Wednesday, January 30, 2013

காதல் வரும் நேரம்!!


கவிதைகள் கூத்தாடும்
கண்கள் தகதிமியாடும்
சில்லென வீசும் காற்றும் 
சிரித்துக்கொண்டே  சித்திரவதை செய்யும்!

விழிகள் விரியும்
விம்பம் நிமிரும்
வீரம் செத்த மீசையிலும்
வீராப்பு ரோமம் மெல்ல முளைக்கும்!

முகம் பளிச்சிடும்
முன்னிரவு சிரித்திடும்
பின்னாலுள்ள பிடரியில்கூட
குஞ்சம் ஒன்று புதிதாய் முளைக்கும்!

காக்கைகள் அழகாய் தெரியும்
கானாங்கோளியும்  சின்பொனி இசைக்கும்
குரல் அடைத்த நரிகள் கூட
ஆரோகணத்தில் ஊழையிடும்!!

மேகம் கூரை போடும்
வானம் குடை பிடிக்கும்
வயசு போன பாட்டி கூட
வயாக்கரா தேடி வரிசையில் நிற்கும்!

கவிதைப்புத்தகம் தலையணையாகும்
தொலைபேசி போர்வையாகும்
மூடிக்கொண்ட முந்தானைக்குள்ளும்
முட்டும் மூச்சு வடிவாய் தெரியும்!

தனிமை தாகமாகும்
தவிப்பு வேதமாகும்
தன்னையே மறந்த நொடிப்பொழுதுகள்
லூசு என்ற பட்டத்தைக் கொடுக்கும்!

திருமணம் நியாயமாய் தெரியும்
தாலி  மேலே தவிப்பு பிறக்கும்
அம்மா பார்த்த பொண்ணு கூட
சனியனாய்தான் கடைசியில் தெரியும்!

காதல் வரும் நேரம்...

ஆண்கள் அழகாய் இருப்பர்
பெண்கள் அம்சமாய் திரிவர்
அம்மா மறந்து போகும்
அப்பா தூரமாகும்
உணவு காய்ந்துபோகும்
தூக்கம் தொலைந்துபோகும்
சூறாவளிக்காற்றும் சில்லென இருக்கும்
சூம்பிய பூவும் ரசனையை இழுக்கும்
இதயத்தில் பாரம் கூடும்
உயிரில் உஷ்ணம் மாறும்
நரம்புகள் நவரசம் சொட்டும்
நாடிக்குள் கலவரம் வெடிக்கும்
ரத்தம் சுடும்
பித்தம் கூடும்

மொத்தமாய்,
காதல் வரும் நேரம்
அவள் மலர்வாள்
இவன் மிளிர்வான்!

Tuesday, January 29, 2013

சுத்தம்!! நல்லா வருவீங்கடி நீங்க எல்லாம்!!நீண்ட நாட்கள் விடுமுறை நம்மை மட்டுமல்ல நம்மட வீட்டாட்களையும் சலிப்படைய வைத்துவிடுகிறது! சரி, ஏதாச்சும் எழுதலாம் என்று புலம்பலை திறந்தால் இந்த கொசுத்தொல்லை (கொசுக்கள் காற்றிலும், செல் போனிலும்... தாங்க முடியலப்பா!..). சரி ஒருவாறு அமர்ந்தால், "தம்பி இம்முறை ஜெனிவா போய் வரும்பொழுது போன முறைமாரி கண்ட கண்ட பொம்பிள பிள்ளைகளுக்கெல்லாம்  அது   இது  எண்டு  வாங்கி வாறது  இல்லை.... சரியா..." அம்மா  சமையல்  அறைக்குள்  இருந்து  ஒரு கூக்குரல். ஸ்ஸப்பா.... எவ்வளவு  கஷ்டப்படுத்துராங்கையா காலங்காத்தாலேயே.. கொஞ்சம்  கடுப்போடு, சரி  எழுத  ஆரம்பிக்கலாம் என்ற பொழுது இந்த நாசமாய்ப் போன போனு... ரிங் ரிங்...

ஹலோ... (கொட்டாவி விட்டபடி நான்.)

ஹலோ... (தெம்பாய் ஒரு பிகரு அந்தப்பக்கம்.)

யாரு..??

என்னைத் தெரியாதா உங்களுக்கு மிஸ்டர் அமல்ராஜ்?

சாரி.. எண்ட போனில வீடியோ கால் இல்லேங்க!

அந்த தெரியாதா இல்ல...

அப்ப எந்த தெரியாதா???

ஐயோ.. பேசுற நான் யாரு எண்டு தெரியாதா எண்டு கேட்டன்..

(கடுப்பேறியபடி நான்.....)
சொன்னாத்தானே தெரியும்! நான் என்ன சட்டலயிட்டா???

சரி... சூடாகாதேங்கோ அமல்ராஜ்..

சரி நான் சூடாகிறது இருக்கட்டும் நீங்க யாருன்னு சொல்லுங்க மேடம்...

ச்சே கவலையா இருக்கு...

உங்க லவர் இன்னொருத்தியோட ஓடி போயிட்டானா??

என்னங்க இப்பிடி பேசுறீங்க?

நான் தூசனம் ஏதும் பேசலியே!

சரி அத விடுங்க...

எதங்க புடிச்சன் விடுறதுக்கு??? 

ஐயோ உங்களோட பேச முடியலியே...

அப்ப எதுக்கு கால் பண்ணினீங்க? லூசா நீங்க?

இல்ல யாரோடையாவது பேசணும்போல இருந்திச்சு...

நல்லா இருந்திச்சு... (கடுப்பெதுறார் மை லார்ட்..) அப்ப கஸ்டமர் கெயாருக்கு கால் பண்ண வேண்டியது.. அவிங்க பிரீயாத்தானே இருப்பாங்க!

சும்மா போங்க அமல்ராஜூ

ஐயோ எங்கங்க போவேன் இந்த காலையில.. பல்லு கூட விளக்கலேங்க! எதுக்கு கால் பண்ணினீங்கனு சொல்லுங்களேன்... (அழுவுற மாரி...)

கதைக்க புடிக்கலியா அமல்ராஜ்...???

பொண்ணுங்க எண்டாலே புடிக்காதுங்க நமக்கு! சப்பா... நீங்க யாருன்னு சொல்லுங்க அண்டி முதல்ல....

என்னது அண்டியா?? நானா??

(கொஞ்சம் சிரிப்பு எனக்குள்ள.... அண்டி  எண்டதும் ரொம்ப பீல் பண்ணுது பொண்ணு..)
சாரி... சொல்லுங்க தங்கச்சி... உங்க பேரு என்ன??

தங்கச்சி.... அண்டிய விட பரவாயில்ல...

ரொம்ப முக்கியம்!! யோவ்வ்வ்.... உங்களுக்கு என்னதான் வேணும்?
(நீங்கதான் வேணும்னு  சொல்லிடுமோ... என்ற நெனைப்பு வேற கொஞ்சம் நமக்கு......)

கேட்டால் கிடைக்குமா?

என்னங்க நான் என்ன மளிகைக் கடையா வச்சிருக்கன்??

சரி, விசயத்துக்கு வாறன்...

அப்பாடா..!!!

நான் உங்ககூட கொஞ்சம் பேசணும்!

(கொய்யாலே... இவ்வளவு நேரமும் என்ன்ன பாண்டியா விளாடிக்கிண்டிருந்தீங்க என்கூட....)
இவ்வளவு நேரமும் இதைத்தானே தம்மு கட்டி பேசிக்கிட்டு இருந்தீங்க...

சரி... முக்கியமான விஷயம்...

சரி  சொல்லுங்க.... (என்னவா  இருக்கும்... ஒரு  வேளை  இதுவா இருக்குமோ...???? அல்லது அதுவா இருக்குமோ???)

உங்க பிரெண்டு யாரையும் லவ் பண்ணுறாரா?

என்னது இளவா.. சாரி லவ்வா?? நீங்க யாருங்க??

அது இருக்கட்டும்! கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..ப்ளீஸ்...

(ஓவரா குனியுதே இந்த பொண்ணு....)
ஆமா! லவ்வு பண்ணுறான்.

யார?

ஒரு பொண்ணத்தான்!

ச்சே... சீரியஸ்ஸா பேசுங்க...

எனக்கு சீரியஸ் ஒண்ணும் இல்லையே.. நல்லாத்தானே இருக்கன்.

சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்!

(அண்ணாவா வா வா வா ...)
யெஸ்!

அவங்க பேரு என்ன?

ஜொபித்தா!

உண்மையாவா?

ஆமா! செத்துப்போன உங்க பெரியப்பா மேல சத்தியமா!

ஹி ஹி ஹி.... (இது அந்த பொண்ணு...)

அதுக்கு எதுக்கு சத்தியெடுக்குறீங்க...

ஐயோ சத்தியில்ல.... சிரிச்சன்!

ஒஹ்... அது சிரிப்பா??? சரி, நீங்க யாருனு இப்பயாச்சும் சொல்லுங்க!

நான் ஜொபித்தா!!

என்னது? ஜொபித்தாவா?? சத்தியமாவா?

ஆமா அமல் அண்ணா!

எதுக்கு இப்பிடி ஒரு வேலை பண்ணினீங்க? எதுக்கு அப்பிடியொரு கேள்வி? இது உங்களுக்கு தெரியாதா?

தெரியும் அண்ணா? பட் யாரும் கேட்டா வேற யாரையும் சொல்லிடுவீங்களோ எண்டு நினைச்சன். அவன் அப்பிடிதான் தான் லவ் பண்ணுற பொண்ணு யாரோ மைதிலினு சொல்லிதிரியிரானாம் ராஸ்கோல்.... ( அவன் - அதுதான் நம்ம நட்பு தானுங்க..)..

ஐயோ.... எதுக்கு அவன் அப்பிடி????

தெரியல.... அவர்ட  அடிக்கடி  ஞாபகமூட்டி  விடுங்கண்ணா... அவர்ட லவர் நான் தான் எண்டு....

(சுத்தம்!! நல்ல வேலை நமக்கு!! நல்லா வருவீங்கடி நீங்க!!!)
சரி சரி ஜோபித்தா.... எதுக்கு அழுவுறீங்க... ஹெய் ஜொபித்தா....

போன் கட்!!
--------------------------------------

இதென்னடா  காலாங்காத்தால  இந்த  மதுரைக்கு  வந்த சோதனை! சிவனே எண்டு சும்மாதானே இருக்கேன் நானு! என்னங்க இவிங்க பிரச்சனை? 

அடேய் மவனே  (எண்ட  நண்பனுக்கு  சொல்றேனுங்க..), லவ்வு  பண்ண தெரிஞ்சா அத உண்ட வீட்டுக்குள்ள வச்சுக்க முயற்சி செய்துக்கொடா மச்சி. உண்ட லவ்வோ லவ்வு ரோட்டுக்கெல்லோ வந்துடுச்சி... ஏண்டா  நீ  பெரிய  அப்பாடக்கரா? ஒரு  பொண்ணு  உன்னைய  விழுந்து  விழுந்து  லவ்வுது... நீ எதுக்குடா  இன்னொருத்திகூட  நூலு  விடுறே? ஒருத்தனுக்கு  எழும்பி  நிக்கவே வக்கில்லையாம்  அதுக்குள்ளே  ஒனக்கு  ஒன்பது  கேக்குதா?? நல்லா வருவீடா நீயி!

இன்னொருக்கா அந்த ஜொபித்தாகிட்ட இருந்து அழைப்பு வந்திச்சின்னு வையி, ஒன்னைய கொன்னே புடுவன்! ஆமா!! 

அதவிட, தெரியாம நம்ம நண்பன் லவ்வரையா இப்பிடி கலாய்ச்சிட்டன்.. சரியில்லையே.. நாளைக்கு நம்மள இவிங்க என்ன நினைப்பாங்க... சரி சரி நெனைக்கட்டும்...

இல்ல நான் தெரியாமத்தான் கேக்குறன், உங்களுக்கெல்லாம் வேற வேல வெட்டியே இல்லைங்களா?? போய் வேலையப்பாருங்கையா...
Sunday, January 20, 2013

யார்க்கெடுத்துரைப்போம்?

யாழ். இலக்கியகுவிய இணைய கவியரங்கிற்காய் எழுதிய கவிதை!


காதல் - அது

ஈனப்பிறவியின்
ஊன்தின்னும் சாத்தான்!

மோக பிராயத்தின்
ஓலமிடும் ஒப்பாரி!

சொந்தங்கள்
காறித்துப்பும் எச்சில்!

இது
பெரியவர்களின் அறிவுரை!

காதல்...
அம்மா அப்பாவுக்கோ - அது
கௌரவ நரகத்தின் திறவுகோல்!

அண்ணனுக்கோ
இது ஒரு அநியாயம்!

அக்காவுக்கோ
இதுவொரு சனியன்!

பார்ப்பவர்களுக்கு - காதல் ஒரு
நாகரிக தெரு நாட்டியம்..

ஆனாலும்
அனுபவிப்பவர்களுக்கோ - அது
வாழ்க்கை சொப்பனத்தின் அங்காடி!!

கனவுகளுக்குள் கட்டிப்புரளும்
இந்த - காரூண்ய காதலை
இளமையின் வேகத்தை
இதயத்தின் தாகத்தை - நாம்
யார்க்கெடுத்துரைப்போம்?
எப்படியெடுத்துரைப்போம்?


மலரவன் முதல் மணிகண்டன் வரை - 02இப்பொழுதுதான் புரிகிறது. இந்தப் போராட்டம் சப்பித் துப்பியவை எனது இலட்சியம், வாழ்க்கை, காதல், எதிர்காலம், உறவுகள் மற்றும் எனது ஆசை. எனது பத்தொன்பது வயதில் போராட்ட தாகம் வந்தது அப்பொழுதெல்லாம் நியாயமாகவே தோன்றியது. இப்பொழுது அது எனது வாழ்க்கையின் தவறா என உணர வைக்கிறது காலம். எது எப்படி இருப்பினும் என்னை ஒரு இலட்சியவாதியாய், நியாயவாதியாய், ஒழுக்கவாதியாய் மாற்றியதும் இந்த போராட்டத்தில் நான் இணைந்துகொண்டதால்தான் என்பதை என்னால் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

போராட்டம், அண்ணர் மாருடனான வாழ்க்கை, பின்னர் உயிர் பயம், உயிரை காப்பாற்றிக்கொள்ள நமது எதிரிகளிடமே சரணடைதல், பின்னர் விசாரணைகள், புனர்வாழ்வு  முகாம்  என  கடந்து  வந்த  எனது வாழ்க்கையில் மிக நீண்ட நாட்களுக்கு மன்னிக்கவும் வருடங்களுக்கு பின்னர் மீண்டும் எனது குடும்பம், சொந்தம், ஊர்  என  மாறுகிறது வாழ்க்கை. இப்பொழுதெல்லாம் இவை அனைத்தும் எனக்கு புதிதாகவே தெரிகிறது. ஒரு மூடிய சமூகத்தினுள் பழக்கப்பட்ட வாழ்க்கை ஒரு திறந்த வெளி சமூகத்தினுள் வரும்பொழுது அதை நமக்கென பழக்கிக்கொள்வதில் உள்ள சிக்கல்களை நீங்கள் அறிந்தோ அனுபவித்தோ இருக்கமாட்டீர்கள். இதன் ஆரம்பக்கட்டத்தில்தான் நான் இன்று!

இற்றைக்கு  சில மாதங்களின் முன் புனர்வாழ்வு முகாமில் இருந்து நான் விடுதலை  செய்யப்பட்டு  வெளியே  வந்தபொழுது  என்னுள்ளே  என்னைப்பற்றி எனது வாழ்க்கை பற்றி ஆயிரம் ஆயிரம் கேள்விகள் உருவாகின. ஏன்  இப்பொழுது கூட  உருவாகிக்கொண்டு தான்  இருக்கின்றன. முதல் முறை நான் விடுதலையாகி எனது சொந்த ஊரிற்கு வந்தபொழுது என்னை மனம் நிறைந்த சந்தோசத்தோடு வரவேற்றவர்கள் எனது பெற்றோர் மட்டுமே! என்னிடம் சுகம் விசாரிக்கும் அதிகமானவர்களின் வார்த்தைகளில் உண்மைத்தன்மை இருக்கவில்லை. "அப்ப எல்லாம் துவக்கால நாட்டை புடிக்கலாம் எண்டு திமிராய் திரிஞ்சவனுங்க எல்லாம் இப்ப பாரு வெளிய வரமுடியாமல் வீட்டுக்குள்ளயே கிடக்குறத..." என்று பலர் என் செவி பட பேசியதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. "நாடு நாடு என அலைஞ்சு அலைஞ்சு வாழ்க்கைய நாசமாக்கிப்போட்டு இப்ப எதுவுமே இல்லாமல் வந்து இருக்கியே மோனே.." என நான் தடுப்பிலிருந்து வந்தபொழுது எனது பாட்டி என்னை ஆரத்தழுவி ஒப்பாரி வைத்ததும் என்னை அதிகம் பாதித்தது.

இவ்வாறான ஒரு சமூகத்தோடு என்னால் இனியும் எப்படி வாழமுடியும் என ஜோசிக்கும் பொழுதெல்லாம் எனது மண்டை வெடிக்கும். ஒருநாள் எனக்கு தூரத்தில் மாமா முறையான ஒருவர் தன்னை வந்து பார்க்கும் படி எனது அம்மாவிடம் சொல்லி அனுப்பியிருந்தார். "தம்பி, எப்ப பார்த்தாலும் இந்த வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்காம மனோ மாமா உன்ன வரச்சொன்னார்.. ஒருக்கா அவங்க வீட்டுக்கு போய்டுவா.." என அம்மா சொன்னபோது, எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அதை மறுக்க முடியவில்லை. "சரிம்மா... இண்டைக்கு போயிட்டு வாறன்.." என கூறி முடிப்பதற்குள்ளே அருகில் வந்த அம்மா இப்படி சொன்னார். "தம்பி போறது சரி தேவையில்லாம அந்த பழைய கதைகள கதைக்க வேண்டாம்..!!" இங்கு அம்மா குறிப்பிட்ட அந்த தேவையில்லாத பழைய  கதைகள் என்பது என்ன என்பது உங்களுக்கும் புரிந்திருக்கும். அந்த இயக்க கதைகள்தான். சரிதான் அம்மா சொன்னது. அவற்றைப் பற்றி எனக்கு கதைக்க விருப்பம் இல்லைதான். காரணம் உயிர் மேலான எனது பயம்!

பொடி நடையாய் நடந்து மாமாவின் வீட்டை அடைந்தேன் அன்று சாயங்கால நேரம். வீட்டிலே என்னை இன்முகத்தோடு வரவேற்றவர்களில் மாமாவின் மகள் துர்க்கா மட்டும் இருக்கவில்லை. "வாங்க மருமகனே, எவ்வளவு காலம் உங்கள பார்த்து. கடைசியா மாவீரர் தினத்தில பார்த்தது... இண்டைக்கு எத்தின வருஷம் ஆச்சு!!" என மாமாவிற்கு முதல் என்னை வரவேற்று உள்ளே அழைத்து போனவர் மாமி. மாமா ஒரு கம்யூனிஸ்ட். பொதுவுடமைக் கோட்பாடுகளையும் மார்க்சிஸ்ட் லெனின் கோட்பாடுகளையும் அதிகம் ஆதரிப்பவர். இதனாலோ என்னவோ போராட்டம், இயக்கம் போன்றவற்றில் இவரது கொள்கைகள் எதிரானவை. அப்பொழுதெல்லாம் எமது போராட்டத்தை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளாத ஒருவர். இதனால் அன்றைய காலகட்டத்தில் பல "அண்ணன்மாரின்" கோவத்திற்கு அடிக்கடி இலக்காகுபவர். அப்படியிருந்தும் எனக்கு இந்த பொதுவுடமைக் கோட்பாடுகள் தொடர்பாக கொஞ்சம் சொல்லியும் கொடுத்திருந்தார். நான் அதில் அதிகம் நாட்டம் காட்டாததினால் தொடர்ந்தும் அது பற்றி என்னுடன் பேச தயங்குவார். ஒரு நாள் எனக்கு சீன பொதுவுடமைக் கொள்கையை விளங்கப்படுத்த முயற்ச்சித்து தோற்றுப் போனது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

சரி, இவரிடம்  பேசும்  விடயங்களில்  நான்  எப்பொழுதுமே  அதிகம் அவதானத்தோடு இருப்பதுண்டு. இன்றும்  அவர்  வீட்டில் நுழையும் பொழுதும் அப்படியே என்னை தயார் படுத்திக்கொண்டேன். எனது சுகம் தொடர்பான கதைகள் முடிந்து, மாமியின் தேநீரையும் அருந்தி முடியும் தறுவாயில் "உங்களுக்கெல்லாம் நான் அப்பவே படிச்சு படிச்சு சொன்னனான்... யாராச்சும் கேட்டீங்களோ??" என சடுதியாய் அமைதியாய் இருந்த மாமாவின் வாயில் வந்து இறங்கின வார்த்தைகள். நான் எதுவும் பேசவில்லை. "அண்டைக்கு நான் சொன்னபடி கேட்டிருந்தால் இண்டைக்கு உண்ட வாழ்க்கை இப்படி சீரளிஞ்சிருக்குமா என்ன....?" மீண்டும் மாமா... அப்படியெனின் இப்பொழுது என்னுடைய வாழ்க்கை சீரழிந்துதான் போய்விட்டதா  என  ஜோசிக்க  ஆரம்பித்தேன். "இவங்கட  உந்த போராட்டத்தால எதுவுமே நம்மட மக்களுக்கு கிடைக்க போறதில்ல... அவங்க அவங்க சுகபோகமா வாழுறதுக்கு போராட்டத்த பயன்படுத்துரானுங்க.." என்று மாமா முன்னர் அடிக்கடி குறிப்பிடும் வசனம் இப்பொழுது திடிரென எனது ஞாபகத்தில் வந்து குந்திக்கொண்டது. ஒருமுறை இதை கிளிநொச்சி நகரத்தில் வைத்து என்னிடம் சொன்ன பொழுது நான் இவரை தாறு மாறாக ஏசிவிட்டு சென்றதும் பின்னர் போய் மன்னிப்பு கேட்டத்தும் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

"சரி, அந்த கதைகள் இப்ப எதுக்கு மாமா, அதுதான் எல்லாம் முடிஞ்சு பொச்சுதில்ல... அத விடுங்க." என கூறிமுடித்து "வேற என்ன மாமா?" என கதையை திசை திருப்ப முனைந்தேன். அவரோ விடுவதாய் இல்லை. "மலரவன்! - ஸா... அப்ப எப்பிடி இருந்த ஆளு நீ... இண்டைக்கு பாத்தியா!!.." மாமா கூறியபோது எனது கோவம் உச்சந்தலைக்கு ஏறியது. என்னிடம் இன்றும் கைகளில் துப்பாக்கி இருந்திருந்தால் இந்த மனுஷன இப்பவே போட்டுத்தள்ளியிருப்பன் எனத் தோணியது.

அன்று  நாங்கள்  எல்லாம் உங்களுக்காகத்தானே எங்களை நாங்களே தியாகம் செய்து போராடினோம்? இதுதான்  தமிழனின்  உண்மையான பக்கமா? இதனால்தானோ எமது கனவுகள் தொலைந்து போயின? ஆயிரம் எண்ணங்கள் எனது மனதில். "மாமா, நடந்தவை நடதவைதான். இனி நடக்கப் போவதை பார்க்கலாமே...." என  நான்  கூறியதற்கு மாமியும் "அதானே" என தலையை ஆட்டினார்.

"சரி, இப்ப என்ன செய்யப்போறதா உத்தேசம்...?" என மாமா கேட்ட பொழுது எனது கண்கள் கலங்கத் தொடங்கின. காரணம், அண்மையில் ஒரு கடைக்கு  சென்றிருந்தேன்  வேலை  கேட்டு.. அந்தக்கடையும் ஒரு தமிழருக்கு சொந்தமான கடை. எனது  நண்பர்  ஒருவரின்  தகவலின் மூலமே அந்த கடைக்காரரை சென்று பார்த்தேன்.

"வணக்கம் அண்ணை... எண்ட பேரு மணிகண்டன். இந்த பக்கத்து ஊரிலதான் இருக்கிறன். உங்கட கடையில ஒரு வேலை இருக்கிறதா எண்ட ப்ரண்ட் சொன்னாரு..."

"இருக்குத்தான் தம்பி.... நீர் கலியாணம் கட்டிட்டீரோ?"

"இல்ல... அம்மா அப்பா கூடத்தான் இருக்கன்.."

"இதுக்கு முதல் எங்க வேல செய்தனீர்?"

"எங்கையும் இல்ல..."

"சரி...  நாளைக்குநிண்டு வாரும்... பத்தாயிரம் சம்பளம் தருவன்... பின்னேரம் கடை மூடும் வரைக்கும் வேலை செய்யணும்... ஓகே எண்டா சரி..."

"ஐயோ... எனக்கு இது ஓகே அண்ணே... நான் கட்டாயம் வருவன்..."

"சரி... ஆமா கேக்க மறந்துட்டன்... இதுக்கு முதல் எங்க இருந்தீர்?"

"...................."

"கேக்குறன் இல்ல... இதுக்கு முதல் எங்க இருந்தனீர்?"

"..... தடுப்பில!..."

"எந்த தடுப்பு?, இயக்கத்தில இருந்தநீரோ...."

".....ம்ம்ம்...."

"தம்பி, மன்னிச்சுக்கோ! ஐயோ வீண் வம்பு எனக்கு வேணாம்! உனக்கு வேல தர ஏலாது! தயவு செய்து இங்க இருந்து போய்டு..."

"....................."

இப்படி  அன்று  ஒருநாள்  நடந்ததும் இப்பொழுது  மாமா சொல்வதும் சரிபோலவே தோன்றுகிறது. இயக்கத்தில் இருந்ததும் பின்னர் தடுப்பில் இருந்ததும் வாழ்க்கை சீரழிந்து போனதற்கான இரண்டு காரணங்களா? "என்ன மணிகண்டா ஜோசிக்கிறாய்" என மாமா கேட்ட பொழுதுதான் நான் மீண்டும் அந்த இடத்திற்கு வர முடிந்தது.. இல்ல மாமா, நானும் ஏதாச்சும் தொழில் துறைகள்தான் தேடிக்கொண்டு இருக்கிறன்.... ஒன்னும் சரிவர மாட்டேங்குது..." என கூறி முடித்தேன்.

இவ்வாறு பேசி பேசி ஒரு மணி நேரத்தை அங்கு சிலவழித்த பின்னர் சரியென எழுத்து விடை பெறும் நேரத்தில் "எப்பிடி மணி இருக்கே?" என வெளியில் வந்தாள் துர்கா!

"நல்லா இருக்கேன் மச்சா... நீங்க எப்பிடி...?"

"நானும் நல்லா இருக்கேன்டா மச்சான்..."

"அப்ப என்ன துர்கா செய்யிறீங்க..?"

"நான் கெம்பஸ் முடிச்சதில இருந்து கச்சேரியிலதானே வோர்க்  பண்ணுறன்.."

"ஓ... நல்ல விஷயம்..."

"சரி அப்ப நான் போயிடு வாறன்..."

என நடையைக் கட்டினேன் என்னுடைய வீடு நோக்கி. இங்கே ஒரு விடயத்தை பார்த்தீர்களா? இந்த துர்கா, எட்டாம் ஆண்டு வரை என்கூடவே படித்தவள். ஒரே வகுப்பு. இருவருக்கும் ஒரே கெட்டித்தனம். ஏழாம் எட்டாம் ஆண்டுகள் படிக்கும் பொழுது வகுப்பில் இரண்டாம் பிள்ளையாய் வந்த துர்கா முதலாம் பிள்ளையாய் வந்த என்கூட அந்த தோல்வியை தாங்க முடியாமல் போட்ட சண்டைகளும், அதனால்  பின்னர்  கதைக்காமல் விட்டதும் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. இப்போ, இரண்டாம் பிள்ளை அவள், கம்பஸ் முடிச்சு அரசாங்க உத்தியோகம். முதலாம் பிள்ளை நான், புனர்வாழ்வு முடித்து நடு ரோட்டில் வாழ்க்கையை தேடிய படி....


மணிகண்டன் தொடர்ந்து வருவான்..... மலரவன் முதல் மணிகண்டன் வரை பாகம் ஒன்றை வாசிக்க கீழே அழுத்தவும்,Saturday, January 19, 2013

இரக்கமுள்ள ஆடவன்.மூச்சுவிடவும் முடியவில்லை
முந்தானை தொடவும் திராணியில்லை
காதலை தொட முடிந்த எனக்கு
வாழ்க்கையை படிக்க அறிவுமில்லை.
ஓடி ஓடி வந்தவள் - என்னை
இடையில் விட்டு மிடுக்காய் மறைந்தாள்.
அவளுக்கு இரக்கமும் இல்லை.
எனக்கு இரவுகள் தொல்லை.
மூச்சுவிடவும் முடியவில்லை - இன்னொரு
முந்தானை தொடவும் திராணியில்லை!

Friday, January 11, 2013

காணாமல் போன என் நண்பன்.!!நண்பா,
என் ஒவ்வொரு
நரம்பிலும்
நீதான் துடிக்கிறாய்..

நீ
எங்கிருக்கிறாய்?

கள்ளன் போலீஸ்
விளையாட்டில் கூட
உன்னைத் தொலைக்க
மனமற்று
நின்றவன் நான்.
இப்போ
இரக்கமின்றி
எனக்கு
திரைபோட்டவர் யார்??

உன்னை
கடத்தியவர்களை விட
கடவுளிடமே
எனக்கு
அதிகம் கோவம்..??
கடவுளுக்காவது
மனிதாபிமானம்
இருந்திருக்கலாம்..

உன்
பேச்சில் கூட
பத்திரம் பார்ப்பவன் நீ.
அப்படியிருக்க
உன்
செயலில் மட்டும்
எப்படி கண்டனர்
பிழை??

எனக்குத்தெரியும்..
இப்பொழுதெல்லாம்
துப்பாக்கிகள்,
வெடிகுண்டுகள்,
கொட்டான் தடிகள்,
கெட்ட மொழிகள்,
மட்டுமே
உன்னைச்சூழ
ஏராளமாய் இருக்கும்.

உன்னைச்சூழ
அதிகாரமும்
அநியாயமும்
அளவிற்குமேல் இருக்கும்..

என்ன செய்வது,
நம் தேசத்தில்
பிள்ளைப்பூச்சிகளிற்கும்
கொடுப்புமுளைக்கும்
என
யார்கண்டார்?

சிங்கக்கூட்டை
சிலந்திகள் ஆளுமென
யார்தான் நினைத்தார்??

முடிந்தால்
அவர்களுக்கு
அன்பைப்பற்றி
பாடம் நடாத்து..

உரிமை பற்றி
ஊர்க்கதை பேசு..

தேவைப்பட்டால்,
ஓட்டப்பந்தையத்தில்
ஆமைதான் வென்றது
எனச்சொல்லு..

ஆனால்,
மனிதாபிமானம்
பற்றி மட்டும்
பேசிவிடாதே - உன்னை
மீண்டும்
பயங்கரவாதி என்றுவிடுவார்கள்.

ஒன்று செய்,
உன்னை
விடுவிக்கும் நாள் வந்தால்,
அவர்களில் ஒருவனை
வீட்டிற்கு அழைத்துவா..
'மனிதம்' என்பதை
அழகாய் காட்டுவோம்.


பி.அமல்ராஜ் 
நன்றி யாத்ரா - 22காந்தர்வ அழகு!எனது இருண்ட தேசத்தின் 
முதல் வெளிச்சம் - அது 
உன்னைக்கண்ட அந்த 
காந்தர்வப் பொழுது!
உன்
நிகம் முதல் 
முகம் வரை 
எல்லாமே 
என்னை தோற்கடிக்கும்!!!
பெண்ணா நீ?
பேராச்சரியத்தின் ஆச்சரியக்குறி!
வியப்புக்குறி வியந்தெழும் 
அழகு சாம்ராச்சியம்!


Popular Posts