Sunday, December 30, 2012

தலையணை வேதம்.


வெளியில் மழை
மனதுள் வெயில்
இரவோ குளிர்கிறது
கனவோ கொதிக்கிறது.
போர்வைக்குள் நான்
தூரத்தில் நீ.
போர்வை தரும் சூடோ
உன்
பார்வையில் உறைகிறது!
என்
தலையணை தாண்டிய வேதம்
உன்
முகப்பருக்குள் முடிகிறது!
Monday, December 24, 2012

மலரவன் முதல் மணிகண்டன் வரை! - 01

ஒரு எரிமலையை பனித்துகள்கள் அணைத்துவிட்ட அதிசயத்தை யாரும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு  வானம்  ஒரு   நட்சத்திரத்திடம் அடங்கிப்போன வரலாற்றை படித்திருக்கிறீர்களா? சரி அதை தவிர்த்து, ஒரு இமாலய  சிந்தனா  சக்தியுடனும், வானையே  புரட்டும்  மன தைரியத்தோடும், மலையையே தூக்கிப்பிரட்டும் உடல் முறுக்கோடும், வீரம், நேர்மை, நேர்கொண்ட வாழ்க்கை நடை என முன்னேற்றத்தோடு மட்டுமே காலத்தைக் களித்த ஒரு மனம், ஒரு  உடல் இன்று நான்கு சுவரிற்குள் மனிதரைக்கூட பார்த்தால் ஈரக்குலை நடுங்கும் அளவிற்கு முடங்கிப்போயிருக்கும் ஒரு மனிதனின் கதையை வாசித்திருக்கிறீர்களா? இல்லையெனில், இதை தொடர்ந்து படியுங்கள்.

ஈழத்திலே போராட்டம் என்பது ஆரம்பத்திலே ஒரு வேட்கை, ஒரு வீரம், ஒரு சுயத்திற்க்கான போராட்டம், பின்னர் தியாகம், பின்னர் அது ஒரு யாகம், இறுதியில் ஒரு நம்பிக்கைத்துரோகம், ஒரு கூட்டு ஏமாற்று, ஒரு மனித சுடுகாடு மற்றும் இப்பொழுது அது ஒரு கற்றுக்கொண்ட பாடங்கள்! இந்த ஆரம்ப கால வேட்கையே என்னையும் ஒரு நியாயத்திற்கெதிரான போராளியாய்  மாற்றியது. அப்பொழுதெல்லாம்  எனது  நம்பிக்கை இரண்டேதான். ஒன்று எனது மகன் விடியலைக் காண்பான். இன்னொன்று வரலாற்றில் எமது தலைகள் நிமிரும்! இந்த இரண்டு மூச்சுக்களோடேயே எனது போராட்டத்தின் ஆரம்ப வித்துக்கள் நிலத்திலே புதைக்கப்பட்டன.

இப்பொழுது நான் மணிகண்டன். பிறந்த பொழுது அப்பா வைத்த பெயர் இது. ஆனால், நான் வளரும் போது அண்ணன்மார் வைத்த அழகிய தமிழ் பெயர் மலரவன். அப்பொழுதெல்லாம் அந்த மனிகண்டனைவிடவும் இந்த மலரவனையே எனக்கு அதிகம்  பிடித்திருந்தது. ஒரு  கட்டத்தில் அம்மாவின் 'மணிகண்டா..' வையும் விட அண்ணன்மாரின் 'மலரவா...' அதிகம் பிடித்திருந்தது. மணிகண்டா கொஞ்சம் கொஞ்சமாய் எனது ஊரைப்போல என்  நினைவுகளிலிருந்து  மறைந்தே  போனது. ஆனாலும், முள்ளிவாய்க்காலில்  இராணுவத்தினரிடம்  சரணடைந்தபோது என்னையறியாமலேயே  ஞாபகம்  வந்து  வாயில்  நுழைந்தது  இந்த மணிகண்டன். உனது  மற்றைய  பெயர்  என்ன  என்று ஒவ்வொரு தடவையும் கேட்ட போதெல்லாம் அந்த அழகிய மலரவன்  ஏதோ  எனக்கு பிடிக்காமலேயே போனது. ஒவ்வொரு  அடியும்  எனக்கு  அந்த  மலரவனுக்காகவே  விழுந்ததே ஒழிய இந்த மனிகண்டனுக்கானவை அல்ல.


 1998, எனது முதல் போராட்டம். சாவைப் பற்றி அப்பொழுதெல்லாம் கவலைகொண்டதே இல்லை. அது என்னவோ இப்பொழுதுதான் அவ்வளவு பயம். எனது  பேசில்  நான்  கடைக்குட்டி  வீட்டை  போலவே. ஒவ்வொருமுறை என்னை அண்ணன்மார் அழைக்கும் பொழுதும் எனது முகத்தின் விளிம்புகளில் பட்டாம்பூச்சி பறக்கும். அவர்களது அழைப்பில் அத்தனை அழகும் அன்பும் இருக்கும். ஒரு  தாயைப் பிரிந்த சேயின் முகம் எனக்கு மறந்தே போனது. அங்கெல்லாம் நான் பார்த்தவை, வேட்கை, வீரம், தியாகம், ஒழுக்கம், நேர்மை, பிறர்நலம், பாசம், நேசம், மகிழ்ச்சி. இவை அனைத்தையும் இப்பொழுதெல்லாம் நான் தேடி தேடி மூர்ச்சை இழந்து போகிறேன். சரி விடயத்திற்கு வருகிறேன். எனது முதல் சண்டை.. மனதினுள்ளும் போராட்டம். எனது  வேட்கை  பற்றிய  வாழ்க்கை போராட்டத்தின் முதல் படி. எனது முதல் பிறந்தநாளில் எனது பெற்றோர் கொண்ட பூரிப்பு போல. எனது  முதல்  பேச்சில்  எனது அம்மா கண்ட ஆனந்தத்தைப் போல. எனது  முதல்  நடையில்  அப்பா  அடைந்த சந்தோசத்தைப் போல. போராட நாங்கள் தயாரான போது, நான் அங்கே கடைக்குட்டி என்றபடியாலோ அல்லது எனது வேட்கை மீதான ஆளுமை குறைவு என்பதாலோ நான் பின்னாலேயே தள்ளப்பட்டேன். எனக்கும் வயது இருபத்து ஒன்று தானே அண்ணர் என அழுது கெஞ்சியபோதும் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு பின்புலக் களக் கடமைகள்.

இப்படி  எனது  முதல்  ஆசை  பூரணமாய்  பூர்த்தியாகவில்லை. அன்று வீரச்சாவடைந்த  அண்ணன் மாரை  நினைத்து  நான்  மூன்று  நாட்கள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருந்ததும்  அதற்காய்  பின்னர்  பொறுப்பாளரிடம் பணிஷ்மன்ட் வாங்கினதும் மறக்க முடியாதவை. இந்த காலகட்டத்தை நான் முற்றும் முழுதாக எனக்கானவையாக அல்லாமல் நமக்கானவையாகவே செலவழிக்க என்னால் முடிந்தது.

2009இல் நானும் எனது  போராட்ட  நண்பனும்  முள்ளி வாய்க்காலை  விட்டு வெளியேறும் பொழுது  எனது  ஒற்றைக்கால்  நான்  நிற்ச்சயமாய்  போராளியாய்த்தான்  இருந்திருப்பேன் என்பதை பார்க்கும் அனைவரிற்கும் காட்டிக்கொடுத்தது.  இற்றைக்கு  பல  வருடங்களிற்கு முன்னர் ஒரு முன்னரங்க சமரிலே எனது வலக்காலை தொலைத்திருந்தேன். பிறகென்ன தடுப்பு முகாமிற்கு கொண்டுவரப்பட்ட நான் சில நாட்கள் கழித்து புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டு இப்பொழுது விடிவிக்கப்பட்டிருக்கிறேன். புனர்வாழ்வு முகாம் எனது அடுத்த வாழ்க்கைப் போராட்டம். தொடர்ந்து அதுபற்றியும் நான் அதிகம் பேசுவேன்.

முன்னர் எல்லாம் ஒரு தேச விடுதலைக்கான தியாக போராளியாக பார்த்தவர்கள் எப்பொழுதெல்லாம் ஒரு துரோகியாகவே பார்க்கின்றார்கள். உசுரை தவிர எப்பொழுதெல்லாம் எம்மிடமிருப்பது வேறு எதுவும் இல்லை. புனர்வாழ்வு என எங்களை புனர்வாழ்வு அளித்தவர்கள் எங்கள் எதிர்காலம் பற்றி தெளிவான எந்தவித எதிர்வுகூறல்களையும் தெரிவித்திருக்கவில்லை இப்படி எங்கள் வாழ்வு விடியாமலேயே போய்விடும் என. கடந்த சில மாதங்களிற்கு முன்னர் புனர்வாழ்வு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட எனது உடல் இப்பொழுது எனது ஊர்ப்பக்கத்தில் நடந்துகொண்டிருக்கிறது. என்னைப்பற்றி அதிகம் அதிகம் பேச இருக்கிறது. என்னைபோன்றோரின் வாழ்க்கை பற்றி உங்களுடன் பேசுவது மிகவும் அவசியம்.

எரிமலையாய் குமுறும்போதெல்லாம் எங்கள் மனங்கள் பனியில் இப்படி உறைந்துபோவோம் என கனவுகூட கண்டதில்லை. இரவோடு இரவாக முள்ளிவாய்க்காலில்புடுங்கி எறியப்பட்ட இலட்சிய கனவுகளை  அன்றைய தினத்தின் பின் நினைவூட்டி பார்த்ததே இல்லை. இலட்சியக்கனவுகளை எண்ணும் போதெல்லாம் கயிற்றிலேயே தொங்கிக்கொள்ளும் அந்த நினைவுகள்.

அதேபோல இப்பொழுதெல்லாம் எனது பாரதியின் நினைவுகளும் மனங்களில் ஊசலாடாமல் இல்லை. பாரதி ஒரு போர்களத்தின் தேவதை. பாரதி-மலரவன் ஒரு அழகிய போர்க்கள காதல் காவியம்! கையில் இருக்கும் துப்பாக்கியின் கனத்தைக்கூட சுக்கு நூறாக்கியவள் பாரதி. கையில் எறிகணை தாங்கும் ஒரு மல்லிகை அவள். போராட வந்த உனக்கு இது தேவை இல்லை என்பது அண்ணன்மாரின் போராட்ட யதார்த்தவியல். எனது மூளையைக் கட்டுப்படுத்தத் தெரிந்த அந்த துப்பாக்கியினால் எனது இதயத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது ஏதோ ஆச்சரியம் தான்! போராட்டத்தில் இணைந்த காலம் தொட்டு எனது இலட்சியத்தைத் தவிர மனம் பதைத்தது பாரதியிடம்தான். அண்ணன் மாரிற்கு தெரியாமல் நானும் அக்காமாரிற்கு தெரியாமல் பாரதியும் எமக்காக ஏங்கும் ஒவ்வொரு பொழுதுகளும் அநேகமானவை நடுச்சாம சென்றியில்தான்.

அவளை முதல் முறை  பார்த்தது  பூநகரியில். ஒரு  பயிற்சியிற்காய் சென்றிருந்தபோது எனக்குமுன்னால் பெண்கள் வரியில் என்னை விடவும் பாரிய ஆயுதத்துடன் கம்பீரமாய் நேரிய பார்வையோடு நின்றுகொண்டிருந்தவள் அவள். ஒரு கையில் எனது துவக்கு. இன்னொரு கையில் எனது மனது. ஆயுதப்போராட்டத்தின் முன்னரே எனது இதயப் போராட்டம் ஆரம்பமானது துர்வதிஷ்டம் என்றே அன்று தோணியது. எதிரிக்காய் எனக்கிருந்த காத்திருப்புக்கள் பாரதிக்காய் மாறியது. இருந்தும் இலட்சியப் போக்கு சாய்ந்துகொள்ளவில்லை என்றே சொல்வேன்.

நீண்ட நாட்கள் கடந்து ஒருநாள் என்னை எனது பொறுப்பாளர் தனியே பேசவேண்டும் என அழைத்திருந்தார். அதை என்னிடம் வந்து சொன்னவர் எனது சகாக்களில் ஒருவர். அவர் அதை வெளிப்படுத்திய அல்லது கூறிய விதம் எதோ என்னக்கு பணிஷ்மன்ட் இருப்பதைப்போல் விளங்கியது. இந்த பணிஷ்மன்ட்  மிகவும்  சுவாரசியமான  ஒன்று. சிலவேளைகளில் அழவைப்பதும், சிலவேளைகளில்  சந்தோசப்பட  வைப்பதும்  இந்த பணிஷ்மண்டின் சிறப்பியல்புகள். நான் அதைக்கேட்டு பொறுப்பாளரை சந்திக்க சென்றிருந்தவேளையில் அவர் இன்னொருவரிற்கு பணிஷ்மன்ட் கொடுப்பதில் பிஸியாக இருந்தார். எனது வயிறும் கலக்கியது. என்ன தவறு செய்தேன் என்பதே எனக்கு ஞாபகம் இல்லை. இரண்டு மூன்று தடவை ஜோசித்தாலும் எனது மரமண்டைக்கு அது ஞாபகம் வருவதாய் இல்லை. இருந்தும் ஜோசிக்கையில் 'மலரவன்...' என்கின்ற  பொறுப்பாளரின் கணீர் ஒலி காதுகளை மூட 'வணக்கம் அண்ணன்..' என அருகில் நின்றேன் ஏக்கத்தோடு. முதலாவது கேள்வி, 'நீ யாரையும் விரும்புறியா?, உண்மைய சொல்லணும் ஆமா!'

இதற்கு என்னிடம்  பதில்  எதுவும்  அப்பொழுது  இருந்திருக்கவில்லை. ஆகவே  எனது  பதில்  இரண்டு  நிமிட  மௌனம்  மட்டுமே! 'கேட்டது கேக்கலியா?'  'அப்பிடி எதுவும் இல்ல அண்ணே..!' இது எனது இறுதிப் பதில். 'நாங்க எல்லாம் இங்க எதுக்கு வந்திருக்கிறம் என்றது ஞாபகம் இருக்குத்தானே?' ஒரு எச்சரிக்கையோடு 'போகலாம்...' என வழியனுப்பினார் அண்ணர். மூச்சும் பேச்சும் டைப் அடிக்கத் தொடங்கியது. இது முதல் தடவை, இனி மாட்டினால் நேரடியாகவே பணிஷ்மன்ட் தான் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. பாரதியிடம் நான் உன்னை விரும்புகிறேன் என சொல்வதற்கும், அதை அவள் ஏற்றுக்கொள்வதற்கும் முன்னரே இங்கே பணிஷ்மன்ட் ஆரம்பமாகிடுமோ என்பது எனது இப்போதைய ஏக்கம்.

போராட்டமும் காதலும் அநேகரை இணைத்திருக்கிறது என்பது உண்மைதான். பல  போர்  முனையில்  உருவாகிய  காதல்கள் வென்றிருந்தாலும் இருவரின் ஒட்டுமொத்த இலட்சியம் தோற்றது இந்த காதல்  வெற்றிகளின் மேல் பூசப்பட்ட இரத்த முலாம்கள்தான்!

இப்படி, அங்கும்  இங்கும்  பிய்த்தெறியப்பட்ட  எனது  வாழ்க்கையின் துகள்களை புனர்வாழ்வு முகாமிற்குள் இருந்து வெளியில் வந்தும் கூட இன்றும் தேடிக்கொண்டே இருக்கிறேன். எனது தேடல் தொடரும். நீங்களும் செவிமடுப்பீர்கள் என்கின்ற நம்பிக்கையோடு மீண்டும் சந்திக்கிறேன்.கவனிக்க: இத்தொடரில்  வரும்  பெயர்கள்  சம்பவங்கள் எதுவும்  எந்த  சந்தர்ப்பங்களையும் பிரதிபலிப்பன அல்ல. இது  ஒரு  நீள்  கதைத் தொடர்.


Saturday, December 15, 2012

காதலும் ஒரு மூன்றாம் நபரும்!இளசுகள்  பதிவு! தயவுசெய்து  பெருசுகள்  வாசித்து  என்னை திட்டவேண்டாம்!!

காதல் + உளவியல் சேரும் இன்னுமொரு கட்டுரை. இப்பொழுதெல்லாம் மனதை தொட்டுப்போகும் எல்லா விடயங்களையும் எழுதுவதற்கு நேரமும்  மனநிலையும்  இடம்  கொடுப்பதில்லை. இருந்தும்  நீண்ட நாட்களுக்கு  பின்னர்  ஒரு  சமூக (??) பதிவொன்றை  இடுவது திருப்தியளிக்கிறது.

காதல்  என்கின்ற  பூட்டு  பல  மனங்களை  பூட்டிவிடுகிறது. பின்னர் திருமணம் என்கின்ற கதவுகளை மிகச்சரியாக இடைவெளி இல்லாமல் பூட்டுவதற்கு இந்த காதல் சாவி பயன்படுகிறது. இந்த சாவியின் ஆதிக்கம் இளைய தலைமுறையினர் மத்தியில் மிகவும் அதிகமாக காணப்பட்டாலும் சிலேளைகளில் பூதாகரமாகக் கூட வெளிப்படுத்தப்படுகிறது. காதலை ஆளத் தெரிந்தவனும் ஞானியாகலாம் என்கிறேன்.

இன்று பேசப்போகும் ஒரு விடயம், கொஞ்சம் வித்தியாசமானது. சில பெண்களுக்கு இந்த பதிவு வெறுப்பேத்தலாம். சில பெண்களுக்கு இது தேவையான பதிவு என ஜோசிக்கலாம். சில பெண்களுக்கு இந்தப் பதிவு ஒரு பாடமாகக் கூட அமையலாம். அப்படியெனின், ஆண்களுக்கு? இவர்களுக்கும் இது 'எல்லை மீறிய பயங்கரவாத நட்புக்கள்' பற்றி ஒரு புரிதலை ஏற்படுத்தக்கூடிய பதிவு எனலாம்.. சரி விடயத்திற்கு வரலாம்.

காதல் என்கின்ற ஒரு உறவுமுறை சில ஜோடிகளிற்கு தற்ச்செயலாக ஏற்ப்படலாம். சிலருக்கு கட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கலாம். சிலருக்கு வேண்டா வெறுப்பாய் சில உணர்வியல் வலுவின்மையால் ஏற்பட்டிருக்கலாம். இன்னும் சிலருக்கு கட்டுப்படுத்தமுடியா உடலியல் தேவையால் உருவாகியிருக்கலாம். இன்னும் சிலருக்கு வாழ்க்கை பற்றிய நேரிய தயார்ப்படுத்தலின் ஒரு முக்கியமான முடிவை இந்த உறவுமுறை உருவாகியிருக்கலாம். எப்படியாயினும், காதலிக்கும் எல்லா பெண்களும் தங்கள் காதலன் தன்னில் மட்டுமே அதிகூடிய ஆசை, அக்கறை, அன்பு, நட்பு போன்றவற்றை காட்டவேண்டும் என எண்ணுவர். இதில் தவறும் இல்லை. ஆனால் சிலவேளையில் இது கொஞ்சம் சறுகினால் கூட அது காதலில் பெரியதொரு விரிசல் ஏற்பட காரணமாய் அமைந்துவிடலாம்.இப்படியிருக்கின்ற காதல் உறவுமுறையில் ஒரு பெண்ணிற்கு தனது காதலனை விட இன்னுமொரு ஆணில் ஏதோவொரு காரணத்திற்காய் அதிகம் ஈடுபாடு ஏற்பட்டால் என்ன நடக்கும்? இது நடக்கலாம். காரணம் ஒவ்வொரு மனிதர்களிலும் மற்றவரை கவரும் ஏதோவொரு விடயம் நிற்சயம் இருக்கிறது. இது யதார்த்தத்திற்கு முரணான ஒரு விடயம் இல்லை. இப்படி நடக்க சாத்தியக்கூறுகள் பூச்சியம் அளவே இருக்கிறது என்று யாரும் சொல்லவந்தால் எனக்கு கடப்பாறையை தூக்குவதைத் தவிர வேறு வழி இல்லை. இருக்க, இப்படியான ஒரு விடயத்தை அந்த சம்மந்தப்பட்ட மூன்று நபரும் எப்படி சமாளித்துக்கொள்வார்கள் என்பதில்தான் அவர்கள் இருவரினதும் காதல் உறவு தங்கியிருக்கும்.

இதற்கு என்ன காரணம்? கூடுதலாக எந்தவொரு விடயத்திலும் மனிதனின் திருப்திகொள்ளும் அளவு மட்டம் மிகவும் குறைவானதே. எதிலும் அவ்வளவு இலகுவாக திருப்திகொள்பவன் மனிதனல்ல. மற்றவருடனான உறவுகளும் அவர்கள் எந்தளவிற்கு எங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதில்தான் அதிகம் தங்கியிருக்கும். எங்களில் ஏதோவொரு விடயத்தில் அதிகம் ஒருவர் பாதிப்பை ஏற்படுத்தினால் அவருடன் இலகுவாகவும் அல்லது ஆழமாகவும் ஒரு உறவு வளர ஆரம்பித்துவிடுகிறது. இன்னும் இலகுவாக சொல்வதானால், மற்றவருடன் ஏற்படுகின்ற சகல உறவுகளும் அவர்களிடம் நாங்கள் கண்ட ஏதோவொரு எங்களை கவர்ந்த ஒரு விடயத்தாலேயே உருவாக்கம் பெறுகிறது. ஆக, இன்று பிடிக்கும் ஒன்றைவிட நாளை இன்னொன்று அதிகம் பிடிக்கலாம். இது ஜோகேயின் தத்துவம் என்பார்கள். இதற்கு மனமே பொறுப்பு. எமது விருப்பு வெறுப்புக்களை எங்கள் மனங்களே ஆளுகின்றன, தீர்மானிக்கின்றன. இப்படியிருக்க, காதலில், காதலிக்கு தனது காதலனை விட வேறு ஒரு ஆணில் ஏதோ ஒருவிடயம் அதிகம் கவர்ந்தால் அந்த மூன்றாம் நபரின்மேல் ஏற்படும் சுயாதீன உறவு தவிர்க்கமுடியாதது. இந்த உறவை அதிகமான பெண்கள் தொடரவே முனைகிறார்கள் ஒருவித நட்பாய்.  அதுவே இறுதியில் அவர்கள் காதலிற்கு ஆப்பை முடிந்துவிடுகிறது.இவ்வாறானதொரு இரண்டாவது ஆணுடனான நட்பு மறைமுகமாக வளருகின்றபொழுது இவர்கள் காதல் உறவுமுறையில் சில மாற்றங்களை காணலாம்.

  • காதலனிற்கு செலவழிக்கும் நேரத்தில் ஏற்படும் குறைவு.
  • காதலனின் விருப்பு வெறுப்புக்களை அசாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனநிலை.
  • காதலனுடன் மேற்கொள்ளும் தொடர்பாடலில் ஏற்படும் அசட்டுத்தன்மை.
  • காதலனின் கண்களை பார்க்கும் போது ஏற்படும் இமை நெருடல்.
  • நட்பு என்றாலும் காதலன் தவறாக எண்ணிவிடுவான் என்கின்ற பயத்தினால் இந்த நண்பன் பற்றியதான விடயங்களின் மறைத்தல். இதனால் ஏற்படும் மன சஞ்சலம்.
  • இப்படி பல...

இவ்வாறான சந்தர்ப்பங்களை சரியாக சமாளிக்கத்தெரியாத ஆண்களும் பெண்களுமே காதல் முறிவு என்கின்ற உறவு முறிவிற்கு முடிவாக செல்கிறார்கள். காதலனிற்கு பிடிக்காத எதையும் செய்வதில் அர்த்தம் இல்லை. காரணம் அவரே வாழ்நாள் பூரான வாழ்க்கைத்துணை என்கின்றார்கள் நம்மில் பல கலாச்சாரப் பெண்கள். இதை நான் நூறுவீதம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதை மதிக்கிறேன். இவ்வாறான ஒரு கலாச்சார போக்கும் இவ்வாறான பிரச்சனைகளிற்கு ஒரு தீர்வாக அமையும் என்பதால்தான் இந்தக்கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. அதிலும், நண்பனையும், காதலனையும் சரியாக சமப்படுத்த முடியாமல் (Imbalance) போவதுதான் விளைவின் ஆரம்பம்.

ஆக, இதற்க்கான தீர்வுதான் என்ன? உங்கள் காதலனை அல்லது காதலியை தவிர்த்து ஒரு மூன்றாம் நபர் மேல் ஏதோ ஒரு விடயத்தில் ஈர்ப்பு ஏற்பட்டால் அது தவறில்லை ஆனால் அதை வெளிப்படுத்துவது அல்லது வெளிப்படுத்தும் விதம்தான் உறவுமுறையில் விரிசலை ஏற்படுத்தலாம். நமக்கே உரியதான சில பாதுகாப்பு எல்லைகளை எங்களுக்கு நாங்களே அமைத்துக்கொள்தல் மிகவும் அவசியமாகிறது. அதேபோல, இந்தப்பிரச்சனையை மிகவும் இலகுவாக தவிர்க்கக்கூடியது அந்த மூன்றாம் நபரால்தான். அந்த மூன்றாம் நபர் இந்த விடயத்தில் மிகவும் கவனத்துடனும் ஒழுக்கத்துடனும் உண்மையாகவும்  நேர்மையுடனும் நடந்துகொள்தல் ஒரு காதல்  விரிசலிற்கான அல்லது முறிவிற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்கும். இந்தவிடயத்தில் அதிகம் ஆண்களே தவறிளைப்பதாய் சொல்கிறார்கள். இருந்தும் சேலை முள்ளில் பட்டாலும் முள்ளு சேலையில் பட்டாலும் பாதிப்பு என்னவோ சேலைக்குத்தான் என்பதை பெண்கள் புரிந்துகொண்டால் எதுவும் சுபமே!

Saturday, December 8, 2012

வடக்கில் மனிதாபிமானப்பணியும் மனதை சுரண்டும் வடுக்களும் - 3

இலங்கையில் போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்தும் அப்பிரதேசங்களிலே மக்கள் இன்னமும் தங்கள் நிரந்தர மீள் இருப்புக்களை உறுதிசெய்வதாய் இல்லை. அதாவது, மீள்குடியேற்றம் துரிதமாய் முன்னெடுக்கப்படுகிறது என சொல்லப்பட்டாலும் அவ்வாறு மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் உயிர் வாழ்தலுக்கான அடிப்படை வசதிகள் யாவும் நிறைவேற்றப்பட்டனவாய் இல்லை என்பதே உண்மை. அபிவிருத்தி அடைந்துவரும் சமூக பௌதீக உள்ளக கட்டுமானங்களின் புனரமைப்பு, அபிவிருத்தியின் குறித்த அடைவு மட்டத்தை அடைந்த பொழுதிலும் மக்களின் குடும்ப பொருளாதார அபிவிருத்தி இன்னமும் மந்த கதியிலேயே  சென்றுகொண்டிருக்கிறது. இதையே  இத்தொடரின் முதல் பகுதிகளிலும் கூறியிருந்தேன்.

அதைத்தாண்டியும் அண்மையில் எனது மனதை சுரண்டிய அல்லது மனதிற்கு பாரமாய் அமைந்த ஒருவிடயத்தை இப்பகுதியில் பேசலாம் என முடிவெடுத்தேன். வடக்கிலே போரிற்கு பிற்பட்டகால அணுகுமுறையில் (Post Conflict Approach) மிக முக்கியமான விடயமாக அமைந்தது இந்த மீள் குடியேற்றம். ஆரம்பத்தில்  இந்த  மீள்குடியேற்றம்  பல  சவால்களை எதிர்நோக்கியது, எதிர்நோக்குகிறது. அதன்  மறுபக்கம்  வேகமான மீள்குடியேற்றத்திற்கு தடைக்கல்லாய் அல்லது முட்டுக்கட்டைகளாய் பல விடயங்கள்  அல்லது  காரணிகள்  காணப்பட்டன. இன்றும் காணப்படுகின்றன. போர்க்காலங்களிலே  அதிகமாக  விதைக்கப்பட்ட மிதிவெடிகள், இன்றும்  வடக்கில்  காணப்படுகின்ற  உயர் பாதுகாப்பு வலயங்கள், தனியார் காணிகளில் நிலைகொண்டிருக்கின்ற அரச படைகள் போன்றன அக்காரணிகள் ஆகும். இவை  இன்றும்  பல பிரதேசங்களில் மீள்குடியேற்றம் சாத்தியமாகாமல் இருப்பதற்கான காரணிகள் எனலாம். இருந்தும், இந்தவிடயங்களில்  அரசாங்கம்  பல  நடவடிக்கைகளை எடுப்பதாயும்  தெரிகிறது. இருந்தும்  அவ்  நடவடிக்கைகளை முன்னெடுத்தலில் காணப்படும் தாமதம் இன்னும் இன்னும் சில அகதிகள் தடுப்பு முகாம்களிற்கும், தற்காலிக  மாற்று  குடியேற்றங்களிற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க முடியாமலிருப்பது கவலையளிக்கும் ஒரு விடயம் எனலாம்.அண்மையில் வவுனியா மாவட்டத்தில் இருக்கும் இரு கிராமத்திற்கு சென்ற என்னை மிகவும் கவலையில் ஆழ்த்தியது அந்த கிராமத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களின் உயிர்ப்போராட்டம். இந்த  குறித்த  கிராமம் கடந்த போர்க்காலங்களில் மிகவும் உக்கிரமான போர் நிகழ்ந்த பிரதேசத்தில்  அமைந்திருப்பதோடு, மிதிவெடிகள்  அதிகம்  காணப்பட வாய்ப்பிருக்கின்ற ஓர் போர் முன்னிலைப் பிரதேசமும் ஆகும் (Front Defence Line). இந்த பிரதேசத்திலிருந்து அம்மக்கள் சுமார் பதின்மூன்று வருடங்களிற்கு முன்னரே இடம்பெயர்ந்ததாக இக்கிராமத்தின் வரலாறு சொல்கிறது. கடந்த வருடம் இக்கிராமத்தில் மீள்குடியேற்றம் நடைபெற்ற பின்னரே அக்கிராமத்தில் முழுமையான மிதிவெடி அகற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. இம்மக்கள் இங்கு குடியேறி பலமாதங்கள் கடந்தும் இன்னமும் இக்கிராமத்தில் மிதிவெடி அகற்றும் பணிகள் தொடருகின்றன.

மிதிவெடிகள் அகற்றப்படுவதற்கு முன்னரே இந்தக் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டமை இம்மக்கள் எதிர்கொள்ளும் உயிர்ப்பயத்திற்க்கான மிக முக்கியமான காரணம். தங்களது வீட்டினை சுற்றியுள்ள  மிகவும்  குறுகிய  இடம்  (வீட்டு வளவு) மட்டுமே உறுதிசெய்யப்பட்ட மிதிவெடி அகற்றல் நடைபெற்றிருப்பதாக இம்மக்கள் சொல்கிறார்கள். அதன் அர்த்தம் இந்த குறித்த வீட்டு வளவினை தாண்டி அடியெடுத்து வைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் மிதிவெடிகளால் அவர்களிற்கு ஆபத்து வரலாம். இதில் இன்னுமொரு ஆபத்தும் இருப்பதாக அங்கு மிதிவெடி அகற்றும் பணியில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். சொந்த காணிகளை தவிர்த்து வெளிப்புறங்களில் மிதிவெடி அபாயம் இன்னும் இருப்பதனால், அங்கே  நிலத்திற்கு கீழே இருக்கின்ற மிதிவெடிகள் மழையினால் ஏற்படும் வெள்ளத்தினால் காவப்பட்டு இவ் மக்கள் வாழும் காணிகளில் கொண்டுவது சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளும் இருப்பதாக சொல்கிறார்கள். இதேபோல  இக்கிராமத்திலே  இதுவரை  பல  கவச வாகனங்களை தீர்த்துக்கட்ட பயன்படும் கவச வாகன எதிர்ப்பு மிதிவெடிகள் (Anti Tanker Mines) தங்கள் மிதிவெடி அகற்றல் நடவடிக்கைகளில் சிக்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள் அங்கே மிதிவெடி அகற்றும் நண்பர்கள்.


இதன் காரணமாக பல அச்சம் தரும் சம்பவங்கள் இந்த கிராமத்திலே நடைபெற்றிருப்பதாக இம்மக்கள் சொல்கிறார்கள். அதிலும் இறுதியாக, இறுதி வாரத்திற்குள்  இரண்டு  சிறுவர்கள்  (இருவரும் 7 வயதிற்கு உட்பட்டோர்) தங்கள்  வீட்டு  முற்றத்திலே  விளையாடிக்கொண்டிருந்த பொழுது இவர்கள் கையில் இருந்த மண்வெட்டி குமித்து வைக்கப்பட்டிருந்த மண்ணின் மேல் படையில் மிதந்துகொண்டிருந்த இரண்டு மிதிவெடிகளின் மேல்  விழுந்திருக்கிறது. இதன்  போது  அந்த மிதிவெடிகளை கண்டுகொண்ட குறித்த சிறுவர்கள் அதை கையால் எடுத்து அருகில் மிதிவெடி அகற்றும் பணியாளர்களிடம் கொண்டுசென்று காட்டியிருக்கிறாகள். மிதிவெடி அகற்றும் குழுவினர் உடனடியாக அந்த சிறுவர்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தி அந்த வெடிகளை சோதனை இட்டபொழுது அதிர்ச்சியான விடயங்கள் வெளிவந்தன. அந்த குறித்த மிதிவேடிமேல் விழுந்த மண்வெட்டி இன்னும் சுமார் ஒரு மில்லி மீட்டர் ஆழமாய் விழுந்திருந்தால் அந்த மிதிவெடிகள் வெடிக்க வாய்ப்பிருந்ததாக சொல்கிறார்கள். இச்சிறுவர்கள் உயிர்தப்பியமை தங்களிற்கு மிகவும் ஆச்சரியமான விடயமாக இருந்ததாக 'அதிஷ்டம் தான்' என கூறி முடிக்கிறார்கள் அந்த மிதிவெடி அகற்றும் நண்பர்கள்.

இவ்வாறு மிதிவெடிகளின் மத்தியில் வாழும் இம்மக்களை சென்று பார்வையிடும் எந்த நிறுவனங்களும் அவர்களுக்கு தேவையான நிரந்தர வீடு மற்றும் வாழ்வாதார உதவிகள் செய்வதாய் இல்லை. காரணம், வீடு, வாழ்வாதாரம் (விவசாயம், தோட்டம்) போன்ற விடயங்களிற்கு மிதிவெடி அற்ற சூழல் மிகவும் அவசியம். இந்த  நிறுவனங்கள்  விவசாயம் செய்வதற்கு மக்களிற்கு உதவிசெய்யப்போய் அவர்களை மிதிவெடி அபாயத்தில்  சிக்கவைப்பதற்கு  விரும்பவில்லை. இது யதார்த்தமான ஒன்றுதான். ஆக, மிதிவெடி அகற்றல் பூரணமாக முடிவடையும் வரை இம்மக்களிற்க்கான எவ்வித மனிதாபிமான உதவிகளும் செயன்றடைய வாய்ப்பில்லை. இதனால் நிரந்தர வீட்டுத்திட்டங்களையும் இழக்கவேண்டிய துர்பாக்கிய நிலை உருவாகலாம்.


ஒவ்வொரு அடியிலும் தங்கள் பாதங்களிற்கு கீழ் மிதிவெடி இருக்கிறதா என்ற  பயத்தோடே  இவர்கள்  பயணம்  தொடர்கிறது. இவர்கள்  வீட்டு  வேலிகளிலே  'மிதிவெடி  அபாயம்'  பெயர்  பலகைகள்  தொங்குகின்றன. இக்கிராமத்தின் வீதியின் இருமருங்கிலும் அபாய நூல்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இவர்களைப்  பொறுத்தவரையில்  போர் முடிவடைந்ததாய் இல்லை. இன்னமும் உயிர்ப்பயத்தோடே இவர்கள் வாழ்க்கை கழிகிறது. மிதிவெடி அகற்றல் நடவடிக்கைகள் முற்று முழுதாக முடிவடைவதற்கு முதல் எதற்காய் கிராமத்திற்கு வந்தீர்கள் என கேட்டபோது "வர வைக்கப்பட்டோம்..." என்கிறார்கள் இக்கிராம மக்கள்.

இலங்கையில் மீள்குடியேற்றம் அரசியல் அல்ல என்பதை நாம் இன்னமும் நம்புகிறோம்!முன்னைய பகுதிகளைக் காண;

வடக்கில் மனிதாபிமானப்பணியும் மனதை சுரண்டும் வடுக்களும் - 2.

வடக்கில் மனிதாபிமானப்பணியும் மனதை சுரண்டும் வடுக்களும் - 1


Popular Posts