Sunday, August 26, 2012

கவிதா காத்திருப்பாள்.

கனவுகளுக்குள்ளே கட்டிப் புரண்டுகொண்டிருந்தது அன்றைய தூக்கம். நிலா ஒருமுறை வெட்கி மேகத்திற்குள் புதைந்து போனபோது இரவு தலைதூக்கியது. இரண்டு பக்கமும் உருண்டு பிரண்ட போதும் ராகுலனால் கனவை ஓரம் கட்டி எழுதிருக்க முடியவில்லை. கடிகாரம் கூட ராகுலனை எழுப்புவதிலேயே குறியாய் இருந்தது அலாரம் அடித்தபடி. என்னவோ, கனவில் வந்தவள் ஒருவாறு அகன்றாள். கனவு கலைய தூக்கம் தடுமாற கண்கள் ஒருவாறு விழித்துக்கொண்டன.

அன்று வெள்ளிக்கிழமை. காலையிலேயே அம்மா நெற்றியில் பட்டையோடும், கையில் மணியோடும், உதட்டில் தேவாரத்தோடும் சாமியறைக்குள் செட்டில் ஆகியிருப்பாள் என்பதை சந்தேகமின்றி அறிந்துவைத்திருக்கும் ராகுலன் குழப்பமின்றி "ஷாலினி, டி போடேன் ப்ளீஸ்.." என தங்கையையிடம் கூறியபடி சோம்பல் கட்டுக்களை முறித்துக்கொண்டு கட்டிலிலிருந்து சில்லென இருக்கும் தரையில் கால்பதித்தான்.

அன்றைய நாள் ராகுலனிற்கு மீண்டும் அந்த வரம் கிடைக்கப்போகும் நாள். தவமின்றி வரம் கிடைக்கும் ஓர் உன்னத நாள். வாழ்கையில் எண்ணும் போதெல்லாம் மனதுக்குள்ளே பூச்சொரியும் ஒரு பூரண நாள். சூரியனிற்காய் காத்திருக்கும் ஆம்பல்கள் போல அந்த வரத்திற்காய் ஒற்றை காலில் நின்றது ராகுலனின் மனம். ரோஜா மொட்டுக்கள் மலர்வதை அவன் என்றுமே பார்த்ததில்லை. சிற்பம் பேசியதை என்றுமே கேட்டதில்லை அவன். நிலவு கூட நின்று சிரித்ததை கண்டதில்லை அவன். இவை அனைத்தையும் இன்று ஒரே நாளில் அனுபவிக்கப் போகிறான் ராகுலன். ஆம், அவன் மனம் பூத்த மல்லிகை, கவிதாவை மூன்று வருடங்களின் பின் சந்திக்கப்போகிறான் ராகுலன்.கவிதா.. ஓவியங்களின் ஒட்டுமொத்த படைப்பு. புதுக்குடியிருப்பில் இணைந்த ஜோடி மூன்று வருடங்களின் பின்னர் இன்று தான் சந்திக்கப்போகிறது கிளிநொச்சியில். இராணுவ படையெடுப்பில் சிக்கி அகதியானது இவர்கள் காதலும்தான். மூன்று வருடங்களின் பின்னர் இன்று இந்த காதல் மீள்குடியேற்றப்படப்போகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் கவிதாவை சந்திக்கப் போகும் அந்த தருணங்கள் ராகுலனின் இதயத்திற்குள் பூச்சொரிந்தன. அவள் அழகை காண மறுத்த இந்த மூன்று வருடங்கள் அவனுக்கு பாலைவனத்தில் தொலைந்த தண்ணீராய் போனது. அதுவும் தான் கவிதாவைப்பார்க்க வருவது அவளுக்கே தெரியாமல் நிகழ வேண்டும் என்பதும் ராகுலனின் காதல் திட்டம். இன்னும் சில மணிகளில் அவள் வீட்டில், அவளுக்கே தெரியாமல், அவள் முன் போய் நிற்க போவதை உணரும் போதெல்லாம் ராகுலனின் முகத்தில் நட்சத்திரங்கள் ஒளிர்ந்தன.

நேரம் வந்தது. பேருந்தில் ஏறி அவள் ஊரை நோக்கி பயணமானான் ராகுலன். சட்டைப்பைஎல்லாம் கனவுகள். பேர்சில் இருந்த பண நோட்டுக்கள் கூட இவனுக்கு பூக்களாகவே தெரிகின்றன. மனம் முழுவதும் அவள். இன்னும் இரண்டே மணித்தியாலங்களில் அவள் ஊரை அடையும் இந்த பஸ் வண்டி. மூன்று வருடங்கள் பொறுத்தவன் இந்த இரண்டு மணித்தியாலங்களில் முடிந்து போகிறான். வீதியின் இரு மருங்கிலும் அழகிய மரங்கள். அவற்றுள் சில போரினால் காயப்பட்டிருந்தன. அந்த ஊனமுற்ற மரங்கள் கூட இவன் காதல் பார்வைகளில் அழகாகவே காட்சி கொடுத்தன. இன்னும் ஒரு மணித்தியாலம். சாரதிமேல் இன்றுபோல் என்றுமே இவனிற்கு ஆத்திரம் வந்ததில்லை. "யோ, என்னய்யா இவ்வளவு சிலோவா ஓட்டிரே வண்டிய..?" என்று கேட்க நினைத்தாலும் வெட்கம் அவனை அனுமதிக்கவில்லை.

ஒருவாறு பஸ் கவிதாவின் ஊரை அடைந்தது. கால்களை நிலத்தில் வைக்க, இவன் கால்கள் வெட்கின. ஏதோ, புனித பூமியில் கால்வைத்த புத்துணர்ச்சி இவன் மனதுள். 'இது கவிதாவின் மண். அவளைப்போலவே அழகாய் இருக்கிறது' என்கிறது இவன் மனம். பஸ் இல் இருந்து இறங்கியவன், கவிதாவின் வீடு நோக்கி நடந்தான். பேருந்து தரிப்பு நிலையத்தில் இருந்து வெறும் இருநூறு மீட்டர் தொலைவு கவிதாவின் வீடு. இருநூறு மீட்டர் இவனுக்கு இன்று ஈராயிரம் கிலோமீட்டர். ராகுலனின் ஒவ்வொரு எட்டும் கவிதாவின் அழகைக்காண அவசரப்பட்டன. வீடு வந்தது. வாசலில் நின்று "கவிதா.. கவிதா.." என்றான் ராகுலன்.

முதலில் வெளியே வந்தது ஒரு அழகிய நாய். 'அவளைப்போலவே அழகாய் இருக்கிறதே இந்த நாய்க்குட்டி.. அவள் செல்லம்மாய் இருக்குமோ.." என்றபடி மீண்டும் "கவிதா..." கொஞ்சம் குரல் வளையை நிமிர்த்தி சத்தமாய் அழைத்தான் ராகுலன். வாசலில் இப்பொழுது கவிதாவின் தாய்.

"அடே, ராகுவா?? வாடா தம்பி.. சுகமா இருக்கிறியா??.." என்றபடி ராகுலனை உள்ளே அழைத்துப் போனாள் கவிதாவின் தாய். ராகுலன் என்றாலே கவிதாவின் வீட்டாரிற்கு அலாதிப் பிரியம். உள்ளே சென்ற ராகுலனின் கண்கள் கவிதாவைத்தேடி ஒவ்வொரு அறைக்கதவுகளையும் நோக்கியபடி இருந்தன. கவிதா எங்கே கவிதா எங்கே என சண்டையிட்டன அவன் கரு விழிகள். சிரிப்போடு உள்ளே அழைத்த கவிதாவின் தாய் கணப்பொழுதில் ராகுலனை நோக்கி தலையில் கைகளை அடித்தபடி அழ ஆரம்பித்தாள். ராகுலனிற்கு எதுவும் புரிவதாய் இல்லை. இருந்தும் கவிதாவிடம் கேட்டால் தெரிந்துவிடும் என்கின்ற சிந்தனையில் "கவிதா எங்க ஆன்டி...?" என கேட்டபடி ராகுலன் தலையை உயர்த்த எதிர் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த மாலையிட்ட கவிதாவின் புகைப்படம் இவனையே பார்த்துச் சிரித்தது.

கதிரையிலிருந்து எழுத்த ராகுலன், "கவிதா... கவிதா... எங்க அண்டி...?" என அழ ஆரம்பித்தான். அவள் அழகை கொண்டாட வந்தவனால் அவள் புகைப்படத்தை மட்டுமே பார்க்க நேர்ந்தது. "ராகு, முள்ளி வாய்க்காலில் அப்பாவை கொன்ற அந்த செல், கவிதாவையும்தான் தீர்த்தது.. இன்றோடு அவள் இறந்து மூன்று வருடங்கள் ஆகுது தம்பி.. இன்னும் அவள மறக்க முடியல.." என்றபடி அழுதுகொண்டு அறைக்குள் சென்றால் கவிதாவின் தாய்.

ராகுவின் கண்களில், பார்வை இல்லை. கண்ணீர் மட்டுமே. பலரையும் கொன்று குவித்த இந்த போர் தனது கவிதாவையும் கொன்றிருக்கும் என என்றுமே எண்ணியதில்லை இவன். மனிதரை மட்டுமல்ல காதல்களைக் கூட கொன்றுகுவித்தது இந்த போராட்டம். கவிதா என்கின்ற அந்த ஓவியம் இனி ராகுலனின் இதயத்தில் மட்டுமே குடியிருக்க முடியும். இதயத்தில் கவிதா கவிதா என பறந்துகொண்டிருந்த அந்த பட்டாம் பூச்சிகள் நொடியில் இறந்தன. அனாதையாக்கப்பட்ட சந்தோசம் கவிதா இன்றி வாழமுடியுமா என்பதை கேள்வியாய் உருவப்படுத்தியது இவனுள். கவிதா இறந்த அந்த மூன்று வருடமும் ராகுலன் மனதில் உயிரோடு வாழ்ந்ததைப் போல இன்னும் பல ஆண்டுகள் வாழட்டும் என எண்ணியபடி யாரிடமும் சொல்லாமல் கவிதாவின் வீட்டிலிருந்து புறப்பட்டான் ராகுலன். இப்பொழுதெல்லாம் ராகுலன் எண்ணுவது, இன்னுமொரு போராட்டம் வேண்டாம். உயிர்களோடு உணர்வுகளையும் சாகடிக்க இனியும் எம்மால் முடியாது.

No comments:

Popular Posts