நான்
அவள் அருகில்தான்
நின்றிருந்தேன்!
அவள் என்னை
நிராகரிக்கின்றாள்,
என்கின்ற
ஒற்றைக்கயிற்றில்
தொங்கிக்கொண்டிருந்தேன்!
காதல் செய்து - பின்
வாழ்க்கை செய்து
ஜெயிக்கிற தறுவாயில்
உடைந்து போனது
இந்த காதல்.
ஆணின் அழுகை
பெறுமதி அற்றது.
தெரிந்திருந்தும்
கண்ணீராய் வடித்துத்தொலைத்தது
என்
மானம் கெட்ட விழிகள்.
கொஞ்சம் அருகில் போனேன்.
அவள்
வேண்டாம் என்றாள்.
நானோ வேண்டும் என்றேன்.
இங்கும்
ராமனே தோற்றான்.
சீதை வென்றாள்.
அவள் வெறுப்பை
மூளை பொறுக்கிறது
இதயம்தான் வெறுக்கிறது!
ஒவ்வொரு முறை
வேண்டாம் என்றபோதும்
என் அடிமூச்சு
கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தது
பிடிமானம் அற்ற
அண்டை வெளியில்.
என்னை மறந்து
இன்னொருத்தியைப் பற்று
என்கிறாள்.
கயிறைப் பறித்து
ஊஞ்சலை ஆடச்சொல்லுவதன்
அர்த்தம் புரியவில்லை
எனக்கு.
அவள் காதலில்
போதையுற்றிருந்தது
எனது மனம்.
அவள் பார்வையில்
கிறுக்குப் பிடித்திருந்தது
எனது விழிகள்.
அவள்
அன்பிலும் - செல்ல
வம்பிலும்
காணமல் போயிருந்தது
என் இதயம்.
அவள் ஸ்பரிசங்கள்
தின்று தீர்த்திருந்தன
எனது கற்பை.
அவள் கனவுகள்
கடித்துக் குதறியிருந்தன
எனது இரவுகளை.
அவளை
முற்று முழுதாக
போர்த்தி இருந்தது
எனது ஆசை.
இதனால்தான்,
அவள் வேண்டும் என
கண்ணீரோடு
கெஞ்சிக் கொண்டிருந்தது
உயிர் அறுந்த
என் நாவு.
அவளில்தான் வாழ்கிறேன்!
என்னையே என்னால்
நினைக்க முடிவதில்லை.
அவளை மட்டும்
மறக்கச்சொல்லுகிறாள்
மனச்சாட்சியைத் தொலைத்து.
நெருங்க முயன்ற என்னை
இடியைத் தள்ளுவது போல்
தள்ளுகிறாள்
இடிதாங்கி!
நீ இன்றேல்
இறப்பேன் என்றேன்.
நீ போனால்
மரிப்பேன் என்றேன்.
நீ கலைந்தால்
கரைவேன் என்றேன்.
நீ வெறுத்தால்
வேகுவேன் என்றேன்.
நீ மறுத்தால்
மடிவேன் என்றேன்.
அனைத்திற்கும்
அவளிடமிருந்து
ஒரே பதில்
"வீட்டில் எனக்கு
கலியாணம் பார்க்கிறார்கள்!"
7 comments:
அழகான கவிதை..ரொம்ப நீளமானதும் கூட
ரொம்ப நன்றி பாஸ்..
நீளமான கவிதைதான் என்றாலும் முடிந்து விடப்படாது என்ற ஆசையிலே படித்தேன் .... திகட்ட திகட்ட காதல் (கவிதை) தருகிறீர்கள் அமல் அண்ணா :))))
ஹும்..... நீங்கள் ஒரு குட்டி தபு சங்கர்
Arumai nanba..
Post a Comment