Monday, June 23, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 13


மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக பணிபுரியும் இலங்கைப் பெண்கள் தொடர்பான நீண்டதொரு கறுப்பு வரலாறு இருக்கிறது. இதில் வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த பல பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மத்திய கிழக்கு நாடுகளை நாடிச் சென்றிருக்கிறார்கள். இதில் கணிசமாக தமிழ், முஸ்லிம் இளம் மற்றும் குடும்பப் பெண்கள் அடங்குவர். இவர்களைப்பற்றி பேசும் தறுவாயில் ரிஸானா என்கின்ற பெண்ணை மறந்துவிட முடியாது. இந்த செய்தி எம் அனைவரையும் மிகப்பெரியதொரு ஆச்சரியம் கலந்த துயரத்தில் வீழ்த்தியது. இதிலிருந்து வெளியே வருவதற்கு நமக்கு எத்தனை மாதங்கள் எடுத்தது என்பதை நாம் அறிவோம். வயிற்றுப் பிளைப்பிற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற எமது பெண்கள் எத்தனை ஆயிரம் கோர ஆபத்துக்கள் மற்றும் கடினமான பாதைகளை கடந்து வர வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு தினாரிற்கும் அங்கே அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அவர்கள் உயிரை பறிக்கும் வரை வெளியே வருவதில்லை. எமக்கு தெரிந்த அந்த ஒரு ரிஸானாவைப் போல எத்தனை ரிஸானாக்கள் மத்திய கிழக்கில் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை யார் அறிவார். மத்திய கிழக்கு எம் பெண்களுக்கு தினாரைக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் உயிரை பறித்துக்கொண்டிருக்கிறது. சில வேளைகளில் ஈழப்போராட்டம் கொடுத்ததை விட இங்கு இவர்களுக்கு அதிகமாகவே வலிகள் திணிக்கப்படுகிறது.

இற்றைக்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் ஒருமுறை வவுனியா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தேன். வவுனியா நகரிலிருந்து ஒரு மணி நேர கார்ப்பயணம். மிகவும் அழகான ஆனால் வறுமையே உருவான கிராமம் அது. இக்கிராமத்து மக்கள் சுமார் புதினைந்து வருடங்களாக இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து அண்மையில்தான் மீண்டும் தங்கள் கிராமத்தில் மீளக் குடியேறியிருக்கிறார்கள். யுத்தம் அவர்கள் வீடு, வாழ்வாதாரம், உள்ளக கட்டுமானம் என அனைத்தையும் தின்று தீர்தித்திருந்தது. அதிகமான வீடுகள் முழுவதுமாக காணாமல் போயிருந்தது. வீதிகள் இருந்த இடங்களிலெல்லாம் மிகப்பொரிய மரங்கள் வளர்ந்து காடுகளாக காட்சியளித்தன. வாழ்வாதாரம் மிகப்பெரிய சவாலாகவும் பிரச்சனையாகவும் மாறிப்போய் இருந்தது. தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வந்திருக்கிறோம் என்பதை தவிர வேறு எந்த சந்தோஷமும் அவர்கள் முகத்தில் தென்படவில்லை. முகாமில் அழகான கட்டடத்தினுள் கல்விகற்ற சிறுவர்கள் போர்முடிந்து சொந்த ஊரிற்கு வந்து மர நிழலில் பாடப்புத்தகங்களுடன் இருக்கிறார்கள். 

ஊரின் மிகவும் ஒதுக்குப்புறத்திலிருந்த வீடு ஒன்றை தரிசிப்பதற்காக சென்றிருந்தேன். ஒரு வயதாகிய அம்மா, ஒரு சிறுவன், கம்பி வீட்டின் பின்புறத்தில் 30 வயது மதிக்கத்தக்க இன்னுமொரு பெண். மிகப்பெரிய முற்றம். முற்றத்தின் வலப்புறமாய் அளவு கணக்கின்றி பயங்கரமாய் வளர்ந்து நிற்கும் புளிய மரம். அவ்வளவு பெரிய புளியமரத்தை பார்த்ததும் பேய் பிசாசு ஞாபகம்தான் வந்தது. இருந்தும் சுற்றி ஆட்கள் இருப்பதால் துணிவு ஜாஸ்தியாக இருந்தது. வழமைபோலவே நீட்டி விரிக்கப்பட்ட தறப்பால் என அழைக்கப்படும் வெள்ளை நிற விரிப்பில் அமர்ந்துகொண்டோம். தங்கள் குடும்பத்தில் மூன்று பேர் வசிப்பதாக அறிமுகம் செய்துகொண்டார்கள். ஒரு சிறுவன், அவனுடைய தாய், அந்த தாயினுடைய தாய். அந்த சிறுவனுடைய தாயை கமலா என குறிப்பிடுகிறேன். அன்று நாங்கள் பல விடயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அவற்றுள் என்னை அதிகமாய் பாதித்த அல்லது அதிகமாய் தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்ட சப்ஜக்ட் கமலாவின் வாழ்க்கை பற்றியது. கமலா கட்டாரில் பணிபுரியும் ஒரு பணிப்பெண். இப்பொழுது விடுமுறையில் இலங்கைக்கு வந்திருக்கிறாள். இன்னும் ஒரு கிழமைக்குள் மீண்டும் கட்டார் போய்விடுவேன் எனச் சொன்னாள்.

'நான் கட்டார் போய் இரண்டு வருஷமாகுது.. அங்க ஒரு ஹாட்டேல் முதலாளி வீட்டில பணிப்பெண்ணா வேல பாக்குறன்..' என்றதும் கோடான கோடி கேள்விகள் என் நுனி நாக்கில் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. 2001 ஆம் ஆண்டு மிதிவெடியில் சிக்குண்டு மரணமடைந்தவர் கமலாவின் கணவர். தனிநபர் ஒருவரின் உழைப்பில் வயிற்றை நிறைத்துக்கொண்டிருந்த கமலாவின் குடும்பத்திற்கு தன் கணவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒரு இடைவெளியை விட்டுச்சென்றிருக்கிறது. அதுவும் பொருளாதார வளம் அடியோடு பிடுங்கப்பட்டு அன்றாட உணவிற்குகூட வசதியில்லாத ஒரு சூழ்நிலைக்குள் இந்த குடும்பத்தை தள்ளியிருக்கிறது. வயதாகிய தாய், மற்றும் தனது மகன் ஆகியோரின் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள தேவையான பொருளாதாரம் திடீரென இல்லாமல் போனது எப்படியாயினும் கமலா உழைக்க வேண்டும் என்கின்ற சூழ்நிலைக்குள் அவளை தள்ளிவிட்டிருந்தது. முகாமில் இருக்கின்ற காலங்களில் அருகிலிருக்கும் கிராமங்களுக்கு சிறு சிறு வேலைகளுக்கு சென்று வந்தாலும் அவை அவளது குடும்பத்தை கொண்டு நடாத்த போதுமானதாக இருக்கவில்லை. ஒரு நாள் தற்செயலாக சந்தித்த ஒரு மனிதரிடமிருந்து அவளிடம் தொற்றிக்கொண்டது இந்த வெளிநாட்டு எண்ணம். மிகவும் குறைந்த செலவில் கமலாவை பணிப்பெண்ணாக கட்டாருக்கு அனுப்ப முடியும் என்கின்ற ஜோசனை அந்த நபரால் தெரிவிக்கப்பட்ட போது அது சரியான முடிவாகவே கமலாவிற்குத் தெரிந்தது. சத்தியம் செய்திருந்தது போல ஒரு வாரத்திற்குள் அந்த மனிதர் கமலாவை கட்டாரிற்கு அனுப்பி வைத்தார்.

“அங்க போனதும் உடனடியாகவே அந்த வேலை கிடைச்சது. இரண்டு மாதங்கள் மிகவும் சிரமமாக இருந்திச்சு. அங்க போறதுக்காக பட்ட கடன அடைக்கணும், அம்மாவையும் என்ட மகனையும் முதல் தடவையா பிரிஞ்சிருக்கிறது எண்டு பல கஷ்டங்கள்... அப்புறம் எல்லாம் பழகிடிச்சு..” மண்ணை விரல்களால் கிண்டியபடி கூறிமுடித்தாள் கமலா. வேலை பற்றியும் அங்கிருக்கும் பணிப்பெண்களின் நிலமை குறித்தும் கேட்டபோது அவள் வாயிலிருந்து வந்தவை 'நல்லம்..!' என்பது மட்டுமே. அந்த பதிலோடு கூடவே கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் தயக்கம், கொஞ்சம் பயம், கொஞ்சம் விரக்தி, கொஞ்சம் சோகம் என்பன ஒட்டியே இருந்ததை நான் நன்றாக அவதானித்தேன். அவளை வெளிப்படையாக பேச வைக்கவேண்டும் என சுமார் இருபது நிமிடங்கள் நான் முயற்சி செய்ததில் அவளை இறுதியாக தோற்கடித்தேன். மகனை போய் விளையாடும் படியாகவும் தாயை அருகிலிருக்கும் கடைக்கு போய் வரும்படியும் சாதூர்யமாக அனுப்பிவிட்டு கொஞ்சம் வெளிப்படையாக பேச ஆரம்பித்தாள் கமலா.

'உண்மைய சொல்லப்போனா நான் வேல செய்யிற இடத்தில நான் ஒரு முழு அடிமைதான். அப்பிடிதான் என்னைய நடாத்துவாங்க. வெளி உலகமே தெரியாது. வேளில போக விடமாட்டாங்க. அங்க போனதும் என்ட பாஸ்போட்ட பறிச்சு வச்சிடுவாங்க. காலைல மூணு மணிக்கு எழும்பணும். இரவு ஒண்டு ரெண்டு மணி வரை வேல இருக்கும். ஏதும் தப்பா செஞ்சிட்டா அந்த வீட்டுக்கார அம்மா கையில இருக்கிறதால அடிப்பாங்க..' என்ற கமலா, தனது கழுதிலிருந்த ஒரு தழும்பைக் ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டினாள். அந்த தழும்பைப் பார்த்தபொழுது எனக்கு கையெல்லாம் ரைப்படிக்கத் தொடங்கியது. தொடர்ந்தாள். 'வீட்டுக்கார ஐயா கொஞ்சம் நல்லவரு.. அந்த அம்மாதான் பயங்கரம்.. அவ என்ட பேர சொல்லி கூப்பிட்டாலே எனக்கு நடுங்கும்னா பாத்துக்கங்க. ஒரு நாள் தெரியாம ஒரு கோப்பைய போட்டு உடச்சுட்டன்.. ஒரு நாள் பூரா எனக்கு சாப்பாடு குடுக்கல அந்தம்மா..' என சாதாரணமாகக் கூறிவிட்டு உதடுகளை கடித்து கடைவாயில் சிரித்தாள் கமலா. எப்படி இவளால் சிரிக்க முடிகிறது? ஆச்சரியத்தில் உறைந்து போனேன். “என்ன சொல்லுறீங்க அக்கா..?” என என் ஆச்சரியத்தை மொழிபெயர்த்தேன்.

“ம்ம்ம்ம்.. அப்பிடி போகுது நம்ம வாழ்க்க.. இதெல்லாம் ஆரம்பத்திலதான் கஸ்டமா இருந்திச்சு.. இப்ப பழகிடிச்சு.. சம்பாதிக்கணும்ல!” மீண்டும் சிரிக்கிறாள் இந்த கமலா. என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள் தீர்ந்து போய்க்கொண்டிருந்தது. மீண்டும் அவளை பேச வைத்தேன். “இதெல்லாம் என்னங்க கொடும.. அந்த வீட்டில என்னோட சேர்த்து இன்னொரு வேலையாளும் இருக்கான். அவன் கட்டார் காரன்தான். அவன்தான் முதலாளிட கார கழுவுறது, மார்க்கட் போறது, பிள்ளைகள ஸ்க்கூலுக்கு கூட்டிக்கிட்டு போறது மாதிரியான வேலைகள பாக்கிறவன். நான் போன ஆரம்பத்திலயே அவன்ட போக்கு வாக்கு எனக்கு பிடிக்கல. என்ன பாக்குற பார்வ எல்லாம் ஒரு மாதிரி அப்பிடி இப்பிடி இருக்கும்.. வீட்டில யாரும் இல்லேனா நான் செத்தன்.. அங்க இங்க கைய வைப்பான்.. அந்த மாதிரியான சேட்ட எல்லாம் விடுவான்.. என்னால ஒரு கட்டத்தில இத சகிச்சுக்க முடியாமப்போக முதலாளிட்ட சொல்லுவன் எண்டு பயம் காட்டினன். அதுக்கு என்னைய பத்தி இல்லாதது பொல்லாதது எல்லாம் முதலாளிட்ட போட்டுக் குடுக்க போவதாக மிரட்டினான். அவன் அஞ்சு வருஷமா அங்க வேல பாக்குறவன். அவன் சொன்னா நிச்சயம் முதலாளி நம்புவாருனு எனக்கு தெரியும்.. அதால பயந்துபோய் அந்த ஐடியாவையும் கைவிட்டுட்டன்...” தலையை குனிந்துகொண்டாள் கமலா. நானோ ஆவலாய் 'அப்புறம்...?' என்றேன்.

அதற்கு ஒரு நிமிடம் மௌனம் பதில். நிமிர்ந்து பார்த்தாள். நாங்கள் அனைவரும் அவளையே பார்த்தபடி பதிலுக்காக காத்திருந்தோம். என்னையும் என்கூட இருந்தவர்களையும் தனித்தனியாக பார்த்துவிட்டு தன் பதிலைச் சொன்னாள். “சமாளித்துக்கொண்டேன்..!!!”

“புரியல..!” என்றேன். ஒரு குறும் சரிப்பை உதிர்த்துவிட்டு “ஒண்ணும் செய்ய முடியாது.. என்ன பண்ணுறது.. அவன் எதிர்பார்த்ததற்கெல்லாம் சம்மதித்தேன்.. எப்படியாவது அங்கு இருக்கணும் இல்லையா....!”

அவளது பதில் என்னை அப்படியே வாரிப்போட்டது. மறுபுறம் கமலாவின் அம்மா கடையிலிருந்து வந்து சேர்ந்தார். கொண்டுவந்த கொக்க கோலாவை எங்களுக்கு பரிமாறிக்கொண்டு “கமலா கட்டாருக்கு போன பிறகுதான் எங்க வாழ்க்க திரும்பவும் உயிர்பெற்றது மகன். அவள் மட்டும் அங்க போய் இருக்கலனா இண்டைக்கு நாங்க உசுரோட இல்ல.. நாங்க இண்டைக்கு சந்தோஷமா இருக்கிறம் எண்டா அதுக்கு இவ தான் காரணம்...” கமலாவின் அம்மா சொல்லி முடிக்க நான் வீட்டின் வாசலில் நின்ற கமலாவைப்பார்த்தேன்.

“இவங்க ரெண்டுபேருக்காகவும் நான் எதையும் தாங்க தயார் அண்ணா!” என்று கூறியபடி அருகில் நின்ற தன் அம்மாவையும் மகனையும் எட்டி வந்து வாரி அணைத்துக்கொண்டாள் கமலா.


அடுத்த வாரமும் வருவேன்.

No comments:

Popular Posts