Tuesday, July 29, 2014

நிலா ஒரு அழகிய இராட்சசி.


நிலா எனக்கு மிகவும் நெருக்கமான தோழி. காதலைத் தவிர அனைத்திலும் பரந்துபட்ட அறிவுடையவள். காதலனைத்தவிர வேறு யாரிடமும் அவள் மண்டியிட்டதில்லை. அத்தனை தற்துணிவுடைய பெண் அவள். உருண்டைக் கண்களுக்குள் எப்பொழுதும் ஒரு குறும்புத்தனம் சுழன்றுகொண்டிருக்கும். சிரிக்கும் போதெல்லாம் கண்ணிமைகள் பரதநாட்டியம் ஆடும். பெண்ணழகின் ரேழகி அவள். எமது நட்பின் வயது ஏறக்குறைய பத்து வருடங்கள். அவளை சந்திக்காமல் இருந்திருந்தால் எனக்கு அழகிகளின் அற்புத அகம்பாவம் பற்றி தெரியாமலே போயிருக்கும். அவள் அழகில் அப்படியொரு கெறு ஒட்டிக்கொண்டிருக்கும். கடதாசிப்பூக்களுக்கும், கள்ளிப்பூக்களுக்கும் மத்தியில் இறுமாப்பாய் நிற்கும் மல்லிகை போல. அவள் கட்டும் சேலைகளின் அத்தனை இழைகளும் அவ்வளவு அம்சமாய் நிமிர்ந்து நிற்கும். அவள் தேவலோகத்தின் சிங்காரி. சிருஷ்டிக்கப்பட்ட அந்த சிற்றூரின் சீமாட்டி. இத்தனை வசீகரமான பெண்ணை தோழியாக வைத்திருப்பதில் எனக்கோ அத்தனை உடன்பாடு இருந்ததில்லை. மனம் அடிக்கடி நிலைகுலையும். நான் புத்தனாக இருந்தால் கூட நான் அந்தப்புரம் போய்விட்டால் என் நிலை? இருந்தும் நான் தோழன் என்பதை அடிக்கடி அவள் கேட்காமலேயே சத்தியப்பிரமாணம் செய்துகொள்வேன். அது என்மேல் நான் கொண்டிராத என் நம்பிக்கையின் சாட்சியம். இருந்தும் இப்படியொரு தோழி காதலியானால்? 

நிலா என்னை நீங்கும்போதெல்லாம் எப்படியோ இருள் சூழ்ந்துகொள்ளும். அன்றும் அப்படித்தான். வெறும் இருட்டில் வெறுமையாய் உறங்கிக்கொண்டிருந்தேன். எனது தொலைபேசிக்கும் ராசி இருந்ததில்லை என்னைப்போல. எப்பொழுதும் அமைதியாகவே இருக்கும் அல்லது ஆண் நண்பர்களின் அழைப்பு மட்டும் அவ்வப்போது வந்துபோகும். இருட்டில் சிணுங்க ஆரம்பித்த தொலைபேசியை எடுத்து பேசும் அளவிற்கு தூக்க போதை வழிவிடவில்லை. முதல்முறை அடித்து ஓய மீண்டும் மறுபக்கம் திரும்பிப் படுத்தேன். திடீரென 'உன்கூட கொஞ்சம் பேசணும்.. நைட்டுக்கு ப்ரியா இருப்பியா..?' என நிலா காலையில் சொன்னது ஞாபகம் வரவே, சடாரென எழுந்து தொலைபேசியை எடுத்து தட்டியதில் தெரிந்தது அவள் தான் சற்று முன்னர் அழைத்திருந்தது. உடனே ரீடயல் செய்தேன். அவள் 'ஹலோ..' என்றாள். எனது இருட்டு அறை திடீரென நத்தார் பண்டிகை கொண்டாடும் தேவாலயம் போல பளிச்சென ஆனது. நடுச்சாமத்தில், யாருமில்லா தனிமையில் காதுகளுக்குள் பாயும் இளையராஜா பாடல்போல பேச ஆரம்பித்தாள். அந்த நாட்களிலெல்லாம் இளையராஜா என்னை ஆட்கொண்டிருந்தாலும் நிலா என்னை ஆட்சிசெய்துகொண்டிருந்தாள். 'சொல்லு நிலா.. என்ன இந்த நேரம்..?' வார்த்தைகள் தடுமாறினாலும் சாதாரண தோழன் அளவிற்கு நடித்துக்கொண்டேன். 'இல்ல.. நீ என்ன பண்ணுறா?'. இரவு ஒன்பது மணியும், நடுச்சாமம் ஒன்றரை மணியும் எனக்கு ஏதோ ஒரேமாதிரித்தான். 'இப்ப ஒம்பது மணி.. கொர்...' என்றேன். 'அப்ப சரி நீ தூங்கு.. நான் வைக்கிறேன்..' என்றவளை நான் உடனடியாகத் தடுத்தேன். 'ச்சே.. ச்சே.. சொல்லு..!'. வேண்டாமல் வந்த வரத்தை வேண்டாம் என்பதா?

அது இது என அரைமணிநேரம் கடந்தது அவளுக்கும் எனக்குமான உரையாடல். இறுதியில் 'என்ன லவ் பண்றியா?' என கேட்ட ஒரு கேள்வியில் மனதில் பட்டாம்பூச்சி பறந்தாலும் எதற்காக திடீரென அப்படிக்கேட்கிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதற்கும் பொதுவாக பதில்சொல்லலாம் என 'ஏன் திடீரென அப்பிடி கேட்டாய்.. உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்தானே!' என சமாளித்தேன். நான் சமாளிப்பதும் மறுபுறத்தில் நான் அலைவதும் தெரிந்ததோ என்னவோ சொல்ல வந்ததை சட்டென போட்டு உடைத்தாள். 'இல்ல... நான் உன்ன லவ் பண்றேன்.. ஐ லவ் யு!'. அவ்வளவுதான் பிறகென்ன, என் கூரை திறந்தது. வானம் தெரிந்தது. விண்மீன்கள் என் அறைவரை வந்து சுவர்களில் அமர்ந்துகொண்டது. ஒரு புத்தன் றோமியோவாகிக்கொண்டிருந்தான். ஒரு கண்ணதாசனும் ஒரு ஷேக்ஸ்பியரும் பேனையோடும் பேப்பரோடும் என் அறையில் வந்து குந்திக்கொண்டார்கள். என்னை திடீரென அழகாய்க் காட்டியது கண்ணாடி. 'நானும் நிலாவும் வாழக்கையும்' என்கின்ற சுயநாவலின் முதல்பக்கம் நிரம்ப ஆரம்பித்தது.

இரண்டு வருடங்கள் எப்படிப்போனது என அடிக்கடி நானும் நிலாவும் பேசிக்கொள்வோம். ஆயிரம் சண்டைகள், ஆயிரம் கோவங்கள், கணக்கில்லா புன்னகை, அளவில்லா ஆசைகள், அடிக்கடி தொலைபேசி அழைப்புக்கள், ஆரவாரமில்ல கட்டியணைப்பு, திருட்டு முத்தங்கள், தினம்தோறும் 'ஐ லவ் யு', குழந்தை பற்றிய இங்கித கற்பனை, குடும்பம் பற்றிய கனவு, அவள் மடியில் போடும் குட்டித்தூக்கம், அவளைப்பற்றி நண்பர்களிடத்தில் அடிக்கும் அளப்பரைகள்.. அப்பப்பா.. அந்த இரண்டு வருடங்கள் எங்கள் வாழக்கையை அப்படியே இரசித்து வாழவைத்த காலம். 

'டேய்.. எங்க இருக்க..?' அன்று தொலைபேசியில் வந்த என் நிலாவின் குரலில் ஒரு படபடப்பு ஒட்டியிருந்தது. அவள் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம் சொல்லும் என்னால் இதை கண்டுபிடிக்க முடியாதா என்ன. 'என்ன பிரச்சன லவ்லி?' நேரடியாகவே விடயத்திற்கு வந்தேன். 'செல்லம்.. நீ என்ன சாதி?' நிலா கேட்டாள். அவளது பேச்சில் ஒரு தேடலும் ஒரு ஏமாற்றமும் ஒரு பருதவிப்பும் படர்ந்திருந்தது. 'தெரியல லவ்லி, எதுக்கு திடீரெண்டு.. அம்மாட்ட கேட்டு சொல்லவா..?', 'ஓகே ஓகே..!' தொலைபேசி கட்டானது. 

'எதற்கு அதெல்லாம் இப்பொழுது?' எனக்கு  மூளை சுற்றி சுழன்று களைத்து திரள ஆரம்பித்தது. குளப்பத்திற்கு மௌனம் மருந்தல்ல. உடனடியாகவே நிலாவை அழைத்தேன் தொலைபேசியில். 'நீங்கள் அழைத்த இலக்கம் இப்பொழுது பாவனையில் இல்லை' என பதில் வந்தது. நேரடியாக வீட்டிற்கு போய் அம்மாவிடம் கேட்டேன். 'அம்மா நாம என்ன சாதி..!'. அம்மா சுருக்கமான ஆனால் தெளிவான ஒரு விளக்கத்தைத் தந்தார். அதாவது நிலாவின் சாதியை விட நாங்கள் மூன்று சாதி குறைந்தவர்களாம். எனது காரை எடுத்துக்கொண்டு நிலாவின் வீடு நோக்கி பறந்தேன்.

'நிலா.. நிலா..' வீட்டின் உட்புறத்திலிருந்து இரண்டு நாய்கள் கேட்டை நோக்கி ஓடி வந்தன. அதற்கு பின்னால் மூன்றாவது நாயை எதிர்பார்த்தேன் ஆனால் வந்தது நிலாவின் அப்பா.

'என்ன வேணும்?' கோவமாகக் கேட்டார் எனது மாமா.
'நிலாவ பாக்கணும்..'
'அவ இல்ல.. கண்டவன் நிண்டவன் எல்லாம் அவள பாக்க முடியாது!'
'ப்ளீஸ் அங்கிள்.. ஒருக்கா கூப்பிடுங்க..'
'உனக்கு ஒருக்கா சொன்னா கேக்காதா?'
'சரி.. இட்ஸ் ஓகே..' என திரும்பி கார் கதவைத்திறந்தேன். அப்பொழுது வாசலில் நின்றுகொண்டிருந்த நிலாவின் அப்பாவின் குரல் கேட்டது.
'சாதி குறைஞ்ச நாய்களுக்கெல்லாம் என்ட பிள்ள கேக்குதா?'
...........................

மூன்று வருடங்கள் கடந்தன. நிலாவிற்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாக அறிந்தேன். அவளுக்கு பெண் குழந்தைதான் பிடிக்கும். பாவம் அதிஷ்டம் கைகொடுக்கவில்லை. நிலா இன்றுவரை என்கூடவே நடக்கும் நிழல். அவளை இப்பொழுதுகூட என்னால் பிரித்துப்பார்க்க முடியாது. என் இதயத்தில் இப்பொழுதும் அவளின் நினைவுகள்தான். அழிக்கமுடியாத சித்திரம் அவள். ஆபிஸ் முடிந்து ஒருநாள் வீடு வந்தேன். தொலைபேசியில் ஒரு எம்எம்எஸ் வந்து எனக்காய் தொங்கிக்கொண்டிருந்தது. அது எனது நண்பனிடமிருந்து வந்திருந்த ஒரு போட்டோ. கொஞ்சம் உற்றுப்பார்த்தேன். நிலாவின் அப்பா கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார். மறுபக்கம் ஒரு கம்பியில் தொங்கவிடப்பட்டிருந்த குருதி கொங்சம் கொஞ்சமாய் அவர் கரங்களுக்குள் சென்றுகொண்டிருந்தது. அந்த குருதிப்பொட்டலத்தை கொஞ்சம் உற்றுப்பார்த்தேன். அதில் 'அரவிந்' என எனது பெயர் எழுதப்பட்டிருந்தது. 

உடனடியாக நண்பனிடம் தொலைபேசினேன். 'என்னடா இது.. பிளட்ல என்ட பேர் இருக்கு..?' என வினவினேன். 'மறந்துட்டியா, போன மாசம் நீ குடுத்த ப்ளட்.. பாவம் யாரோ புளச்சுப்போகட்டும் உன்ட புண்ணியத்தால.. சரி ஆபறேசன் தியட்டர்ல நிக்கிறன்.. அப்புறம் கூப்பிடுறன்..' தொலைபேசி கட்டானது. 

மீண்டும் அந்த குருதிப்பொட்டலத்தை உற்று நோக்கினேன். எனது பெயருக்கு கீழே ஏதோ எழுதப்பட்டிருந்தது. அதில் எனது சாதியை குறிப்பிட்டிருப்பார்களோ?? ஆவலோடு உற்று நோக்கினேன். அதில் 'AB+' என மட்டும் எழுதப்பட்டிருந்தது.

இரண்டு நாட்கள் கழிந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிரில் என் அதே நிலா. 'அரவிந், நான் நிலா..' என அவள் அறிமுகம் செய்யும் முன்னமே நான் 'ஹாய் நிலா, எப்பிடி இருக்கீங்க?' என கேட்டேன். நிகத்தின் அறிமுகம் விரலிற்கு தேவையில்லையே. 'தாங்ஸ்..' என்றாள். இரண்டு வருடங்களுக்கு பின்னர் அவள் குரல் கேட்டதோ என்னவோ மறுமொழிக்கு நாவும் உதடும் அசைகிறது ஆனால் வார்த்தைகள் வருவதாய் இல்லை. எதுவும் தெரியாதவனாய் 'எதுக்கு திடிரெண்டு தங்ஸ் எல்லாம்...???' என வினவினேன். 'இன்னைக்கு அப்பா உயிரோட இருக்கிறதுக்கு நீங்கதான் காரணம்.. அதான்..!'. எனக்கு பேச்சு வரவில்லை. பற்களை இறுக உரசிக்கொண்டேன். 

'இட்ஸ் ஓகே..!' என குரலை பணித்துக்கொண்டேன். 'அதோட அப்பா நீங்க செய்த இவ்வளவு பெரிய உதவிக்கு உங்களுக்கு ஏதாச்சும் பரிகாரம் செய்யணும்னு ஆசப்படுறார்.. என்ன வேணும் அரவிந்??'.

அந்த மனுசனை இப்பொழுதே ஓடிச்சென்று குரல்வளையை நசித்து சாகடிக்கவேண்டும் போல் இருந்தது. எனது நிலாவிடம் எக்கச்சக்கமாய் கோவம் வந்தது என்றால் அது இப்பொழுதுதான். இவர்களுடன் எல்லாம் தொடர்ந்து பேச்சு வைத்திருப்பதே பாவம் எனத் தோணியது.

பயங்கரக் கோவத்துடன் 'நல்லது நிலா, எனக்கு உன்னைத் தவிர எல்லாமே போதுமானதாய் இருக்கிறது. சரி, உங்க அப்பாவுக்கு திரும்பவும் ரத்தம் தேவைப்பட்டா கால் பண்ணு. ஓகே???!' என அழைப்பை அவசரமாய் அன்று துண்டித்த ஞாபகம். இல்லை............ திரும்பிப்பார்த்ததில் என் மேசையிலிருந்த நிலாவின் புகைப்படத்தை நோக்கி எறியப்பட்ட என் தொலைபேசி சுக்கு நூறாய் உடைந்து கிடந்தது. ஆனாலும், அவசரமாக நெருங்கிப்போய் பார்த்தேன், நல்ல வேளை என் நிலாவின் புகைப்படத்துக்கு மட்டும் எதுவும் ஆகியிருக்கவில்லை.

..............


நன்றி -
- தமிழ்த்தந்தி, 20.07.2014
- ஜீவநதி, ஆவணி 2014.Saturday, July 26, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 17


வெளிநாடுகளில் தொலைக்கப்பட்ட எங்கள் வாழ்க்கை தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறது அண்மையகால நாட்குறிப்புக்கள். பல விடயங்கள் தொடர்பாக பேசியாகிவிட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் நம் சொந்தங்களை துரத்தும் இன்னுமொரு விடயம் அவர்கள் தொலைத்த ஈழத்து உணவுகள். நான் எந்த தேசத்திற்கு போனாலும் நான் மிஸ் பண்ணும் விடயங்களில் மிக முக்கியமானது இந்த உணவு. நம் உணவு வகைகளையும், நம் உணவுப் பழக்கங்களையும் எம்மால் இலகுவாக மாற்றிக்கொள்ள முடிவதில்லை. எமது உணவுப்பழக்கங்களும் ஒரு வகையில் எமக்கே உரித்தான ஓர் தனித்துவத்தை உறுதிப்படுத்துகின்றது. எமது உணவுப் பழக்கவழக்கங்கள் எமக்கான தனித்துவம் என்பதை உலகின் பல திசைகளுக்கு சென்று வரும் போது ஆத்மார்ந்தமாக அனுபவித்திருக்கிறேன். 

2011 இல் ஜெனிவாவின் நடுநகர்ப்பகுதியில் இந்த அனுபவம் எனக்கும் என் பாக்கிஸ்தானிய நண்பன் ஒருவனிற்கும் நடந்தது. இரண்டு வாரமாக வெஸ்ட்ரேன் பூட் என எங்கள் வயிறுகளை தொல்லைசெய்ததன் விளைவு, எங்கள் நாக்குகள் இந்தியன் ரெஸ்ட்டுரன்ட் தேடி அலைய ஆரம்பித்தது. ஜெனிவாவில் அன்றுதான் முதல் தடவையாக இந்தியன் ரெஸ்ட்டுரன்ட் ஒன்றை கண்டு பிடித்து சாப்பிடப்போன முதல் அனுபவம் எனக்கு. அங்கு சென்றபோது சட்டென வயிற்றினுள்ளே பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. அத்தனை பிரவாகம் எனது வயிற்றிற்கு. இரண்டுவார தவிப்பு அல்லவா? அப்பொழுதுதான் நமது தமிழ் உணவுகளின் ஆக்கிரமிப்பு, அதற்கு முழுவதுமாக அடிமையாக்கப்பட்ட நமது நிலைமை என்பன சரியாக புரிய ஆரம்பித்தது. ஏதோ கடந்த இரு வாரம் கிடைக்காத ஒரு ஆனந்தம் உடல் பூராவும் பரவிக் கிடந்தது. பசி திடீரென எல்லை கடந்தது. ஆடர் எடுத்துக்கொண்டு இடது வாசல் வழியாக உள்ளே சென்ற அந்த வெயிட்டரை வெட்கம் கெட்ட நாவு அவசரமாக தேடிக்கொண்டிருந்தது. உணவிற்காய் இத்தனை பரவசம் கொண்டது எனது வாழ்க்கையில் இன்றுதான். சாப்பாடு வந்தது. நான் ஆடர் செய்த அதே சிக்கின் ப்ரியாணி. அவித்த முட்டை ஒன்றும் கண்படக்கூடாது என்பது போல் நடு சோற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்படியே கரண்டியை வேகமாக எடுத்து, சவலால் மணல் அள்ளுவதைப்போல் முட்டைக்கு இடப்புறமாக திணித்து, அள்ளி அப்படியே வாயில் கொட்டினேன். நீங்கள் நினைப்பது சரிதான், அன்று எனக்கு அப்படியொரு அவா அந்த சாப்பாட்டின் மேல்.

அப்புறம் என்ன... "ப்ரியாணியும் அவன் மூஞ்சியும்னு" திட்டிவிட்டு ஒரு ப்ரியாணிக்கு கிட்டத்தட்ட 25 டாலர்களை மனம் எரிய எரிய அள்ளிக் கொட்டிவிட்டு வீடு திரும்பினோம். அங்கிருந்து வெளிக்கிடும் போது அப்படியொரு கோவம் அந்த கடைக்காரன் மேல். பின்னர் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பாவமாக இருந்தது. உண்மைதானே, நம் அம்மாவை பிட்சாவும், பஸ்ராவும் செய்யச்சொல்லி அதை வெள்ளைக்காரனுக்கு பரிமாறினால் அவர்கள் இப்படித்தானே கோவப்படுவார்கள். பொது மன்னிப்பு வழங்கி அந்த கடைக்காரனை சரி பிழைத்துப் போ என விட்டுவிட்டேன்.

இலங்கையின் தமிழர் தேசங்களில் காணப்படும் உணவு பழக்கவழக்கங்கள் இன்று நேற்கு அல்ல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தொடங்கி அதிகம் மாறாமல் இருந்துகொண்டிருக்கும் ஒரு புராதன அம்சமாகும். பொதுவாக வடக்கு கிழக்கின் புவியியல் அமைப்பு, வளங்கள், விவசாய உற்பத்திகள், பிற உணவு உற்பத்திகளுக்கான வாய்ப்புக்கள், உணவுப்பொருட்கள் தொடர்பான வணிகம், நில உடைமை, நில பயன்பாடு என்பன நம் உணவுப் பழக்கவழக்கங்களில் மிகப்பெரிய தாக்கங்களை உண்டாக்கும் காரணிகளாக இருக்கின்றன. இருந்தாலும் வடக்கின் எல்லா பிரதேசங்களிலும் எல்லா சமூக கட்டமைப்புக்களிலும் ஒரே வகையான உணவுப் பழக்கவழக்கங்கள் இருக்கின்றனவா எனப்பார்த்தால் இல்லை. இந்த அன்றாட உணவுப்பழக்க வேறுபாடுகளுக்கான பின்னணியில் சமூக அமைப்பு, தொழில், பொருளாதார நிலை, சமூக அந்தஸ்து, வாழ்விடச் சூழல் என்பன மிக முக்கிய காரணிகளாக அமைகின்றன. சமய கோட்பாடுகளும் எங்கள் உணவுப் பழக்கத்தில் மிகவும் முக்கியமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழர் தேசங்களில் அரிசிச் சோறு மிகப்பிரதானமான உணவாக இருந்தாலும் பல வகையான துணை உணவு வகைகளின் ஆதிக்கத்தை அதிக அளவில் காணமுடியும். அதில் மிக முக்கியமான துணை உணவு வகையாகக் காணப்படுவது கோதுமையாகும்.

ஒரு முறை யாழ்ப்பாணத்தில் புன்னாலைக்கட்டுவான் எனப்படும் ஒரு ஊரிற்குச் செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த சந்தர்ப்பம் எனது சகோதரியால் கிடைத்தது. யாழ்ப்பாணம் மிகவும் பரந்த ஒரு தேசம். அப்பொழுதெல்லாம் எனக்கு யாழ்ப்பாணத்தில் அந்த நல்லூரடி, ரெம்பிள் ரோட், பஸ்ராண்ட் இந்த மூன்றைத்தவிர வேறு எதுவும் தெரியாது. இந்த மூன்று இடங்களை விட்டு வேறு எங்கு போனாலும் மகாபாரத கதையின் நடுவில் தொலைந்தவன் போல ஆகிவிடுவேன். சரி மீண்டும் புன்னாலைக்கட்டுவான் கதைக்கு வரலாம். எனது சகோதரியின் உயிர் நண்பி ஒருவரின் வீட்டிற்கு சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்க வேண்டியிருந்தது. எனது பால்ய காலத்தில் யாழ்ப்பாணம் பற்றிய நல்லதொரு அபிப்பிராயம் வருவதற்கும், யாழ் மக்களின் மீதான உயர்ந்த நம்பிக்கை ஏற்படுவதற்கும் இந்த புன்னாலைக்கட்டுவானில் நான் தங்கிய அந்த இரண்டு நாட்கள்தான் காரணம் என்பேன். அதிலும் சுத்தமான தமிழ் சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு களைத்துப் போனதுதான் இன்னும் ஞாபகம் இருக்கிறது. அங்குதான் அதிகமான யாழ்ப்பாண உணவுப் பழக்கம் பற்றி அனுபவிக்கக் கிடைத்தது. இன்றும் கூட மனதில் நிற்கிறது அந்த சாப்பாடு. தாங்ஸ் ஆன்டி.

பொதுவாக தமிழர் பிரதேசங்களில் முதன்மை உணவு சோறு மற்றும் கறி ஆகும். பொதுவாக நெல்லை அவித்துக் (புழுக்கி) குற்றிப் பெறப்படும் புழுங்கல் அரிசிச் சோற்றையே அதிகமானவர்கள் விரும்பி உண்ணுகிறார்கள். இதைத்தவிர நெல்லை அவிக்காமல் குற்றும் போது கிடைக்கும் சிவப்புப் பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி என்பனவற்றிலும் சோறு ஆக்குவதுண்டு. பொதுவாக இந்த அரிசிச் சோற்றுடன் மிகப்பிரதானமாக சேர்த்துக்கொள்ளப்படும் கறி வகையில் குறிப்பிட்டளவு மரக்கறி மற்றும் மாமிசங்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. எனக்கு அதிகம் பிடித்த கறி வகைகளை எனது அனுமதியோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதற்கு முதல் இந்தப் பதிவை வாசித்துவிட்டு நான் ஒரு சாப்பாட்டு இராமன் என்கின்ற முடிவிற்கு வந்துவிடக்கூடாது. சிறு வயதில் நான் ஹஸ்டலில் சேர்க்கப்பட்டு கணிசமான வருடங்கள் அங்கு இருந்துதான் படித்தேன். அங்கு இருக்கும் பொழுது சலித்துப்போன ஒரு உணவை இப்பொழுது எங்கு கிடைத்தாலும் மிஸ் பண்ணாமல் ஒரு பிடி பிடித்துவிடுவேன். இறுதியாக இதை அனுபவித்தது முல்லைத்தீவில். காலைச்சாப்பாட்டிற்காக சென்றிருந்த போது அந்த கடைக்கார பையன் வாசித்த மெனுவில் இறுதியாக இருந்தது 'பாணும் பருப்புக் கறியும்'. பிறகென்ன.. உடனடியாகவே ஓடர் செய்தாயிற்று. எனது ஹஸ்டல் வாழ்க்கை எனக்கு ஞாபகம் வந்து மறைந்தாலும் எனக்கு பாணும் பருப்பும் நன்றாக பிடிக்கும். பாணுக்கும் அந்த பரிப்பிற்குமான கம்பினேஷன் இருக்கிறதே.. இதை யார் கண்டுபிடிச்சிருப்பார் எண்டு ஹாஸ்டலில் இருக்கும் போது ஆத்திரத்திலும் இப்போது ஆச்சரியத்திலும் அடிக்கடி நினைப்பதுண்டு. 

பாணும் பருப்புக்கறியையும், நம் ஈழப்போராட்டத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. காரணம் உங்களுக்கே புரியும். இலகுவாக மற்றும் மலிவாக கிடைக்கக்கூடியவற்றை வைத்துக்கொண்டு இலகுவாக சமைத்து வேகமாக பரிமாறக்கூடியதாக இருப்பதே இந்த பாண் - பருப்பு கூட்டணியின் வெற்றி. இப்பொழுது வெளிநாட்டில் வசித்தாலும் எவராச்சும் பாணும் பருப்பையும் காட்டி வேண்டுமா என்றால் அவர்களுக்கு பின்னாடியே போய்விடுவேன். அடுத்து, இந்த குழம்பு பற்றி பேசினால் என்னால் இங்கு நின்மதியாக இருக்க முடியாது. இந்த குழம்பைக் கண்டு வருடங்கள் ஆகிவிட்டது. குழம்பு என்றால் என்ன என்று அம்மாவிடம் ஒரு முறை கேட்ட போது 'கத்தரிக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு, பூசணிக்காய், பாகற்காய் போன்ற காய், கிழங்கு வகைகளில் ஒன்றை முதன்மையாகச் சேர்த்து தேங்காய்ப்பால், மிளகாய்த்தூள், பழப்புளி, உப்பு போன்ற சேர்மானங்களுடன் ஆக்கப்படுவது குழம்பு எனப்படும்' என கூறிச்சிரித்தார். அப்ப இவை அனைத்தையும் மிக்ஸ் பண்ணி சமைத்தால் அது சாம்பாறா என்றேன். சாம்பாறு பற்றி பேசும் பொழுது இட்டலியையும் தோசையையும் ஞாபகப்படுத்தாமல் இருக்க முடியாது. தமிழ்நாட்டு அளவிற்கு நாங்கள் சாம்பாறு பிரியர்கள் இல்லை என்றாலும் பொதுவாக கோவில்களில் அன்னதானம் செய்பவர்கள் சில சமயங்களில் பல கறிகள் செய்வதைத் தவிர்ப்பதற்கு எல்லாக்காய்களையும் சேர்த்து சாம்பார் செய்வதுண்டு.

தமிழனாக நான் அதிகம் விரும்பி உண்ணும் ஈழத்து உணவுகளை இப்பொழுதெல்லாம் அதிகம் மிஸ் பண்ண வேண்டியிருக்கிறது. வரட்டல் தூள் கறி (கூட்டுக்கறி), பால்க்கறி (வெள்ளைக்கறி), கீரைக் கடையல், வறை அதுவும் வாழைப்பூ, புடோல், சுறா போன்றவற்றின் வறைகள், துவையல், சம்பல் அதுவும் பச்சைக் கொச்சிக்காய் சேர்த்து தேங்காய்ப்பூவுடன் அம்மியில் அரைத்து எடுக்கும் சம்பல், பொரியல், சொதி அதுவும் எலும்புகளை இட்டு தேசிப்புழி சேர்த்து தயாரிக்கப்படும் சொதி என நம் உணவுகளைப் பற்றி பேசும் போது நாவில் கண்டபடி சுவையூறும். வன்னியில் நிகழும் கொண்டாட்ட அல்லது விசேட வைபவங்களில் நான் மேலே குறிப்பிட்ட அனைத்து உணவுகளும் வரிசையில் அடுக்கி வைத்து பரிமாறப்படும். இந்த பந்தியை அதிகமானவர்கள் தவற விடுவதில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதை தவற விட்டுவிடக்கூடாதென்பதில் நான் மிகவும் கவனமாக இருப்பதுண்டு. உலகில் உள்ள ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகிற பொழுது நமது உணவில் தேங்காய் பால் அல்லது பூ சேர்த்துக்கொள்ளுவது அதிகமாக இருக்கிறது. மிளகாய்த்தூளின் பயன்பாடு கூட இந்தியாவோடு ஒப்பிடுகையில் அதிகம் என்றே சொல்ல வேண்டும். இவை இரண்டும் பிற உணவு வகைகளுடன் ஈழத்து உணவு வகையை பிரித்துக்காட்டும் மிக முக்கியமான காரணிகளாகும்.
இப்படி நமக்கே உரியதான இந்த ஈழத்து உணவு வகைகளை தேடித் தேடி அலையும் புலம் பெயர் தமிழர்களிடம் கேட்டுப்பார்த்தால் புரியும் அதன் மதிப்பு. ஒவ்வொரு நாளும் அரிசிச் சோறும் குழம்பும் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் திகட்டாத அவர்களுக்கு வெளிநாடுகளில் வெஸ்ட்ரேன் பூட் உடன் தினமும் சண்டை செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு முறை KFC, Mcdonald பாஸ்ட் பூட்களை சாப்பிட்டு விட்டு மார்வலஸ் என வாயைப்பிழக்கும் நீங்கள் வெளிநாடுகளில் அதை நம்பியே புளைப்பு நடாத்தும் எங்கள் வயிறுகளைக் கேட்டுப்பாருங்கள். பக்கம் பக்கமாக புலம்பி அழும். லீட்டர் லீட்டராக அழுது கொட்டும். இன்னும் நம் உணவு பற்றி பேசுவதற்கு அதிகம் இருக்கிறது. அவற்றை இன்னுமொருவாரம் தொடர்வோம். அதுவரை பசித்திருங்கள்.

அடுத்த வாரமும் வருவேன்...

Sunday, July 13, 2014

எது காதல்?


எது காதல்?
நான் வாழும் நரகத்தை
நீ முடிசூடி ஆட்சி புரிந்ததா?
இல்லை - நான் விட்டுக்கொடுக்கும் சண்டைகளில்
நீ வெற்றிவாகை சூடிக்கொண்டதா?
எது காதல்?
உன்னை நான் அணைத்துக்கொள்ள
என்னை நீ எரித்து முடித்ததா?
உனக்குள் நான் மயங்கிக்கிடக்க
என் தொண்டைக்குழிக்குள் திராவகம் கொட்டியதா?

காதல் வழிய வழிய - உன்னை
கொட்டித் தீர்த்து தீர்ந்து போனது
நின் பிழையா?
இல்லை -
கண்ணீர் சொரிய சொரிய - உன்னை
கட்டியணைத்து முத்தம் கொட்டியது
என் தவறா?

காதல் ஒரு தீராப் பிரவாகம்!
நீ குடிக்க குடிக்கு
என்னுள் ஊறிக்கொண்டே போகும்!
நீ பசிக்க
நான் சாதமானேன்!!
இறுதியில்,
நீ வரம் கிடைத்து எங்கோ தாரம் ஆனாய்.
நானோ கரம் தொலைத்து எனக்கே பாரம் ஆனேன்.Saturday, July 12, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புகள் - 16


பொருளாதாரம், வசதி வாய்ப்புக்கள், உறுதிசெய்யப்பட்ட பாதுகாப்பு, அழகான வாழ்க்கைத்தரம் என அனைத்தும் புலம்பெயர் வாழ்க்கையில் கிடைத்தாலும் ஆங்காங்கே சிறு சிறு ஏமாற்றங்களும், இழப்புக்களும், விரக்தியும் அந்த வாழ்க்கையோடு ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. பலர் வெளிநாடுகளிலே நிறையவே பணம் சம்பாதித்தாலும் சங்தோஷமான வாழ்க்கையை கோட்டை விட்டுவிடுகிறார்கள். பணமும் சந்தோஷமும் அதிகமாக வாழ்க்கையில் ஒன்றாய் கிடைப்பதில்லை. பணம் வருகின்ற போது சந்தோஷம் தூர போய்விடுவதுண்டு. அதேபோல சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கிறபொழுது பணப்பை வெறுசாகிவிடுகிறது. ஒரு வகையில் பணத்திற்கும் சந்தோஷத்திற்குமான இடைவெளியை நிரப்புவதே இறுதியில் வாழ்க்கையாகிறது. இன்னுமொரு வகையில் பார்த்தால், வெளிநாட்டு வாழ்க்கை என்பது உணவிற்காக ஓடி ஓடி உழைக்கும் பலரிற்கு அங்கு சரியாக உணவருந்த நேரமோ, சந்தர்ப்பமோ கிடைப்பதில்லை. சிலரின் வாழக்கை உழைத்தலில் மட்டுமே நின்றுகொண்டிருக்கிறது. இவர்கள் வாழ்வது எப்போது?

அதிகமான இளைஞர்களின் வாழ்க்கை அங்கே வேலைக்காயும் தொழிலிற்காயும் உழைப்பிற்காயும் செலவு செய்யப்படுகிறது. இவர்கள் தேடும் சகலதும் கையில் பூரணமாக வந்துசேரும் பொழுது வாழ்க்கை பல சந்தோஷங்களை தொலைத்துவிட்டு ஒரு வெறும் கூடாய் நின்றுகொண்டிருக்கும். அப்பொழுது இத்தனை கஷ்டங்களை அனுபவித்தும் வாழ்க்கையை வாழ முடியாமல் போய்விட்டதே என மனது பூராகவும் ஏமாற்றம் ஒட்டிக்கொள்ளும். அப்போது அந்த வாழக்கை, கண்கள் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரதிற்காய் ஏங்கிக்கொண்டிருக்கும். இது இளைஞர்களின் வெளிநாட்டு வாழ்க்கையின் ஒரு பக்கம். நானும் பல தடவைகள் யோசிப்பதுண்டு, வீட்டில் நடக்கும் ஒரு சந்தோஷமான நிகழ்வில் பங்கெடுக்க முடியாமல் வேலை பணமென்று வெளிநாட்டில் இருந்துகொண்டு எதை அனுபவிக்கப்போகிறோம்? என்னைப்பொறுத்தவரையில் சாதாரண சந்தோஷமான வாழ்க்கையை நமக்கு கொடுக்கும் அளவிற்கு போதுமான பணத்தை உழைத்தால் போதும். உழைத்து உழைத்து நம் வாழ்க்கையை அனுபவிக்காமல் முடித்துக்கொள்ள நான் மட்டுமல்ல வெளிநாடுகளில் வசிக்கும் பல இளைஞர்களுக்கு விருப்பமில்லை. நோக்கமும் இல்லை.

ஒருமுறை மன்னாரில் இருந்தபொழுது நண்பனோடு ஒரு இறந்தவீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. எனக்கும் அந்த இறந்தவீட்டிற்கும் சம்மந்தம் இல்லையென்றாலும் அது என் குறித்த நண்பனிற்கு வேண்டப்பட்ட இடம். அவனது வற்புறுத்தலின்பேரில் கட்டாயம் போகவேண்டியதாயிற்று. திருமண வைபவங்களிற்குத்தான் அழைக்காமல் செல்வது அநாகரிகம். இறப்பு வீட்டிற்கு இல்லையே. நண்பனிடம் வருகிறேன் என்றேன். மன்னார் நகரத்திலிருந்து 45 மணிநேரம் பயணம் செய்ததில் அந்த கிராமத்தை கண்டடைந்தோம். மன்னார் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலிருந்து அதிக எண்ணிக்கையான மக்கள் வெளிநாடுகளில் இருப்பது என்றால் அது இந்த கிராமம்தான் என நான் வீட்டிலிருந்து கிளம்பும் போதே எனது தந்தை ஹின்ட் அடித்திருந்தார். அந்த கிராமத்தை 'வெளிநாட்டு வில்லேச்' என்று செல்லமாய் வேறு அழைப்பார்களாம். அந்த கிராமத்தை அடைந்த நானும் நண்பனும் ஒருவாறு அந்த வீட்டை கண்டடைந்தோம். ஏராளமான சனக்கூட்டம். இறந்தவர் நிச்சயம் நல்ல மனிதராக வாழ்ந்து இறந்திருக்க வேண்டும். நாம் இறக்கும் போது இறுதியாக நம் உயிரற்ற உடலைப்பார்க்க எத்தனை பேர் வருகிறார்கள் என்பதில்தான் நாம் இந்த உலகத்தில் எப்படி வாழ்ந்திருக்கிறோம், எதை சம்பாதித்தோம் என்பனவற்றை சரியாக அளவீடு செய்துகொள்ள முடியும்;. அந்த சனக் கூட்டம் நிறைந்த மரணவீட்டினுள் செல்லும் பொழுது 'காசு பணத்த விட முதல் மனிதர சம்பாதிக்கணும் மகன்!' என அடிக்கடி என் அம்மா சொல்லும் வாக்கியம் நினைவிற்கு வந்தது.

உள்ளே சென்று, வீட்டின் முற்றத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த உடலை பார்வையிட்டோம். அந்த சவப்பெட்டியில் கிடத்திவைக்கப்பட்டிருக்கும் அம்மா அப்பொழுதுதான் எனக்கு அறிமுகமாகிறார்; இருந்தும் அவருடன் பேசவோ அல்லது ஒரு புன்னகையை உதிர்க்கவோ முடியாமல் போனது துர்வதிஷ்டம். அந்த இறந்த உடலில் கழுத்து, கைகளை மொய்த்திருந்த தங்க நகைகள் அப்பா சொன்ன 'வெளிநாட்டு வில்லேச்சை' சட்டென ஒரு முறை உறுதிசெய்துகொண்டது. இறுதிமரியாதையை முடித்துவிட்டு சற்று அகன்று நூற்றுக்கணக்காய் வரிசையில் நின்றுகொண்டிருந்த பிளாஸ்டிக் கதிரைகளில் இரண்டை நானும் நண்பனுமாய் நிரப்பிக்கொண்டோம். எனது விழிகள் அங்கும் இங்கும் மேய்ந்துகொண்டிருந்தது. அந்த மேச்சலில், இறந்த அந்த உடலிற்கு கொஞ்சம் அருகில் உயரமாய் பொருத்தப்பட்டிருந்த ஒரு வெப் கம் (இணைய வீடியோ கமறா) சிக்கியது. மிகவும் அவசர அவசரமாக அதை கூர்ந்து அவதானிக்க ஆரம்பித்தேன். அந்த கமறாவிலிருந்து எங்கோ செல்லும் அந்த வயர் வழியே என் கண்கள் நடந்தது. இறுதியில் அந்த வயர் கொஞ்சம் தூரமாய் உள்ள ஒரு மேசையில் வைக்கப்பட்டிருந்த மடி கணினியுடன் தொடுக்கப்பட்டிருந்தது. இதைப்பற்றி கொஞ்சம் தெரிந்தாக வேண்டுமே என அருகில் எனது நண்பனுடன் உரையாடிக்கொண்டிருந்த அவனது மாணவன் ஒருவனிடம் கேட்டேன். அந்தப் பையன் நிச்சயம் இந்த வீட்டாட்களின் உறவுக்காரனாகத்தான் இருக்க வேண்டும். அவன் நான் கேட்ட கேள்விக்கான விடையை தெளிவாக விபரித்தான். 'செத்துப்போன இந்த பெரியம்மாட கடைசி மகன் வெளிநாட்டில இருக்கிறார் சார். அவர் அங்க போய் இப்ப ஒரு வருஷம்தான் ஆகுது. இப்ப இங்க வந்தா மறுபடியும் திரும்பி அந்த நாட்டுக்கு போக முடியாதாம். அதால அவர வீட்டாக்கள் வர வேண்டாம் எண்டுட்டாங்க.. அதனால அவர் அங்க இருந்துகொண்டு ஸ்கைப்பில பாத்துக்கொண்டு இருக்கார்..'

இதைக்கேட்டதும் எனக்கு தலை விறைத்துப் போனது. உடனடியாகவே அந்த வெளிநாட்டிலிருக்கும் நபரின் இடத்தில் என்னை வைத்து யோசித்தேன். நானாக இருந்திருந்தால், திரும்பிப்போக முடியாது என்றால் கூட கவலையில்லை, நிச்சயம் வந்திருப்பேன். 'டேய் அம்மாடா..!' என மனதுள் ஆவேசமாய்க் கூறி என் தொடைகளில் அடித்துக்கொண்டேன். அம்மா இறந்துபோகும்போது கூட அருகில் இருக்காத அல்லது இறுதியாக அவள் முகத்தை பார்க்க குடுத்துவைக்காத ஒரு வெளிநாட்டு வாழ்க்கை எதற்கு என்று தெரியவில்லை. இப்படி சிந்திப்பதால், மார்டேன் உலகத்தில் நான் பிற்போக்குவாதியாக உங்களில் சிலரிற்கு தோன்றலாம்; பறவாயில்லை. அம்மாவுடன் வெளிநாடு என்ன, அதையுமே ஒப்பிட்டு முன்னுரிமைப்படுத்த என்னால் முடியாது. இந்த இறந்த வீடு என்னில் பெரியதொரு மனப்பாரத்தை தோற்றுவித்திருந்தது. யுத்தமும், அதனாலான வெளிநாட்டு தேவைகளும் இறுதியில் எமக்கு கொடுத்த பரிசு இதுதானா?. இந்த கேள்வியோடே வீடு வந்து சேர்ந்தேன். எனது அம்மாவிடம் நடந்ததைச் சொன்னேன். அதற்கு அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒரு பதில் சொன்னார் பாருங்கள்..

'அது சரிதானே, அம்மாக்கள் இன்றைக்கோ நாளைக்கோ இறந்துவிடுவோம். பிள்ளைகள் உங்க உங்க எதிர்காலத்த பார்க்கவேண்டாமா?? அவன் வராம விட்டதில என்ன தப்பு? கெதியா போய் குளிச்சிட்டு வா, 4 மணியாச்சு, உனக்காக நானும் இன்னும் சாப்பிடாம பாத்துக்கிட்டு இருக்கன்!'. 

அம்மாக்கள் என்றும் அம்மாக்கள்தான்!.

இதேபோல சில மாதங்களுக்கு பிறகு ஒருமுறை வவுனியாவிலுள்ள எனது நண்பியின் வீட்டிற்கு போயிருந்தேன். அன்று ஞாயிற்றுக் கிழமை. நண்பியின் வீட்டில் அனைவரும் இருந்தார்கள். இவர் எனது நீண்டநாள் தொழில் ரீதியான நண்பி. அவர்கள் வீட்டாட்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுக்கும்தான். அங்கு செல்கின்ற போதெல்லாம் ஒரு உண்மையான அன்பை என்னால் அனுபவிக்கக்கூடியதாய் இருக்கும். இதற்காகவே எப்பொழுதெல்லாம் வவுனியாவிற்கு சென்றாலும் அவர்கள் வீட்டிற்கு செல்லாமல் எனது பயணத்தை முடித்துக்கொள்வதில்லை. நண்பியின் அம்மா, அப்பா, அவள் தங்கை என சகலரும் என்னை அவர்கள் வீட்டுப்பிள்ளை போலவே பாசத்தைக் கொட்டி கவனித்துக்கொள்வார்கள். எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் அந்த வீடு அன்று நான் சென்றபோது ஏதோ ஒரு அமைதியால் சூறையாடப்பட்டிருந்தது. அங்கிள் முற்றத்தில், நண்பி கட்டிலில், தங்கச்சி விறாந்தையில் கூரையைப் பர்த்தபடி.. என்ன நடக்கிறது என்றே என்னால் புரிந்துகொள்ளமுடியாமல் போனது. ஏதோ பிரச்சனை என்பது மட்டும் எனக்கு தெளிவாக விளங்கவே 'அன்டி எங்க?' என வெளியில் வந்த நண்பியிடம் கேட்டேன். 'உள்ள..' என ஆட்காட்டி விரலைத்தூக்கி அறையைக் காட்டினாள். என்னவோ ஏதோ என சட சடவென அறையைத்திறந்துகொண்டு உள்ளே போனேன். கணினியின் முன்னே உட்கார்ந்திருந்த அன்டி 'வா அமல்..!' என உள்ளே அழைத்தார். அவரது இரு கண்களும் கொவ்வம் பழம்போல் சிவந்திருந்தது. இரண்டு கண்களிலிருந்தும் வடியும் கண்ணீர் அவர் நாடியில் குவிந்து, சொட்டென கீழே விழுந்து தெறித்தது. 'சம்திங் றோங்' எனத் தெரியவே, நான் சடாரெனக் கதவை மூடிவிட்டு வெளியே வந்தேன்.

'எப்ப வந்தாய் வவுனியாவுக்கு?' நண்பி வினவியதுகூட புரியாமல் குளப்பத்தில் நின்றுகொண்டிருந்தேன். 'அது இருக்கட்டும், நீ கொஞ்சம் வெளிய வா..' என அவளை அழைத்துக்கொண்டு முற்றத்திற்கு வந்தேன். 'என்னடி பிரச்சின..???' என தொங்கிக்கொண்டிருந்த அவள் முகத்தை நிமிர்த்திக் கேள்விக்குறியைப் போட்டேன்.

'அது பெருசா ஒண்ணும் இல்லடா.. இண்டைக்கு கனடாவில அக்காவுக்கு சீமந்தம் செய்யுறாங்க.. அதுதான் அம்மா தான் அவகூட இல்லையேனு ஒரே பீலிங்.. அந்த பங்சனத்தான் ஸ்கைப்பில பாத்துக்கிட்டு இருக்கா..'

'அட இதுதானா பிரச்சனை. அதுக்கு எதுக்கு அழணும். வெளிநாட்டில கலியாணம் கட்டி வைக்கிறப்போவே இப்படியெல்லாம் நடக்கும்னு தெரியும்ல.. பிறகு எதுக்கு இப்ப அழுதுகிட்டு..' சமாதானம் சொல்வதாய் கொஞ்சம் கோவம் கலந்து வசனம் பேசினேன். பிறகு 'சரி அது இருக்கட்டும் இப்ப நீ எதுக்கு கண் கலங்குறே??' என மீண்டும் குனிந்த தலையை நமிர்த்தி அவளிடம் கேட்டேன். அதற்கு நூறுகிலோ சோகம் அவள் முகத்தில் தொங்கிக்கொண்டிருக்க, கண்கலங்கியபடி அவள் சொன்னாள்,

'நானும் கலியாணம் கட்டி வெளிநாட்டுக்குத்தானே போகப்போறன்...!'


அடுத்த வாரமும் வருவேன். 
           

Monday, July 7, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 15.அண்மைய நாட்குறிப்புக்கள் புலம் பெயா் தமிழா்கள் வாழ்வியலையும், தமிழ்மொழிப் பாவனையையும் பேசி நகா்ந்துகொண்டிருக்கிறது. இறுதியாக நான் பதிவிட்ட குறிப்பிற்கும் இன்றைய குறிப்பிற்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது. இறுதிவார குறிப்பில் வந்துபோன அந்த என் “இத்தாலி” நண்பியை நீங்கள் இதுவரை மறங்திருக்க மாட்டீா்கள் என நினைக்கிறேன். சாி, இவ்வார குறிப்பினுள் செல்லலாம். இந்த குறிப்பை நகைச்சுவை உணா்வோடு வாசியுங்கள். ஆனால் நான் சொல்ல வரும் கருத்தை மட்டும் சீாியசாக கவனித்துக்கொள்ளுங்கள்.

நாம்  அனைவரும்  கொண்டாடும்  எமது  தாய்வழி விடயங்களில்  இந்த தாய் மொழி  மிக  முக்கியமானது. மொழி  என்பது என்னைப் பொறுத்தவரையில் எமக்குகொடுக்கப்படும் ஒரு உணர்வு ரீதியான தனித்துவம். மொழியை ஒரு சந்தோசமான உணர்வாகவே நான் பார்க்கிறேன். அதனால் தான் அந்த மொழியை எம்மால் அழகாக, உணர்ச்சி  பூர்வமாக உச்சரிக்க முடிகிறது. அதிலும், எமது தமிழ் மொழி என்பது மிகவும் அழகானது. உண்மையில் தாயை அதிகம் நேசிப்பவர்கள் தங்கள் மொழியையும் அவ்வாறே நேசிப்பார்கள் என்று அண்ணா ஒருமுறை சொல்லியிருந்தாா். (என்ட அண்ணா இல்லேங்க, அறிஞர் அண்ணா..). உண்மையில் அது அறிவுபுா்வமான வார்த்தைகள்  தான். ஏனெனில் தாயிற்கும் மொழிக்கும் அப்படியொரு சம்மந்தம் இருக்கிறது.

கடந்த வருடம் வேலை காரணமாக சில நாட்கள் வவுனியாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹாட்டலில் தங்கவேண்டியிருந்தது. ஒருநாள் காலையில் எழுந்து வழமைபோல காலை உணவிற்காய் அந்த ஹோட்டலின் உணவருந்தும் (restaurant) இடத்திற்கு வந்தேன். அங்கு வந்ததும் அழகான பூசணிக்காய் சைசில் அமா்ந்திருந்த இரண்டு பெண்களையும், அவர்களுக்கு முன்னால் இந்தியாவின் 'நண்டு மாா்க் பனியன்கள்' விளம்பரத்திற்கு  வருபவா்கள்  போல  இரண்டு பசங்களையும்  ஒரு  வயதான மனிதரையும்  பார்த்தேன். அவர்கள் ஒரு ஓரமாய் உள்ள மேசையில் உட்கார்ந்து போக்கோடும் (முள்ளுக்கரண்டி) நைப்போடும் (சாப்பாட்டு கத்தி)  சண்டை போட்டுக்கொண்டிருந்தாா்கள். நிச்சயமாய்  இவர்கள்  வெளிநாட்டு கனவான்கள் தான்.

நானும், பக்கத்து மேசையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். அவர்கள் மேசையில் இருந்துவந்து எனது காதில் விழுவது எல்லாம் ஒன்று கரண்டி, ப்ளேட்டோடு சண்டைபோடும் சத்தம், இரண்டாவது  நுனி  நாக்கில் அங்கும் இங்குமாய் தெறித்துக்கொண்டிருக்கும்  ஆங்கிலம். ”என்னமா பேசுராங்கையா இங்குலீசு?” என எண்ணியபடி அவா்களையே வாய்மூடாமல், கண்வெட்டாமல் பாா்த்துக்கொண்டிருக்கும் ரெஸ்ரூரன்ட் பையனை பாா்த்து பாா்த்து சிாித்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நானும் அவா்கள் உரையாடலிற்கு காதுகொடுக்கலாம் என ஆசைப்பட்டேன். அந்த ரெஸ்ரூரன்ட் பையனுக்கிருந்த இரசனை எனக்கும் கொஞ்சம் இருந்திருக்க வேண்டும். சேக்ஸ்பியரின் நாடக இலக்கியங்களில் அவ்வளவு பிாியப்பட்டு அவரது பல நாடக கவிதைகளை படித்திருந்தாலும் இவா்களது உரையாடல் வளக்கு எனக்கு சாியாக புாிவதாய் இருக்கவில்லை. உண்மையில் இவா்கள் தமிழா்கள் அல்ல என நினைத்து மறுபக்கம் திரும்பிய போது 'போடா சனியனே' என்று ஒரு பெண் குரல் அதே மேசையில் இருந்து வந்து என் கவனத்தை அந்த மேசைமேல் மீண்டும் திருப்பியது. திரும்பிப்பா்த்தேன், அது அவர்கள்  தான். ஆகவே, அவா்கள் நிச்சயமாக  நம்ம கூட்டம்தான் என்கிற முடிவுக்கு வந்துசோ்ந்தேன். அவர்கள் தமிழர்கள் என்பதை நான் சாியாக கண்டுகொள்வதற்கு உதவியாய் இருந்தது அந்த 'சனியனே' மட்டும்தான். தாங்ஸ் சனியனே!

அவா்கள் அதிகமாக ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருந்தாலும் இடையிடையே கொஞ்சம் தமிழும் எட்டிப்பாா்த்தது. எட்டிப்பாா்த்ததோடு அவ்வப்போது தவறி தவறி வீழ்ந்து ஆங்கில நாக்குகளில் தற்கொலை செய்துகொண்டிருந்தது. அரை மணி நேரம் நான் அங்கு இருந்ததில் எனது காதில் கேட்ட தமிழ் வார்த்தைகள் என்றால்  பின்வருவன மட்டும்தான். ஆனாலும் கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது.

'லூசாடா நீ?',

'கறுமம்..கறுமம்',

'ஐ மிஸ்ட் மை நியூ டூத் பிரஷ்.. நீயாடி ஆட்டைய போட்டது?',

'ஐ வோன்ட் டு கோ தேயார்,  பட்.. அவட மூஞ்சியையே பார்க்க சகிக்கல டாடி.',

'மனுசனாடா நீ, பாருங்க டாடி',

'அட கொக்கா மொக்கா, திஸ் இஸ் ஸ்ரீலங்கா மேன்..',

'ஓகே, மூடிக்கிட்டு இருக்கியா, ஐ நோ...',

“ஷிட்.. கைய எடுடா சனியனே!”

ஆங்காங்கே புறக்கிப்பாா்த்தால் இவ்வளவுதான் அவா்கள் பேசிய தமிழ்.

இதைத்தவிர வேறு எந்தவொரு தமிழ் வாா்த்தையும் என் செவிகளை அடைந்ததாய் இல்லை. ஸ்டைல்லாக தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசுகிறாா்கள். என்னவோ அவா்கள் உரையாடலை கேட்டுக்கொண்டிருக்கும் வரை ஜாலியாக இருந்ததே தவிர அவா்கள் மேல் கோவம் வரவில்லை. அவா்கள் பாவித்த அதிகமான தமிழ் வாா்த்தைகள் பேச்சு வளக்கிற்காய் நாம் இலக்கிய மரபிற்கு அப்பால் உதிாிகளாக பயன்படுத்தும் சொற்கள். எதற்காக அந்த சொற்களை மட்டும் பயன்படுத்துகிறாா்கள் எனப்பாா்த்தால், அவர்களிடத்தில் ஒரு விடயத்தை அவதானித்தேன். சில தமிழ் சொற்களை உச்சரிக்கும் போது வெளிப்படுத்தப்படும் உணர்வு (Expression) ஆங்கில சொற்களில் இல்லை என்பதால் தான் இடையில் குறித்த அந்த சொற்களை மட்டும் தமிழில் பயன்படுத்துகிறாா்கள். இந்த அக்காஇ தம்பிமாா் நம்ம யாழ்ப்பாணம் போகும் வழியில் உள்ள முருகண்டி கச்சான் கடைகார அம்மாவிடம் எப்படி பேசுவாா்கள் என்று கொஞ்சம் யேசித்துப்பாா்த்தேன். சிாிப்பு வந்தது. இப்படித்தான், “ஹாய் அம்மா, நாலு பக்கட் ஆப் கிரவுண்ட் நட்ஸ் கிடைக்குமா?”. அதோடு அந்த கடைக்கார அம்மா கடையை மூடிவிட்டு பிச்சை எடுக்க ஆரம்பித்துவிடும்.

அவா்கள் பேசும் பொழுது கேட்டுக்கொண்டிருக்க இனிமையாக இருந்தாலும் நான் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றபோது அவா்கள் மேல் கொஞ்சம் கோவம்தான் வந்தது. மொழி என்பதும் அவரவர் உரிமைதான். அனாலும், அழகான தாய் மொழி இருக்கும் பொழுது எதற்காக இந்த மொழி மீதான அநாகாிகங்கள் என்பதுதான் புரியவில்லை. வெளிநாட்டில் தமிழை பேசினால் பலர் சிரிக்கலாம் அல்லது உங்களின்  கௌரவம் குறைந்து விடும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தாயகத்தில் நீங்கள் தமிழில் பேசினால் தான் உங்களுடன் பேசுபவர் உங்களைப் பற்றி பெருமைப்படுவார் என்பதை மறந்து போகாதீர்கள்.


நான்  உணவை  முடித்துக்கொண்டு, அந்த  ஹோட்டல்  பையனிடம் கேட்டேன். இவர்கள் யார்? அவன் சொன்னான், ”சொந்த இடம் யாழ்ப்பாணம். கனடாவில இருக்கினமாம். அந்த  அண்ணன், அங்கத்தைய  சிடிசன், மற்ற எல்லாரும்  போன வருஷம்  தான்  அங்க போனவங்களாம்”.

அட பாவிகளா, வெளிநாடு போய் ஒரு வருஷத்துக்குள்ளேயே தமிழ் செத்துடிச்சா? இவங்கள என்னதான் பண்ணலாம்? தமிழை பேச முடியாத அல்லது தமிழ் கடினமாக இருக்கும் வெளிநாட்டு தமிழர்களை  கொஞ்சம் மன்னித்துவிடலாம். இவர்களை? எடுப்புக்காகவும், கௌரவத்திற்காகவும், ஸ்டைலுக்காகவும், சீன் போடுவதற்கும், பந்தா காட்டுவதற்கும் இங்கிலீஸ் பேசும் தமிழர்களை கண்டாலே எனக்கு உச்சி முதல் பாதம் வரை கொதிப்பெழும்பும். அழகான தமிழை வாய் நிறைய, நாவை லாவகமாய் அசைத்து, உச்சரிக்கும் அந்த தமிழ் வார்த்தைகளின் இனிமையை இவர்கள் எப்பொழுதுதான் அறிந்துகொள்ளப் போகிறார்கள்.

மாறாக எனக்குத்தொிந்து பல புலம்பெயா் தமிழா்கள் தங்கள் அன்றாட மொழிக்கு ஈடாக தமிழையும் பயன்படுத்துகிறாா்கள். கொஞ்சம் கூட தமிழில் பேச சந்தா்ப்பம் கிடைத்தால் அதை சந்தோஷமாக பயன்படுத்திக்கொள்கிறாா்கள். எனக்குத்தொிந்த பல நண்பா்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு தங்களை விசேடமாக சமூக வலைத்தளங்களில் தமிழனாய் காட்டிக்கொண்டு தமிழில் பேசி தங்களை பெருமைப்படுத்திக்கொள்ளுகிறாா்கள். பிற மொழிகளுடன் வாழலாம் அதற்காக நமது தனித்தன்மையான தாய்மொழியை புறம் தள்ளிவிட முடியுமா? தமிழா் எங்களின் உாிமைகளாகிய இனத்தையும், மொழியையும் இறுதிவரை கொண்டுசெல்வதில் உயிா்த்தியாகம் வரை விலைகொடுத்த ஆயிரம் ஆயிரம் தமிழா்களின் சுடுகாட்டில் நின்றுகொண்டு எங்களால் எப்படி ஒட்டுமொத்த தமிழ் உணா்வையும் கொச்சைப்படுத்த முடியும்?


அடுத்தவாரமும் வருவேன்......

Saturday, July 5, 2014

கடவுள் கெட்டவர்.


தூரமாய் போன நிலவு நீ.
இருந்தாலும்
தீண்டாமல் எப்படி விலகும் மேகம்.

கோவிலில் அர்ச்சனை ஏந்தியபடி நான்.
சாமியோ ஆழ்ந்த உறக்கத்தில்.
பூசாரி வரம் கொடுக்க தயாராகிறான்.

என் வேண்டுதல்கள் எல்லாம்
வரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
கிடைத்த வரம் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே.

திருமணமும் ஒரு வரம் தான்.
அது அவளுக்கு.
எனக்கோ அது ஒரு சாபம்.
வரம் அவளுக்கு
சாபம் எனக்கு.

பிரார்த்தனை ஆரம்பிக்கையிலேயே
பிசாசுகள் கூட்டம் தேவாரம் பாட ஆரம்பித்துவிடும்.
பின்னர்
கடவுளின் கண்கள்
எப்படி என் பக்கம் திரும்பும்.

எனது வேண்டுதல்
கோவில் வாசலை தாண்டியதில்லை.
அவள் பிரார்த்தனை
மூலஸ்தானத்தை விட்டதில்லை.
ஒரே கடவுள் -
அவள் மாங்கல்யம் தரிக்கிறாள்.
நானோ கூப்பிய கைகளோடு கடவுளை நிந்திக்கிறேன்.

கோபுரத்திலுள்ள புறாக்களும்
என் பின்னே வருகிறது..
கடவுள் நல்லவர் என தேவாரங்கள் பாடியபடி.


Popular Posts