Saturday, July 12, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புகள் - 16


பொருளாதாரம், வசதி வாய்ப்புக்கள், உறுதிசெய்யப்பட்ட பாதுகாப்பு, அழகான வாழ்க்கைத்தரம் என அனைத்தும் புலம்பெயர் வாழ்க்கையில் கிடைத்தாலும் ஆங்காங்கே சிறு சிறு ஏமாற்றங்களும், இழப்புக்களும், விரக்தியும் அந்த வாழ்க்கையோடு ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. பலர் வெளிநாடுகளிலே நிறையவே பணம் சம்பாதித்தாலும் சங்தோஷமான வாழ்க்கையை கோட்டை விட்டுவிடுகிறார்கள். பணமும் சந்தோஷமும் அதிகமாக வாழ்க்கையில் ஒன்றாய் கிடைப்பதில்லை. பணம் வருகின்ற போது சந்தோஷம் தூர போய்விடுவதுண்டு. அதேபோல சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கிறபொழுது பணப்பை வெறுசாகிவிடுகிறது. ஒரு வகையில் பணத்திற்கும் சந்தோஷத்திற்குமான இடைவெளியை நிரப்புவதே இறுதியில் வாழ்க்கையாகிறது. இன்னுமொரு வகையில் பார்த்தால், வெளிநாட்டு வாழ்க்கை என்பது உணவிற்காக ஓடி ஓடி உழைக்கும் பலரிற்கு அங்கு சரியாக உணவருந்த நேரமோ, சந்தர்ப்பமோ கிடைப்பதில்லை. சிலரின் வாழக்கை உழைத்தலில் மட்டுமே நின்றுகொண்டிருக்கிறது. இவர்கள் வாழ்வது எப்போது?

அதிகமான இளைஞர்களின் வாழ்க்கை அங்கே வேலைக்காயும் தொழிலிற்காயும் உழைப்பிற்காயும் செலவு செய்யப்படுகிறது. இவர்கள் தேடும் சகலதும் கையில் பூரணமாக வந்துசேரும் பொழுது வாழ்க்கை பல சந்தோஷங்களை தொலைத்துவிட்டு ஒரு வெறும் கூடாய் நின்றுகொண்டிருக்கும். அப்பொழுது இத்தனை கஷ்டங்களை அனுபவித்தும் வாழ்க்கையை வாழ முடியாமல் போய்விட்டதே என மனது பூராகவும் ஏமாற்றம் ஒட்டிக்கொள்ளும். அப்போது அந்த வாழக்கை, கண்கள் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரதிற்காய் ஏங்கிக்கொண்டிருக்கும். இது இளைஞர்களின் வெளிநாட்டு வாழ்க்கையின் ஒரு பக்கம். நானும் பல தடவைகள் யோசிப்பதுண்டு, வீட்டில் நடக்கும் ஒரு சந்தோஷமான நிகழ்வில் பங்கெடுக்க முடியாமல் வேலை பணமென்று வெளிநாட்டில் இருந்துகொண்டு எதை அனுபவிக்கப்போகிறோம்? என்னைப்பொறுத்தவரையில் சாதாரண சந்தோஷமான வாழ்க்கையை நமக்கு கொடுக்கும் அளவிற்கு போதுமான பணத்தை உழைத்தால் போதும். உழைத்து உழைத்து நம் வாழ்க்கையை அனுபவிக்காமல் முடித்துக்கொள்ள நான் மட்டுமல்ல வெளிநாடுகளில் வசிக்கும் பல இளைஞர்களுக்கு விருப்பமில்லை. நோக்கமும் இல்லை.

ஒருமுறை மன்னாரில் இருந்தபொழுது நண்பனோடு ஒரு இறந்தவீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. எனக்கும் அந்த இறந்தவீட்டிற்கும் சம்மந்தம் இல்லையென்றாலும் அது என் குறித்த நண்பனிற்கு வேண்டப்பட்ட இடம். அவனது வற்புறுத்தலின்பேரில் கட்டாயம் போகவேண்டியதாயிற்று. திருமண வைபவங்களிற்குத்தான் அழைக்காமல் செல்வது அநாகரிகம். இறப்பு வீட்டிற்கு இல்லையே. நண்பனிடம் வருகிறேன் என்றேன். மன்னார் நகரத்திலிருந்து 45 மணிநேரம் பயணம் செய்ததில் அந்த கிராமத்தை கண்டடைந்தோம். மன்னார் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலிருந்து அதிக எண்ணிக்கையான மக்கள் வெளிநாடுகளில் இருப்பது என்றால் அது இந்த கிராமம்தான் என நான் வீட்டிலிருந்து கிளம்பும் போதே எனது தந்தை ஹின்ட் அடித்திருந்தார். அந்த கிராமத்தை 'வெளிநாட்டு வில்லேச்' என்று செல்லமாய் வேறு அழைப்பார்களாம். அந்த கிராமத்தை அடைந்த நானும் நண்பனும் ஒருவாறு அந்த வீட்டை கண்டடைந்தோம். ஏராளமான சனக்கூட்டம். இறந்தவர் நிச்சயம் நல்ல மனிதராக வாழ்ந்து இறந்திருக்க வேண்டும். நாம் இறக்கும் போது இறுதியாக நம் உயிரற்ற உடலைப்பார்க்க எத்தனை பேர் வருகிறார்கள் என்பதில்தான் நாம் இந்த உலகத்தில் எப்படி வாழ்ந்திருக்கிறோம், எதை சம்பாதித்தோம் என்பனவற்றை சரியாக அளவீடு செய்துகொள்ள முடியும்;. அந்த சனக் கூட்டம் நிறைந்த மரணவீட்டினுள் செல்லும் பொழுது 'காசு பணத்த விட முதல் மனிதர சம்பாதிக்கணும் மகன்!' என அடிக்கடி என் அம்மா சொல்லும் வாக்கியம் நினைவிற்கு வந்தது.

உள்ளே சென்று, வீட்டின் முற்றத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த உடலை பார்வையிட்டோம். அந்த சவப்பெட்டியில் கிடத்திவைக்கப்பட்டிருக்கும் அம்மா அப்பொழுதுதான் எனக்கு அறிமுகமாகிறார்; இருந்தும் அவருடன் பேசவோ அல்லது ஒரு புன்னகையை உதிர்க்கவோ முடியாமல் போனது துர்வதிஷ்டம். அந்த இறந்த உடலில் கழுத்து, கைகளை மொய்த்திருந்த தங்க நகைகள் அப்பா சொன்ன 'வெளிநாட்டு வில்லேச்சை' சட்டென ஒரு முறை உறுதிசெய்துகொண்டது. இறுதிமரியாதையை முடித்துவிட்டு சற்று அகன்று நூற்றுக்கணக்காய் வரிசையில் நின்றுகொண்டிருந்த பிளாஸ்டிக் கதிரைகளில் இரண்டை நானும் நண்பனுமாய் நிரப்பிக்கொண்டோம். எனது விழிகள் அங்கும் இங்கும் மேய்ந்துகொண்டிருந்தது. அந்த மேச்சலில், இறந்த அந்த உடலிற்கு கொஞ்சம் அருகில் உயரமாய் பொருத்தப்பட்டிருந்த ஒரு வெப் கம் (இணைய வீடியோ கமறா) சிக்கியது. மிகவும் அவசர அவசரமாக அதை கூர்ந்து அவதானிக்க ஆரம்பித்தேன். அந்த கமறாவிலிருந்து எங்கோ செல்லும் அந்த வயர் வழியே என் கண்கள் நடந்தது. இறுதியில் அந்த வயர் கொஞ்சம் தூரமாய் உள்ள ஒரு மேசையில் வைக்கப்பட்டிருந்த மடி கணினியுடன் தொடுக்கப்பட்டிருந்தது. இதைப்பற்றி கொஞ்சம் தெரிந்தாக வேண்டுமே என அருகில் எனது நண்பனுடன் உரையாடிக்கொண்டிருந்த அவனது மாணவன் ஒருவனிடம் கேட்டேன். அந்தப் பையன் நிச்சயம் இந்த வீட்டாட்களின் உறவுக்காரனாகத்தான் இருக்க வேண்டும். அவன் நான் கேட்ட கேள்விக்கான விடையை தெளிவாக விபரித்தான். 'செத்துப்போன இந்த பெரியம்மாட கடைசி மகன் வெளிநாட்டில இருக்கிறார் சார். அவர் அங்க போய் இப்ப ஒரு வருஷம்தான் ஆகுது. இப்ப இங்க வந்தா மறுபடியும் திரும்பி அந்த நாட்டுக்கு போக முடியாதாம். அதால அவர வீட்டாக்கள் வர வேண்டாம் எண்டுட்டாங்க.. அதனால அவர் அங்க இருந்துகொண்டு ஸ்கைப்பில பாத்துக்கொண்டு இருக்கார்..'

இதைக்கேட்டதும் எனக்கு தலை விறைத்துப் போனது. உடனடியாகவே அந்த வெளிநாட்டிலிருக்கும் நபரின் இடத்தில் என்னை வைத்து யோசித்தேன். நானாக இருந்திருந்தால், திரும்பிப்போக முடியாது என்றால் கூட கவலையில்லை, நிச்சயம் வந்திருப்பேன். 'டேய் அம்மாடா..!' என மனதுள் ஆவேசமாய்க் கூறி என் தொடைகளில் அடித்துக்கொண்டேன். அம்மா இறந்துபோகும்போது கூட அருகில் இருக்காத அல்லது இறுதியாக அவள் முகத்தை பார்க்க குடுத்துவைக்காத ஒரு வெளிநாட்டு வாழ்க்கை எதற்கு என்று தெரியவில்லை. இப்படி சிந்திப்பதால், மார்டேன் உலகத்தில் நான் பிற்போக்குவாதியாக உங்களில் சிலரிற்கு தோன்றலாம்; பறவாயில்லை. அம்மாவுடன் வெளிநாடு என்ன, அதையுமே ஒப்பிட்டு முன்னுரிமைப்படுத்த என்னால் முடியாது. இந்த இறந்த வீடு என்னில் பெரியதொரு மனப்பாரத்தை தோற்றுவித்திருந்தது. யுத்தமும், அதனாலான வெளிநாட்டு தேவைகளும் இறுதியில் எமக்கு கொடுத்த பரிசு இதுதானா?. இந்த கேள்வியோடே வீடு வந்து சேர்ந்தேன். எனது அம்மாவிடம் நடந்ததைச் சொன்னேன். அதற்கு அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒரு பதில் சொன்னார் பாருங்கள்..

'அது சரிதானே, அம்மாக்கள் இன்றைக்கோ நாளைக்கோ இறந்துவிடுவோம். பிள்ளைகள் உங்க உங்க எதிர்காலத்த பார்க்கவேண்டாமா?? அவன் வராம விட்டதில என்ன தப்பு? கெதியா போய் குளிச்சிட்டு வா, 4 மணியாச்சு, உனக்காக நானும் இன்னும் சாப்பிடாம பாத்துக்கிட்டு இருக்கன்!'. 

அம்மாக்கள் என்றும் அம்மாக்கள்தான்!.

இதேபோல சில மாதங்களுக்கு பிறகு ஒருமுறை வவுனியாவிலுள்ள எனது நண்பியின் வீட்டிற்கு போயிருந்தேன். அன்று ஞாயிற்றுக் கிழமை. நண்பியின் வீட்டில் அனைவரும் இருந்தார்கள். இவர் எனது நீண்டநாள் தொழில் ரீதியான நண்பி. அவர்கள் வீட்டாட்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுக்கும்தான். அங்கு செல்கின்ற போதெல்லாம் ஒரு உண்மையான அன்பை என்னால் அனுபவிக்கக்கூடியதாய் இருக்கும். இதற்காகவே எப்பொழுதெல்லாம் வவுனியாவிற்கு சென்றாலும் அவர்கள் வீட்டிற்கு செல்லாமல் எனது பயணத்தை முடித்துக்கொள்வதில்லை. நண்பியின் அம்மா, அப்பா, அவள் தங்கை என சகலரும் என்னை அவர்கள் வீட்டுப்பிள்ளை போலவே பாசத்தைக் கொட்டி கவனித்துக்கொள்வார்கள். எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் அந்த வீடு அன்று நான் சென்றபோது ஏதோ ஒரு அமைதியால் சூறையாடப்பட்டிருந்தது. அங்கிள் முற்றத்தில், நண்பி கட்டிலில், தங்கச்சி விறாந்தையில் கூரையைப் பர்த்தபடி.. என்ன நடக்கிறது என்றே என்னால் புரிந்துகொள்ளமுடியாமல் போனது. ஏதோ பிரச்சனை என்பது மட்டும் எனக்கு தெளிவாக விளங்கவே 'அன்டி எங்க?' என வெளியில் வந்த நண்பியிடம் கேட்டேன். 'உள்ள..' என ஆட்காட்டி விரலைத்தூக்கி அறையைக் காட்டினாள். என்னவோ ஏதோ என சட சடவென அறையைத்திறந்துகொண்டு உள்ளே போனேன். கணினியின் முன்னே உட்கார்ந்திருந்த அன்டி 'வா அமல்..!' என உள்ளே அழைத்தார். அவரது இரு கண்களும் கொவ்வம் பழம்போல் சிவந்திருந்தது. இரண்டு கண்களிலிருந்தும் வடியும் கண்ணீர் அவர் நாடியில் குவிந்து, சொட்டென கீழே விழுந்து தெறித்தது. 'சம்திங் றோங்' எனத் தெரியவே, நான் சடாரெனக் கதவை மூடிவிட்டு வெளியே வந்தேன்.

'எப்ப வந்தாய் வவுனியாவுக்கு?' நண்பி வினவியதுகூட புரியாமல் குளப்பத்தில் நின்றுகொண்டிருந்தேன். 'அது இருக்கட்டும், நீ கொஞ்சம் வெளிய வா..' என அவளை அழைத்துக்கொண்டு முற்றத்திற்கு வந்தேன். 'என்னடி பிரச்சின..???' என தொங்கிக்கொண்டிருந்த அவள் முகத்தை நிமிர்த்திக் கேள்விக்குறியைப் போட்டேன்.

'அது பெருசா ஒண்ணும் இல்லடா.. இண்டைக்கு கனடாவில அக்காவுக்கு சீமந்தம் செய்யுறாங்க.. அதுதான் அம்மா தான் அவகூட இல்லையேனு ஒரே பீலிங்.. அந்த பங்சனத்தான் ஸ்கைப்பில பாத்துக்கிட்டு இருக்கா..'

'அட இதுதானா பிரச்சனை. அதுக்கு எதுக்கு அழணும். வெளிநாட்டில கலியாணம் கட்டி வைக்கிறப்போவே இப்படியெல்லாம் நடக்கும்னு தெரியும்ல.. பிறகு எதுக்கு இப்ப அழுதுகிட்டு..' சமாதானம் சொல்வதாய் கொஞ்சம் கோவம் கலந்து வசனம் பேசினேன். பிறகு 'சரி அது இருக்கட்டும் இப்ப நீ எதுக்கு கண் கலங்குறே??' என மீண்டும் குனிந்த தலையை நமிர்த்தி அவளிடம் கேட்டேன். அதற்கு நூறுகிலோ சோகம் அவள் முகத்தில் தொங்கிக்கொண்டிருக்க, கண்கலங்கியபடி அவள் சொன்னாள்,

'நானும் கலியாணம் கட்டி வெளிநாட்டுக்குத்தானே போகப்போறன்...!'


அடுத்த வாரமும் வருவேன். 
           

2 comments:

Yarlpavanan said...

கதை நகர்வு நன்று

பி.அமல்ராஜ் said...

மிக்க நன்றி அண்ணா

Popular Posts