா இவ களியாணம் முடிச்சிட்டா அதான் இந்த குழந்த எண்டு விட்டுடுவாங்க.. அதோட சும்மா பாய்ஸ்சும் அவள தொந்தரவு செய்ய மாட்டாங்க.. அதான் இப்ப பொட்டோட திரியுறாள்...!' 

நம் சமூகம் மீதான எனது அவநம்பிக்கையும், ஆத்திரமும் இன்னொருமுறை மூளையில் வந்து மறைந்தது. கவிதாவை எப்பொழுதும் எனது மன்றாட்டுக்களில் நினைத்துக்கொள்வேன்.. எப்பொழுதும்! அத்தோடு கவிதாவை பாராட்டாமல் இக்குறிப்பை முடித்துக்கொள்வது தர்மம் அல்ல. வாழ்த்துக்கள் கவிதா. நீ ஒரு மதிப்பிற்குரியவள். 

அடுத்த வாரமும் வருவேன்.Wednesday, August 6, 2014

ஒரு மந்திர தேவதை.

ஒரு மாலை அரைகுறையாய் அழுதுகொண்டிருந்தது. வானத்திலிருந்து விழும் ஒவ்வொரு துளியிலும் ஒரு தனிமை ஒட்டியிருந்தது. ஏதோ தங்களை முழுதாக நனைத்து இன்பம் கொடுக்கமுடியாத அந்த கேவலம்கெட்ட மழையை பார்த்து அந்த மரங்கள் காறித் துப்பிக்கொண்டிருந்தது. அந்த எச்சிலின் சிறுதுளிகள் பாதையை விலத்தி என் தலையிலும் அவ்வப்போது வந்துவிழுந்தது. பகலிற்கோ அந்த நாளைவிட்டுப் போக மனமில்லை. இரவோ இரவோ தனது வருகையை பகலின்மேல் திணித்துக்கொண்டிருந்தது. எனக்கும் அந்த இரவுகளில் அத்தனை விருப்பம் இருந்ததில்லை. கனவுகளை கண்டபடி வெறுப்பவன் நான். அதனால் என்னவோ பகல் மட்டில் எனக்கு அத்தனை ப்ரேமம். 

திடிரென என் தொலைபேசிக்குள் இருந்து வண்ணம் வண்ணமாய் பட்டாம்பூச்சிகள் பறக்கத்தொடங்கியது. அதேதான்! வைஷ்ணவி அந்த அழைப்பில்.. எத்தனை நாட்கள் எத்தனை பாடுகள் பட்டேன் இந்த ஒரு அழைப்பிற்காய்? ஜேசுவிற்கு அடுத்ததாய் அந்த கல்வாரியில் கண்டபடி அடிக்கப்பட்டவன் என்றால் அது நான்தான், அவள் நினைவுகளால். அவளுக்கு ஹலோ சொன்னதிலிருந்து பாய் சொல்லும்வரை நான் ஏதோ  புவியீர்ப்புவிசை இல்லாத ஒரு மாய உலகத்தில் பறந்துகொண்டிருந்தேன். நீங்கள் ஆண்கள் வெட்கப்பட்டதை பார்த்திருக்கமாட்டீர்கள். அன்று அந்த தெருவில் நின்ற அத்தனை மரங்களும் அதை பார்த்தன. ஒரு பெண்ணால் இத்தனை பரவசமா? 

அந்த அழைப்பில் சொன்னதுபோல ஐந்தே நிமிடத்தில் எனக்கு முன் வந்துநின்றாள் என் வைஷ்ணவி. அவளை வை என்றுதான் செல்லமாய் அழைப்பேன். அவ்வளவு செல்லங்களை அவள்மேல் கொட்டிவைத்திருந்தேன். நண்பர்களாய் இருக்கும் எங்களுக்கு இன்று காதலை ஆரம்பிக்கும் முதல் நாள். எத்தனை சந்தோஷம்.. நான் பாரமில்லா இதயத்தையும், பதட்டப்படாத மூளையையும் முதல் முதல் ஏந்தி பரவசம் கொண்டது அன்றுதான். அவள் அவ்வளவு அழகு. சுருண்ட முடி, சூட்சுமம் செய்யும் கண்கள், பித்தனாக்கி புத்தனையும் அலையவைக்கும் அந்த இதழ்கள், காமத்தை கக்கி என் மோகத்தை சூறையாடும் அந்த அங்கங்கள்.. அப்பப்பா.. இந்த பெண் ஒரு மந்திர தேவதை. புன்னகைத்தாள். நான் சுக்குநூறாகிப்போனேன். போதை பற்றி கேட்டிருக்கிறேன். ஆனால் அதை அனுபவிக்கும் பொழுது அத்தனை ஆனந்தம் அன்று. அதை அவளே கொடுத்தாள்.

என்னடா அப்பிடி பாக்குறே?

பின்னர் எப்படி பார்ப்பது. என்னை நீதானே இயக்கிக்கொண்டிருக்கிறாய். என்னை தொட்டு என்னை சரிசெய்துகொள். முட்டி மோதும் ஏதோ ஒரு பிதற்றல் பிரவாகத்திலிருந்து என்னை காப்பாற்றிக்கொள். என்னை அலையவைக்கும் அந்த அனாமதேய எண்ணங்களிலிருந்து ஒரு விடுதலை கொடு. கொஞ்சம் அசையாமல் இரு, எதற்கு என் கண்களை அங்குமிங்குமாய் உன் தேகத்தின் மேல் அலைக்கிறாய்.

பத்து நிமிட பரவசம். பார்வைகளால் மட்டும் எத்தனை மணித்தியாலங்கள் பேசிக்கொண்டிருக்க முடியும்? உண்மையைச்சொன்னால், பேச ஆசைதான், எதைப்பற்றி பேசுவது.. அவள் காதலிக்கிறேன் என்ற அந்த ஒற்றை சூட்சுமத்தை அவிழ்த்துவிட்டால் அதன்பின் நான் எதுவும் எப்படியும் பேசுவேன். இதுதான் அப்போதைய எனது நிலவரம். என் சிந்தனைகளை கற்சிதமாக கவ்விக்கொள்பவள் என் வை. அதனால் என் அழுக்கான சிந்தனைகளை அடிக்கடி என்னிடமிருந்து அகற்றிக்கொள்வேன். 

என்ன எதாச்சும் பேசண்டா மண்டு!

உண்மைதான்.. நான்தான் ஆரம்பிக்கவேண்டும். பக்தன் கேட்காத வரங்களுக்கு ஏது மதிப்பு? நானே பேசலாம். ஆனால், காதலை மட்டும் இப்பொழுதே கேட்டிட வேண்டாம். காதல் எனக்கு கொடுக்கப்படட்டும்.

'ம்ம்ம்.. சொல்லு வை.. பட் நீ இன்னைக்கு செமையா இருக்கே!'

அதை அவளிடம் நான் சொல்லியே ஆகவேண்டும் என என்னைக்கேட்க்காமல் என் இரசனைகள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாம். விட்டுவிட்டேன். அவள் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தாள். அழகிய ஒரு தேவதையின் நாவலை ஒலிவடிவில் கேட்பதைப்போன்ற ஒரு உணர்வு. அவள் குரலும் தேனாமிர்தம். எனக்கு மட்டும்தான் இப்படியா? இல்லை இங்கிருக்கும் மரங்களுக்குமா??

இருட்டு பட்டிரிச்சு.. வீட்டுக்கு போகணும்.. சாரி டா கொஞ்சம் கூடநேரம் உன்கூட பேச முடியல.. பாய்.. கட்டாயம் வந்திடு..

அவள் மறைந்தாள். நானும் மறைய ஆரம்பித்தேன்.

என்னவோ மறு நாளும் அதே நேரம் அதே தெருவில் கொஞ்சம் நடக்கவேண்டும்போல் இருந்தது. எனக்காய் வந்ததுபோல் அன்றும் அதே சொட்டென்ற தூறல்.. அதே மரங்கள்.. என்னை எதற்காய் இப்படி பார்த்து சிரிக்கின்றன. மனிதர்களின் சிரிப்பு மீதான புரிதலே கடினம் அதற்குள் மரங்களின் சிரிப்பை புரிந்துகொள்வது அத்தனை இலகுவா என்ன!. அந்த மரம். அந்த மரத்தைக் கண்டுவிட்டேன். நேற்று நானும் எனது வையும் சந்திக்க இடம்கொடுத்த அதே மரம். கொஞ்சம் அங்கே அமர்ந்துவிட்டு போகலாம் என நெருங்கினேன். 

அப்பொழுதுதான் தெரிந்தது. நான் அப்படியொரு மடையன். நேற்று வைகொடுத்த அவள் திருமண அழைப்பிதழை அங்கேயே விட்டுவிட்டு போயிருக்கிறேன். 


Monday, August 4, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 18


போரிற்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. சமாதானம் இலங்கை பூராகவும் பரவிக் கிடப்பதாகச் சொல்லப்படுகிறது. இலங்கை என்கின்ற ஒரு குட்டித் தேசத்தினுள் இனங்களுக்கிடையிலான அமைதி, சமத்துவம் மேலோங்க ஆரம்பித்திருப்பதாக எங்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படுகிறது. சுதந்திரம் என்னும் காற்றை எங்களுக்கு தாரைவார்த்திருப்பதாக கொடையாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நாமும் தலைகளை ஆட்டி ஆமோதித்துக் கொண்டிருக்கிறோம். இந்த விடயங்களில் அனேகரின் எதிர்பார்ப்பு 'Something is better than nothing' என்பதாய் இருக்கிறது. வடக்கின் முழு சுதந்திரம் எனப்படுவது வெறும் மக்கள் மயப்படுத்தப்பட்டால் மட்டுமே அதை வரம் எனக்கொள்ள முடியும் என்பதாய் இன்னும் சிலரின் அபிப்பிராயங்கள் இருக்கிறது. இதற்குள், எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் என்கின்ற குடும்ப வட்ட சுயநலத்தோடு மட்டும் சுதந்திரத்தை அனுபவிக்கும் இன்னுமொரு கூட்டம்.

எனது வளர்ச்சிக் காலத்தில் வடக்கு பற்றியும், தமிழர்களின் தாயக நிலை தொடர்பாகவும் போதுமான அளவு எனது தந்தையால் சொல்லிக்கொடுக்கப்பட்டது. அவற்றை உள்வாங்கிக்கொண்டு வளர்ந்ததன் விளைவு பலரால் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படும் பல தமிழர் பிரச்சினைகள் எனக்கு மாறுபட்ட ஒரு கோணத்தில் தெரியும். 

அன்று நான் யாழ்ப்பாணம் சென்று வரலாம் என முடிவாகியதன் பின்னணியில் இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று நீண்ட நாட்களாக யாழ்ப்பாணம் செல்ல கிடைக்காத வாய்ப்பு இன்று தெய்வாதீனமாக கிடைத்தது. இன்னுமொன்று வாழ்க்கையில் முதல் முறையாக மன்னாரிலிருந்து நாவற்குழி பாலம் ஊடாக யாழ்ப்பாணம் செல்ல கிடைத்த சந்தர்ப்பம். இந்த நிலையில் இதை எப்படி வேண்டாம் என்று சொல்வது? 

நாவற்குழி என்கின்ற பெயர் போராட்ட காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசம் என்பதை யாவரும் அறிவர். நாவற்குழி, மருதம் என்னும் சொல்லிற்கு பெருமை சேர்க்கும் ஒரு இடம் என்பது குறிப்பிடத்தக்க விடயம். ஆனையிறவுப் பகுதியினூடாக பிரயாணிக்க முடியாமல் இருந்த ஒரு காலத்தில் நாவற்குழி என்பது வன்னி மக்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது. யாழ் தீவகற்பத்தையும் வன்னியின் பிரதான பெருநிலப் பரப்பையும் இணைக்கும் ஒரு புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் இது என்பது இன்னுமொரு பெருமை. மன்னாரில் ஆரம்பிக்கும் A32 என்கின்ற வீதி திருக்கேதீஸ்வரம், இலுப்பைக்கடவை, பல்லவராயன் கட்டு, சுன்னாவில், பூனகரி என நீண்டு கடந்து நாவற்குழியை அடைந்து யாழ் நாகருக்கான வாயிலை திறந்து வைக்கிறது. நீண்ட கால யுத்தத்தில் அதிகமான காலப்பகுதியில் இவ் வீதி போருக்காகவே இரு தரப்பினராலும் அதிகம் பாவிக்கப்பட்டது. பொதுவாக போர் உச்சக்கட்டத்தை அடைந்த காலகட்டத்திலெல்லாம் இவ் வீதி பிரதானமாக ஆயுத தளபாடங்களை கொண்டுசெல்வதற்காக மட்டுமல்லாமல் சிறந்த முன்னேற்ற வியூகத்தை வகுத்துக்கொள்ள இரு தரப்பினருக்கும் இவ்வீதி மிகவும் தேவையானதானவும் இருந்தது.

இவ்வாறான ஒரு பல் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வீதி இப்பொழுது திருத்தியமைக்கப்பட்டு அட்டகாசமாக ஜொலிக்கிறது. மன்னாரிலிருந்து நானும் என் நண்பனும் யாழ் நோக்கி இவ் வீதியினூடாக பயணத்தை ஆரம்பித்த போது எனது மனதுள் எக்கச்சக்கமான போராட்ட நினைவுகள் வந்து அமர்ந்துகொண்டன. A32 வீதியையும் தமிழர் போராட்டத்தையும் வேறு வேறாக பிரித்துப் பார்க்க முடியாது. போரியல் வடுக்களின் எச்சங்கள் இன்றும் இவ்வீதியில் படர்ந்து கிடக்கிறது. "யுத்தம் முடடிந்தது எவ்வளவு நல்லதாய் போச்சு??" என அழகாக புனரமைக்கப்பட்ட அவ் வீதியைப்பார்த்து நண்பன் சொன்ன பொழுது நூற்றுக் கணக்கான கேள்விகள் என் வாயில் ஸ்தம்பித்துக்கொண்டது. போர் முடிந்து விட்டதையும் சமாதானம் வந்துவிட்டதையும் என்னால் இங்கு நடக்கும் கட்டுமான அபிவிருத்திகளைக் கொண்டு மட்டும் அளவிட முடிவதில்லை. எங்கள் பயணம் நீண்டது. இலுப்பைக்கடவையை தாண்டி வெள்ளாங்குளத்தை அடைகையில் எம் பயணத்திற்கு கொஞ்ச நேரம் நிறுத்தம் போடலாம் என ஒரு தேனீர்க்கடை முன்னாக நிறுத்தினோம். இன்னும் என்னுள் பல கேள்விகள், எதிர்பார்ப்புக்கள்.. இன்றுதான் இவ்விடங்களுக்கு என்னால் முதற்தடவையாக வர முடிகிறது என்பது மனதுள் ஒரு பேரின்பத்தை கிழப்பிக்கொண்டிருந்தது.

அக்கடைக்காரரிடம் கொஞ்சம் தேனீர் கேட்டோம். அப்படியே பசியும் கொஞ்சம் வயிற்றைக் கிள்ள கண்ணாடிப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என எட்டிப்பார்த்தேன். விதம் விதமான ஐட்டங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றிற்கு நடுவே இருந்த அந்த ஐட்டம் என்னை சாப்பிடு சாப்பிடு என இன்னும் அருகில் அழைத்தது. போராட்ட காலங்களில் இந்த வகை சிற்றுண்டியை வன்னியின் எல்லா பகுதிகளிலும் காண முடியும். அது நம் மக்களின் பிரத்தியேகமான சிற்றுண்டி. தமிழரால்தான் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழர்களால் மட்டுமே அதை சுவையாக செய்யவும் முடியும். முன்னரெல்லாம் வன்னியில் எங்காவது ஒரு தேனீர் சிற்றுண்டிக்கடைக்குச் சென்றால் இதை பார்க்காமல் அல்லது சாப்பிடாமல் வெளியேற முடியாது. தனிப்பட்ட ரீதியில் நான் இந்த சிற்றுண்டியின் மிகப்பெரிய ரசிகன். இதன் பெயரும் வித்தியாசமாக தனித் தமிழில், ஒரு வகையில் வன்னியை பிரதிபலிப்பதாக இருக்கும். அட அது என்ன சிற்றுண்டி என்று இன்னும் சொல்லவே இல்லை. மன்னித்துக்கொள்ளுங்கள். இவ்வளவு நேரமும் நான் முன்னுரை கொடுத்தது 'மிதிவெடி' என்று அழைக்கப்படும் ஒரு வகை மாமிச பற்றிஸ். எதற்காக இதற்கு மிதிவெடி என பெயர் வந்தது என எனக்குத் தெரியவில்லை ஆனாலும் பார்ப்பதற்கு கொஞ்சம் மிதி வெடி போல இருக்கும் என்றும் சொல்லலாம்.

நீண்ட வருடங்களுக்கு பின்னர் அந்த மிதிவெடியை கண்டபின்னரும் அதை ஒரு கட்டுக் கட்டாமல் அந்த கடையை விட்டு நகரவா முடியும்? மிதிவெடியை சாப்பிட்டுக் கொண்டே அக்கடையை சுற்றும் முற்றும் நோட்டம் விட்டேன். புதிதாக நிறப்பூச்சு பூசப்பட்டு ஜொலித்துக்கொண்டிருக்கும் சுவர்கள். புதிய மேசை, புதிய கதிரைகள். கடையின் முக்கியமான வியாபார மேசையின் மேலே சுவரில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் விதம் விதமான ஐந்து கடவுள்கள். ஒவ்வொருவரிக்கும் முன்னாலே ஒவ்வொரு அழகான கலர் கலர் மின் விளக்குகள். இற்றைக்கு சுமாராக ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதே கடவுள்களுக்கு வணக்கம் செலுத்த வெறும் தேங்காய் எண்ணெய் சுட்டி விளக்குகளாலேயே முடிந்தது. போர் முடிவுற்றதன் நன்மை இந்த கடவுள்களுக்கும் கலர் கலரான மின்சார விளக்குகள் கிடைத்திருக்கிறது. அப்படியே பார்வையை மறுபுறம் திருப்பினால் எதிர்ச்சுவரில் இன்னும் இரண்டு அதே கலர் விளக்குகள். ஆனால் அங்கே எந்த கடவுள்களின் படங்களும் இல்லை. மாறாக ஒரு இளம் ஆணினதும் ஒரு பெண்ணினதும் படங்களிற்கு மாலை அணிவித்து சுவரிலே பொருத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அப்படங்களிலே குறிப்பிடப்பட்டிருந்த அவர்களது பெயர்களையும் முகவெட்டு ஒற்றுமைகளையும் பார்த்துவிட்டு அவர்கள் உடன் பிறந்த சகோதரங்களாகத்தான் இருக்க வேண்டும் என்கின்ற முடிவிற்கு வந்தேன். இவர்கள் எப்படி இறந்தார்கள், எதற்காக இளம் வயதிலேயே மரணத்தை தழுவினார்கள் என்பதை நான் அந்த கடைக்கார மனிதரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதை உங்களுக்கு விளங்கப்படுத்தவும் தேவை இல்லை.

மீண்டும் எங்கள் வண்டி அந்த அழகான 'காப்பற்' வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பறக்க ஆரம்பித்தது. இரண்டு இடங்களில் காவற் துறையினரிற்கு நாங்கள் எங்கு போகிறோம் எதற்காய் போகிறோம் என விளக்கம் சொல்ல வேண்டியிருந்தது. அவர்கள் கடமையை மதித்து வண்டியை நிறுத்தி பதில் சொல்லி பயணத்தை தொடர்ந்தோம். இடையில் இன்னுமொரு நிறுத்தம். சில பல அவசர தேவைகளுக்காக. அவ்வழியாக வந்த ஒரு அம்மாவை சந்திக்க முடிந்தது இந்த இரண்டாவது நிறுத்தத்தின் வரம். அந்த அம்மா பொடிநடையாக ரோட்டை பின்புறம் பாரத்து பார்த்து மெது மெதுவாக நடந்து கொண்டிருந்தார். எங்களைப்பார்த்து ஏதோ கேட்க வேண்டும் என்று தோன்றினாலும் அது அவரது உதடுகளோடு நின்றுகொண்டது. நான் பேச்சை ஆரம்பித்தேன். அருகில் போய் பேச்சை ஆரம்பிக்கும் முதலே 'இந்த நாசமாப்போவானுங்க சரியான நேரத்துக்கு வரமாட்டாங்க..' அந்த அம்மா பேசியதைக் கேட்டு பயந்து பேனேன். 'உங்கள இல்ல தம்பியோ, இந்த பஸ்காரங்கள சொல்லுறன்..' அப்பொழுதுதான் கொஞ்சம் துணிச்சல் வந்தது. 'தம்பி, என்ட மகளுக்கு சுகமில்ல. சீரியஸ்னு யாழ்ப்பாணம் அனுப்பிட்டினம். அதான் இந்த பஸ்சுக்கு அர மணித்தியாலமா பாத்துக்கிட்டு இருக்கன்...' அம்மா அழுகையோடு தொடர்ந்து பேச முயன்றபோதும் 'அம்மா எங்க கூட வாறீங்களா நாங்களும் யாழ்ப்பாணம்தான் போறம்..!' என நான் குறுக்கிட்டேன். அம்மாவிற்கு அவசரம் என்றாலும் காரில் ஏறி எங்களுடன் வருவது கொஞ்சம் தயக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். முதலில் மறுத்து இறுதியாக சம்மதித்து காரில் ஏறிக்கொண்டார்.

கார் நாவற்குழி பாலத்தை நெருங்கியது. அது வரை அந்த அம்மா, தனக்கு கணவன் இல்லையென்றும், ஒரே ஒரு மகள்தான் என்றும், அவளுக்கும் கணவன் இல்லை என்றும், அந்த மகள்தான் இப்பொழுது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லி முடித்திருந்தார். நான் திடிரென "மச்சான் இந்த பாலம் சூப்பரா இருக்கில்ல.." என நாவற்குழி பாலத்தைக்காட்டி நண்பனிடம் சொன்னபோது, எதிர்பாராமல் பின் இருக்கையிலிருந்து வந்த அந்த அம்மாவின் குரல் இப்படிச் சொன்னது. 

"ஆமா மோனே, இப்ப நல்லாத்தான் இருக்கு.. இந்த நாசமாப்போன கடலிலதான் என்ட மருமகன கொண்ணு போட்டானுங்க அந்த நாசமாப்போவானுங்க.. நானும் பிள்ளையும் இப்ப நடுத்தெருவில நிக்கிறம்!"


அடுத்த வாரமும் வருவேன்.    நான் என்பது நீ!


ஒளி சொட்டு சொட்டாய் விழுந்து தெறிக்கும்
மூங்கில் காடு.
அமானுஷ்ய அமைதியில் 
காணாமல் போய்க்கொண்டிருக்கும் 
என் வார்த்தைகள்.
எங்கோ இருந்து வரும் 
மெல்லிய மல்லிகை வாசம்.
தட்பம் தணிக்கும் இலவச சாரல்.
தானாக கனியும் இளையராஜா பாடல்.
உண்மைதான் - கொஞ்சம் கொஞ்சமாய் 
நான் நானாக இல்லாமல் போய்க்கொண்டிருந்தேன்...
அப்பொழுதுதான் இது நடந்தது.
என் மூடிய கண்மடல்களை
உன் திறந்த சுவைமடல்கள் மெதுவாய் முத்தமிடுகிறது.
மோகத்தில் விழிக்கிறேன்.
என் உயிரை விழுங்கியபடி
உயில் எழுதிக்கொண்டிருந்தாய்
உன் கண்களால்,
எழுத்துப்பிழையின்றி அதைப் படித்தேன்.
அது இப்படி இருந்தது,
"நான் என்பதெல்லாம் நீதானே அன்பே!"Popular Posts