பல
எல்லைக்கோடுகளால்
முடிச்சிடப்பட்டவையே வாழ்க்கை!
நண்பா,
சொல்வதைக்கேள்!
உன் விரல்களுக்கும்
ஓர் எல்லையுண்டு!
அது - உன்
நிகமும்,
மற்றவன் உரிமையும்!!
கடலுக்கும் எல்லையுண்டு
இல்லையேல்
நிலம் இருப்பதற்கு நியதி இல்லை.
உன் வாழ்கையும்
எல்லைகள் கொண்டது.
மதித்தால் சிறப்பாய்
மிதித்தால் தவிப்பாய்!
உன் ஆசைகளுக்கு
மெல்ல எல்லையிடு..
எல்லை தாண்டிய ஆசைகள்
பயங்கரவாதத்தில் முடியலாம்!
உன் உணர்வுகளுக்கு
ஒரு எல்லை போடு..
எல்லைகள் அற்ற உணர்வுகள் - உன்னை
மிருகமாயும் மாற்றிவிடலாம்..!
எல்லைகள் கொண்ட
வேட்கைதான்
காந்தியை
அகிம்சைவாதியாக்கியது!
மறந்துவிடாதே!!
எல்லைகள் கொண்ட
கீறல்கள் தான் - ஒரு
மோனாலிசாவை உருவாக்கியது
மறந்துவிடாதே!
எல்லைகள் கொண்ட
சீனச்சுவர்தான் - பின்னர்
அதிசயமாச்சு!
மறந்துவிடாதே!
ஒரு எல்லைகளுக்குள்
கொட்டுகின்ற நீர்தான் - அழகாய்
நயாக்கராவாகிறது!
புரிய மறக்காதே!
நண்பா,
உனக்கான எல்லைக்கோடுகளை
நேர்த்தியாக்கிக்கொள்!
எல்லை தாண்டிய
மோகம் - இன்னுமொரு
டெல்லி கர்ப்பளிப்பை நடத்தலாம்!
எல்லை தாண்டிய
அதிகாரம் - இன்னுமொரு
முள்ளிவாய்க்காலிற்கு வித்திடலாம்!
எல்லை தாண்டிய
அடக்குமுறை - இன்னும் பல
கிரிஷாந்திகளை புதைக்கலாம்!
நண்பா,
அனைத்திற்கும் எல்லைபோடு!
வாழ்க்கைக்கு அர்த்தம் கொடு!
காரணம்,
எல்லைகள் தாண்டும் போது - நீ
உலகத்திலிருந்து மறைக்கப்படலாம்!
வரலாறுகளைப் பார்!!
நன்றி லண்டன் தமிழ் வானொலி, கவிதை நேரம்!
1 comment:
அருமையான முடிப்பு அண்ணாச்சி!
Post a Comment