Tuesday, October 29, 2013

கண்ணம்மாவும் கபோதியும் - சிறுகதை


'என்னடா ஒரு மாதிரியாய் இருக்கிறாய்.. இன்னும் அந்த சம்பவத்த பத்தியே ஜோசிச்சுக்கிட்டு இருக்கியா??' எண்டு அருகில் இருந்த என் நண்பன் தோளில் தட்டிய போதுதான் மீண்டும் சுயநினைவிற்குள் வர முடிந்தது. வாகனம் வேகமாக முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி பறந்து கொண்டிருந்தது.

அவள் கண்ணம்மா. ஒரு இருபத்து நான்கு வயது இருக்கும் எனது மதிப்பில். அவர்கள் வீட்டை தட்டிய போது கதவை முதலில் ஓடிவந்து திறந்தவளும் அவள்தான். வாய் நிறையப் புன்னகை. கண்களில் ஏதோ ஒரு தேடல் ஆனால் பார்வையில் கொஞ்சம் தடுமாற்றம். என்னையும் நண்பனையும் கண்டதும் அவளுக்குள் உருவான அந்த படபடப்பு அவள் முகத்தில் தெட்டத் தெளிவாய் தெரிந்தது. ஏதோ, ஆண்கள் என்றாலே பிசாசுகள் என்கின்ற அளவிற்கு அவள் கதவை சட்டென சாத்தியத்தில் தெரிந்தது. மீண்டும் அவளது தாய் ஓடிவந்து சாத்திய கதவை திறந்து 'உள்ளே வாருங்க தம்பிகளா..' என அந்த அழகான முல்லைத்தீவு தமிழில் உள்ளே அழைத்தாள். நான், எனது நண்பன், கண்ணம்மா மற்றும் அவள் தாய். ஒரே ஒரு நாற்காலி இருந்தும் அந்த ஒன்றை எடுத்துக் கொடுத்து இருக்கும்படி கேட்டுக்கொண்டாள் அந்த அம்மா. அவள் பார்வை ஒரே நாற்காலியில் எப்படி எம் இருவரையும் அமர வைப்பது என்ற சங்கடத்தில் அங்கும் இங்கும் முட்டிமோதிக்கொண்டது. 'கீழ உக்காரலாம் அம்மா..' என கூறியபடி அவள் அடுத்த கையில் இருந்த ஓலைப்பாயை வாங்கி நாங்களே விரித்து அதன்மேல் அமர்ந்துகொண்டோம்.

பேச்சின் ஆரம்பமே இழப்புக்களில் தொடங்கியது. தொடர்ந்து பல வகையான தலைப்புகளில் பேச்சு போய்கொண்டிருந்தது. முள்ளிவாய்க்காலும் பொக்கனையும் நந்திக்கடலும் அடிக்கடி உச்சரிக்கப்பட்டது. கொஞ்சம் அழுகை, கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் ஏக்கம் என சகல உணர்வு வெளிப்பாடுகளும் அந்த அம்மா முகத்தில் தோன்றி மறைந்துகொண்டிருந்தது. இடைவெளிக்குள் 'தேத்தண்ணி ஊத்தட்டா மகன்?' அம்மாவின் அழைப்பில் ஒரு தூய்மை தெரிந்தது. வேண்டாம் என்று சொல்லி அவள் சந்தோசத்தை கெடுக்க மனமில்லாமல் 'நிற்சயமாக' என எனது வாய் மொழிந்தது. ஐந்து நிமிடம் அவள் அந்த இடத்தில் இல்லை. தேநீர் தயாரித்துக்கொண்டிருக்கிறாள். அந்த ஐந்து நிமிடத்தில் இங்கு நான், நண்பன், கண்ணம்மா. கண்ணம்மாவிடம் ஏதாவது பேசலாம் என முயன்ற ஒவ்வொரு தடவையும் எனக்கும் என் நண்பனுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. கண்ணம்மா ஒரு வேளை வாய் பேச முடியாதவளாய் இருக்கலாம். நாம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் அவள் 'கலப்படமற்ற அப்பாவிப் புன்னகை'. அவளுடன் பேசுவதில் தோல்வியே இறுதியானது. அம்மா தேநீரோடு வருகிறாள். 'மகன், அவள் என்னைப்போல பேசமாட்டாள்! அனால் ஊமையும் இல்லை!!' அம்மா சொன்ன இந்த வார்த்தைகள் எங்களுக்கு புரிந்ததாய் இல்லை. எனது விழிகள் மீண்டும் அம்மாவை பார்த்து வெட்டி முட்டி விழிக்க எனக்கு எதுவும் விளங்கவில்லை என்பதை அவள் சுதாகரித்துக்கொண்டாள்.

தேநீர் நாக்கை கொஞ்சம் பதம் பார்த்தது.. சூடு கொஞ்சம் அதிகம். பேச்சு மீண்டும் ஆரம்பமானது. எனது எதிர்பார்ப்போ கண்ணாமா பற்றிய தேடலாகவே இருந்தது. 'கண்ணம்மாவிற்கு என்ன ஆகியிருக்கும்?' இது என் மனம் பூராகவும் வியாபித்து குருதிக்கலன்களை கொஞ்சம் கொஞ்சமாய் நசுக்க ஆரம்பித்தது. தாமதம் வேண்டாம் கேட்டு விடலாம். முடிவெடுத்த நான் 'அம்மா கண்ணம்மா நலமாக இருக்கிறாளா?? இல்லை ஏதும் சுகவீனங்களா??' கேள்வி கொஞ்சம் நேரடியாகவே இறங்கியது. அம்மாவிடமிருந்து பதில் வரும் முன்னமே அந்த வயதாகிய ஓரக் கண்களில் நீர்மட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. அழுது அழுது ஓர் இடியை இறக்கினாள் எங்கள் மனதில். 'தம்பி கண்ணம்மா திருமணமாகவில்லை அனால் அவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அவனுக்கு மூன்று வயதாகிறது.....' என கூறிமுடித்து 'கரன்...' என அழைக்கையில் ஒரு சிறுவன் திடிரென வந்து நின்றான் நடுவில். அவனை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. எங்கள் இருவரையும் பார்த்து நிறுத்தாமல் சிரித்துக்கொண்டு அவன் தாய் கண்ணம்மா மடியில் அழகாய் உட்கார்ந்துகொண்டான். அம்மா தொடர்ந்தாள். அவள் இடைவிடாத கண்ணீர் என் கண்களுக்குள்ளும் பாய்ந்தது.

கண்ணம்மா இடம்பெயர்வின் போது தனது தந்தையையும் அண்ணனையும் ஒரே பங்கருக்குள் ஒரே நாளில் இரண்டு செல்களுக்கு பறிகொடுத்திருந்தாள். அந்த அதிர்ச்சியில் இவள் சித்தம் கலங்கி சுயநினைவிளந்தவளாக உளவியல் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பலனின்றி மீண்டும் தனது அம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறாள். இந்த நிலையில் அந்த கொடூரமான நாள் வந்தது. எவனோ ஒருவன் கண்ணம்மா மட்டும் தனியாக வீட்டில் இருப்பதை அறிந்து அங்கு போய் சுயமாக எதையும் சிந்திக்க தெரியாத, புத்தி சுயாதீனமற்ற இந்த ஏழை கண்ணம்மாவை புணர்ந்திருக்கிறான். நீண்ட நாட்களின் பின்னர் அவள் கருத்தரித்திருப்பதை கண்டுகொண்ட அவள் தாய் எதுவுமே தெரியாதவளாய், எதுவும் செய்ய முடியாதவளாய் அந்த குழந்தைக்கு பிரசவம் பார்த்து அந்த சிறுவனை வெளியில் எடுத்திருக்கிறாள். கரன் பிறந்துவிட்டான் கண்ணம்மாவிற்கு. கரனின் தந்தை அதுதான் அந்த கபோதி யாரென இன்றுவரை கண்ணம்மாவிற்கோ அவள் தாய்க்கோ தெரியவில்லை. இன்னும் கண்ணம்மாவிற்கு என்ன நடந்தது என்பதில் தெளிவில்லை. பாவம் அவள்.

எனது கண்கள் முழுவதும் நனைந்தது. அப்பொழுதும் கூட எதுவுமே தெரியாதவர்களாய் கண்ணம்மாவும் கரனும் என்னைப்பார்த்து புன்னகைக்கிறார்கள். நான் புன்னகைப்பதா இல்லை அழுவதா? என்ன கொடுமை கடவுளே என கொஞ்சம் கடிந்துகொண்டேன். அம்மாவை சமாதானம் செய்வதில் நண்பன் மும்முரமாக இருந்தான். நானோ கரனோடு பேசுவதிலும் அவன்கூட விளையாடுவதிலும் குறியாய் இருந்தேன். விடைபெறும் நேரம் நெருங்க, எனக்கோ அந்த இடத்தை விலகுவதில் விருப்பம் இருக்கவில்லை. அங்கு இருந்து தொடர்ந்து பேசவும் வார்த்தைகளில்லை. கண்ணம்மாவில் இப்பொழுது கொஞ்சம் முன்னேற்றம் தெரிவதாக அம்மா சொன்னாள். எனக்கோ அவள் இப்படியே இருந்துவிடுவதுதான் அவளுக்கு நல்லது என தோன்றியது. இல்லையேல், அவள் குணமடைந்தால் நம் சமூகம் மீண்டும் அவளை இந்த நிலைக்கு கொண்டுவந்துதான் சேர்க்கும். அந்த வீடு அவளுக்கு சிறைதான். ஆனாலும் வெளியில் வந்தால் அவளுக்கு இரண்டு பெயர்களை சூட்டும் நம் சமூகம். ஒன்று லூசு! இன்னொன்று 'நடத்தைகெட்டவள்'. கடவுளே இவள் இப்படியே இருந்துவிடட்டும். குணமடைய வேண்டாம். இது எனது பிரார்த்தனை.


குறிப்பு: இது ஒரு உண்மை சம்பவம். பெயர்கள் அல்ல.1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இது சிறுகதையாகவே இருக்கட்டும்...

Popular Posts