அன்பு, நேசம், பாசம் என்றெல்லாம் சொல்லப்படும் ஒவ்வொரு வகையான அந்த உணர்வுகளிற்கும் ஒரு பயங்கரமான சக்தி உண்டு. இந்த மூன்றிளுமேயே அதிகமான ஆண்களும் பெண்களும் கிளீன் போல்ட் ஆகிவிடுகிறார்கள். அதிலும் இந்த அன்பு, பாசம், நேசம் என்பதெல்லாம் சுத்த பித்தலாட்டம் எனவும் சில அனுபவசாலிகள் வசனம் பேசுகிறார்கள். எது என்னவோ, நாம் அனைவரும் இந்த மூன்று விடயங்களிற்கும் பயந்தோ அல்லாதோ அடங்கியோதான் வாழ்க்கையை கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது.
சரி, விடயத்திற்கு வருவோம். நம்மை அதிகம் பேர் அன்பு செய்கிறார்கள். ஆனால் நாம் அவர்கள் அனைவரையும் கண்டுகொள்வதில்லை. அதேபோல, நாம் பலரை அன்பு செய்கிறோம் ஆனால் அவர்களும் சிலவேளை நம்மை கண்டுகொள்வதில்லை. அன்பு செய்கிறோம் என்பதை நாம் எதை வைத்து சொல்லமுடிகிறது? அதிகமானோர் ஒருவரை பிடித்துப் போவதையும், அவரை அன்பு செய்வதையும் ஒன்று என்றே பார்கின்றனர். இரண்டும் வித்தியாசமானவை. ஒருவரை பிடிப்பது வேறு. அவரை அன்புசெய்வது வேறு. நமக்கு பிடிக்கும் அனைவரையும் நாம் அன்பு செய்வதில்லை. அதேபோல, நமக்கு பிடிக்காதவர்களை நாம் அன்பு செய்வதில்லை என்றும் சொல்ல முடியாது.
இங்கே நான் சொல்லவருவது, இந்த இரண்டாம் தரப்பினர் பற்றி. நம்மை பிடிக்காதவர்களை நாம் அன்புசெய்ய நேர்ந்தால் அது தவறா? அல்லது அது நடைமுறைக்கு சாத்தியம் அற்றதா? இல்லை அப்படி நாம் நமக்கு பிடிக்காதவர்களை நேசித்தால், நாமும் ஜீசஸ் ஆகிவிடுவோமா? அவ்வ்வ்வ்..
ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நம்மை நேசிப்பவர்களை நாம் நேசிப்பதில் என்ன கிக்கு இருக்குறது? நாம் அவர்களை நேசிக்காவிடிலும் நமது அந்த உறவில் பாரிய விரிசல் ஏற்படாது. காரணம் அந்த நபரிற்கு நம்மை பிடிக்கிறது அல்லவா? அவர் நம்மை நேசிக்கிறார் அல்லவா? ஆக, இந்த ஒரு கிக்கு, திரிலிங்கு எங்க இருக்கும் என்றால் உங்களை பிடிக்காத அல்லது உங்கள் எதிரியை கொஞ்சம் நேசித்துப் பாருங்கள். அப்பொழுதுதான் இந்த நேசம், அன்பு என்பனவற்றின் உண்மைத்தன்மை விளங்கும். இதில் ஒரு கஷ்டமும் இல்லேங்க. அவர்கள் நல்ல பண்புகளையும், உங்களுக்கும் அவர்களுக்கும் நடந்த சந்தோசமான அனுபவங்களை மீட்டிப்பார்த்தாலே போதும். அவர்கள் மேல் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் அன்பு பாசம் வர ஆரம்பிச்சிடும்.
எப்பொழுதுமே எமக்கு பிடிக்காதவர்களை நாம் தொடர்ந்து வெறுப்பதற்கான காரணம் அவர்கள் செய்த பிழைகளை மட்டும் நாம் அடிக்கடி நினைத்துக் கொள்வதுதான்.
அதேபோல, உங்களை பிடிக்காத ஒருவரை நீங்கள் நேசித்துப் பாருங்கள். அவரது நல்லகுணங்கள், உங்களுக்கு பிடித்த விடயங்கள் போன்றவற்றை எண்ணிப்பாருங்கள் நீங்கள் அந்த நபரை நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். இந்த உணர்வு உண்மையிலேயே மிகவும் ஆனந்தமானது. நான் இதை உணர்ந்தபடியால் சொல்கிறேன் முயற்சித்துப் பாருங்கள்.
எங்களை நேசிப்பவர்களையே நாமும் நேசிப்பதில் என்ன பிரயோசனம் இருக்கிறது. நம்மை வெறுப்பவர்களை நேசிப்பதில் இருக்கும் ஒரு மனத்திருப்தி எப்பொழுதுமே நம்மை நேசிப்பவர்களை நாம் நேசிப்பதில் வருவதில்லை. நேசம், பாசம் என்பது புரிதல் சம்மந்தமானது. வெளிப்படுத்தல் அவசியம் இல்லை. ஒருவகையில் நாம் மற்றவர்களை நேசிப்பது கூட எம் சுயநலமே. காரணம் மற்றவர் மேல் நாம் வைக்கும் பாசம் எம்மை எப்பொழுதுமே சந்தோசப்படுத்தும் ஒரு சுய சந்தோஷ ஊட்டியே. நான் ஒருத்தரை நேசிக்கும் பொழுது அது எனக்கு பிடித்த ஒரு விடயமாக மாறிவிடுகிறது. ஏன் நமக்கு சில விடயனகள் பிடிக்கிறது. பிடிக்கும் பொழுது இதயம் ஒருவகை மகிழ்வை அனுபவிக்கிறது. எனக்கு பிடித்த விடயம் என்றால் அது நான் என்னையே சந்தோசமாக வைத்திருக்க எத்தனிக்கும் ஒரு விடயம். அப்படியென்றால் நான் எனது சுயநலத்திற்காகத்தானே மற்றவர்களை நேசிக்க முயல்கிறேன்.
சரி, முடிவு, எனது அனுபவத்தில் சொல்கிறேன். உங்களை விழுந்து விழுந்து நேசிக்கும் பத்துப்பேரை நீங்கள் கொண்டாடுவதை விட உங்களை வெறுக்கும், 'உங்களை எனக்கு பிடிக்கவே இல்லை' என்று மூஞ்சிக்கு சொன்ன அந்த ஒரு நபரை உண்மையாக நேசித்துப் பாருங்கள். அப்பொழுதுதான் நேசம், பாசம், அன்பு என்பதன் உண்மை அர்த்தத்தை புரிந்துகொள்வீர்கள். அப்பொழுதுதான் அந்த பாசத்தில ஒரு கிக்கு வரும்.
ஆக, உங்களை விழுந்து விழுந்து நேசிப்பவர்களை நீங்களும் நேசித்தால் அது ஒருவகையில் பித்தலாட்டம்தான். இறுதிவரை உண்மை பாசத்தை உங்கள் இருவருக்குள்ளும் கண்டே பிடிக்க மாட்டீர்கள். பிறகு பாசம் வேஷம் என வசனம் பேசுவீர்கள்.
நான் அதிகம் அன்புசெய்யும் இருவர். ஒன்று அம்மா, இரண்டு என்னை பிடிக்கவில்லை என்று மூஞ்சிக்கே சொல்லிப்போன ஒரு நபர். என்னை இதை எழுதத்தூண்டியதும் இவர்கள்தான்.
அதுசரி, நான் சொன்னது ஏதாச்சும் புரிஞ்சிச்சா?? ஹி ஹி ஹி..