வணக்கம் நண்பர்களே. நீண்ட நாட்களின் பின்னர் ஒரு பதிவோடு வருகிறேன். கூர்மையான எழுத்தாணி இல்லையென்றால் வரலாறுகள் மறைக்கப்பட்டுவிடும். இந்த எழுத்தாணிகளை கையில் எடுப்பவர்கள் யார் எவர் என்பதை விட எதற்காக எடுக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. எல்லா வரலாறுகளும் இந்த எழுத்துக்களினாலேயே இன்னும் இந்த உலகத்தில் நிலைக்கிறது. சரி விடயத்திற்கு வருவோம்.
இலங்கையில் போரிற்கு பின்னதான மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடும் பலரில் நானும் ஒருவன். அதிலும் வடக்கில் இடம்பெறும் போரிற்கு பின்னதான மனிதாபிமானப் பணிகளிற்கு நானும் ஒரு சாட்சி. ஆகவே, வருடங்கள் கடந்து நடை போடும் இந்த மனிதாபிமானப் பணிகளில் நான் சந்திக்கும் பல சுவாரசியமான விடயங்களை தொடர்ச்சியாக பதிவிடலாம் என்பதுதான் எனது நோக்கம். நிற்சயமாக இது ஒரு சுய சொறிதலாக இருக்காது. இருக்கவும் கூடாது. வடக்கிலே மக்கள் இன்னும் அனுபவிக்கும் கஷ்டங்களை, எனது கண்கள் காணும் மனதை தொடும் விடயங்களை பதிவேற்றம் செய்வதாய் மட்டுமே இந்தத் தொடர் இருக்கும்.
அந்த வகையில் இந்த முதலாவது பகுதியை பொதுவான சில விடயங்களை பேச பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். எப்பொழுதுமே போர் நடைபெற்று பின்னர் அமைதி ஏற்ப்படும் சூழலில் பிரதானமாக மூன்று நிலைகளில் இந்த மனிதாபிமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
1. உடனடியான/அவசரமான மீள் கட்டுமானம் (Early Recovery)
2. மீள் கட்டுமானம் (Recovery)
3. அபிவிருத்தி (Development)
இந்த மூன்று நிலைகளும் எமது வடக்கின், போரிற்கு பின்னதான மனிதாபிமானப் பணிகளில் மிக முக்கியமான நிலைகளை வகிக்கின்றன. இதில் குறிப்பாக இப்பொழுது நாம் இருக்கும் நிலை உடனடியான மீள் கட்டுமானத்தை (Early Recovery) கடந்து மீள் கட்டுமானம் (Recovery) என்கின்ற நிலை. இந்த நிலையிலே பிரதானமாக கட்டுமானம் (Construction), வாழ்வாதாரம் (Livelihood) போன்ற விடயங்கள் மிக முக்கியத்துவம் வகிக்கின்றன.
இந்த நிலையில், வடக்கில் பணியாற்றும் சகல மனிதாபிமான, தொண்டர் அமைப்புக்கள் நிரந்தர, தூர நோக்கம் கொண்ட கட்டுமான வாழ்வாதார திட்டங்களை முன்மொழிந்து நடைமுறை படுத்துகின்றன. இந்த உதவித் திட்டங்கள் வடக்கில் வாழும் அதிகமான மக்களிற்கு தேவையான ஒன்றாகவே இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை மக்களின் சரியான தேவைகள் சரியாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறதா என்பதில் எனக்கு இன்னும் சரியான பதில் இல்லை. இந்தத் திட்டங்கள் எமது மக்களை நிரந்தரமான விடயங்களை நாடும் போக்கில் நடாத்தப் படாமல் போனால் அது அரசாங்கத்தினதும் இந்த தொண்டு நிறுவனங்களினதும் பயனற்ற முயற்சியாகவே முடியும்.
மக்களும் இன்னும் இந்த உதவிகளில் தங்கி வாழ்தலை இன்னும் விரும்பத்தான் செய்கிறார்கள். அதற்கு தேவை இல்லாமலும் இல்லை. இந்த தங்கி வாழ்தல் நிலை மாற இன்னும் ஒரு சில வருடங்கள் எடுக்கலாம். என்னதான் இருப்பினும் இன்னும் இந்த உதவிகளைக் காட்டி மக்களை சோம்பேறிகள் ஆக்கும் திட்டங்கள் வடக்கில் கைவிடப்படவேண்டும் என்பதே அநேகரின் ஆவல். மக்களை உதவிகள் மூலம் ஒரு வட்டத்திற்குள் நிலை நிறுத்தி தங்கி வாழ்தலை ஊக்குவிக்காமல் அவர்கள் முயற்சிகளிற்கு உதவிக்கரம் நீட்டுவதன் மூலம் அவர்களுக்கு தேவையானதை அவர்கள் தேடும் நிலைக்கு கொண்டுசெல்தல் மனிதாபிமான பணிகளில் இப்பொழுது வடக்கில் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பணியாகவும் தேவையாகவும் இருக்கிறது.
அனுபவங்கள் தொடரும்.
1 comment:
இலங்கையில் போரிற்கு பின்னதான மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடும் பலரில் நானும் ஒருவன். அதிலும் வடக்கில் இடம்பெறும் போரிற்கு பின்னதான மனிதாபிமானப் பணிகளிற்கு நானும் ஒரு சாட்சி. //////
உங்கள் அனுபவங்களின் வெளிப்பாடாய் வரும் கருத்துக்களை அறிய மிக ஆர்வமாக இருக்கிறோம் அமல் அண்ணா! தொடருங்கள்!
Post a Comment