Sunday, April 21, 2013

'கருணை நதி' வெளியீடு - ஒரு நல்ல அனுபவம்.


ஓர் வித்தியாசமான  புத்தக வெளியீட்டு  அனுபவம்  இன்று. கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற கானவியின் ( Mithaya Kaanavi) "கருணை நதி" நாவல்  வெளியீட்டு  நிகழ்வு. நீண்ட  நாட்களின்  பின்  அந்த  கொடூர முள்ளிவாய்கால் நினைவுகளை கண்கலங்க வைத்துப்போனது அங்கு இடம்பெற்ற உரைகள்.

முள்ளிவாய்க்கால் இரத்தக்காட்டில் அன்று அர்ப்பணிப்போடு பணியாற்றிய வைத்திய  கலாநிதிகளாகிய  Dr. சத்தியமூர்த்தி  மற்றும்  Dr. சிவதாஸ் ஆகியோரின் அனுபவப்பகிர்வு கலந்த உரைகள் அனைவரையும் மெய்சிலிர்க்க  வைத்தன. இந்த இரண்டு ஆளுமைகளிற்கும் ஒரு அறிமுகம் தேவையற்றது. இறுதிப்  போரின்  இரத்த  வேட்டையின்போது  பல உயிர்களை காப்பாற்றி வாழ்வு கொடுத்த பெருமை இவர்களைச்சேரும். அதேபோல போரிற்கு பிற்ப்பட்ட காலத்தில் போரினால் மனநிலை பாத்திப்பிற்கு உள்ளான மக்களை தானாக தேடிச்சென்று சிகிச்சை அளித்து அவர்களுக்கான ஒரு மகத்தான சேவையை செய்துவரும் வைத்தியர் சிவதாஸ்  அவர்களுடைய  உரையைக்  கேட்பதற்கு  எனக்கு  கிடைத்த சந்தர்ப்பத்தை  பெருமையாகவே நினைக்கிறேன். நான்  பார்ப்பதற்கு  சந்திப்பதற்கு  ஆசைப்படும்  சில  எழுத்து, அறிவியல், இலக்கிய  ஆளுமைகளில்  வைத்தியர் சிவதாசும் ஒருவர். இவரது  மகிழ்வுடன்  மற்றும்  நலமுடன் ஆகிய உளவியல் நூல்கள் என்னை அதிகம் கவர்ந்தவை.

இவர்கள்  இருவரும்  தாங்கள்  தமிழ் மக்களுக்காற்றிய சேவைகளிற்காய் என்றும் நம் மனங்களில் நிலைத்திருப்பவர்கள். போரின்  இறுதிக்கட்டத்தில்  கானவியாற்றிய மகத்தான மனிதாபிமான பணியும் அவர் மேலான எனது மரியாதையை இரட்டிப்பாக்கியது. போர்க்கால  படைப்பிலக்கிய  உலகில்  கானவியின் நுழைவு காத்திரமானதும் அவசியமானதும் என்றே கூறமுடியும்.

உண்மையில் அன்றைய முள்ளிவாய்க்கால் காற்றால் சூழப்பட்ட ஒரு அழகிய காதல் கதையை புனைந்திருக்கும் இந்நூல் போரிற்கு பிற்ப்பட்ட கால இலக்கியத்தில் ஓர் சிறந்த ஆவண இலக்கியமாகவே கருதவேண்டியிருக்கிறது. இதையே மதிப்பீட்டுரை நிகழ்த்திய எழுத்தாளர் மு.போ மற்றும் கவிஞர் மேமன் கவி ஆகியோரும் தொட்டுப்போயினர்.

இலக்கியத்திலும் எமது எழுத்துக்களிலும் எமது வலிகளை உண்மையை உண்மையாய் பேசும் படைப்புக்களை நான் என்றுமே கொண்டாடுபவன். அந்தவகையில், கானவியின்  போர்க்கால  துணிகர  இலக்கிய படைப்பாற்றலிற்கு  நான்  தலைவணங்குகின்றேன். எனது  மனமார்ந்த  வாழ்த்துக்களையும் கூறிக்கொள்ளுகிறேன்.


வைத்திய கலாநிதி சத்திய மூர்த்தி உரையாற்றுகிறார்.


உளவியல் நிபுணரும், சிறந்த உளவியல் எழுத்தாளருமான வைத்திய கலாநிதி சிவதாஸ் அவர்கள் உரையாற்றுகிறார்.


Friday, April 12, 2013

குட்டி குட்டி கவிதாக்கள் - 03

எனது 'அமலின் கவிதைப் பக்கம்' என்னும் முகப்புத்தக பக்கத்தில் கிறுக்கிய சில குட்டி குட்டி கவிதாக்கள் சாரி கவிதைகள்.என்
ஒவ்வொரு பகலும்
அழகாகவே விடிகிறது.
நானோ
போர்த்தியபடி
காதல் செய்கிறேன்
என்
இரவுகளை - உன்
சொல்லொண்ணா
கனவுகளிற்காய்.
-----------


மேகத்தில் ஓட்டை

வீதியில் - ஓர்
மோனாலிசா நனைகிறது..
துளிகளின் காமம்
அவளை
முட்டித் தீர்கிறது - என்
விழிகளின் வேகம்
அவளை
சுற்றித் திரிகிறது.
எட்டி வந்த குளிரும்,
ஒட்டிப்போன உடையும்,
அவள்
அங்கங்களை இறுக்க,
ஆடையில்லா - என்
வெட்கம்
காமத்தில் சுருங்க,
இவள் நனைகையில்
என்
புத்தன் வேஷம்
இனிதே கலைகிறது.
-----------அவள்
கனவுகளோடு
கட்டிப் புரள்வதும்,
அவள்
நினைவுகளில்
இறங்காமல் நீச்சலடிப்பதும்,
அவள் மேல்
காதல் என்ற ஒன்றிற்காய்
காரணமின்றியே கண்ணீர் விடுவதும்
காதலின்
கண்ணாம்பூச்சியா..
இல்லை,
காதலின்
சாபக்கேடா..
-----------பெண்ணே,
உன்னை
அதிகம் நேசித்ததால்தான்
நான்
அதிகம் நோகடிக்கப்பட்டேன்.
அதாவது,
என்னை நீ
- மிக
உயரத்திலிருந்து விழுத்தியதில்தான்
பட்ட அடி
மிச்சம் அதிகம்.
-----------உன்னை
மறந்து போவதற்காய்
நான்
செலவிடும்
ஒவ்வொரு மணித்துளியும்
நீ - என்னை
மறந்துவிடக்கூடாது
என்கின்ற
மன வாஞ்சையிலே
முடிந்துவிடுகிறது..
-----------உனக்கும்
எனக்கும்
என்றுமே இருந்ததில்லை
இடைவெளி.
நாம் இருவரும்
நம் சுயங்களை
"ஈகோ" விடம்
தொலைக்கும் வரை.
-----------பனி விழும்
இரவுகள்..
உன்
இதழ் நனைத்தால்
அது
ஒரு
அழகிய இரவின்
நயாக்கரா..
-----------அவள்
நிலவுதான்..
அனைவரையும் பார்க்கிறாள்..
நானோ
என்னை மட்டுமே
பார்த்துக்கொண்டிருக்கிறாள்
என்கிறேன் - என்
ஜன்னல் கதவுகளை
திறந்தபடி..
சாமம் கடக்கும்
என் - காம
இரவுகளில்.
-----------பெண்ணின் பேராசை
திருமணம் வரை - அவளின்
முட்டாள்த்தனமும்
முடிச்சிடும் வரைதான்..
மனைவியானபின்தான்
இவளுக்கு புரிகிறது
இந்த மண்ணிலே,
எந்த ஆணும்
புத்தன் இல்லை என்பது..
-----------என்னை - நீ
தொட்டதில்லை.
உன்னை - நான்
விட்டதும் இல்லை.
பட்டப் பகலில்
வெட்டை வெளியில்
வெட்கிப்போனது
முதன் முறையாய் - நான்
உன்னைப் பார்த்த போதுதான்.
மெய்யியல் படிபதுதான்
உன்
கண்களின் வேலையென்றால்
எத்தனை வருடங்கள்
நான்
பொய்முகத்தோடு இருக்க முடியும்?
-----------

உன்னை பற்றி
நீ எனக்கு
மிகச்சரியாய்
புரியவைத்துப்போன
முதல் சந்தர்ப்பம்
உன்
பிரிவுதான்.
-----------


 
கவி கொடுத்தவள்
நீ..
விதி கெடுத்தவள்
நீ..
உயிரே போகும்முன்
உடலை
தீயிலிட்டவள் நீ..
கருவறை தாண்டிய
என்
பகல்கள்
மீண்டும் இருளானது
உனது
காதல் அறையில்தான்..
என்னை
விட்டுவிடுவதும்
சுட்டுவிடுவதும்
உன்
கண்களிலேயே தங்கியிருக்கும்.
உன்னால்
சீரழிக்கப்பட்டது
என்
இதயம் மட்டுமல்ல - நம்
உலகமும்தான்.
-----------என்
ஒருவரிக்கவிதையில்
முடக்கப்பட்ட
கற்பனைகளில் கூட
நீதான்
மிதக்கிறாய்...
கவிதைக்கு
கற்பனையாய் வந்தாய்..
என்
வாழ்க்கைக்குமா??
-----------

Thursday, April 11, 2013

குட்டி குட்டி கவிதாக்கள் - 02

எனது 'அமலின் கவிதைப் பக்கம்' என்னும் முகப்புத்தக பக்கத்தில் கிறுக்கிய சில குட்டி குட்டி கவிதாக்கள் சாரி கவிதைகள்.
எனது உள்ளங்கையில்
ஓடிவிளையாடும்
உயிர்மை ரேகைகள் நீ!
திருமணத்தை
நிச்சயிப்பவளும் நீ!
நிராகரிப்பவளும் நீ!!
பின்னர் - என்
ஆயுளை
கூட்டுபவளும் நீ!
தீர்த்துக்கட்டுபவளும் நீ!
-----------


மூச்சுவிடவும் முடியவில்லை

முந்தானை தொடவும் திராணியில்லை
காதலை தொட முடிந்த எனக்கு
வாழ்க்கையை படிக்க அறிவுமில்லை.
ஓடி ஓடி வந்தவள் - என்னை
இடையில் விட்டு மிடுக்காய் மறைந்தாள்.
அவளுக்கு இரக்கமும் இல்லை.
எனக்கு இரவுகள் தொல்லை.
மூச்சுவிடவும் முடியவில்லை - இன்னொரு
முந்தானை தொடவும் திராணியில்லை!
-----------எனது இருண்ட தேசத்தின்
முதல் வெளிச்சம் - அது
உன்னைக்கண்ட அந்த
காந்தர்வப் பொழுது!
உன்
நிகம் முதல்
முகம் வரை
எல்லாமே
என்னை தோற்கடிக்கும்!!!
பெண்ணா நீ?
பேராச்சரியத்தின் ஆச்சரியக்குறி!
வியப்புக்குறி வியந்தெழும்
அழகு சாம்ராச்சியம்!
-----------மீண்டும் மீண்டும்
உனது நினைவுகளுக்குள்ளேயே
நிலைகுலைந்து போகிறேன்....
என்னை என்னாலேயே
கண்டுபிடிக்க முடியாமல்!
நீ மட்டும்
நின்மதியாய்
நின்றுகொண்டிருக்கிறாய் - என் காதலை
தின்று ஏப்பம் விட்டபடி!
-----------வெளியில் மழை
மனதுள் வெயில்
இரவோ குளிர்கிறது
கனவோ கொதிக்கிறது.
போர்வைக்குள் நான்
தூரத்தில் நீ.
போர்வை தரும் சூடோ
உன்
பார்வையில் உறைகிறது!
என்
தலையணை தாண்டிய வேதம்
உன்
முகப்பருக்குள் முடிகிறது!
-----------என்னை தீயிலிட்டே
சிலர் குளிர் காய்கிறார்கள்
சிலர் ஒளியேற்றுகிறார்கள்
சிலர் யாகம் காக்கிறார்கள்
சிலர் சமையல் செய்கிறார்கள்
இன்னும் சிலர் பொன்னுருக்குகிறார்கள்!
எதுவாயினும்
எரிந்துகொண்டிருப்பது
நான் என்பது
எனக்கு மட்டுமே சுடுகிறது!
-----------அலையிலும்
அமர்ந்திருக்கிறேன்.
நெருப்பிலும்
நீண்டு படுத்திருக்கிறேன்.
புயல் வீசிய போதும்
தம்பூரா இசைத்திருக்கிறேன்.
சுனாமியால் வீசியெறியப்பட்ட
சடலங்களுக்கு நடுவிலும்
இரவுகளை தனியே களித்திருக்கிறேன்.
இருப்பினும்,
மெல்லத் தைத்த - அந்த
சின்ன முள்ளால்
தினம் சாகிறேன்!
-----------சிலர் வருகிறார்கள்
கடுந்து போகிறார்கள்!
சிலர் சிரிக்கிறார்கள்
நம் சிரிப்பை
சிறைவைத்து போகிறார்கள்!
சிலர் கூட இருக்கிறார்கள்
நம் சந்தோசத்தையும்
கூட்டிக்கொண்டே செல்கிறார்கள்!
சிலர் நடிக்கிறார்கள்
நம் நிஜத்தை
தொலைக்க வைக்கிறார்கள்!
இன்னும் சிலர்
இதயத்துள் வருகிறார்கள்
அவர்கள் - நமக்கு
இரத்ததானம் செய்வதாய்
நம் ரத்தம் குடித்து போகிறார்கள்!
ஆக,
உண்மைகள்
நெஞ்சம் கொல்கிறது,
பொய்கள் மட்டும்
மஞ்சம் ஏறுகிறது!
-----------புண்ணாக்கு காதலை
புனிதம் என்றவர்கள்
பறையோடும் முகாரியோடும்
பந்தலினுள்ளே
பாடைமேல் கிடக்கிறார்கள்
பிணங்களாய்! - அப்
பொல்லாத காதலை
பொழுதுபோக்கு என்றவர்கள்
இலைகொண்டு விரட்டுகிறார்கள்
அந்த
பிணம் தின்னும் ஈக்களை!
-----------எனது
உனக்கானவை
அனைத்தும் - என்றும்
உனக்கானவைகளே!
அவற்றை நீ
எடுத்துக்கொண்டாலும் சரி
எடுத்துக்கொள்ளாவிட்டாலும் சரி.
காரணம்
நீ
தீண்டினால் மட்டுமே
திறந்துகொள்ளும்
அதிசய புத்தகம் நான்!
-----------அவள்
சீண்டல்களும்
தீண்டல்களும்
ஒன்று சேர்ந்து
விரதம் கிடக்கும்
என்
மேகமூட்டத்தை
பொழிய வைக்கிறது!
காமம் நனைகிறது
காதலோ - வீணாய்
குடை பிடிக்கிறது..
-----------நமது
பிரிவின் இடைவெளியில்
தனித்து விடப்பட்டவை
உன்னை அள்ளத்துடிக்கும்
என் கெஞ்சலும்,
என்னை அள்ளியெடுக்கும்
உன் கொஞ்சலும்
மட்டுமே!
-----------நீ
வந்துபோன
தடயங்கள்
என்
முற்றத்தில் இல்லை..
கட்டிலில் மட்டும்
பரந்து கிடக்கிறது..
நம்
ஒளிவு மறைவின்றிய காதலுக்கு
இந்த
கட்டில் ஒன்றே சாட்சி!
-----------நீண்டு பரந்த
மாத இடைவெளி கடந்து
அலைபேசியில் ஒலித்தது
அவள் குரலா??
அவள்தான்!!
இல்லையெனில் - என்
இரத்தக் குழாய்களுக்குள்
வான வேடிக்கை நடக்க
வாய்ப்பில்லை.
-----------


குட்டி குட்டி கவிதாக்கள் - 01

எனது 'அமலின் கவிதைப் பக்கம்' என்னும் முகப்புத்தக பக்கத்தில் கிறுக்கிய சில குட்டி குட்டி கவிதாக்கள் சாரி கவிதைகள்.நமக்கான முன்னுரையை
அழகாக எழுதி வைத்தது
நம்மிருவர் "காதல்"!
அதற்கான முடிவுரையை
கிறுக்கித் தொலைக்கிறது
நம்வீட்டார் "சீதனம்"!!
 --------------உன்
ஒளியில்பட்டு
தினம் தினம்
செத்துக்கொண்டிருக்கிறேன்
விட்டில் பூச்சியாய் நான்.
நீயோ - என் சாதலை
பல்லைக்காட்டி இரசித்துக்கொண்டிருக்கிறாய்
அந்த அஃறிணை
மின்குமிழாய்...
--------------


 
எனக்கும் உனக்கும்
ஒற்றை வித்தியாசமே
அழகில்..
எப்பொழுதும் நான் பார்த்தால்
நீ அழகு - ஆனால்
எப்பொழுதாவது நீ பார்த்தால் மட்டுமே
நான் அழகு!
--------------உண்மைதான்.
காதல் ஒரு
கண்ணாம்பூச்சிதான்!
அசந்த நொடியில்
அவளிடத்தில் தொலைத்துவிட்டு
ஊரூராய் தேடுவான்
காணாமல் போன தன்னை!!
--------------
நீ - என்கின்ற
வெண்பனிப் போர்வைக்குள்
மிதிக்கப்பட்டு முழிக்கின்ற
வெற்று நாணல் நான்!
உனக்குள்ளே
இருக்கவும் முடியவில்லை
உன்னை உடைத்து
நிமிரவும் திராணியில்லை!!
--------------நீ பேசுகையில்
என்
இதழ் சரியும்,
புருவம் விரியும்,
கர்வம் சாயும்,
கெளரவம் மாயும்,
"டேய்" என்கையில்
எழுந்து நிற்க்கும்
என்
ஆணவம் சாகும்....
மொத்தத்தில்
நீ என்னை ஆளுவாய்
நானோ ஆர்ப்பரிப்பேன்
அடங்கிப்போன
என் வாழ்வை
ஆராத்தி எடுத்தபடி.....
--------------
உனது
இறுதி மடல் - அது
பொங்கியெழுந்த - உன்
உணர்வுகளுக்கான முடிவு!
எனக்கோ
வாய்பொத்தி நின்ற - என்
கண்ணீரிற்கான ஆரம்பம்!!
--------------
Sunday, April 7, 2013

எல்லைக்கோடு!பல
எல்லைக்கோடுகளால் 
முடிச்சிடப்பட்டவையே வாழ்க்கை!

நண்பா,
சொல்வதைக்கேள்!

உன் விரல்களுக்கும்
ஓர் எல்லையுண்டு!
அது - உன்
நிகமும்,
மற்றவன் உரிமையும்!!

கடலுக்கும் எல்லையுண்டு
இல்லையேல்
நிலம் இருப்பதற்கு நியதி இல்லை.

உன் வாழ்கையும்
எல்லைகள் கொண்டது.
மதித்தால் சிறப்பாய்
மிதித்தால் தவிப்பாய்!

உன் ஆசைகளுக்கு
மெல்ல எல்லையிடு..
எல்லை தாண்டிய ஆசைகள்
பயங்கரவாதத்தில் முடியலாம்!

உன் உணர்வுகளுக்கு
ஒரு எல்லை போடு..
எல்லைகள் அற்ற உணர்வுகள் - உன்னை
மிருகமாயும் மாற்றிவிடலாம்..!

எல்லைகள் கொண்ட
வேட்கைதான்
காந்தியை
அகிம்சைவாதியாக்கியது!
மறந்துவிடாதே!!

எல்லைகள் கொண்ட
கீறல்கள் தான் - ஒரு
மோனாலிசாவை உருவாக்கியது
மறந்துவிடாதே!

எல்லைகள் கொண்ட
சீனச்சுவர்தான் - பின்னர்
அதிசயமாச்சு!
மறந்துவிடாதே!

ஒரு எல்லைகளுக்குள்
கொட்டுகின்ற நீர்தான் - அழகாய்
நயாக்கராவாகிறது!
புரிய மறக்காதே!

நண்பா,
உனக்கான எல்லைக்கோடுகளை
நேர்த்தியாக்கிக்கொள்!

எல்லை தாண்டிய
மோகம் - இன்னுமொரு
டெல்லி கர்ப்பளிப்பை நடத்தலாம்!

எல்லை தாண்டிய
அதிகாரம் - இன்னுமொரு
முள்ளிவாய்க்காலிற்கு வித்திடலாம்!

எல்லை தாண்டிய
அடக்குமுறை - இன்னும் பல
கிரிஷாந்திகளை புதைக்கலாம்!

நண்பா,
அனைத்திற்கும் எல்லைபோடு!
வாழ்க்கைக்கு அர்த்தம் கொடு!
காரணம்,
எல்லைகள் தாண்டும் போது - நீ
உலகத்திலிருந்து மறைக்கப்படலாம்!
வரலாறுகளைப் பார்!!


நன்றி லண்டன் தமிழ் வானொலி, கவிதை நேரம்!

மரங்களும் நம்மை யாரென கேட்கும்! - எனது முதல் பாடல்.

 கவிதைகளால் கிடைத்த சந்தோசங்களை விட பாடல் அதிகம் கொடுக்கிறது. எனது முதல் பாடல். சில மாதங்களிற்கு முன் ஒரு திரைப்படத்திற்கு பாடல் எழுதும்படி அத்திரைப்படத்தின் இயக்குனரும் இசையமைப்பாளரும் என்னைக் கேட்ட பொழுது அவர்கள் என்னை கலாய்க்கிறார்களா என முதலில் தோன்றினாலும் பின்னர் அது சீரியஸ் எனப் புரிந்தது. இயக்குனர் சந்தர்ப்பத்தை சொன்னார். நண்பர்களாக இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் இந்த பாடலோடு காதலர்கள் ஆகிறார்கள். இதுதான் அந்த காட்சியின் சுருக்கம். ம்ம்ம்ம்... நல்லாத்தான் இருந்தது காட்சி. பின்னர் இசையமைப்பாளர் மெட்டை அனுப்பியிருந்தார். மெட்டை கேட்ட பொழுது அசந்து போனேன்.. அவ்வளவு அழகான ஒரு மெலடி. இந்திய இசைக்கு இணையாக. பாடல் வரிகளை மிகவும் கவனமாக எழுதியாகவேண்டும் என்ற பொறுப்பு இன்னும் கூடியது என்னுள்.

சரி,  விடயத்திற்கு  வருவோம்.. இந்தப்பாடல்  இப்பொழுது வெளியிடப்பட்டாயிற்று. நீங்களும் கேளுங்கள். உங்கள் கருத்தை சொல்லுங்கள். இது எனது  முதல்  பாடல்...  எனவே, கேட்க  சகிக்காவிட்டாலும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.

  • திரைப்படம்         : சக்கரம்
  • இயக்குனர்           : சமிந்தன்
  • இசை                      : பிரநீவ்
  • பாடல் வரிகள் : அமல்ராஜ் (அடியேன்..)பாடல் வரிகள்:

காற்றிலே மிதக்கிறேன் நானே

கவிதையாய் மலர்ந்துபோனேனே
கனவால் புது உலகமும் வந்ததா.
நினைவோடு எரிகிறேன் நானே
நிறுத்தாமல் பேசிக்கொண்டேனே
நம்மைப் போற்ற நிலவும் இல்லையோ..
மரங்களும் நம்மை யாரென கேக்கும்
எரிந்திடும் இந்த பூவைப்பார் புரியும்
உள்தூங்கும் உறவிது என்னவோ
எனக்குள்ளே பல மாற்றங்கள் நிகழும்
நீபார்த்தால் ஓடிப்போய் மறையும்
தினம்மாற திகதியும்மாற வாழ்க்கை வாழ்க்கை இனிக்குமே..

சரணம்

உன் விழியில் விழுந்தேனே
என் உலகை தொலைத்தேனே
உன் உறவை பிரிந்தாலே
உடனே நான் மரிப்பேனே
தனிமையில் சிரிக்கிறேன் தோழா
உன்னிடம் நான் மரிக்கிறேன் போடா
முடிவில்லா சுகங்கள் காதல்தான்..

உனக்குள்ளே காதலும் பூக்க
உடைந்ததே தோழமை மெல்ல
நமக்குள்ளே கார்த்திகை மலர
காதல் காதல் துளிர்க்குதே..

Popular Posts