Saturday, September 29, 2012

ஒரு மூடப்பட்ட தேசம்!

அது ஒரு
அனாதைகள் அற்ற மண்.
பதாதைகள் ஏந்தி
பழக்கப்படாத தேசம்.
ஆயுதத்தோடு
போராட பழக்கிக் கொண்டாலும்
மறியல் போராட்டங்கள் இல்லை.
கடவுளை வழிபட்டாலும்
மனிதத்தில் நம்பிக்கை
வைத்திருந்த ஜனங்கள்.
காணிகளை
வேலிகள் கூட
காவல் காத்திருக்கவில்லை.
வேட்கை
வெயிலாய் படர்ந்திருந்தது.
தமிழன் சுயம்
தனித்தே நின்றது.
மனிதர்கள்
மிதிக்கப்படவில்லை.
மரங்கள் கூட மதிக்கப்பட்டன.
ஊழல்கள் இல்லை
தேர்தல்கள் கூட இல்லை
இருந்தும்
மக்கள் ஆட்சியே நடந்தது.
அந்த மண்
இரத்தத்தில்
தோய்க்கப் பட்டிருந்தாலும்
இரக்கம் என்றுமே தூங்கியதில்லை.
பெண்களுக்கும்
அவர்கள்
கற்புக்களிற்கும்
காவல் பற்றி
என்றுமே கவலை இருந்ததில்லை.
விலங்குகள் கூட
பெண்களை முட்ட
பெரும்பயம் கொள்ளும்.
கன்னிப்பெண்கள் - பிறர்
கண்களில் கூட
களங்கம் கொள்ளவில்லை.
தாடி இல்லாமல் கூட
அங்கு
சேகுவேராக்கள் இருந்தார்கள்.

இப்பொழுது,
இந்த தேசம்
மூடப்பட்டிருக்கிறது.
சுதந்திர வேட்கையும்
சுடுகாட்டு வாசமும்
சிந்தப்படாமல் இருக்கட்டும்
என்பதற்காய்!

Wednesday, September 19, 2012

கண்ணீருக்கான கவிதை!!நான்
அவள் அருகில்தான்
நின்றிருந்தேன்!

அவள் என்னை 
நிராகரிக்கின்றாள்,
என்கின்ற
ஒற்றைக்கயிற்றில்
தொங்கிக்கொண்டிருந்தேன்!

காதல் செய்து - பின்
வாழ்க்கை செய்து
ஜெயிக்கிற தறுவாயில்
உடைந்து போனது
இந்த காதல்.

ஆணின் அழுகை
பெறுமதி அற்றது.
தெரிந்திருந்தும்
கண்ணீராய் வடித்துத்தொலைத்தது
என்
மானம் கெட்ட விழிகள்.

கொஞ்சம் அருகில் போனேன்.
அவள்
வேண்டாம் என்றாள்.
நானோ வேண்டும் என்றேன்.
இங்கும்
ராமனே தோற்றான்.
சீதை வென்றாள்.

அவள் வெறுப்பை
மூளை பொறுக்கிறது
இதயம்தான் வெறுக்கிறது!

ஒவ்வொரு முறை
வேண்டாம் என்றபோதும்
என் அடிமூச்சு
கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தது
பிடிமானம் அற்ற
அண்டை வெளியில்.

என்னை மறந்து
இன்னொருத்தியைப் பற்று
என்கிறாள்.
கயிறைப் பறித்து
ஊஞ்சலை ஆடச்சொல்லுவதன்
அர்த்தம் புரியவில்லை
எனக்கு.

அவள் காதலில்
போதையுற்றிருந்தது
எனது மனம்.
அவள் பார்வையில்
கிறுக்குப் பிடித்திருந்தது
எனது விழிகள்.
அவள்
அன்பிலும் - செல்ல
வம்பிலும்
காணமல் போயிருந்தது
என் இதயம்.
அவள் ஸ்பரிசங்கள்
தின்று தீர்த்திருந்தன
எனது கற்பை.
அவள் கனவுகள்
கடித்துக் குதறியிருந்தன
எனது இரவுகளை.
அவளை
முற்று முழுதாக
போர்த்தி இருந்தது
எனது ஆசை.

இதனால்தான்,
அவள் வேண்டும் என
கண்ணீரோடு
கெஞ்சிக் கொண்டிருந்தது
உயிர் அறுந்த
என் நாவு.

அவளில்தான் வாழ்கிறேன்!
என்னையே என்னால்
நினைக்க முடிவதில்லை.
அவளை மட்டும்
மறக்கச்சொல்லுகிறாள்
மனச்சாட்சியைத் தொலைத்து.

நெருங்க முயன்ற என்னை
இடியைத் தள்ளுவது போல்
தள்ளுகிறாள்
இடிதாங்கி!

நீ இன்றேல்
இறப்பேன் என்றேன்.
நீ போனால்
மரிப்பேன் என்றேன்.
நீ கலைந்தால்
கரைவேன் என்றேன்.
நீ வெறுத்தால்
வேகுவேன் என்றேன்.
நீ மறுத்தால்
மடிவேன் என்றேன்.
அனைத்திற்கும்
அவளிடமிருந்து
ஒரே பதில்
"வீட்டில் எனக்கு
கலியாணம் பார்க்கிறார்கள்!"


வடக்கில் மனிதாபிமானப்பணியும் மனதை சுரண்டும் வடுக்களும் - 2.

 

வணக்கம்  நண்பர்களே, இந்தத்தொடரின்   இரண்டாவது  பகுதி  இது. இரண்டாவது  பகுதியை  எனது  அடுத்த  களப் பயணத்தை  முடித்துக்கொண்டு பதிவிடலாம்  என்றால், இல்லை. அதன்  தேவை  இப்பொழுதே  உணரப்பட்டு விட்டது என்னால். அதற்கு  காரணம்  இன்றைய  இணையத்தளம்  ஒன்றில் நான் பார்த்த ஒரு செய்தி.

இப்பொழுது  ஐ நாவின்  உயர்மட்டக்  குழுவினர்  வடக்கிற்கான  பயணத்தை மேற்கொண்டு, அங்கு  நடைபெற்று  வரும்  மீள்  கட்டுமானம், அபிவிருத்தி, மக்களின்  வாழ்வாதார  மீள்  கட்டுமானம், கண்ணிவெடி  அகற்றல்  போன்ற மனிதாபிமான  நடவடிக்கைகளை  பார்வையிடுகின்றனர். இவர்களின்  இந்த பயணத்திற்கான  நோக்கமும்  இதுதான். இவ்வாறு  வடக்கிற்கு  வருகைதந்த இவர்களின் கருத்து தொடர்பாக வெளியான ஒரு செய்தி இதோ,

"கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்றம் கண்ணிவெடி அகற்றல் அபிவிருத்தி சட்ட அமுலாக்கல் மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்து ஐ.நா பிரதிநிதிகள் கேட்டறிந்து கொண்டதாகவும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்ததாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்."

என்னைப்பொறுத்தவரையில் வடக்கில் நடைபெறும் அபிவிருத்திப் பணிகளை இரண்டு  விதமாக  பிரித்து  பார்க்க  முடியும். ஒன்று  அபிவிருத்தி அடைந்துவரும்  பௌதீக  வளங்கள், இரண்டாவதாக  அபிவிருத்தி அடைந்துவரும்  மக்கள்  பொருளாதாரம்  அல்லது  வாழ்வாதாரம். இரண்டும் இரு  வேறு  விடயங்கள். மனிதாபிமானப்  பணிகளிலே இந்த  இரண்டும்  மிக மிக  முக்கியம். இதிலே  இந்த ஐ நா  பிரதிநிதிகளும்  வடக்கிற்கு  விஜயம் செய்யும்  ஏனைய  சர்வதேச  அமைப்புக்களும்  எந்த  அபிவிருத்தி  திருப்தி கரமானதாக  இருக்கிறது  என்கிறார்கள்  என்பது  எனக்கு  மட்டுமல்ல  இங்கு அதிகம் பேரிற்கு  புரிவதில்லை. காரணம்  வடக்கில்  இதுவரை  நடைபெற்ற அபிவிருத்திப்  பணிகளில்  இந்த  இரண்டு  பகுதிகளிற்கும்  மிகப்  பெரிய வேறுபாடு  இருக்கிறது.

உண்மைதான். பௌதீக  கட்டுமானங்கள்  ஓரளவு  அபிவிருத்தி  செய்யப் பட்டிருக்கின்றன  அல்லது  செய்யப்பட்டுக்கொண்டு  வருகின்றன. வீதிகள், பாலங்கள், பொதுக்  கட்டிடங்கள்  என  அவை  நீள்கின்றன. இதை  மட்டும் வைத்துக்கொண்டு  வடக்கின்  மக்கள்  மீண்டும்  சுபீட்சமாக  சந்தோசமாக வாழ்கிறார்கள்  என்று  சொல்லிவிட  முடியுமா? மாறாக  அவர்களின் பொருளாதார, வாழ்வாதார, சமூக  விடயங்கள்  எந்தளவிற்கு அபிவிருத்தியை  நோக்கிப்  போகிறது என்பதை பார்க்க வேண்டாமா?

அதிகமான  இடங்களில்  மக்களின்  வாழ்வாதார  பொருளாதார  தேவைகள் முற்று  முழுதாக  தீர்க்கப்பட்டதாய்  இல்லை. இவர்களின்  தேவை  மட்டில் அரசாங்கம் மற்றும் இதர அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ன செய்கின்றன? இவற்றையும்  இந்த  ஐ நா  குழு  ஆராய்ய  வேண்டுமே. மக்களின் குடும்ப பொருளாதாரம் எந்தவொரு அபிவிருத்தியையும் காணாமல் பௌதீக கட்டுமானங்கள் மட்டும் அபிவிருத்தி அடைவதை  உண்மையான வடக்கின் அபிவிருத்தி என சொல்ல முடியுமா?

வீடு முன்னேறினால்  நாடு  தானாகவே  முன்னேறும்  என்பார்கள். மக்களை சுயாதீனமாக  பாதுகாப்பு  விடயத்திலும், பொருளாதார  சமூக விடயங்களிலும் அவர்களது சொந்தக் கால்களில் நிற்கும் அளவிற்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் மட்டுமே வடக்கின் நிரந்தரமான சரியான  அபிவிருத்தி  என  நான்  நினைக்கிறேன். மக்களையும்  அவர்கள் அடிப்படை தேவைகளையும் புறம்தள்ளி மேற்கொள்ளப்படும் எந்தவிதமான இதர அபிவிருத்திகளும் வடக்கை அவ்வளவு சீக்கிரம் பழைய நிலைமைக்கு கொண்டுவரும் என சொல்ல முடியாது.

அனுபவம் தொடரும்...

Tuesday, September 4, 2012

இரசனை உள்ளவர்களுக்காக 2 - Alizee, ஸ்ரேயா கோஷல், நரேஷ் ஐயர்..


வணக்கம் நண்பர்களே. இது நான் ரசித்தவற்றை கொண்டு உங்கள்  இரசனைகளிற்கும்  தீனி போடும் இரசனை உள்ளவர்களுக்கு என்ற தொடரின் இரண்டாம் பாகம்.

இந்தத்தடவை இன்னும் வித்தியாசமான இரு விடயங்களுடன் வந்திருக்கிறேன்.  இதுவும் இசை சார்ந்த இரசனைப் பதுவுதான். இருந்தும் வித்தியாசமானவை. பொதுவாக இசை, பாடல்  என்கின்ற பொழுது எல்லா  மொழிகளிலும்  திரைப்படத்தோடு வரும் பாடல்களையே  நாம்  அதிகம்  இரசிக்கிறோம். காரணம்  மிகப்  பரந்த  பொழுதுபோக்கு  அம்சங்கள்  கொண்டது இந்த திரைப்படப் பாடல்கள். இசை + காட்சி  என்கின்ற  இரண்டும்  எங்கள்  செவிகளையும்  கண்களையும் ஒரேநேரத்தில் கவர்ந்திழுக்கக் கூடியன.  இவற்றைத்தாண்டியும்  இப்பொழுதெல்லாம்   நேரடி இசை  நிகழ்ச்சிகள்  அதிகம் நடை பெறுகின்றன.  திரைப்படப்  பாடல்களாக   இருந்தாலும்  சரி,  இசைக் கோவைகளில்  வெளியான பாடல்களாக  இருந்தாலும்  சரி அவற்றை மேடைகளில்  பாடக்  கேட்கும்  போது  கிடைக்கும்  அனுபவம் இன்னொரு ரகம். இதையும் இதமாக  இரசிக்க  முடிகிறது.


அந்த வகையிலே மேடைகளில் நேரடியாக பாடப்படும் பாடல்கள் பார்வையாளர்கள்  கொண்டாடும் அளவிற்கு கொண்டு செல்வதாயின்  அந்தப் பாடல்களைப் பாடுவோரின் குரல் மற்றும் முக, உடல் பாவனைகள்  இன்றியமையாத இரண்டு காரணிகளாக இருக்கின்றன  இருக்கின்றன. அந்தவகையில்  என்னைக் கவர்ந்த இரண்டு நேரடி மேடைப் பாடல்களை இம்முறை பதிவிடுகிறேன். நீங்களும் இரசியுங்கள்.


1. மடோனாவின் பிரபல 'லா இஸ்லா பெனிட்டா..'

'லா இஸ்லா பெனிட்டா (The beautiful Island) என்கின்ற பாடல்  அமெரிக்காவின்  மிகப்  பிரபல பாடகி மடோனாவின் 1987 இல் வெளியான "True Bule" எனப்படுகின்ற  அவரின் மூன்றாவது  இசை அல்பத்தில் இடம்பெற்ற  ஐந்தாவது  பாடல்.   இந்தப்பாடலை இரசிக்காத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வாறான மிகப் பிரபலமான பாடலை ஒரு மேடை போட்டி  நிகழ்ச்சிக்காக Alizee என்கின்ற பொண்ணு பாடுகிறது. மடோனாவின் ஒரிஜினல் பாடலை விட இது செமையாய் இருக்கும் என்பதை மடோனா  கூட எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு அழகு. பாடலைப் பாடும் அழகு குரல், சின்னச்சின்ன உடல் அசைவுகள், மெதுவான அழகிய நடனம், பாடலை மெய் மறந்து மீட்டும் வாத்தியக் கலைஞர்கள் என ஏகப்பட்ட விடயம் நம்மை மெய் மறந்து இரசிக்க வைக்கிறது. நிற்சயமாக நீங்களும் ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் இதைப் பார்ப்பீர்கள்.. பாருங்களேன்.2. நரேஷ் ஐயரின் 'முன்பே வா என் அன்பே வா...'

சில்லென்று ஒரு காதல் படம் வெளியாகிய வேளைகளில் சக்க போடு போட்டு ஏன்  இப்பொழுதும் காதுகளில் இம்சை செய்யும் இரு அழகிய மெலடி இந்தப் பாடல்.. நரேஷ் ஐயர் என்கின்ற ஒரு ஆளுமையை எனக்கு இரண்டு விடயங்களிற்காக அதிகம் பிடிக்கும். ஒன்று ஒரு ஆண் செல்லக் குரல் எப்படி இருக்கும் என்பதைப் போல அழகான செல்லக்குரல் பதுமை, இரண்டாவது ஒவ்வொரு பாடலையும் இரசித்து, மெய் மறந்து பாடும் பாணி (அது ரெகார்டிங் ஆக இருந்தால் கூட).. அதேபோல அநேக இளம் பாடல் இரசிகர்களை (பையன்கள்) தனது குரலாலும் (அழகாலும்) அலைய வைத்துக்கொண்டிருக்கும் ஒரு தமிழ் பாடகி நம்ம ஸ்ரேயா கோஷேல். நானும் இதற்கு விதிவிலக்கு அல்ல.. அவரைப் போலவே அவர் குரலும் எனக்கு ரொம்ப இஷ்டம்... மேடைப் பாடல்களில் நல்லதொரு பொழுதுபோக்கு அம்சத்தை கொடுக்கக்கூடிய இந்த இருவரின் பாடல் ஒன்றை மேடையில் நேரடியாக பார்க்கும் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தால்  யார் தான் அதை நிராகரிப்பார்... இதோ, நம்ம ஸ்ரேயா கோஷேல் செல்லமும் நரேஷ் மச்சானும்...


என்னங்க, நிற்சயமாக எனது இரசனை மொக்கையாக இருக்காது என்று நினைக்கிறேன். அப்படி இருந்தாலும் தயவு செய்து திட்டித் தீர்க்க வேண்டாம்.. வரட்டா... மீண்டும் இன்னுமொரு விடயத்தோடு உங்களை இரசிக்க வைக்க வருகிறேன்.


இதன் முதல் பாகத்தை இரசிக்க இரசனை உள்ளவர்கள் மட்டும் உள்ளே வரலாம் - 01

Saturday, September 1, 2012

இரசனை உள்ளவர்கள் மட்டும் உள்ளே வரலாம் - 01

வணக்கம் நண்பர்களே. இன்று இரசிக்கத் தெரிந்தவர்களுக்காக ஒரு அழகான விடயத்தை கொண்டு வருகிறேன். திரும்பவும் இரசிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் தொடர்ந்து வாசிக்கலாம். மற்றவர்கள் திரும்பிப் போகலாம்.. ஹி ஹி ஹி...

இரசனை என்பது எல்லை கடந்தது. விசாலமானது. முடிவற்றது. எப்பொழுதும் ஒரு இன்ப உணர்வை உயிர் வழியே ஊற்றுவது. இரசனையை அதிகம் நேசிப்பவர்களுக்கு இது அருமையாய் புரியும். அதேவேளை, ஆளுக்கு ஆள் இந்த இரசனை வேறு படலாம். தப்பில்லை. அது அவரவர் விருப்புக்களைப் (interests) பொறுத்தது. மனிதனிற்கும்  விலங்குகளிற்கும் உள்ள வித்தியாசம் எனப் பேசப்படும் விடயங்களில் இது முதன்மையானது. விலங்குகளும் இரசிக்கின்றன ஆனாலும் மனிதன் அளவு இல்லை.

ஒவ்வொரு விடயங்களிலும் இந்த இரசனை எம்மை கட்டிப்போடும். சாதாரணமாக வீதியிலே நாம் நடந்து செல்லும் பொழுது எத்தனையோ விடயங்களை நாம் இரசிக்க நேர்கிறது. காலநிலை, வாகனங்கள், மனிதர்கள் (மிகவும் முக்கியமாக பிகருகள்...), கடைகள், விலங்குகள், விளம்பரங்கள் என பல.. இரசனை ஒருத்தனிற்கு  இல்லையென்றால் அவன் நடை பிணம் எனலாம். அதிலும் சாதாரணமான மனிதர்களை விட அதிகம் இரசனை கொண்டவர்களும் நம்மத்தியில் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு சின்ன விடயங்களையும் இரசிப்பவர்கள் வாழ்கையில் குடுத்து வைத்தவர்கள். காரணம் அவர்களே வாழ்கையை முழுமையாக வாழ்பவர்கள்.. (ஓவரா பேசுறேனோ..) சரி இன்றைய விடயத்திற்கு வருவோம்..

நான் அதிகம் இரசிக்கும் பல விடயங்களில் இசை, பாடல்கள் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன (பிகர்களுக்கு அடுத்த படியாக..அவ்வ்வ்வவ்). அதிலே தமிழ் சினிமா இசையைத் தாண்டி எனது இரசனை பரந்தது. இசை தேசம், மொழி என பல வரையறைகளைத் தாண்டியது. அந்தவகையில் சினிமாப் பாடல்களை தவிர்த்து (அதோடு சேர்த்து) உள்நாட்டுப் பாடல்கள், நம்மவர் இசை, பிற மொழிப் பாடல்கள், போப் பாடல்கள் என பரந்தது எனது இசை இரசனை. அதன் வழியில் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என நான் அதிகம் இரசித்த மூன்று அழகான மலையாளப் பாடல்களை இன்று உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு. எனது இரசனை ஓரளவிற்கு உங்களுடைய இரசனையோடு ஒத்துப்போகும் என்பது எனது நம்பிக்கை. சரி இனி அந்த மூன்று பாடல்களும்.

1. நெஞ்சோடு சேர்த்து பாட்டொன்னு பாடாம்....

முதலாவதாக நான் இரசிக்கும் விடயம் இந்த பாடலில் வரும் பொண்ணு.  அவள் சோம்பல் முறிப்பு தொடங்கி யாரோ வருவதை உணர்ந்து பயம் கொள்தல் வரைக்கும் அவள் அத்தனை அசைவுகளும் அழகோ அழகு. அவள் உதடு, கண் இமை, விழிகள், முடி இந்த நான்கும் அவளை அழகு ராணியாக்கும் அம்சங்கள். 3:59 மணி இடத்தில் நாக்கை கொஞ்சமாய் வெளியே நீட்டி நக்கல் செய்வது அழகின் உச்சக்கட்டம்.. சரி அதைத்தாண்டி இந்தப்பாடலின் இசை மற்றும் அதைப்பாடும் நம்ம அலாப் ராஜுவின் குரல் இன்னும் இன்னும் இந்தப் பொண்ணை சாரி பாடலை இரசிக்க வைக்கிறது. பாடல் முழுவதும் ஒரு காதல் அழகு கொட்டிக்கிடக்கிறது.. காதல் மேல் புது ஆசை வருகிறது.. சரி சரி.. பாட்டைப் பாருங்கள்...2. பறயு என் விரகமே...

இந்தப் பாடலில் வரும் பொண்ணைக் காட்டிலும் பையனையே அதிகம் இரசிக்க முடிகிறது. அழகான பையன்... உண்மையாகவே.. எத்தனை பொண்ணுங்க செத்திருப்பாங்க... ஸ்பானிஷில் கோரஸ் பாடும் மச்சான்களின் குரல் சூப்பர். இந்தப் பாடலில் வரும் அக்கா இலங்கையில் இருக்கும் ஒரு சகோதர மொழி நடிகையை ஞாபகப் படுத்துகிறார். வித்தியாசமான அழகு. அழகிய நீண்ட முகம் என்பது இதைத்தானோ?? ஒரு இடத்தில் தனியாக நடனமாடும் விதம் கொள்ளை அழகு. நான் அந்த நடனத்தை மட்டும் மீண்டும் மீண்டும் இரசித்திருக்கிறேன் பல தடவைகள். இதைப் பார்க்க பார்க்க ரொமாண்டிக் மூட் தானாகவே ஒட்டிக்கொள்கிறது... சரி இனி பாடல்.


3. என் ப்ரியனே...

இந்தப்பாடலின் முக்கியமான அழகான விடயங்கள் என்றால் அவை படமாக்கப்பட்டிருக்கும் விதம், காட்சியமைப்பு, நடிகர்களின் உடையலங்காரம், அடிக்கடி புருவத்தை உயர்த்த வைக்கும் கிடார் இசை (ஆமா அது கிட்டாரா வீணையா???), மற்றும் பாடல் டியுன்... பாடலில் வரும் காட்சிகளும் அந்த குதிரையும் அழகோ அழகு. காதலின் தேடலை மிக தத்துருவமாக காட்டியிருப்பது இரசனையின் உச்சத்திற்க்கான இன்னுமொரு காரணம். புராதன காலத்து உடையலங்காரம் ஒரு தனி அழகுதான்.. பின்புலக் காட்சிகளை இவ்வளவு அழகாக பாடல்களில் கொண்டுவரலாம் என்பதற்கும், காட்சி பாடலின் உயிரோட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதற்கும் இந்தப் பாடல் நல்ல உதாரணம் என்று நினைக்கிறேன்.சரி, அம்புட்டுத்தான்.. இன்று இறைத்தது போதும்.. மீண்டும் இன்னும் சில எனது இரசனைகளோடு உங்களைச் சந்திக்க வருகிறேன். நன்றி வணக்கம்.

கெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா?


வணக்கம்  மக்கள்ஸ், இன்றைய  காலையே  நம்  அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும் கெளதம் மேனனின் நீதானே என் பொன் வசந்தம் திரைப்படப்  பாடல்கள்  அநேகரின்  காதுகளில்  இப்போது  ஒலித்துக்கொண்டிருபதற்க்கான சாத்தியக் கூறுகளே அதிகம். இந்தப் பாடல்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாய் இருந்ததற்கான காரணங்கள் ஏராளம். பாடல்களுக்கும் காதலிற்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் கெளதம்  மேனனின்  படம். இசைஞானியின்  நீண்ட  இடைவெளிகளை தாண்டி  வரும் பாடல்கள். கெளதமின் வாரணம் ஆயிரம் ஹாரிஸ், விண்ணைத்தாண்டி வருவாயா ரகுமான் என்கின்ற வரிசையில் எதிர்பார்க்கப்படும் இளையராஜாவின் போட்டி இசை, 80 களைக் கலக்கிய இசைஞானியின் ஸ்வரங்கள் 2010 களுக்கும் ஈடுகொடுக்குமா என்கின்ற எதிர்பார்ப்புக்கள் என பல காரணங்கள்.

சரி விடயத்திற்கு வருவோம். இந்தப் படத்திலே மொத்தம் 8 பாடல்கள் இளையராஜாவின் இசையில் வெளியாகியிருக்கின்றன. இவற்றிலே நம்ம கார்த்திக்கின்  இரண்டு  பாடல்கள், யுவனின்  இரண்டு  பாடல்கள், இளையராஜாவின் ஒரு பாடல் உட்பட. மிகுந்த எதிர்பார்ப்புக்களோடு கேட்க முனைந்த என்னை அந்தளவிற்கு இளையராஜா திருப்திப்படுத்தவில்லை என்றே நான் சொல்வேன். அதிலும் நான் பாடல்களைக் கேட்கும் பொழுது அனைத்துப் பாடல்களையும் என்னை அறியாமலேயே இரண்டு விடயங்களோடு ஒப்பிட்டு பார்க்க முனைந்ததும் இதற்கு ஒரு காரணமோ தெரியவில்லை. அது என்ன அந்த இரண்டு? ஒன்று கெளதமின் வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள், இரண்டாவது அண்மையில் வெளிவந்த ஹாரிஸின் மாற்றான் பாடல்கள். சரி அது நிற்க, பாடல்கள் தொடர்பான எனது சிறு ரசனைக் குறிப்புக்கள்.

1. காற்றை கொஞ்சும் நிற்கச் சென்னேன்..
நிற்சயமாக இப்பாடலின் அநேக இடங்கள் இளையராஜாவின் 80 களின் இசையை ஞாபகப்படுத்துகின்றன. 80 களின் பாடல்களின் மிக முக்கியமான இசைக்கருவி ட்ரம்பட் இங்கு அதிகம் பாவிக்கப்படுவது இதை உறுதி செய்கிறது எனலாம். கார்த்திக்கின் குரல் வழமை போல பிரமாதம்.

2. முதல் முறை பார்த்த ஞாபகம்...
ஏதோ  யுவனின்  பாடல்   கேப்பது  போன்ற  ஒரு  அனுபவம். இது இந்தப்படத்தின் டைட்டில் சாங் மாதிரி இருக்கும். அடிக்கடி நீதானே என் பொன் வசந்தம் என வரும் கோரஸ் பிரமாதமாய் இருக்கிறது. இந்தப் பாடலை பாடியிருக்கும் சுனிதி தனது குரலால் கட்டிப்போடுகிறார். நா.முத்துக்குமாரின் வரிகளை இங்கு கொஞ்சம் ரசிக்கலாம்.

3. சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது...
யுவனின் குரலில் இந்தப் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும் போது இளையராஜாமேல் ஒரு கோவம் வரும் பாருங்க... கொஞ்சம் பின்னால் போகும்பொழுது ஏதோ மனதை கொஞ்சம் சாந்தப்படுத்தி கேட்க முடிகிறது.. எனக்கு பிடிக்கேலேங்க... சிலவேளை உங்களுக்கு பிடிக்கலாம்..

4. வானம் மெல்ல கீழிறங்கி...
நீண்ட நாட்களுக்கு பின்னர் இளையராஜாவின் குரலை கேட்கையில் மனதிற்கு ஒரு நின்மதி. நல்லதொரு மெலடி எனலாம். வழமை போலவே இளையராஜா பாடும் பாடல்களில் இருக்கும் சகல அம்சங்களும் இங்கும் இருக்கிறது. கீழ் ஸ்தாயி, வயலினின் சாம்ராட்சியம் என பல...

5. புடிக்கல மாமு படிக்கிற காலேச்...
இளையராஜாவை இந்தப்பாடலில் காண முடியவில்லை. கொஞ்சம் தனது வட்டத்தினுள் இருந்து வெளியே வந்து உருவாக்கியிருக்க வேண்டும் இந்தப்  பாடலை. சுராஜ்  ஜெகன்  மற்றும்  கார்த்திக்  சிறப்பாகவே பாடியிருக்கிறார்கள். ஆனாலும் இங்கும் அந்த சில 80 களின் சாயல் அடிக்கச்செய்வது கமலஹசனையும் கொஞ்சம் ஞாபகப் படுத்திப் போகிறது.

6. என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...
எனக்கு  மிகவும்  பிடித்த  பாடல்  இது.. சூப்பர்  மெலடி.. நம்ம  கார்த்திக் கலக்கியிருக்கிறார். பாடலின் ஆரம்பம் (இசை) அச்சொட்டாக ஒரு 80 களின் பாடல் போல தெரிந்தாலும் பின்னர் 2000 களில் வந்த ஒரு மேலோடியாய் காதுகளில் ஒலிக்கிறது.

7.  பெண்கள் என்றால் பொய்யா பொய் தானா..
வழமைபோன்ற யுவனின் பாடல் போல ஒலிக்கிறது.. யுவனின் குரல் வழமைபோலவே உச்ச ஸ்தாயியில் கலக்குகிறது. ஆனாலும், ஒரு  வேளை இது யுவனின் டியூனா இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு மட்டுமல்ல கேட்டால் உங்களுக்கும் வரும்.. ஏதோ அப்பா மகனிட்ட சுட்டமாதிரி இருக்குங்க.. போம்பிளைங்களையும் காதலையும் கிழிக்கும் நா.முத்துக்குமார் இங்கு கைதட்டல் வாங்குகிறார்.. (யார் கிட்ட செருப்படி வாங்கப்போறேனோ தெரியல..)

8. சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப் போக...
ஒரு அமைதியான இன்னுமொரு மெலடி... அழகாய் இருக்கிறது.. கெளதம் மேனனின் படங்களில் வரும் காதல் தோல்விகளின் பின்னர் அந்த பெண் பாடும் ஒரு பீலிங்கு பாடல்... இன்னுமொரு அனல் மேலே பனித்துளி.. இங்கும் 80 களின் சாயலை தவிர்க்க முடியவில்லை.. இருந்தும் 80, 2000, 2010 களின் ஒரு  கலவை  எனலாம்..  காதலில்  கோட்டை விட்ட நம்ம  பெண்களுக்கு இந்தப்பாடல் ரொம்பப் புடிக்கும்.. அட சத்தியமாங்க.

அம்புட்டுத்தான்... பாடல்கள்  நன்றாக  இருந்தாலும்  நானும் நீங்களும் எதிர்பார்த்த அளவிற்கு பல்பு தாங்க மிச்சம் கையில.. நா.முத்துக்குமாரின் வரிகளில் ஒரு வித்தியாசம் தெரிகிறது.. அடுத்து வரும் வரிகளை நம்மால் இலகுவாக  யூகிக்க  முடிகிறது.. இது  அவரின்  தோல்வியா  அல்லது வெற்றியா என தெரியவில்லை..

சரி சரி..  கனக்க  அலட்டலேங்கோ... நீங்களும்  கேட்டுப்புட்டு  வந்து நான் சொன்னது கொஞ்சமாவது சரியா எண்டு கருத்துப் போடுங்கோ..

கவனிக்க: நான்  இங்க  சொன்ன  ஏதாச்சும்  இளையராஜாவின்  விசிறிகளை நோகடித்திருந்தால் கும்புடுறேனுங்கோ.. வரட்டா...
Popular Posts