இளசுகள் பதிவு! தயவுசெய்து பெருசுகள் வாசித்து என்னை திட்டவேண்டாம்!!
காதல் + உளவியல் சேரும் இன்னுமொரு கட்டுரை. இப்பொழுதெல்லாம் மனதை தொட்டுப்போகும் எல்லா விடயங்களையும் எழுதுவதற்கு நேரமும் மனநிலையும் இடம் கொடுப்பதில்லை. இருந்தும் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு சமூக (??) பதிவொன்றை இடுவது திருப்தியளிக்கிறது.
காதல் என்கின்ற பூட்டு பல மனங்களை பூட்டிவிடுகிறது. பின்னர் திருமணம் என்கின்ற கதவுகளை மிகச்சரியாக இடைவெளி இல்லாமல் பூட்டுவதற்கு இந்த காதல் சாவி பயன்படுகிறது. இந்த சாவியின் ஆதிக்கம் இளைய தலைமுறையினர் மத்தியில் மிகவும் அதிகமாக காணப்பட்டாலும் சிலேளைகளில் பூதாகரமாகக் கூட வெளிப்படுத்தப்படுகிறது. காதலை ஆளத் தெரிந்தவனும் ஞானியாகலாம் என்கிறேன்.
இன்று பேசப்போகும் ஒரு விடயம், கொஞ்சம் வித்தியாசமானது. சில பெண்களுக்கு இந்த பதிவு வெறுப்பேத்தலாம். சில பெண்களுக்கு இது தேவையான பதிவு என ஜோசிக்கலாம். சில பெண்களுக்கு இந்தப் பதிவு ஒரு பாடமாகக் கூட அமையலாம். அப்படியெனின், ஆண்களுக்கு? இவர்களுக்கும் இது 'எல்லை மீறிய பயங்கரவாத நட்புக்கள்' பற்றி ஒரு புரிதலை ஏற்படுத்தக்கூடிய பதிவு எனலாம்.. சரி விடயத்திற்கு வரலாம்.
காதல் என்கின்ற ஒரு உறவுமுறை சில ஜோடிகளிற்கு தற்ச்செயலாக ஏற்ப்படலாம். சிலருக்கு கட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கலாம். சிலருக்கு வேண்டா வெறுப்பாய் சில உணர்வியல் வலுவின்மையால் ஏற்பட்டிருக்கலாம். இன்னும் சிலருக்கு கட்டுப்படுத்தமுடியா உடலியல் தேவையால் உருவாகியிருக்கலாம். இன்னும் சிலருக்கு வாழ்க்கை பற்றிய நேரிய தயார்ப்படுத்தலின் ஒரு முக்கியமான முடிவை இந்த உறவுமுறை உருவாகியிருக்கலாம். எப்படியாயினும், காதலிக்கும் எல்லா பெண்களும் தங்கள் காதலன் தன்னில் மட்டுமே அதிகூடிய ஆசை, அக்கறை, அன்பு, நட்பு போன்றவற்றை காட்டவேண்டும் என எண்ணுவர். இதில் தவறும் இல்லை. ஆனால் சிலவேளையில் இது கொஞ்சம் சறுகினால் கூட அது காதலில் பெரியதொரு விரிசல் ஏற்பட காரணமாய் அமைந்துவிடலாம்.
இப்படியிருக்கின்ற காதல் உறவுமுறையில் ஒரு பெண்ணிற்கு தனது காதலனை விட இன்னுமொரு ஆணில் ஏதோவொரு காரணத்திற்காய் அதிகம் ஈடுபாடு ஏற்பட்டால் என்ன நடக்கும்? இது நடக்கலாம். காரணம் ஒவ்வொரு மனிதர்களிலும் மற்றவரை கவரும் ஏதோவொரு விடயம் நிற்சயம் இருக்கிறது. இது யதார்த்தத்திற்கு முரணான ஒரு விடயம் இல்லை. இப்படி நடக்க சாத்தியக்கூறுகள் பூச்சியம் அளவே இருக்கிறது என்று யாரும் சொல்லவந்தால் எனக்கு கடப்பாறையை தூக்குவதைத் தவிர வேறு வழி இல்லை. இருக்க, இப்படியான ஒரு விடயத்தை அந்த சம்மந்தப்பட்ட மூன்று நபரும் எப்படி சமாளித்துக்கொள்வார்கள் என்பதில்தான் அவர்கள் இருவரினதும் காதல் உறவு தங்கியிருக்கும்.
இதற்கு என்ன காரணம்? கூடுதலாக எந்தவொரு விடயத்திலும் மனிதனின் திருப்திகொள்ளும் அளவு மட்டம் மிகவும் குறைவானதே. எதிலும் அவ்வளவு இலகுவாக திருப்திகொள்பவன் மனிதனல்ல. மற்றவருடனான உறவுகளும் அவர்கள் எந்தளவிற்கு எங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதில்தான் அதிகம் தங்கியிருக்கும். எங்களில் ஏதோவொரு விடயத்தில் அதிகம் ஒருவர் பாதிப்பை ஏற்படுத்தினால் அவருடன் இலகுவாகவும் அல்லது ஆழமாகவும் ஒரு உறவு வளர ஆரம்பித்துவிடுகிறது. இன்னும் இலகுவாக சொல்வதானால், மற்றவருடன் ஏற்படுகின்ற சகல உறவுகளும் அவர்களிடம் நாங்கள் கண்ட ஏதோவொரு எங்களை கவர்ந்த ஒரு விடயத்தாலேயே உருவாக்கம் பெறுகிறது. ஆக, இன்று பிடிக்கும் ஒன்றைவிட நாளை இன்னொன்று அதிகம் பிடிக்கலாம். இது ஜோகேயின் தத்துவம் என்பார்கள். இதற்கு மனமே பொறுப்பு. எமது விருப்பு வெறுப்புக்களை எங்கள் மனங்களே ஆளுகின்றன, தீர்மானிக்கின்றன. இப்படியிருக்க, காதலில், காதலிக்கு தனது காதலனை விட வேறு ஒரு ஆணில் ஏதோ ஒருவிடயம் அதிகம் கவர்ந்தால் அந்த மூன்றாம் நபரின்மேல் ஏற்படும் சுயாதீன உறவு தவிர்க்கமுடியாதது. இந்த உறவை அதிகமான பெண்கள் தொடரவே முனைகிறார்கள் ஒருவித நட்பாய். அதுவே இறுதியில் அவர்கள் காதலிற்கு ஆப்பை முடிந்துவிடுகிறது.
இவ்வாறானதொரு இரண்டாவது ஆணுடனான நட்பு மறைமுகமாக வளருகின்றபொழுது இவர்கள் காதல் உறவுமுறையில் சில மாற்றங்களை காணலாம்.
- காதலனிற்கு செலவழிக்கும் நேரத்தில் ஏற்படும் குறைவு.
- காதலனின் விருப்பு வெறுப்புக்களை அசாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனநிலை.
- காதலனுடன் மேற்கொள்ளும் தொடர்பாடலில் ஏற்படும் அசட்டுத்தன்மை.
- காதலனின் கண்களை பார்க்கும் போது ஏற்படும் இமை நெருடல்.
- நட்பு என்றாலும் காதலன் தவறாக எண்ணிவிடுவான் என்கின்ற பயத்தினால் இந்த நண்பன் பற்றியதான விடயங்களின் மறைத்தல். இதனால் ஏற்படும் மன சஞ்சலம்.
- இப்படி பல...
இவ்வாறான சந்தர்ப்பங்களை சரியாக சமாளிக்கத்தெரியாத ஆண்களும் பெண்களுமே காதல் முறிவு என்கின்ற உறவு முறிவிற்கு முடிவாக செல்கிறார்கள். காதலனிற்கு பிடிக்காத எதையும் செய்வதில் அர்த்தம் இல்லை. காரணம் அவரே வாழ்நாள் பூரான வாழ்க்கைத்துணை என்கின்றார்கள் நம்மில் பல கலாச்சாரப் பெண்கள். இதை நான் நூறுவீதம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதை மதிக்கிறேன். இவ்வாறான ஒரு கலாச்சார போக்கும் இவ்வாறான பிரச்சனைகளிற்கு ஒரு தீர்வாக அமையும் என்பதால்தான் இந்தக்கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. அதிலும், நண்பனையும், காதலனையும் சரியாக சமப்படுத்த முடியாமல் (Imbalance) போவதுதான் விளைவின் ஆரம்பம்.
ஆக, இதற்க்கான தீர்வுதான் என்ன? உங்கள் காதலனை அல்லது காதலியை தவிர்த்து ஒரு மூன்றாம் நபர் மேல் ஏதோ ஒரு விடயத்தில் ஈர்ப்பு ஏற்பட்டால் அது தவறில்லை ஆனால் அதை வெளிப்படுத்துவது அல்லது வெளிப்படுத்தும் விதம்தான் உறவுமுறையில் விரிசலை ஏற்படுத்தலாம். நமக்கே உரியதான சில பாதுகாப்பு எல்லைகளை எங்களுக்கு நாங்களே அமைத்துக்கொள்தல் மிகவும் அவசியமாகிறது. அதேபோல, இந்தப்பிரச்சனையை மிகவும் இலகுவாக தவிர்க்கக்கூடியது அந்த மூன்றாம் நபரால்தான். அந்த மூன்றாம் நபர் இந்த விடயத்தில் மிகவும் கவனத்துடனும் ஒழுக்கத்துடனும் உண்மையாகவும் நேர்மையுடனும் நடந்துகொள்தல் ஒரு காதல் விரிசலிற்கான அல்லது முறிவிற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்கும். இந்தவிடயத்தில் அதிகம் ஆண்களே தவறிளைப்பதாய் சொல்கிறார்கள். இருந்தும் சேலை முள்ளில் பட்டாலும் முள்ளு சேலையில் பட்டாலும் பாதிப்பு என்னவோ சேலைக்குத்தான் என்பதை பெண்கள் புரிந்துகொண்டால் எதுவும் சுபமே!
4 comments:
அண்மையில் நான் வாசித்தமையிலேயே மிகவும் அருமையான பதிவு, .. இதில் புற மரபுகளை தூக்கி வைத்துவிட்டு யதார்த்தமாக இப்பதிவை வாசித்தால் நீங்கள் எடுத்துவைக்கும் மிகவும் அருமையான, அவசியமான உண்மை வெளிப்படும் பெண்கள், ஆண்கள் அனைவரும் வாசிக்க வேண்டியதொரு பதிவு இது...
"அந்த மூன்றாம் நபர் இந்த விடயத்தில் மிகவும் கவனத்துடனும் ஒழுக்கத்துடனும் உண்மையாகவும் நேர்மையுடனும் நடந்துகொள்தல்' முக்கியமான வரிகள் நண்பா... இதை எல்லோரும் புரிந்து கொள்ளல் வேண்டும்..
இளைய தலைமுறையினர் படித்து பயன் பெற வேண்டிய பதிவு..
மிக அவசியமான அருமையான பதிவை பார்க்கும்போது சமூகத்தை சீரழிக்கும் ஒரு விடயத்தினை தொட்டுப்பார்த்திருப்பது மகிழ்விக்கின்றது. தொடர்பாடல்துறை அதிகரித்த இன்றைய காலகட்டத்தில் ஆண் பெண் உறவென்பது மிகச்சாதாரணமான ஒரு விடயமாகிவிட்டது. யாரும் யாருடனும் நட்பு வைத்துக்கொள்ளலாம் என்கின்ற வரைமுறையற்ற தன்மையே பல சிக்கல்களை உருவாக்கிவிடுகின்றது. இது காதலன் காதலி உறவுமுறையில் மட்டுமல்ல கணவன் மனைவி உறவுமுறையிலும் கூட பல இன்னல்களை உருவாக்கி குடும்பங்களை சின்னாபின்னமாக்கி சிதைத்துவிட்டிருப்பதை பல சம்பவங்களினூடாக நாம் காண்கின்றோம். அதனை அடிப்படையாகக்கொண்ட உங்கள் கட்டுரை அனைவரும் வாசிக்கவேண்டியதே. ஆனால், இதனை "பெண்" என ஒருபாலாருக்கான விடயமாக சொன்னது அத்தனை பொருத்தமாக நான் உணரவில்லை காரணம் பால் வித்தியாசமின்றி இப்பிரச்சனை இருபாலாரிடமும் காணப்படுவதுதான். ஆக மூன்றாம் நபரின் நட்பு என்பது அளவோடும் ஆரோக்கியத்தோடும் இருப்பதே சிறந்ததும் எமது தனிப்பட்ட உறவுகளின் பாதுக்காப்புக்கு உத்தரவாதமளிப்பதாகவும் அமைகின்றது. வாழ்த்துக்கள் பிரயோசனமான விடயத்தினை சுவாரஸ்யமாக பகர்ந்தளித்தமைக்கு...
-ராஜ் சுகா-
Post a Comment