ஓர் வித்தியாசமான புத்தக வெளியீட்டு அனுபவம் இன்று. கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற கானவியின் ( Mithaya Kaanavi) "கருணை நதி" நாவல் வெளியீட்டு நிகழ்வு. நீண்ட நாட்களின் பின் அந்த கொடூர முள்ளிவாய்கால் நினைவுகளை கண்கலங்க வைத்துப்போனது அங்கு இடம்பெற்ற உரைகள்.
முள்ளிவாய்க்கால் இரத்தக்காட்டில் அன்று அர்ப்பணிப்போடு பணியாற்றிய வைத்திய கலாநிதிகளாகிய Dr. சத்தியமூர்த்தி மற்றும் Dr. சிவதாஸ் ஆகியோரின் அனுபவப்பகிர்வு கலந்த உரைகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தன. இந்த இரண்டு ஆளுமைகளிற்கும் ஒரு அறிமுகம் தேவையற்றது. இறுதிப் போரின் இரத்த வேட்டையின்போது பல உயிர்களை காப்பாற்றி வாழ்வு கொடுத்த பெருமை இவர்களைச்சேரும். அதேபோல போரிற்கு பிற்ப்பட்ட காலத்தில் போரினால் மனநிலை பாத்திப்பிற்கு உள்ளான மக்களை தானாக தேடிச்சென்று சிகிச்சை அளித்து அவர்களுக்கான ஒரு மகத்தான சேவையை செய்துவரும் வைத்தியர் சிவதாஸ் அவர்களுடைய உரையைக் கேட்பதற்கு எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பெருமையாகவே நினைக்கிறேன். நான் பார்ப்பதற்கு சந்திப்பதற்கு ஆசைப்படும் சில எழுத்து, அறிவியல், இலக்கிய ஆளுமைகளில் வைத்தியர் சிவதாசும் ஒருவர். இவரது மகிழ்வுடன் மற்றும் நலமுடன் ஆகிய உளவியல் நூல்கள் என்னை அதிகம் கவர்ந்தவை.
இவர்கள் இருவரும் தாங்கள் தமிழ் மக்களுக்காற்றிய சேவைகளிற்காய் என்றும் நம் மனங்களில் நிலைத்திருப்பவர்கள். போரின் இறுதிக்கட்டத்தில் கானவியாற்றிய மகத்தான மனிதாபிமான பணியும் அவர் மேலான எனது மரியாதையை இரட்டிப்பாக்கியது. போர்க்கால படைப்பிலக்கிய உலகில் கானவியின் நுழைவு காத்திரமானதும் அவசியமானதும் என்றே கூறமுடியும்.
உண்மையில் அன்றைய முள்ளிவாய்க்கால் காற்றால் சூழப்பட்ட ஒரு அழகிய காதல் கதையை புனைந்திருக்கும் இந்நூல் போரிற்கு பிற்ப்பட்ட கால இலக்கியத்தில் ஓர் சிறந்த ஆவண இலக்கியமாகவே கருதவேண்டியிருக்கிறது. இதையே மதிப்பீட்டுரை நிகழ்த்திய எழுத்தாளர் மு.போ மற்றும் கவிஞர் மேமன் கவி ஆகியோரும் தொட்டுப்போயினர்.
இலக்கியத்திலும் எமது எழுத்துக்களிலும் எமது வலிகளை உண்மையை உண்மையாய் பேசும் படைப்புக்களை நான் என்றுமே கொண்டாடுபவன். அந்தவகையில், கானவியின் போர்க்கால துணிகர இலக்கிய படைப்பாற்றலிற்கு நான் தலைவணங்குகின்றேன். எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் கூறிக்கொள்ளுகிறேன்.
![]() |
வைத்திய கலாநிதி சத்திய மூர்த்தி உரையாற்றுகிறார். |
![]() |
உளவியல் நிபுணரும், சிறந்த உளவியல் எழுத்தாளருமான வைத்திய கலாநிதி சிவதாஸ் அவர்கள் உரையாற்றுகிறார். |
No comments:
Post a Comment