Thursday, April 11, 2013

குட்டி குட்டி கவிதாக்கள் - 02

எனது 'அமலின் கவிதைப் பக்கம்' என்னும் முகப்புத்தக பக்கத்தில் கிறுக்கிய சில குட்டி குட்டி கவிதாக்கள் சாரி கவிதைகள்.
எனது உள்ளங்கையில்
ஓடிவிளையாடும்
உயிர்மை ரேகைகள் நீ!
திருமணத்தை
நிச்சயிப்பவளும் நீ!
நிராகரிப்பவளும் நீ!!
பின்னர் - என்
ஆயுளை
கூட்டுபவளும் நீ!
தீர்த்துக்கட்டுபவளும் நீ!
-----------


மூச்சுவிடவும் முடியவில்லை

முந்தானை தொடவும் திராணியில்லை
காதலை தொட முடிந்த எனக்கு
வாழ்க்கையை படிக்க அறிவுமில்லை.
ஓடி ஓடி வந்தவள் - என்னை
இடையில் விட்டு மிடுக்காய் மறைந்தாள்.
அவளுக்கு இரக்கமும் இல்லை.
எனக்கு இரவுகள் தொல்லை.
மூச்சுவிடவும் முடியவில்லை - இன்னொரு
முந்தானை தொடவும் திராணியில்லை!
-----------எனது இருண்ட தேசத்தின்
முதல் வெளிச்சம் - அது
உன்னைக்கண்ட அந்த
காந்தர்வப் பொழுது!
உன்
நிகம் முதல்
முகம் வரை
எல்லாமே
என்னை தோற்கடிக்கும்!!!
பெண்ணா நீ?
பேராச்சரியத்தின் ஆச்சரியக்குறி!
வியப்புக்குறி வியந்தெழும்
அழகு சாம்ராச்சியம்!
-----------மீண்டும் மீண்டும்
உனது நினைவுகளுக்குள்ளேயே
நிலைகுலைந்து போகிறேன்....
என்னை என்னாலேயே
கண்டுபிடிக்க முடியாமல்!
நீ மட்டும்
நின்மதியாய்
நின்றுகொண்டிருக்கிறாய் - என் காதலை
தின்று ஏப்பம் விட்டபடி!
-----------வெளியில் மழை
மனதுள் வெயில்
இரவோ குளிர்கிறது
கனவோ கொதிக்கிறது.
போர்வைக்குள் நான்
தூரத்தில் நீ.
போர்வை தரும் சூடோ
உன்
பார்வையில் உறைகிறது!
என்
தலையணை தாண்டிய வேதம்
உன்
முகப்பருக்குள் முடிகிறது!
-----------என்னை தீயிலிட்டே
சிலர் குளிர் காய்கிறார்கள்
சிலர் ஒளியேற்றுகிறார்கள்
சிலர் யாகம் காக்கிறார்கள்
சிலர் சமையல் செய்கிறார்கள்
இன்னும் சிலர் பொன்னுருக்குகிறார்கள்!
எதுவாயினும்
எரிந்துகொண்டிருப்பது
நான் என்பது
எனக்கு மட்டுமே சுடுகிறது!
-----------அலையிலும்
அமர்ந்திருக்கிறேன்.
நெருப்பிலும்
நீண்டு படுத்திருக்கிறேன்.
புயல் வீசிய போதும்
தம்பூரா இசைத்திருக்கிறேன்.
சுனாமியால் வீசியெறியப்பட்ட
சடலங்களுக்கு நடுவிலும்
இரவுகளை தனியே களித்திருக்கிறேன்.
இருப்பினும்,
மெல்லத் தைத்த - அந்த
சின்ன முள்ளால்
தினம் சாகிறேன்!
-----------சிலர் வருகிறார்கள்
கடுந்து போகிறார்கள்!
சிலர் சிரிக்கிறார்கள்
நம் சிரிப்பை
சிறைவைத்து போகிறார்கள்!
சிலர் கூட இருக்கிறார்கள்
நம் சந்தோசத்தையும்
கூட்டிக்கொண்டே செல்கிறார்கள்!
சிலர் நடிக்கிறார்கள்
நம் நிஜத்தை
தொலைக்க வைக்கிறார்கள்!
இன்னும் சிலர்
இதயத்துள் வருகிறார்கள்
அவர்கள் - நமக்கு
இரத்ததானம் செய்வதாய்
நம் ரத்தம் குடித்து போகிறார்கள்!
ஆக,
உண்மைகள்
நெஞ்சம் கொல்கிறது,
பொய்கள் மட்டும்
மஞ்சம் ஏறுகிறது!
-----------புண்ணாக்கு காதலை
புனிதம் என்றவர்கள்
பறையோடும் முகாரியோடும்
பந்தலினுள்ளே
பாடைமேல் கிடக்கிறார்கள்
பிணங்களாய்! - அப்
பொல்லாத காதலை
பொழுதுபோக்கு என்றவர்கள்
இலைகொண்டு விரட்டுகிறார்கள்
அந்த
பிணம் தின்னும் ஈக்களை!
-----------எனது
உனக்கானவை
அனைத்தும் - என்றும்
உனக்கானவைகளே!
அவற்றை நீ
எடுத்துக்கொண்டாலும் சரி
எடுத்துக்கொள்ளாவிட்டாலும் சரி.
காரணம்
நீ
தீண்டினால் மட்டுமே
திறந்துகொள்ளும்
அதிசய புத்தகம் நான்!
-----------அவள்
சீண்டல்களும்
தீண்டல்களும்
ஒன்று சேர்ந்து
விரதம் கிடக்கும்
என்
மேகமூட்டத்தை
பொழிய வைக்கிறது!
காமம் நனைகிறது
காதலோ - வீணாய்
குடை பிடிக்கிறது..
-----------நமது
பிரிவின் இடைவெளியில்
தனித்து விடப்பட்டவை
உன்னை அள்ளத்துடிக்கும்
என் கெஞ்சலும்,
என்னை அள்ளியெடுக்கும்
உன் கொஞ்சலும்
மட்டுமே!
-----------நீ
வந்துபோன
தடயங்கள்
என்
முற்றத்தில் இல்லை..
கட்டிலில் மட்டும்
பரந்து கிடக்கிறது..
நம்
ஒளிவு மறைவின்றிய காதலுக்கு
இந்த
கட்டில் ஒன்றே சாட்சி!
-----------நீண்டு பரந்த
மாத இடைவெளி கடந்து
அலைபேசியில் ஒலித்தது
அவள் குரலா??
அவள்தான்!!
இல்லையெனில் - என்
இரத்தக் குழாய்களுக்குள்
வான வேடிக்கை நடக்க
வாய்ப்பில்லை.
-----------


No comments:

Popular Posts