Monday, July 7, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 15.அண்மைய நாட்குறிப்புக்கள் புலம் பெயா் தமிழா்கள் வாழ்வியலையும், தமிழ்மொழிப் பாவனையையும் பேசி நகா்ந்துகொண்டிருக்கிறது. இறுதியாக நான் பதிவிட்ட குறிப்பிற்கும் இன்றைய குறிப்பிற்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது. இறுதிவார குறிப்பில் வந்துபோன அந்த என் “இத்தாலி” நண்பியை நீங்கள் இதுவரை மறங்திருக்க மாட்டீா்கள் என நினைக்கிறேன். சாி, இவ்வார குறிப்பினுள் செல்லலாம். இந்த குறிப்பை நகைச்சுவை உணா்வோடு வாசியுங்கள். ஆனால் நான் சொல்ல வரும் கருத்தை மட்டும் சீாியசாக கவனித்துக்கொள்ளுங்கள்.

நாம்  அனைவரும்  கொண்டாடும்  எமது  தாய்வழி விடயங்களில்  இந்த தாய் மொழி  மிக  முக்கியமானது. மொழி  என்பது என்னைப் பொறுத்தவரையில் எமக்குகொடுக்கப்படும் ஒரு உணர்வு ரீதியான தனித்துவம். மொழியை ஒரு சந்தோசமான உணர்வாகவே நான் பார்க்கிறேன். அதனால் தான் அந்த மொழியை எம்மால் அழகாக, உணர்ச்சி  பூர்வமாக உச்சரிக்க முடிகிறது. அதிலும், எமது தமிழ் மொழி என்பது மிகவும் அழகானது. உண்மையில் தாயை அதிகம் நேசிப்பவர்கள் தங்கள் மொழியையும் அவ்வாறே நேசிப்பார்கள் என்று அண்ணா ஒருமுறை சொல்லியிருந்தாா். (என்ட அண்ணா இல்லேங்க, அறிஞர் அண்ணா..). உண்மையில் அது அறிவுபுா்வமான வார்த்தைகள்  தான். ஏனெனில் தாயிற்கும் மொழிக்கும் அப்படியொரு சம்மந்தம் இருக்கிறது.

கடந்த வருடம் வேலை காரணமாக சில நாட்கள் வவுனியாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹாட்டலில் தங்கவேண்டியிருந்தது. ஒருநாள் காலையில் எழுந்து வழமைபோல காலை உணவிற்காய் அந்த ஹோட்டலின் உணவருந்தும் (restaurant) இடத்திற்கு வந்தேன். அங்கு வந்ததும் அழகான பூசணிக்காய் சைசில் அமா்ந்திருந்த இரண்டு பெண்களையும், அவர்களுக்கு முன்னால் இந்தியாவின் 'நண்டு மாா்க் பனியன்கள்' விளம்பரத்திற்கு  வருபவா்கள்  போல  இரண்டு பசங்களையும்  ஒரு  வயதான மனிதரையும்  பார்த்தேன். அவர்கள் ஒரு ஓரமாய் உள்ள மேசையில் உட்கார்ந்து போக்கோடும் (முள்ளுக்கரண்டி) நைப்போடும் (சாப்பாட்டு கத்தி)  சண்டை போட்டுக்கொண்டிருந்தாா்கள். நிச்சயமாய்  இவர்கள்  வெளிநாட்டு கனவான்கள் தான்.

நானும், பக்கத்து மேசையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். அவர்கள் மேசையில் இருந்துவந்து எனது காதில் விழுவது எல்லாம் ஒன்று கரண்டி, ப்ளேட்டோடு சண்டைபோடும் சத்தம், இரண்டாவது  நுனி  நாக்கில் அங்கும் இங்குமாய் தெறித்துக்கொண்டிருக்கும்  ஆங்கிலம். ”என்னமா பேசுராங்கையா இங்குலீசு?” என எண்ணியபடி அவா்களையே வாய்மூடாமல், கண்வெட்டாமல் பாா்த்துக்கொண்டிருக்கும் ரெஸ்ரூரன்ட் பையனை பாா்த்து பாா்த்து சிாித்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நானும் அவா்கள் உரையாடலிற்கு காதுகொடுக்கலாம் என ஆசைப்பட்டேன். அந்த ரெஸ்ரூரன்ட் பையனுக்கிருந்த இரசனை எனக்கும் கொஞ்சம் இருந்திருக்க வேண்டும். சேக்ஸ்பியரின் நாடக இலக்கியங்களில் அவ்வளவு பிாியப்பட்டு அவரது பல நாடக கவிதைகளை படித்திருந்தாலும் இவா்களது உரையாடல் வளக்கு எனக்கு சாியாக புாிவதாய் இருக்கவில்லை. உண்மையில் இவா்கள் தமிழா்கள் அல்ல என நினைத்து மறுபக்கம் திரும்பிய போது 'போடா சனியனே' என்று ஒரு பெண் குரல் அதே மேசையில் இருந்து வந்து என் கவனத்தை அந்த மேசைமேல் மீண்டும் திருப்பியது. திரும்பிப்பா்த்தேன், அது அவர்கள்  தான். ஆகவே, அவா்கள் நிச்சயமாக  நம்ம கூட்டம்தான் என்கிற முடிவுக்கு வந்துசோ்ந்தேன். அவர்கள் தமிழர்கள் என்பதை நான் சாியாக கண்டுகொள்வதற்கு உதவியாய் இருந்தது அந்த 'சனியனே' மட்டும்தான். தாங்ஸ் சனியனே!

அவா்கள் அதிகமாக ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருந்தாலும் இடையிடையே கொஞ்சம் தமிழும் எட்டிப்பாா்த்தது. எட்டிப்பாா்த்ததோடு அவ்வப்போது தவறி தவறி வீழ்ந்து ஆங்கில நாக்குகளில் தற்கொலை செய்துகொண்டிருந்தது. அரை மணி நேரம் நான் அங்கு இருந்ததில் எனது காதில் கேட்ட தமிழ் வார்த்தைகள் என்றால்  பின்வருவன மட்டும்தான். ஆனாலும் கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது.

'லூசாடா நீ?',

'கறுமம்..கறுமம்',

'ஐ மிஸ்ட் மை நியூ டூத் பிரஷ்.. நீயாடி ஆட்டைய போட்டது?',

'ஐ வோன்ட் டு கோ தேயார்,  பட்.. அவட மூஞ்சியையே பார்க்க சகிக்கல டாடி.',

'மனுசனாடா நீ, பாருங்க டாடி',

'அட கொக்கா மொக்கா, திஸ் இஸ் ஸ்ரீலங்கா மேன்..',

'ஓகே, மூடிக்கிட்டு இருக்கியா, ஐ நோ...',

“ஷிட்.. கைய எடுடா சனியனே!”

ஆங்காங்கே புறக்கிப்பாா்த்தால் இவ்வளவுதான் அவா்கள் பேசிய தமிழ்.

இதைத்தவிர வேறு எந்தவொரு தமிழ் வாா்த்தையும் என் செவிகளை அடைந்ததாய் இல்லை. ஸ்டைல்லாக தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசுகிறாா்கள். என்னவோ அவா்கள் உரையாடலை கேட்டுக்கொண்டிருக்கும் வரை ஜாலியாக இருந்ததே தவிர அவா்கள் மேல் கோவம் வரவில்லை. அவா்கள் பாவித்த அதிகமான தமிழ் வாா்த்தைகள் பேச்சு வளக்கிற்காய் நாம் இலக்கிய மரபிற்கு அப்பால் உதிாிகளாக பயன்படுத்தும் சொற்கள். எதற்காக அந்த சொற்களை மட்டும் பயன்படுத்துகிறாா்கள் எனப்பாா்த்தால், அவர்களிடத்தில் ஒரு விடயத்தை அவதானித்தேன். சில தமிழ் சொற்களை உச்சரிக்கும் போது வெளிப்படுத்தப்படும் உணர்வு (Expression) ஆங்கில சொற்களில் இல்லை என்பதால் தான் இடையில் குறித்த அந்த சொற்களை மட்டும் தமிழில் பயன்படுத்துகிறாா்கள். இந்த அக்காஇ தம்பிமாா் நம்ம யாழ்ப்பாணம் போகும் வழியில் உள்ள முருகண்டி கச்சான் கடைகார அம்மாவிடம் எப்படி பேசுவாா்கள் என்று கொஞ்சம் யேசித்துப்பாா்த்தேன். சிாிப்பு வந்தது. இப்படித்தான், “ஹாய் அம்மா, நாலு பக்கட் ஆப் கிரவுண்ட் நட்ஸ் கிடைக்குமா?”. அதோடு அந்த கடைக்கார அம்மா கடையை மூடிவிட்டு பிச்சை எடுக்க ஆரம்பித்துவிடும்.

அவா்கள் பேசும் பொழுது கேட்டுக்கொண்டிருக்க இனிமையாக இருந்தாலும் நான் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றபோது அவா்கள் மேல் கொஞ்சம் கோவம்தான் வந்தது. மொழி என்பதும் அவரவர் உரிமைதான். அனாலும், அழகான தாய் மொழி இருக்கும் பொழுது எதற்காக இந்த மொழி மீதான அநாகாிகங்கள் என்பதுதான் புரியவில்லை. வெளிநாட்டில் தமிழை பேசினால் பலர் சிரிக்கலாம் அல்லது உங்களின்  கௌரவம் குறைந்து விடும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தாயகத்தில் நீங்கள் தமிழில் பேசினால் தான் உங்களுடன் பேசுபவர் உங்களைப் பற்றி பெருமைப்படுவார் என்பதை மறந்து போகாதீர்கள்.


நான்  உணவை  முடித்துக்கொண்டு, அந்த  ஹோட்டல்  பையனிடம் கேட்டேன். இவர்கள் யார்? அவன் சொன்னான், ”சொந்த இடம் யாழ்ப்பாணம். கனடாவில இருக்கினமாம். அந்த  அண்ணன், அங்கத்தைய  சிடிசன், மற்ற எல்லாரும்  போன வருஷம்  தான்  அங்க போனவங்களாம்”.

அட பாவிகளா, வெளிநாடு போய் ஒரு வருஷத்துக்குள்ளேயே தமிழ் செத்துடிச்சா? இவங்கள என்னதான் பண்ணலாம்? தமிழை பேச முடியாத அல்லது தமிழ் கடினமாக இருக்கும் வெளிநாட்டு தமிழர்களை  கொஞ்சம் மன்னித்துவிடலாம். இவர்களை? எடுப்புக்காகவும், கௌரவத்திற்காகவும், ஸ்டைலுக்காகவும், சீன் போடுவதற்கும், பந்தா காட்டுவதற்கும் இங்கிலீஸ் பேசும் தமிழர்களை கண்டாலே எனக்கு உச்சி முதல் பாதம் வரை கொதிப்பெழும்பும். அழகான தமிழை வாய் நிறைய, நாவை லாவகமாய் அசைத்து, உச்சரிக்கும் அந்த தமிழ் வார்த்தைகளின் இனிமையை இவர்கள் எப்பொழுதுதான் அறிந்துகொள்ளப் போகிறார்கள்.

மாறாக எனக்குத்தொிந்து பல புலம்பெயா் தமிழா்கள் தங்கள் அன்றாட மொழிக்கு ஈடாக தமிழையும் பயன்படுத்துகிறாா்கள். கொஞ்சம் கூட தமிழில் பேச சந்தா்ப்பம் கிடைத்தால் அதை சந்தோஷமாக பயன்படுத்திக்கொள்கிறாா்கள். எனக்குத்தொிந்த பல நண்பா்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு தங்களை விசேடமாக சமூக வலைத்தளங்களில் தமிழனாய் காட்டிக்கொண்டு தமிழில் பேசி தங்களை பெருமைப்படுத்திக்கொள்ளுகிறாா்கள். பிற மொழிகளுடன் வாழலாம் அதற்காக நமது தனித்தன்மையான தாய்மொழியை புறம் தள்ளிவிட முடியுமா? தமிழா் எங்களின் உாிமைகளாகிய இனத்தையும், மொழியையும் இறுதிவரை கொண்டுசெல்வதில் உயிா்த்தியாகம் வரை விலைகொடுத்த ஆயிரம் ஆயிரம் தமிழா்களின் சுடுகாட்டில் நின்றுகொண்டு எங்களால் எப்படி ஒட்டுமொத்த தமிழ் உணா்வையும் கொச்சைப்படுத்த முடியும்?


அடுத்தவாரமும் வருவேன்......

1 comment:

Yarlpavanan said...

தமிழா் எங்களின் உாிமைகளாகிய இனத்தையும், மொழியையும் இறுதிவரை கொண்டுசெல்வதில் உயிா்த்தியாகம் வரை விலைகொடுத்த ஆயிரம் ஆயிரம் தமிழா்களின் சுடுகாட்டில் நின்றுகொண்டு எங்களால் எப்படி ஒட்டுமொத்த தமிழ் உணா்வையும் கொச்சைப்படுத்த முடியும்?

Popular Posts