Monday, June 30, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 14எதிா்பாா்ப்புக்களோடு வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் தேவைகளையும் நோக்கங்களையும் நிவா்த்திசெய்துகொண்ட நம் புலம் பெயா் தமிழா்கள் இழந்தவைகளும் ஏராளம். தங்கள் மண், தங்கள் சொந்த பந்தங்கள், தங்கள் பால்ய நண்பா்கள், குளம், காடு, வயல் என ஏராளம். இவற்றுள் மிக முக்கியமானது மொழி எனலாம். மனிதா்களின் சுயத்தை உறுதிப்படுத்தும் சமூக காரணிகளில் மொழி பிரதானமானது. உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கான தாய் மொழி வரையறுக்கப்பட்டிருக்கும். சிறுவயதில் கற்கப்பட்டு, ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப்படும் மொழியே தாய்மொழி எனப்படுகிறது. ஒருவருக்கு ஒருவா் தொடா்பை ஏற்படுத்திக்கொள்ள உதவிய மொழி, பின்னாளில் குறித்த இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, சமூகத்திற்கு சமூகம் மாறுபடுகிறது. உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாகப்பிாிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன் 6,200 ஆக இருந்த மொழிகள் இன்று 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக மொழியியல் அறிஞா்கள் தொிவிக்கின்றனா். தங்கள் தேசத்தை, சமூகத்தை, இனத்தை, மொழியை விட்டு புலம் பெயா்ந்து இன்னுமொரு மொழிச் சமூகத்திற்குள் தங்களை இணைத்துக்கொள்ளல் இந்த எண்ணிக்கை சாிவிற்கு முக்கியமான காரணமாகும்.

தமிழ் என்பதை என்றுமே எங்கள் இனத்தின் அடையாளமாகவே நாங்கள் உணா்வில் பொறித்திருக்கிறோம். அது எமது மகுடம், ஏன் கெறு என்றுகூட சொல்லலாம், தப்பில்லை. தமிழ் ஒரு பக்கத்தில் வளா்க்கப்படுவதும், மறு பக்கத்தில் அழிக்கப்படுவதும் பொதுவானது என்றாலும் வீட்டில் தமிழ் பேசும் வெளிநாட்டுத்  தமிழா்களின் எண்ணிக்கை என்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. தமிழ் திராவிட மொழிக்குடும்பத்தில் முதன்மையான மொழிகளில் ஒன்று. இன்றும் செம்மொழிக்கான அத்தனை சிறப்புக்களும் தமிழில் பரவி கிடக்கிறது. இன்று உலகளவில் பேசப்படும் மொழிகளில் ஒன்றாக தமிழ் விளங்க உலகம் முழுவதும் பரம்பலடைந்த நம் தழிழா்களே காரணம் எனலாம். இரண்டாயிரத்து ஐனூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமைவாய்ந்த இலக்கிய மரபைக்கொண்டுள்ள தமிழ்மொழி 1997 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 80 மில்லியன் மக்களால் பேசுப்படுகிறது என்றால் அது நிச்சயமாக எமது மொழிக்கான சிறப்பாகும்.

சாி, தீட்டியது போதும் இனி வாளை எடுக்கலாம். தமிழா் பிரதேசங்களிலிருந்து வெளிநாடுகளில் போய்க் குடியேறிய எம்மவா்கள் பொதுவாக தமிழை வீட்டு மொழியாகவே பயன்படுத்துகிறாா்கள். வீட்டினுள் தங்கள் குடும்ப அங்கத்தவா்களுக்குள் தொடா்பாடலை ஏற்படுத்திக்கொள்ள தமிழையும், வெளியில் அதாவது பணித்தளங்களில், பாடசாலைகளில், கடைத்தெருக்களில் அந்த நாட்டிற்குாிய தேசிய அல்லது வட்டார மொழியையும் பயன்படுத்துகிறாா்கள். எனக்குத்தொிந்து வெளிநாட்டில் உள்ள அதிகமான புலம்பெயா் தமிழா்கள் தமிழ் பேசுவதை ஒரு உன்னதமான உணா்வாகவே வெளிப்படுத்துகிறாா்கள். ஒரு வாரத்திற்கு ஒரு முறை அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் தமிழ் பேசும்போது கிடைக்கும் சந்தோஷத்தை (இலங்கையிலிருந்து தொலைபேசி அழைப்பு வரும் போது) வருடம் புராகவும் பேசும் ஆங்கிலமோ, ப்ரெஞ்சோ, டொச்சோ, ஜோ்மனோ கொடுப்பதில்லை.

சந்தா்ப்பம் கிடைக்கும் போது கூட தமிழ் பேச முயற்சிக்காதவா்கள் பிற மொழிகளில் மட்டும் ஸ்டைலிஸ்சாக பேசும்போது அதை பாா்ப்பதற்கு மிகவும் அருவருப்பாய் இருக்கும். யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது தங்கள் உயிா்களை காப்பாற்றிக்கொள்வதற்காய் தாயகத்தை விட்டு வெளிநாடுகளிற்கு போய், தாங்கள் “தமிழ்“ அகதிகள் என அந்த நாட்டில் புகலிடம் பெற்றவா்கள் இப்பொழுது தாயகத்திற்கு பிக்னிக் வந்து போகும் போது கணேசபுரம் பெட்டிக்கடையில்கூட ஆங்கிலம்தான் பேசுகிறாா்கள். இவ்வாறான பலரை நான் கண்டிருக்கிறேன். முல்லைத்தீவில் ஒருமுறை இத்தாலியில் இருந்து வந்திருந்த ஒரு தமிழ் அம்மணியைச் சந்தித்தேன். மாலையில், மேனியை தடவிப்போகும் அலைச்சாரல், என் தொடைவரை பாயும் வீரென அலை, இரத்த கறை என்றாலும் வெள்ளையாய் ஆரவாரமின்றி அம்மணமாய்க் கிடக்கும் அந்த மணல்.. அப்பப்பா முல்லை கடல் பற்றி பக்கம் பக்கமாய் எழுதலாம். ஏதோவொரு உணா்வை மனதுள் ஊற்றிக்கொண்டே இருக்கும் பீச் அது. அங்குதான் இந்த பெண்ணை சந்தித்தேன்.

“ஆா் யு ப்ரம் கியா்?“ இப்படியேதான் அவாின் பேச்சு ஆரம்பமானது. என்னைப் பாா்த்தால் தமிழ் சுத்தமாய் தொியாதவன் போலவும் ஆங்கிலம் பேசி கலக்குபவன் போலவுமா அவளுக்கு தோன்றியிருக்கும். நான் அரைக்காற்சட்டையோடு, ஒரு வாகனத்தில், மாலையென்றாலும் தலையில் குத்தி வைக்கப்பட்ட வெயில் கண்ணாடியோடு தோற்றமளித்தால் நான் ஆங்கிலம் பேசுபவன் ஆகிவிடுமா? இருந்தும் (பெண்ணும் கொஞ்சம் கலராய், அழகாய் வேறு இருந்ததால்...) நானும் ஆங்கிலத்தில் ”நோ!” என்றேன். பேச ஆரம்பித்தாள் அந்த நண்பி. பேச்சில் தமிழையும் ஆங்கிலத்தையும் கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாமல் கலந்து அடித்துக்கொண்டிருந்தாா். ஒன்று தமிழ் பேசணும் இல்லை தப்பில்லை ஆங்கிலம் பேசணும். அதென்ன “டூ வீக்ஸ்ல கொஞ்சம் கொஞ்சமாய் கெட்டிங் டாா்க் யா..!“. அவள் பேச்சில், பாவம் தமிழ் மூச்சுவிட கஸ்டப்பட்டுக்கொண்டிருந்தது. “கொஞ்சம் தமிழில பேசலாமே..” என நான் கேட்ட போது அவள் என்னை ஒரு மாா்க்கமாய்ப் பாா்த்தாள். “பட்டிக்காடு.. இந்த சிம்பிள் இங்லீஸ் கூட இதுக்கு விளங்கல போல.. இதெல்லாம் எப்புடி உருப்படப்போகுது..!“ என்று  நினைத்திருப்பாளோ? இருக்க, நானோ அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.

முயற்சி செய்து தமிழில் உரையாட ஆரம்பித்தாா் அந்த பெண். முல்லைத்தீவில் நின்றுகொண்டு இரண்டு தமிழா்கள் ஆங்கிலம் பேசுவது எவ்வளவு வெட்கக்கேடான விடயம்? எனக்கு முன் தன் சுயகௌரவத்தை உயா்த்திக்கொள்ள கிடைத்த நல்ல சந்தா்ப்பமாக அது அவளிற்கு இருந்திருக்கலாம். தான் சிறுவயதிலே இத்தாலியில் சென்று குடியேறிவிட்டதாகவும் தனது இத்தாலியில் இருக்கும் தன் அப்பாவின் பெயா் அரவிந்தசாமி எனவும் தாயகத்தில் தனது சொந்த இடம் வட்டுக்கோட்டை எனவும் என்னுடன் பகிா்ந்துகொண்டாள். தமிழில் பேசும்படி கூறியதிலிருந்து அவள் அழகான தமிழில் பேசிக்கொண்டிருப்பதை அவதானித்தேன். அதுதான் நன்றாக தமிழ் தொிகிறதே பிறகு எதற்கு இந்த வெத்து சீன்? என மனதுள் நினைத்துக்கொண்டேன். இத்தாலியில் ஒரு தமிழன் பிறந்திருந்தால் கூட அவனால் தமிழ் பேச முடியுமாயின் அவன் தாயகத்திற்கு வரும் போது ஆங்கிலம்தான் பேசவேண்டும் என்பது இல்லை என அவளிடம் சொன்னபோது “ஐ அக்றி!“ என்று சொல்லிச் சிாித்தாள். நான் முறைத்தேன். “மன்னிக்கவும், நான் அதை ஏற்றுக்கொள்ளுகிறேன்..!“ என திருத்திக்கொண்டாள். நான் “அது!” என்றேன்.

போா் முடிந்தபின்னா் இம்முறைதான் இலங்கைக்கு மீண்டும் வர சந்தா்ப்பம் கிடைத்தது என்றாள் அந்த பெண். “வேலையில லீவு போட முடியாதா?” என்றேன். சிாிப்பொன்றை உதிா்த்துவிட்டு “ச்சே ச்சே... அப்பா விடமாட்டன் எண்டுட்டாா்.. சண்டை முடிஞ்சு சாியான சமாதானம் வந்தப்பிறகுதான் இலங்கைக்கு போகணும் எண்டு கண்டிப்பா சொல்லிட்டாா்..!”. எனக்கு அதைக்கேட்க சிாிப்புத்தான் வந்தது. “அப்படியெனின்.. இப்ப அந்த சாியான சமாதானம் வந்துட்டுதா??” என்றேன் நக்கலாக. “அப்ப இல்லையா???” என என் இரு கண்களையும் இமைக்காமல் பாா்த்தாள் அவள். “வந்தால் நன்றாக இருக்கும்!” என்றேன். வெளிநாட்டில் வசிக்கும் அந்த பெண்ணிற்கு நான் சொன்னது எந்தளவிற்கு புாிந்திருக்கும் எனத் தொியாது. “அது சாி, உங்க அப்பா என்ன சொன்னாா்... சண்ட முடிஞ்சபிறகுதான் இங்க போகணும் எண்டா...” என நான் இழுத்தபோது “ஆமா!” என்றாள். மீண்டும் சிாித்துவிட்டு “ம்ம்ம்... நல்ல விடயம். உங்கள் அப்பாவிற்கு நீங்கள் எத்தனையாவது பிள்ளை..?” என்றேன். “ஐந்தாவது..!” என பதில் வந்தது. “ஒரேயொரு பிள்ளையை பெத்துவிட்டு, அந்த பிள்ளையை செல்வீச்சுக்களுக்கும் சீறி வரும் குண்டுகளுக்கு மத்தியிலும் பாடசாலைக்கு கூட்டிக்கொண்டு செல்லும் போதுகூட, எங்கள் அப்பாக்கள் இந்தளவு பயந்ததில்லை..!” என்றேன். இதையும் அவளால் புாிந்துகொள்ள முடிந்ததா எனத் தொியவில்லை. நான் இந்த குறிப்பில் சொல்லவந்ததைவிட மேலதினமான ஒரு தகவல் இது. உண்மைதான் இறுதியில் அவள் தமிழ் பேசுவதை அப்படியே கிறங்கிப்போய் பாா்த்துக்கொண்டிருந்தேன். ழகரத்திலும், ணகரத்திலும் ஆங்காங்கே கொஞ்சம் சறுக்கி விழுந்தாலும் நன்றாகவே தமிழ் பேசினாா்.

எனக்கு தொிந்து இவரைப்போன்றவா்கள் “வெளிநாட்டுக்காரா்“ என்கின்ற ஒரே காரணத்திற்காய் இங்கு வந்தால் கூட தமிழில் பேசுவதை தவிா்க்கிறாா்கள். இவா்களுக்கு ஒன்றை நாம் அடிக்கடி ஞாபகப்படுத்தவேண்டியிருக்கிறது. “நீங்கள் ப்ரான்சில் குடியுாிமை பெற்றிருந்தாலும், நாங்கள் உங்களை ”ப்ரான்ஸ் தமிழா்” அல்லது “புலம்பெயா் தமிழா்” என்றுதான் எண்ணிக்கொள்ளுகிறோம். நீங்கள் எங்கு போனாலும் உங்கள் சுயத்திற்கு பின்னால் “தமிழா்“ என்கின்ற ஒரு சோ்க்கை இந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை மறவாதீா்கள். தமிழ் என்கின்ற ஒரு வேரே நம்மை இன்றுவரை பெருமையுடன் உலகமெல்லாம் சுற்றித்திாிந்தும் நம் சுயத்தை காத்துக்கொள்ள காரணமாக இருக்கிறது. வேரை தொலைத்தால் நாம் நிலைக்க முடியாது.

வெளிநாட்டில் இருப்பவா்கள் நிச்சயம் தமிழ்தான் பேச வேண்டும் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு பிதற்றல் வாதம். மொழி என்பது தன்னை சூழ இருக்கின்ற மனிதா்களோடு தொடா்பாடலை ஏற்படுத்திக்கொள்ள உதவுகின்ற ஒரு சாதனம். நாம் யாரோடு தொடா்பாடலை மேற்கொள்ளவேண்டுமோ அவா்களுடைய அல்லது இருவருக்கும் பொதுவான ஒரு மொழியை பயன்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருக்கும் தமிழா்களை தமிழ் பேசினால் மட்டுமே தமிழா்கள் என கருதிக்கொள்ளவேண்டும் என்றால் அது அடிப்படையில் பிற்போக்கு விவாதம். ஆனாலும் தமிழை மறக்காமல் அடிப்படையில் குடும்ப மொழியாகவேனும் (Domestic Language) பயன்படுத்திக்கொள்தல் அவசியமானது. நம் அடுத்த சந்ததியினா் ஐரோப்பாவில் “ஐ டோன்ட் நோ ரமில்.!” எனச்சொன்னால் அது அவா்களது தவறில்லை. அது நமது வரலாற்றுத் தவறு.

முல்லைத்தீவில் சந்தித்து அறிமுகமாகிக்கொண்ட அந்த “இத்தாலி தமிழச்சியை“ மீண்டும் சந்தித்தால் நான் ஆங்கிலத்தில்தான் பேசுவேன். ஆனால் நிச்சயம் அவா் தமிழில்தான் பேசுவாா் என்பது எனக்கு நன்கு தொியும். அந்த முல்லைத்தீவின் அழகிய கடற்கரையில் என்னோடு “தமிழ்” பேசிய அந்த அனுபவத்தை அவா் என்றுமே மறப்பதற்கு சந்தா்ப்பம் இல்லை. என்னையும் சோ்த்து.

அடுத்த வாரமும் வருவேன்....


Monday, June 23, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 13


மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக பணிபுரியும் இலங்கைப் பெண்கள் தொடர்பான நீண்டதொரு கறுப்பு வரலாறு இருக்கிறது. இதில் வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த பல பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மத்திய கிழக்கு நாடுகளை நாடிச் சென்றிருக்கிறார்கள். இதில் கணிசமாக தமிழ், முஸ்லிம் இளம் மற்றும் குடும்பப் பெண்கள் அடங்குவர். இவர்களைப்பற்றி பேசும் தறுவாயில் ரிஸானா என்கின்ற பெண்ணை மறந்துவிட முடியாது. இந்த செய்தி எம் அனைவரையும் மிகப்பெரியதொரு ஆச்சரியம் கலந்த துயரத்தில் வீழ்த்தியது. இதிலிருந்து வெளியே வருவதற்கு நமக்கு எத்தனை மாதங்கள் எடுத்தது என்பதை நாம் அறிவோம். வயிற்றுப் பிளைப்பிற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற எமது பெண்கள் எத்தனை ஆயிரம் கோர ஆபத்துக்கள் மற்றும் கடினமான பாதைகளை கடந்து வர வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு தினாரிற்கும் அங்கே அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அவர்கள் உயிரை பறிக்கும் வரை வெளியே வருவதில்லை. எமக்கு தெரிந்த அந்த ஒரு ரிஸானாவைப் போல எத்தனை ரிஸானாக்கள் மத்திய கிழக்கில் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை யார் அறிவார். மத்திய கிழக்கு எம் பெண்களுக்கு தினாரைக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் உயிரை பறித்துக்கொண்டிருக்கிறது. சில வேளைகளில் ஈழப்போராட்டம் கொடுத்ததை விட இங்கு இவர்களுக்கு அதிகமாகவே வலிகள் திணிக்கப்படுகிறது.

இற்றைக்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் ஒருமுறை வவுனியா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தேன். வவுனியா நகரிலிருந்து ஒரு மணி நேர கார்ப்பயணம். மிகவும் அழகான ஆனால் வறுமையே உருவான கிராமம் அது. இக்கிராமத்து மக்கள் சுமார் புதினைந்து வருடங்களாக இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து அண்மையில்தான் மீண்டும் தங்கள் கிராமத்தில் மீளக் குடியேறியிருக்கிறார்கள். யுத்தம் அவர்கள் வீடு, வாழ்வாதாரம், உள்ளக கட்டுமானம் என அனைத்தையும் தின்று தீர்தித்திருந்தது. அதிகமான வீடுகள் முழுவதுமாக காணாமல் போயிருந்தது. வீதிகள் இருந்த இடங்களிலெல்லாம் மிகப்பொரிய மரங்கள் வளர்ந்து காடுகளாக காட்சியளித்தன. வாழ்வாதாரம் மிகப்பெரிய சவாலாகவும் பிரச்சனையாகவும் மாறிப்போய் இருந்தது. தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வந்திருக்கிறோம் என்பதை தவிர வேறு எந்த சந்தோஷமும் அவர்கள் முகத்தில் தென்படவில்லை. முகாமில் அழகான கட்டடத்தினுள் கல்விகற்ற சிறுவர்கள் போர்முடிந்து சொந்த ஊரிற்கு வந்து மர நிழலில் பாடப்புத்தகங்களுடன் இருக்கிறார்கள். 

ஊரின் மிகவும் ஒதுக்குப்புறத்திலிருந்த வீடு ஒன்றை தரிசிப்பதற்காக சென்றிருந்தேன். ஒரு வயதாகிய அம்மா, ஒரு சிறுவன், கம்பி வீட்டின் பின்புறத்தில் 30 வயது மதிக்கத்தக்க இன்னுமொரு பெண். மிகப்பெரிய முற்றம். முற்றத்தின் வலப்புறமாய் அளவு கணக்கின்றி பயங்கரமாய் வளர்ந்து நிற்கும் புளிய மரம். அவ்வளவு பெரிய புளியமரத்தை பார்த்ததும் பேய் பிசாசு ஞாபகம்தான் வந்தது. இருந்தும் சுற்றி ஆட்கள் இருப்பதால் துணிவு ஜாஸ்தியாக இருந்தது. வழமைபோலவே நீட்டி விரிக்கப்பட்ட தறப்பால் என அழைக்கப்படும் வெள்ளை நிற விரிப்பில் அமர்ந்துகொண்டோம். தங்கள் குடும்பத்தில் மூன்று பேர் வசிப்பதாக அறிமுகம் செய்துகொண்டார்கள். ஒரு சிறுவன், அவனுடைய தாய், அந்த தாயினுடைய தாய். அந்த சிறுவனுடைய தாயை கமலா என குறிப்பிடுகிறேன். அன்று நாங்கள் பல விடயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அவற்றுள் என்னை அதிகமாய் பாதித்த அல்லது அதிகமாய் தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்ட சப்ஜக்ட் கமலாவின் வாழ்க்கை பற்றியது. கமலா கட்டாரில் பணிபுரியும் ஒரு பணிப்பெண். இப்பொழுது விடுமுறையில் இலங்கைக்கு வந்திருக்கிறாள். இன்னும் ஒரு கிழமைக்குள் மீண்டும் கட்டார் போய்விடுவேன் எனச் சொன்னாள்.

'நான் கட்டார் போய் இரண்டு வருஷமாகுது.. அங்க ஒரு ஹாட்டேல் முதலாளி வீட்டில பணிப்பெண்ணா வேல பாக்குறன்..' என்றதும் கோடான கோடி கேள்விகள் என் நுனி நாக்கில் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. 2001 ஆம் ஆண்டு மிதிவெடியில் சிக்குண்டு மரணமடைந்தவர் கமலாவின் கணவர். தனிநபர் ஒருவரின் உழைப்பில் வயிற்றை நிறைத்துக்கொண்டிருந்த கமலாவின் குடும்பத்திற்கு தன் கணவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒரு இடைவெளியை விட்டுச்சென்றிருக்கிறது. அதுவும் பொருளாதார வளம் அடியோடு பிடுங்கப்பட்டு அன்றாட உணவிற்குகூட வசதியில்லாத ஒரு சூழ்நிலைக்குள் இந்த குடும்பத்தை தள்ளியிருக்கிறது. வயதாகிய தாய், மற்றும் தனது மகன் ஆகியோரின் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள தேவையான பொருளாதாரம் திடீரென இல்லாமல் போனது எப்படியாயினும் கமலா உழைக்க வேண்டும் என்கின்ற சூழ்நிலைக்குள் அவளை தள்ளிவிட்டிருந்தது. முகாமில் இருக்கின்ற காலங்களில் அருகிலிருக்கும் கிராமங்களுக்கு சிறு சிறு வேலைகளுக்கு சென்று வந்தாலும் அவை அவளது குடும்பத்தை கொண்டு நடாத்த போதுமானதாக இருக்கவில்லை. ஒரு நாள் தற்செயலாக சந்தித்த ஒரு மனிதரிடமிருந்து அவளிடம் தொற்றிக்கொண்டது இந்த வெளிநாட்டு எண்ணம். மிகவும் குறைந்த செலவில் கமலாவை பணிப்பெண்ணாக கட்டாருக்கு அனுப்ப முடியும் என்கின்ற ஜோசனை அந்த நபரால் தெரிவிக்கப்பட்ட போது அது சரியான முடிவாகவே கமலாவிற்குத் தெரிந்தது. சத்தியம் செய்திருந்தது போல ஒரு வாரத்திற்குள் அந்த மனிதர் கமலாவை கட்டாரிற்கு அனுப்பி வைத்தார்.

“அங்க போனதும் உடனடியாகவே அந்த வேலை கிடைச்சது. இரண்டு மாதங்கள் மிகவும் சிரமமாக இருந்திச்சு. அங்க போறதுக்காக பட்ட கடன அடைக்கணும், அம்மாவையும் என்ட மகனையும் முதல் தடவையா பிரிஞ்சிருக்கிறது எண்டு பல கஷ்டங்கள்... அப்புறம் எல்லாம் பழகிடிச்சு..” மண்ணை விரல்களால் கிண்டியபடி கூறிமுடித்தாள் கமலா. வேலை பற்றியும் அங்கிருக்கும் பணிப்பெண்களின் நிலமை குறித்தும் கேட்டபோது அவள் வாயிலிருந்து வந்தவை 'நல்லம்..!' என்பது மட்டுமே. அந்த பதிலோடு கூடவே கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் தயக்கம், கொஞ்சம் பயம், கொஞ்சம் விரக்தி, கொஞ்சம் சோகம் என்பன ஒட்டியே இருந்ததை நான் நன்றாக அவதானித்தேன். அவளை வெளிப்படையாக பேச வைக்கவேண்டும் என சுமார் இருபது நிமிடங்கள் நான் முயற்சி செய்ததில் அவளை இறுதியாக தோற்கடித்தேன். மகனை போய் விளையாடும் படியாகவும் தாயை அருகிலிருக்கும் கடைக்கு போய் வரும்படியும் சாதூர்யமாக அனுப்பிவிட்டு கொஞ்சம் வெளிப்படையாக பேச ஆரம்பித்தாள் கமலா.

'உண்மைய சொல்லப்போனா நான் வேல செய்யிற இடத்தில நான் ஒரு முழு அடிமைதான். அப்பிடிதான் என்னைய நடாத்துவாங்க. வெளி உலகமே தெரியாது. வேளில போக விடமாட்டாங்க. அங்க போனதும் என்ட பாஸ்போட்ட பறிச்சு வச்சிடுவாங்க. காலைல மூணு மணிக்கு எழும்பணும். இரவு ஒண்டு ரெண்டு மணி வரை வேல இருக்கும். ஏதும் தப்பா செஞ்சிட்டா அந்த வீட்டுக்கார அம்மா கையில இருக்கிறதால அடிப்பாங்க..' என்ற கமலா, தனது கழுதிலிருந்த ஒரு தழும்பைக் ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டினாள். அந்த தழும்பைப் பார்த்தபொழுது எனக்கு கையெல்லாம் ரைப்படிக்கத் தொடங்கியது. தொடர்ந்தாள். 'வீட்டுக்கார ஐயா கொஞ்சம் நல்லவரு.. அந்த அம்மாதான் பயங்கரம்.. அவ என்ட பேர சொல்லி கூப்பிட்டாலே எனக்கு நடுங்கும்னா பாத்துக்கங்க. ஒரு நாள் தெரியாம ஒரு கோப்பைய போட்டு உடச்சுட்டன்.. ஒரு நாள் பூரா எனக்கு சாப்பாடு குடுக்கல அந்தம்மா..' என சாதாரணமாகக் கூறிவிட்டு உதடுகளை கடித்து கடைவாயில் சிரித்தாள் கமலா. எப்படி இவளால் சிரிக்க முடிகிறது? ஆச்சரியத்தில் உறைந்து போனேன். “என்ன சொல்லுறீங்க அக்கா..?” என என் ஆச்சரியத்தை மொழிபெயர்த்தேன்.

“ம்ம்ம்ம்.. அப்பிடி போகுது நம்ம வாழ்க்க.. இதெல்லாம் ஆரம்பத்திலதான் கஸ்டமா இருந்திச்சு.. இப்ப பழகிடிச்சு.. சம்பாதிக்கணும்ல!” மீண்டும் சிரிக்கிறாள் இந்த கமலா. என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள் தீர்ந்து போய்க்கொண்டிருந்தது. மீண்டும் அவளை பேச வைத்தேன். “இதெல்லாம் என்னங்க கொடும.. அந்த வீட்டில என்னோட சேர்த்து இன்னொரு வேலையாளும் இருக்கான். அவன் கட்டார் காரன்தான். அவன்தான் முதலாளிட கார கழுவுறது, மார்க்கட் போறது, பிள்ளைகள ஸ்க்கூலுக்கு கூட்டிக்கிட்டு போறது மாதிரியான வேலைகள பாக்கிறவன். நான் போன ஆரம்பத்திலயே அவன்ட போக்கு வாக்கு எனக்கு பிடிக்கல. என்ன பாக்குற பார்வ எல்லாம் ஒரு மாதிரி அப்பிடி இப்பிடி இருக்கும்.. வீட்டில யாரும் இல்லேனா நான் செத்தன்.. அங்க இங்க கைய வைப்பான்.. அந்த மாதிரியான சேட்ட எல்லாம் விடுவான்.. என்னால ஒரு கட்டத்தில இத சகிச்சுக்க முடியாமப்போக முதலாளிட்ட சொல்லுவன் எண்டு பயம் காட்டினன். அதுக்கு என்னைய பத்தி இல்லாதது பொல்லாதது எல்லாம் முதலாளிட்ட போட்டுக் குடுக்க போவதாக மிரட்டினான். அவன் அஞ்சு வருஷமா அங்க வேல பாக்குறவன். அவன் சொன்னா நிச்சயம் முதலாளி நம்புவாருனு எனக்கு தெரியும்.. அதால பயந்துபோய் அந்த ஐடியாவையும் கைவிட்டுட்டன்...” தலையை குனிந்துகொண்டாள் கமலா. நானோ ஆவலாய் 'அப்புறம்...?' என்றேன்.

அதற்கு ஒரு நிமிடம் மௌனம் பதில். நிமிர்ந்து பார்த்தாள். நாங்கள் அனைவரும் அவளையே பார்த்தபடி பதிலுக்காக காத்திருந்தோம். என்னையும் என்கூட இருந்தவர்களையும் தனித்தனியாக பார்த்துவிட்டு தன் பதிலைச் சொன்னாள். “சமாளித்துக்கொண்டேன்..!!!”

“புரியல..!” என்றேன். ஒரு குறும் சரிப்பை உதிர்த்துவிட்டு “ஒண்ணும் செய்ய முடியாது.. என்ன பண்ணுறது.. அவன் எதிர்பார்த்ததற்கெல்லாம் சம்மதித்தேன்.. எப்படியாவது அங்கு இருக்கணும் இல்லையா....!”

அவளது பதில் என்னை அப்படியே வாரிப்போட்டது. மறுபுறம் கமலாவின் அம்மா கடையிலிருந்து வந்து சேர்ந்தார். கொண்டுவந்த கொக்க கோலாவை எங்களுக்கு பரிமாறிக்கொண்டு “கமலா கட்டாருக்கு போன பிறகுதான் எங்க வாழ்க்க திரும்பவும் உயிர்பெற்றது மகன். அவள் மட்டும் அங்க போய் இருக்கலனா இண்டைக்கு நாங்க உசுரோட இல்ல.. நாங்க இண்டைக்கு சந்தோஷமா இருக்கிறம் எண்டா அதுக்கு இவ தான் காரணம்...” கமலாவின் அம்மா சொல்லி முடிக்க நான் வீட்டின் வாசலில் நின்ற கமலாவைப்பார்த்தேன்.

“இவங்க ரெண்டுபேருக்காகவும் நான் எதையும் தாங்க தயார் அண்ணா!” என்று கூறியபடி அருகில் நின்ற தன் அம்மாவையும் மகனையும் எட்டி வந்து வாரி அணைத்துக்கொண்டாள் கமலா.


அடுத்த வாரமும் வருவேன்.

Saturday, June 21, 2014

அளுத்கம கலவரமும் முகப்புத்தக போராட்டங்களும்.


அண்மைக்காலமாக இலங்கையிலிருந்து வரும் செய்திகளெல்லாம் அளுத்கம வில் ஆரம்பித்து இன்று பாணந்துறை வரை வந்து சேர்ந்திருக்கும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கெதிரான இன - மத அடிப்படைவாதிகளின் அராஜகம் பற்றியே பேசுகின்றன. இது பற்றி அவ்வப்போது முகப்புத்தகத்திலும் எனது கருத்துக்களை பதிந்திருந்தேன். இந்த அசாதாரண அடக்கு முறை பற்றியும் அதன் அரசியல் பின் புலங்கள் பற்றியும் பல செய்தித் தளங்கள், பத்திரிகைகள் பல கட்டுரைகளை எழுதியிருந்தன. இவற்றை தவிர்த்து இந்த கலவரங்கள் தொடர்பான பல எதிர்வினைகளில் மிகவும் மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் ஒரு விடயம் பற்றி கொஞ்சம் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதுதான் விசேடமாக முகப்புத்தகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேவையற்ற, மோசமான பின் விளைவுகளை தோற்றுவிக்கவல்ல முஸ்லிம் - தமிழ் விவாதங்கள்.

ஆரம்பத்திலிருந்தே இந்த கலவரங்களை சரி என்ற தோரணையிலும், இவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) இது தேவைதான் என்கின்ற பாணியில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட சில தமிழ் நண்பர்கள் இந்த பிரச்சினைக்கான தளத்தை உருவாக்கினார்கள். இதே போல இந்த விவாதங்களிற்கு வித்திட்டவர்கள் கடும் போக்கு புலி எதிர்ப்பு முஸ்லிம்கள். அவர்களது கருத்து அவர்கள் எங்களுக்கு செய்ததை இப்பொழுது இவர்கள் எங்களுக்கு செய்கிறார்கள் என்பதாய் இருந்தது. இவ் இரண்டு வகையறாக்களின் கருத்துக்களையும் காணும் பொழுது மற்றைய இனத்தைச் சேர்ந்தவர்கள் தாறுமாறாக உள்ளிறங்கி தங்கள் எதிர்க்கருத்தை முன்வைக்க ஆரம்பித்தார்கள். இதற்குள் ஏற்கவே குற்றுயிராய் கிடக்கும் முள்ளிவாய்க்காலும் வந்து போனது. முள்ளிவாய்க்காலில் நாங்கள் செத்துக்கொண்டிருந்த போது நீங்கள் சிரித்தீர்களே என ஒரு கூட்டம், பொது பல சேனாவை பிரான்சிலும் நோர்வேயிலும் சந்தித்த தமிழர்களை ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதிகள் என்கின்ற தோரணையில் இங்கு நடக்கும் கலவரங்களுக்கு தமிழர்களின் ஆதரவு இருப்பதாக எண்ணிக்கொண்டு வீண் வதந்திகளை பரப்பும் இன்னுமொரு கூட்டம்.

எனக்கு இப்பொழுது எழும் கேள்வியெல்லாம் இதுதான். அங்கு அப்பாவி முஸ்லிம்கள் செத்துக்கொண்டும் அனைத்தையும் இழந்துகொண்டும் தவிக்கிறார்கள். நீங்கள் இங்கு இணையத்திற்கு முன்னால் இருந்து கொண்டு எதற்காக நன்றாக இருக்கும் தமிழ் - முஸ்லிம் நட்பை அழித்துக்கொண்டிருக்கிறீர்கள். இப்படி வாதிடுவதால் அளுத்கமையிலும் ஏனைய பிரதேசங்களில் செத்துக்கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்குவதாய் எண்ணமா? இல்லை, நீங்கள் அவர்களுக்காக இங்கு கண்ணீர் வடிக்கிறீர்கள் என்று உலகம் நம்ப வேண்டுமா?

நோர்வேயில் யார் யாரை சந்தித்தார்கள் என்பதை கண்டுகொண்டு நீங்கள் எதை சாதிக்க போகிறீர்கள்? அதை கண்டுபிடித்தால் இலங்கையில் வன்முறைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிடுமா? மாறாக அதிகமான தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலான நட்புத்தானே கேள்விக்குறியாகிறது. முகப்புத்தகத்தில் இருந்துகொண்டு வீர வசனம் பேசுவதாலோ, அல்லது தமிழர்கள் முஸ்லிம்களுக்கு சார்பாக உணர்வுமிக்க கருத்துக்ளை பகிர்வதாலோ அங்கு வன்முறைகள் நின்றுவிடப் போவதில்லை. மாறாக இது அங்கிருக்கும் மக்களுக்கான ஒரு மோறல் சப்போட் மட்டுமே.

பல தமிழ் நணண்பர்களுக்கும் முஸ்லிம் நண்பர்களுக்கும் இடையில் நடக்கும் பல முகப்புத்தக விவாதங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நன்றாக சிரித்து முஸ்லிம்களுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் சில தமிழர்களும், தமிழர்கள் எங்களுக்கு என்றுமே உண்மையான நண்பர்கள் அல்ல என பழைய கசப்பான நினைவுகளை (புலிகளால் இழைக்கப்பட்டவை) இன்னும் மனதில் வைத்துக்கொண்டு வக்கிரமான கருத்துக்களை கக்கும் முஸ்லிம் சகோதரர்களும்தான் முகப்புத்தகத்தில் அதிக நேரத்தை இப்பொழுதெல்லாம் அடிப்டைவாத விவாதங்களுக்கு செலவு செய்கின்றனர். இப்பொழுது எமக்கு முக்கியமாக எது தேவை? கலவரம் பற்றிய விதண்டாவாத (தமிழர் மீது குற்றம் சாட்டப்படுகின்ற) ஆராச்சிகளா? எதற்காக சில முஸ்லிம்கள் முள்ளிவாய்க்கால் படுகொலையை கொண்டாடினீர்கள் என்கின்ற பழிதீர்க்கும் முனைப்புக்களா? இல்லை. இப்பொழுது எமக்கு தேவை முஸ்லிம் - தமிழ் நட்புறவும் ஒற்றுமையும் மட்டுமே. இரண்டு கைகளும் தனித்தனியே நின்றால் பொறுத்த நேரத்தில் ஒலி எழுப்ப முடியாமல் போகும். இதை முகப்புத்தகத்தில் தங்கள் வக்கிரக கருத்துக்களை வீசிக்கொண்டிருப்பவர்களும், தங்கள் தனிப்பட்ட அடிப்டைவாத கொள்கையை சந்தர்ப்பம் பார்த்து அள்ளித் தெளித்துக்கொண்டிருப்பவர்களும், புலி எதிர்ப்பு மற்றும் ஒரு சில தமிழ் குழு எதிர்ப்பை, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் மீது காட்டும் முஸ்லிம் நண்பர்களும் அறியாமல் இருப்பார்கள் என என்னால் சொல்ல முடியாது.

நாம் செய்ய வேண்டியதை விட்டுவிட்டு செய்யக் கூடாததை செய்துகொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை தேவைப்படும் காலத்தில் எமக்கிடையிலான முரண்பாடுகளை உருவாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். முகப்புத்தகத்தில் தமிழர்களை தாக்கி அவதூறுகளையும் தங்கள் அடிப்படைவாதத்தையும் தங்கள் தனிப்பட்ட வங்குரோத்து கோவங்களையும் “அளுத்கம”வை மேற்கோள்காட்டி அள்ளி வீசிக்கொண்டிருப்பவர்களால் அங்கு பாதிக்கப்படும் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு அதையுமே செய்ய முடியாது, கலவரத்திலிருந்து அந்த மக்களை காத்துக்கொள்ளவும் முடியாது. வெறும் கையாலாகாத ஆவேசம் மட்டுமே. அதேபோல இச்சந்தர்ப்பத்தில் தங்கள் குரோத பழிவாங்கல்களை தங்கள் சிரிப்பின் மூலமும் தங்கள் கருத்துக்களின் மூலமும் மற்றும் இதை சாட்டாக வைத்து முஸ்லிம்களை பழிவாங்கும் அல்லது அவர்களை போட்டுத்தாக்கும் தமிழ் அடிப்படை வாதிகளினால் இந்த கலவரத்தை கூட்டவோ அதிகரிக்கவோ முடியாது. ஆக முகப்புத்தகத்தில் சீறிப்பாயும் சில முஸலிம் - தமிழ் உணர்வாளர்களால் தேவையற்ற பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு திசை மாற்றப்பட்டு வெறும் பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் மட்டுமே வழி சமைக்க முடிகிறது.

மீண்டும், “அளுத்கம கலவரம் பற்றி முகப்புத்தகத்தில் கடுமையாக விவாதித்ததால் நானும் அந்த முஸ்லிம்/தமிழ் நண்பனும் எங்கள் உறவை முறித்துக்கொள்ள வேண்டியதாயிற்று!” 

இப்படி நாளை பலர் கவலைப்படப் போகிறார்கள் என்பதை இப்பொழுது பலரது ஸ்டேட்டஸ்களும் கமண்ட்களும் சொல்லுகின்றன. இதில் வருத்தம் என்னவென்றால், அங்கு ஒரு பெரும்பான்மை அடிப்படைவாதிகள் முஸ்லிம் சகோதரர்களை குறிவைக்கிறார்கள். இதனால் இங்கு முகப்புத்தகத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம் நண்பர்களுக்கும் இடையில் சண்டையும் விரோதமும் உருவாகிக்கொண்டிருக்கிறது. “அவர்களுக்கு” தேவையான தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டை நாமேதான் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

எம்மால் அந்த பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக எப்படி குரல் கொடுக்க முடியும்? சிறுபான்மை குழுக்களான முஸ்லிம் - தமிழ் மக்களின் ஒற்றுமை எவ்வாறு இந்த பிரச்சினையை வெற்றிகொள்ள உதவியாக இருக்கும்? அனைத்தையும் மறந்து இவ் இக்கட்டான கால கட்டத்தில் ஒன்றாக அணி திரள்தல் எவ்வளவு முக்கியமானது? போன்ற விடயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். எமது அதிக பட்சமான குறிக்கோள், இந்த பெரும்பான்மை அடக்கு முறையிலிருந்து எப்படி தப்பித்துக்கொள்ள முடியும் என்பதே தவிர முஸ்லிம் - தமிழ் முரண்பாடுகளை உருவாக்குவதாய் அமைந்துவிடல் கூடாது. இதுவே என்னைப்போன்ற சாமான்ய, மனிதத்துவம் நிறைந்த சிறுபான்மை இனத்தானின் எதிர்பார்ப்பு. முகப்புத்தக நண்பர்களே, எங்கள் முகப்புத்தக உணர்வலைகள் இன்னுமொரு தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டையும், புரிந்துணர்வில்லா நிலையையும் உருவாக்கிவிடக்கூடாது. காரணம், அவ்வாறு நடக்கும் பட்சத்தில் எதிரிக்கு நாங்களே வாள்களை தீட்டிக்கொடுப்பதாய் அமைந்துவிடும். 

நிச்சயமாக இந்தப் பதிவிற்கு விதண்டாவாத விளக்கங்கள் கேட்டு நான் மேலே சொன்ன இரு தரப்பினரும் வருவார்கள். அவர்களுக்கு விடையளித்து அல்லது அவர்களுடன் வாதிட்டு நானும் இந்த வகையறாக்குள் நுழைந்துகொள்ள விருப்பம் இல்லை. தேவையற்ற விடயங்களை விவாதித்து யாருடனுமான உறவை முறித்துக்கொள்ள நான் தயாராக இல்லை. நான் இக்கட்டுரை மூலம் சொல்ல வருவது பலருக்கு புரியலாம் சிலருக்கு புரியாமல் போகலாம். என்னால் அந்த “சிலருக்கு” புரியவைக்க முடியாமல் போனது பற்றி கவலையில்லை. காரணம் அவர்களுக்கு இவை என்றுமே புரியப்போவதில்லை.

22.06.2014


Sunday, June 15, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புகள் - 12


இந்த வார நாட்குறிப்பு ஒரு சாராரை கொஞ்சம் சஞ்சலப்படுத்தலாம். நான் கடந்து வந்த சில அனுபவங்களை கலப்படம் இன்றி கொஞ்சம் சுவாரஸ்யமாக பேசுவதே இந்த தொடரின் நோக்கம் என்பதை யாவரும் அறிவர். இங்கு பேசப்படும் பல விடயங்களை தங்கள் சுய வாழ்க்கையோடு சம்மந்தப்படுத்தி காயப்படும் நண்பர்களுக்காக சில உண்மையான நம் சமூகப்பிரச்சனைகளை தணிக்கை செய்துவிட முடியாது. அது என் எழுத்து தர்மத்திற்கும் முறணானது. நம்மைப் பற்றியும் நம் வாழ்வு பற்றியும் நாமே வெளிப்படையாக பேசிக்கொள்தல் ஒரு ஆரோக்கியமான சமூக மேம்பாட்டிற்கு வழிகோலும். நம் சமூக கட்டமைப்பிற்கு சவாலாக அமையும் விடயங்களை பேசாமலும் அதுபற்றி சிந்திக்காமலும் விடுதல் வயலில் வேகமாக வளரும் களைகளுக்கு ஒப்பானது. சரி விடயத்திற்கு வரலாம்.

நான் ஏற்கனவே கடந்த சில நாட்குறிப்புக்களில் குறிப்பிட்டிருந்தது போல தாயகத்தை தொலைத்துவிட்டு வெளிநாடுகளில் நம் உறவுகள் தஞ்சம் புகுவதற்கு காரணம் தாயகப்போராட்டம் மட்டும்தான் என சொல்லிவிட முடியாது. போராட்டம் மிக முக்கியமான காரணி என்றாலும் மேலும் சில வேறு காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த காரணம் வெளிநாடுகளில் சென்று குடியேறியவர்களில் ஒருத்தரிற்கு ஒருத்தர் வேறுபடும். இதில் ஒரு முக்கியமான வகையறா இந்த 'திருமணம்'. போரிற்கு பிற்பட்ட காலங்களில் வெளிநாட்டு ஆசை எந்தளவிற்கு இளம் ஆண்களை ஆட்கொண்டிருக்கிறதோ அதே போல வெளிநாட்டு வாழ்க்கையை விரும்பும் இளம் பெண்கள் இல்லை என சொல்லிவிட முடியாது. பெரும்பாலும் இந்தப் பெண்களில் இரண்டு தரப்பினர் இருக்கிறார்கள். ஒன்று வெளிநாட்டு செல்வதற்கு திருமணத்தை காரணமாக பயன்படுத்துவோர். இரண்டாவது குடும்ப வறுமை காரணமாக பணம் சம்பாதித்தலை நோக்கமாகக் கொண்டு விசேடமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வோர். இன்றைய குறிப்பு முதல் தரப்பினர் பற்றி பேசும். இரண்டாம் தரப்பினர் பற்றி அடுத்த வாரம் பேசலாம்.

சாதாரணமாக ஒவ்வொரு பெண்ணிடமும் தன் எதிர்கால கணவன் தொடர்பான ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். சிலருடைய எதிர்பார்ப்பு பட்டியல் மிகவும் நீண்டது. இவர்களுக்கு அதிகமாக 35 வயதிற்கு பிறகே திருமணம் சாத்தியமாகும். அப்பொழுது அந்த நீண்ட பட்டியல் பற்றி அதிகம் வருத்தமுறுவார்கள். இதில் சுவாரஷ்யமான விடயம் என்ன வென்றால், இவர்கள் இறுதியாக திருமணம் செய்து கொள்ளும் அந்த ஆணிடம் அவர்கள் லிஸ்டில் இருந்த எந்தவொரு இயல்பும் இருக்காது. கணவன் பற்றிய அளவுக்கதிகமான எதிர்பார்ப்போடு இருந்த பலர் இறுதியாக முதிர்கன்னி என்கின்ற வகையறாக்குள் துர்வதிஷ்டவசமாக விழுந்துவிடுகிறார்கள். இப்பொழுதெல்லாம் புதிதாக தமிழ் பெண்களின் லிஸ்டில் ஒரு சுவாரஷ்யமான விடயமும் தொற்றிக்கொண்டிருக்கிறது. 'எனக்கு வரும் கணவர் வெளிநாட்டில் இருப்பவராக இருக்க வேண்டும்'. பல தமிழ் பெண்களின் இந்த எதிர்பார்ப்பை அல்லது ஆசையை கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இந்த எதிர்பார்ப்பிற்கு பல காரணங்கள் இருக்கலாம். மேலைத்தேய நாகரீகத்தால் ஈர்க்கப்பட்டமை, சுகபோக வாழ்க்கை, பணக்கார வாழ்க்கை, அல்லது உள்நாட்டில் கௌரவ அந்தஸ்து தேடல், திருமணத்திற்கு பின்னரும் தங்கள் குடும்பத்திற்கு பொருளாதார உதவி வழங்கக்கூடியதான நிலையை உருவாக்குதல், தங்கள் சக பெண் நண்பிகள் மற்கும் உறவினர்கள் மத்தியில் உயர் சுய நிலை அந்தஸ்தை உருவாக்கல் என பல காரணங்கள் இருக்கலாம். இந்த வெளிநாட்டு ஆசையுள்ள பெண்களை முல்லைத்தீவு தொடங்கி வெள்ளவத்தை வரை காணமுடியும். இது பற்றி புள்ளி விபரம் கேட்காதீர்கள் நான் இந்த விடயத்தில் எந்தவித ஆராச்சியும் மேற்கொள்ளவில்லை.

எனக்கு நன்கு தெரிந்த நண்பி ஒருவர் இருக்கிறார். இப்பொழுது கொழும்பில் இருந்தாலும் அவரது சொந்த இடம் மட்டக்களப்பு. என்னுடைய வயது இருக்கும் (அப்படியெனின் யூத்னு அர்த்தம்!). நாளுக்கு நாள் அவளை பின்தொடரும் பையன்களின் பட்டியலில் ஓர் அதிகரிப்பு இருந்துகொண்டே இருக்கும். ஒருமுறை என்னுடைய ட்ரெயினிங் ப்ரோக்ராம் ஒன்றிற்கு அவள் வந்திருந்தாள். அப்படித்தான் அவள் எனக்கு அறிமுகமானாள். ஒரு நாள் வெள்ளவத்தை கேஎப்சி யில் நானும் இந்த நண்பியும் இன்னும் சில நண்பர்களும் பொரிச்ச இறைச்சி சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். மிகவும் அழகானவள் இந்த நண்பி. நம்மை சுண்டி இழுக்கும் மஜிக் கண்கள். நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவாள். 'என்னோடு தமிழில்தான் பேசணும்' என்று கண்டிப்பாக சொல்லியிருந்த படியால் என்னுடன் மட்டும் அழகிய மட்டக்களப்பு தமிழில் பேசுவாள். ஒரு பெரிய கோழிக்காலோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்த அவளிடம் என் நண்பன் வரலாற்று முக்கியத்துவமான ஒரு கேள்வியைக் கேட்டான். 'ஆமா, இவ்வளவு அழகா இருக்கே, எப்பபாரு ஒருத்தன் உனக்கு பின்னாலயே வாறான் சாரி வாறம். நீ எதுக்கு யாரையுமே லவ் பண்ண மாட்டேங்கிறாய்?'

கேள்வி கொஞ்சம் கலாய்த்தல் பாங்கில் இருந்தாலும் அது நாங்கள் அனைவரும் நீண்ட நாட்களாக அவளிடம் கேட்க வேண்டும் என வைத்துக்கொண்டிருந்த கேள்விதான். இடையில் நான் புகுந்து 'இதற்கு சீரியசான பதில் ஒன்றை இந்த சங்கம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது!' என்றேன் அவளைப்பார்த்து. இறுதியில் அவள் சீரியசாகவே பதில் சொன்னாள். 'எனக்கு லவ் பண்றதில ஆர்வம் இல்லாமல் இல்லை பட் எனது எதிர்பார்ப்புகள் கொஞ்சம் ஜாஸ்தி..' என இழுக்கையில் 'உதாரணத்துக்கு..' என நான் குறுக்கிட்டேன். மிகவும் தெளிவாக சொன்னாள் 'நிச்சயமா அவர் வெளிநாட்டில இருக்கிறவரா இருக்கணும்'. மேசையை சுற்றியிருந்த எங்களின் ஆவெண்ட வாய்கள் அனைத்தும் மெதுவாக மூடிக்கொண்டன.

நான் அவளிடம் வெளிநாட்டு பையன்தான் வேணும் என்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பதாயும் அதைத்தெரிந்துகொள்தலில் எவ்விதமான உள்குத்துக்களும் இல்லை என்பதையும் சொல்லியிருந்தேன். ஆனாலும் அவளுக்கு அந்த காரணத்தை சரியாக விளங்கப்படுத்த முடியவில்லை இன்று வரை. அல்லது சொல்வதில் ஏதேனும் கௌரவச் சிக்கல்கள் இருக்குமோ என்பதையும் யான் அறியேன். என்ன என்ன விடயங்களில் வெளிநாட்டில் இருக்கும் இளைஞர்கள் இங்கிருக்கும் இளைஞர்களுடன் ஒப்பிடுகையில் சிறப்பாக வேறுபடுகிறார்கள் என அடிக்கடி சிந்தித்திருக்கிறேன். பெரும்பாலும் வெளிநாடுகளில் அவர்கள் ஆடம்பர வாழ்க்கையை அதிகம் அனுபவிக்கிறார்கள். கிளிநொச்சியில் இருக்கையில் இரவு நேர களியாட்ட விடுதிகள் என பேச்சு வந்தால் 'ச்சீ' என அருவருத்தவர்கள் இப்பொழுது தங்களின் அரைவாசி வாழ்க்கையை பிரான்சின் றென், ருலூஸ் போன்ற களியாட்ட நகரங்களின் விடுதிகளில் செலவு செய்வதை நான் அறிவேன். இதை தவறு என சொல்ல முடியாது. காலத்திற்கும் தேசத்திற்கும் ஏற்றாற்போல் தக்கண பிளைக்கதெரியாதவை அழிந்து போகும். ஆக அதிகமான நம் தாயக பெண்களின் வெளிநாட்டு திருமண கனவுகளின் பின்னணி நாகரீகமான ஆடம்பர வாழ்க்கை நோக்கியதாகவே இருக்கிறது. 

நீண்ட நாட்களுக்கு பிறகு எனது மேலதிகாரியினால் பாவம் பார்த்து வழங்கப்பட்ட ஒரு வார விடுமுறையை கழிக்க இலங்கை வந்திருந்தேன். ஒரு நாள் அம்மா சுந்தரம் மாமா வீட்டுப்பக்கம் போய் வா என அனுப்பி வைத்தார். சுந்தரம் மாமா குடும்பமும் எங்கள் குடும்பமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். 2000 ஆம் ஆண்டு இடம்பெயர்வில் எங்கள் ஊரில் வந்து குடியேறியவர்கள் இன்றுவரை இங்குதான் வசிக்கிறார்கள். என்னை அவர்களுக்கு அதிகம் பிடிக்கும். படிக்கும் காலங்களில் நானும் அதிகமான நேரத்தை அவர்கள் வீட்டில் செலவு செய்வேன். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. ஒன்று வட்டில் அப்பம். இரண்டாவது குட்டி மேனகா. எப்பொழுது சுந்தரம் அங்கிள் வீட்டிற்கு போனாலும் எனக்கு வட்டில் அப்பம் இலவசமாகக்கிடைக்கும். குட்டி மேனகா சுந்தரம் அங்கிளின் ஒரே பொண்ணு. இப்பொழுது அது குட்டியல்ல குமரி. மிகவும் நீண்ட நாட்களுக்கு பின்னர் அன்று நான் சுந்தரம் அங்கிள் வீட்டிற்கு சென்றேன். வழமைபோல மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது வட்டில் அப்பம் உட்பட. ஆன்டிக்கு வயதுதான் கொஞ்சம் அதிகரித்துக்கொண்டிருந்தாலும் அவர் செய்யும் வட்டில் அப்பத்தின் சுவை மாறாமல் இருந்தது. மேனகா பல்கலைக்கழக படிப்பை முடித்துவிட்டு பிரதேச செயலகத்தில் பணிபுரிகிறாள். 

வட்டில் அப்பத்தோடு முன் மண்டபத்தில் அமர்ந்துகொண்டு நானும் சுந்தரம் மாமாவும் பேசிக்கொண்டிருந்தோம். எனது வேலை, வெளிநாட்டு வாழ்க்கை, எனது எழுத்துப்பயணம், கொஞ்சமாய் அரசியல், கிரிக்கட் என பல கோணங்களில் நகர்ந்து சென்றது உரையாடல். வேண்டாம் வேண்டாம் எனச் சொல்லியும் காதில் விழுத்திக்கொள்ளாமல் மேனகா சமையலறையில் எனக்கு தேனீர் ரெடி பண்ணிக்கொண்டிருந்தாள். 'எப்ப கலியாணம் அமல்?' அங்கிள் பிளேட்டை சடாரெனப் போட்டார். 'அதுக்கு என்ன அங்கிள் இப்ப அவசரம்..' என சமாளித்தேன். 'காலா காலத்துக்கு அதுகள பண்ணிடணும் பாத்தியா..!' பருவகால அறிவுரை வந்திறங்கியது. நான் எதுவும் பேசவில்லை. இந்த அறிவுரைக்கெல்லாம் தலையை ஆட்டிவிட்டு போய்கொண்டே இருக்க வேண்டும். 'முதல்ல நம்ம மேனுட கல்யாணத்த சும்மா ஜாம் ஜாம்னு நடாத்திட்டு அப்புறமா நான் கட்டிக்கிறேன்..!' என்றேன் அக்கறையாய். 'உண்மைதான் அமல்..' என தலையை ஆட்டினார் அங்கிள். 'ஆமா மேனுட கல்யாண வேலையெல்லாம் எப்பிடி போய்கிட்டு இருக்கு..?' என்றேன் சுந்தரம் அங்கிளிடம். தேனீர் திடீரென என் உதட்டை சுட்டது. காரணம் தெரியவில்லை. 'அதுதான் அமல் பாத்துக்கிட்டு இருக்கம்.. நம்ம அவசரத்துக்கு அதெல்லாம் சரிவரணுமே தம்பி. இவளுக்கு வேற வெளிநாட்டு மாப்பிள்ளதான் வேணும்னு ஒத்தக்காலில நிக்குறாள்..' அங்கிள் அலுத்துக்கொண்டார்..

சமையலறையில் எனக்கு வட்டில் அப்பம் பார்சல் பண்ணிக்கொண்டிருந்த மேனகாவிற்கு கேட்கக்கூடியதாக 'நானும் வெளிநாட்டிலதான் இருக்கிறேன் மேடம்..' என்றேன் சத்தமாக. 

வீட்டினுள்ளிருந்து மேனகாவின் பதில் வேகமாக வந்தது. 

'உனக்கு அங்க காட் இருக்கா????'

'......'

இப்பவெல்லாம் நம்ம பொண்ணுங்க ரொம்ப தெளிவாகத்தான் இருக்கிறாங்க! 'நீயெல்லாம் நல்லா வருவ!' என அங்கிருந்து நடையைக்கட்டினேன். 


அடுத்த வாரமும் வருவேன்.Tuesday, June 10, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 11அகதி அந்தஸ்து தேடி ஆயிரக்கணக்கிலான தமிழர்கள் பிற தேசங்களை நாடிச்சென்றாலும் தங்கள் அகதி அந்தஸ்து கொள்கையை நமக்காக அந்தளவிற்கு தளர்த்திக்கொண்டதாய் இல்லை விசேடமாக பல ஐரோப்பிய நாடுகள். அதுவும் இலங்கை யுத்தம் முடிவுக்கு வந்தது என்கின்ற காரணம் அவர்களின் அகதிகள் மீதான தங்கள் உள்நாட்டு கொள்கைகளை இன்னும் இன்னும் கடினமாக்கிக்கொள்ள உதவியாய்ப்போனது. இருந்தும் யுத்த காலங்களில் நம் தமிழர்களுக்கு புகலிடம் வழங்கிய சில ஐரோப்பிய நாடுகளையும் நாம் மறந்துவிட முடியாது. இன்றும் பல நாடுகளில் பிரஜா உரிமையோடு வாழும் தமிழர்கள் அந்த நாட்டு அரசாங்கங்களை நன்றியோடே நினைத்துக்கொள்கிறார்கள். உயிரை கையிலேந்திக்கொண்டு தஞ்சம் தேடி ஓடிவந்த எம்மவர்களை ஏற்றுக்கொண்ட உன்னதமிக்க நாடுகள் அல்லவா அவை. அவற்றிற்கு தமிழர்கள் நாங்கள் என்றும் கடமைப்பட்டவர்களே.

இதேபோல இந்த நாடுகளின் அகதி அந்தஸ்து தொடர்பான நெகிழ்ச்சித்தன்மையை பயன்படுத்தி குறித்த யுத்த காலங்களுக்குள் இந்தநாடுகளில் போய் குடியேறிய 'புலம்பெயர்தல் அவசியமற்ற' தமிழர்களையும் பிரித்துப்பார்க்காமல் இந்தநாடுகள் வரவேற்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் வெளிநாட்டு வாழ்கையை தாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே அமைத்துக்கொண்டார்கள். இந்த வகையறாவுக்குள் வரும் ஒரு நண்பர் பற்றி அண்மையில் அவரது நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்த நண்பரை செந்தூரன் என்று வைத்துக்கொள்ளுவோம். செந்தூரன் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர். பல வருடங்களுக்கு முன்னதாக ஐரோப்பிய நாடு ஒன்றில் 'அகதி' அந்தஸ்து தேடி அங்கு போய் குடியேறியவர். இவர் இப்பொழுது அந்த நாட்டின் பிரஜா உரிமையோடு அங்கு வாழ்ந்துவருகிறார் என்பது இந்த நாட்குறிப்பை விளங்கிக்கொள்வதற்கு தேவையான முக்கிய தடயத்தை வழங்குகிறது.

முல்லைத்தீவில் அழகிய ஒரு கிராமத்தில் மூன்று ஆண் சகோதரர்களோடு ஒரே பெண்ணாக பிறந்தவர் மதி. அப்பாவை பொக்கணையில் தொலைத்துவிட்டு அவரிற்கு என்ன நடந்தது என இன்னும் தேடிக்கொண்டிருக்கிறாள் அவள் குடும்பத்தோடு. இறந்திருப்பார் என்கின்ற நம்பிக்கையில் அவர் படத்திற்கு மாலை அணிவித்து படுக்கையறையில் வைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார் மதியின் அம்மா. இல்லை அப்பா வருவார் என அடம்பிடித்துக்கொண்டிருக்கிறான் மதியின் கடைசித் தம்பி. மதி அப்பொழுது பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றிக்கொண்டிருந்தார். அடிக்கடி மதியை பார்ப்பவர்கள் 'எப்ப மதி கலியாணம்?' என கேட்கும்பொழுது அவர்களை முறைத்துப்பார்த்துவிட்டு நடையைக்கட்டும் பேர்வழி மதி. 'எங்க போனாலும் எப்ப மகளுக்கு கலியாணம், எப்ப மகளுக்கு கலியாணம்.. எண்டு கேக்குறாங்க?' நாசுக்காக மதியின் அம்மா சொல்லும் போதெல்லாம், மதியின் முறைப்பான பார்வை அவள் அம்மாவை எரித்துப்போடும். 'இவங்களுக்காக எல்லாம் என்னால கலியாணம் கட்ட முடியாது அம்மா!' என அடிக்கடி எரிந்து விழுவாள் மதி. இருபத்து ஐந்து வயது ஆரம்பித்திருந்தாலும் திருமணம் என்பதை விட தனது தொழில், குடும்பம் என்பவற்றில்தான் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தாள். 'மதி,
கலியாணம் எல்லாம் என்னமாதிரி..?' என ஒருமுறை மதியை கேட்டு கடுப்பேத்திய சக ஆசிரியை ஒருவர் நன்றாக அவளிடம் வேண்டிக்கட்டிக்கொண்டார்.

'அப்பா இல்லாத பிள்ளை...' என்கின்ற ஊர் வாயின் பரிதாப வார்த்தைகள் பல தடவைகள் மதியை 'சீ.. இந்த ஊரவிட்டே போய்டலாம் போல இருக்கு!' என்கின்ற அளவிற்கு வெறுப்பேற்றுவதாய் இருக்கும். மதியின் அம்மாவுடையதும் அவள் மூத்த சகோதரனுடையதுமான நீண்ட அறிவுரை, நியாயமான விவாதம், மிதமிஞ்சிய கெஞ்சல் என்பன மதியை இறுதியாக திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது. மதியின் மூத்த அண்ணன் விவசாயம் செய்பவர். நல்லதொரு உழைப்பாளி. குடும்பத்தை அப்பாவின் இடத்திலிருந்து பொறுப்பாக கவனித்துக்கொள்பவர் இவர். அவரின் நண்பர் ஒருவரின் உதவியால் கிடைத்த வெளிநாட்டு வரன் தங்கள் குடும்பத்திற்கும் மிகவும் பொருத்தமானது என கண்டுகொண்ட மதியின் அண்ணனும் அம்மாவும்  தடல் புடலாக ஆகவேண்டிய காரியங்களை ஆரம்பித்தனர்.

'உங்களுக்காக மட்டும்தான் நான் இந்த கலியாணத்துக்கு ஒத்துக்கிட்டன். அதுக்காக உங்கள எல்லாம் விட்டுட்டு வெளிநாட்டுக்கெல்லாம் போக முடியாது. நான் இங்கதான் இருப்பன்.. எத்தின தடவ சொல்லியிருப்பன் வெளிநாட்டு மாப்பிள வேணாம்னு.. கொஞ்சமாவது என்னைய புரிஞ்சுக்க மாட்டீங்களா..!' அன்று இரவு மதியின் சத்தத்தில் வீட்டுக்கூரை நடுங்கியது. அம்மாவும் அண்ணனும் தலைகுனிந்து நின்றார்கள். மதியோ அடக்க முடியாத பத்திரகாளியானாள். நிற்சயம் அன்று அவளை அவர்களால் சம்மதிக்க வைக்க பல பிரயத்தனம் செய்தும் முடியாமல் போனது. இனியும் இவளை சம்மதிக்க வைக்க முடியும் என்கின்ற நம்பிக்கை அண்ணனிடமோ அம்மாவிடமோ கொஞ்சமும் இருக்கவில்லை. ஆனாலும் ஒரு மாத கால அடம் பிடித்தலின் முடிவில் மதியே துர்வதிஷ்டவசமாக தோற்றாள். மதியை இறுதியில் சம்மதிக்க வைப்பதற்கு வீட்டாட்கள் கையாண்ட தந்திரம், வழமைபோலவே அம்மாவின் செண்டிமெண்ட், அம்மாவின் கண்ணீர், அம்மாவின் பட்டினி, அம்மாவின் சுகவீனம், அம்மாவின் மற்றும் அண்ணனின் மௌனம், அண்ணனின் தாடி (கவலையால் சேவ் செய்யவில்லையாம்). ஒருமாத போராட்டத்தின் பின்னர் 'அம்மா, அந்த மாப்பிள்ள ஓகே, நான் கலியாணம் பண்ணிக்கிறன்!'. அம்மாவின் கண்ணீர் நின்றது. அம்மா சாப்பிட ஆரம்பித்தார். மாத்திரை இல்லாமலே அவர் சுகவீனம் குணமானது. அண்ணன் பேச ஆரம்பித்தான். இறுதியில் அண்ணனின் தாடி சேவ் செய்யப்பட்டது.

வெளிநாட்டு மாப்பிள்ளை வந்திறங்கினார். திருமணம் செய்வதற்கு நாட்கள் போதாமல் இருந்ததினால் நிச்சயதார்த்தத்தையும் பதிவுத் திருமணத்தையும் இப்போதைக்கு முடித்துக்கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது. காரணம் மாப்பிள்ளை ஒரு வார விடுமுறையிலேயே வந்திருந்தார். பத்து லட்சம் ரூபாய் பெண் வீட்டாரிடமிருந்து மாப்பிள்ளை வீட்டாரிடம் கைமாற்றப்பட்டது சீதனம் என்கின்ற பெயரில். ஐந்து ஏக்கர் காணி பேச்சளவில் மாப்பிள்ளைக்கு தானம் செய்யப்பட்டாலும் எழுத்தளவில் உறுதிப்படுத்தி உரிமை மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. நிர்ச்சயதார்த்தம் முடிந்தது, பதிவுத் திருமணமும் நிறைவெய்தியது. ஒருவாரமும் முடிவுக்கு வந்தது. மாப்பிள்ளை கிளம்பினார். மாப்பிள்ளை வீட்டாட்களின் வங்கிக்கணக்கு ஒரு லட்ச்சத்தால் அதிகரித்தது. பெண்வீட்டாரின் வங்கிக்கணக்கு பூச்சியம் ஆனது. பெண் வீட்டார் மகளை கரை சேர்த்துவிட்டோம் என பெருமூச்சு விட்டுக்கொண்டனர்.

ஒருவாரம், ஸ்கைப்பில் பட்டாம் பூச்சி பறந்தது. மதி வாழ்க்கையின் இன்னுமொரு பகுதி சந்தோசமாகவும் உணர்வுமிக்கதாயும் இருந்தது. திருமதி செந்தூரன் என தனது சுயத்தை மாற்றிக்கொண்டாள் மதி. அருகிலிருக்கும் கடைக்கு செல்வதற்கு கூட கணவனின் அனுமதி தேவைப்பட்டது. அந்த அனுமதி ஸ்கைப்பிலோ குறுஞ்செய்தியாகவோ ஐரோப்பாவிலிருந்து வந்து இறங்கும். ஆறு மாதங்கள் ஓடி நின்றது. மதி முகத்தில் ஏதோ ஒரு சோகம் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தது. 'புருஷன் பொஞ்சாதிக்கிடையில அப்பிடி இப்பிடி வரத்தான் செய்யும்.. அதுக்கு எதுக்கு முகத்து தூக்கி வச்சுக்கிட்டு திரியிறே?' என அம்மாவின் அடிக்கடி வந்துபோகும் அறிவுரை அவள் ஆத்திரத்திற்கு இன்னும் இன்னும் தூபம் போட்டது. இருந்தும் மதியின் முகம் கொஞ்சமேனும் வெழுப்பதாய் தெரியவில்லை. அவளிடத்தில் ஏதோவொரு மாற்றம் ஒட்டிக்கொண்டிருந்தது. எப்பொழுதும் தனிமையில் இருப்பாள். அதிகமான நேரங்களை கணினியின் முன் செலவிடுவாள். அடிக்கடி தனது அறைக்குளிருந்து அழுதபடி வெளியே வருவாள். அடிக்கடி பாடசாலைக்கு லீவு போடுவாள். முற்றுமுழுதாக மதி தனது வழமையான முகத்தை தொலைத்திருந்தாள். ஒரு நாள் சத்தம் கொஞ்சம் அதிகமாக வெளியே கேட்டதனால் அவள் அறையின் மூடிய கதவில் காதைவைத்து கேட்டதில் அவள் மதிக்கும் மாப்பிளைக்கும் இடையில் ஏதோ பெரிய முரண்பாடும் சண்டையும் போய்க்கொண்டிருப்பதாக மதியின் அண்ணன் புரிந்துகொண்டான்.

'மதி உன்கூட கொஞ்சம் பேசணும்..! பாடசாலை முடிந்து வீடு வந்த மதியை வாசலில் இடைமறித்தான் அவள் அண்ணன். 'என்ன பேசணும்?' முறைத்தாள் மதி. இந்த முறைத்தலில் 'எண்ட வாழ்க்கைய நாசமாக்கிட்டியே!' என்பது தொக்கி நின்றது. 'இல்ல, கொஞ்சம் வாறியா பேசணும்?'. மீண்டும் முறைத்து விறுக்கென வீட்டினுள் நடந்தாள் மதி. அவள் விறுக்கென போனதில் ஒன்றை மட்டும் அவனால் அவதானிக்க முடிந்தது. 'இரண்டு கண்களும் சட்டென நனையத்தொடங்கியிருந்தது'.

இதற்கு என்ன அர்த்தம்? தங்கச்சியின் வாழ்க்கையை ஏதும் அவசரப்பட்டு சீரழித்து விட்டேனா? எங்கள் சந்தோசங்களுக்காகவும் கெளரவத்திற்காகவும் அவளின் சந்தோசத்தை தொலைத்துவிட்டோமா? புலம்பியபடி இருந்தவனை அருகில் வந்த மதி தட்டினாள். 'என்ன ஏதோ பேசணும் எண்டனீ சொல்லு?'.

அழுதாள். அழுதாள். அழுதாள். பேச்சு வரவில்லை. மதியின் அண்ணனும் அழ ஆரம்பித்தான்.

'இப்பொழுதெல்லாம் அவர் என்கூட பேசுறது இல்ல.  பகல்ல மட்டும்தான் கால்
எடுக்கணும் எண்டு சொல்லியிருக்கார். இரவில கால் பண்ணினா ஒரு பொண்ணு பேசுது. அது செந்தூரன் தண்ட கணவன் எண்டும், அவர்கூட ஒண்டரை வருசமா  ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கிறதாவும் ஏதோ ஏதோ எல்லாம் சொல்லுறா....' கொஞ்சம் நிறுத்தி ஓவென அழுதாள் மதி.

விடயம் தெரியவரவே மதியின் அண்ணன் தன் நண்பன் மூலமாக இதுபற்றி தேடல் நடத்த ஆரம்பித்தான். இறுதியாக அதிஷ்டவசமாக செந்தூரன் கூட வெளிநாட்டில் பணிபுரியும் நண்பன் ஒருவனுடைய தொடர்பு கிடைத்தது. அவன் உண்மையை  மதியின் அண்ணனினிற்கு பின்வருமாறு உறுதிப்படுத்தினான்

'செந்தூரனிற்கு முறைப்படி திருமணம் ஆகாட்டிலும் இங்க ஒரு பொண்ணு கூட லிவிங் டூகெதர். இது இப்ப ரெண்டு வருசமா நடக்குது. ரெண்டுபேரும் ஒரே வீட்டில்தான் இருக்காங்க. இருவரும் சீக்கிரம் முறைப்படி கலியாணம் செய்துகொள்வதாய் சொன்னாங்க. அந்த பொண்ணுக்கு கார்ட் இல்ல. இவன கலியாணம் செய்தா சான்ஸ் இருக்கு. அதுதான் அந்த பொண்ணு இவன விட்டு போறதா இல்ல. அதோட அந்த வீட்டில அந்த பொண்ணுக்கும் உரிமை இருக்கு... நீங்க எதுக்குங்க அதுக்குள்ள போய் விழுந்தீங்க?'

மறுநாள் இதை எப்படி மதிக்கு சொல்வது என சிந்தித்தபடி பொழுது நன்றாக புலரும் முன்னமே வீட்டிலிருந்து புறப்பட்டான் மதியின் அண்ணன். அவன் தன்னிடமே அடிக்கடி கேட்டுக்கொண்டான். 'அப்ப இனி எண்ட தங்கச்சியிண்ட வாழ்க்கை?' கண்கள் கலங்கியபடி வழியிலிருந்த அந்த குளக்கட்டில் ஏறி அமர்ந்துகொண்டான்.

எதிரில் ஓடிவந்த ஒரு சிறுவன் அவசர அவசரமாக சொன்னான். 'மாமா, உங்கள உடனே வரட்டாம். மதி அக்கா மருந்த குடிச்சிட்டாங்களாம்... ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோறாங்க!'
அடுத்த வாரமும் வருவேன்...Monday, June 2, 2014

ராஜாவின் தென்றல் - ஒரு இசைப்பாிசு

இலங்கையிலிருந்து வெளிவருகின்ற கலை, இலக்கியப் படைப்புக்களில் எனக்கு ஆரம்பம் தொடங்கியே ஒரு அதீத ஈடுபாடு இருக்கிறது. இதற்கான காரணம் என்று தேடிப்பாா்த்தால் “எமக்கான, எமது கலை, இலக்கியம்” என்கின்ற ஒரு பெருமையின் தேடலாக இருக்கலாம். அதிலும் எமது இலக்கியம், இசை, சினிமா இப்பொழுது தலையை நிமிா்த்தி கணிசமான ஆா்முடுகலில் வளா்ந்துகொண்டிருக்கிறோம் என்று சொல்லும் அளவிற்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியானதும் பெருமைகொள்ளக்கூடியதுமான மாற்றம் இது.

டிரோன் பொ்னான்டோ, இலங்கை இசைவரலாற்றில் அனைவாிற்கும் நன்கு பாிச்சயமான பெயா். வீணாக அவா் பற்றி அறிமுகம் எழுதி நேரத்தை விரையம் செய்ய வேண்டாம். இருந்தும் சுருக்கமாக சில வாிகள். இல்லையெனில் எனக்கு திருப்தியிருக்காது. டிரோனை நீங்கள் எப்படி பாா்க்கிறீா்கள் என்பதை நான் அறியேன். ஆனால் டிரோன் என்கின்ற இசையமைப்பாளரை இப்படித்தான் தொியும் எனக்கு. “இசைபற்றிய ஆழமான அறிவு, அனுபவம், புலமை கொண்ட ஆனால் அலட்டிக்கொள்ளாத அமைதியான ஒரு ஜீவன். மட்டுமல்ல, இசையோடு வாழ்பவா், தரமான படைப்புக்களுக்கு சொந்தக்காரா், விருது பற்றி யோசிக்காமல், தரம், இசையின் மகத்துவத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு கீபோட்டிற்கு அருகில் போபவா்”.


இவரது மிகப்பொிய ரசிகன் நான். அவரது கிறீஸ்தவப்பாடல்கள்தான் எனக்கு முதல் அறிமுகம். பின்னா் இவரைப்பற்றி தேடியதில் இவரது அதிகமான இசைப்படைப்புக்களை இரசித்திருக்கிறேன். இசையமைப்பாளா் என்பதைவிட “அடக்கமான, ஆா்பாிப்பற்ற ஒரு நல்ல மனிதராகத்தான்” எனக்கு நன்கு தொியும்.

அண்மையில் டிரோன், ஸ்ரீவத்சலா கூட்டணியில் உருவாகியிருக்கும் “ராஜாவின் தென்றல்” என்கின்ற மூன்று பாடல்களின் கோா்வை (medley) வெளியாகியிருந்தது. எனது டிரோன் பற்றிய நம்பிக்கையையும், சக்தி சுப்பா் ஸ்டாா் ஸ்ரீவக்சலா மீதான எதிா்பாா்ப்பையும் நிறைவாக பூா்த்திசெய்திருந்தது. இதன் இன்னுமொரு மிகப்பொிய பலம் அருள்செல்வத்தின் ஒளிப்பதிவு எனலாம். சகல காட்சிகளும் பாடலின் சாதுவான மெடலிக்கு முரண்படாமல் அழகாக பாடலோடு ஒன்றி விாிந்து அழகாய் நகா்கிறது. இவ்வாறான மெட்லிகளுக்கு ஆளுமையான ஒளிப்பதிவு மிகவும் அவசியம். அருள்செல்வம் அதை அழகாக செய்து முடித்திருக்கிறாா். அடுத்து ஸ்ரீவக்சலாவின் குரல். மிக முக்கியமாக இளையராஜாவின் பாடல்களில் தனது குரலிற்கு மிகவும் சாியாக செட் ஆகக்கூடிய, அழகான, ஒரே வகையான பாடல்களை தொிவுசெய்திருக்கிறாா். இது வெற்றிக்கான மிகப்பொிய முதல் காரணி. 


இளையராஜாவின் பிறந்த நாளிற்கு இதைவிட வேறு என்ன பொிய பாிசு கொடுக்கமுடியும் எனத் தொியவில்லை. இசைஞானியை நிச்சயம் பெருமைகொள்ள வைக்கும் படைப்பு. ஆடம்பரம் இல்லாத காட்சி அமைப்பு, பாடல் ஒலிப்பதிவின் தரம் என வெற்றிக்கான காரணிகள் பல. டிரோன் போல இவருடன் சோ்ந்திருக்கும் தொழில்நுட்ப கலைஞா்களும் அதிகம் ஆா்ப்பாிப்பு இல்லாத கூட்டம் என்பதை இப்பாடல் வெளியாகி இன்றுவரை மிகத்தெளிவாக காண முடிகிறது. பீ.ஏச்.அப்துல் ஹமீதின் பாராட்டுக்களை சம்பாதித்த இந்த படைப்பு அடக்கமாக பலரது உள்ளங்களை நிறைத்திருக்கிறது. 

டிரோன் அண்ணா, ஸ்ரீவக்சலா, அருள்செல்வம், கண்ணன் அனைவாிற்கும் எனது அன்பான பாராட்டுக்கள். தரம் + சிம்பிள் + கடின உழைப்பு + அலப்பரை அடிக்காத அடக்கம் எப்பொழுதும் வெற்றியான படைப்புக்களையே கொடுக்கும். இதற்கு நீங்கள் சாட்சிகள். வாழ்த்துக்கள்.Sunday, June 1, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 10


பயணங்கள் மட்டுமல்ல பல திருமணங்களும் ஈழத்தை விட்டு அவ்வப்போது புலம்பெயர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நான் இந்த புலம்பெயர்தல் பற்றிய நாட்குறிப்புக்களின் முன்னுரையில் சொன்னதுபோல ஈழத்து தமிழர்கள் புலம்பெயர்வதற்கான பல காரணங்களில் திருமணமும் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் தங்கள் மாப்பிள்ளையை தேடி வெளிநாடுகளுக்கு சென்று குடியேறும் பெண்களின் எண்ணிக்கை சிறிதளவில் அதிகரித்துக்கொண்டிருப்பதாக சொல்லுகிறார்கள். யுத்த காலங்களில் ஈழத்தை விட்டு வெளியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் ஆண்களாகவே இருந்தார்கள். பாதுகாப்பு, தொழில், கஷ்டம் போன்றவற்றின் துரத்தலினால் வெளிநாடுகளை நோக்கிப் பயணித்தார்கள். ஆக, இவர்களில் அதிகமான இளம் ஆண்கள் திருமணம் என்று வருகின்ற பொழுது ஈழத்து தமிழ் பெண்களியே மணந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் விளைவுதான் அதிகளவான இளம் பெண்களின் வெளிநாட்டு பரம்பல். இந்த வெளிநாட்டு மாப்பிள்ளைகள் இரண்டு வார விடுமுறையில் இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ அல்லது மலேசியாவிற்கோ வந்து தடேல் புடேல் என திருமணத்தை முடித்துவிட்டு மீண்டும் தாங்கள் வசிக்கும் நாடுகளிற்கு சென்றுவிடுவது ஒரு ட்ரென்ட் ஆகவே இருந்து வருகிறது. ஆசைக்கு ஒரு திருமணம். அவ்வளவுதான். இலங்கை திரும்பி வரும் அந்த மணப்பெண்கள் வருடக்கணக்காக தொலைபேசியிலும், ஸ்கைப்பிலும், முகப்புத்தகத்திலும் மட்டுமே கணவனுடன் குடும்பம் நடத்த வேண்டியிருக்கும். 

இதில் இரண்டு வகையான பெண்கள் இருக்கிறார்கள். ஒன்று தங்கள் வீட்டாட்களினால் பேசப்பட்டு நிற்சயிக்கப்பட்ட வெளிநாட்டு மாப்பிள்ளையை மணந்து கொள்பவர்கள். இதில் காதலித்து திருமணம் முடிப்பவர்களும் அடங்கும். இரண்டாவது வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும் என அடம்பிடித்து அவர்களை மணந்து கொள்பவர்கள். புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் பெண்களை மணந்துகொண்டு அங்கு போய் செட்டில் ஆகும் ஆண்கள் ஒப்பீட்டளவில் குறைவு என்பதால் இவர்களைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை என்பதை மனதில் கொள்க.

யாழ்ப்பாணத்திற்கு சென்றால் ஒருமுறையாவது றியோ ஐஸ் கிரீம் குடிக்காவிடில் அந்த யாழ் பயணம் முழுமை அடைவதில்லை. நான் ஐஸ் க்ரீமின் மிகப்பெரிய விசிறி இல்லாவிடினும் அங்கு போகும்பொழுது ரியோவை என்னால் தவிர்க்க முடியாது. ஒவ்வொருமுறை ரியோவிற்குள் சென்றுவரும் போதும் வெளிநாட்டிலிருந்து வந்த பல நம்மவர்களை அங்கே காணக்கிடைக்கும். அங்கே இருக்கும் ஐம்பது பேர்களில் இவர்கள் தெளிவாகவும் வித்தியாசமாகவும் தெரிவார்கள். தலையில் கண்ணாடி, கழுத்திலும் கையிலும் மொத்தமான சங்கிலி (அப்பொழுதுதான் ஊர்சனம் மதிக்கும்), அவர்களுக்கு செளகரியமான மெல்லிய சின்னதான ஆடைகள், வாயில் ஆங்கிலம், கையில் ஐ போன், காலில் சப்பாத்து என அவர்களை அடையாளம் கண்டுகொள்வது அவ்வளவு கடினமானதல்ல. ஒற்றை மேசையில் நானும் நண்பனும். பக்கத்து மேசையில் இரண்டு பெண்கள். முதல் கரண்டி ஐஸ் கிரீம் வாய்க்குள் போய் சேர்வதற்குள் அருகிலிருந்த மேசையில் அமர்ந்திருந்த ஒரு பெண் திடிரென எழுந்துவந்து எனது நண்பனுடன் உரையாட ஆரம்பித்தாள். அவள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருந்தபடியால் கொஞ்ச நேரம் எனது கண்கள் ஐஸ் கிரீமை நாடவில்லை. கண்களுக்கு ஐஸ் கிரீம் கொடுக்கும் குளிர்மையை விட அந்த பெண் அதிகமாகவே அள்ளி வீசிக்கொண்டிருந்தாள். என் கண்கள் மும்முரமாய் இருந்தபடியால் செவிகள் அவர்கள் இருவரினதும் பேச்சிற்கு அருகில்கூட செல்லவில்லை. (நண்பன் மேல் பயங்கர கடுப்பாய் இருந்தது, அருகில் இருக்கும் என்னை கொஞ்சம் அந்த பெண்ணிற்கு அறிமுகப்படுத்தி வைத்தால் குறைந்தா போய்விடுவான்?) 

இருபது நிமிடம் கரைந்தது. வந்தவள் மறைந்தாள். இவ்வளவு நேரமாய் என்னை கண்டுகொள்ளாத என் நண்பனுக்கு இப்பொழுது வேறு வழி இல்லை. அருகில் நான் மட்டுமே! அடுத்தது என்ன வழமைபோலவே அந்த பெண்ணைப்பற்றி பேச ஆரம்பித்தோம். 'யார்டா இது... ப்பா!' என வாயைப் பிளந்தேன். 'கலியாணம் ஆச்சு மச்சி அந்த பொண்ணுக்கு!' என் வாயை மிக சாதூர்யமாக அடைத்தான் நண்பன். பிளந்த வாயை மெதுவாக மூடினேன். அவன் அவள் பற்றிய ஒரு நீண்ட கதையைச் சொல்ல தயாரானான்.

'எனது பள்ளித்தோழி மச்சான் இவள். எங்க கிளாசிலையே இவள்தான் செம அழகு. ஜப்னா யுனிவெர்சிட்டி. வீட்டாக்கள் பாரின் மாப்பிள்ளையா புடிச்சு இவள கட்டிவச்சாங்க போன வருஷம். மாப்பிள்ள லண்டன்ல'.

'ஓ அப்பிடியா.. அப்ப எதுக்குடா இன்னும் இங்கயே சுத்திக்கிட்டு திரியுது..? பட்டதை அப்படியே கேட்டேன். மயூரன் சொன்னான். 'அங்கதான் இருக்கு மச்சான் பிரச்சன... பாவம் ஷாலினி.. அந்த பையன் இலங்கைக்கு வர ஏலாது! இந்த பொண்ணுக்கும் லண்டன் போறதுக்கு இன்னும் எதுவும் சரிவரல, கலியாணம் கூட இந்தியாவிலதான் நடந்தது..!'

'வை அவரால இங்க வரமுடியாது???'

'இத நான் விளங்கப்படுத்தணுமா? தெரியாதா உனக்கு!'

'அட ஆமால்ல!' என தலையை ஆட்டினேன்.

'ஆமாடா, பாவம் இந்த பொண்ணு...!' அந்த பெண்ணிற்காய் உருக ஆரம்பித்தேன்.

எதற்காக இந்த திருமணம்? வாழ்வதற்க்கா அல்லது பணம், அந்தஸ்து, கெளரவம் போன்ற வீண் எதிர்பார்ப்புக்களுக்கா? இங்கு யாரை குற்றம் சொல்வது? மருமகன் இங்கு வரமுடியாது, மகளும் அங்கு போவது சிரமமானது என தெரிந்தும் திருமணம் முடித்து வைத்த பெற்றோர்களையா? அல்லது உள்நாட்டு போரையா அல்லது தமிழர்களின் தலைவிதியையா? இப்படி இன்னும் எத்தனை பெண்கள், ஆண்கள் ஈழத்தில் தங்கள் அழகிய குடும்ப வாழ்கையை தொலைத்துவிட்டு திரிகிறார்கள்? திருமணம் ஆகி ஒரே வாரத்திற்குள் கணவனோடு புலம்பெயர்ந்த அதிஷ்டக்கார பெண்களும் இல்லாமலில்லை. ஐஸ் கிரீம் முடிந்ததே தெரியாமல் நக்கிக்கொண்டிருந்த என்னை 'விளக்கெண்ண வா போவம்..!' என நண்பன் தட்டியபோதுதான் இந்த சிந்தனையிலிருந்து மீண்டேன்.

அதே போல, இங்கு வந்து திருமணம் முடித்துவிட்டு மனைவிக்காய் ஏங்கிக்கொண்டிருக்கும் நம் புலம்பெயர் நண்பர்களையும் நினைத்துப்பார்த்தேன். திருமணம் என்பது கூடிவாழ்தல் என்னும் உயரிய வாழ்வியல் இலக்கைக்கொண்டது. இந்த புலம் பெயர்வுகள் எத்தனை கணவன் - மனைவியை, அம்மா - பிள்ளையை, அக்கா - தம்பியை பிரித்துப் போட்டிருக்கிறது. ஒருவகையில் வாழ்க்கைதேடி ஓடி புலம் பெயர் தேசங்களில் தஞ்சமடைந்தாலும் பலரது வாழ்க்கைத் தேடல் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எம்மை சிதைத்துப்போட்ட அந்த கருகிய காலங்களின் நாட்குறிப்பில் இப்படி எத்தனை உறவுகள் தொலைக்கப்பட்டிருக்கின்றன. மழை நின்றும் தூவானம் அடிப்பதுபோல போர் முடிவடைந்தாலும் அதனால் குதறி வீசப்பட்ட வடுக்கள் இன்னும் ஏதோ ஒரு வகையில் நம்மை துரத்திக்கொண்டுதான் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற ஒரு திருமண வைபவத்திற்கு போய் இருந்தேன். அது எனது நண்பன் ஒருவனுடைய திருமணம். மணப்பெண்ணும் நண்பிதான். முகப்புத்தகத்தில் அறிமுகமாகிய இந்த காதல் இப்பொழுது கொழும்பில் மஞ்சம் வரை வந்து நிற்கிறது. நம்ம மாப்பிள்ளையும் வெளிநாட்டிலிருந்துதான் வந்திருந்தார். பிரான்ஸ் இல்  ஒரு ஆடோமொபையில் கம்பனியில் மெக்கானிக்காக வேலை பார்க்கிறார். நல்ல வாட்ட சாட்டமான பையன். நம்ம நண்பன் மேல இந்த பொண்ணு காதலில் குதிக்க இவ்வளவு போதாதா? நான் திருமண மண்டபத்திற்குள் நுழைந்தபோது மேடையிலிருந்த ஐயர் அப்பாடா என பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார். பிறகென்ன, நேரடியாகவே சாப்பாடு பரிமாறப்படும் இடத்திற்கு விரைந்தேன். அவ்வளவு பசி.

பிரமாதமான சாப்பாடு. வெளிநாட்டு கலியாணம் இல்லையா? மேடையேறி இருவரையும் வாழ்த்திவிட்டு கீழே இறங்கி அங்கிளைத் தேடிக்கொண்டிருந்தேன். வெளியில் போன் கதைத்துக்கொண்டு நிற்பதாக ஆண்டி சொன்னதும் வெளியில் போனேன்.

'வணக்கம் அங்கிள்..!

'வணக்கம் வணக்கம் அமல்.. வந்தத காணவே இல்ல..!

'இல்ல அங்கிள் அப்பவே வந்துட்டன்.. சரி கிளம்பலாம்னு..!

'என்ன அவசரம்? அதுசரி நீர் எப்ப எங்களுக்கு சாப்பாடு போடுறது?'

'பொறுங்க அங்கிள், நானும் லண்டன் போய், உழச்சு, FB ல ஒரு அழகான பொண்ணா லவ் பண்ணி... அப்புறம்.. வேறென்ன சாப்பாடுதான்!'

நான் சொல்லவந்ததை சீக்கிரமாய் புரிந்துகொண்டாரோ என்னவோ அடி வயிற்றில் செல்லமாக குத்தி 'உண்ட வாய்க்கு....' என அங்கிள் இழுத்துக்கொண்டிருக்கும் போதே '..... இப்போதைக்கு இப்பிடி எதுவுமே நடக்காது!' என வசனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். வழமைபோல, அருகில் நின்றவர்கள் அனைவரும் திரும்பி பார்க்கும்வரை சத்தமாய் சிரித்துக்கொண்டிருந்தார்.

'சரி அங்கிள், லண்டன் தம்பதிகள் எப்ப பயணம்?' என்றேன்.

'அத ஏன் அமல் கேக்குறே, இவனுக்கு அங்க காட் கிடைக்கும் என்றமாரி இருந்திச்சு அப்புறம் பார்த்தா போன கிழமைதான் தெரியும் அதையும் ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. அப்புறம் என்ன மாப்பிள்ள சீக்கிரமே இங்க வந்து ஒரு பொட்டிக்கட போட்டு புளச்சுக்க வேண்டியதுதான்!. '

'என்ன அங்கிள் சொல்லுறீங்க? அப்ப வெளிநாட்டு மாப்பிள்ள என்ற ஒரே ஒரு காரணத்துக்காகத்தானே பொண்ணு வீட்டாக்கள் இந்த கலியாணத்துக்கு ஒத்துக்கிட்டதா அன்னைக்கு சொன்னீங்க!'

'ஆமா!'

'அப்ப இந்த விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சா... ?' என இம்முறை நான் இழுக்க, அங்கிள் முடித்து வைத்தார்.


'.... கோவிந்தாதான்!'

அடுத்த வாரமும் வருவேன்.
நன்றி தமிழ்த்தந்தி - 01.06.2014Popular Posts