Saturday, May 24, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 08

நன்றாக ஞாபகம் இருக்கிறது. அது ஜனவரி மாதம் 2011 ஆம் ஆண்டு. காலை விடிந்தும் சூரியனைப்பார்க்க நீண்டு காத்திருக்க வேண்டிய காலம். பனிக்கொட்டலில் நனைந்த படி இரு கைகளையும் குளிருடையின் இரு பைக்களுக்குள்ளும் சொருகியபடி தங்கியிருந்த எனது விடுதியிலிருந்து அலுவலகம் செல்ல தயாராகிக்கொண்டிருந்தேன். குளிர் மூன்று நான்கு உடை மேற்பரப்புக்கள் தாண்டியும் எனது தோலின் மேற்பரப்பை பரபரப்பாய் தடவிக்கொண்டிருந்தது. காதுகளுக்குள் அத்துமீறி நுழையும் குளிர் வாயினூடாக வெண் புகையாய் மூச்சுக்காற்றில் கலந்து வெளியே போனது. குளிர்கால சுவிஸ் தேசம் அதுவும் ஜெனிவா பற்றி இன்னும் விளங்கப்படுத்தல் தேவையில்லைதான். அன்று கோனார்வின் என்னும் இரயில் நிலையத்தில் 15 ஆம் இலக்க மெட்ரோவிற்காய் காத்துக்கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன். குளிர் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் குடித்துக்கொண்டிருந்தது. பற்தாடைகள் மெதுமெதுவாய் உரசிக்கொண்டிருந்தன. இந்த வருடம் வழமைக்கு மாறான பனிக்கொட்டல் இங்கு என இரண்டு நாட்களுக்கு முன்னம் சுவிஸ் நண்பி ஒருவர் நடுங்கிய படி கூறியிருந்தார் என்றால் எனது நிலையை கொஞ்சம் யூகித்துப்பாருங்கள். அழுதுவிட வேண்டாம்.

காத்துக்கொண்டிருந்த மெட்ரோ வருவதற்கு முன்னதாக ஒருவர் அருகில் வந்தார். 'என்னை ஞாகம் இருக்கா அண்ணே?' என உதட்டோரம் சிரித்தபடி கேட்டார். அவரும் குளிரின் வில்லங்கத்தால் பூராகவும் மூடிக்கட்டியிருந்ததால் என்னால் சரியாக யாரென சுதாகரித்துக்கொள்ள முடியாமல் போனது. எனது நிலை புரிந்து அவர் தலைக்கவசத்தையும் வாயையும் காதையும் சேர்த்து மூடியிருந்த கழுத்து சால்வையை அகற்றிய போது 'அடேய் நீயா??? எப்பிடிடா இருக்காய்???' என ஆச்சரியத்தில் கட்டிப்பிடித்துக்கொண்டேன். அவனது பெயர் சுமன் என வைத்துக்கொள்வோம். இலங்கையில் வடக்கை சேர்ந்த எனது நண்பன் ஒருவனின் தம்பி எனக்கு முன் நிற்கும் இந்த தம்பி! 'இருக்கிறேன் அண்ணன் நீங்கள் எப்ப வந்தீங்க?' என அவன் ஆரம்பிக்க நான் தொடர ஐந்து நிமிடங்களில் மெட்ரோ வந்து எங்களுக்கு முன்னால் சிரித்துக்கொண்டு நின்றது. இந்த மெட்ரோவை விட்டால் அலுவலகம் போகும் நேரம் தாமதமாகும். அதேவேளை சுமனிடமும் சரியாக பேசாமல் அவனை விலக முடியவில்லை. மெட்ரோவின் கதவை திறந்த படியே 'சுமன் ஈவின்ங் லேக்கிற்கு அந்தப்பக்கம் இருக்கும் அந்த பாக்கிற்கு வந்திடு' என கூறியபடி அவன் தொலைபேசி இலக்கங்களை குறித்துக்கொண்டேன். மெட்ரோ கிளம்பியது.

மாலையும் வேகமாய் வந்தது. குளிர்காலங்களில் அங்கு மாலை என்பது மிகவும் நீண்டது. இரவு பதினொரு மணிவரை மாலை வெளிச்சம் இருக்கும். அந்த பார்க் நோக்கி விரைந்தேன். இடையில் சுமனிற்கு அனுப்பப்பட்ட குறுந்தகவல் ஒன்றிற்கு 'அங்கு வந்துகொண்டிருக்கிறேன் அண்ணா' என ஒரு ஸ்மைலியோடு பதில் வந்திறங்கியது. ஜெனிவா லேக்கின் மருங்குகள் எப்பொழுதும் என்னை மயக்கி அங்கேயே கட்டிப்போடும் குணம்கொண்ட வதனம் அது. வானுயர சீறிப்பாயும் நீரும் அதைசுற்றி வட்டமிடும் வெண் பறவைக்கூட்டமும், ஆங்காங்கே மிதக்கும் இரவு களியாட்ட படகுகளும் அதன் புறம் சார்ந்த 'சுவிஸ்சை பிரதிநிதிப்படுத்தும்' உயர்ந்த கட்டடங்களும் என்றுமே என்னை சலிப்படைய வைத்ததில்லை. பார்க் வரை வந்தாயிற்று. பச்சப்பசேல் கம்பளம் போர்த்தி அழகாய் தூங்கிக்கொண்டிருக்கும் புற்களின்மேல் அமர்ந்துகொண்டு வழமைபோல முகப்புத்தகத்தை சுரண்ட ஆரம்பித்தேன். சட்டில் வந்த ஒரு பெண் ஹாய் போடும்போது அதற்கு போட்டியாய் 'ஹாய் அமலண்ணா..' என அருகில் வந்து அமர்ந்தான் சுமன். சட்டில் வந்த பெண்ணிடம் பாய் சொல்லி சுமனிடம் 'ஹாய்;;!' என்றேன். சுமன் தனது நண்பன் ஒருவனுடன் வந்திருந்தான். 'அண்ணை நான் கிளிநொச்சி..!' என அறிமுகமாகிக்கொண்டான் அந்த தம்பி.

அன்று மிக நீண்டதொரு உணர்வுமிக்க கலந்துரையாடல் நிகழப்போகிறது என நான் தெரிந்திருக்கவில்லை. சுமனிற்கு 20 வயதுதான் இருக்கும். அவன் அண்ணன் அடிக்கடி இவனைப்பற்றி சொல்லும் 'நிறைய சின்னப்புள்ளத்தனம்!' என்ற கடுமையான விமர்சனம் இப்பொழுது சுமனில் காணாமல் போயிருந்தது. முற்றாக என்று சொல்வது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட அவதானிப்பாக இருக்கலாம். பெரிய மனுசன் போல பேசுகையில் ஆங்காங்கே அந்த சிறுபிள்ளைப்பேச்சு, சிறுபிள்ளைச்சிந்தனை என்பன வந்துதான் போயின. நான் பேசுவதை குறைத்துக்கொண்டேன். காரணம் சுமனிடம் அவ்வளவு பேச இருந்தது. 'எப்படிடா வாழ்க்கை?' என நான் சாதாரணமாக கேட்ட கேள்விக்கான பதிலை கூறி முடிக்க மூன்று மணித்தியாலங்கள் எடுத்தது சுமனிற்கும் அவன் நண்பனிற்கும். அவ்வளவு கடினமானது அங்கு அவர்களின் வாழ்க்கை!

சுமன் தொடர்ந்தான். இடையிடையே அவன் நண்பன் அவற்றை 'உண்மைதான் அண்ணா!' என உறுதிசெய்துகொண்டான். 'வந்து ஒண்டரை வருடமாகிறது.. இன்னும் முகாமிற்குள்தான் (முகாம் என்பது மெனிக்பார்ம் போல் இல்லாவிடினும் மூடப்பட்ட சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு வகை 'முகாம்').. அடிக்கடி கோட்டும் கேசுமாக போகுது காலம்!'. இலங்கையில் இப்பொழுது குறிப்பிட்ட அளவு சுதந்திரம் இருக்கிறது. 'வேலை செய்ய முடியாது இங்க, அது சட்டவிரோதமானது.. சாப்பாட்டிற்கு அவங்க குடுக்கிற காசு போதாது.. சோ நான் களவாய் ஒரு வேலைக்கு போறனான்..!' வேலைசெய்வதற்கும் சுகந்திரம் இல்லையெனின் எப்படி வாழ்க்கை விளங்கும்? எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். 'அந்த வேலைக்கும் காலையில 4 மணிக்கு போகணும்.. இந்த வின்ரர் சீசனில அதிகாலையில போறத பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க அண்ணா.. இது எங்க வீட்டாக்களுக்கு எப்புடி புரியும்..!'. ஆமாம் இப்பொழுது அதிகாலையில் வெளி வெப்பநிலை -70 செல்சியஸ்!. 'அந்த வேலை ஒரு பார்மில.. எனக்கு குடுத்த வேல ரக்டர் ஓட்டுறது.. உழுறது.. 12 மணித்தியால வேலை.. சரியான களைப்பா இருக்கும் அண்ணா..' கூறியவாறு நிலத்தில் கீறிக்கொண்டிருக்கிறான் சுமன். சில வினாடிகளாலான மௌனத்தின் பின் அவன் நிமிர்கையில் கண்கள் கலங்கியிருந்தன. இதை நிச்சயமாக சொல்லியே ஆகவேண்டும். அவனது ஊரில் அவன் பாட்டன் பின்னர் தந்தை ஒரு பெரிய பணக்கார பேர்வழி. அவர்கள் ஊரில் நாற்சக்கர உழவு இயந்திரம் வைத்திருக்கும் சுமார் மூன்று பேரில் இவனது அப்பாவும் ஒருவர். அதுவேறு அந்த நாட்களிலேயே 40 ரக உழவு இயந்திரம் வைத்திருந்தவர் இவன் தகப்பன்.

'வேல முடிஞ்சு வீட்டுக்கு (முகாமிற்கு) வந்து படுக்க நடு சாமம் ஆகிடும். திரும்பவும் 3 மணிக்கு எழுந்திருக்கணும்.. அப்பப்ப வீட்ட இருந்துதான் காசு வருது சிலவுக்கு.. நான் உழைக்கிறது போதாது.. இதுவும் சீசனல் வேர்க் தானே..!' சுமனைப் பார்க்கையில் பாவமாக இருந்தது. 'மாசத்துக்கு இரண்டு தடவ மாதிரி அப்பா அல்லது அண்ணா போன் பண்ணுவாங்க.. எனக்கு இங்க இருந்து கால் பண்ண காசு இருக்கிறது இல்ல அண்ணா..' கவனிக்கஇ சுமனின் அப்பா இலங்கையில் நடுத்தரத்தை விட மேலான பொருளாதார நிலையுடையவர். அவன் அண்ணன் வேறு இப்பொழுது தனியார் வங்கி ஒன்றில் வேலைசெய்கின்றான். 'மூணாவது அப்பீல் கோட்டுக்கு போட்டிருக்குஇ லோயருக்கு காசு அப்பாதான் அனுப்பினவர்.. இதுவும் சரிவராட்டி இலங்கைக்கு திரும்ப வேண்டியதுதான் அல்லது ப்ரான்சுக்கு மாறனும். இலங்கைக்கு திரும்ப போறது எண்டா வீட்டாக்களுக்கு விருப்பம் இல்ல.. சனம் சிரிக்கும் எண்டினம்..!!' 20 வயதில் இப்படியானதொரு நெருக்கப்பட்ட வாழ்க்கை தேவைதானா? இலங்கையிலிருக்கும் சுமனின் அப்பாவும் அண்ணனும் சுமன் சுவிஸ்சில் இருக்கிறான் என பெருமைகொள்ளும் போது இங்கு இவன் படும் கஸ்டம் அவர்கள் தொண்டையை ஏன் நெரிக்கவில்லை?

இப்படி தொடர்ந்தது அவன் சுவிஸ் வாழ்க்கை கதை. இறுதிவரை 'அப்ப ஏண்டா இங்க வந்தா?' என்கின்ற கேள்விக்கு அவனிடமும் பதில் இல்லை. நானும் விளங்கிக்கொள்ளவில்லை. ஒன்று மட்டும் தெரியும் நிச்சயமாக அவனிற்கு இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதும் கிடையாது. பொருளாதாரக் கஷ்டமும் இல்லை. இறுதிக் கட்டத்தில் சுமன் என்னிடம் வேண்டிக்கொண்டது. 'அண்ணா, என்ட அண்ணாவ நீங்க சந்திக்கேக்க தயவுசெய்து என்ட நிலமைய விளங்கப்படுத்துங்க.. என்னைய தயவுசெஞ்சு இலங்கைக்கு கூப்பிட சொல்லுங்க.. பிளீஸ்..!!'. 

இரவு 10 மணி. பார்க்கை விட்டு வெளியேறுகிறோம். இறுதியாக என்னை பார்த்து சுமன் சொன்னான்இ 'அம்மாகூட பேசி நாலு மாசமாச்சு அண்ணா... காசு இல்ல.. இருந்தா அவகூட அடிக்கடி பேசுவன்.. அவகூட அடிக்கடி பேசணும்போல இருக்கும் அண்ணா..!'. கூறி முடிக்கையில் நானும் அவன் நண்பனும் சுமனை கட்டி அணைத்துக்கொள்ளுகிறோம். மூன்று மணிநேரம் கண்ணீரை சமாளித்துக்கொண்ட அவன் கண்களிலிருந்து இன்னுமொரு ஜெனிவா லேக் உற்பத்தியாகிறது.


அடுத்த வாரமும் வருவேன்.
No comments:

Popular Posts