Friday, March 30, 2012

ஒன்று மட்டும் புரியவே இல்லை.


கைக்குள்ளிருந்த
ஆசை ரேகை
களவு போனபோதுதான்
முதன் முதல் - நம்
தேசத்தின் மேல்
ஆத்திரம் வந்தது.

கையைக்கட்டி
கையொப்பம் இடுங்கள்
என்றபோதுதான்
முதல் முதல்
கண்ணீர் வந்தது
என்
மனித நேயத்திற்கு..

என்
சட்டையில் இருந்த
பொத்தான் கூட
சொல்லாமலே
பிய்க்கப் பட்டபோதுதான் இந்த
ஜனநாயகத்தின் மேல்
நம்பிக்கை போனது..

எங்கள்,
பக்கம் இருந்த
பிள்ளையார் கூட
புத்தர் ஆனபோதுதான்
இந்த
மத நம்பிக்கை மேல்
அவநம்பிக்கை வந்தது.

என்
வார்த்தைகளுக்கு
மற்றவர்கள்
வக்கீல் வைத்து
வாதாடியபோதுதான்
இந்த
பேச்சுரிமை
பிடிக்காமல் போனது

அவர்கள்
என்னை
பைத்தியக்காரன்
என்றபோதுதான் - என்
சுரணைகூட
தூக்கம் கலைந்தது..

என்னை
பொல்லாதவனாய்
அவர்கள்
சித்தரித்த போதுதான்
என்
வியர்வைக்குக் கூட
இறுமாப்பு வந்தது..

அவர்கள்
ஒட்டுமொத்தமாய் என்னை
வெறுத்தபோதுதான்
என்
தராதரம் கூட
சுயகெளரவம்
பார்க்கத் தொடங்கியது.

இறுதியில்,
எல்லாம் தெரிந்தது
எனக்கு.
ஒன்று மட்டும்
புரியவே இல்லை.
இந்த உலகம்
நல்லதா
கெட்டதா??

Tuesday, March 20, 2012

புதினங்கள்..வானம் வெட்கி
வசந்தம் பரப்பும் - உன்
வைகறை பார்வை
வானை வெளுக்கும்.

தீயில் தோய்ந்தும்
தீக்குச்சி சிரிக்கும் - உன்
தீ வந்து சுட்டபின்
உயிர்குச்சி மரிக்கும்..

உண்டபின் உன்னைத்தான்
ஏவறைகள் நினைக்கும் - நம்
உயிர் உண்ட காதல் மட்டும்
இங்கு எப்படி மரிக்கும்..

பூவுக்குள் சிறைவாழ
தேன் கூட வெறுக்கும் - பெண்
பூக்களுக்காய் ஏனிந்த
ஆண்கூட்டம் அலையும்?

வந்ததும் போனதும்
வாசலோடு போகும் - இந்த
பாழாய்ப்போன காதல்மட்டும்
ஏன் நெஞ்சுள் வாழும்?

குட்டி போட காசு கூட
வட்டியைத்தான் விரும்பும் - நாம்
வெட்டி எறிந்து போட்டபின்னும்
ஏன் காதல் அரும்பும்?

மழையில் நனையும் மாக்கள் கூட
முகடு தேடி ஓடும் - நம்
மனதை எரித்த பெண்ணைக்கூட
ஏன் இதயம் தேடும்?

கையை பிரிந்த பந்துகூட
சுவரில் பட்டு திரும்பும் - இந்த
பொய்கை பிரிந்த தாமரை மட்டும்
ஏன் நீரை வெறுக்கும்?

Friday, March 9, 2012

நட்பு என்னும் பூச்சாண்டி!


வணக்கமுங்கோ. இந்த விடயத்தை பற்றி நீண்டநாள் எழுதியாற வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தேன். இன்று கை கூடுகிறது.

நாம் எல்லோரும் அடிக்கடி பேசும் பல சரியான புரிதல் இல்லாத வார்த்தைகளில்  இந்த  நட்பு  என்பதும்  ஒன்று. நட்பு  என்னும்  பெயரில் நடைபெறும் அழகிய, ஆத்மார்ந்த விடயங்களும், சில நாடகங்களும், சில ஏமாற்று வித்தைகளும் ஆங்காங்கே நாம் கடந்தே வரவேண்டியிருக்கிறது. அதிலும் இந்த நட்பை தேடி அலையும் இளைஞர் பட்டாளத்திற்கு இன்று அதை இலகுவில் கண்டுகொள்ள போதியளவு சந்தர்ப்பங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சரி, முதலில் இந்த நட்பு என்பது என்ன? பிடித்துப்போகும் இரு மனங்களில் உணர்வு ரீதியாக உருவகிக்கப்படும் மற்றவர் சார்ந்த இயைபாக்கம் நட்பு எனலாம்.  ஆக, இங்கே  இரண்டு  விடயங்கள்  இருக்கவேண்டும் அடிப்படையில். ஒன்று நட்பு கொள்பவரை நமக்கே பிடித்திருக்க வேண்டும். இரண்டாவது எமது சில உணர்வுகள் அந்த குறித்த நபர் 'சார்பான இயைபாக்கம்' கொண்டவையாக இருக்கும்.

பிடிக்காதவர்களுடன்  நட்பு  ஏற்படாது.  அதேபோல,  நட்பானவர்களுக்காய் நமது  சில  விருப்பு  வெறுப்புக்கள்  சார்புத்தன்மையைக்  கொண்டதாக இருக்கும். இது  பொதுவான  விடயம். இந்த  நட்பை ஆத்மார்ந்தமான ஒன்றாக நினைப்பவர்கள்  இதன்  தாற்பரியத்தை  புரிந்துகொள்கிறார்கள். மற்றவர்கள் வெறும் ஒரு சாதாரண சமூக விலங்குக் கோட்பாட்டுடன் (மற்றவருடன் சார்ந்திருத்தல்) முடித்துக்கொள்கிறார்கள்.

இந்த நட்பை வைத்து பூச்சாண்டி காட்டும் சிலரைப் பற்றியதானதே இந்த பதிவு. சிலர், அதிலும்  பல  பெண்கள்  வெளிப்படையாகச்  சொல்வார்கள் ஆண்களிடம். 'எனக்கு  எல்லா  ஆண்களும்  ஒரேமாதிரித்தான்..' 'நான் எல்லோருடனும் ஒரே மாதிரியாய்த்தான் பழகுகிறேன்' என்று. இதை அநேக ஆண்கள் கேட்டிருப்பார்கள். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ என்னவோ தெரியவில்லை நான் இவர்களை வெறும் முட்டாள்களாகவே பார்க்கிறேன். காரணம் நட்பு பற்றி எதுவுமே தெரியாதவர்களால்தான் இப்படி வசனம் பேச முடியும்.

எமது  மனம்  (மனித மனம்) எல்லோரையும்  ஒரே  விதமாய் தன்னகத்தே ஏற்றுக்கொள்வதில்லை. ஒவ்வொருத்தரிற்கும்  ஒவ்வொரு இடம் கொடுத்தே தன்னில் ஏற்றுக்கொள்கிறது. சிலரிற்கு கொஞ்சம் பெரிய இடம், சிலரிற்கு கொஞ்சம் சிறிய இடம், ஆகவும் கீழான இடம் கொடுப்பவர்கள் மனதினுள் வர  முடியாமல்  போகிறார்கள். ஆக,  எல்லோரையும்  ஒரேமாதிரியாய் ஏற்றுக்கொள்வதில்லை  நமது  மனம். அப்படியிருக்க  நட்பு  மட்டும்  எப்படி எல்லோரிடமும் ஒரேமாதிரியாய் வரும்?

தங்களை குறித்த  நபரிடத்திலிருந்து  காப்பாற்றிக்  கொள்ளவே  இவ்வாறான வசனங்கள் பேசப்படுகின்றனவே தவிர இதில் எந்த விதமான அடிப்படை உண்மைகளும்  இல்லை. எல்லோருடனும்  சமனாக  அல்லது ஒரே மாதிரியாய் பழகத் தெரிந்தவர்கள் மனதளவில் நலிவுற்றவர்களே. காரணம், இவர்கள் மனம் அனைவரையும் ஒரே மாதிரியாய் ஏற்றுக்கொள்கிறது என்று  அர்த்தம். ஆகவே, இவர்களிடத்தில்  ஏதோ  ஒரு  உளவியல் நலிவுத்தன்மை இருக்கும்.அல்லது, இன்னொருவருடனான உறவு தொடர்பாக பாரிய மனமுடைவை  சந்தித்தவர்களாகவோ  அல்லது ஏதோ ஒரு உறவு  முறிவில் பாதிக்கப் பட்டவர்களாகவோ இருப்பர்.

அத்தோடு, அனைவருடனும் ஒரே மாதிரியாய் பழகும் இவர்களால் எப்படி நல்ல நட்பு, உண்மை நட்பு, வெள்ளை நட்பு, கறுப்பு நட்பு, நெருங்கிய நட்பு, உயர்ந்த  நட்பு என்றெல்லாம் வகைப்படுத்திப் பார்க்க  முடியும். ஆக, இவர்களால் இந்த வகை வகையான எந்த நட்பையும் அனுபவித்துப் பார்க்க முடியாமல் போய்விடுகிறது சாகும்வரை.

நட்பை  அளக்க  முடியும் (measurable). அடிப்படையில்  ஒப்பீட்டு  முறையில் இலகுவாக  இந்த  நட்பை  அளந்து  பார்க்க  முடியும். காதலும், கணவன்-மனைவி உறவும் ஒரு நட்புத்தான். நட்பு என்பது ஒரு உறவை ஏற்படுத்தும் ஒரு ஊடகமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

எனவே, இந்த  நட்பை  ஒருமைப்படுத்துபவர்கள்  அல்லது அனைவரிடத்திலும்  ஒரேமாதிரியாய்  பார்க்கும்  சிலர்  கொஞ்சம் உண்மையாக  இருக்க  முயற்சி  செய்யுங்கள். இந்த  போக்கு  நீங்கள் போலியானவர்கள் என்பதையே மற்றவர்களுக்கு வெளிப்படுத்துமே ஒழிய நீங்கள்  புத்திசாலிகள்  என்பதை  ஒருபோதுமே  வெளிப்படுத்தாது. நல்ல நட்பை அனுபவிப்பவர்கள் எல்லோருடனும் ஒரேமாதிரி நட்பை வைத்திருப்பவர்கள் அல்ல என்பதை உணருங்கள். நீங்கள் அனைவருடனும் ஒரேமாதிரியாய் பழகும் பக்குவத்தை மாற்றும் வரை நீங்கள் உண்மையான நட்பையோ அல்லது நட்பின் உண்மையான பக்கத்தையோ  என்றுமே அனுபவிக்கப் போவதில்லை.

இன்று அறுத்தது போதும்.. ஹி ஹி ஹி ஹி.. வரட்டா..


Wednesday, March 7, 2012

மகளிர்தினம் - பெண்களுக்கு ஒரு மடல்.


அன்பின்
பெண்ணே,

அன்பனின்
அன்புக்கடிதம்.

எனது பேனா,
சிலவேளை
உன்னை
சிரிக்கவைக்கலாம்.
சிலவேளை
கொதிக்கவைக்கலாம்..
கொதித்தாலும் பரவாயில்லை..
தண்ணீர்
கொதிக்கும்வரை - அது
தேநீராவதில்லை..

பெண்ணே,
எனக்கு - நீ
பெண்ணாய் தெரிந்தபோதேல்லாம்
என்
தெய்வமாகவே தெரிகிறாய்.

சிலவேளைகளில்
தெய்வமாயும்
சிலவேளைகளில்
பொய்மையாயும்.

புதுமைப்பெண் - உன்னை
கையெடுத்து கும்பிடுகிறேன்
புதுமையை
உனது
புத்தியில் வை.
கத்தியில் வேண்டாம்.

உன்னை
பலர்
விரும்புகிறார்கள்.
அவர்கள்தான் - உன்னை
பெண்ணாய் பார்ப்பவர்கள்.
சிலர்
வெறுக்கிறார்கள்.
அவர்கள் - இன்னும்
பேயாய்த்தான்  பார்க்கிறார்கள்.
இந்த
பேயாய்ப் பார்ப்பவர்களுக்காய்
பெண்ணாய்ப் பார்ப்பவர்களை
தண்டிக்காதீர்கள்.

உங்கள்
உதடுகளை
சாயமிடுகிறீர்கள்
அழகுதான்,
அவற்றோடு - உங்கள்
வார்த்தைகளுக்கும்
கொஞ்சம் - நாகரீக
சாயம் கொடுங்களேன்..

பத்துமாதம் பொறுப்பது
உங்கள் குலம்.
தலைவணங்குகிறேன்.
அதற்காய்
பத்தே நிமிடத்தில்
எவரையும்
தூக்கி எறியாதீர்கள்
உங்கள் - சுடும்
வார்த்தைகளால்..

உங்களில்
ஒன்றுமட்டும்
எனக்கு
இன்றுவரை
புரிந்ததேயில்லை.
உங்கள்
மனதிற்கும்
உதட்டிற்கும்
ஏன்
இவ்வளவு இடைவெளி..??

உங்களுக்கு
வரம்
கண்ணீர்.
எதிரி
பிடிவாதம்.

 உங்களுக்கு
இரண்டு
குறை
ஒன்று கோவம்
இன்னொன்று பாவம்.

ஊரையே
எரித்தவர்கள் நீங்கள்.
ஏன்
ஊர்வாய்க்குள்
முடிந்துபோகிறீர்கள்?

பெண்ணே,
உங்கள் புன்னகை
சூரியன்..
நாங்களோ
தாமரை..

தாமரைகள்
மலர்வதை
என்றுமே
சூரியன்
வெறுப்பதில்லை.

எப்பொழுதும்
புன்னகையுங்கள்.

உங்களுக்கு
அதிகம் தெரிந்தவை,
ஒன்று
வீட்டு வட்டம்.
இன்னொன்று
பாச விட்டம்.

இவை
இரண்டுமே
உங்களுக்கு
வியாதிகள்தான்..
வலி மட்டுமே கொடுப்பவை.

வீட்டு விட்டத்தை
தாண்டுபவள்
உலகை படிக்கிறாள்.
பாச விட்டத்தை
தாண்டுபவள்
வாழ்க்கையைப் படிக்கிறாள்..

நீங்கள்
உலகையும்
வாழ்வையும்
படித்தாலே போதும்..
பாரதியின் கனவை
பத்திரமாய்
காப்பாற்றி விடுவீர்கள்.

உங்களை
உலகம் சுமக்கவில்லை.
நீங்கள்தான்
உலகை
சுமக்கிறீர்கள்.
தளர்ந்து போகாதீர்கள்,
உலகம்
ஆட்டம் கண்டுவிடலாம்.

இறுதியாய்,
பெண் - எமக்கு  
தாயுமானவள்,
தாரமுமாகுபவள்,
ஆக, - பெண்
எமக்கு  
இரட்டைக் கடவுள்கள்.

இதை
நான்
வாழ்ந்திருக்கிறேன்.
வாழுவேன்.

பெண்களாய் வாழ
பெண்களுக்கு
வாழ்த்துக்கள்.

அன்பன்,
அமல்ராஜ்.


Tuesday, March 6, 2012

எதுக்கு அவன நாம தீர்ப்பிடணும்?

வணக்கம் நண்பர்ஸ். நலமா? இன்று  ஒரு  வாழ்வியல்  பதிவு இடலாம் என்று ஒரு குறிக்கோளோடு வந்திருக்கிறேன். யோவ்வ்.. வாழ்வியல் பதிவு எண்டதும்  யாரையா ஓட்டம் எடுக்கிறது...???

இன்று  நான்  பேசப்போகும்  ஒரு  விடயம், சிலவேளைகளில்  நாம் அனைவரும் அன்றாட வாழ்கையில் செய்துகொண்டு அல்லது செய்ய முயற்சித்துக்கொண்டு   இருக்கும்   ஒன்றுதான்.  அதாவது,   மனிதர்களில் அநேகர்  தங்கள்  வாழ்கையில்  அதிகமான காலங்களை பிரமையிலே கழித்து விடுகிறார்கள். பாவம்  இவர்கள்.  கனவுகாண  மறந்து  தாங்கள்  காணும் பிரமையில்  தங்கள்  வாழ்கையை  கடத்திப்போகிறார்கள். கனவிற்கும் பிரமைக்கும் வித்தியாசம் இருக்கிறது மக்கள்ஸ்.

அது என்ன அந்த பிரமை. அதாவது தாங்கள் நல்லவர்கள். தாங்கள் சிந்திப்பது சரி. தாங்கள் பேசுவது சரி. தங்களை விட வேறு யாரும் உயர்ந்தவர்கள் இல்லை.. இவைதான் நான் கூறவரும் அந்த பிரமை. இந்த குறுகிய பிரமை வட்டம் எப்பொழுது வெளியே தென்படும் என்றால் எப்பொழுது அவர்கள் தங்கள் வாய்களை திறக்கிறார்களோ அப்பொழுதுதான்.இதில்  நான்  பேச  வருவது  ஒரு  குறித்த  விடயம். நாங்கள்  எங்களை மட்டுமே  தீர்பிடுவதற்கு  எமக்கு  அதிகாரம்  உண்டு. மற்றவர்களை தீர்பிடுவது எமது வேலை அல்ல. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அது கடவுளின் வேலை என்கிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அது அநாகரீகமான  செயல்  என்கிறார்கள். அதாவது  மற்றவர்களை எப்பொழுதுமே நாம் கூடாத விடயங்களை வைத்தே தீர்பிடுகிறோம்.

சிலர் சிலரை பார்த்து கேலியாய் அல்லது நக்கலாய் சிரிப்பதையும் கைதட்டி நகைப்பதையும் பார்த்து கோவப்படுவதோடு 'கடவுளே இவர்களை மன்னியும்'  என்று  கூறிவிட்டு  செல்லவேண்டி  இருக்கிறது. எங்கள் நிலைமைகளையும், எங்களையும் பலர் கேலிசெய்து சிரிக்கிறார்கள் என்பதையும் அறியாது மற்றவர்களை தீர்ப்பிடுவதில் சிலர் மும்முரமாய் இருக்கிறார்கள்.

எமக்கு பிடிக்காதவர்களை எப்பொழுதுமே நாம் அனைத்திலும் எமக்கு கீழேயே வைத்திருக்கிறோம். எமக்கு  பிடிக்காதவர்களை  நாம்  என்றுமே புத்திசாலிகள் என்றோ, நல்லவர்கள் என்றோ எண்ணியதே இல்லை. இதற்கு காரணம் இந்த வன்மையே. வேறு எதுவும் அல்ல. இந்த வன்மைப் போக்கு நம்மை இலகுவாக அவர்களை கேலி செய்து சிரிக்கவும், மட்டம்தட்டி தீர்ப்பிடவும் மிகவும் உதவிபுரிகிறது.

இன்னுமொன்றை  பார்த்தீர்களா. நம்மை  எத்தனை  பேர்  கேலியாய் பார்க்கிறார்கள் என்பதை மறந்து நாம் இன்னுமொருவரை கேலியாய், தரம் குறைவாய் பார்க்கிறோம். நாங்கள் இன்னொருவரிற்கு எதிராக ஒரு கல்லை தூக்குகிற பொழுது நமக்கு பின்னே நான்குபேர் நமக்கு எதிராய் கல்லை எடுக்கிறார்கள்  என்பதை  ஏன்  நாம்  மறந்து  போகிறோம். உங்கள் எதிரியைக்கூட தீர்ப்பிடும் உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்? உங்கள் எதிரியை பாராட்ட வேண்டுமானால் உங்களுக்கு தகுதி இருக்கிறது, ஆனால் அவர்களை தீர்ப்பிட உங்களுக்கு தகுதி இல்லை.

எதிரிகளும், எமக்கு  பிடிக்காதவர்களும்  எப்பொழுதுமே  கெட்டவர்கள், மடையர்கள், எதுவுமே தெரியாதவர்கள் என்று எண்ணுகிற பொழுதே  நாம் அடி  முட்டாள்கள்  ஆகிவிடுகிறோம். புத்திசாலிகள்  எப்பொழுதுமே முட்டாள்களை தீர்ப்பிடுவதில்லை. காரணம் அவர்கள் அதை  ஏற்றுக்கொள்ள  மாட்டார்கள்  என்பது   நன்றாகவே  புரியும். ஆனால்,  முட்டாள்களே புத்திசாலிகளை அதிகம் தீர்ப்பிடுகிறார்கள். காரணம், புத்திசாலியின் வலிமையை என்றுமே முட்டாள்கள் தெரிந்து   வைத்திருப்பதில்லை.


ஆக,  மற்றவர்களை  பாராட்டாவிடிலும்  நீங்கள்  நல்லவர்கள்.  தயவுசெய்து மட்டமாய்  தீர்ப்பிடாதீர்கள்.  மனிதர்கள்  எப்பொழுதுமே  ஒரேமாதிரியாய் இருப்பதில்லை. நிலவு என்றும் தேய்ந்துகொண்டே செல்வதில்லை. அதற்கு ஒரு  நாள்  வளர்பிறையும்  வரும். ஒருமுறை  தோற்றவர்கள் இனிமேல்  தோற்காமலே இருந்துவிடலாம். இருமுறை  வென்ற  நீங்கள்  இனி  எப்பொழுதுமே  வெல்லாமல்  கூட  போய்விடலாம். பூக்கள்  உதிர்வது அதன் இயலாமை மட்டுமல்ல, காய்களை உருவாக்க வேண்டும் என்கின்ற ஆவேசமுமாய் கூட இருக்கலாம். மனிதர்களை மனிதர்களாய் பாப்போம். மற்றவனை எமக்கு சமனாய் பார்ப்பதில் எமது பக்கம் என்றுமே குறைந்துபோகப்  போவதில்லை. மற்றவரை  அசிங்கமாய்,  மட்டம்தட்டி பேசும்பொழுது நம்மையும் இதேபோல எங்கோ ஒருத்தன் கேவலப்படுத்துகிறான் என்பதை மறக்கவேண்டாம்..

சப்பா... இன்னைக்கு கொஞ்சம் சீரியசா போய்ட்டோ நம்ம பதிவு..


Monday, March 5, 2012

ரயில் சித்திரவதை


பதிவு செய்யப்பட்ட
புகையிரத இருக்கையைவிட
வேறு எதுவுமே
எனக்காய்
காத்திருப்பதில்லை.

மெல்ல நகரும்
ரயிலும் - நான்
மென்றே உமிழும்
எச்சிலும்,
இம்முறை
கொஞ்சம்
உஷ்ணமாய்..

என்
ரத்தத்தின் ஓட்டமோ
இந்த
ரயிலின் வேகத்தை
மிஞ்சும்..

யன்னல் தாழ்பாள்
களற்றப்பட்டும்
வேர்த்துக்கொட்டுவது
இங்கே
எனக்கு மட்டும்தான்.

பையில் இருந்த
ரயில் டிக்கெட்டை மறந்து,
டிக்கெட் பரிசோதகரிடம்
இருமுறை
தோற்றதும் நான்தான்..

கையில் இருந்த
புத்தகம்
புரியாமலும்,
காதில் மாட்டிய
இசை
இரைச்சலாயும்
இறுதிவரை இருந்தது,
எனக்கு மட்டும்தான்.

கடந்துவரும்
தண்டவாள ஒலியும்,
யன்னல் கடத்தும்
மஞ்சள் மாலை ஒளியும்
இன்று - என்னுள்
எதுவும் செய்வதாயில்லை.

தொலைபேசி சினுங்கியும்
எடுத்து பேச மனமில்லை.
பிடிமானம் இருந்தும்
எழுந்து நிற்க துணிவில்லை.

வடைக்காரன் கூட
என்
பசியை அறிகிறான்.
வயிறோ
சத்தியாக்கிரகம் செய்கிறது.

எதற்காய்
இன்று
இத்தனை
சித்திரவதை
இந்த ரயிலில்..

என்
முன்னைய இருக்கையில்
ஒருத்தி
அவளைப்போலவே இருக்கிறாள்.

Popular Posts