Saturday, May 24, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 07

'நானெல்லாம் வெளிநாடு வருவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை..!' இதை நூறு தடவைகளுக்கு மேலாக என்னிடம் சொல்லியிருப்பான் துவாரகன். எனக்கு தெரிந்து அவனை வெளிநாடு நோக்கி துரத்தியது குடும்ப வறுமையும் தேசிய போராட்டமும் தான். இதை நான் நன்கு அறிவேன். தர்மபுரத்தை விட்டு விட்டு இன்னுமொரு தானறியா தூர தேசம் செல்வது அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு விடயமாகவே இருந்தது அவனது 22 வயது வரை. தர்மபுரம் அவன் உயிராய் நினைக்கும் மண். 'தர்மபுரத்தான்' என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் போது அவனை கேட்காமலே தோள்பட்டை உயர்ந்து கொள்ளும். மண்ணை நேசிக்கும் ஒரு மனிதன் இந்த துவாரகன். நன்றாக படித்தாலும் அவன் பல்கலைக்கழகம் வரை போகும் வாய்ப்பை தொடர்ச்சியான இடம்பெயர்வுகள் தட்டிப்பறித்திருந்தன. பிள்ளையாரை விட அதிகம் வணங்கும் அவன் தாய்கூடவே என்றும் இருத்தலில் ஒருவித பூர்வாங்க சௌகரியத்தை உணர்பவன் அவன். அவன் அம்மாவிற்கு இவன் பிள்ளை அல்லஇ பொக்கிஷம். பொக்கிஷம் தன்னை நீங்கியதால் என்னவோ அதுவரை இரண்டுதடவைகள் மாரடைப்பால் தாக்கப்பட்டு தப்பியிருந்தாள்.

'அம்மா நான் உங்க வந்து சேர்ந்துட்டன்!' என்கின்ற செய்தி மூன்று மாதங்கள் ஆகியும் தர்மபுரத்தில் இருக்கும் தனலட்சுமிக்கு வந்து சேரவேயில்லை. இவளுக்கு இங்கே ஆகாரம் இல்லை. உதடுகளில் சிரிப்பு வந்து இன்றோடு மூன்று மாதங்கள். நித்திரையும் நின்மதியும் எட்டா தூரத்தில் நின்று வன்முறை செய்தது. முகம் கறுத்திருந்தது. விழுந்த கண்ணீரெல்லாம் முந்தானையில் தொங்கிக்கொண்டிருந்தது. கைகள் படபடத்தன. இதயம் விட்டு விட்டு துடித்ததில் நெஞ்சுவலி அவ்வப்போது முகம்காட்டி மறைந்தது. கண்ணீர்மட்டும் அவ்வப்போது வந்து பாசாங்கு பண்ணிக்கொண்டிருந்தது. 'என்ட மகனுக்கு என்ன ஆச்சோ...!' இதைத்தவிர அவள் வார்த்தைகளில் வகைமை இல்லை. 'கைக்குள்ளேயே பொத்தி பொத்தி வளர்த்தியே.. என்ன ஆச்சோ..?' சோகம் விசாரிக்க வந்த சில பெருசுகள் ஏதோ இளவு வீட்டில் வந்து ஆறுதல்சொல்வதாய் அவள் கண்ணீரை இரட்டிப்பாக்கி சென்றனர். 'என்னதான் அவன் அடம்பிடித்திருந்தாலும் அவன நான் விட்டிருக்கக்கூடாது.. எல்லாம் என்னால வந்த வின..' அழுது புலம்புகையில் 'அண்ணாட்ட இருந்து கடிதம் நிச்சயமா வரும்மா.. சும்மா எதுக்கு புலம்பிக்கிட்டு...' ஜமுனாவின் ஆறுதல் கொஞ்சம் தனலட்சுமிக்கு அவ்வப்போது நம்பிக்கை கொடுக்கும். இருந்தும் முந்தானை நனைவது நின்றபாடில்லை.

ஒரு மாதம் அறிமுகம் இல்லாத ஊர்களிலெல்லாம் கொண்டு திரிந்து இறுதியாக ஜேர்மனி என்னும் தேசத்தின் ஓர் ஆளில்லா ஊரில் கொண்டுவந்து சேர்த்து 'கிளம்புறோம்!' என கூறி மறைந்தார்கள் அந்த ஏஜென்சிக்காறர்கள். துவாரகன் வெறுமையாய் ஓர் வெறுமையான தேசத்தில் விடப்பட்டான். அம்மாவையும் ஹிட்லரையும் அடிக்கடி நினைத்துக்கொள்ளுகிறான். மானின் தோற்றத்தில் அங்கும் இங்கும் பாய்ந்து திரியும் அந்த விசித்திர மிருகத்தை தவிர அவனால் வேறு எதையும் கண்டுகொள்ள முடியவில்லை. எப்படியோ கடந்து போய்க்கொண்டிருக்கும் நாட்கள் அவனை ஆட்களுள்ள அதுவும் தமிழர்கள் உள்ள ஒரு ஜேர்மனிய நகரத்தை கண்டடைய வழிகோலியிருக்க வேண்டும். இரண்டு மாதங்கள் ஓடிப்போயின. ஒரு நல்ல மனிதரின் உதவியினால் ஒரு உணவகத்தில் வேலை கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாய் யூரோக்கள் துவாரகனை நெருங்க ஆரம்பித்தன. இப்பொழுது முழு நோக்கமும் வீட்டை தொடர்பு கொள்தல் என்பதாய் மட்டுமே இருந்தது. மூன்று கடிதங்கள் ஜேர்மனியிலிருந்து தர்மபுரம் நோக்கி அஞ்சல் செய்யப்பட்டது. பதிலிற்கு இரண்டு பக்கங்கள் கொண்ட தங்கையின் அழகிய தமிழ் எழுத்துக்களால் எழுதப்பட்ட ஒரேயொரு மடல் துவாரகனை வந்தடைந்தது. அதில் பல சமாச்சாரங்கள் பேசப்பட்டிருந்தாலும் துவாரகன் வெளிநாடு வருவதற்கான அந்த முக்கிய காரணம் பற்றி மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்தப்பட்டிருந்தது. 'அண்ணாஇ அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சீக்கிரமா கல்யாணத்த நடாத்திடனும்னு அம்மாக்கு ஒரே கரச்சல் குடுத்துக்கிட்டு இருக்காங்க.. பத்து லட்சம் என்றதில இருந்து கொஞ்சம் கூட இறங்கிவாறதா தெரியல...' என தொடர்ந்தது அந்த கடைசி பந்தி.

ஒரே நாளில் இரண்டு வேலைகள். ஒரு வேலையிலிருந்து இன்னுமொரு வேலைக்கு பயணிக்கும் அந்த இரண்டு மணிநேரங்களில் ரயிலில் தூங்குவதை தவிர்த்து பார்த்தால் அவனால் ஒரு மணிநேரமே தூங்க முடியும். மக்டொனால்டில் பரிமாறப்படும் அந்த பொரித்த இறைச்சியையும்இ அடுக்கப்பட்டிருக்கும் பர்கரையும் தவிர துவாரகனின் வயிறு எதற்கும் குடுத்துவைக்கவில்லை. அது மலிவானஇ வயிற்றை நிரப்புமளவிற்கு போதுமானதாக இருந்தது. சாப்பாடா முக்கியம்? தங்கச்சியின் கலியாணம்! என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் போதெல்லாம் வயிறு அடம்பிடிப்பதை நிறுத்திக்கொள்ளும். சில மாதங்கள் சீக்கிரமாய் ஓடித்தீர்ந்தன. பணப்பை கொஞ்சம் வீங்கியிருந்தது. தங்கச்சியின் கலியாணத்திற்கு தடையாய் இருக்கும் அந்த பத்து இலட்சங்களை நோக்கிய ஓட்டத்தில் எட்டாவது இலட்சத்தில் துவாரகன் இப்பொழுது நிற்கிறான். தங்கையின் சந்தோஷமான மண வாழ்விற்காய் எந்த விலையையும் கொடுக்க தயாராகவே இருந்தான் இந்த அண்ணன். சரி இப்பொழுது இருப்பதை வீட்டிற்கு அனுப்பிவிடலாம். அதை காட்டி காட்டி மாப்பிள்ளை வீட்டுக்காரரை சந்தோஷமாகவும் எங்கள் மேல் நம்பிக்கை கொண்டவர்களாகவும் வைத்துக்கொள்ள அம்மா இதை பயன்படுத்தட்டும் என எண்ணியபடி வெஸ்ரேன் யூனியன் நோக்கி துவாரகனுடன் பயணமானது அந்த யூரோக்கள் குலுங்கும் பணப்பை.

நான் உழைத்த பணம். பணத்தை எண்ணும்பொழுது சட்டை காலர் தானாய் உயர்ந்தது. கையில் தவழும் பணம் தம்முடைய நேர்மையான சம்பாத்தியம் என்றால் அந்த ஒவ்வொரு பண நோட்டுக்களிலும் இருக்கும் இலக்கங்கள் அழகான தூய்மையான இரத்தினக்கற்களாய் மின்னிக்கொண்டிருக்கும். அன்று அவன் கையிலிருந்த பண நோட்டுக்களும் அப்படித்தான். யூரோக்கள் தர்மபுரம் நோக்கி பயணிக்க ஆரம்பித்தது ஒரு கடித குறிப்புடன். அந்த குறிப்பு இப்படி இருந்தது.

அன்பான அம்மா தங்கச்சி இருவரிற்கும்இ நான் மிக நலமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். என்னைப்பற்றி கவலை வேண்டாம். இன்று எட்டு இலட்சம் காசு அனுப்புகிறேன். தங்காவின் கலியாண ஏற்பாடுகளை உடனடியாக ஆரம்பியுங்கள். அவள் சந்தோஷம் தானே நம்மை விட்டு பிரிந்த அப்பா உட்பட நம் சகலரினதும் பேரவா. ஜாம் ஜாம்னு அவள் கலியாணத்தை நடாத்திடுவம். மாமாவை உதவிக்கு வைத்துக்கொள்ளுங்கள். அப்பா மற்றும் எனது இடத்திலிருந்து மாமா இதை நடாத்தி முடிப்பார். என்னால் அங்கு இருக்க முடியவில்லையே என்பதை தவிர எந்த கவலையும் இல்லை. போட்டோவை எதிர்பார்த்தபடி காத்திருக்கிறேன். ஜமு குட்டி, நீ சந்தோஷமாக இருக்கணும். உம்மா.. இப்படிக்கு மகன்/அண்ணா.

தினக்காட்டிகள் கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. தர்மபுரத்தில் ஜாம் ஜாம்னு ஒரு கலியாணம் நடந்துகொண்டிருக்க வேண்டும். எங்கள் ஜமுனா குட்டி மாலையும் கழுத்துமாக அந்த மஞ்சத்தை அலங்கரித்துக்கொண்டிருப்பாள். அம்மாவின் கண்களில் பெரியதொரு ஆறுதல் நிறைந்து வழியும். மணவறைக்கு பின்னால் சென்று மறைந்தபடி நான் இல்லையே என ஒற்றைக்கண்ணில் அழுதுகொண்டிருப்பாள். மாங்கல்யம் ஜமுனாவை சூடிக்கொள்கையில் அப்பா மேலிருந்து சில மல்லிகைகளை தூவுவார். எங்களை ஏறெடுத்துக்கூட பார்க்காத எங்கள் உறவினர்கள் இன்று மூக்கு முட்டும் அளவிற்கு உண்டு குடித்து நாங்கள் அவர்களின் கிட்டத்து உறவினர்கள்தான் என மற்றவர்களிடம் பெருமையாய் வெத்து சீன் அளந்துகொண்டிருப்பார்கள். பத்து வருடங்களாய் எங்களோடு பேசாத சித்தப்பா அழைக்காமலே திருமணத்திற்கு வந்து முதலைக்கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பார். தனலட்சுமிட மகன் வெளிநாட்டில ஏதோ பெரிய வேல பாக்குறான் போல என எங்கள் ஊராட்கள் வழமை போலவே கதை அளந்துகொண்டிருப்பார்கள். துவாரகன் கற்பனையில் பறந்துகொண்டிருக்கிறான். 

வாரங்களும் மாதங்களும் போட்டிபோட்டு ஓடின. தங்கையின் திருமணம் நான் அனுப்பிய யூரோக்களால் கோலாகாலமாய் நடந்து முடிந்திருக்கும் என்கின்ற நம்பிக்கை கொடுக்கும் ஆத்ம திருப்தியில் நடந்துகொண்டிருந்தான் துவாரகன். தங்கையின் திருமண புகைப்படங்கள் துவாரகனை வந்தடையும் அந்த அற்புதமான நாள் வந்துசேர்ந்தது. இதற்காகத்தான் இத்தனை காத்திருப்பு. காசு அனுப்பியும் தர்மபுரத்தில் நடந்தேறிய திருமணம் பற்றி நான்கு மாதங்கள் அறியாமல் தவித்துக்கொண்டிருந்த துவாரகனிற்கு புகைப்படங்களோடு வந்து சேர்ந்திருக்கும் அந்த கடித உறை நிச்சயமாக சிம்ம சொப்பனமாக அமையப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.

மேசையில் கிடந்த கடித உறையை நிமிர்ந்த புருவத்தோடு ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு திறக்கின்றான். அவன் எதிர்பார்த்தது போலவே அதற்குள் அழகான ஜமுனாவின் புகைப்படம்தான். முழுமையாக அந்த படத்தை வெளியே எடுத்து கைகளில் வைத்து அவசர அவசரமாக உற்றுநோக்குகிறான். அழகிய அந்த ஜமுனாவின் புகைப்படத்தில் அவள் தலைக்கு மேலாக பெரிய கொட்டை எழுத்துக்களில் 'கண்ணீர் அஞ்சலி' என எழுதப்பட்டிருந்தது. 


அடுத்த வாரமும் வருவேன்...

No comments:

Popular Posts