Tuesday, April 29, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்பு​கள் - 04

'என்னடா ஒரு மாதிரியாய் இருக்கிறாய்.. இன்னும் அந்த சம்பவத்த பத்தியே ஜோசிச்சுக்கிட்டு இருக்கியா??' எண்டு அருகில் இருந்த என் நண்பன் தோளில் தட்டிய போதுதான் மீண்டும் சுயநினைவிற்குள் வர முடிந்தது. வாகனம் வேகமாக முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி பறந்து கொண்டிருந்தது.

அவள் கண்ணம்மா. ஒரு இருபத்து நான்கு வயது இருக்கும் எனது மதிப்பில். அவர்கள் வீட்டை தட்டிய போது கதவை முதலில் ஓடிவந்து திறந்தவளும் அவள்தான். வாய் நிறையப் புன்னகை. கண்களில் ஏதோ ஒரு தேடல் ஆனால் பார்வையில் கொஞ்சம் தடுமாற்றம். என்னையும் நண்பனையும் கண்டதும் அவளுக்குள் உருவான அந்த படபடப்பு அவள் முகத்தில் தெட்டத் தெளிவாய் தெரிந்தது. ஏதோ, ஆண்கள் என்றாலே பிசாசுகள் என்கின்ற அளவிற்கு அவள் கதவை சட்டென சாத்தியத்தில் தெரிந்தது. மீண்டும் அவளது தாய் ஓடிவந்து சாத்திய கதவை திறந்து 'உள்ளே வாருங்க தம்பிகளா..' என அந்த அழகான முல்லைத்தீவு தமிழில் உள்ளே அழைத்தாள். நான், எனது நண்பன், கண்ணம்மா மற்றும் அவள் தாய். ஒரே ஒரு நாற்காலி இருந்தும் அந்த ஒன்றை எடுத்துக் கொடுத்து இருக்கும்படி கேட்டுக்கொண்டாள் அந்த அம்மா. அவள் பார்வை ஒரே நாற்காலியில் எப்படி எம் இருவரையும் அமர வைப்பது என்ற சங்கடத்தில் அங்கும் இங்கும் முட்டிமோதிக்கொண்டது. 'கீழ உக்காரலாம் அம்மா..' என கூறியபடி அவள் அடுத்த கையில் இருந்த ஓலைப்பாயை வாங்கி நாங்களே விரித்து அதன்மேல் அமர்ந்துகொண்டோம்.

பேச்சின் ஆரம்பமே இழப்புக்களில் தொடங்கியது. தொடர்ந்து பல வகையான தலைப்புகளில் பேச்சு போய்கொண்டிருந்தது. முள்ளிவாய்க்காலும் பொக்கனையும் நந்திக்கடலும் அடிக்கடி உச்சரிக்கப்பட்டது. கொஞ்சம் அழுகை, கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் ஏக்கம் என சகல உணர்வு வெளிப்பாடுகளும் அந்த அம்மா முகத்தில் தோன்றி மறைந்துகொண்டிருந்தது. இடைவெளிக்குள் 'தேத்தண்ணி ஊத்தட்டா மகன்?' அம்மாவின் அழைப்பில் ஒரு தூய்மை தெரிந்தது. வேண்டாம் என்று சொல்லி அவள் சந்தோசத்தை கெடுக்க மனமில்லாமல் 'நிற்சயமாக' என எனது வாய் மொழிந்தது. ஐந்து நிமிடம் அவள் அந்த இடத்தில் இல்லை. தேநீர் தயாரித்துக்கொண்டிருக்கிறாள். அந்த ஐந்து நிமிடத்தில் இங்கு நான், நண்பன், கண்ணம்மா. கண்ணம்மாவிடம் ஏதாவது பேசலாம் என முயன்ற ஒவ்வொரு தடவையும் எனக்கும் என் நண்பனுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. கண்ணம்மா ஒரு வேளை வாய் பேச முடியாதவளாய் இருக்கலாம். நாம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் அவள் 'கலப்படமற்ற அப்பாவிப் புன்னகை'. அவளுடன் பேசுவதில் தோல்வியே இறுதியானது. அம்மா தேநீரோடு வருகிறாள். 'மகன், அவள் என்னைப்போல பேசமாட்டாள்! அனால் ஊமையும் இல்லை!!' அம்மா சொன்ன இந்த வார்த்தைகள் எங்களுக்கு புரிந்ததாய் இல்லை. எனது விழிகள் மீண்டும் அம்மாவை பார்த்து வெட்டி முட்டி விழிக்க எனக்கு எதுவும் விளங்கவில்லை என்பதை அவள் சுதாகரித்துக்கொண்டாள்.

தேநீர் நாக்கை கொஞ்சம் பதம் பார்த்தது.. சூடு கொஞ்சம் அதிகம். பேச்சு மீண்டும் ஆரம்பமானது. எனது எதிர்பார்ப்போ கண்ணாமா பற்றிய தேடலாகவே இருந்தது. 'கண்ணம்மாவிற்கு என்ன ஆகியிருக்கும்?' இது என் மனம் பூராகவும் வியாபித்து குருதிக்கலன்களை கொஞ்சம் கொஞ்சமாய் நசுக்க ஆரம்பித்தது. தாமதம் வேண்டாம் கேட்டு விடலாம். முடிவெடுத்த நான் 'அம்மா கண்ணம்மா நலமாக இருக்கிறாளா?? இல்லை ஏதும் சுகவீனங்களா??' கேள்வி கொஞ்சம் நேரடியாகவே இறங்கியது. அம்மாவிடமிருந்து பதில் வரும் முன்னமே அந்த வயதாகிய ஓரக் கண்களில் நீர்மட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. அழுது அழுது ஓர் இடியை இறக்கினாள் எங்கள் மனதில். 'தம்பி கண்ணம்மா திருமணமாகவில்லை அனால் அவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அவனுக்கு மூன்று வயதாகிறது.....' என கூறிமுடித்து 'கரன்...' என அழைக்கையில் ஒரு சிறுவன் திடிரென வந்து நின்றான் நடுவில். அவனை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. எங்கள் இருவரையும் பார்த்து நிறுத்தாமல் சிரித்துக்கொண்டு அவன் தாய் கண்ணம்மா மடியில் அழகாய் உட்கார்ந்துகொண்டான். அம்மா தொடர்ந்தாள். அவள் இடைவிடாத கண்ணீர் என் கண்களுக்குள்ளும் பாய்ந்தது.

கண்ணம்மா இடம்பெயர்வின் போது தனது தந்தையையும் அண்ணனையும் ஒரே பங்கருக்குள் ஒரே நாளில் இரண்டு செல்களுக்கு பறிகொடுத்திருந்தாள். அந்த அதிர்ச்சியில் இவள் சித்தம் கலங்கி சுயநினைவிளந்தவளாக உளவியல் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பலனின்றி மீண்டும் தனது அம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறாள். இந்த நிலையில் அந்த கொடூரமான நாள் வந்தது. எவனோ ஒருவன் கண்ணம்மா மட்டும் தனியாக வீட்டில் இருப்பதை அறிந்து அங்கு போய் சுயமாக எதையும் சிந்திக்க தெரியாத, புத்தி சுயாதீனமற்ற இந்த ஏழை கண்ணம்மாவை புணர்ந்திருக்கிறான். நீண்ட நாட்களின் பின்னர் அவள் கருத்தரித்திருப்பதை கண்டுகொண்ட அவள் தாய் எதுவுமே தெரியாதவளாய், எதுவும் செய்ய முடியாதவளாய் அந்த குழந்தைக்கு பிரசவம் பார்த்து அந்த சிறுவனை வெளியில் எடுத்திருக்கிறாள். கரன் பிறந்துவிட்டான் கண்ணம்மாவிற்கு. கரனின் தந்தை அதுதான் அந்த கபோதி யாரென இன்றுவரை கண்ணம்மாவிற்கோ அவள் தாய்க்கோ தெரியவில்லை. இன்னும் கண்ணம்மாவிற்கு என்ன நடந்தது என்பதில் தெளிவில்லை. பாவம் அவள்.

எனது கண்கள் முழுவதும் நனைந்தது. அப்பொழுதும் கூட எதுவுமே தெரியாதவர்களாய் கண்ணம்மாவும் கரனும் என்னைப்பார்த்து புன்னகைக்கிறார்கள். நான் புன்னகைப்பதா இல்லை அழுவதா? என்ன கொடுமை கடவுளே என கொஞ்சம் கடிந்துகொண்டேன். அம்மாவை சமாதானம் செய்வதில் நண்பன் மும்முரமாக இருந்தான். நானோ கரனோடு பேசுவதிலும் அவன்கூட விளையாடுவதிலும் குறியாய் இருந்தேன். விடைபெறும் நேரம் நெருங்க, எனக்கோ அந்த இடத்தை விலகுவதில் விருப்பம் இருக்கவில்லை. அங்கு இருந்து தொடர்ந்து பேசவும் வார்த்தைகளில்லை. கண்ணம்மாவில் இப்பொழுது கொஞ்சம் முன்னேற்றம் தெரிவதாக அம்மா சொன்னாள். எனக்கோ அவள் இப்படியே இருந்துவிடுவதுதான் அவளுக்கு நல்லது என தோன்றியது. இல்லையேல், அவள் குணமடைந்தால் நம் சமூகம் மீண்டும் அவளை இந்த நிலைக்கு கொண்டுவந்துதான் சேர்க்கும். அந்த வீடு அவளுக்கு சிறைதான். ஆனாலும் வெளியில் வந்தால் அவளுக்கு இரண்டு பெயர்களை சூட்டும் நம் சமூகம். ஒன்று லூசு! இன்னொன்று 'நடத்தைகெட்டவள்'. கடவுளே இவள் இப்படியே இருந்துவிடட்டும். குணமடைய வேண்டாம். இது எனது பிரார்த்தனை.
 

Tuesday, April 22, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்பு​கள் - 03

பல கனவுகளை சுமந்து வாழ்பவர்கள் நாம். சில கனவுகள் எங்களோடு இன்னும் கூடவே வருகிறது. சில கனவுகள் பாதியில் முடிந்து போனது. என்னவோ, அவை பாதியில் முடிந்து போனாலும் அதன் துகள்களை எங்கோ மனதின் ஓரத்தில் இன்னும் வைத்துக்கொண்டுதான் பயணிக்க வேண்டியிருக்கிறது. எமது வரலாற்றில் வீரத்தை எந்தளவிற்கு புகழுறச்செய்தோமோ அதேபோல காதலிலும் கணையாளிகளை கடந்து வந்தவர்கள் நாங்கள். எமது வரலாற்றின் அத்தனை பக்கங்களிலும் காதல் என்ற ஒரு தலைப்பு இருந்துதான் இருக்கிறது. காதல் புனிதமானதும் ஆத்மார்ந்தமானதும் என்பதற்கு நம் ஈழத்து காதல்களை அடித்துக்கொள்ள உலகில் யாராலும் முடியுமா என்பதை நான் அறியேன். ஆனாலும், மதம், சாதி ஆகிய வேலிகளைத் தாண்டி எங்கள் காதல்கள் ஜெயிப்பது கடினமாயினும் பல காதல்கள் வென்றிருக்கின்றன. இது நீண்ட விவாதங்களை கொண்டுவரும் விடயம். ஆகவே அதை இன்னுமொரு அங்கத்தில் முழுவதுமாக அலசிப்பார்த்திடலாம். இப்போதைக்கு இந்த நாட்குறிப்பை வாசித்திடலாம்.

நான் குமாரை இதற்கு முதல் என்றுமே பார்த்ததில்லை. அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. அன்றும் அவரை நான் சந்திப்பேன் என்பதை நான் சத்தியமாக அறிந்திருக்கவில்லை. எல்லாமே சாதாரணமாக நடந்து முடிந்தது. குமார் இப்பொழுதும் ஒரு குதிரை போர்வீரன் போலவே கெத்தாக இருக்கிறார். அவரது கையின் புயங்களை கொஞ்சம் பிடித்துப்பார்க்க ஆசைப்பட்டேன் ஆனாலும் அது அழகில்லை என அடக்கிக்கொண்டேன். கொஞ்சம் நீண்ட முடி, ரசிகன் அவர்! எண்ணை வைத்து நேராக மேவி இழுத்து விட்டிருக்கிறார். மாமரந்த்தின் இலைகளுக்கிடையில் பிய்த்துக்கொண்டு அவர் தலைமேல் வந்திறங்கும் சூரியக்கதிர்களில் எண்ணெய் தடவிய ஒவ்வொரு முடியும் அப்பப்போ கண்வெட்டி மின்னுகிறது. வாங்க தம்பி என உண்மையான சிரிப்பொன்றை உதிர்த்தபடி 'உள்ள உக்காரலாமா இல்ல இந்த மரநிழலில உக்கார விருப்பமா???' என கொஞ்சம் தயக்கமாக கேட்டார். 'ஏன் அழகிய வருடும் காத்துக்கு தடை போடுவானேன், இங்கவே இருந்துக்கலாம்...' என்றேன். மாமர நிழலை விரும்பாதவர்கள் இருக்கமுடியுமா என்ன.. அதுவும் வன்னி மாமரங்கள் கலைத்துவம் கொண்டவை. வழமையான நிழலோடு ஏதோ ஒரு ஆறுதல் சுவாசத்தையும் சேர்த்தே நம்மேல் கொட்டுபவை.

ஒரு கால் உடைந்திருந்தது. அதனால் மூன்றுகால்களில் மட்டும் நின்றுகொண்டிருந்தது ஒரு பிளாஸ்டிக் கதிரை. அதில் தான் அமர்கிறேன் என மாமரத்துடன் முண்டுக்கொடுத்து குமார் அமர்ந்துகொள்ள நான் ஒரு புத்தம்புது கதிரையில் அமர்த்தப்பட்டேன். நானும் மறுத்தாலும் கடைசியில் அவர் அன்பால் கட்டப்பட்டு அதிலேயே அமர்ந்துகொள்ள வேண்டியதாயிற்று. மாமரமும் குமாரின் சிரிப்பும் என்னை அங்கேயே இருந்துவிடலாமோ என ஜோசிக்க வைத்தது. அது முல்லைத்தீவிற்கும் கிளிநொச்சியிற்கும் இடையில் இருக்கும் ஒரு அழகிய கிராமம். சூரியனையும் நம்மையும் பிரித்து திரைபோட்டிருக்கும் அந்த அழகிய பெரும் மரங்கள். அரசியலை தவிர்த்து மற்ற சகலவற்றையும் பேசிக்கொண்டிருந்தோம். இடையில் 'தம்பி என்ன குடிக்கிறீங்க? தேத்தண்ணி, அல்லது கூலாயிருக்கும் தெம்பிலி குடிக்கிறீங்களா??' கொஞ்சம் மறந்துபோயிருந்த தாகத்தை தட்டி எழுப்பினார் குமார். நான் அறியாமலேயே என் கண்களும் உதடும் 'தெம்பிலி' என பதில் சொல்லியிருக்க வேண்டும், 'இங்கே, அந்த சின்ன மரத்தில நல்ல தெம்பிலியா பாத்து ஒண்ட பிச்சு கொண்டுவா!' என மனைவியை அழைத்து பெரிய சத்தத்தில் கூறிமுடித்தார் குமார். மாமர நிழலும், சுத்தமான தெம்பிலியும்.. அப்பப்பா அதை வர்ணிக்க வார்த்தைகளில்லை. கொழும்பில் கொட்டும் வெயிலில் வீதியோரத்தில், பறித்து மூன்று நாளாகிய தெம்பிலியை வாங்கி மடக் மடக் என பருக்கும் நமக்கு இது எத்தனை சுகம்!

'ஆமா, வீட்டில எத்தின பேரு?' குமாரைப்பார்த்து கொஞ்சம் ஆர்வத்தோடு கேட்டேன். மெதுவாய் சிரித்துவிட்டு 'அப்ப மூணு பேரு. இப்ப ரெண்டு பேரு!' என பதிலளித்தார் குமார். நானோ கொஞ்சம் டியூப் லயிட். வெக்கத்தை விட்டு 'அப்பிடீனா??' என விழித்தேன். 'புரியலையா தம்பி.. யுத்தத்துக்கு முன்னம் மூணு, யுத்தத்துக்கு பின்னாடி ரெண்டு..!' இப்பொழுது நன்றாக புரிந்தது. அதுவரை அவ்வளவு சந்தோசமாக பேசிக்கொண்டிருந்த குமாரை எனது இந்த கேள்வி நிச்சயமாக சலனப்படுத்தியிருக்க வேண்டும். அதுவரை முகத்தில் பிரகாசமாய் எரிந்த சூரியன் மங்கிக்கொண்டிருந்தான். கண்களின் ஓரத்தில் சொட்டாய் ஒரு நீர்த்துளியை பார்த்தேன். அந்த சொட்டு பட்டென கீழே விழாமல் தனது விரலால் ஒத்தி எடுத்துக்கொண்டார் குமார். எனக்கோ 'என்ன கருமத்துக்கடா இதை கேட்டு தொலைத்தாய்??' என என்னையே கடிந்துகொள்ளவேண்டியதாயிற்று. 'மன்னிக்கணும்...' என கதிரையின் நுனிக்கு வந்தேன். 'அதெல்லாம் ஒண்டுமில்ல தம்பி...' என கதிரையில் சாய்ந்துகொண்டு மாமரக்கிளைகளை பார்த்துக்கொண்டிருந்தார் குமார். 'ஒரே ஒரு பெட்டப்பிள்ளை தம்பி.. சாவுற வயசா அவளுக்கு.. அப்பவும் அவளத்தான் முதல பங்கருக்குள்ள போ எண்டனான்...கேட்டாளோ.!!!' என முழுவதுமாக கண்கலங்க ஆரம்பித்தார் குமார். இது நான் பேசக்கூடாத விடயம் என அவர் அழுகையில் நனைந்த கன்னங்கள் சொன்னது. திரும்பவும் 'மன்னிக்கணும்' என கூறி பேச்சின் போக்கை மாத்த பெரும் முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்தேன். அதற்குள் தெம்பிலி வந்து சேர்ந்தது..

கொஞ்சம் பேச்சு கொஞ்சம் தெம்பிலி என நேரம் கடந்துகொண்டிருந்தது. குமார் கொஞ்சம் இயல்பாக பேச ஆரம்பித்தார். நான் மீண்டும் இதைப்பற்றி பேசவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

'உங்க வீடு அழகா இருக்கு...' என பேச்சை மாத்தினேன்.

'எல்லாம் தரமட்டம் தம்பி, இப்பதான் ஒருமாரி கட்டி முடிச்சம்..'

ஓலையால் வேயப்பட்ட சின்ன குடிசை என்றாலும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாயும் கலை நயமிக்கதாகவும் இருந்தது. இவ்வாறான அழகிய சின்ன குடிசைக்குள் வசிப்பதற்கு எனக்கு கொள்ளை ஆசை.

'அப்ப, விவசாயம்தானா?'

'ஆமா தம்பி, வீட்டோட ஒரு மூணு ஏக்கர் காணி கிடக்கு.. அதில ஏதாச்சும் பயிர் பச்சைய வச்சுக்கிறது.. முடிஞ்சா கொஞ்சம் நெல்லும் விதைப்பன்..'

'ஆமா, உங்க சொந்த ஊரே இதுதானா?'

'எனக்கு மலநாடு தம்பி.. ஆனா இவட சொந்த ஊரு இதுதான்..!'

'அட, நீங்க மலைநாடா?? ஆமா எதுக்கு இங்க வந்தீங்க???' சிரித்துகொண்டு நக்கலாக குமாரைப்பார்த்து கேட்டேன்.

'அது பெரிய கத..' சொல்லி கடைவாயினுள் சிரித்தார் குமார். நிரச்சயமாக இதற்கு பின்னால் ஒரு சூப்பர் கதை இருக்க வேண்டும் என்பதை அவரது சிரிப்பும், உடனடியாகவே மனைவியை ஓரக்கண்ணால் பார்த்த பார்வையும் உறுதி செய்து கொண்டன.

'முந்தி நான் அப்பா கூட அடிக்கடி பிஸினசுக்கு இங்க வந்து போறது... அப்பிடியே இங்க செட்டில் ஆகிட்டன்..' மீண்டும் மனைவியை பார்த்து வெட்கப்பட்டு சொன்னார் குமார்..

'அப்ப... லவ்வா...???' மீண்டும் எனது பாணியில் ஒரு நக்கல்.. குமாரும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்கிறார்கள். வெட்கம் அவர் மனைவியை மூடவே அருகில் இருந்த ஒரு மாவிலையை எடுத்து மணலில் ஏதோ வந்ததையெல்லாம் கீறி அளித்துக்கொண்டிருந்தார்.

'..ஆமா..!' பதில் வந்தாயிற்று.

'சோ உங்க உறவினர்கள் எல்லாம் மலைநாட்டில இருக்கினம்.. அப்படித்தானே.. நல்லபடி தொடர்பு இருக்கா...?

'ஆமா, ஆமா. போனவாரமும் தம்பி வந்து பாத்துட்டுதான் போனான்..'

' அதுசரி கடைசி சண்ட நேரம்.. எங்க...?' மெதுவாய் இழுத்தேன். அவர் பதில் நீண்டு போனது.. இடம் பெயர்ந்த இடங்களையெல்லாம் வரிசையில் கூறிமுடித்தார். இறுதியாக வழக்கம் போல் ஒரு மொக்குத்தனமான கேள்வியை கேட்டேன். 'அப்ப, சண்ட உக்கிரம் அடையேக்க குடும்பத்தோட மலையகத்துக்கு போய் இருக்கலாமே...??'

ஒரு நீண்ட பெருமூச்சு கடந்து குமாரிடமிருந்து ஒரு பதில் பக்காவா வந்து இறங்கியது. எனது விழிகள் விரிய அப்படியே ஆச்சரியத்தில் உறைந்து போனேன்.

'எனக்கு எல்லாமே எண்ட மனுசிதான் தம்பி. அவள் இல்லேன்னா நான் செத்தே போய்டுவன். அவளுக்கு இந்த வன்னிய விட்டு வாறதுக்கு ஒரு துளி கூட விருப்பம் இல்ல.. அவள் தானே எண்ட உசுரு.. அந்த உசுரு போனா அவ கூடவேதான் போகணும்.. அதான் இங்கயே இருந்திட்டன்..!'

'.........'

குறிப்பு: ஆமா சொல்ல மறந்துட்டன், குமாரினுடைய முழுப்பெயர் குமாரவடிவேல். சுமாரா ஒரு அறுபது வயது இருக்கும்.

கருகிய காலத்தின் நாட்குறிப்பு​கள் - 02

"எனக்கு குறித்த நபருடன் அல்லது நபர்களுடன் (ஆண்கள்) உறவு இருக்கிறது, அவர்கள்தான் என் குடும்பத்தை பொருளாதார ரீதியில் கவனித்துக்கொள்கிறார்கள்" என்கின்ற அப்பெண்ணின் வார்த்தைகள் எனக்கு அதற்குள் முக்காடு போட்டு ஒளிந்திருக்கின்ற பல உண்மைகளையும், அவள் சொல்ல மறைக்கும் விடயங்களையும் சரியாக மொழிபெயர்துக்காட்டியது. பின்னர் கணவனை நினைத்து அவள் சிந்திய சிறு துளி கண்ணீர் அவள் கணவன் மீதான அன்பையும், இப்பொழுது கணவன் ஸ்தானத்தில் வைத்திருக்கும் ஆண்கள் மீதானா இவளின் தேவையையும் சரியாக தெளிவு படுத்தியது. பிள்ளைகளுக்காகவே நான் இப்படி கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்கின்ற பாணியில் அவளது தவறான பாலியல் தொடர்புகளை நியாயப்படுத்தும் பேச்சில் எனக்கு நூறு விகிதம் உடன்பாடு இல்லை, என்றாலும் அவளது மனிதாபிமான மற்றும் இயலாமை தளத்தில் நின்று ஜோசிக்கையில் கொஞ்சம் நியாயம் இருப்பது போன்று எனது தலை அசைந்தது அவள் பேசும் போது. என்னதான் நியாயப்படுத்தல்கள் வழங்கப்பட்டாலும், முறையற்ற பாலியல் தொடர்புகள் எமது சமூக கலாச்சாரத்தினால் முற்றாக ஏற்றுக்கொள்ளப் படமுடியாத ஒன்று. இருந்தும் இந்த பெண்ணின் தனது உறவு பற்றியதான தெளிவும், நியாயமும் என்னை 'பாலியல் தொடர்புகள்' மீதான பார்வையை கொஞ்சம் மாற்ற முனைந்தது ஏதோ உண்மைதான். அதற்காக அதை நான் முழுமையாக ஆதரிப்பவன் என்பதும், இதில் பிழை இல்லை என்று சொல்லும் யதார்த்தவியல் இது என்றும் அர்த்தம் இல்லை.

வடக்கில் சுமார் 30,000 இற்கும் மேற்பட்ட போரினால் கணவனை இழந்த பெண்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகிறது. அதிலும் அரைவாசிக்கு மேற்பட்டோர் 22 - 28 வயதிற்கு உட்பட்ட இளம் விதவைகள் என்பது கவனிக்கப்படவேண்டிய விடயம். ஆக, இரண்டு காரணிகள் இந்த பெண்களை முறையற்ற பாலியல் தொடர்புகளிற்கு அழைத்துச்செல்லலாம். ஒன்று, இவர்கள் இளம் பெண்கள் என்பதனால் இவர்கள் உடலியல் மற்றும் உணர்வியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த முறையற்ற பாலியல் தொடர்புகளை இவர்களாகவே ஏற்படுத்திக்கொள்ளலாம். இந்தவிடயம், பரிசீலனை செய்யக்கூடிய ஒரு காரணம் என்றாலும் உடலியல் மனிதாபிமான நோக்கில் (கலாச்சார, சமூக... நோக்கில் அல்ல!) இவர்கள் இந்த விடயத்தில் நலிவுற்றவர்கள் (Vulnerable) என எடுத்துக்கொள்ள முடியும். இரண்டாவதாக, பொருளாதார ரீதியில், பொருளாதார நலிவுத்தன்மை காரணமாக இந்த பிரச்சனைக்குள் சிக்குபவர்கள். இவர்கள் வியாபார முறையில் பணத்திற்கு, உடல் என வேறு வழியற்ற தங்கள் பொருளாதார பிரச்சனையை தீர்த்துக்கொள்ள முனைபவர்கள். இவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள உடலை பயன்படுத்துபவர்கள். இருந்தும் இவர்களை வெறுமனே விபச்சாரிகள் என்று சொல்லி விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த இரண்டு வகையான தரப்பினர்களையும் இப்போதைய வடக்கில் அதிகம் காண முடியும். இவற்றில் மிகச்சிறிய அளவிலான தொடர்புகளே முறைப்பாடுகளாகவோ அல்லது விமர்சனங்களாகவோ வெளியில் வந்திருக்கின்றன, வருகின்றன. பெரும்பாலானவை வெளியில் வராமல் இருப்பதற்கு நமது சமூகம் மீதான பயமும், கலாச்சாரம் மீதான மரியாதை பயமும் காரணங்கள் என்று சொல்லலாம். இவ்வாறான பல சம்பவங்களை கிராம மட்டத்தில் மக்களுடன் பணியாற்றும் அரச, அரச சார்பற்ற பணியாளர்களிற்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

அத்தோடு, அடுத்த இன்னுமொரு பாரிய விடயம். பாலியல் சார்ந்த விடயங்கள் எமது இளம் மற்றும் பாடசாலை மாணவ பருவத்தினரிற்கு சரியாக தெரிந்திருக்கின்றதா என்பதும் பல தடவைகளில் என்னை சுற்றிக்கொண்ட கேள்விகளில் ஒன்று. பாலியல் சார்ந்த தெளிவும் அல்லது பாலியல் கல்வியும்/அறிவும் இல்லாமல் அல்லது போதுமான அளவு இல்லாமையும் இப்பொழுது நடக்கின்ற அல்லது இனிவரும் காலங்களில் நடக்க இருக்கின்ற பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு காரணமாக அமைந்து விடுமா என்கின்ற ஒரு கேள்வியும் என்னிடம் இருக்கிறது. அல்லது பாலியல் துஸ்பிரயோகங்களின் பின்னரான பாரிய விளைவுகளிற்கு காரணமாக அமைந்துவிடுமா?

அண்மையில் ஒருமுறை ஒரு பயிற்சிப்பட்டறைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அன்றைய பாலியல் வன்முறைகள் பற்றிய பயிற்சி பட்டறையில் இருபத்து நான்கு பங்கேற்பாளர்களில் இருபது பேர் பெண்கள். அதில் 95 வீதமானோர் திருமணமாகாத, இளம் பெண்கள். அனைவரும் வன்னியின் பல பாகங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களது முகத்தில் சிரிப்பில்லை, அதிகமாய் வெட்கம் முகமெல்லாம் பரந்து விரிந்து கிடந்தது, இந்த தலைப்பை பற்றி பேச, கேட்க, தெரிந்துகொள்ள, அடிமனதில் ஆர்வம் இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளக்கூடாது என கவனமாய் இருந்தது அவர்கள் முகங்கள். அந்த ஆர்வம் மீதான மறைப்பு என் கண்களுக்கு தெளிவாகவே தெரிகிறது. பயிற்சியை வழமை போல் ஆரம்பித்தேன். அதிகமானோரின் கண்கள்முன்னாள் நின்றுகொண்டிருக்கும் என்னை விடுத்து அவர்கள் பெருவிரலையே பார்த்த வண்ணம் இருந்தன. வெட்கமாம்!

எமது பெண்கள் 'பாலியல்'சார்ந்த விடயங்களை தெரிந்துகொள்ள அல்லது பேசுவதற்கு அவை ஏதோ பேசக்கூடாத தூஷண வார்த்தைகளாகவே எண்ணிக்கொள்கின்றனர். அதைப்பற்றி பேசுவது (படித்துக்கொல்வதற்காய்) மகா தவறு என நினைக்கிறார்கள். மறைமுகமாக பெற்றோர்களும் அப்படித்தான் வளர்க்கிறார்கள். அதன் விளைவு, பல பாலியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான அறிவை, தைரியத்தை இவர்கள் பெறாமல் போய்விடுகிறார்கள். பாலியல் சார்ந்த பிரச்சனைகளை வருமுன் காப்பதில் இந்த பாலியல் கல்வி அல்லது அறிவு மிகவும் அவசியம் ஆகிறது. இதில் வெட்கப்படுவதற்கும், பேச ஸ்தம்பித்துப் போவதற்கும் அவசியமே இல்லை.

பயிற்சி பட்டறை தொடர்ந்தது.. நான் அவர்களிடம் கேட்கும் கேள்விகளிற்கு பதில் இல்லை. நான் சொல்பவற்றிற்கு எதிரிலிருந்து குமீர் என்ற சிரிப்பு மட்டும் வருகிறது. பாலியல் - பால் சார்ந்த விடயங்களை பற்றி நான் பேசும் பொழுது ஒரு கலாச்சார + இன துரோகி வகையறாக்களில் என்னை வைத்துப் பார்த்ததும் நினைவிருக்கிறது. பயிற்சியின் இறுதியில், அந்த இளம் பெண்கள் மனம் திறந்து பேசுகிறார்கள் என்னிடம். "எங்கள் கிராமத்தில் இந்த பாலியல் மற்றும் பாலியல் வன்முறைகள் பற்றி இளைஞர்களிற்கு கட்டாயம் விழிப்புணர்வு வேண்டும்", "பெண்களாகிய எங்களிற்கு எங்கள் பற்றிய பல பாலியல் சார்ந்த விடயங்கள் இன்றுதான் தெரிந்துக்கொள்ள முடிந்தது, இதை பற்றி நாங்கள் தெரிந்துகொள்ள முற்பட்டால் எங்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்கின்ற இந்த பயத்தினாலேயே இதுபற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் எங்களிற்கு இல்லாமல் போய்விட்டது", "குடும்பத்தில் கணவனிற்கும் மனைவியிற்கும் ஏற்படும் அதிகமான பிரச்சனைகளுக்கு ஒரு காரணமும் இந்த பாலியல், பால் நிலை பற்றிய தெளிவு அல்லது அறிவு இல்லாமைதான் என்பது இப்பொழுதுதான் தெரிகிறது", "குடும்ப வன்முறைகளுக்கும் இந்த பாலியல் பால் நிலை சார்ந்த விடயங்களிற்கும் இருக்கின்ற தொடர்பு பற்றி நான் இன்றில்லை என்றோ அறிந்திருக்கவேண்டும்", "பாலியல் வன்முறைகள் வெறுமனே கற்பழித்தல் மட்டுமல்ல அதை விட கொடுமையான இவ்வளவு விடயங்கள் இதற்குள் இருக்கிறதே..". கமண்டுகள் வந்து குவிந்தன. இவை அந்த பயிற்சியில் பங்கேற்ற சில பெண்கள் என்னிடம் இறுதியில் கொட்டித்தீர்த்தவை.

ஐரோப்பிய நாடுகளில் ஏன் இந்தியாவில்கூட கட்டாயமாக்கப்பட்டிருக்கும் பாலியல் கல்வியின் முக்கியத்துவம் நம்மவர்களிற்கு தெரியாமல் போனது எனக்கும் என்றைக்கும் ஆச்சரியம் தருபவையே. ஆகக்குறைந்தது, நண்பர்கள், குடும்பம் போன்ற நிலைகளிலாவது இவற்றை வெளிப்படையாக பேசி தெரிந்துகொள்ளும் துணிச்சல் இந்த இளம் பராயத்தினரிற்கு புகுத்தப்பட வேண்டும். அத்தோடு, கலாச்சாரம் என்பது வாழ்கையில் சரியான விடயங்களை கற்றுக்கொள்ள, தவறு என்று நாம் எண்ணும் விடயங்களை கூட ஊடகமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அதேபோல, இங்கு பணியாற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறான சமூக மென் செயற்பாடுகளை (Soft Components) முன்னெடுக்க முன்வர வேண்டும். சமூக மென் பிரச்சனைகளிற்கு தீர்வுகாணாமல் சமூக வன் செயற்பாடுகளையும் கட்டுமானங்களையும் விரிவு படுத்துவதில் பயனில்லை என்பதை சகலரும் உணர வேண்டும். இளைஞர்கள் என்ற இலக்கு குழுவை இலக்கு வைக்கும் செயற்பாடுகள் இப்பொழுது வடக்கில் அதுவும் அபிவிருத்தியை நோக்கிய கட்டத்தில் (Development Phase) மிகவும் முக்கியமானது.அடுத்த வாரமும் வருவேன்.....


Monday, April 7, 2014

கருகிய காலத்தின் நாட்குறிப்புகள் - 01

வணக்கம். கருகிய காலத்தின் சில நாட்குறிப்புக்களை படிப்பதற்கு உங்களை அன்போடு அழைக்கிறேன். நாட்குறிப்புக்களை வாசித்தல் எப்பொழுதும் பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கும் ஒரு அழகிய அனுபவமாகவே நம் எல்லோருக்கும் இருக்கும். அந்த நாட்குறிப்புக்கள் பல சந்தோஷமான சம்பவங்களையோ அல்லது துக்ககரமான சம்பவங்களையோ ஞாபகப்படுத்துவதாய் இருக்கலாம். இரண்டையும் மீட்டிப்பார்த்தல் ஒரு நல்ல அனுபவம்தான். சந்தோசமான நாட்குறிப்புகள் மீண்டும் அந்த மகிழ்ச்சியை மனங்களில் தூவிப்போகலாம். துக்ககரமான குறிப்புக்கள் நம்மை சஞ்சலமடையச் செய்து சில வரலாறுகளையும் படிப்பினைகளையும் கற்றுக்கொள்ள உதவலாம். ஆக, பகல் கடந்தால் இரவு வருவது தவிர்க்கமுடியாதது போல, வாழ்வின் மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை புறம்தள்ளிட முடியாது. அது இயற்கைக்கு புறம்பானது. அந்தவகையில்தான் இந்த நாட்குறிப்புகளும் இரண்டு வகையான சம்பவங்களையும் பேசிப்போகும். சில குறிப்புகள் உங்களிற்கு மகிழ்ச்சியை வரப்பண்ணலாம். சில குறிப்புகள் கண்ணீரை உண்டுபண்ணலாம். ஒளியையும் இருளையும் ஏற்றுக்கொள்ள தயாராயிருக்கும் நாட்களைப்போல நாமும் இந்த நாட்குறிப்புகள் கொடுக்கப்போகும் மகிழ்ச்சிக்கும் கண்ணீருக்கும் தயாராகுவோம்.

ஒவ்வொருவாரமும் இந்தப் பகுதியில் உங்களை ஒவ்வொரு நாட்குறிப்புகளோடு சந்திப்பேன். இந்த தொடரானது நமது வாழ்வு, நமது மண், நமது மொழி, நமது கலாச்சாரம், நமது பண்பாடு, நமது சமயம் போன்றவற்றை பேசி நகரும். அதிலும் மிக முக்கியமாக நம் கண்ணீர்கள் வற்றிப்போன கருகிய காலத்தின் நினைவுகளை அதிகம் பேசும். தனியாக தவிக்கவிடப்பட்டிருகின்ற நம் சகோதர சகோதரிகளின் வாழ்வியலைப் பேசும். போர் தின்று துப்பிய சக்கைகளையும், அந்த சக்கைகள் உயிர்பெற முனையும் அவலங்களையம் கலப்படமில்லாமல் பேசும். இந்த நாட்குறிப்புகள் நான் கேட்ட, பார்த்த, கேள்விப்பட்ட நமது தேசத்தின் அவலங்களை பட்டியலிடும். நிற்சயமாக அரசியல் தவிர்க்கப்படும். உணர்வுகள் கொட்டப்படும். இது எமது வாழ்வையும், அழகையும், ஏன் அவலத்தையும் பேசும் குறிப்புகள். இந்தத்தொடர், கட்டுரையாகவோ, சிறுகதையாகவோ, பத்தியாகவோ கோர்க்கப்படலாம். எதுவாயினும், நீங்கள் நிற்சயமாக  உணர்வு பூர்வமாக என்னுடன் பயணிக்கலாம். அதேபோல  மறந்துவிடாதீர்கள், உங்கள் காத்திரமான கருத்துக்களும் விமர்சனங்களும் எனது தீபத்திற்கு எண்ணெய் ஊற்றுவதாக அமையும். சரி, இந்தவார நாட்குறிப்பிற்கு போகலாம்..

இந்த தொடரின் முதல் குறிப்பு.. எதையாவது பிரயோசனமாக பேசவேண்டுமே. ஆரம்பமே அமர்களமாய் இருக்க வேண்டாமா? அப்படியெனின், போரிற்கு பிற்பட்ட காலங்களில் தமிழ் பிரதேசங்களில் என்னை அதிகம் பாதித்த ஒரு முக்கியமான சமூக பிரச்சனை தொடர்பாக பேசலாம். ஆனாலும் இது மிகவும் கூர்மையான (Sensitive) விடயம். போர் கொண்டுவந்து எம்மேல் திணித்த அநியாயங்களில் இதுவும் ஒன்று. சரி தீட்டியது போதும், வாளை எடுப்போம்.

'பாலியல்', 'வன்புணர்வு', 'முறையற்ற உடல் தொடர்பு'  என்பன நமது கலாச்சாரத்தில் மிகவும் பாரதூரமான தவறுகளை குறிக்கின்ற சொற்கள். அதுவும் பாரம்பரிய விழுதுகள் வியாபித்து கிடக்கும் வடக்கு பிரதேசங்களில் சொல்லவே தேவை இல்லை. யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலேயே இந்த அசாதாரண, சமூக, கலாச்சார பிரச்சனை பெரியளவில் உருவெடுத்திருக்கிறது என்பது யாவரும் அறிந்த ஒரு விடயம். இதுவே என்றும் இல்லாதது போன்று நமது 'கலாச்சார' ஆசாமிகளின் வெறுப்பேத்தும் கலாச்சார பிரச்சாரங்களுக்கு வித்திட்டது. யுத்தமுடிவிற்கு பின்னர் பத்திரிகைகள் வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் அதிகம் பேசியவை இதைப்பற்றியதே. தணிக்கைகள் இல்லாமல் நமது ஊடகங்களில் வரும் செய்திகளில் நீலப்படங்களாகவே எமது கதைகள் உருவப்படுத்தப்பட்டன. இப்பொழுது அவ்வகையான செய்திகள் ஊடகங்களில் ஒப்பீட்டளவில் கொஞ்சம் குறைந்தாலும் முற்றுமுழுதாக இல்லை என சொல்ல முடியாது. ஊடகங்களில் இந்த பேச்சு அதிகம் இல்லை என்பதால் இந்த பிரச்சனை இப்பொழுது வடக்கில் பூரணமாக இல்லாமல் போய்விட்டது என்றும் அர்த்தமில்லை. 

ஒழுக்கம் உயிரிலும் பெரிதாய் மதிக்கப்படும் தமிழ் கலாச்சாரத்திற்கு இவை இப்பொழுது பெரும் சவாலாகவே அமைந்திருக்கின்றன.  புராணங்கள் தொடங்கி நமது வீடுவரை இந்த ஒழுக்கம் என்பதன் அவசியத்தையும் தேவையையும் என்றுமே உணர்த்திக்கொண்டே நகர்கிறது நமது கலாச்சாரம். போரிற்கு பின்னரான காலப்பகுதியில் இந்த பாலியல் பிரச்சனைகள் அதிகமாக தமிழர் பிரதேசங்களில் முளைக்க ஆரம்பித்தன. இந்த பாலியல் முறைப்பாடுகள் பிரதானமாக மூன்று  வகையறாக்களில்  வடக்கில்  பதிவு  செய்யப்பட்டிருக்கின்றன. 1. சிறிய அளவிலான பாலியல் துஸ்பிரயோகங்கள் அல்லது பாலியல்  தொந்தரவுகள்  அல்லது  பாலியல்  சேட்டைகள். 2. கற்பழிப்பு/வன்புணர்வு மற்றும்  இது  சார்  பிற  தீவிர  குற்றங்கள். 3.  விருப்பத்தின்  பேரிலான முறையற்ற உடல், பாலியல் தொடர்புகள். இந்த மூன்று வகையறாக்களும் அதிகமான எண்ணிக்கையில் இப்பிரதேசங்களில் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதுவே  இப்பொழுது  அல்லது  இனி  வரும் காலங்களில் இப்பிரதேசங்களில் வாழும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் முன்னுரிமை திட்டங்களாக முன்மொழியப்படலாம். இந்த குறிப்பின் மூலம் பொதுவாக இந்த மூன்று வகையறாக்களையும் பற்றி பேசினாலும் இந்த மூன்றாவது வகையறாவைப்பற்றி அதிகம் பேசலாம் என்று நினைக்கிறேன்.

அது ஒரு மெல்லிய மாலை பொழுது. முல்லைத்தீவின் அழகிய கடலை முத்தமிட்டு வெளியேறிய காற்று என்னையும் ஆரத்தழுவியது. அவள் அழகாய் இருக்கிறாள் இருந்தும் அவள்  முகத்தில்  ஒளி  இல்லை. ஆனாலும் அழகாக சிரிக்கிறாள். அந்த சிரிப்பிலும் ஏதோ குறைகிறது. அவள் உடல் தோற்றமும், பேச்சும், அழகிய புன்னகையும், அவள் அருகில் ஓடிவந்து நின்றுகொண்ட அவளுடைய ஒரு  அழகிய மகளும்  அந்த பெண் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் தாய் என்பதை எனக்கு  அடையாளம்  காட்டியது. அன்று அவளுடன்  பேசி  முடித்து  வெளியில்  வருகையில் 'முறையற்ற பாலியல் தொடர்பு' பற்றியதான  எனது  கருத்தியல் சுக்குநூறாகிப்போயிருந்தது. கடந்த போரில் கணவனை இழந்த ஓர் இளம் பெண் இவள். மூன்று பிள்ளைகள். மூன்றும் பெண்பிள்ளைகள். சிறு வயதில் திருமணம் முடித்த இந்தப் பெண் இப்பொழுது நால்வரின் வயிற்றுப்பாட்டிற்கு வருமானம் ஈட்ட எந்தவித தொழிலும் தெரியாத ஒரு குடும்பத்தலைவி. அருகில்  இருக்கும்  பெரிய  பண்ணையிலும், சில  தனிப்பட்டவர்களின் தோட்டங்களிலும் பணி புரிவதை தவிர இவளால் செய்யக்கூடிய காரியங்கள் எதுவும் இல்லை. அப்படியிருந்தும்  வீட்டில்  பிள்ளைகளோடு இருப்பதையே அதிகம் இரும்புகிறாள். இவ்வாறான இந்த பெண் மீது அந்த சமூகம் முன்வைக்கும் குற்றச்சாட்டு "இவள் நடத்தை சரியில்லாதவள், பணத்திற்காக போபவள்!"


அடுத்த வாரமும் வருவேன்.....


தமிழ்த்தந்தி - 06.05.2014


Tuesday, April 1, 2014

நிரூபன் ஞாபகமாக.

முகப்புத்தகத்தில் காதலிக்க ஆரம்பித்து பின்னர் அதுகொடுத்த காதல் தோல்வியினால் நேற்று தற்கொலை செய்துகொண்ட முகநூல் நண்பர் நிரூபன் நவரத்தினம் ஞாபகமாக...


யாரென்றே தெரியாதவர்களின்
முகப்புத்தக சுவர்களெல்லாம்
நானாக மாறிப்போயிருப்பேன்.
எனது தவறால்
முகப்புத்தகத்தையும் பலர்
கெட்டவார்த்தையால் விமர்சித்துக்கொண்டிருப்பார்கள்..
தினப்பத்திரிகைகளில் என் பெயர்
கொட்டை எழுத்துக்களில் ஜொலிக்கும்.
இடைவிடாமல் பேசிக்கொண்டிருக்கும்
வானொலிகளில் கூட
மணித்தியாலச் செய்தியில் - என்
மரண அறிவித்தல் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும்.
ஊர் மரங்கள் எல்லாம்
எனக்கான இறுதி அஞ்சலிக்காய்
கறுப்புக்கொடிகளை ஏந்தி நிற்கும்.
ட்விட்டரில் என்னை சிலர் காறித்துப்புவர்.
பக்கத்துவீட்டுக்காரன் என்னை
பைத்தியக்காரன் என்பான்.
நண்பர்கள்  - அவளை
கொலை செய்வோம் என
நாடகம் போடுவார்கள்.
சிலர் என்னை பார்க்க வருவர்.
சிலர் கோவத்தினால் வராமலே விடுவர்.
செத்தவீட்டிலும் ஆங்காங்கே
பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கும்.
சிலர் நான் சரி என்பர்.
பலர் அவள் தப்பானவள் என்பர்.
இவற்றிற்கு மத்தியில்,
அவள் -
வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் இருப்பாள்.
நானோ -
மூச்சில்லாமல் தூங்கிக்கொண்டிருப்பேன்.
பெண், காதல், முகப்புத்தகம் -
ஒருவாரம் எல்லார் வாயிலும்
அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கும்.


மியன்மார் - அழகிய நபாலி!

வணக்கம் நண்பர்களே. வேலைப்பாரம் நீண்ட நாட்களாக தலையை அழுத்தியபடியே இருந்தது. இடையில் நிற்சயமாக ஒரு ப்ரேக் தேவை என்பதை என்னால் மிகச்சரியாகவே புரிந்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது. அவ்வளவு களைப்பு. சரி, இந்த ஹோலிடேய்ஸ்கு எங்கு போகலாம் என்று பல நண்பர்களையும் இணையத்தளங்களையும் தேடிப்போனதில் கிடைத்த ஒன்று, மியன்மாரில் உள்ள நபாலி பீச். அழகோ அவ்வளவு அழகு. சரி அங்கு போகலாம் என முடிவாயிற்று. குறுகிய விடுமுறை என்றாலும் மகிழ்வோடும், ஜாலியாகவும் இருந்தது. இயற்கையின் அழகின் பிரமிப்பை நாம் அதிகம் உணர்ந்துகொள்வதில்லை. சில சந்தர்ப்பங்களில் அதை ஆச்சரியமாக பார்க்கவேண்டி ஏற்படுகிற பொழுதே அதன் மகத்துவம் புத்திக்குள் புகுந்துகொள்கிறது.

நபாலி, அழகிய கடற்கரை மற்றும் சிறு சிறு தீவுகள் அடங்கிய ஒரு அழகிய ஊர். ஏராளமான வெளிநாட்டவர்கள் விடுமுறையை கழிக்க இங்கே வருகிறார்கள். அழகிய ஹோடெல்ஸ், சுவையான உணவு, அழகிய பெண்கள் (பணியாளர்கள்) என குறைகூற எதுவும் இல்லை. இருந்தும், ஒரு இரவிற்கு 225 டாலர்களை பறித்துக் கொண்டார்கள்.

சரி, இதோ நபாலியில் எனது டிஜிட்டல் கண்களுக்குள் வந்து விழுந்த சில காட்சிகள் உங்களுக்காக,
ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்!

.

Popular Posts