"எனக்கு குறித்த நபருடன் அல்லது நபர்களுடன் (ஆண்கள்) உறவு இருக்கிறது, அவர்கள்தான் என் குடும்பத்தை பொருளாதார ரீதியில் கவனித்துக்கொள்கிறார்கள்" என்கின்ற அப்பெண்ணின் வார்த்தைகள் எனக்கு அதற்குள் முக்காடு போட்டு ஒளிந்திருக்கின்ற பல உண்மைகளையும், அவள் சொல்ல மறைக்கும் விடயங்களையும் சரியாக மொழிபெயர்துக்காட்டியது. பின்னர் கணவனை நினைத்து அவள் சிந்திய சிறு துளி கண்ணீர் அவள் கணவன் மீதான அன்பையும், இப்பொழுது கணவன் ஸ்தானத்தில் வைத்திருக்கும் ஆண்கள் மீதானா இவளின் தேவையையும் சரியாக தெளிவு படுத்தியது. பிள்ளைகளுக்காகவே நான் இப்படி கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்கின்ற பாணியில் அவளது தவறான பாலியல் தொடர்புகளை நியாயப்படுத்தும் பேச்சில் எனக்கு நூறு விகிதம் உடன்பாடு இல்லை, என்றாலும் அவளது மனிதாபிமான மற்றும் இயலாமை தளத்தில் நின்று ஜோசிக்கையில் கொஞ்சம் நியாயம் இருப்பது போன்று எனது தலை அசைந்தது அவள் பேசும் போது. என்னதான் நியாயப்படுத்தல்கள் வழங்கப்பட்டாலும், முறையற்ற பாலியல் தொடர்புகள் எமது சமூக கலாச்சாரத்தினால் முற்றாக ஏற்றுக்கொள்ளப் படமுடியாத ஒன்று. இருந்தும் இந்த பெண்ணின் தனது உறவு பற்றியதான தெளிவும், நியாயமும் என்னை 'பாலியல் தொடர்புகள்' மீதான பார்வையை கொஞ்சம் மாற்ற முனைந்தது ஏதோ உண்மைதான். அதற்காக அதை நான் முழுமையாக ஆதரிப்பவன் என்பதும், இதில் பிழை இல்லை என்று சொல்லும் யதார்த்தவியல் இது என்றும் அர்த்தம் இல்லை.
வடக்கில் சுமார் 30,000 இற்கும் மேற்பட்ட போரினால் கணவனை இழந்த பெண்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகிறது. அதிலும் அரைவாசிக்கு மேற்பட்டோர் 22 - 28 வயதிற்கு உட்பட்ட இளம் விதவைகள் என்பது கவனிக்கப்படவேண்டிய விடயம். ஆக, இரண்டு காரணிகள் இந்த பெண்களை முறையற்ற பாலியல் தொடர்புகளிற்கு அழைத்துச்செல்லலாம். ஒன்று, இவர்கள் இளம் பெண்கள் என்பதனால் இவர்கள் உடலியல் மற்றும் உணர்வியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த முறையற்ற பாலியல் தொடர்புகளை இவர்களாகவே ஏற்படுத்திக்கொள்ளலாம். இந்தவிடயம், பரிசீலனை செய்யக்கூடிய ஒரு காரணம் என்றாலும் உடலியல் மனிதாபிமான நோக்கில் (கலாச்சார, சமூக... நோக்கில் அல்ல!) இவர்கள் இந்த விடயத்தில் நலிவுற்றவர்கள் (Vulnerable) என எடுத்துக்கொள்ள முடியும். இரண்டாவதாக, பொருளாதார ரீதியில், பொருளாதார நலிவுத்தன்மை காரணமாக இந்த பிரச்சனைக்குள் சிக்குபவர்கள். இவர்கள் வியாபார முறையில் பணத்திற்கு, உடல் என வேறு வழியற்ற தங்கள் பொருளாதார பிரச்சனையை தீர்த்துக்கொள்ள முனைபவர்கள். இவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள உடலை பயன்படுத்துபவர்கள். இருந்தும் இவர்களை வெறுமனே விபச்சாரிகள் என்று சொல்லி விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த இரண்டு வகையான தரப்பினர்களையும் இப்போதைய வடக்கில் அதிகம் காண முடியும். இவற்றில் மிகச்சிறிய அளவிலான தொடர்புகளே முறைப்பாடுகளாகவோ அல்லது விமர்சனங்களாகவோ வெளியில் வந்திருக்கின்றன, வருகின்றன. பெரும்பாலானவை வெளியில் வராமல் இருப்பதற்கு நமது சமூகம் மீதான பயமும், கலாச்சாரம் மீதான மரியாதை பயமும் காரணங்கள் என்று சொல்லலாம். இவ்வாறான பல சம்பவங்களை கிராம மட்டத்தில் மக்களுடன் பணியாற்றும் அரச, அரச சார்பற்ற பணியாளர்களிற்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
அத்தோடு, அடுத்த இன்னுமொரு பாரிய விடயம். பாலியல் சார்ந்த விடயங்கள் எமது இளம் மற்றும் பாடசாலை மாணவ பருவத்தினரிற்கு சரியாக தெரிந்திருக்கின்றதா என்பதும் பல தடவைகளில் என்னை சுற்றிக்கொண்ட கேள்விகளில் ஒன்று. பாலியல் சார்ந்த தெளிவும் அல்லது பாலியல் கல்வியும்/அறிவும் இல்லாமல் அல்லது போதுமான அளவு இல்லாமையும் இப்பொழுது நடக்கின்ற அல்லது இனிவரும் காலங்களில் நடக்க இருக்கின்ற பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு காரணமாக அமைந்து விடுமா என்கின்ற ஒரு கேள்வியும் என்னிடம் இருக்கிறது. அல்லது பாலியல் துஸ்பிரயோகங்களின் பின்னரான பாரிய விளைவுகளிற்கு காரணமாக அமைந்துவிடுமா?
அண்மையில் ஒருமுறை ஒரு பயிற்சிப்பட்டறைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அன்றைய பாலியல் வன்முறைகள் பற்றிய பயிற்சி பட்டறையில் இருபத்து நான்கு பங்கேற்பாளர்களில் இருபது பேர் பெண்கள். அதில் 95 வீதமானோர் திருமணமாகாத, இளம் பெண்கள். அனைவரும் வன்னியின் பல பாகங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களது முகத்தில் சிரிப்பில்லை, அதிகமாய் வெட்கம் முகமெல்லாம் பரந்து விரிந்து கிடந்தது, இந்த தலைப்பை பற்றி பேச, கேட்க, தெரிந்துகொள்ள, அடிமனதில் ஆர்வம் இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளக்கூடாது என கவனமாய் இருந்தது அவர்கள் முகங்கள். அந்த ஆர்வம் மீதான மறைப்பு என் கண்களுக்கு தெளிவாகவே தெரிகிறது. பயிற்சியை வழமை போல் ஆரம்பித்தேன். அதிகமானோரின் கண்கள்முன்னாள் நின்றுகொண்டிருக்கும் என்னை விடுத்து அவர்கள் பெருவிரலையே பார்த்த வண்ணம் இருந்தன. வெட்கமாம்!
எமது பெண்கள் 'பாலியல்'சார்ந்த விடயங்களை தெரிந்துகொள்ள அல்லது பேசுவதற்கு அவை ஏதோ பேசக்கூடாத தூஷண வார்த்தைகளாகவே எண்ணிக்கொள்கின்றனர். அதைப்பற்றி பேசுவது (படித்துக்கொல்வதற்காய்) மகா தவறு என நினைக்கிறார்கள். மறைமுகமாக பெற்றோர்களும் அப்படித்தான் வளர்க்கிறார்கள். அதன் விளைவு, பல பாலியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான அறிவை, தைரியத்தை இவர்கள் பெறாமல் போய்விடுகிறார்கள். பாலியல் சார்ந்த பிரச்சனைகளை வருமுன் காப்பதில் இந்த பாலியல் கல்வி அல்லது அறிவு மிகவும் அவசியம் ஆகிறது. இதில் வெட்கப்படுவதற்கும், பேச ஸ்தம்பித்துப் போவதற்கும் அவசியமே இல்லை.
பயிற்சி பட்டறை தொடர்ந்தது.. நான் அவர்களிடம் கேட்கும் கேள்விகளிற்கு பதில் இல்லை. நான் சொல்பவற்றிற்கு எதிரிலிருந்து குமீர் என்ற சிரிப்பு மட்டும் வருகிறது. பாலியல் - பால் சார்ந்த விடயங்களை பற்றி நான் பேசும் பொழுது ஒரு கலாச்சார + இன துரோகி வகையறாக்களில் என்னை வைத்துப் பார்த்ததும் நினைவிருக்கிறது. பயிற்சியின் இறுதியில், அந்த இளம் பெண்கள் மனம் திறந்து பேசுகிறார்கள் என்னிடம். "எங்கள் கிராமத்தில் இந்த பாலியல் மற்றும் பாலியல் வன்முறைகள் பற்றி இளைஞர்களிற்கு கட்டாயம் விழிப்புணர்வு வேண்டும்", "பெண்களாகிய எங்களிற்கு எங்கள் பற்றிய பல பாலியல் சார்ந்த விடயங்கள் இன்றுதான் தெரிந்துக்கொள்ள முடிந்தது, இதை பற்றி நாங்கள் தெரிந்துகொள்ள முற்பட்டால் எங்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்கின்ற இந்த பயத்தினாலேயே இதுபற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் எங்களிற்கு இல்லாமல் போய்விட்டது", "குடும்பத்தில் கணவனிற்கும் மனைவியிற்கும் ஏற்படும் அதிகமான பிரச்சனைகளுக்கு ஒரு காரணமும் இந்த பாலியல், பால் நிலை பற்றிய தெளிவு அல்லது அறிவு இல்லாமைதான் என்பது இப்பொழுதுதான் தெரிகிறது", "குடும்ப வன்முறைகளுக்கும் இந்த பாலியல் பால் நிலை சார்ந்த விடயங்களிற்கும் இருக்கின்ற தொடர்பு பற்றி நான் இன்றில்லை என்றோ அறிந்திருக்கவேண்டும்", "பாலியல் வன்முறைகள் வெறுமனே கற்பழித்தல் மட்டுமல்ல அதை விட கொடுமையான இவ்வளவு விடயங்கள் இதற்குள் இருக்கிறதே..". கமண்டுகள் வந்து குவிந்தன. இவை அந்த பயிற்சியில் பங்கேற்ற சில பெண்கள் என்னிடம் இறுதியில் கொட்டித்தீர்த்தவை.
ஐரோப்பிய நாடுகளில் ஏன் இந்தியாவில்கூட கட்டாயமாக்கப்பட்டிருக்கும் பாலியல் கல்வியின் முக்கியத்துவம் நம்மவர்களிற்கு தெரியாமல் போனது எனக்கும் என்றைக்கும் ஆச்சரியம் தருபவையே. ஆகக்குறைந்தது, நண்பர்கள், குடும்பம் போன்ற நிலைகளிலாவது இவற்றை வெளிப்படையாக பேசி தெரிந்துகொள்ளும் துணிச்சல் இந்த இளம் பராயத்தினரிற்கு புகுத்தப்பட வேண்டும். அத்தோடு, கலாச்சாரம் என்பது வாழ்கையில் சரியான விடயங்களை கற்றுக்கொள்ள, தவறு என்று நாம் எண்ணும் விடயங்களை கூட ஊடகமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அதேபோல, இங்கு பணியாற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறான சமூக மென் செயற்பாடுகளை (Soft Components) முன்னெடுக்க முன்வர வேண்டும். சமூக மென் பிரச்சனைகளிற்கு தீர்வுகாணாமல் சமூக வன் செயற்பாடுகளையும் கட்டுமானங்களையும் விரிவு படுத்துவதில் பயனில்லை என்பதை சகலரும் உணர வேண்டும். இளைஞர்கள் என்ற இலக்கு குழுவை இலக்கு வைக்கும் செயற்பாடுகள் இப்பொழுது வடக்கில் அதுவும் அபிவிருத்தியை நோக்கிய கட்டத்தில் (Development Phase) மிகவும் முக்கியமானது.
அடுத்த வாரமும் வருவேன்.....
No comments:
Post a Comment