Sunday, December 8, 2013

உருகிடவா... உருகி விடலாம். உண்மையாகத்தான்!!


தலைக்கு மேல் வேலைகளை வைத்துக்கொண்டு அதே தலையில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு இந்த பாடல்களை கேட்பது ஒன்றும் டைம் வேஸ்ட் என்று தோன்றவில்லை. அது எனது (நமது) கடமை என்றே சொல்லிக்கொள்ள வேண்டும். அண்மையில் இலங்கையில் இருந்து வரும் பல செய்திகள் இந்த பாடல்களைப் பற்றியும் பாடல் வெளியீட்டு விழாக்கள் பற்றியும் பேசிக்கொள்ளும் போது நான் தூரத்தில் இருப்பது கவலைகொடுத்தது. அதோடு பாடல்களை கேட்டுவிடவேண்டும் என்கின்ற ஆர்வமும் புரையேறிக்கொண்டிருந்தது.

சிந்துஜா எனக்கு மிகவும் பரீட்சயமான ஒரு பெண். பல ஆண்டுகளாக பழக்கம். எனக்கு மிகவும் பிடித்த எனது ஆசிரியையின் மகள், நான் அதிகம் விரும்பும் ஒரு வீட்டு சூழலில் பல சமூக பிரச்சனைக்களுக்கு மத்தியில் வளர்ந்த பிள்ளை, நல்லதொரு தங்கை என பல வகை காரணங்கள் எனக்கு சிந்துவை பரீட்சயமாக்கியவை. இப்பொழுது யாவரும் அறிந்த, புகழ் பெற்ற 'பெண் இசை ஆளுமை' எனக்கு பரீட்சயமானவர் என்பதில் நிற்சயமாக நான் பெருமை கொள்கிறேன், கொள்வேன். இந்த வெற்றிக்கு அவர் கொடுத்திருக்கின்ற விலை, கஷ்டம், துன்பம் என்பனவற்றில் கொஞ்சம் எனக்கும் தெரியும் என்பதால் இதுபற்றிய குறிப்பொன்றை எனது வலைப்பூவில் பதிதல் கட்டாயமாகிப்போனது.


உயர் கல்வியை (இசை சார்ந்த) முடித்துவிட்டு நேரடியாகவே பல திமிங்கலங்கள் உள்ள இந்த துறைக்குள் ஒரு சிறு மீன்குஞ்சாக நுழைவதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும் என அன்றெல்லாம் நான் எண்ணியதுண்டு. அந்த தைரியம் அவர் தாயாரிடம் இருந்தே வந்திருக்கவேண்டும். அதுவும் இளம் பெண்ணாக தனியவே இந்த நீச்சலில் தாளாமல் வெற்றிகரமாக கரை சேர்தல் எத்தனை கடினமானது? எதையாவது சாதித்தாக வேண்டும் என்கின்ற வெறி ஒன்றே சிந்துவின் கண்களில் அன்றெல்லாம் தெறித்துக் கொண்டிருக்கும். உண்மையில், தனியாளாக இதை எப்படி சாதித்தார் என்பதில் இப்பொழுதும் எனக்கு ஆச்சரியம் கலந்த கேள்வி இருக்கத்தான் செய்கிறது. அதேபோல, அவர் பணியாற்றிய பலர் மிகவும் சீனியர்கள் (ராஜ் உட்பட). இவற்றை எல்லாம் ஜோசிக்கும் போது சிந்துமேல் அதிகம் அதிகமாய் மரியாதை அதிகரிக்கிறது. வாழ்த்துக்கள் சிந்து.

அதேபோல, சிந்து ஒரு பெண் என்கின்ற காரணத்தால் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை அவர் முயற்சிகளை முடக்க பல ஆண்கள் முயற்சித்ததையும் என்னால் இங்கு கூறாமல் இருக்க முடியாது. இது நம் உலக நியதி என எடுத்துக்கொண்டு பயணித்தல் சிந்துவை இந்த உயரத்திற்கு கொண்டுவந்திருக்கலாம்.

பாடல்களை பற்றி அதிகம் பேசுவதற்கு 'பாடல்களை அதிகம் ரசிப்பவன்' என்பதை தாண்டி எனக்கு எந்த தகுதியும் இல்லை. இருந்தாலும் இந்த பாடல்கள் சார்ந்த 'எனது உணர்வுகளை' பதிவிடுதலே சிறந்தது என நினைக்கிறேன். இந்த இசைத்தட்டில் சிந்துவின் இசை துறை சாதனைகள் எனக்கு எந்தவித ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை ஒன்றை தவிர. அது, பாடல் வரிகள். எனக்கு சிந்துவை பாடகியாக, பாடல் அமைப்பாளராக நீண்ட நாட்களாக தெரியும். ஆனால், ஒரு திறமைமிக்க பாடலாசிரியராக நான் அவரை கண்டுகொண்டது இப்பொழுதுதான். பாடல் வரிகள் மிகவும் நேர்த்தியாக போடப்பட்டிருக்கிறது. இசைக்காக வரிகளை முறிக்காமல், இழுக்காமல், வளைக்காமல் சொற் கோர்வைகளை கையாண்டிருப்பது புருவங்களை உயர்த்தவே வைத்தது. சூரியன் வானொலியில் ஒலிபரப்பப்படும் இவர் எழுதி ராஜ் இசையமைத்த நிலைய குறியிசைகளும் இதே உணர்வையே எனக்கு கொடுத்திருந்தது. ஈழத்து இசைத்துறையில் ஒரு அருமையான 'பெண்' பாடலாசிரியர் நம் கண் முன்னாலேயே உருவாகியிருப்பது மகிழ்வளிக்கிறது.

உன்னை பார்க்கும் போது..
சந்துருவின் குரல் பாடலிற்கேற்ற ரொமாண்டிக் மூட்டை கொண்டுவதிருக்கிறது எனலாம். வரிகளும் சூப்பர். பாடலின் தொடக்க இசையும் இன்னும் கொஞ்சம் ரொமாண்டிக்கா இருந்திருக்கலாமோ என்று தோணியது. பாடலின் முடிவு கொடுக்கும் திருப்தியை தொடக்க இசை கொடுக்கவில்லை என்று தோன்றுகிறது. இசை கோர்ப்பும் சந்துருவின் குரலை பயன்படுத்தியிருக்கும் விதம் ஒரு முழுமையான காதல் பாடலிற்கான அத்தனை அம்சங்களையும் கொடுத்திருக்கிறது எனலாம். 'சாலை எங்கும் உந்தன் விம்பம், தூங்கவில்லை எந்தன் நெஞ்சம், நீ பேசும் பேச்சை ரசிக்கின்றேன்... உன்னாலே தொலைந்துபோகிறேன், உயிரோடு உறைந்து போகிறேன்... ' இந்த இடம், கண்களை மூடி, தலையசைத்து கேட்க வைக்கிறது..

உருகிடவா...
பிரஷாந்தினி... காதிற்குள் ஒரு சில்மிஷம்.. அடிக்குரல் கூட அவ்வளவு அம்சமாய் காதுகளிற்குள் வந்து விழுகிறது. பாடல் நன்றாக வந்திருக்கிறது. பிரெட்ரிக் சரியாக பிரஷாந்தினியின் குரல் வளையோடு ஒத்துப்போகிறார். 'மெல்லிய ஆடை மேனி மறைக்க மார்புகள் மீது கூந்தல் சரிய...' ப்பா.. இதை சொல்லாவிட்டால் இப்பாடல் பற்றிய எனது குறிப்பு முற்றுப்பெறாது!. எனக்கு பிடித்த பாடல் இது.. மழை நின்ற பின்னும் தூறல் நிற்கவில்லை.. வாயில் முணுமுணுத்தபடி...

மலையோர காற்று...
நீண்ட நாட்களின் பின்னர் சிந்துவின் குரல்.. மன்னாரின் பாடகர்களில் என்னை மிகவும் கவர்ந்த குரல்களில் இது தவிர்கமுடியாதது. மண்ணின் எழில் சொல்லும் விதம் சூப்பர்.. திலினியின் குரல் அழகு.. இடையில் வரும் சகோதர மொழி வரிகளை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இதுதான் இப்பாடலின் ஹய் லயிட் என்று சொல்வேன். கேட்கும் பொழுது செமையாக இருக்கிறது.. அழகாக இருக்கிறது.. இதை கேட்கும் பொழுது கொஞ்சம் பாத்யா - சந்தோஷ் பாணி நினைவில் வந்துபோவதை தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும், இந்த பாடலில் எனக்கு அதிகம் பிடித்த இடம் என்றால் இதுதான் என்று சொல்வேன். இந்த ஐடியாவிற்கு ஒரு சலுட். பட், 'ஜாதி மத பேதங்கள் இல்லை, இனவெறி ஒன்றிங்கு இல்லை...' மொழியும், கலையும், இலக்கியமும் எப்பொழுதும் உண்மை பேசவேண்டும் என எதிர்பார்ப்பவன் நான்! உண்மை சொல்லாவிடினும் இதை தவிர்த்திருக்கலாமோ என தோன்றுகிறது... சரி பரவாயில்லை.

தாய்க்கு நிகரேது மானிடா...

ஆரம்பமே 'ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம்..' சினிமா பாடலை ஜோசிக்க வைத்தாலும் நிறம்ப எதிர்பார்ப்புக்களோடு உள்ளே நுழைய வேண்டியிருந்தது.. காரணம், அம்மா பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அத்தோடு இன்னுமொரு காரணமும் இருந்தது. அது இந்த பாடலை பாடியிருப்பவர். சுதர்ஷன்.. எதிர்பார்ப்பு மிக்க ஒரு பாடகர். பாடசாலை காலங்களில் 'மன்னாரின் பாலசுப்ரமணியம்' என இவரை அழைப்பதே எமக்கு சந்தோசம். பாடல் பிரமாதம்! சொல்வதற்கு வேறில்லை. சுதர்ஷனின் குரலிற்கு நான் என்றும் யாசகன். வரிகள் செம! இடையே வரும் சிந்துவின் தாலாட்டு, பாடலின் உணர்விற்கு மெருகேற்றுக்கிறது. மெட்டு அம்மா பாடலிற்கு செமையாய் பொருந்துகிறது. 'பீல்' சரியாக வெளிப்படுகிறது.


உருகிடவா.. உருகிப்போனேன். சிந்துவின் படைப்பு எனக்கு எதிர்பார்ப்பு கடந்த ஆச்சரியம். இன்னும் கொஞ்சம் ராஜை சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாமோ என்ற ஒரு சின்ன கேள்வி இருந்தாலும் ஆரம்பம் - இது போதும் பிரமாதம் என்று சொல்வதற்கு.

'சிந்து, வானம் இப்பொழுது உன் அருகில் தான், உன் பறத்தலின் வேகத்தை குறைக்காதே, சீக்கிரம் தொட்டு விடுவாய். எப்பொழுதும் களைகளை பற்றி கவலைப்படாதே, அப்பொழுதுதான் நல்ல விளைச்சலை கொடுக்கமுடியும் உன்னால்.. 'பெண்' என்பது எதற்கும் தடையில்லை, வேகமும் ஆளுமையும் குறையாவிட்டால்! எதற்காகவேனும் உன் தன்னம்பிக்கையை இழந்துவிடாதே.. உயரப்பறத்தலில் தன்னம்பிக்கை ஒரு சிறகு.. வாழ்த்துக்கள்!'


அத்தோடு இந்த இசைத்தொகுப்பில் பணியாற்றிய அத்தனை பாடகர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரிற்கும் எனது வாழ்த்துக்கள்!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உருகி விட்டேன் ஐயா... தொடர வாழ்த்துக்கள்...

பி.அமல்ராஜ் said...

மிக்க நன்றி அண்ணா.

Popular Posts