பல்லு விளக்கியதையும், பாட்டி தடக்கி விழுந்ததையும் ஸ்டேடஸ் இடும் முகப்புத்தகம் பற்றி எவரிற்கும் அறிமுகம் தேவையில்லை. அதிகமாய் இளைய தலைமுறையினரை ஆட்கொண்டு, அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு சமூக வலைப்பின்னல் இந்த முகநூல். இந்த முகநூலின் பாவனையைப் பொறுத்து இது நல்லதா இல்லை கெட்டதா என்கின்ற முடிவிற்கு வரலாம். என்னைப்பொறுத்தவரை முகநூலை நல்ல வழியில் பாவிப்பதும், தீய வழியில் பாவிப்பதும் அதை பாவிக்கும் நம்மைப் பொறுத்தது. நானும் இந்த முகப்புத்தகத்தின் ஒரு இரசிகன். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் முகப்புத்தகத்தில் எனது நேரத்தை செலவு செய்வது தேவை இல்லாத விடயங்களை தேடி ஓடும் மனதை கட்டுப்படுத்த, வீணான பிரச்சனைகளில் மூக்கு நுழைப்பதை தவிர்க்க, தனிமையில் இருக்க, தேவையற்ற வீண் உரையாடல்களை தவிர்க்க, பயனற்ற வெளிச்செல்லல்களை (Outing) குறைக்க, ஓய்வாக இருக்க என ஏராளமான நன்மைகளை நான் பெறுவதற்கே.
இப்பொழுதெல்லாம் ஒரு என்சைக்கிளோபீடியாவாக, செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் நியூஸ் மீடியாவாக, உலக புதினங்களையும் இரசனைமிக்க விடயங்களையும் அறிய கிடைக்கும் ஒரு ஊடகமாக, நமது நண்பர்களுடன் தேவை ஏற்படும் போதெல்லாம் அருகில் இருப்பது போல் அளவளாவ உதவும் இலகு தொலைத்தொடர்பு சாதனமாக மற்றும் நம்ம மன வேதனைகளை சந்தோசங்களை நண்பர்களுடன் கொட்டித்தீர்க்கும் ஒரு நண்பர்கள் மீட்டிங் ஸ்பாட் ஆக என பல வகைகளில் முகப்புத்தகம் எனக்கு பயன்படுகிறது. அதிலும் நம்மில் பலர், என்னைப்போல ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமாக (அதிலும் நம் மனம் சரியில்லாத வேளைகளில்...) இதை பயன்படுத்துகிறோம். சரி, விடயத்திற்கு வருவோம். இதை அப்பிடியே எதிர்மறையாய் பயன்படுத்தும் பல வீணாய்ப்போன முகப்புத்தக பயனர்களை பார்க்கும் பொழுது மேலெழுந்த கடுப்பின் உச்சகட்டமே இந்த பதிவு.
அதிலும் இந்த கவிஞர் பட்டாளம் காட்டும் அட்டகாசங்கள் சொல்லில் மாளாதவை (எனது முகப்புத்தக பக்கத்தில் அதிகம் கவிஞர்கள் இருப்பதால் இது எனக்கு தெரியும்). கவிதை எழுதுபவர்கள் எல்லாரும் கவிஞர்கள் இல்லை என்பது லாஜிக் என்றாலும் முகப்புத்தகத்தில் கவிதைகள் எழுதும் பிரமாதமான இளம் கவிஞர்களை வளர்த்து விட்டதும், கெடுத்து விட்டதும், இந்த முகப்புத்தகம் தான். இந்த கவிஞர்கள் எழுதும் கவிதைகள் (??) எங்கள் பக்கங்களை சென்றடையும் போது அதை நாம் வாசிக்கிறோம். பிடித்திருந்தால் லைக் இடுகிறோம். அதற்கும் மேலாக அக்கவிதையில் ஈடுபாடு இருந்தால் கமெண்ட் செய்கிறோம். இதிலே முக்கியமான விடயங்கள் என்னவென்றால், அல்லது என்னை கடுப்பேத்தும் மூன்று விடயங்கள் என்னவென்றால்,
1. கவிதை எழுதியவர்கள் அக்கவிதைக்கு வரும் மாற்றுக்கருத்துக்களை எதிர்கொள்ள இலக்கிய அல்லது எழுத்து ஆளுமை இல்லாமல் இருப்பது. மற்றவர் கருத்து விதண்டாவாதம் அல்லது காழ்ப்பு எனில் அவர்களுடன் பொதுவான இடங்களில் சண்டையிடுவதில் எந்த புத்திசாலித்தனமும் இல்லை. அவர்களிடத்திலிருந்து நாங்களாகவே ஒதுங்கிக்கொள்ள முடியும். முகப்புத்தகத்தில் எங்கள் வீராப்புக்களைக் காட்டுவது எமது மரியாதையை நாமே கெடுத்துக்கொள்ள பொருத்தமான ஆப்பில் நாமே சென்று குந்துவது போன்றது.
2. சில மாற்றுக்கருத்துக் கொண்டுள்ள இன்னும் சில கவிஞர்கள் அதை நாம் ஒரு சமூக வலைத்தளம் ஒன்றில் இருக்கிறோம் என்கின்ற சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் அநாகரிகமாக மற்றவர்களுக்கு கருத்திடுவது. (இதற்கு inbox என்கின்ற ஒரு வசதியும் முகப்புத்தகத்தில் இருக்கிறது.) கருத்துசுதந்திரம் முகப்புத்தகத்தில் போதுமான அளவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான் உங்கள் நண்பரின் பதிவிற்கு கீழே கருத்திடல் பெட்டி திறந்தே எப்பொழுதும் இருப்பது. அதற்காக எதையும் எழுதலாம் என்று நினைப்பது தவறு இல்லையா. இங்கே கருத்திடல் அல்லது பதில் கருத்திடலில் அநேகர் தங்களின் மரியாதையை தாங்களே கெடுத்துக்கொள்கிறார்கள். பாவம்!
3. சிலர் என்னத்தை எழுதினாலும் (எழுதியவருக்கே இது கவிதையா என சந்தேகம் இருக்கும்) அதை செம செம நைஸ் நைஸ் என ஓடி வந்து கருத்துடுபவர்கள். ஒரு சதத்திற்கு கூட பிரயோசனம் இல்லாமல், அந்த கவிதைக்கு இன்றி அந்த நபரிற்கு முதுகு சொறியும் ஒரு கூட்டம் : இந்த கூட்டத்தால் குறித்த படைப்பாளிக்கு எந்த பிரஜோசனமும் இல்லை. இவர்களின் மிகப்பெரிய அடி முட்டாள் தனம், இந்த கவிஞர் எதை சொன்னாலும் சரி என வாதிடுபவர்கள். ஐயா சாமிகளா உங்களுக்கின்னு கடவுள் ஒரு மூளைய வச்சிருக்கான், கொஞ்சம் பாவியுங்கோ.
இந்த மூன்று விடயங்களும் என்னை மாத்திரம் அல்ல, முகப்புத்தகத்தில் இருக்கும் பலரை முகம் சுளிக்க வைக்கும் விடயங்கள். முகப்புத்தகத்தில் நடந்தேறும் சண்டைகளில் அதிகமானவை இந்த கவிஞர் பட்டாளத்தின் உள்ளேயே நடந்தேறுகிறது. அதிலும் சில சண்டைகளைப் பார்த்தல் அது நம்ம ஊரு வேலிச் சண்டையை வென்றுவிடும். பாவிக்கப்படும் வார்த்தைப் பிரயோகங்கள் தாங்கள் ஒரு சமூக வலைத்தளத்தில் இருக்கிறோம் என்பதையும், இதனால் தங்கள் சுய கௌரவம் பாதிக்கப்படும் என்பதையும் துளிகூட ஜோசிப்பதில்லை. இவை இலக்கிய சண்டைகள் என்றால் கூட பரவாயில்லை. முகப்புத்தகத்தில் இடும் கவிதையின் கருத்து, ஒரு வரி, ஒரு சொல் போன்றவற்றிற்காய் சிறு பிள்ளைத்தனமாக சண்டையிடும் கவிஞர்கள் தாங்கள் ஏதோ பாரதிதாசன் என எண்ணிக்கொள்பவர்களோ தெரியவில்லை..
அட மக்கள்களா, முகப்புத்தகம் ஒரு நல்ல பொழுதுபோக்கு மற்றும் பயன்மிக்க சமூக ஊடகம். அதை தயவுசெய்து உங்கள் குப்பைத்தொட்டிகள் ஆக்காதீர்கள். காரணம் உங்கள் குப்பைகளை நாங்களும் எவ்வாறோ கடந்துபோக வேண்டி இருக்கிறது காரணம் இது பொதுவான சமூக வலைப்பின்னல். உங்கள் கேவலம் கெட்ட சண்டைகளையும், கருத்து பரிமாறல்களையும் உங்கள் இன்பாக்ஸ் இல் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் நின்மதியாய் முகப்புத்தகத்தில் இமூச்சு விடுவதற்கு.
No comments:
Post a Comment