Monday, March 24, 2014

தேத்தண்ணி ஆறுது! - சிறுகதை

அழுத்தம் நிறைந்த மனது, நீண்ட பெருமூச்சு, மனதை அடிக்கடி சுரண்டிக்கொள்ளும் அனுதாபங்கள், வெறுப்பேற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள்.. இந்த மனநிலையில்தான் என் அதிகமான முல்லைத்தீவுப்பயணங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. அன்றும் அப்படித்தான். 'என்ன சார், ஒருமாதிரி இருக்கிறீங்க?' சாரதியின் கேள்விக்கு என்னிடம் பதிலுண்டு அனால் அதை புரிந்து கொள்வதற்கு அவரால் நிற்சயம் முடியாது. காரணம் அவர்  பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர். சிரித்துவிட்டு அப்படியே  திரும்பிக்கொண்டேன், ஒட்டுசுட்டானில் படர்ந்து விரிந்துகிடக்கும் பச்சை வயல் வெளிகள் கண்களை முத்தமிட்டுக்கொண்டது.

வழமை போல போகும் வழியில்  அன்றும் ஒரு வேலை இருந்தது. வாகனத்தை நிறுத்தும்படி சாரதியாரிடம் சொல்லி, எனது கறுப்பு கண்ணாடியை உயர்த்தி, வாகன கதவின் வெள்ளைக் கண்ணாடியை  பணித்து, வீதிக்கு அருகில் நின்ற பெரியவர் ஒருவரிடம் கேட்டேன், 'ஐயா, இந்த கந்தசாமி கடைன்னு... எங்க இருக்கு?', உடனடியாகவே தலையை மறுபுறம் திருப்பி, நடுவிரலை நீட்டி 'அந்த நீல கலரு பெயிண்ட் அடிச்ச கடைதான் மோனே...' என தெளிவாக சுட்டினார் பெரியவர். அதுசரிதான் இடம் கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனாலும், ஒரு திடீர் சந்தேகம் இந்த ஐயா மேலே!, எதற்காக ஐயா நடுவிரல காட்டணும்? வழமையா சுட்டுவிரலை தானே மனித ஜாதி இவ்வாறான தேவைகளுக்கெல்லாம் பயன்படுத்தும். புதுவிதமா இருக்கே என எண்ணியபடி அவர் கைகளை மிகவும் கூர்ந்து அவதானிக்க முயற்ச்சித்தேன். அப்பொழுது எனது சாரதி என் தோள்பட்டையை சுரண்டி, 'சார் அவர் கையை பார்த்தீங்களா, உள்ளங்கையில் பெரிய தழும்பு, அதோட அவர் சுட்டுவிரலும் இல்லை... செல் வீச்சில காயப்பட்டிருக்கார் போல....' ஒரு பெருமூச்சோடு முடித்தார். அந்த பெருமூச்சில் நிற்சயம் 'பரிதாபம்' என்கின்ற சூடு இருந்ததை என்னால் உணர முடிந்தது. ஆக, எங்கள் இழப்புக்களைப்பற்றி உங்களில் சிலருக்காவது பரிதாபம் இருக்கிறதே, 'ஓ புத்தபிரானே!' என நானும் ஒரு உஷ்ண பெருமூச்சை விட்டுமுடித்தேன். 

இறுதியாக  வாகனம் வந்துநின்றது கந்தசாமி கடை வாசலில். 'வணக்கம்  அண்ணே' என வந்த அலுவலை ஆரம்பித்தேன். கந்தசாமி அண்ணனுடனான இருபத்து மூன்று நிமிட உரையாடல் ஒருவாறு முடிவிற்கு வந்தது. 'வாரேன் அண்ணை' என பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து வெளியே வந்தேன். கந்தசாமி கடையிலிருந்து ஒரு பத்து மீட்டர் இருக்கும், ஒரு வயதாகிய அம்மா அசர்ந்த முகத்தோடு, ஒரு சின்ன கல்லில் அமர்ந்தபடி கொஞ்சம் பைகள் நிறைய வறுத்த கச்சான் கடலைகளை வைத்து வித்துக்கொண்டிருந்தார். அந்த அம்மாவின் முகம் ஏதோ என்னை அந்த இடத்தை விட்டு நகர்த்த தடையாகவே இருந்தது. அந்த முகத்தில் அப்படியொரு சோகம். வடக்கில் சோகம் என்கின்ற சொல் மிகவும் சலிப்படைந்துவிட்ட ஒரு தமிழ் சொல். அத்தனை தடவைகள் உபஜோகித்தாயிற்று.  அந்த சோகம் போர்த்தியிருக்கும் முகம் என்னை போக அனுமதிப்பதாய் இல்லை. சரி, இதயத்தை முடிவெடுக்க விட்டுவிடலாம். என் இதயத்தின் முடிவெனின் அது நிற்சயமாக அந்த அம்மாதான். 

'அம்மா, ஒரு பை கடல கிடைக்குமா?' என்றேன். 'வாங்க தம்பி, ஒரு பை போதுமா, ஒரு பை இருபது ரூபாதான், ரெண்டா எடுத்துக்கோங்க, மற்றது தம்பி, இது முறுகண்டி கடல பாத்துக்கோ, நல்லா இருக்கும்!' அந்த பேச்சின்போது அந்த முகம்  கொஞ்சம் கொஞ்சமாய் மலர்வதைக் கண்டேன். 'கடலையை வாங்கி ஒன்றொன்றாய் உடைத்து வாயில் போட்டபடி கடலையின் ருசி கடந்து பல விடயங்கள் பற்றி பேச்சு கடந்து போய்க்கொண்டிருந்தது. 'அம்மா வரட்டுமா..' என சுமார் பதினைந்து நிமிடங்கள் கடந்து பேச்சை முடித்தேன். அப்பொழுது அந்த அம்மா சொன்ன வார்த்தைகளும், அந்த அன்பான முகமும் இன்னும் என் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது. 'தம்பி, நீ விரும்பினதால கூப்பிடறேன், மறக்காம வீட்டுக்கு வந்துட்டுதான் போகணும்.. சரியா?, கவனமா போய்ட்டு வாங்க தம்பி..'

.....

இன்று வெள்ளிக்கிழமை. அந்த அம்மா வீட்டில் இருப்பாங்களா? இல்ல கடலை விக்க ஒட்டுசுட்டான் சந்திக்கு போயிருப்பாங்களோ?? ஆனா இன்னைக்கு வரச்சொன்னான்களே.... எதிர்வுகூற சங்கடப் பட்டுக்கொண்டிருந்தது மனம். எதற்காய் இந்த குழப்பம். அந்த அம்மாவின் வீடு வீதியோரம்தானே.. போகையில் அதில் கொஞ்சம் நிறுத்தி பார்த்திட்டா போச்சு! மனதை கடிந்து புத்திமதி கூறியது மூளை. 

'அம்மா... அம்மா..!!' 

அழைப்பிற்கு பதிலில்லை. என் தேடலிற்கும் அந்த வீட்டினுள் ஒரு மனிதர்  கூட இல்லை. கொஞ்சம் அந்த வாசலின் அருகில் சென்று மீண்டுமொருமுறை அழைக்கலாம் என்பதற்குள் 'அடடே, வாங்க தம்பி.. உள்ள வாங்க..' எனக்கு பிடித்த அந்த அழகான புன்முறுவலோடு உள்ளே அழைத்தார் அந்த அம்மா.. இதற்கு முதல் ஒரேயொரு  தடவைதான் இந்த அம்மாவுடன் பேசியிருக்கிறேன் ஆனாலும் ஏதோ பல வருடங்கள் பழகியதுபோல ஒரு உணர்வு. அந்த அம்மா எனது அம்மாவை அடிக்கடி ஞாபகப்படுத்துவதும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.  ஒவ்வொரு முறையும் இந்த அம்மா கடகடவென, அதிக எனேர்ஜியோடு, தலையை அங்கும் இங்கும் ஆட்டி ஆட்டி பேசுகையில்  எனது  மகேஷ் அம்மா அப்படியே கண்முன்னாடி வந்து  நிற்கிறார். அழைப்பை ஏற்று உள்ளே சென்று அமர்வதற்குள் வீட்டிற்குள் இருந்த இருவரிற்கு முதலில் வணக்கம்  சொல்லவேண்டியிருந்தது. 

'வணக்கம் அப்பா..'
'வணக்கம் அக்கா..'

அப்பாவிடமிருந்து பதில் வணக்கம் உடனடியாகவே வந்தாயிற்று. அக்காவிடமிருந்து ஒரு சிறு புன்னகைகூட இல்லை, வழமையான பெண்கள் பாணியில் தலை மட்டும் சாதுவாய் ஆட்டப்பட்டது. பாவியாய் சிரித்தபடி  காலியாய் இருந்த அந்தவொரு இருக்கையில் அப்பாவிபோல அமர்ந்துகொண்டேன். ஆரம்பித்திலேயே, 'இருங்க தம்பி டக்கெண்டு வாறேன்..' என கூறி அந்த அம்மா சமையலறை நோக்கி விரைந்தார். பெரும்பாலும் அது என் தேநீர் தயார்படுத்தலுக்கானதாக இருக்கலாம். ஐந்து நிமிடங்கள் கழிகையில் தொண்டையில் அடைத்துநிற்கும் சளியை வெளியே துப்புவதற்காய் போன அந்த அப்பா மீண்டும் வருவதாயும் இல்லை. நானும் அந்த அக்காவும் இப்பொழுது தனியே விடப்பட்டிருக்கிறோம். அந்த அக்காவிற்கோ என்னிடம் பேச விருப்பம் இருப்பதாய் தெரியவில்லை. ஆனால் அடிக்கடி என்னை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். சிலவேளைகளில் என்னைப்பார்த்து முறைப்பதாயும் தெரிகிறது. இல்லை, இல்லை என என்னை நானே அமைதிப்படுத்திக் கொள்ளுகிறேன். இன்னுமொரு ஐந்து நிமிடங்கள் அந்த அறைக்குள் அமைதியாய். பொதுவாக, ஒருவரை எனக்கு முன்னால் வைத்துக்கொண்டு பேசாமல் உம்மெண்டு இருப்பதெல்லாம் எனக்கு முடியாத காரியம். நானாகவே களத்தில் குதிக்கலானேன்!

'எப்பிடி அக்கா சுகம்..?' கொஞ்சம் தயக்கமாய் ஆரம்பித்தேன்.  அந்த அக்காவிடமிருந்து விறுக்கென ஒரு பார்வை. அவ்வளவுதான்.
' நீங்க... இந்த அம்மாட...?' மீண்டும் விறுக்கென ஒரு பார்வை, என்னை சொல்லிமுடிப்பதற்குள் நிறுத்தியது. இப்பொழுதும் அந்த அக்காவின் பதிலில் எந்த வார்த்தைகளும்  இல்லை. என்ன  இந்த பெண்?, கோவம் கோவமாய் வந்து தொலைந்தது. இனியும் எதுவும் இந்த பெண்ணிடம் நான் பேசுவதாய் இல்லை. வெள்ளவத்தை பஸ் தரிப்பில் தலையை குனிந்துகொண்டு கள்ளமாக அருகில் நிற்கும் ஆண் யாரென பார்த்துக்கொள்ளும்  ஒரு வாலிப பெண்ணைப்போல நானும் முன்னாலிருக்கும் அவளை பார்க்க முயற்சித்தபோதேல்லாம் அவள் என்னையே விகாரமாய் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்கிறேன்.

'குடிங்க தம்பி...!' அம்மா தேநீரோடு எனக்குமுன் நின்றுகொண்டிருக்கிறாள் நான் மூன்றாம் முறை அந்த பெண்ணை பார்க்க தலையை கொஞ்சம் தூக்கியபொழுது. புன்னகைத்தபடி தேநீர்  கோப்பையை பெற்றுக்கொண்டேன். அந்த அம்மாவோ அந்த அக்காவின் அருகில் போய் அமர்ந்துகொண்டார். அந்த தேநீரின் சாயம் உதட்டின்மேல் படர்ந்து உமிழ்நீரில் கரைந்து அமிர்தமாக களத்தை கடந்து  போய்க்கொண்டிருந்தது. 

இதோ அந்த பெண் இப்பொழுது பேசுகிறாள்! தேநீரின்மேலிருந்த சிந்தனை இப்பொழுது மீண்டும் அந்த பெண்மீது பாய்கிறது. ஆமாம், இதோ அவள் ஏதோ தனது தாயிடம் சொல்லுகிறாள். ஆனாலும் அதை என்னால் செவிமடுக்க அவள் பேசும் சப்தம் போதுமானதாய் இல்லை. ஆனால், என்னையே அடிக்கடி விரல்களால் சுட்டிக்காட்டி பேசிக்கொண்டிருக்கிறாள்.. அவள் ஏதோ தாயிடம் என்னை காட்டி காட்டி கேட்கிறாள், என்னால் அதை செவிமடுக்க முடியவில்லை ஆனால் அதற்கு அந்த அம்மா 'இல்ல இல்ல.. இந்த தம்பி நமக்கு மிகவும் பழக்கமான தம்பி.. இல்ல இல்ல!' என தலையை  ஆட்டியாட்டி பதில் சொல்லிக்கொண்டிருப்பது எனக்கு நன்றாகவே காதில் விழுகிறது. ஒரு கட்டத்தில், தனது பதிலை தன் மகள் நம்புவதாய் இல்லை என  தெரிந்துகொண்ட அந்த அம்மா அந்த பெண்ணிடம், 'நம்பேல்லன்னா நீயே கேட்டு தெரிஞ்சுக்கோ அந்த தம்பிட்ட...' என வில்லங்கமாக என்னைக்காட்டி கூறிமுடித்தாள். 

கண்கள் கசிய, பார்வை  மெதுவாய் என் விழிகள் நோக்கி வர, முகத்தில் ஏதோவொரு ஏக்கம் படர்ந்திருக்க, உதடு மெல்லியதாய் துடித்துக்கொள்ள, இருந்த கதிரையின் நுனிப்பகுதிக்கு முன்னேறி, தளர்ந்த குரலில் அந்த பெண் என்னிடம் கேட்டாள்,

'நீங்களா எண்ட முருகேசனையும், கவிமாறனையும் கொண்னது????'

எனக்கு எதுவும் விளங்குவதாய் இல்லை. ஆனால் ஒருவகை சோகம் அந்த அறையை மூடியிருப்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது.. காரணம் அறியாமலேயே என் கண்கள் கலங்குகிறது. என்ன செய்வது, என்ன பேசுவது என தெரியாது நின்ற என்னை பார்த்து அந்த அம்மா கண்கள் கலங்க ஆனால் ஒருவாறு முயற்சித்து ஓரமாய் புன்னகைத்தபடி சொன்னாள்,

'தம்பி, குறைநினைக்காதேங்கோ, 2009ல ஒரு செல்லுக்கு இவள் தண்ட புருசனையும், ஒரு வயசு மகனையும் பறிகுடுத்ததில இருந்து இந்த வீட்டுக்கு யாரு வந்தாலும் அவங்கட்ட இப்பிடிதான் கேப்பா.  டாக்குத்தர்மாரும் முயற்சிசெய்து பார்த்தவ, எங்க கஷ்டகாலம் பலன் எதுவும் இல்ல..................... 

....... ஐயோ தம்பி தேத்தண்ணி ஆறுது குடியுங்கோ மகன்......!!!'


..........
தமிழ்த்தந்தி - 06.05.2014.


No comments:

Popular Posts