Monday, May 26, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்பு​க்கள் - 09

காலா காலமாக தமிழர்களை கிறங்க வைத்து, ஆசை காட்டி, பின்னர் எங்கள் உயிரையே குடித்துப்போகும் ஏமாற்றல் சமாச்சாரங்கள் ஏராளம். தாயகத்தில் இவை காலத்துக்கு காலம் ஒவ்வொன்றாக அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. இந்த வரிசையில் கடந்த ஒரு வருடகாலமாக ஈழத் தமிழர்களை பிடித்திருக்கும் பேய்தான் இந்த அவுஸ்ரேலிய கனவு. இப்பொழுது இந்தக்கதைகள், சம்பவங்கள் ஒப்பீட்டளவில் குறைந்திருந்தாலும் முற்றுமுழுதாக இல்லை என சொல்லிவிட முடியாது.

இற்றைக்கு கிட்டத்தட்ட சில வருடங்களுக்கு முன்னர் அதாவது 2010-2012 காலப்பகுதியில் பத்திரிக்கை, வானொலி, இணையத்தளம், முகப்புத்தகம் என எங்கு பார்த்தாலும் மலிந்துபோய்க் கிடந்த செய்திகள் சட்டவிரோதமான, கடல் வழி அவுஸ்ரேலிய பயணம். “இந்த பயணத்தில் அவர்கள் படகு உடைந்தது. நீர், உணவு மற்றும் எரிபொருள் தீர்ந்துவிட்டது. மூன்று பேர் இறந்தனர்“. என ஒருநாள் அவுஸ்த்ரேலிய ஊடகமான 'The Daily Telegraph' இன் செய்தியை பாா்த்தபொழுது கண்கள் கலங்குவதற்கு முன்னர் கோவமே முந்திக்கொண்டு வந்தது. பெரும் ஆபத்து எனத்தெரிந்தும் உயிரை துச்சமென மதித்து போராடும் இனம் நம் இனம் என்பதற்காக வீண் ஆசைகளுக்கு உயிரை பணயம் வைக்கும் துணிச்சல் தேவையற்றது. முட்டாள்தனமானதும் கூட. இந்த அவுஸ்ரேலிய பயணத்தில் மிகவும் பாரதூரமான இரண்டு ஆபத்துக்கள் இருப்பதை பலர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஒன்று கடற்படையினரிடம் வீணாக மாட்டிக்கொள்வது. இரண்டாவது, பயணம் செய்யும் படகு ஏதோவொரு காரணத்தினால் கடலில் மூழ்குவதால் அல்லது பிற காரணங்களினால் ஏற்படும் உயிராபத்து. சட்டத்திற்கு முரணான இந்தப் பயணம் இவை இரண்டு பேராபத்துக்களையும் தாண்டியே இறுதியில் நிறைவெய்த வேண்டும்.

22.10.2010. வெள்ளவத்தையில் இருக்கும் எனது நண்பன் ஒருவனை சந்திப்பதற்காக அவன் வீட்டிற்கு சென்றிருந்தேன். வழமைபோல முன் மண்டபத்தில் அவன் தந்தை சீரியஸாக பத்திரிக்கை படித்துக்கொண்டிருந்தார். 'ஹாய் அங்கிள்..' என திறந்த வீட்டில் நாய் நுழைவதைபோல் சட்டென உள்ளே சென்றேன். 'வாங்க அமல்..' என அவரது வாய் அசைந்தாலும் கண்கள் என்பக்கம் வருவதாய் இல்லை. 'இருங்க அமல்..' நான் அமர்ந்து ஒரு நிமிடத்தின் பின்னரே இந்த அழைப்பு. 'சீ...!' கண்ணாடியை கழற்றிக்கொண்டு அவர் கையிலிருந்த பத்திரிகையை எனது கையில் கொடுத்து 'இத பாரும்!' என விரக்தியோடு கூறியபடி எழுந்து வீட்டினுள்ளே போனார். அந்த 'சீ..' என்ன என்பதை பார்த்துவிடவேண்டும் என கண்களை பத்திரிக்கை நோக்கி ஓரம் கட்டினேன்.

'படகின் ஜிபிஎஸ் தொகுதி பழுதடைந்து, எரிபொருள் தீர்ந்து, இயந்திரமும் பழுதடைந்தபோது தாம் கிறிஸ்மஸ் தீவை நெருங்கியிருந்ததாக அந்த குழுவின் அனைத்து தமிழ் மக்களும் நம்பினர். பின்னர் உணவு தீர்ந்துவிட்ட நிலையில் தாம் பிடித்த மீனை உணவாகவும் படகில் விழும் மழை நீரை குடிப்பதற்கும் பயன்படுத்தி பயகரமான 30 நாட்கள் கடலில் இலக்கின்றி மிதந்து தத்தளித்துக்கொண்டிருந்தனர். தமது படகிலிருந்து அருகிலிருந்த மீன்பிடிப்படகை உதவிக்கு அழைப்பதற்காய் நீந்திச்செல்ல முற்பட்ட வேளையில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். படகு தரையைத்தட்டிய போது பாறையுடன் மோதுண்டு இன்னுமொரு யுவதி உயிரிழந்தார். 2 வயது முதல் 14 வயது வரையான சிறுவர்கள் அடங்கிய இக்குழுவானது இந்தோனேசிய கடல் காவல்துறையினரால் காப்பாற்றப்பட்டது.' இதுதான் அந்த செய்தி!

19.08 2011. விடுமுறை காரணமாக ஊரிற்கு சென்றிருந்தவேளை எனது நண்பன் ஒருவன் இதே வகையில் அவுஸ்ரேலியா நோக்கி பயணமானார் என்கின்ற செய்தி கேட்டு அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன். இந்த நண்பன் ஊரிலேயே ஒரு சமூக மரியாதைமிக்க, நிரந்தரமான தொழில் முயற்சி ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர். இவரது சில நண்பர்களின் ஊக்கப்படுத்தலால் (உசுப்பேத்தல் என்போமே அதுதான்..)அவர்களோடு தானும் அவுஸ்ரேலியா செல்லவேண்டும் என ஆசைப்பட்டு தனது தொழிலையும் கைவிட்டு கடந்த மாதம் 9ம் திகதி நீர்கொழும்பிலிருந்து ஒரு படகு மூலம் அவுஸ்த்ரேலிய நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

இவர் பயணத்தை ஆரம்பித்த திகதி முதல் இன்றுவரை இவரைப் பற்றிய எந்தவித தகவலும் தங்களை வந்து அடையவில்லை என வீடே இறந்தவீடு போல காட்சியளிக்கிறது இவர் வீட்டில். அவர்கள் வீட்டினுள் நுழைந்த பொழுது இந்த நண்பனின் தாய் அழுகையுடன் சாப்பாடு இல்லாததனால் ஏற்பட்ட சோர்வினால் அரை மயக்கத்துடன்  தரையில் சாய்ந்தபடி இருந்தார். தந்தை ஒரு மூலையில் மகன் மீதான உயிர்பயத்துடன் செபமாலையும் கையுமாக இருந்தார். தங்கைகள் 'அவன் செத்தா சாகட்டும் நீங்க செத்து தொலஞ்சிடாதேங்க“ என்கின்ற சாடையில் அம்மாவை தேநீர் அருந்தும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தார்கள். இவ்வாறானதொரு பயணம் தேவைதானா என அவன் மேல் கட்டுக்கடங்காத ஆத்திரம் எனக்கு. சிலரின் வெளிநாட்டு ஆசைகள் அதிலே இருக்கும் ஆபத்துக்களை மறைத்துவிடுகிறது. இவற்றைத் தாண்டியும் மகனிடமிருந்து வரப்போகும் "வந்து இறங்கிட்டேன் அம்மா.." என்கின்ற வார்த்தையை கேட்பதற்கு இந்த அப்பாவும் அம்மாவும் உயிரோடு இருப்பார்களா என்பதுதான் எனது சந்தேகம். இதற்கு இன்னும் எத்தனை நாட்கள் எடுக்குமோ என்கின்ற பயம் அவனுடைய தாயின் கண்களில் இருந்து வடிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு சொட்டிலும் மின்னிக்கொண்டிருந்தது.

அதற்குள் ஒருமுறை இவ்வாறானதொரு பயணத்தில் அப்படகில் இருக்கும் மற்றவர்களை தொற்றிலிருந்து காப்பாற்றுவதற்காக அம்மை நோய் ஏற்பட்ட ஒரு நபரை,  படகோட்டியும் மற்றவர்களும் சேர்ந்து கடலில் தூக்கிப் போட்டுவிட்டு பயணித்ததாகவும் சிலர் பேசியிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் கேட்கும் பொழுது இந்த தாயிற்கு எப்படி உயிர் மிஞ்சும்? அதற்குள் "இப்ப ஏன் அழுவுறாய், அவன் போய் உழைச்சு காசு அனுப்பேக்க சிரிக்கத்தானே போறாய்..." என ஆறுதல் சொல்வதாய் உசுபேத்தும் ஒரு மாமி நண்பனின் தாயின் அருகில் நின்றுகொண்டிருந்தார். (இவிங்கள முதல் கடலுக்குள்ள வீசணும்யா..). 'சின்ன வயசில இருந்தே அவன்ட எல்லா ஆசைகளுக்கும் ஆமா போட்டு ஆடினதால வந்த வினை..' எனது தோளில் சாய்ந்தபடி அழுதார் அப்பா! தலை வரை ஏறி சிரித்தது அவன் மீதான எனது கோவம். ஒரே மகன் வேறு!

பொதுவாக இது நீண்ட நாட்கள் எடுக்கும் பயணம் என்பதால் கொண்டுசெல்லும் உணவு, நீர், மருத்துவப் பொருட்கள் அனைத்தும் குறித்த பயணம் முடிவடையும் வரை போதுமானதாக இருத்தல் வேண்டும். இவை பற்றாக்குறை ஏற்படும் பட்சத்திலும் மரணத்திற்கான வாயில் அருகில் வந்துவிடும். இவற்றையும் தாண்டி இந்த பயணம் நிறைவு பெற வேண்டும்.

எது என்னவோ, அது இலங்கையாக இருந்தாலும் சரி அவுஸ்ரேலியாவாக இருந்தாலும் சரி உயிர் இல்லாவிடில் என்ன பயன்? இந்த மோகம் இன்னும் எத்தனை எத்தனை உயிர்களிற்கும் வீட்டாட்களின் சந்தோசத்திற்கும் ஆப்பு வைக்கப் போகிறது? இதிலே குறிப்பிட வேண்டிய விடயம் என்னவெனில் உண்மையாக புகலிடம் தேடி (பாதுகாப்பு, குடும்ப வறுமை மற்றும் பல) இந்த பயணத்தை தேடுபவர்கள் சொற்பம் பேரே. வெளிநாட்டு மோகத்துடன், அவுஸ்ரேலிய கனவுடன் பயணிக்கும் இளைஞர்களே ஏராளம் என்கின்றனர் ஒரு தரப்பினர். வெளிநாட்டுக் கனவு தவறில்லை. அதை அடைவதற்கு சரியான வழியை பயன்படுத்த வேண்டும் என்பதே அவுஸ்ரேலிய அரசாங்கத்தினதும், எமது எதிர்பார்ப்பும் கூட. முள்ளி வாய்க்காலில் காப்பாற்றிய உயிரை எதற்கு இந்துசமுத்திரத்தில் கொண்டுபோய் கொட்டணும்?.. சொல்லுங்க.

அடுத்த வாரமும் வருவேன்.....


நன்றி தமிழ்த்தந்தி.25.05.2014
No comments:

Popular Posts