Sunday, August 11, 2013

தலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க!


வணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்லது நம்ம மைந்து போலவோ அவ்வளவு திறமை இல்லேங்க.. இது விமர்சனம் இல்லேன்னா அப்புறம் இது என்ன மண்ணாங்கட்டின்னு நீங்க கேக்க முதல், இது தலைவா பற்றிய ஒரு சின்ன அனுபவம். அவ்வளவுதான். (நாங்களும் ஏதாச்சும் எழுதனும்லே..!)

நாங்க எல்லாம் முதல் ஷோ, VIP ஷோ (ஆமா நம்மள அதுக்கு கூப்பிட்டிட்டாலும்..) பாக்கிற மூஞ்சிகள் இல்லேங்க.. ஆனாலும் ஒருவாறு வரும் படங்களை பார்க்க கூடிய அளவிற்கு பார்த்து முடித்திடும் கூட்டம். அந்தவகையில் தற்பொழுது பாரிய எதிர்பார்ப்புகளிற்கு மத்தியில் திரைக்கு வந்து சக்க போடு போட்டுக்கொண்டிருக்கும் (அப்பிடீன்னு நம்ம நண்பர் போட சொன்னார்..) தலைவா திரைப்படத்தை பார்ப்பதற்கு நேற்று போயிருந்தேன். அது ஒரு மாலை நேர ஷோ. ஆண்கள், பெண்கள், வயது முதிர்ந்தோர், சிறுவர்கள் என திரையரங்கு நிறைந்திருந்த கூட்டம். ரஜினி, விஜய் போன்றவர்களின் திரைப்படங்கள் திரையரங்கு நிறைந்திருக்கும் கூட்டத்தோடு பார்த்தால்தான் அதன் உண்மையான கிக்கு கிடைக்கும் என்பது எனக்கு நன்கு தெரிந்ததே.

திரைப்படம் ஆரம்பமானது. எனக்கும் விஜய் என்கின்ற ஒரு நடிகரை பிடிக்கும். அனால் நான் 'எலேய் எங்க தளபதிலே..' என்று மற்றவன் சட்டையை பிடிக்கும் அளவிற்கு அவர் விசிறி கிடையாது.. ஆனால் விஜயின் நடனம், நளினம், சண்டை போன்ற சினிமா இயல்புகள் என்னை கவர்ந்தவை. திரையரங்கில் எனக்கு அடுத்த சீட்டில் இருந்தவர் ஒரு மிகப்பெரிய விஜய் விசிறி. அவருக்கு ஐந்தே வயதுதான் ஆகிறது, வேட்டைக்காரன் மற்றும் துப்பாக்கி பஞ்சுகளை சொல்லி சொல்லி எங்க வீட்டில் எனைவரிற்கும் நெஞ்சில் உதைக்கும் நம்ம அண்ணன் பெற்றெடுத்த புத்திரன். அனால், அவரிற்கு இருந்த ஒரேயொரு பிரச்சனை, 'சித்தப்பா, என்னால இண்டைக்கு விசில் அடிக்க முடியாதே..!' என மிகவும் கவலையாக என்னிடம் அவன் சொன்னபோது நான் 'ஏன் சார்..?' என கேட்க அவர் தனது விரலை நாங்கள் இருந்த வரிக்கு பின்னால் உள்ள வரிசையில் ஒரு சீட்டை நோக்கி காட்டினார். நானும் திரும்பி பார்த்தபோது 'உண்மைதான்' என உணர்ந்துகொண்டேன். அங்கே இவரின் கிளாஸ் டீச்சர் அதுதாங்க நேர்சரி டீச்சர் சிரித்தபடி அமர்ந்திருந்தார். 


தலைவா ஆரம்பமானது, அனைவரும் கதிரைகளின் நுனியில் அமர்ந்திருந்தது போலவே நானும், அண்ணா, தளபதி, அமலா பால், இயக்குனர் விஜயின் விளையாட்டுக்கள், நடனம் போன்றவற்றை எதிர்பார்த்தபடி அமர்ந்திருந்தேன். முதல் பதினைந்து நிமிடங்கள், பின்னர் விஜய் நடன மேடையில் குதித்ததிலிருந்து இருபது நிமிடங்கள் திரையில் பேசும் எதுவும் காதுகளை தெளிவாக வந்து சேர்ந்ததில்லை. அவ்வளவு சத்தம். அங்கு வந்திருந்தவர்களில் முக்கால் வாசிக்கும் அதிகமானவர்கள் விஜயின் விசிறியாய் இருந்திருப்பார்கள் போலும். அதற்குள்ளும் சிலர் ரொம்ப அமைதியாக இருந்தார்கள். இதிலாவது ஏதாவது வித்தியாசமாய் செய்திருப்பாரா விஜய் என்று எதிர்பார்த்து வந்திருப்பார்கள் என நினைத்துக்கொண்டேன்.. எனது வாயோ திறந்தது நம்ம சந்தானம் பேசும் பொழுதும், அமலா பால் வந்துபோகும் நேரம் மட்டுமே! (வாய் திறந்தது என்றால் எனக்கு விசில் அடிக்க தெரியும் என நீங்கள் நினைத்தால் அதற்க்கு சங்கம் பொறுப்பாகாது; எனக்கு மட்டும் விருப்பம் இல்லையா என்ன??)

திரைப்படத்தை பற்றி எதுவும் சொல்ல தேவையில்லை. இன்றுவரை போதுமான அளவு விமர்சனங்கள் தலைவாவை கொண்டாடியும் காறித்துப்பியும் வந்திருக்கின்றன. எனது நண்பன் ஒருவன் இடைவேளை முடிந்து ஒரு பதினைந்து நிமிடத்தில், இந்து சமுத்திரமே தெரியும் அளவிற்கு அப்படியொரு கொட்டாவியை விட்டுத்தள்ளினான். எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது. காரணம் அவன் விஜய் இரசிகன். இருந்தும் மீசையில் மண் ஒட்டாததுபோல சுதாகரித்துக் கொண்டான். 'மச்சான், முதல் பாதியை விஜயும் இரண்டாவது பாதியை ஹரியும் எடுத்திருக்கலாம்..' என அவன் பின்னர் சொன்னபோது இதே கருத்தை நம்ம மைந்தன் சிவா சொன்னது ஞாபகம் வந்தது. "ச்சே இவன் (விஜய்) திருந்தவே மாட்டான்யா.!" என இன்னொருத்தன் சொன்னபோது 'முதுகு பத்திரம், விஜய் வெறி ரசிகர்கள் இங்கு நிறைந்து இருக்கிறார்கள்..' என்றேன். 


இரண்டாவது பாதி உண்மையிலேயே ரொம்பவே இழுவைதான். இடைக்குள் வரும் அந்த இரண்டு பாடல்கள் கொஞ்சம் அந்த இழுவையை சமாளித்துப்போகிறது கைதட்டல், விசில்களினால். உண்மையைச் சொன்னால் எனக்கோ முதல் பாதியை இன்னும் ஒரு தடவை பார்க்கவேண்டும் போல் இருந்த அதே சமயம் இரண்டாவது பாதியை பார்க்கும் பொழுது ஒரு எரிச்சலும், ஹரி - சூரியா (சிங்கம் 2) மேல் இன்னும் கொஞ்சம் மரியாதையும் உண்டாகிப்போனது. இவ்வாறு திரைப்படம் முடிந்து வெளியே வந்து சிலரிற்காய் காத்துக்கொண்டு நின்றபோது படம் பற்றி பலர் பலவாறு பேசிக்கொண்டு வெளியேறினார்கள். நான் நினைக்கிறேன் பொது சினிமா விரும்பிகள் அவ்வளவாய் தலைவாவை கொண்டாடியதாய் தெரியவில்லை. ஆனால், விஜய் விசிறிகள் மேல் எனக்கு பயங்கரமாய் கோவம் மட்டுமே வந்து தொலைத்தது. விஜய் என்கின்ற நடிகரை பிடிக்கும் என்பதற்காய் சினிமாவின் பொது, ஆளுமை நிறைந்த இரசனையை ஓரம் கட்டிவிட முடியாது இல்லையா? ஒருவகையில் எதை எப்படி நடித்தாலும் அதை கொண்டாடும் மனநிலையில் விஜய் இரசிகர்கள் இருப்பதால்தான் சினிமாவில் வித்தியாசமாய் எதையும் செய்யவேண்டும் என்கின்ற தேவை, பொறுப்பு விஜய் இடம் குறைவாக இருக்கிறதோ என தோணியது. 

அங்கிருந்த விஜய் இரசிகர்கள் அனைத்தையும் இத்திரைப்படத்தில் கொண்டாடினாலும் அதில் எனக்கு உச்சக்கட்ட கோவத்தை ஏற்படுத்திய ஒரு விஜய் விசிறியின் பீட்பெக், அவர் மற்றவரிற்கு சொல்கிறார், "மச்சான், செம படம் இல்ல... எப்பிடி ஒரு கதை.. செமையா ஜோசிச்சிருக்காங்க.. விஜய் என்னமா நடிக்கிராண்டா..!!!!"

எனக்கோ அந்த நண்பரை கூப்பிட்டு ஆரத்தழுவி, முத்தமிட்டு, ஒரு 1000 ரூபாய் காசாவது சந்தோஷ பரிசாக கொடுத்து அவனோடு நின்று ஒரு புகைப்படமும் எடுத்துக்கொள்ளவேண்டும் போல் இருந்தது. 

இதைக்கேட்டபோது - என் தலையே வெடிச்சிரிச்சு!Wednesday, August 7, 2013

பிள்ளையாருக்கு லீவு விட்டிருக்கு!

- சிறுகதை -

ஜேசுநாதர், பிள்ளையார், புத்தர், அல்லாஹ் இலங்கையை அர்ச்சித்த கடவுள்கள். இவர்களிடத்தில் வெட்டுக்குத்து வந்ததாகவோ, ஏரியா பிரச்சனை நடந்ததாகவோ, கதிரை கலவரம் மூண்டதாகவோ நான் அறிந்திருக்கவில்லை. எவரும் சொல்லித்தரவும் இல்லை. அவர்கள் நால்வருக்குள்ளும் நல்லதொரு அண்டர் ஸ்டாண்டிங் இருப்பதாகவே எனக்குத்தெரியும். தாங்கள் நால்வரும் ஒருவரே எனக்கூட தங்களின் சில பிரசங்கிகளால் அறிவிக்கப்பட்டதாகக்கூட எனக்கு யாரோ சொல்லிக்கொடுத்த ஞாபகம். இவர்கள் நல்ல நண்பர்கள். நல்ல சகோதரர்கள். தங்களுக்குள்ளே நல்லதொரு உறவை வைத்திருப்பவர்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியும். ஆனாலும், இதை சொல்லும் பொழுது இவற்றை ஏற்றுக்கொள்வதாய் சுகுமார் சாடை காட்டாமல் எதிர் புறமாய் தலையை அசைத்துக் கொண்டது எனக்கு கோவத்தை உண்டுபண்ணியது. 

நன்றாக ஞாபகமிருக்கிறது அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. சூரியன் வெளியே வருவதற்குள் நான் விமான நிலையத்துள் சென்று சேர்ந்துவிட்டேன். காலை வருவதற்குள் லண்டனில் இருந்து என் நண்பன் சுகுமார் வந்திடவேண்டும். இதுவே எனக்கு சொல்லப்பட்ட திட்டம். ஒரு பக்கம் சிலர்  சிலரை கட்டிக்கொண்டு அழுவதையும், மறு புறம் சிலர் ஓடிச்சென்று கட்டியணைத்து சுகம் விசாரிப்பதையும் அமர்ந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த எனது கண்களில் திடிரென வந்து விழுந்தான் சுகுமார். "டேய் எப்பிடிடா இருக்கா??" என கேட்டவாறு கட்டியணைத்தவனை நானும் இறுக அணைத்து "நல்லா இருக்கேண்டா! எப்பிடி???" என்றேன். பதின்மூன்று வருடங்கள் ஸ்கைப்பிலும், முகப்புத்தகத்திலும் மட்டும் வந்தவன் இன்று நேரடியாக எனக்குமுன் நிற்கிறான். இருவரும் பேசியபடி வெளியே வந்து ஊர் நோக்கி புறப்பட்டோம்.

ஊரை சென்று அடைவதற்குள் சுகுமாரிடமிருந்து ஏகப்பட்ட விசாரணைகள், கேள்விகள். சில கேள்விகள் தவிர்த்து பலகேள்விகளுக்கு என்னிடம் விடையிருந்தது. அரசியல், தமிழ் தேசியம், போராட்டம் போன்றவையே அந்த சில. தனது வன்னியையும், வடக்கையும் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக இணையத்திலும், தொலைக்காட்சிகளிலும் மட்டும் பார்த்து கேட்டு வளர்ந்தவன் இல்லையா, அதுதான் நேரில் வந்ததும் ஏகப்பட்ட சந்தேகங்கள் அவனிடம். திரும்ப திரும்ப அவன் கேட்ட சில கேள்விகளால் கோவம் அடைந்த என்னை சரி செய்து சாரி கேட்டு இறுதியாக ஒரேயொரு வில்லங்கமான கேள்வி மட்டும் கேட்டு முடித்தான். வரப்போகும் மாகாணசபை தேர்கள் தொடர்பாக நீ என்ன நினைக்கிறாய் என்கின்ற கேள்வி அது.  அதற்கு ஒரு வாசல் மூடினால் இன்னொரு வாசல் கட்டாயம் திறப்பான் கடவுள் என்றேன். அவ்வளவுதான். புரிந்துகொண்டானோ இல்லையோ ஓகே என தலையை மட்டும் ஆட்டிக்கொண்டான்.

அவன் ஊர் போய் சேர்ந்தோம். அவனிற்கோ ஏகப்பட்ட சந்தோசம். என்ன மச்சான் நம்ம ஊரு இவ்வளவு மாறிப்போச்சு என வியக்கும் போதெல்லாம் ஊர் மட்டுமில்ல மச்சி நம்ம சனமும்தான் என பதில்சொல்லி அவன் புருவங்களை உயரப்பண்ணுவேன். A9 ஐ பார்த்து எவ்வளவு அழகா செய்திருக்கிறாங்க என்றபோது 'ரோட்டுக்களை மட்டும்' என சொல்லி தலை குனிந்தேன். இருந்தாலும் இங்க வந்ததும் அந்த  பழைய ஞாபகங்கள் எல்லாம் வருதுடா எனச் சொன்னபோது மட்டும் 'உஷ்' எனச்சொல்லி அவன் வாயை மூடினேன். 

ஒருவாறு ஊரை அடைந்தபோது மணி இரவுச்சாப்பாட்டிற்கு சரியாய் இருந்தது. அவன் விருப்பப்படியே சிவப்பு அரிசிச் சோறும்,  இரணை மடு குள விரால் மீன் குழம்பும், முருங்கைக்காய் பிரட்டலும் பரிமாறப்பட்டது. வயிற்றையும் மனதையும் நிரப்பிய அந்த சாப்பாட்டோடு படுக்கைக்கு போனோம். எனக்கோ தூக்கம் கண்களை பிய்த்துக்கொண்டு வந்து இமைகளில் தொங்கிக்கொண்டிருந்தது. 'நான் எவ்வளவு காலத்திற்கு பிறகு நம்ம தேசத்திற்கு வந்திருக்கேன்... ஒனக்கு தூக்கம் கேட்குதா..?' என என்னை திட்டினான் சுகுமார். 'ஆமா, நாங்க முழிச்சிருக்க வேண்டிய நேரத்திலெல்லாம் முளிச்சிருந்ததால்தான் இப்பெல்லாம் எங்களுக்கு இப்படி நித்திரை வருது.. நீங்க அப்ப  நல்லா  தூங்கிநீங்கதானே.. இப்பவாவது கொஞ்சம் முளிச்சிருங்க..!' எனச்சொல்லி மறுபக்கம் புரண்டு படுத்தேன். இருந்தும் அவன்தான் வென்றான். 'சரி சொல்லித்தொலை' என சிணுங்கிய கோவத்தோடு அவன் பக்கம் மீண்டும் புரண்டேன்.

விடிய விடிய பேசிக்கொண்டிருந்தோம். திரும்பவும் பாடசாலைக்காலம், பருவகாதல், எழுட்சிப்போராட்டம், இடப்பெயர்வுகள், காட்டிக்கொடுப்புக்கள், துரோகங்கள், தொலைவுகள், இரத்த சிந்தல்கள், மர்மங்கள், அரசியல், ஆதிக்கம், ஆக்கிரமிப்பு என அன்று இரவு பூராவும் நாங்கள் பேசியவையின் பட்டியல் நீண்டுகொண்டு போனது. இறுதியாக 'சுமதி எங்க மச்சான்?' என்ற கேள்வி எதிர்பாராமல் அவன் வாயில் நழுவி நிலத்தில் வந்துவிழுந்தது. அவள் நன்றாக இருக்கிறாள் என சொல்லி பேச்சை முடித்துவிடலாம் என எண்ணியபோது 'அவ உசுரோட இருக்காவா?' என இரண்டாம் கேள்வியால் என்னைச் சுட்டான் சுகுமார். 'ஆமாட, உசுர் மட்டும் இருக்கு.. தெல்லிப்பளை ஆஸ்பத்திரியில் இருக்காடா.. கடைசி நேரத்தில அப்பிடி ஆகிடிரிச்சி..' என சொல்லிமுடிக்கையில் அவன் எழுந்திருந்து படுத்திருந்த பாயின் நுனிகளை நீண்டிருந்த அவன் நிகங்களினால்பிய்த்துக்கொண்டிருந்தான் சுகுமார். சுமதி இவன் பள்ளிக்காதலி. அந்த நாட்களில் பாடசாலை பங்கரினுள்தான் இந்த காதல் முதல் முதல் செட் ஆகியது. பின்னர் நடந்தவை பற்றி நானோ சுகுமாரோ இவ்விடத்தில் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் தமிழன் என்றால் அது புரியும்!

நீண்ட நாட்களின் பின்னர் காலையில் சுகுமார் சூரியனை தாயகத்தில் தரிசிக்கிறான். 'ஒரே சூரியன் எண்டாலும் அத வன்னில இருந்து பார்த்தா அதுக்கு ஒரு கம்பீரம் தெரியுது மச்சான்..' என சொல்லிக்கொண்டு வானத்தை அண்ணாந்துபார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான் அவன். நானோ பழகிப்போன சூரியனோடு எதற்கு பேச்சு என தூக்கத்தில் குறியாய் இருந்தேன். நேரம் கொஞ்சம் கழிந்ததும், வெளியே போகலாம் என முடிவெடுத்து வீட்டின் பின் புறத்தில் சாத்தியிருந்த துவிச்சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு வீதிக்கு வந்தோம். இரயில் வந்தாலும் வன்னியில் உலாவ சைக்கிளை விடவும் ஒரு இனிமையான வாகனத்தை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. அங்கு போக வேண்டும், இங்கு போக வேண்டும், அதை பார்க்க வேண்டும், இதை பார்க்க வேண்டும் என அவன் அளப்பரைகளில் சைக்கிள் மிதிக்கவே வேண்டாம் என ஆகியது எனக்கு. 

சுகுமார் கேட்டது போலவே அங்கும் இங்கும் என அவன் பார்க்க, போக வேண்டி ஆசைப்பட்ட சகல இடங்களையும் கூட்டிச்சென்று காட்டி ஆகிவிட்டது. நேரம் நண் பகல் கடந்து மாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. எனக்கோ சைக்கிள் மிதித்து கால்களில் தலைகாட்டிய வலி ஒருபுறம், வயிற்றை அடிக்கடி நக்கிப்போகும் பசி மறு புறம். வீட்டிற்கு கிளம்பலாம் என நினைத்து சைக்கிளை திருப்புகையில் 'மச்சான்  முக்கியமான இடம் ஒண்டை விட்டுட்டோமே.. நம்ம ஆலமரத்து பிள்ளையாரடி..' என சத்தமிட்டான் சுகுமார். 'ஆமால்ல...' என மறுபடியும் சைக்கிளை திருப்பி நாங்கள் அன்றெல்லாம் மாலை வேளையில் அடிக்கடி கூடும் அந்த ஆல மரத்தடி பிள்ளையாரை நோக்கி மிதிக்க ஆரம்பித்தேன். போகையில் அவனிற்கு என்ன ஞாபகம் வந்ததோ தெரியவில்லை எனக்கோ அந்த நாட்களில் அந்த பிள்ளையார் கோவிலிற்கு தாவணி கட்டிவரும் அழகிய பெண்களை பார்த்து ஜொள்ளு விட்ட காலங்கள் தான் மனதில் வந்து வந்து மறைந்து கொண்டிருந்தது.

ஒருவாறு அங்கு வந்து சேர்ந்தோம். அங்கு சைக்கிளை ஓரமாய் நிறுத்தியதுதான் தாமதம். 'டேய், என்ன மச்சான், இங்க இருந்த நம்ம பிள்ளையார காணோம்!! அவர் இருந்த இடத்தில புத்தர் இருக்கார்?? என்னடா ஆச்சு..?? தடபடவென ஆர்ப்பரித்தான் சுகுமார். 'சொல்லுடா... என்ன ஆச்சு..?' திரும்ப திரும்ப அதே கேள்வி.என்னிடம் பதில் இருக்கா என்ன? ஏதோ பிள்ளையாரை நானே கடத்திக்கொண்டுபோய் கொலை செய்த மாதிரி... இவன் பேச்சு.. கொஞ்சமேனும் ஆச்சரியம் இல்லாமல், கொஞ்சம் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி அவன் முகத்தை திருப்பி அவனிடம் சொன்னேன்..

"என்ன மச்சான் செய்யிறது.. கூல் டவுன்... இங்க இருந்த நம்ம பிள்ளையார் லீவில போயிருக்கார்.. அதான் அவருக்கு பதிலா இப்ப இவர் வந்திருக்கார்... பட் மீண்டும் நம்ம பிள்ளையார்  நிற்சயம் வருவார்!!... டோன்ட் வொறி கண்ணா.. இப்ப நீ வா நாம வீட்டுக்கு போவம்!!"Popular Posts