நண்பா,
என் ஒவ்வொரு
நரம்பிலும்
நீதான் துடிக்கிறாய்..
நீ
எங்கிருக்கிறாய்?
கள்ளன் போலீஸ்
விளையாட்டில் கூட
உன்னைத் தொலைக்க
மனமற்று
நின்றவன் நான்.
இப்போ
இரக்கமின்றி
எனக்கு
திரைபோட்டவர் யார்??
உன்னை
கடத்தியவர்களை விட
கடவுளிடமே
எனக்கு
அதிகம் கோவம்..??
கடவுளுக்காவது
மனிதாபிமானம்
இருந்திருக்கலாம்..
உன்
பேச்சில் கூட
பத்திரம் பார்ப்பவன் நீ.
அப்படியிருக்க
உன்
செயலில் மட்டும்
எப்படி கண்டனர்
பிழை??
எனக்குத்தெரியும்..
இப்பொழுதெல்லாம்
துப்பாக்கிகள்,
வெடிகுண்டுகள்,
கொட்டான் தடிகள்,
கெட்ட மொழிகள்,
மட்டுமே
உன்னைச்சூழ
ஏராளமாய் இருக்கும்.
உன்னைச்சூழ
அதிகாரமும்
அநியாயமும்
அளவிற்குமேல் இருக்கும்..
என்ன செய்வது,
நம் தேசத்தில்
பிள்ளைப்பூச்சிகளிற்கும்
கொடுப்புமுளைக்கும்
என
யார்கண்டார்?
சிங்கக்கூட்டை
சிலந்திகள் ஆளுமென
யார்தான் நினைத்தார்??
முடிந்தால்
அவர்களுக்கு
அன்பைப்பற்றி
பாடம் நடாத்து..
உரிமை பற்றி
ஊர்க்கதை பேசு..
தேவைப்பட்டால்,
ஓட்டப்பந்தையத்தில்
ஆமைதான் வென்றது
எனச்சொல்லு..
ஆனால்,
மனிதாபிமானம்
பற்றி மட்டும்
பேசிவிடாதே - உன்னை
மீண்டும்
பயங்கரவாதி என்றுவிடுவார்கள்.
ஒன்று செய்,
உன்னை
விடுவிக்கும் நாள் வந்தால்,
அவர்களில் ஒருவனை
வீட்டிற்கு அழைத்துவா..
'மனிதம்' என்பதை
அழகாய் காட்டுவோம்.
பி.அமல்ராஜ்
நன்றி யாத்ரா - 22
1 comment:
arumaiya iruke nanbare
Post a Comment