Saturday, July 26, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 17


வெளிநாடுகளில் தொலைக்கப்பட்ட எங்கள் வாழ்க்கை தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறது அண்மையகால நாட்குறிப்புக்கள். பல விடயங்கள் தொடர்பாக பேசியாகிவிட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் நம் சொந்தங்களை துரத்தும் இன்னுமொரு விடயம் அவர்கள் தொலைத்த ஈழத்து உணவுகள். நான் எந்த தேசத்திற்கு போனாலும் நான் மிஸ் பண்ணும் விடயங்களில் மிக முக்கியமானது இந்த உணவு. நம் உணவு வகைகளையும், நம் உணவுப் பழக்கங்களையும் எம்மால் இலகுவாக மாற்றிக்கொள்ள முடிவதில்லை. எமது உணவுப்பழக்கங்களும் ஒரு வகையில் எமக்கே உரித்தான ஓர் தனித்துவத்தை உறுதிப்படுத்துகின்றது. எமது உணவுப் பழக்கவழக்கங்கள் எமக்கான தனித்துவம் என்பதை உலகின் பல திசைகளுக்கு சென்று வரும் போது ஆத்மார்ந்தமாக அனுபவித்திருக்கிறேன். 

2011 இல் ஜெனிவாவின் நடுநகர்ப்பகுதியில் இந்த அனுபவம் எனக்கும் என் பாக்கிஸ்தானிய நண்பன் ஒருவனிற்கும் நடந்தது. இரண்டு வாரமாக வெஸ்ட்ரேன் பூட் என எங்கள் வயிறுகளை தொல்லைசெய்ததன் விளைவு, எங்கள் நாக்குகள் இந்தியன் ரெஸ்ட்டுரன்ட் தேடி அலைய ஆரம்பித்தது. ஜெனிவாவில் அன்றுதான் முதல் தடவையாக இந்தியன் ரெஸ்ட்டுரன்ட் ஒன்றை கண்டு பிடித்து சாப்பிடப்போன முதல் அனுபவம் எனக்கு. அங்கு சென்றபோது சட்டென வயிற்றினுள்ளே பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. அத்தனை பிரவாகம் எனது வயிற்றிற்கு. இரண்டுவார தவிப்பு அல்லவா? அப்பொழுதுதான் நமது தமிழ் உணவுகளின் ஆக்கிரமிப்பு, அதற்கு முழுவதுமாக அடிமையாக்கப்பட்ட நமது நிலைமை என்பன சரியாக புரிய ஆரம்பித்தது. ஏதோ கடந்த இரு வாரம் கிடைக்காத ஒரு ஆனந்தம் உடல் பூராவும் பரவிக் கிடந்தது. பசி திடீரென எல்லை கடந்தது. ஆடர் எடுத்துக்கொண்டு இடது வாசல் வழியாக உள்ளே சென்ற அந்த வெயிட்டரை வெட்கம் கெட்ட நாவு அவசரமாக தேடிக்கொண்டிருந்தது. உணவிற்காய் இத்தனை பரவசம் கொண்டது எனது வாழ்க்கையில் இன்றுதான். சாப்பாடு வந்தது. நான் ஆடர் செய்த அதே சிக்கின் ப்ரியாணி. அவித்த முட்டை ஒன்றும் கண்படக்கூடாது என்பது போல் நடு சோற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்படியே கரண்டியை வேகமாக எடுத்து, சவலால் மணல் அள்ளுவதைப்போல் முட்டைக்கு இடப்புறமாக திணித்து, அள்ளி அப்படியே வாயில் கொட்டினேன். நீங்கள் நினைப்பது சரிதான், அன்று எனக்கு அப்படியொரு அவா அந்த சாப்பாட்டின் மேல்.

அப்புறம் என்ன... "ப்ரியாணியும் அவன் மூஞ்சியும்னு" திட்டிவிட்டு ஒரு ப்ரியாணிக்கு கிட்டத்தட்ட 25 டாலர்களை மனம் எரிய எரிய அள்ளிக் கொட்டிவிட்டு வீடு திரும்பினோம். அங்கிருந்து வெளிக்கிடும் போது அப்படியொரு கோவம் அந்த கடைக்காரன் மேல். பின்னர் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பாவமாக இருந்தது. உண்மைதானே, நம் அம்மாவை பிட்சாவும், பஸ்ராவும் செய்யச்சொல்லி அதை வெள்ளைக்காரனுக்கு பரிமாறினால் அவர்கள் இப்படித்தானே கோவப்படுவார்கள். பொது மன்னிப்பு வழங்கி அந்த கடைக்காரனை சரி பிழைத்துப் போ என விட்டுவிட்டேன்.

இலங்கையின் தமிழர் தேசங்களில் காணப்படும் உணவு பழக்கவழக்கங்கள் இன்று நேற்கு அல்ல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தொடங்கி அதிகம் மாறாமல் இருந்துகொண்டிருக்கும் ஒரு புராதன அம்சமாகும். பொதுவாக வடக்கு கிழக்கின் புவியியல் அமைப்பு, வளங்கள், விவசாய உற்பத்திகள், பிற உணவு உற்பத்திகளுக்கான வாய்ப்புக்கள், உணவுப்பொருட்கள் தொடர்பான வணிகம், நில உடைமை, நில பயன்பாடு என்பன நம் உணவுப் பழக்கவழக்கங்களில் மிகப்பெரிய தாக்கங்களை உண்டாக்கும் காரணிகளாக இருக்கின்றன. இருந்தாலும் வடக்கின் எல்லா பிரதேசங்களிலும் எல்லா சமூக கட்டமைப்புக்களிலும் ஒரே வகையான உணவுப் பழக்கவழக்கங்கள் இருக்கின்றனவா எனப்பார்த்தால் இல்லை. இந்த அன்றாட உணவுப்பழக்க வேறுபாடுகளுக்கான பின்னணியில் சமூக அமைப்பு, தொழில், பொருளாதார நிலை, சமூக அந்தஸ்து, வாழ்விடச் சூழல் என்பன மிக முக்கிய காரணிகளாக அமைகின்றன. சமய கோட்பாடுகளும் எங்கள் உணவுப் பழக்கத்தில் மிகவும் முக்கியமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழர் தேசங்களில் அரிசிச் சோறு மிகப்பிரதானமான உணவாக இருந்தாலும் பல வகையான துணை உணவு வகைகளின் ஆதிக்கத்தை அதிக அளவில் காணமுடியும். அதில் மிக முக்கியமான துணை உணவு வகையாகக் காணப்படுவது கோதுமையாகும்.

ஒரு முறை யாழ்ப்பாணத்தில் புன்னாலைக்கட்டுவான் எனப்படும் ஒரு ஊரிற்குச் செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த சந்தர்ப்பம் எனது சகோதரியால் கிடைத்தது. யாழ்ப்பாணம் மிகவும் பரந்த ஒரு தேசம். அப்பொழுதெல்லாம் எனக்கு யாழ்ப்பாணத்தில் அந்த நல்லூரடி, ரெம்பிள் ரோட், பஸ்ராண்ட் இந்த மூன்றைத்தவிர வேறு எதுவும் தெரியாது. இந்த மூன்று இடங்களை விட்டு வேறு எங்கு போனாலும் மகாபாரத கதையின் நடுவில் தொலைந்தவன் போல ஆகிவிடுவேன். சரி மீண்டும் புன்னாலைக்கட்டுவான் கதைக்கு வரலாம். எனது சகோதரியின் உயிர் நண்பி ஒருவரின் வீட்டிற்கு சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்க வேண்டியிருந்தது. எனது பால்ய காலத்தில் யாழ்ப்பாணம் பற்றிய நல்லதொரு அபிப்பிராயம் வருவதற்கும், யாழ் மக்களின் மீதான உயர்ந்த நம்பிக்கை ஏற்படுவதற்கும் இந்த புன்னாலைக்கட்டுவானில் நான் தங்கிய அந்த இரண்டு நாட்கள்தான் காரணம் என்பேன். அதிலும் சுத்தமான தமிழ் சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு களைத்துப் போனதுதான் இன்னும் ஞாபகம் இருக்கிறது. அங்குதான் அதிகமான யாழ்ப்பாண உணவுப் பழக்கம் பற்றி அனுபவிக்கக் கிடைத்தது. இன்றும் கூட மனதில் நிற்கிறது அந்த சாப்பாடு. தாங்ஸ் ஆன்டி.

பொதுவாக தமிழர் பிரதேசங்களில் முதன்மை உணவு சோறு மற்றும் கறி ஆகும். பொதுவாக நெல்லை அவித்துக் (புழுக்கி) குற்றிப் பெறப்படும் புழுங்கல் அரிசிச் சோற்றையே அதிகமானவர்கள் விரும்பி உண்ணுகிறார்கள். இதைத்தவிர நெல்லை அவிக்காமல் குற்றும் போது கிடைக்கும் சிவப்புப் பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி என்பனவற்றிலும் சோறு ஆக்குவதுண்டு. பொதுவாக இந்த அரிசிச் சோற்றுடன் மிகப்பிரதானமாக சேர்த்துக்கொள்ளப்படும் கறி வகையில் குறிப்பிட்டளவு மரக்கறி மற்றும் மாமிசங்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. எனக்கு அதிகம் பிடித்த கறி வகைகளை எனது அனுமதியோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதற்கு முதல் இந்தப் பதிவை வாசித்துவிட்டு நான் ஒரு சாப்பாட்டு இராமன் என்கின்ற முடிவிற்கு வந்துவிடக்கூடாது. சிறு வயதில் நான் ஹஸ்டலில் சேர்க்கப்பட்டு கணிசமான வருடங்கள் அங்கு இருந்துதான் படித்தேன். அங்கு இருக்கும் பொழுது சலித்துப்போன ஒரு உணவை இப்பொழுது எங்கு கிடைத்தாலும் மிஸ் பண்ணாமல் ஒரு பிடி பிடித்துவிடுவேன். இறுதியாக இதை அனுபவித்தது முல்லைத்தீவில். காலைச்சாப்பாட்டிற்காக சென்றிருந்த போது அந்த கடைக்கார பையன் வாசித்த மெனுவில் இறுதியாக இருந்தது 'பாணும் பருப்புக் கறியும்'. பிறகென்ன.. உடனடியாகவே ஓடர் செய்தாயிற்று. எனது ஹஸ்டல் வாழ்க்கை எனக்கு ஞாபகம் வந்து மறைந்தாலும் எனக்கு பாணும் பருப்பும் நன்றாக பிடிக்கும். பாணுக்கும் அந்த பரிப்பிற்குமான கம்பினேஷன் இருக்கிறதே.. இதை யார் கண்டுபிடிச்சிருப்பார் எண்டு ஹாஸ்டலில் இருக்கும் போது ஆத்திரத்திலும் இப்போது ஆச்சரியத்திலும் அடிக்கடி நினைப்பதுண்டு. 

பாணும் பருப்புக்கறியையும், நம் ஈழப்போராட்டத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. காரணம் உங்களுக்கே புரியும். இலகுவாக மற்றும் மலிவாக கிடைக்கக்கூடியவற்றை வைத்துக்கொண்டு இலகுவாக சமைத்து வேகமாக பரிமாறக்கூடியதாக இருப்பதே இந்த பாண் - பருப்பு கூட்டணியின் வெற்றி. இப்பொழுது வெளிநாட்டில் வசித்தாலும் எவராச்சும் பாணும் பருப்பையும் காட்டி வேண்டுமா என்றால் அவர்களுக்கு பின்னாடியே போய்விடுவேன். அடுத்து, இந்த குழம்பு பற்றி பேசினால் என்னால் இங்கு நின்மதியாக இருக்க முடியாது. இந்த குழம்பைக் கண்டு வருடங்கள் ஆகிவிட்டது. குழம்பு என்றால் என்ன என்று அம்மாவிடம் ஒரு முறை கேட்ட போது 'கத்தரிக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு, பூசணிக்காய், பாகற்காய் போன்ற காய், கிழங்கு வகைகளில் ஒன்றை முதன்மையாகச் சேர்த்து தேங்காய்ப்பால், மிளகாய்த்தூள், பழப்புளி, உப்பு போன்ற சேர்மானங்களுடன் ஆக்கப்படுவது குழம்பு எனப்படும்' என கூறிச்சிரித்தார். அப்ப இவை அனைத்தையும் மிக்ஸ் பண்ணி சமைத்தால் அது சாம்பாறா என்றேன். சாம்பாறு பற்றி பேசும் பொழுது இட்டலியையும் தோசையையும் ஞாபகப்படுத்தாமல் இருக்க முடியாது. தமிழ்நாட்டு அளவிற்கு நாங்கள் சாம்பாறு பிரியர்கள் இல்லை என்றாலும் பொதுவாக கோவில்களில் அன்னதானம் செய்பவர்கள் சில சமயங்களில் பல கறிகள் செய்வதைத் தவிர்ப்பதற்கு எல்லாக்காய்களையும் சேர்த்து சாம்பார் செய்வதுண்டு.

தமிழனாக நான் அதிகம் விரும்பி உண்ணும் ஈழத்து உணவுகளை இப்பொழுதெல்லாம் அதிகம் மிஸ் பண்ண வேண்டியிருக்கிறது. வரட்டல் தூள் கறி (கூட்டுக்கறி), பால்க்கறி (வெள்ளைக்கறி), கீரைக் கடையல், வறை அதுவும் வாழைப்பூ, புடோல், சுறா போன்றவற்றின் வறைகள், துவையல், சம்பல் அதுவும் பச்சைக் கொச்சிக்காய் சேர்த்து தேங்காய்ப்பூவுடன் அம்மியில் அரைத்து எடுக்கும் சம்பல், பொரியல், சொதி அதுவும் எலும்புகளை இட்டு தேசிப்புழி சேர்த்து தயாரிக்கப்படும் சொதி என நம் உணவுகளைப் பற்றி பேசும் போது நாவில் கண்டபடி சுவையூறும். வன்னியில் நிகழும் கொண்டாட்ட அல்லது விசேட வைபவங்களில் நான் மேலே குறிப்பிட்ட அனைத்து உணவுகளும் வரிசையில் அடுக்கி வைத்து பரிமாறப்படும். இந்த பந்தியை அதிகமானவர்கள் தவற விடுவதில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதை தவற விட்டுவிடக்கூடாதென்பதில் நான் மிகவும் கவனமாக இருப்பதுண்டு. உலகில் உள்ள ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகிற பொழுது நமது உணவில் தேங்காய் பால் அல்லது பூ சேர்த்துக்கொள்ளுவது அதிகமாக இருக்கிறது. மிளகாய்த்தூளின் பயன்பாடு கூட இந்தியாவோடு ஒப்பிடுகையில் அதிகம் என்றே சொல்ல வேண்டும். இவை இரண்டும் பிற உணவு வகைகளுடன் ஈழத்து உணவு வகையை பிரித்துக்காட்டும் மிக முக்கியமான காரணிகளாகும்.
இப்படி நமக்கே உரியதான இந்த ஈழத்து உணவு வகைகளை தேடித் தேடி அலையும் புலம் பெயர் தமிழர்களிடம் கேட்டுப்பார்த்தால் புரியும் அதன் மதிப்பு. ஒவ்வொரு நாளும் அரிசிச் சோறும் குழம்பும் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் திகட்டாத அவர்களுக்கு வெளிநாடுகளில் வெஸ்ட்ரேன் பூட் உடன் தினமும் சண்டை செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு முறை KFC, Mcdonald பாஸ்ட் பூட்களை சாப்பிட்டு விட்டு மார்வலஸ் என வாயைப்பிழக்கும் நீங்கள் வெளிநாடுகளில் அதை நம்பியே புளைப்பு நடாத்தும் எங்கள் வயிறுகளைக் கேட்டுப்பாருங்கள். பக்கம் பக்கமாக புலம்பி அழும். லீட்டர் லீட்டராக அழுது கொட்டும். இன்னும் நம் உணவு பற்றி பேசுவதற்கு அதிகம் இருக்கிறது. அவற்றை இன்னுமொருவாரம் தொடர்வோம். அதுவரை பசித்திருங்கள்.

அடுத்த வாரமும் வருவேன்...

1 comment:

Yarlpavanan said...

அருமையான பதிவு
தொடருங்கள்

Popular Posts