Saturday, June 21, 2014

அளுத்கம கலவரமும் முகப்புத்தக போராட்டங்களும்.


அண்மைக்காலமாக இலங்கையிலிருந்து வரும் செய்திகளெல்லாம் அளுத்கம வில் ஆரம்பித்து இன்று பாணந்துறை வரை வந்து சேர்ந்திருக்கும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கெதிரான இன - மத அடிப்படைவாதிகளின் அராஜகம் பற்றியே பேசுகின்றன. இது பற்றி அவ்வப்போது முகப்புத்தகத்திலும் எனது கருத்துக்களை பதிந்திருந்தேன். இந்த அசாதாரண அடக்கு முறை பற்றியும் அதன் அரசியல் பின் புலங்கள் பற்றியும் பல செய்தித் தளங்கள், பத்திரிகைகள் பல கட்டுரைகளை எழுதியிருந்தன. இவற்றை தவிர்த்து இந்த கலவரங்கள் தொடர்பான பல எதிர்வினைகளில் மிகவும் மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் ஒரு விடயம் பற்றி கொஞ்சம் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதுதான் விசேடமாக முகப்புத்தகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேவையற்ற, மோசமான பின் விளைவுகளை தோற்றுவிக்கவல்ல முஸ்லிம் - தமிழ் விவாதங்கள்.

ஆரம்பத்திலிருந்தே இந்த கலவரங்களை சரி என்ற தோரணையிலும், இவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) இது தேவைதான் என்கின்ற பாணியில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட சில தமிழ் நண்பர்கள் இந்த பிரச்சினைக்கான தளத்தை உருவாக்கினார்கள். இதே போல இந்த விவாதங்களிற்கு வித்திட்டவர்கள் கடும் போக்கு புலி எதிர்ப்பு முஸ்லிம்கள். அவர்களது கருத்து அவர்கள் எங்களுக்கு செய்ததை இப்பொழுது இவர்கள் எங்களுக்கு செய்கிறார்கள் என்பதாய் இருந்தது. இவ் இரண்டு வகையறாக்களின் கருத்துக்களையும் காணும் பொழுது மற்றைய இனத்தைச் சேர்ந்தவர்கள் தாறுமாறாக உள்ளிறங்கி தங்கள் எதிர்க்கருத்தை முன்வைக்க ஆரம்பித்தார்கள். இதற்குள் ஏற்கவே குற்றுயிராய் கிடக்கும் முள்ளிவாய்க்காலும் வந்து போனது. முள்ளிவாய்க்காலில் நாங்கள் செத்துக்கொண்டிருந்த போது நீங்கள் சிரித்தீர்களே என ஒரு கூட்டம், பொது பல சேனாவை பிரான்சிலும் நோர்வேயிலும் சந்தித்த தமிழர்களை ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதிகள் என்கின்ற தோரணையில் இங்கு நடக்கும் கலவரங்களுக்கு தமிழர்களின் ஆதரவு இருப்பதாக எண்ணிக்கொண்டு வீண் வதந்திகளை பரப்பும் இன்னுமொரு கூட்டம்.

எனக்கு இப்பொழுது எழும் கேள்வியெல்லாம் இதுதான். அங்கு அப்பாவி முஸ்லிம்கள் செத்துக்கொண்டும் அனைத்தையும் இழந்துகொண்டும் தவிக்கிறார்கள். நீங்கள் இங்கு இணையத்திற்கு முன்னால் இருந்து கொண்டு எதற்காக நன்றாக இருக்கும் தமிழ் - முஸ்லிம் நட்பை அழித்துக்கொண்டிருக்கிறீர்கள். இப்படி வாதிடுவதால் அளுத்கமையிலும் ஏனைய பிரதேசங்களில் செத்துக்கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்குவதாய் எண்ணமா? இல்லை, நீங்கள் அவர்களுக்காக இங்கு கண்ணீர் வடிக்கிறீர்கள் என்று உலகம் நம்ப வேண்டுமா?

நோர்வேயில் யார் யாரை சந்தித்தார்கள் என்பதை கண்டுகொண்டு நீங்கள் எதை சாதிக்க போகிறீர்கள்? அதை கண்டுபிடித்தால் இலங்கையில் வன்முறைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிடுமா? மாறாக அதிகமான தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலான நட்புத்தானே கேள்விக்குறியாகிறது. முகப்புத்தகத்தில் இருந்துகொண்டு வீர வசனம் பேசுவதாலோ, அல்லது தமிழர்கள் முஸ்லிம்களுக்கு சார்பாக உணர்வுமிக்க கருத்துக்ளை பகிர்வதாலோ அங்கு வன்முறைகள் நின்றுவிடப் போவதில்லை. மாறாக இது அங்கிருக்கும் மக்களுக்கான ஒரு மோறல் சப்போட் மட்டுமே.

பல தமிழ் நணண்பர்களுக்கும் முஸ்லிம் நண்பர்களுக்கும் இடையில் நடக்கும் பல முகப்புத்தக விவாதங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நன்றாக சிரித்து முஸ்லிம்களுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் சில தமிழர்களும், தமிழர்கள் எங்களுக்கு என்றுமே உண்மையான நண்பர்கள் அல்ல என பழைய கசப்பான நினைவுகளை (புலிகளால் இழைக்கப்பட்டவை) இன்னும் மனதில் வைத்துக்கொண்டு வக்கிரமான கருத்துக்களை கக்கும் முஸ்லிம் சகோதரர்களும்தான் முகப்புத்தகத்தில் அதிக நேரத்தை இப்பொழுதெல்லாம் அடிப்டைவாத விவாதங்களுக்கு செலவு செய்கின்றனர். இப்பொழுது எமக்கு முக்கியமாக எது தேவை? கலவரம் பற்றிய விதண்டாவாத (தமிழர் மீது குற்றம் சாட்டப்படுகின்ற) ஆராச்சிகளா? எதற்காக சில முஸ்லிம்கள் முள்ளிவாய்க்கால் படுகொலையை கொண்டாடினீர்கள் என்கின்ற பழிதீர்க்கும் முனைப்புக்களா? இல்லை. இப்பொழுது எமக்கு தேவை முஸ்லிம் - தமிழ் நட்புறவும் ஒற்றுமையும் மட்டுமே. இரண்டு கைகளும் தனித்தனியே நின்றால் பொறுத்த நேரத்தில் ஒலி எழுப்ப முடியாமல் போகும். இதை முகப்புத்தகத்தில் தங்கள் வக்கிரக கருத்துக்களை வீசிக்கொண்டிருப்பவர்களும், தங்கள் தனிப்பட்ட அடிப்டைவாத கொள்கையை சந்தர்ப்பம் பார்த்து அள்ளித் தெளித்துக்கொண்டிருப்பவர்களும், புலி எதிர்ப்பு மற்றும் ஒரு சில தமிழ் குழு எதிர்ப்பை, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் மீது காட்டும் முஸ்லிம் நண்பர்களும் அறியாமல் இருப்பார்கள் என என்னால் சொல்ல முடியாது.

நாம் செய்ய வேண்டியதை விட்டுவிட்டு செய்யக் கூடாததை செய்துகொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை தேவைப்படும் காலத்தில் எமக்கிடையிலான முரண்பாடுகளை உருவாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். முகப்புத்தகத்தில் தமிழர்களை தாக்கி அவதூறுகளையும் தங்கள் அடிப்படைவாதத்தையும் தங்கள் தனிப்பட்ட வங்குரோத்து கோவங்களையும் “அளுத்கம”வை மேற்கோள்காட்டி அள்ளி வீசிக்கொண்டிருப்பவர்களால் அங்கு பாதிக்கப்படும் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு அதையுமே செய்ய முடியாது, கலவரத்திலிருந்து அந்த மக்களை காத்துக்கொள்ளவும் முடியாது. வெறும் கையாலாகாத ஆவேசம் மட்டுமே. அதேபோல இச்சந்தர்ப்பத்தில் தங்கள் குரோத பழிவாங்கல்களை தங்கள் சிரிப்பின் மூலமும் தங்கள் கருத்துக்களின் மூலமும் மற்றும் இதை சாட்டாக வைத்து முஸ்லிம்களை பழிவாங்கும் அல்லது அவர்களை போட்டுத்தாக்கும் தமிழ் அடிப்படை வாதிகளினால் இந்த கலவரத்தை கூட்டவோ அதிகரிக்கவோ முடியாது. ஆக முகப்புத்தகத்தில் சீறிப்பாயும் சில முஸலிம் - தமிழ் உணர்வாளர்களால் தேவையற்ற பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு திசை மாற்றப்பட்டு வெறும் பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் மட்டுமே வழி சமைக்க முடிகிறது.

மீண்டும், “அளுத்கம கலவரம் பற்றி முகப்புத்தகத்தில் கடுமையாக விவாதித்ததால் நானும் அந்த முஸ்லிம்/தமிழ் நண்பனும் எங்கள் உறவை முறித்துக்கொள்ள வேண்டியதாயிற்று!” 

இப்படி நாளை பலர் கவலைப்படப் போகிறார்கள் என்பதை இப்பொழுது பலரது ஸ்டேட்டஸ்களும் கமண்ட்களும் சொல்லுகின்றன. இதில் வருத்தம் என்னவென்றால், அங்கு ஒரு பெரும்பான்மை அடிப்படைவாதிகள் முஸ்லிம் சகோதரர்களை குறிவைக்கிறார்கள். இதனால் இங்கு முகப்புத்தகத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம் நண்பர்களுக்கும் இடையில் சண்டையும் விரோதமும் உருவாகிக்கொண்டிருக்கிறது. “அவர்களுக்கு” தேவையான தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டை நாமேதான் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

எம்மால் அந்த பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக எப்படி குரல் கொடுக்க முடியும்? சிறுபான்மை குழுக்களான முஸ்லிம் - தமிழ் மக்களின் ஒற்றுமை எவ்வாறு இந்த பிரச்சினையை வெற்றிகொள்ள உதவியாக இருக்கும்? அனைத்தையும் மறந்து இவ் இக்கட்டான கால கட்டத்தில் ஒன்றாக அணி திரள்தல் எவ்வளவு முக்கியமானது? போன்ற விடயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். எமது அதிக பட்சமான குறிக்கோள், இந்த பெரும்பான்மை அடக்கு முறையிலிருந்து எப்படி தப்பித்துக்கொள்ள முடியும் என்பதே தவிர முஸ்லிம் - தமிழ் முரண்பாடுகளை உருவாக்குவதாய் அமைந்துவிடல் கூடாது. இதுவே என்னைப்போன்ற சாமான்ய, மனிதத்துவம் நிறைந்த சிறுபான்மை இனத்தானின் எதிர்பார்ப்பு. முகப்புத்தக நண்பர்களே, எங்கள் முகப்புத்தக உணர்வலைகள் இன்னுமொரு தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டையும், புரிந்துணர்வில்லா நிலையையும் உருவாக்கிவிடக்கூடாது. காரணம், அவ்வாறு நடக்கும் பட்சத்தில் எதிரிக்கு நாங்களே வாள்களை தீட்டிக்கொடுப்பதாய் அமைந்துவிடும். 

நிச்சயமாக இந்தப் பதிவிற்கு விதண்டாவாத விளக்கங்கள் கேட்டு நான் மேலே சொன்ன இரு தரப்பினரும் வருவார்கள். அவர்களுக்கு விடையளித்து அல்லது அவர்களுடன் வாதிட்டு நானும் இந்த வகையறாக்குள் நுழைந்துகொள்ள விருப்பம் இல்லை. தேவையற்ற விடயங்களை விவாதித்து யாருடனுமான உறவை முறித்துக்கொள்ள நான் தயாராக இல்லை. நான் இக்கட்டுரை மூலம் சொல்ல வருவது பலருக்கு புரியலாம் சிலருக்கு புரியாமல் போகலாம். என்னால் அந்த “சிலருக்கு” புரியவைக்க முடியாமல் போனது பற்றி கவலையில்லை. காரணம் அவர்களுக்கு இவை என்றுமே புரியப்போவதில்லை.

22.06.2014


No comments:

Popular Posts