Thursday, August 30, 2012

அவுஸ்ரேலிய கனவு; வீட்டில் இழவு.

காலா காலமாக தமிழர்களை கிறங்க வைத்து ஆசை காட்டி பின்னர் அவர்கள  உயிரையே  குடித்துப்போகும்  சமாச்சாரங்கள்  ஏராளம். இவை காலத்து காலம் ஒவ்வொன்றாக அரங்கேறிக்கொண்டே இருக்கிறது தாயகத்தில். இந்த  வரிசையில்  அண்மைக்காலமாக  ஈழத்  தமிழர்களை பிடித்திருக்கும் பேய்தான் இந்த அவுஸ்ரேலிய கனவு.

இப்பொழுதெல்லாம் பத்திரிக்கை, வானொலி, இணையத்தளம், முகப்புத்தகம் எங்கு பார்த்தாலும் மலிந்து கிடக்கும் செய்திகள் இந்த கடல் வழியேயான அவுஸ்ரேலிய  பயணம்  தொடர்பானவையே. பெரும்  ஆபத்து எனத்தெரிந்தும்  உயிரை துச்சமென மதித்து போராடும் இனம் நம்ம இனம். அதற்காக வீண்  ஆசைகளுக்கு உயிரை பணயம் வைக்கும் துணிச்சல் தேவையற்றது. இந்த அவுஸ்ரேலிய பயணத்தில் மிகவும் பாரதூரமான இரண்டு  ஆபத்துக்கள்  இருக்கின்றன. ஒன்று  கடற்படையினரிடம் மாட்டிக்கொள்வது. இரண்டாவது பயணம் செய்யும் படகு ஏதோவொரு காரணத்தினால் கடலில் மூழ்குவது. இந்த சட்டத்திற்கு முரணான இந்தப் பயணம் இவை இரண்டு பேராபத்துக்களையும் தாண்டியே நிறைவெய்த வேண்டும். இந்த அவுஸ்ரேலிய பயணம் தொடர்பான பல உண்மையான விடயங்களை அண்மையில் மருதமூரான் தனது அலையோடு அல்லாடும் ஆஸி கனவுகள்! கட்டுரையில் அழகாக கூறியிருந்தார்.


அண்மையில் ஊரிற்கு சென்றிருந்தவேளை எனது நண்பன் ஒருவன் இந்த பயணத்தில் அவுஸ்ரேலியா நோக்கி பயணமானார் என்கின்ற செய்தி கேட்டு அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன். இந்த நண்பன் ஊரிலேயே ஒரு மரியாதையான, நிரந்தரமான தொழில் முயற்சி ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டு  இருந்தவர். இவரது  சில  நண்பர்களின் ஊக்கப்படுத்தலால் அவர்களோடு தானும் அவுஸ்ரேலியா செல்லவேண்டும்  என  ஆசைப்பட்டு  தனது  தொழிலையும் கைவிட்டு  இந்த மாதம் 9ம் திகதி நீர்கொழும்பிலிருந்து ஒரு படகு மூலம் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதிலே மிகமுக்கியமான விடயம் என்னவெனில் இவர் பயணத்தை ஆரம்பித்த திகதி முதல் இன்றுவரை இவரைப் பற்றிய எந்தவித தகவலும் தங்களை வந்து அடையவில்லை என வீடே இறந்தவீடு போல காட்சியளிக்கிறது  இவர்  வீட்டில். இந்த  நண்பனின் தாய் அழுகையுடன் சாப்பாடும் இன்றி தரையில் சாய்ந்தபடி. தந்தை ஒரு மூலையில் மகன் மீதான உயிர்பயத்துடன். தங்கைகள்  இவனிற்கு  எதற்கு  இந்த தேவையில்லாத ஆசை என்கின்ற சாடையில் ஒரு புறத்தில்.. இவ்வாறானதொரு பயணம் தேவைதானா எனத்தோணியது எனக்கு. சிலரின் வெளிநாட்டு ஆசைகள் அதிலே இருக்கும் ஆபத்துக்களை மறைத்துவிடுகிறது. இவற்றைத் தாண்டியும் மகனிடமிருந்து வரப்போகும் "வந்து இறங்கிட்டேன் அம்மா.." என்கின்ற வார்த்தையை கேட்பதற்கு இவர்கள் தேக ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும். இதற்கு இன்னும் எத்தனை நாட்கள் எடுக்குமோ என்கின்ற பயம் அவனுடைய தாயின் கண்களில்  தெளிவாகவே தெரிகிறது.

அதற்குள் ஒருமுறை இவ்வாறானதொரு பயணத்தில் அம்மை நோய் ஏற்பட்ட  ஒரு  நபரை, அப்படகில்  இருக்கும்  மற்றவர்களை இத்தொற்றிலிருந்து காப்பாற்றுவதற்காக படகோட்டியும் மற்றவர்களும் கடலில் தூக்கிப் போட்டுவிட்டு பயணித்ததாகவும் சிலர் பேசியிருக்கிறார்கள். இவற்றை  எல்லாம்  கேட்கும்  பொழுது நண்பனின் தாய் தேமித்தேமி அழுவதை என்னால் பார்த்துக்கொள்ள முடியாமல் போனது. அதற்குள் "இப்ப ஏன் அழுவுறாய், அவன் போய் உழைச்சு காசு அனுப்பேக்க  சிரிக்கத்தானே  போறாய்..." என  ஆறுதல்  சொல்வதாய் உசுபேத்தும்  ஒரு  மாமி  நண்பனின்  தாயின்  அருகில். (இவிங்கள முதல் கடலுக்குள்ள வீசணும்யா..)


அதேபோல இது நீண்ட நாட்கள் எடுக்கும் பயணம் என்பதால் கொண்டுசெல்லும் உணவு, நீர், மருத்துவப் பொருட்கள் அனைத்தும் குறித்த பயணம் முடிவடையும் வரை போதுமானதாக இருத்தல் வேண்டும். இவை பற்றாக்குறை ஏற்படும் பட்சத்திலும் மரணத்திற்கான வாயில் அருகில் வந்துவிடும். இவற்றையும்  தாண்டி இந்த பயணம் நிறைவு பெற வேண்டும்.

 எது என்னவோ, அது இலங்கையாக இருந்தாலும் சரி அவுஸ்ரேலியாவாக  இருந்தாலும் சரி உயிர்  இல்லாவிடில்  என்ன பயன்? இந்த  மோகம் இன்னும் எத்தனை எத்தனை  உயிர்களிற்கும்  வீட்டாட்களின் சந்தோசத்திற்கும் ஆப்பு வைக்கப் போகிறது? இதிலே  உண்மையான  விடயம் என்னவெனில்  உண்மையாக புகலிடம் தேடி (பாதுகாப்பு, குடும்ப வறுமை மற்றும் பல) இந்த  பயணத்தை  தேடுபவர்கள்  சொற்பம்  பேரே. வெளிநாட்டு மோகத்துடன், அவுஸ்ரேலிய  கனவுடன் பயணிக்கும் இளைஞர்களே ஏராளம் என்கின்றனர் ஒரு தரப்பினர். வெளிநாட்டுக் கனவு தவறில்லை. அதை அடைவதற்கு சரியான வழியை பயன்படுத்த வேண்டும் என்பதே அவுஸ்ரேலிய அரசாங்கத்தினதும், எமது எதிர்பார்ப்பும் கூட. முள்ளி  வாய்க்காலில்  காப்பாற்றிய  உசுரை   எதுக்கு  இந்துசமுத்திரத்தில் கொண்டுபோய்  போடணும்.. சொல்லுங்க.

Sunday, August 26, 2012

வடக்கில் மனிதாபிமானப்பணியும் மனதை சுரண்டும் வடுக்களும்.

வணக்கம் நண்பர்களே. நீண்ட நாட்களின் பின்னர் ஒரு பதிவோடு வருகிறேன். கூர்மையான எழுத்தாணி இல்லையென்றால் வரலாறுகள் மறைக்கப்பட்டுவிடும். இந்த எழுத்தாணிகளை கையில் எடுப்பவர்கள் யார் எவர் என்பதை விட எதற்காக எடுக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. எல்லா வரலாறுகளும் இந்த எழுத்துக்களினாலேயே இன்னும் இந்த உலகத்தில் நிலைக்கிறது. சரி விடயத்திற்கு வருவோம்.

இலங்கையில் போரிற்கு பின்னதான மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடும் பலரில் நானும் ஒருவன். அதிலும் வடக்கில் இடம்பெறும் போரிற்கு பின்னதான மனிதாபிமானப் பணிகளிற்கு நானும் ஒரு சாட்சி. ஆகவே, வருடங்கள் கடந்து நடை போடும் இந்த மனிதாபிமானப் பணிகளில் நான் சந்திக்கும் பல சுவாரசியமான விடயங்களை தொடர்ச்சியாக பதிவிடலாம் என்பதுதான் எனது நோக்கம். நிற்சயமாக இது ஒரு சுய சொறிதலாக  இருக்காது. இருக்கவும் கூடாது. வடக்கிலே மக்கள்  இன்னும் அனுபவிக்கும் கஷ்டங்களை, எனது கண்கள் காணும் மனதை தொடும் விடயங்களை பதிவேற்றம் செய்வதாய் மட்டுமே இந்தத் தொடர் இருக்கும்.அந்த வகையில் இந்த முதலாவது பகுதியை பொதுவான சில விடயங்களை பேச பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். எப்பொழுதுமே போர் நடைபெற்று பின்னர் அமைதி ஏற்ப்படும் சூழலில் பிரதானமாக மூன்று நிலைகளில் இந்த மனிதாபிமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

1. உடனடியான/அவசரமான மீள் கட்டுமானம் (Early Recovery)
2. மீள் கட்டுமானம் (Recovery)
3. அபிவிருத்தி (Development)

இந்த மூன்று நிலைகளும் எமது வடக்கின், போரிற்கு பின்னதான மனிதாபிமானப் பணிகளில் மிக முக்கியமான நிலைகளை வகிக்கின்றன. இதில் குறிப்பாக இப்பொழுது நாம் இருக்கும் நிலை உடனடியான மீள் கட்டுமானத்தை (Early Recovery) கடந்து மீள் கட்டுமானம் (Recovery) என்கின்ற நிலை. இந்த நிலையிலே பிரதானமாக கட்டுமானம் (Construction), வாழ்வாதாரம் (Livelihood) போன்ற விடயங்கள் மிக முக்கியத்துவம் வகிக்கின்றன.

இந்த நிலையில், வடக்கில் பணியாற்றும் சகல மனிதாபிமான, தொண்டர் அமைப்புக்கள் நிரந்தர, தூர நோக்கம் கொண்ட கட்டுமான வாழ்வாதார திட்டங்களை முன்மொழிந்து நடைமுறை படுத்துகின்றன. இந்த உதவித் திட்டங்கள் வடக்கில் வாழும் அதிகமான மக்களிற்கு தேவையான ஒன்றாகவே இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை மக்களின் சரியான தேவைகள் சரியாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறதா என்பதில் எனக்கு இன்னும் சரியான பதில் இல்லை. இந்தத் திட்டங்கள் எமது மக்களை நிரந்தரமான விடயங்களை நாடும் போக்கில் நடாத்தப் படாமல் போனால் அது அரசாங்கத்தினதும் இந்த தொண்டு நிறுவனங்களினதும் பயனற்ற  முயற்சியாகவே முடியும்.மக்களும் இன்னும் இந்த உதவிகளில் தங்கி வாழ்தலை இன்னும் விரும்பத்தான் செய்கிறார்கள். அதற்கு தேவை இல்லாமலும் இல்லை. இந்த தங்கி வாழ்தல் நிலை மாற இன்னும் ஒரு சில வருடங்கள் எடுக்கலாம். என்னதான் இருப்பினும் இன்னும் இந்த உதவிகளைக் காட்டி மக்களை சோம்பேறிகள் ஆக்கும் திட்டங்கள் வடக்கில் கைவிடப்படவேண்டும் என்பதே அநேகரின் ஆவல். மக்களை உதவிகள் மூலம் ஒரு வட்டத்திற்குள் நிலை நிறுத்தி தங்கி வாழ்தலை ஊக்குவிக்காமல் அவர்கள் முயற்சிகளிற்கு உதவிக்கரம் நீட்டுவதன் மூலம் அவர்களுக்கு தேவையானதை அவர்கள் தேடும் நிலைக்கு கொண்டுசெல்தல் மனிதாபிமான  பணிகளில் இப்பொழுது வடக்கில் மேற்கொள்ள  வேண்டிய மிக முக்கியமான பணியாகவும் தேவையாகவும் இருக்கிறது.

அனுபவங்கள் தொடரும்.


இதயத்தில் இவளா?உன்னை
ஊருக்கு வெளியேதான்
பார்த்திருக்கிறேன் - இப்பொழுது
உயிருக்குள்
எப்படி வந்தாய்?

உன்னைப் போன்ற
அழகிகளை
சரித்திரத்தில் பார்த்திருக்கிறேன்..
இப்பொழுதுதான்
முதல் முதல் - என்
உதிரத்தில் பார்க்கிறேன்..

இதயத்தில் இவளா..?

லப்பும் டப்பும்
சுருதியில் பிளைக்கிறதே..
குருதியும் குழாய்களில்
கோணலாய் ஓடுகிறதே..
வந்த ரத்தமும்
இதய சத்தமும்
மிச்சமின்றி முடிகிறதே.
ஏப்பம் விட்ட வாயும்
ஓலம் இட்ட நாவும் - இப்போ
ஆரோகணம் படிக்கிறதே..

இதயத்தில் இவளா..??

துடிக்கும் மோகமும்
வெடிக்கும் காமமும்
சத்தமின்றி கசிகிறதே..
துடிக்கும் கனவும்
நடிக்கும் நினைவும்
எட்டிநின்று மரிக்கிறதே.
மீண்டும் இதயத்தில் இவளா??
மீண்டும் பறிக்க நான் இதழா??

நிலவு பார்த்து
கொட்டாவி விடுகிறதே..
இவளை -
நெருங்க பார்த்து
என்னாவி முடிகிறதே..
இவளைப்பார்த்து பெண்ணா என்கிறதே - இதயம்
மலரை எப்பிடி பெண்ணென சொல்கிறதே..??

முட்டாமலே - என்னுள்
விபத்தை நடத்தினாள்
தட்டாமலே - என்னுள்
தடயத்தை வைத்தாள்.
எட்டிநடக்கும் இதய மழலையை
எப்படி காதலில் சிக்க வைத்தாள்.
அடித்துக்கொட்டும் மழையில் கூட
இப்படி எப்பிடி வேர்க்க வைத்தாள்..

பார்த்து வேர்த்து
ஆசை தீர்த்து
வீசி எறிந்து
வேண்டாம் என
வந்தவன் நான்..
உன்னிலே மரிக்க
உனக்காக எரிக்க
இன்னும் என்னை
விற்க முடியாது
உனக்கு..
அப்படியிருக்க - மீண்டும்
இதயத்துள் ஏன் வந்தாள்??

----

நன்றி லண்டன் தமிழ் வானொலி; கவிதை நேரம்.

இந்தக் கவிதையை ஒலிவடிவத்தில் கேட்பதற்கு;

கவிதா காத்திருப்பாள்.

கனவுகளுக்குள்ளே கட்டிப் புரண்டுகொண்டிருந்தது அன்றைய தூக்கம். நிலா ஒருமுறை வெட்கி மேகத்திற்குள் புதைந்து போனபோது இரவு தலைதூக்கியது. இரண்டு பக்கமும் உருண்டு பிரண்ட போதும் ராகுலனால் கனவை ஓரம் கட்டி எழுதிருக்க முடியவில்லை. கடிகாரம் கூட ராகுலனை எழுப்புவதிலேயே குறியாய் இருந்தது அலாரம் அடித்தபடி. என்னவோ, கனவில் வந்தவள் ஒருவாறு அகன்றாள். கனவு கலைய தூக்கம் தடுமாற கண்கள் ஒருவாறு விழித்துக்கொண்டன.

அன்று வெள்ளிக்கிழமை. காலையிலேயே அம்மா நெற்றியில் பட்டையோடும், கையில் மணியோடும், உதட்டில் தேவாரத்தோடும் சாமியறைக்குள் செட்டில் ஆகியிருப்பாள் என்பதை சந்தேகமின்றி அறிந்துவைத்திருக்கும் ராகுலன் குழப்பமின்றி "ஷாலினி, டி போடேன் ப்ளீஸ்.." என தங்கையையிடம் கூறியபடி சோம்பல் கட்டுக்களை முறித்துக்கொண்டு கட்டிலிலிருந்து சில்லென இருக்கும் தரையில் கால்பதித்தான்.

அன்றைய நாள் ராகுலனிற்கு மீண்டும் அந்த வரம் கிடைக்கப்போகும் நாள். தவமின்றி வரம் கிடைக்கும் ஓர் உன்னத நாள். வாழ்கையில் எண்ணும் போதெல்லாம் மனதுக்குள்ளே பூச்சொரியும் ஒரு பூரண நாள். சூரியனிற்காய் காத்திருக்கும் ஆம்பல்கள் போல அந்த வரத்திற்காய் ஒற்றை காலில் நின்றது ராகுலனின் மனம். ரோஜா மொட்டுக்கள் மலர்வதை அவன் என்றுமே பார்த்ததில்லை. சிற்பம் பேசியதை என்றுமே கேட்டதில்லை அவன். நிலவு கூட நின்று சிரித்ததை கண்டதில்லை அவன். இவை அனைத்தையும் இன்று ஒரே நாளில் அனுபவிக்கப் போகிறான் ராகுலன். ஆம், அவன் மனம் பூத்த மல்லிகை, கவிதாவை மூன்று வருடங்களின் பின் சந்திக்கப்போகிறான் ராகுலன்.கவிதா.. ஓவியங்களின் ஒட்டுமொத்த படைப்பு. புதுக்குடியிருப்பில் இணைந்த ஜோடி மூன்று வருடங்களின் பின்னர் இன்று தான் சந்திக்கப்போகிறது கிளிநொச்சியில். இராணுவ படையெடுப்பில் சிக்கி அகதியானது இவர்கள் காதலும்தான். மூன்று வருடங்களின் பின்னர் இன்று இந்த காதல் மீள்குடியேற்றப்படப்போகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் கவிதாவை சந்திக்கப் போகும் அந்த தருணங்கள் ராகுலனின் இதயத்திற்குள் பூச்சொரிந்தன. அவள் அழகை காண மறுத்த இந்த மூன்று வருடங்கள் அவனுக்கு பாலைவனத்தில் தொலைந்த தண்ணீராய் போனது. அதுவும் தான் கவிதாவைப்பார்க்க வருவது அவளுக்கே தெரியாமல் நிகழ வேண்டும் என்பதும் ராகுலனின் காதல் திட்டம். இன்னும் சில மணிகளில் அவள் வீட்டில், அவளுக்கே தெரியாமல், அவள் முன் போய் நிற்க போவதை உணரும் போதெல்லாம் ராகுலனின் முகத்தில் நட்சத்திரங்கள் ஒளிர்ந்தன.

நேரம் வந்தது. பேருந்தில் ஏறி அவள் ஊரை நோக்கி பயணமானான் ராகுலன். சட்டைப்பைஎல்லாம் கனவுகள். பேர்சில் இருந்த பண நோட்டுக்கள் கூட இவனுக்கு பூக்களாகவே தெரிகின்றன. மனம் முழுவதும் அவள். இன்னும் இரண்டே மணித்தியாலங்களில் அவள் ஊரை அடையும் இந்த பஸ் வண்டி. மூன்று வருடங்கள் பொறுத்தவன் இந்த இரண்டு மணித்தியாலங்களில் முடிந்து போகிறான். வீதியின் இரு மருங்கிலும் அழகிய மரங்கள். அவற்றுள் சில போரினால் காயப்பட்டிருந்தன. அந்த ஊனமுற்ற மரங்கள் கூட இவன் காதல் பார்வைகளில் அழகாகவே காட்சி கொடுத்தன. இன்னும் ஒரு மணித்தியாலம். சாரதிமேல் இன்றுபோல் என்றுமே இவனிற்கு ஆத்திரம் வந்ததில்லை. "யோ, என்னய்யா இவ்வளவு சிலோவா ஓட்டிரே வண்டிய..?" என்று கேட்க நினைத்தாலும் வெட்கம் அவனை அனுமதிக்கவில்லை.

ஒருவாறு பஸ் கவிதாவின் ஊரை அடைந்தது. கால்களை நிலத்தில் வைக்க, இவன் கால்கள் வெட்கின. ஏதோ, புனித பூமியில் கால்வைத்த புத்துணர்ச்சி இவன் மனதுள். 'இது கவிதாவின் மண். அவளைப்போலவே அழகாய் இருக்கிறது' என்கிறது இவன் மனம். பஸ் இல் இருந்து இறங்கியவன், கவிதாவின் வீடு நோக்கி நடந்தான். பேருந்து தரிப்பு நிலையத்தில் இருந்து வெறும் இருநூறு மீட்டர் தொலைவு கவிதாவின் வீடு. இருநூறு மீட்டர் இவனுக்கு இன்று ஈராயிரம் கிலோமீட்டர். ராகுலனின் ஒவ்வொரு எட்டும் கவிதாவின் அழகைக்காண அவசரப்பட்டன. வீடு வந்தது. வாசலில் நின்று "கவிதா.. கவிதா.." என்றான் ராகுலன்.

முதலில் வெளியே வந்தது ஒரு அழகிய நாய். 'அவளைப்போலவே அழகாய் இருக்கிறதே இந்த நாய்க்குட்டி.. அவள் செல்லம்மாய் இருக்குமோ.." என்றபடி மீண்டும் "கவிதா..." கொஞ்சம் குரல் வளையை நிமிர்த்தி சத்தமாய் அழைத்தான் ராகுலன். வாசலில் இப்பொழுது கவிதாவின் தாய்.

"அடே, ராகுவா?? வாடா தம்பி.. சுகமா இருக்கிறியா??.." என்றபடி ராகுலனை உள்ளே அழைத்துப் போனாள் கவிதாவின் தாய். ராகுலன் என்றாலே கவிதாவின் வீட்டாரிற்கு அலாதிப் பிரியம். உள்ளே சென்ற ராகுலனின் கண்கள் கவிதாவைத்தேடி ஒவ்வொரு அறைக்கதவுகளையும் நோக்கியபடி இருந்தன. கவிதா எங்கே கவிதா எங்கே என சண்டையிட்டன அவன் கரு விழிகள். சிரிப்போடு உள்ளே அழைத்த கவிதாவின் தாய் கணப்பொழுதில் ராகுலனை நோக்கி தலையில் கைகளை அடித்தபடி அழ ஆரம்பித்தாள். ராகுலனிற்கு எதுவும் புரிவதாய் இல்லை. இருந்தும் கவிதாவிடம் கேட்டால் தெரிந்துவிடும் என்கின்ற சிந்தனையில் "கவிதா எங்க ஆன்டி...?" என கேட்டபடி ராகுலன் தலையை உயர்த்த எதிர் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த மாலையிட்ட கவிதாவின் புகைப்படம் இவனையே பார்த்துச் சிரித்தது.

கதிரையிலிருந்து எழுத்த ராகுலன், "கவிதா... கவிதா... எங்க அண்டி...?" என அழ ஆரம்பித்தான். அவள் அழகை கொண்டாட வந்தவனால் அவள் புகைப்படத்தை மட்டுமே பார்க்க நேர்ந்தது. "ராகு, முள்ளி வாய்க்காலில் அப்பாவை கொன்ற அந்த செல், கவிதாவையும்தான் தீர்த்தது.. இன்றோடு அவள் இறந்து மூன்று வருடங்கள் ஆகுது தம்பி.. இன்னும் அவள மறக்க முடியல.." என்றபடி அழுதுகொண்டு அறைக்குள் சென்றால் கவிதாவின் தாய்.

ராகுவின் கண்களில், பார்வை இல்லை. கண்ணீர் மட்டுமே. பலரையும் கொன்று குவித்த இந்த போர் தனது கவிதாவையும் கொன்றிருக்கும் என என்றுமே எண்ணியதில்லை இவன். மனிதரை மட்டுமல்ல காதல்களைக் கூட கொன்றுகுவித்தது இந்த போராட்டம். கவிதா என்கின்ற அந்த ஓவியம் இனி ராகுலனின் இதயத்தில் மட்டுமே குடியிருக்க முடியும். இதயத்தில் கவிதா கவிதா என பறந்துகொண்டிருந்த அந்த பட்டாம் பூச்சிகள் நொடியில் இறந்தன. அனாதையாக்கப்பட்ட சந்தோசம் கவிதா இன்றி வாழமுடியுமா என்பதை கேள்வியாய் உருவப்படுத்தியது இவனுள். கவிதா இறந்த அந்த மூன்று வருடமும் ராகுலன் மனதில் உயிரோடு வாழ்ந்ததைப் போல இன்னும் பல ஆண்டுகள் வாழட்டும் என எண்ணியபடி யாரிடமும் சொல்லாமல் கவிதாவின் வீட்டிலிருந்து புறப்பட்டான் ராகுலன். இப்பொழுதெல்லாம் ராகுலன் எண்ணுவது, இன்னுமொரு போராட்டம் வேண்டாம். உயிர்களோடு உணர்வுகளையும் சாகடிக்க இனியும் எம்மால் முடியாது.

Popular Posts