Tuesday, April 22, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்பு​கள் - 03

பல கனவுகளை சுமந்து வாழ்பவர்கள் நாம். சில கனவுகள் எங்களோடு இன்னும் கூடவே வருகிறது. சில கனவுகள் பாதியில் முடிந்து போனது. என்னவோ, அவை பாதியில் முடிந்து போனாலும் அதன் துகள்களை எங்கோ மனதின் ஓரத்தில் இன்னும் வைத்துக்கொண்டுதான் பயணிக்க வேண்டியிருக்கிறது. எமது வரலாற்றில் வீரத்தை எந்தளவிற்கு புகழுறச்செய்தோமோ அதேபோல காதலிலும் கணையாளிகளை கடந்து வந்தவர்கள் நாங்கள். எமது வரலாற்றின் அத்தனை பக்கங்களிலும் காதல் என்ற ஒரு தலைப்பு இருந்துதான் இருக்கிறது. காதல் புனிதமானதும் ஆத்மார்ந்தமானதும் என்பதற்கு நம் ஈழத்து காதல்களை அடித்துக்கொள்ள உலகில் யாராலும் முடியுமா என்பதை நான் அறியேன். ஆனாலும், மதம், சாதி ஆகிய வேலிகளைத் தாண்டி எங்கள் காதல்கள் ஜெயிப்பது கடினமாயினும் பல காதல்கள் வென்றிருக்கின்றன. இது நீண்ட விவாதங்களை கொண்டுவரும் விடயம். ஆகவே அதை இன்னுமொரு அங்கத்தில் முழுவதுமாக அலசிப்பார்த்திடலாம். இப்போதைக்கு இந்த நாட்குறிப்பை வாசித்திடலாம்.

நான் குமாரை இதற்கு முதல் என்றுமே பார்த்ததில்லை. அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. அன்றும் அவரை நான் சந்திப்பேன் என்பதை நான் சத்தியமாக அறிந்திருக்கவில்லை. எல்லாமே சாதாரணமாக நடந்து முடிந்தது. குமார் இப்பொழுதும் ஒரு குதிரை போர்வீரன் போலவே கெத்தாக இருக்கிறார். அவரது கையின் புயங்களை கொஞ்சம் பிடித்துப்பார்க்க ஆசைப்பட்டேன் ஆனாலும் அது அழகில்லை என அடக்கிக்கொண்டேன். கொஞ்சம் நீண்ட முடி, ரசிகன் அவர்! எண்ணை வைத்து நேராக மேவி இழுத்து விட்டிருக்கிறார். மாமரந்த்தின் இலைகளுக்கிடையில் பிய்த்துக்கொண்டு அவர் தலைமேல் வந்திறங்கும் சூரியக்கதிர்களில் எண்ணெய் தடவிய ஒவ்வொரு முடியும் அப்பப்போ கண்வெட்டி மின்னுகிறது. வாங்க தம்பி என உண்மையான சிரிப்பொன்றை உதிர்த்தபடி 'உள்ள உக்காரலாமா இல்ல இந்த மரநிழலில உக்கார விருப்பமா???' என கொஞ்சம் தயக்கமாக கேட்டார். 'ஏன் அழகிய வருடும் காத்துக்கு தடை போடுவானேன், இங்கவே இருந்துக்கலாம்...' என்றேன். மாமர நிழலை விரும்பாதவர்கள் இருக்கமுடியுமா என்ன.. அதுவும் வன்னி மாமரங்கள் கலைத்துவம் கொண்டவை. வழமையான நிழலோடு ஏதோ ஒரு ஆறுதல் சுவாசத்தையும் சேர்த்தே நம்மேல் கொட்டுபவை.

ஒரு கால் உடைந்திருந்தது. அதனால் மூன்றுகால்களில் மட்டும் நின்றுகொண்டிருந்தது ஒரு பிளாஸ்டிக் கதிரை. அதில் தான் அமர்கிறேன் என மாமரத்துடன் முண்டுக்கொடுத்து குமார் அமர்ந்துகொள்ள நான் ஒரு புத்தம்புது கதிரையில் அமர்த்தப்பட்டேன். நானும் மறுத்தாலும் கடைசியில் அவர் அன்பால் கட்டப்பட்டு அதிலேயே அமர்ந்துகொள்ள வேண்டியதாயிற்று. மாமரமும் குமாரின் சிரிப்பும் என்னை அங்கேயே இருந்துவிடலாமோ என ஜோசிக்க வைத்தது. அது முல்லைத்தீவிற்கும் கிளிநொச்சியிற்கும் இடையில் இருக்கும் ஒரு அழகிய கிராமம். சூரியனையும் நம்மையும் பிரித்து திரைபோட்டிருக்கும் அந்த அழகிய பெரும் மரங்கள். அரசியலை தவிர்த்து மற்ற சகலவற்றையும் பேசிக்கொண்டிருந்தோம். இடையில் 'தம்பி என்ன குடிக்கிறீங்க? தேத்தண்ணி, அல்லது கூலாயிருக்கும் தெம்பிலி குடிக்கிறீங்களா??' கொஞ்சம் மறந்துபோயிருந்த தாகத்தை தட்டி எழுப்பினார் குமார். நான் அறியாமலேயே என் கண்களும் உதடும் 'தெம்பிலி' என பதில் சொல்லியிருக்க வேண்டும், 'இங்கே, அந்த சின்ன மரத்தில நல்ல தெம்பிலியா பாத்து ஒண்ட பிச்சு கொண்டுவா!' என மனைவியை அழைத்து பெரிய சத்தத்தில் கூறிமுடித்தார் குமார். மாமர நிழலும், சுத்தமான தெம்பிலியும்.. அப்பப்பா அதை வர்ணிக்க வார்த்தைகளில்லை. கொழும்பில் கொட்டும் வெயிலில் வீதியோரத்தில், பறித்து மூன்று நாளாகிய தெம்பிலியை வாங்கி மடக் மடக் என பருக்கும் நமக்கு இது எத்தனை சுகம்!

'ஆமா, வீட்டில எத்தின பேரு?' குமாரைப்பார்த்து கொஞ்சம் ஆர்வத்தோடு கேட்டேன். மெதுவாய் சிரித்துவிட்டு 'அப்ப மூணு பேரு. இப்ப ரெண்டு பேரு!' என பதிலளித்தார் குமார். நானோ கொஞ்சம் டியூப் லயிட். வெக்கத்தை விட்டு 'அப்பிடீனா??' என விழித்தேன். 'புரியலையா தம்பி.. யுத்தத்துக்கு முன்னம் மூணு, யுத்தத்துக்கு பின்னாடி ரெண்டு..!' இப்பொழுது நன்றாக புரிந்தது. அதுவரை அவ்வளவு சந்தோசமாக பேசிக்கொண்டிருந்த குமாரை எனது இந்த கேள்வி நிச்சயமாக சலனப்படுத்தியிருக்க வேண்டும். அதுவரை முகத்தில் பிரகாசமாய் எரிந்த சூரியன் மங்கிக்கொண்டிருந்தான். கண்களின் ஓரத்தில் சொட்டாய் ஒரு நீர்த்துளியை பார்த்தேன். அந்த சொட்டு பட்டென கீழே விழாமல் தனது விரலால் ஒத்தி எடுத்துக்கொண்டார் குமார். எனக்கோ 'என்ன கருமத்துக்கடா இதை கேட்டு தொலைத்தாய்??' என என்னையே கடிந்துகொள்ளவேண்டியதாயிற்று. 'மன்னிக்கணும்...' என கதிரையின் நுனிக்கு வந்தேன். 'அதெல்லாம் ஒண்டுமில்ல தம்பி...' என கதிரையில் சாய்ந்துகொண்டு மாமரக்கிளைகளை பார்த்துக்கொண்டிருந்தார் குமார். 'ஒரே ஒரு பெட்டப்பிள்ளை தம்பி.. சாவுற வயசா அவளுக்கு.. அப்பவும் அவளத்தான் முதல பங்கருக்குள்ள போ எண்டனான்...கேட்டாளோ.!!!' என முழுவதுமாக கண்கலங்க ஆரம்பித்தார் குமார். இது நான் பேசக்கூடாத விடயம் என அவர் அழுகையில் நனைந்த கன்னங்கள் சொன்னது. திரும்பவும் 'மன்னிக்கணும்' என கூறி பேச்சின் போக்கை மாத்த பெரும் முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்தேன். அதற்குள் தெம்பிலி வந்து சேர்ந்தது..

கொஞ்சம் பேச்சு கொஞ்சம் தெம்பிலி என நேரம் கடந்துகொண்டிருந்தது. குமார் கொஞ்சம் இயல்பாக பேச ஆரம்பித்தார். நான் மீண்டும் இதைப்பற்றி பேசவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

'உங்க வீடு அழகா இருக்கு...' என பேச்சை மாத்தினேன்.

'எல்லாம் தரமட்டம் தம்பி, இப்பதான் ஒருமாரி கட்டி முடிச்சம்..'

ஓலையால் வேயப்பட்ட சின்ன குடிசை என்றாலும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாயும் கலை நயமிக்கதாகவும் இருந்தது. இவ்வாறான அழகிய சின்ன குடிசைக்குள் வசிப்பதற்கு எனக்கு கொள்ளை ஆசை.

'அப்ப, விவசாயம்தானா?'

'ஆமா தம்பி, வீட்டோட ஒரு மூணு ஏக்கர் காணி கிடக்கு.. அதில ஏதாச்சும் பயிர் பச்சைய வச்சுக்கிறது.. முடிஞ்சா கொஞ்சம் நெல்லும் விதைப்பன்..'

'ஆமா, உங்க சொந்த ஊரே இதுதானா?'

'எனக்கு மலநாடு தம்பி.. ஆனா இவட சொந்த ஊரு இதுதான்..!'

'அட, நீங்க மலைநாடா?? ஆமா எதுக்கு இங்க வந்தீங்க???' சிரித்துகொண்டு நக்கலாக குமாரைப்பார்த்து கேட்டேன்.

'அது பெரிய கத..' சொல்லி கடைவாயினுள் சிரித்தார் குமார். நிரச்சயமாக இதற்கு பின்னால் ஒரு சூப்பர் கதை இருக்க வேண்டும் என்பதை அவரது சிரிப்பும், உடனடியாகவே மனைவியை ஓரக்கண்ணால் பார்த்த பார்வையும் உறுதி செய்து கொண்டன.

'முந்தி நான் அப்பா கூட அடிக்கடி பிஸினசுக்கு இங்க வந்து போறது... அப்பிடியே இங்க செட்டில் ஆகிட்டன்..' மீண்டும் மனைவியை பார்த்து வெட்கப்பட்டு சொன்னார் குமார்..

'அப்ப... லவ்வா...???' மீண்டும் எனது பாணியில் ஒரு நக்கல்.. குமாரும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்கிறார்கள். வெட்கம் அவர் மனைவியை மூடவே அருகில் இருந்த ஒரு மாவிலையை எடுத்து மணலில் ஏதோ வந்ததையெல்லாம் கீறி அளித்துக்கொண்டிருந்தார்.

'..ஆமா..!' பதில் வந்தாயிற்று.

'சோ உங்க உறவினர்கள் எல்லாம் மலைநாட்டில இருக்கினம்.. அப்படித்தானே.. நல்லபடி தொடர்பு இருக்கா...?

'ஆமா, ஆமா. போனவாரமும் தம்பி வந்து பாத்துட்டுதான் போனான்..'

' அதுசரி கடைசி சண்ட நேரம்.. எங்க...?' மெதுவாய் இழுத்தேன். அவர் பதில் நீண்டு போனது.. இடம் பெயர்ந்த இடங்களையெல்லாம் வரிசையில் கூறிமுடித்தார். இறுதியாக வழக்கம் போல் ஒரு மொக்குத்தனமான கேள்வியை கேட்டேன். 'அப்ப, சண்ட உக்கிரம் அடையேக்க குடும்பத்தோட மலையகத்துக்கு போய் இருக்கலாமே...??'

ஒரு நீண்ட பெருமூச்சு கடந்து குமாரிடமிருந்து ஒரு பதில் பக்காவா வந்து இறங்கியது. எனது விழிகள் விரிய அப்படியே ஆச்சரியத்தில் உறைந்து போனேன்.

'எனக்கு எல்லாமே எண்ட மனுசிதான் தம்பி. அவள் இல்லேன்னா நான் செத்தே போய்டுவன். அவளுக்கு இந்த வன்னிய விட்டு வாறதுக்கு ஒரு துளி கூட விருப்பம் இல்ல.. அவள் தானே எண்ட உசுரு.. அந்த உசுரு போனா அவ கூடவேதான் போகணும்.. அதான் இங்கயே இருந்திட்டன்..!'

'.........'

குறிப்பு: ஆமா சொல்ல மறந்துட்டன், குமாரினுடைய முழுப்பெயர் குமாரவடிவேல். சுமாரா ஒரு அறுபது வயது இருக்கும்.

No comments:

Popular Posts