Saturday, May 24, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 06

'என்ட பிள்ளை வெளியில இருக்கிறான் தம்பி...' என பெருமை பாராட்டும் பெற்றோர்களை தமிழர் பிரதேசங்களில் அதுவும் வடக்கில் சர்வ சாதாராணமாக எங்கும் காண முடியும். நமது மண்ணில் 'வெளிநாடு' என்பது ஓர் தேவை கடந்து இன்று நம் அந்தஸ்தை தீர்மானிக்கும் ஒரு விடயமாக மாறியிருக்கிறது. இது ஆரம்ப காலம் தொடங்கி இன்றுவரை தமிழர் தாயகத்தில் ஆர்முடுகலில் சென்றுகொண்டிருக்கும் ஒரு தேவை அல்லது நாகரீகம் அல்லது ஆசை என சொல்லமுடியும். இன்று 'புலம்பெயர் தமிழர்கள்' என்கின்ற ஒரு மிகப்பெரிய சக்தியை உருவாக்கியவர்கள் நாங்கள்தான் என்பதில் எமது வெளிநாட்டு பிரியங்கள் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் பல வகையான நேர், எதிர் மறை கருத்துக்கள் காலம் காலமாக பல தரப்பினர் மட்டங்களிலும் காணப்படுவது யாம் அறிந்ததே. இவற்றை பற்றியும் விரிவாக பேசுதல் கருகிய காலத்தின் நாட்குறிப்பிற்கு சாலப்பொருந்தும். 

நம் தேசத்தை விட்டு வெளி நாடுகளிற்கு நம் மக்கள் புலம்பெயர அடிப்படையில் பல காரணங்கள் இருக்கின்றன. மிக முக்கியமான காரணமாக முப்பது வருட உள்நாட்டு யுத்தத்தை குறிப்பிடலாம். உயிரை கைகளில் ஏந்திக்கொண்டு அதை காப்பாற்றிக்கொள்ள அடைக்கலம் வெளிநாடுகளிற்;கு தேடி ஓடவேண்டியதாயிற்று. ஏன் போரிற்கு பின்னரான காலப்பகுதியில் கூட சுய பாதுகாப்பு பலரை வெளிநாடுகளை தேடி ஓட வைத்தது. இது புலம்பெயர்தலின் தேவையை மிகச் சரியாக விளங்கப்படுத்துகின்ற காரணி ஆகும். இதைவிட தங்களின், தங்களை சார்ந்திருக்கின்ற குடும்பங்களின் பொருளாதார முன்னேற்றம் வேண்டி ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை தேடிப்பயணித்தவர்கள் இன்னுமொரு வகையினர். இதில் அதிகமானோர் இளைஞர்கள். இவர்களது நோக்கம் முழுமையாக 'பணம் சம்பாதித்தலாக' இருந்தது. சரியான உணவு, இருப்பிடம், நித்திரை தவிர்த்து பல சொல்லொண்ணா மன அழுத்தங்களுக்குள் கட்டப்பட்டு உழைத்தல் உழைத்தல் என இயந்திரமாக வாழ்க்கை நடாத்தும் இவர்களால் நம் தேசத்தில் பல குடும்பங்களின் வயிறுகள் நிரப்பப்படுகின்றன. 

இதையும் தாண்டி இன்னுமொரு வகையறாக்குள் வருபவர்கள், அதிகமான பெண்கள். 'வெளிநாட்டு மாப்பிள்ளை' என்கின்ற சூழ்நிலையில் வாழ்க்கை தேடி புலம் பெயர்ந்தவர்கள். இதிலும் அதிகமான பெண்கள் தங்கள் பெற்றோர்களினால் தீர்மானிக்கப்பட்ட வெளிநாட்டு வரனை மணந்துகொண்டு விரும்பியோ விரும்பாமலோ மாப்பிள்ளை வசிக்கும் நாட்டில் போய் குடியேறியவர்கள். வெளிநாட்டு மாப்பிள்ளைகளின் சீதன நிலவரம் மில்லியனைத் தொட்ட போதும் அதை கொடுக்க நம் பல பெற்றோர்கள் தயாராகவே இருக்கிறார்கள். இது பற்றி இன்னுமொரு எபிசொட்டில் வெழுத்து வாங்கலாம். இதே வேளை, இப்பொழுதெல்லாம் வெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து அவர்களுடன் வெளிநாடுகளிற்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புதல் என்பது ஒரு நாகரீகமான வாழ்க்கைத் தரமாகவே மாறியிருக்கிறது. வெளிநாடுகளில் வாழும் அதியமான இளைஞர்களும் தங்கள் வாழ்க்கைத்துணையாக ஈழத்து பெண்களிலேயே ஆர்வம் காட்டுவதாக அண்மையில் புலம் பெயர் நாடு ஒன்றில் வசிக்கும் எனது நண்பன் ஒருவன் சொன்னது ஞாபகம் வருகிறது. ஆக, வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கான கிறாக்கி உள்நாட்டில் எகிறிக்கொண்டேதான் செல்கிறது எனலாம்.

இறுதி வகையறாக்குள் வருபவர்கள் பற்றி எனக்கு என்றுமே நல்லதொரு அபிப்பிராயம் இருந்ததில்லை. அதாவது இவர்கள் வெளிநாட்டு சுகபோக வாழ்ககையினால் ஆட்கொள்ளப்பட்டு எப்படியாயினும் வெளிநாடு ஒன்றில் அதுவும் ஐரோப்பிய நாடு ஒன்றில் போய் செட்டில் ஆகிவிட வேண்டும் என சென்று சேர்ந்தவர்கள். இதற்கு எவ்வளவு விலையையும் கொடுக்க இவர்களும் இவர்கள் பெற்றோர்களும் தயாராகவே இருக்கிறார்கள். 35 தொடங்கி எத்தனை இலட்சங்களையும் இதற்காய் இறைக்க இவர்களால் முடியும். சென்ற வருடம் 45 இலட்சங்கள் கொடுத்து ஐரோப்பிய நாடு ஒன்றிற்காய் சென்று இன்று வரை தன் குடும்பத்துடன் எந்தவித தொடர்புகளுமின்றி இருக்கும் எனது நண்பன் ஒருவனையும் இவ்வேளையில் நினைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. அன்றெல்லாம் இவன் ஞாபகம் அடிக்கடி வருகின்ற பொழுதுகளில் இந்த வகையறாக்கள் 'பாவங்கள்' என்றே முகத்தை சுழித்துக்கொள்வேன். இதில் முக்கியமான விடயம் என்னவெனில், இவர்களை வெளிநாடுகளிற்கு அனுப்புவது மிக இலகுவானது என பூச்சாண்டி காட்டி, உசுப்பேத்தி கொள்ளை கொள்ளையாக பணம் பறிக்கும் வெளிநாட்டு தரகர்கள் மிக சாமர்த்தியமாகவே தங்கள் வயிற்றை கழுவிக்கொள்ளுகிறார்கள். 

மேற்கூறப்பட்ட பல காரணிகள் கடந்த இரு தசாப்தமாக நம் மக்களை வெளி நாடுகள் நோக்கி துரத்தியது. இன்று இதன் விளைவு தமிழர்கள் இல்லாத தேசம் என ஒன்றிரண்டை மட்டுமே உலகப்படத்தில் காட்டுமளவிற்கு வந்திருக்கிறது. யுத்தம் மூண்டெழுந்த காலங்களில் உயிரை காத்துக்கொள்ள ஒரே தெரிவாக இருந்தது இந்த புலம்பெயர்தல்தான். அன்று தொடங்கிய இந்த புலம் பெயர் தேடல் என்னவோ இலங்கை கடந்தும் எமது இரத்தத்தை பாய்ச்சுவதற்கு உதவியாக இருந்திருக்கிறது. தொலை தேசத்தில் வசித்தபோதும் தங்கள் தேச கனவை தொலைத்துவிடாமல் பார்த்துக்கொண்டவர்கள் அவர்கள். இங்கு இரத்தம் சிந்தப்பட்டபோது அங்கு அவர்களால் சரியாக சுவாசிக்க முடியாமல் போனது. எங்கு சென்றாலும் தமிழர்கள் என்னும் சுயத்தை அவர்களால் தொலைத்துவிட முடியவில்லை ஆக நம் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக எனக்கிருக்கும் பொதுவான ஒரு பக்கப்பார்வை இது. இன்னுமொரு பக்க எதிர்மறையான பார்வையும் எனக்கு உண்டு. (அதைப்பற்றி பேச இன்னுமொரு எபிசொட் வராமலா போய்விடும்?)

இன்னுமொரு விடயம் தொடர்பாகவும் இங்கே பேசியே ஆகவேண்டும். ஒரு வகையில் வெளிநாட்டு வாழ்க்கை என்பது உள்நாட்டில் தங்கள் சுயகௌரவத்திற்கான ஒரு தகுதியாகவே பலரால் பார்க்கப்படுகிறது. 'யாழ்ப்பாணத்தில நம்ம குடும்பத்தில இருந்தும் ஓருத்தன் வெளிநாட்டில இல்லாட்டி நம்மள மதிக்கமாட்டாய்ங்க மச்சான்..!' என எனது நண்பன் ஒருமுறை சொன்ன போது நான் எனது புருவங்களை ஒரு சிறு புன்னகையோடு உயர்த்திக்கொண்டேன். இது உண்மையெனின் வெளிநாட்டு தொடர்பில் கௌரவமும் கலந்திருக்கிறது என்பது தெளிவாகவில்லையா? அது மட்டுமே அவர்கள் கௌரவத்தை குறிக்காவிட்டால் அதில் தவறும் இல்லை. அத்தோடு இந்த சுயகௌரவம் வெளிநாட்டிலிருந்து பெறப்பட்டு நடுத்தரத்தை தாண்டிக்கொண்டிருக்கும் பொருளாதார முன்னேற்றத்தால் வருவதாய் கூட இருக்கலாம். விசேடமாக யாழ்ப்பாணத்தில் ஒரு நண்பனிடம் இன்னொரு நண்பனைக்காட்டி 'என்ன மச்சான் அவன் புது கார் எல்லாம் வாங்கியிருக்கான் போல...?' என ஒரு கேள்வியைக் கேட்டால் அதற்கு வரும் பதில்களில் மிக அவசரமானதாக 'அவனுக்கென்ன மச்சான்.. வெளிநாட்டு காசு..!!' என்பது ஒன்றாக இருக்கும். இதன் மூலம் புலம் பெயர் சமூகத்தின் மிகப்பெரிய வெற்றிடம் யாழ்ப்பாணம் என்னும் தமிழ் பாரம்பரிய தேசத்திலிருந்து நிரப்பப்பட்டது என்பதை சொல்ல வருகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

அதே வேளை வெளிநாட்டு வாழ்க்கை எத்தனை சிக்கல்கள் கஸ்டங்கள் நிறைந்தது என்பதையும் நம்மாட்கள் விளங்கிக்கொள்வதில்லை. பல சந்தர்ப்பங்களில் வெளிநாட்டில் வசிப்பவர்கள் இங்கிருப்பவர்களுக்கு அதை சரியாக புரிய வைப்பதும் இல்லை. அதிலும் தொழில், பணம் தேடி புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கையை அவர்கள் சொந்தங்கள் இலங்கையில் சரியாக தெரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. காரணம் மட்டில்லா எதிர்பார்ப்புக்கள் நிறைந்ததே வெளிநாட்டு வாழ்க்கை என்கின்ற புரிதலில் வாழ்பவர்கள் நாம். உண்மையிலேயே அனேகமான தமிழ் இளைஞர்கள் வெளிநாடுகளில் பணம் மட்டும் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஒரு டாலர் உழைப்பதற்கு படும் கஸ்டங்களும் செய்யப்படும் தியாகங்களும் இலங்கை வரை வந்து சேர்வதில்லை. வெறும் டாலர்களும்இ யூரோக்களும்இ தினார்களுமே இலங்கையை வந்தடைகிறது.
தாயகத்திலிருந்து வெளிநாடு நோக்கிய தமிழரின் பரம்பல் தொடர்பாக பேசும்பொழுது அண்மையில் பெரும் பீதியைக் கிளப்பிய 'கடலாலான சட்ட விரோத அவுஸ்ரேலிய புலம் பெயர்வுகளை' பற்றி பேசாமல் விட்டுவிட முடியாது. உயிர்ப்பயத்தின் காரணமாக இந்த ஆபத்து நிறைந்த பயணங்களை விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள் பலர். அதேவேளை வெளிநாட்டு மோகத்தில் இந்த ஆபத்தை தேடிப்போனவர்களும் பலர். இது ஒரு பாரிய ஆபத்துஇ இவ்வாறு வரும் தமிழர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஆஸிய அரசு அறிவித்தபோது 'அவுஸ்ரேலியா தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது' என விமர்சனம் செய்தவர்களும் நாங்கள். இவ்வாறு ஆஸிய கனவுகளோடு சென்ற எத்தனை உயிர்களை கடலில் பறிகொடுத்தோம். எமது கருகிய காலத்தின் வரலாறுகளில் இதுவும் ஓர் இன அழிப்பு இல்லையா? என்ன நாமாக நம்மை அழித்துக்கொண்டோம்.. அதுதான் வித்தியாசம்!

தமிழரும் புலம் பெயர் வாழ்க்கையும் என்பது ஒன்றிலிருந்து ஒன்றை பிரித்துப்பார்க்க முடியாத தமிழரின் வரலாறு. இது பற்றி தொடர்ந்து வரும் சில நாட்குறிப்புக்களில் பதிவிடுவது இந்த தொடரின் மிக முக்கியமான கடமை என நினைக்கிறேன். இன்றைய இந்த பகுதி, வர இருக்கும் சில எபிசொட்களுக்கான முன்னுரை மட்டுமே. எமது ஈழ தமிழர் வரலாற்றில் 'புலம் பெயர்தல்' எவ்வகையான எதிர் மறை தாக்கங்களை நிகழ்த்தியிருக்கிறது? எம் மண்ணை விட்டு இன்னுமொரு தேசம் தேடிப்போனதில் எதை கண்டடைந்தோம்? எதை தொலைத்தோம்? எதை தேடிக்கொண்டிருக்கிறோம்? என்ற சில கேளவிகள் தொடர்பாக அடுத்து வரப்போகும் கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் பேசப்போகிறது. இதற்கு நீங்கள் சமத்தாக இன்னுமொரு வாரம் காத்திருக்க வேண்டும்..


அடுத்த வாரமும் வருவேன்....
1 comment:

Unknown said...
This comment has been removed by the author.

Popular Posts