Friday, October 12, 2012

இராட்சசி எங்கே நீ?என்
கவிதைக்குள்ளும்
வசிக்கத் தெரிந்தவள் நீ!

என்
மூச்சுக்காற்றிற்குள்ளும்
முடிச்சிடத் தெரிந்தவள் நீ!

எனது
அழுகைக்கு
அஸ்திவாரம் இட்டவள் நீ!
புலம்பலுக்கும்
புகலிடம் கொடுத்தவள் நீ!

நான் வரைந்த
நீளப்படத்திற்கு
நிறம் கொடுத்தவளும் நீ!
தரம் கொடுத்தவளும் நீ!

கனவில் வந்துபோன
கலியாண காவியத்தின்
நாயகி நீ!
நினைவெங்கும் நீண்டுபோன
நிஜமற்ற கானலின்
நீர்த்துளி நீ!

எல்லாமாய் எழுந்துநின்ற
என்வாழ்க்கை எந்திரத்தின்
மூலம் நீ!
எதுவரை ஓடினும்
இவ்வுலக இன்பத்தின்
பாலம் நீ!

இருப்பினும்,
தேர் ஏறும் நேரமதில்,
தெய்வத்தை களவாடிப்போன
இராட்சசி எங்கே நீ?

Saturday, October 6, 2012

சுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்!

வணக்கம்  நண்பர்களே. அண்மையில்  எனது  தேடலில் கிடைத்த  ஒரு அசத்தலான  மற்றும்  ஆச்சரியமான  விடயம்  இன்றை  உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறேன். காசேதான் கடவுளப்பா என்பது ஏழைகளுக்கு மட்டுமல்ல பணக்காறர்களுக்கும் இன்று பொருத்தமான ஒன்றுதான். இன்றெல்லாம்  அதிகமாக  பணமே  அனைத்தையும்   தீர்மானிக்கிறது. பணத்திற்காகவே வாழ்க்கையில் அதிகம் ஓடவேண்டியிருக்கிறது. அதுவும் இல்லையெனில் வாழ்கையில் ஒரு அவசரமான தேடலே இல்லாமல் போய்விடும்.

சரி விடயத்திற்கு வருவோம். உலகில் இருக்கின்ற பணக்கார நாடுகளில் 'அமைதியான பணக்கார நாடு' என சொல்லப்படுவது புரூனே (Brunei). பணத்தின் மேலே தூங்கும் ராயல் அரச குடும்பங்களில் புருனேயின்  சுல்தானும் குடும்பமும் ஒன்று. தற்போதைய  புருனேயின்  சுல்தானாக  இருப்பவர் ஹசன்னல் போல்கியா (Hassanal Bolkiah). இவர் புரூனியின் 29ஆவது சுல்தான்.


உலகின் தற்போதைய முதல் பத்து பணக்கார அரச தலைவர்களின் பட்டியலில்  முதல்  இடத்தில்  இருப்பவர்  இவர்தான். இவருடைய  தற்போதைய  சொத்து மதிப்பு 22 பில்லியன் அமெரிக்க டாலர். அதாவது இந்தத்தொகை இங்கிலாந்து மகாராணியாரின் சொத்தின் 36 மடங்கு அதிகம்! இவர் ஒரு வாகன விரும்பி. கார்  மற்றும்  ஏனைய  வாகனங்களை  அதிகம் விரும்பும் ஒருவர். இவரிடம்  இருக்கும்  மொத்த சொந்தக்  கார்களின்  எண்ணிக்கை  என்ன  தெரியுமா? 1,932!! உலகின்   முகப்பிரபலமான, விலை மதிப்புள்ள சகல  ரகக் கார்களும்  இவரிடம்  உண்டு. இவரிடம்  உள்ள  கார்களை  ஒவ்வொரு நாளைக்கு  ஒன்றாய்  பயன்படுத்துவதாயின்  இதற்கே 20 ஆண்டுகள் எடுக்கும். 

இவரிடமுள்ள கார்களின் பட்டியலைக் கொஞ்சம் பாருங்கள்.

Rolls Royce’s - 604 Nos
Mercedes-Benzes - 574 Nos
Ferraris - 452 Nos
Bentleys - 382 Nos
BMWs - 209 Nos 
Jaguars - 179 Nos
Koenigseggs - 134 Nos
Lamborghinis - 21 Nos
Aston Martins - 11 Nos 
SSC - 1 No 

அவ்வ்வ்வ்... வாயை கொஞ்சம் மூடுங்கோ!

இத்தனை கார்களையும் எங்குதான் நிறுத்தி வைத்திருக்கின்றனர் என்று பார்த்தால் இவரது ஐந்து சொந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தோடு சேர்ந்த விசாலமான கட்டடத்தினுள்ளேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகை கார்களுக்கும் ஒவ்வொரு பகுதி இந்த கட்டடத்தினுள்ளே இருக்கிறது.கார் விரும்பிகளிற்கு இந்த இடம் ஒரு  சொப்பனமாகவே இருக்கும்.

இவர் பாவிக்கும் சகல பொருட்களும் தங்கத்தாலானவையாகும். இவருடைய உணவருந்து கரண்டி கூட தங்கத்தினாலேயே உருவாக்கப் பட்டிருக்கிறது. ஏன் இவர் அணியும் ஆடைகளில் கூட பொத்தான் போன்ற பல விடயங்கள் தங்கத்தினாலேயே செய்யப்பட்டிருக்கிறது.


சுல்தானின் வாசஸ்தலம்:

உலகின் அதிக விசாலமான அதிக சொகுசு நிறைந்த மாளிகையாக இவரது வாசஸ்தலம் விளங்குகிறது. இந்த மாளிகையில் 1788 அறைகள் இருக்கின்றன. அத்தோடு இங்கு காணப்படும் தளபாடங்களில் தங்கம் மற்றும் இரத்தினக் கற்களிலான வேலைப்பாடுகள் நிறைந்திருக்கின்றன. இந்த மாளிகையில் இருக்கும் தனிப்பட்ட வாகனத் தரிப்பிடத்தில் 110 கார்கள் நிறுத்திவைக்க முடியும்.
சுல்தானின் விமானம்:
 
இவரிடம் ஐந்து சொகுசு விமானங்கள் இருந்தாலும் Boeing 747 எனப்படுகின்ற அதி சொகுசு விமானமே இவராலும் இவர் குடும்பத்தாலும் அதிகம் பிரயானத்திற்காய் பயன்படும்  விமானமாகும். உலகத்திலுள்ள அதி சொகுசு விமானம் என்கின்ற பெருமையையும் இதுவே பெறுகிறது. இவ்விமானம் நூறு மில்லியன் டாலர் பெறுமதியைக் கொண்டது என்றாலும் இந்த விமானத்தின் உட்புறத்தை சொகுசு வீடு போன்று ஆக்குவதற்கு நூறு மில்லியன் டாலர்கள் செலவாகியிருக்கின்றன. இவற்றைத்தவிர அவரிடம் மேலும் நான்கு விமானங்களும் இரண்டு உலங்கு வானூர்திகளும் இருக்கின்றன. இவரது அதிசொகுசு Boeing 747 இன் படங்கள் இதோ,
 
 
மேலே உள்ள படங்களில் தங்க நிறத்தில் தெரிபவை எல்லாம் சந்தேகமே வேண்டாம் தங்கம் தான்!


சுல்தானின் கார்களில் ஒன்று:

கீழே காணப்படும் இந்தக் கார் சுல்தானின் விசேட வேண்டுகோளிட் கிணங்க Rolls Royce கார் கம்பனியால்  விசேடமாக தயாரித்த கார் ஆகும். இது இப்பொழுது  லண்டனில்   இருக்கிறது. சுல்தானின்  பிரித்தானிய விஜயங்களின் போது  பயன்படுத்துவதற்காய் இந்த கார் லண்டனில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

சுல்தானின் மகனின் திருமணம்:

சுல்தானின் மகனின் திருமணம் இடம்பெற்ற வேளையில் இத்திருமண கொண்டாட்டங்கள் 14 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன. இத்திருமண கொண்டாட்டங்களுக்கான  மொத்த  செலவு  வெறுமனே  5 மில்லியன் டாலர்ஸ்.  (சப்பா...). இத்திருமண  25 நாட்டுத் தலைவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

ரொம்பக் குடுத்துவச்சவன்யா நீயி! அப்பிடி ஒரு அப்பாக்கு மகனாயும் இப்பிடி ஒரு பிகருக்கு புருசனாயும் .......இங்க இவ தலமேல நீட்டிக்கிட்டு இருக்கிறது எல்லாம் தங்கமுங்க தங்கம்!!

இந்த வாகனத்தில தெரியிறதுகூட தங்கம்தான்!!

சுல்தானின் முக்கியமான சமாச்சாரம்:

முக்கியமான சமாச்சாரம் என்றாலே அது சம்சாரம் தானே! இதுவரை சுல்தானிற்கு மூன்று மனைவிமார். கனக்க ஜோசிக்காதேங்கோ மக்கள்ஸ், இவரிடம் இருக்கும் கார்களின் எண்ணிக்கையைப் போல மனைவிமாரின் எண்ணிக்கையும் இருக்கும் எண்டுதான் நானும் நெனச்சேன்.. பட் அந்த விசயத்தில இந்த ஆளு ரொம்ப நல்லவரு. மூணோட நிறுத்திட்டாரு!

Raja Isteri Pengiran Anak Saleha - 1965 - Present.

Pengiran Isteri Hajah Mariam - 1982 -2003

Azrinaz Mazhar Hakim - 2005 - 2010

அப்பாடா! இந்த பில்லியனில் தூங்கும் சுல்தான் பத்தி எனக்கு தெரிஞ்சதை எல்லாம் உங்களுக்கும் சொல்லி முடிச்சாச்சு.. சரி வரட்டா ........


Tuesday, October 2, 2012

சாதீ - மனிதம் மீதான தீட்டு!


மனித  வாழ்க்கை  திடமான  எதிர்பார்ப்புக்களைக்  கடந்தது. நிரந்தரமற்ற ஆசைகளைக்  கொண்டது. எதுவும் நடக்கலாம் என்கின்ற  எடுகோளில்  செல்வது.   மண்மேட்டின்மேல்  கட்டப்பட்டது  இந்த  வாழ்க்கை. இன்று மட்டுமே உண்மை என்ற யதார்த்தவியல் பயங்கரத்திற்கு ஆளானது இந்த வாழ்க்கை. அதிலும், உயிர்  இருக்கும்  வரை  மட்டுமே  எமது  ஆசைகளும் எதிர்பார்ப்புக்களும்   வேண்டுதல்களும்   உயிர்வாழ  முடியும்.  இப்படிப்பட்ட ஒரு மண் குதிரைச்  சவாரியே இந்த மனித வாழ்க்கை.

அப்படியிருக்க, இந்த  வாழ்க்கையில் பலவகையான பிரித்தல் கோட்பாடுகள் மனிதனால் மனிதனிற்கு நடாத்துவிக்கப் படுகின்றன. மனிதர்களை இனம், மொழி, கலாச்சாரம், நிறம், சமயம் என பல மனிதனால் உருவாக்கப்பட்ட பிரிதகடுகள்  பிரித்துக்  காட்டுகின்றன. இதனால்தான்  மனிதன் ஒவ்வொருத்தரிற்கும் ஒரு தனித்துவம் இருப்பதாக நாமே  சொல்லிக்கொள்ளுகிறோம்.  இந்த  பிரி-கோட்பாடுகள்  எம்மாலேயே  உருவாக்கப்பட்டன என்பதை நாம் என்றுமே உணர்ந்ததில்லை. உணர்ந்தாலும் அதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. காரணம் இது எமது மரபணுக்கள் போல எமது மூதாதேயரிடமிருந்தே பக்குவமாக நமக்கும் கடத்தப் பட்டு விடுகின்றன. இவை இருக்க, இந்த மனிதர்களை பிரித்துப் பார்க்கும் பல விடயங்களில் சமூகம், மூட நம்பிக்கை, சிறுமைக் கலாச்சாரம், குறுகிய  வட்ட  விழிப்புணர்வு  சமுதாயம், திருத்திக்கொள்ளப்படாத  அடிமட்ட  பழமைவாத   வாழ்க்கைப்  பின்னணி  போன்ற காரணிகளும்  மிக முக்கிய பங்காற்றுகின்றன. இந்த காரணிகளால் உருவாக்கப்பட்ட ஒரு விடயமே இந்த சாதி எனப்படுகின்ற 'தொழில் சார்' பாகுபாடு.

சாதி எனப்படுவது அதிகமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் வளர்த்துவிடப்பட்ட பிறப்பின் அடிப்படையிலான ஒரு வேலைப் பிரிவினையே. இவை  தொழில்  சார்  பிரிப்பு  என்பதால்  அந்தந்த தொழில்களிற்கு  ஏற்றாற்போல்  'தூய்மை', 'தீட்டு' வரையறை  செய்யப் படுகின்றன. இதனால்  பல  சமூகங்கள்  ஒரு  வட்டத்தினுள்ளே  அடக்கி வைக்கப்பட்டு விடுகின்றன. இந்த  சாதிப்  பிரிவினையின்  தோற்றம் மரபு, தொழில், சமயம், அரசியல், இனம்  மற்றும்  படிமலர்ச்சிக்  கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தோற்றம் பெற்றதாய் சொல்லப்படுகிறது.

சாதி பற்றி ஈழத்தில் பேசப்படும் பொழுது சுயமாகவே ஞாபகத்திற்கு வரும் பிரதேசங்கள் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைதிவு. ஒப்பீட்டளவில் இந்த பிரதேசங்களிலேயே அதிகமான சாதி வாதம் இன்னும் பேசப்படுகிறது.  அதிலும்  யாழ்ப்பாணம்  பற்றி  அதிகம்  குறிப்பிடலாம். 36 வகையான சாதிகள் யாழ்ப்பாணத்தில் இன்னும் நடைமுறைப் பேச்சில் இருப்பதாக  சொல்லப்படுகிறது. சாதிகள்  எப்பொழுதுமே  இந்த  'தூய்மை', 'தீட்டு' போன்ற இரண்டு காரணிகளாலேயே வெளிக்காட்டப்படுகின்றன.

சாதி என்பது ஒருவரின் பிறப்பைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. அதாவது ஒருவன் எத்தொழில் புரியும் பெற்றோரிற்கு பிறக்கின்றான் என்பதில் இருந்துதான் இந்த சாதி அவனை ஒட்டிக்கொள்கிறது. குறைந்த சாதியில்  பிறந்த  ஒருவன்  சமூகத்தில்  மேலிடத்தில்  (படிப்பு, அந்தஸ்து, கௌரவம், பதவி  ரீதியில்) இருந்தாலும் கூட அவனுடைய சமூக அந்தஸ்து அவன் நேரடியாக சார்ந்திராத அவனது தந்தை அல்லது தந்தை தாய் வழி  மூதாதேயரின்  தொழில்  ரீதியான  சாதியின்  அடிப்படையிலேயே தீர்மானிக்கபடுகிறது. இந்த  சாதிப்  பிரிவினை  ஒரு  வெறியாகவே இப்பொழுது  மாறியிருக்கிறது. மனிதரை  மனிதனாக  ஏற்றுக்கொள்ளாத இந்த சாதிப் போக்கே மனிதாபிமானத்திற்கான முதல் எதிரி எனலாம்.ஒவ்வொரு சமூக நிகழ்ச்சித் திட்டங்களிலும் இந்த சாதி ஒரு பெரும் பங்காற்றுகிறது. முன்னைய  நாட்களோடு  ஒப்பிடும்  பொழுது  சமூக விடயங்களில் இந்த சாதியின் பங்கு அல்லது சாதியின் பிரசன்னம் குறைந்து காணப்பட்டாலும் திருமணம் என்கின்ற சமூக நிகழ்ச்சியில் இந்த சாதியின் பங்கு இன்னும் அதிகரித்தே காணப்படுகிறது. சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்யும் முறைமை இன்னும் எக்காரணியைக் கொண்டும் மாற்றம் பெறவில்லை. அப்படி  நடந்தால்  அது  ஒரு  குறித்த சாதியைச்சேர்ந்த சமூகத்திற்கு எதிரான துரோகமாகவே கருதப்படுகிறது. அவ்வாறான துரோகிகளை அந்த சமூகம் ஒதுக்கியே வைக்க முடிவு செய்கிறது. அதிலும்  அதிகம்  பாதிக்கப்படுவது  குறைந்த  சாதியைச் சேர்ந்தவர்கள்தான். எமது  சமூகங்களிற்குள்  இந்தப்  பிரச்சனை  இன்னும் களையப்படாமல் இருப்பதற்கு இன்னுமொரு காரணம், பல கிராமங்களில் உயர் சாதியினரும் தாழ்ந்த சாதியினரும் சேர்ந்தே வசிப்பது. இதுவே இந்த சாதி தொடர்பான முரண்களுக்கு அதிகம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்  காரணி  எனலாம். குறைந்த  சாதியை  'தீட்டாக' நினைக்கும் 'உயர்ந்த' சாதியினர்  அவர்களை  எல்லா  விடயங்களிலும் அவர்களுக்கு  குறைந்தவர்களாகவே  கருதுகிறார்கள். இது  முட்டாள் தனமான, பிற்போக்கு  நிலை  என்றாலும்  அதை  மாற்றுவதற்கு இளையவர்கள்  கூட  முயற்சிப்பது  இல்லை. முயற்சித்தாலும்  அது பெரியவர்களின் முன் கெட்ட கனவாகவே போய்விடுகிறது.

அண்மையில்  நான் சந்தித்த இரண்டு மனிதர்களைப் பற்றி நிச்சயம் கூறியே ஆகவேண்டும். ஒருவர் ஒரு கிறீஸ்தவ பாரிதியார். இரண்டாவது நபர் ஒரு கிராம  சேவையாளர். இவர்கள்  இருவரும்  சமூகத்தின்  மிகவும் கௌரவமான, முக்கியமான நிலையில் இருந்தாலும் அவர்களை அவர்கள் குடும்பப் பின்னணி உண்மையான அவர்கள் முகத்தை காட்டிவிடுகிறது.

மன்னாரிலே ஒரு கிராமத்திலே சமயப் பணிக்காய் சேவையாற்ற வந்த அந்த பாதிரியார் ஒரு உயர் சாதியைச்சேர்ந்தவர் எனச் சொல்லப்படுகிறது. அந்த கிராமத்திலே இரண்டு சாதியைச்சேர்ந்த மக்கள் வாழுகிறார்கள். ஒரு சாதியினர் உயர்ந்த சாதி எனவும் மற்றைய சாதியினர் தாழ்ந்த சாதி எனவும் சொல்லப்படுகிறது. அந்த உயர்ந்த சாதியையே இந்த பாதிரியாரும் சார்ந்தவர். அந்தக்  கிராமத்திலே  இருக்கின்ற  தேவாலயம்  சார்ந்த கடமைகளில் இந்த இரண்டு சாதியினருமே சமமாக (ஓரளவேனும்) ஈடுபட்டு  வந்திருக்கின்றனர்  இறந்த  காலங்களிலே. இந்த  குறித்த குருவானவர் அந்த கிராமத்திற்கு வந்ததிலிருந்து இந்த இரண்டு சாதியினரிற்கும் இடையில் முரண்பாடுகள் வர ஆரம்பித்து விட்டதாக சொல்கிறார்கள் அந்த  கிராமத்து  மக்கள். உயர்ந்த  சாதியினறிற்கு  ஆலய பரிபாலனங்களில் கொடுக்கப்படும் முன்னுரிமை, அவர்களுடன் அவர் வைத்திருக்கும் சிறந்த நட்பு, அவர்கள்  வீடுகளில்  மட்டும்  இவர்  உணவு, தண்ணீர்  அருந்தும்  வழக்கம், ஆலய  விடயங்களில்  கூட  தாழ்ந்த சாதியினறிற்கு காட்டப்படும் பாரபட்சம், தாழ்ந்த  சாதியினரிற்கு  எதிராக உயர்ந்த சாதியினர் மேற்கொள்ளும் பௌதீக, சாத்வீக வன்முறைகளுக்கு துணைபோதலும், அறிவுரை  வழங்குவதும்  என  பலதரப்பட்ட முறைப்பாடுகள் இந்த பாதிரியாறிற்கு எதிராக இந்த தாழ்ந்த சாதியினரால் முன்வைக்கப் படுகின்றன. அதிலும் ஆலய, சமய அனுஸ்தானங்களிலும் குறித்த குருவானவர் சாதி பார்ப்பதாகவும் கூறப்படுவது மிகுந்த மனவேதனையைக் கொடுத்தது.

அதிலும், ஒப்பீட்டளவில், குறித்த கிராமத்தில் இந்த குறைந்த சாதி  மக்கள் கூட்டத்தினர் மத்தியிலேயே அதிகமான படித்தவர்களும், கல்விமான்களும், அரசாங்க  திணைக்களங்களில்  பணியாற்றுவோரும், உயர்ந்த  பதவிகளில் இருப்போரும்  இருக்கின்றனர்  எனத்  தெரியவருகிறது. அப்படி  இருந்தும் உயர்ந்த சாதியினரின் அடிமைப்படுத்தலிற்கு தீர்வு கிடைக்கவில்லை என்பது இந்த சாதி தொடர்பான வலுவை சிறப்பாகக் காட்டிநிற்கிறது.

இந்த சம்பவத்தையும் குறித்த மத குருவானவரையும் இங்கே குறிப்பிட்டதில்  மிக  முக்கியமான  காரணங்கள்  இருக்கின்றன. ஒன்று கல்வி, சமூக, பொருளாதார  அந்தஸ்து  போன்றன  வாழ்வை  தீர்மானிக்கின்ற இந்த காலகட்டத்தில் வாழ்வின் அந்தஸ்த்தை சாதியின் பின்னால் தேடும் பிற்போக்கான மனிதர்கள் இன்னமும் எம்மத்தியில் இருக்கிறார்கள்  என்பதையே  காட்டி  நிற்கின்றன. இரண்டாவதாக, சமூகத்தை வழிப்படுத்தவென இறைவனினால் தெரிந்துகொள்ளப்பட்ட சமயப் பாதிரியார் மீண்டும் குறித்த சமூகத்தை சாதி சகதிக்குள் கொண்டுபோய்  சேர்ப்பதை  யாரும்  ஏற்றுக்கொள்ளமுடியாது. சாதி வெறியை  மக்கள்  மத்தியில்  ஊட்டும், அல்லது  அந்த  சிந்தனைகளுக்கு ஆதரவு தெரிவித்து தூபம் போடும் இத்தகைய சமூகப் பொறுப்புடைய குருக்களை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்ளுவார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குருவாக இருந்துகொண்டு ஒரு சமுதாயம் எதை எதை எல்லாம் தாண்டி வரவேண்டுமோ அதை அதை எல்லாம்  தாண்டி  வருவதற்கு  தடையாக  இருக்கும்  இவர்கள்  இறைவன்  முன்  அந்த தூய பலிப்பீடத்தில் நின்று புனித திருப்பலி ஒப்புக்கொடுப்பதன் நியாயம் எனக்கு புரியவே இல்லை.

ஆக, சாதி  எனப்படுகின்ற  அடக்குமுறை  இப்பொழுதெல்லாம் இளையவர்களால் கொஞ்சமேனும் களையப் பட்டுக்கொண்டு வந்தாலும் அவர்களை தொடர்ச்சியாக இந்த சாதி தொடர்பாக ஊக்கப்படுத்தும், அதை தூண்டும் விதமாக செயற்படும் பெரியவர்களே அதிகம் தவறு இளைப்பவர்களாக எடுத்துக்கொள்ள முடியும். பெற்றோரின், குறுகிய, சுய, போலி அந்தஸ்த்துக்களே இன்னும் இளையவர்களையும் இந்த சாதிச் சகதிக்குள்  உழலச்  செய்கிறது  எனலாம். மனிதர்களில்  தீட்டுக்காணும்  மனிதர்கள்  அர்ச்சனையோடு  கோவில்  படி  ஏறுகையில்  அவர்கள்  கால்கள் எதற்காக கூசுவதில்லை? சாதி  என்கின்ற  ஒன்று  மட்டும்  இந்த  உலகில் 'அந்தஸ்து' என்கின்ற ஒன்றை பெற்றுக்கொடுக்க முடியுமா? மூடத்தனமான இந்த பிற்போக்குக் கொள்கைகளை இன்னும் கடைப்பிடிப்பவர்கள் தங்கள் அடுத்த  சமூகத்தைப்  பற்றி ஏன்  சிந்திப்பதில்லை?  குவளையில்  நீர் அருந்துபவனுக்கும் சிரட்டையில் நீர் அருந்தச் சொல்லி நிற்பந்திக்கப்படுபவனிற்கும் மனித உயிர் பல்வகைமையில் அப்படியென்ன வேறுபாடுகள் இருக்க முடியும்?

தங்கள் பிள்ளைகள் தொடர்பான பெற்றோரின் திருமணம் சார்ந்த தேடல்கள் அதிகம் இந்த சாதியை முன்வைத்தே தேடப்படுகின்றன. இதனால்  அதிகமான  பெற்றோர்கள்  'நல்ல'  'மனிதம்' நிறைந்த 'பொருத்தமான' மருமகனையோ மருமகளையோ பெரும்பாலும் இழந்துவிடுகின்றனர். சாதியைப் பார்த்து மட்டும் திருமணம் செய்துவைத்த தங்கள் பிள்ளைகள் மனிதமே இல்லாத அந்த துணையுடன் வாழமுடியாமல் தினம் தினம் வடிக்கும் கண்ணீர் இவர்களை ஏன் சுடுவதில்லை. சுடுவதை அனுபவித்தும் ஏன் திருந்துவதில்லை.

'திருமணம் + சாதி' மற்றும் மேலே நான் குறிப்பிட்ட ஒரு கிராம சேவகரின் சாதிவெறி போன்ற இரு பெரும் விடயங்களோடு மீண்டும் விரைவில் சந்திக்கிறேன்.
Popular Posts